Tuesday, February 22, 2011

பளிங்கு மண்டபத்தில் நாய்

’ஏமாறுபவன் இருக்கிற வரையில் ஏமாற்றுபவனும் இருப்பான்’ இது நடைமுறைத் தத்துவம்.

பழைய திரைப்படங்களில் கிராமத்திலிருந்து முதன்முதலாக நகரத்திற்கு வரும் அப்பாவி கதாபாத்திரங்கள் முதலில் சந்திப்பதே இந்த ஏமாற்றுகாரர்களைத்தான். ஏதாவது ஒரு காரணத்தால் தம் உடமையெல்லாம் அவர்களிடம் இழந்து துன்பத்தில் சிக்கிக் கொள்வதாக கதை நகரும். ஏமாற்றப்படுவதில்தான் எத்தனை முறைகள் !

வீதியிலே நாட்டியமாடும் சிலர் தம் ஆட்டத்தாலும் பேச்சாலும் பார்வையாளர்கள் கவனத்தைத் திருப்பி வைக்கும் போது அவர்களுடைய கும்பலை சேர்ந்த ஒருவன் அசந்திருப்பவர்களின் பைகளையும் பிற உடமைகளையும் பின்பக்கத்திலிருந்து சுருட்டிக் கொண்டு ஓடிவிடுவான். பின்னர் லபோ திபோ என்று கூட்டத்தினர் ஆளுக்கொரு பக்கம் திருடனைத் தேடிக் கொண்டு ஓடுவார்கள்.

இதே வேடிக்கையைத்தான் மாயா மோகினியும் செய்து வருகிறாள். அவள் மோகினியாம், கபீர் சொல்கிறார். நம்முடைய கவனத்தையெல்லாம் உலகின் பல்வேறு கவர்ச்சிகள் பக்கம் திருப்பி உண்மையில் நம் உள்ளே உறைகின்ற இறைசக்தியை அறிவதற்கான ஆர்வத்தை கவர்ந்து விடுகிறாள். நமது ஆயுளெல்லாம் ஒவ்வொரு பிறவியிலும் இப்படியே போய்க் கொண்டிருந்தால் அவளை விட பெரிய சாகசக்காரி யார் இருக்க முடியும்?

कबीर माया मोहिनी, भई अंधियारी लोय ।
जो सोये सो मुसि गये, रहे वस्तु को रोय ॥


இருளதும் கவ்வுதே கபீரா, மாயா மோகினி் சாலம் பார்
இருளில் உறங்கி இழப்பார், அருநிதி போனதாய் அழுவார்


(இருள் =அஞ்ஞானம் ; இருளில் உறங்கி = அஞ்ஞானத்தில் மயங்கி)

மாற்று :
மருளாய் பிடிக்குது கபீரா, மாயா மோகினியவள் ஆட்டம்
பெருநிதி போச்சுது தியங்கி, என்னே அவர்தம் திண்டாட்டம்


மாயையின் கவர்ச்சியில் மனம் வசப்பட்டு ஆத்மனின் உண்மை நிலையை மறந்து நிற்பதும் ஒரு வித உறக்கமே! எப்போதாவது பெரும் சான்றோர்கள் நமக்கு காலம் விரயமாகிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை சொல்லும் போது,அந்த நிஜத்தை நம் செய்கைகளின் பின்ணணியில் பார்த்து எவ்வளவு சத்தியம் அது என்று பு்ரிந்து கொள்ளும் போது மனம் அதை நினைத்து வருத்தப்படுகிறது. ஆத்மாவைத் தொலைக்கமுடியாது. ஏனெனில் நம் ஓட்டத்திற்கே அதுதானே ஆதாரம். அப்போது அந்த பெருநிதி என்ன? குருஅருளால் கிடைக்கக் கூடிய சச்சிதானந்த அனுபவமாகத் தானே இருக்கமுடியும்?

அந்த பெருநிதியை அகண்டரஸம் என்று ஆவுடையக்காள் குறிப்பிடுகிறார். அதனோடு மாயையின் சாகச நாட்டியத்தைப் பற்றியும் ஆவுடையக்காள் ஒரு அழகான கீர்த்தனையாகப் பாடியிருக்கிறார்.

ராகம் :ஸஹானா
பல்லவி
அதிக சாமர்த்தியம் மாயை உந்தன்
வெகு வித நாட்டியம்
அனுபல்லவி
அகில பிரபஞ்சமாய் ஆனதும் போராமல் அகண்ட ரஸம் தன்னை மறைத்தாய் தெரிய வொட்டாமல்
சரணம்
ஸ்படிக மண்டபத்தில் சுவானம் தன்னைத் தவிர கண்ட விடத்தில் சாடி ஓடிக் கொண்டு கூடிக் குலைக்கும் போல்
நானா விகல்பித நாய் போல் அலைய வைத்தாய் (அதிக)

சுவரில்லா சித்திரம் போல் உந்தன் ஸ்வரூபம் அஸத்தியம்
ஜரையில்லை நரையில்லை ஜனன மரணமில்லை
கரையில்லை உன்னுடைய காரிய விசித்திரங்கள் (அதிக)

ஸஹஸ்ரத்தில் ஒருத்தன் உன்னையும் பார்க்க ஸாமர்த்திய கர்த்தன்
ஸர்வமும் பிரம்மமாய் தான் தானே ஸர்வமாய்

ஸ்வாமி வெங்கடேசுவரர் குரு கிருபையினாலே (அதிக)

(அகண்ட ரஸம் மறைத்தல் = ஆத்மானுபவத்தை அறிய விடாமல் செய்வது)

நமக்கு மூப்பு உண்டு, நரையுண்டு ஜனன மரணமுண்டு. ஆனால் அந்த மாயக்காரிக்கு இவையெதுவும் கிடையாது. அவளுடைய விசித்திரமான போக்குக்கு எல்லையும் கிடையாது. அதற்கு அவர் சொல்லும் உதாரணமும் வெகு பொருத்தம்.

கண்ணாடி மண்டபத்தில் புகுந்த நாயைப் போன்றதாம் நம் நிலைமை. தன்னைச் சுற்றிலும் காணப்படும் நாய்களெல்லாம் தன் பிரதிபிம்பம் என்று அறியாது மதி மயங்கி பல வேறு நாய்கள் என்றெண்ணி சுற்றிச் சுற்றி குலைக்கும் நாயைப் போலவே மாயை நம்மை அலைகழிக்கிறது. பரமாத்மத்தில் ஒன்றுபட்டிருக்கும் நாம் மாயையினால் பிரதி பிம்பங்களாகக் கண்டு நமக்குள் வேற்றுமை பாராட்டுகிறோம். சண்டை போட்டுக் கொள்கிறோம், நிம்மதியை இழக்கிறோம்.என்ன ஒரு அழகான உதாரணம்!

ஆத்மனை அறிந்து கொண்ட பிறகு சர்வமும் பிரம்மமே. காணப்படும் யாவையும் அதன் பிம்பங்களே. அது பிடிபடாமல் போவதால்தான் உதாரணத்தில் குறிப்பிடப்பட்ட நாயைப் போலவே அலைகிறோம்.

ஒருமுறை ரமணரிடம் சாப்பிடும் போது சுப்புலக்ஷ்மியம்மாள் “ காரமானவற்றைத்தான் பகவான் எதுவும் போட்டுக் கொள்வதில்லை.கூட்டு உரப்பில்லாமல் இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாமே” என்று மெதுவாகச் சொன்னார்.

அதைக் கேட்ட பகவான் “அதான் போட்டிருக்கிறாயே! போதுமே! இந்த ஒரு வாயால் சாப்பிட்டால்தான் சாப்பிட்டதாகுமா? இத்தனை வாயால் சாப்பிடுகிறேனே! அது திருப்தியாகாதா? “ என்று சகஜமாகக் கேட்டார்.

அவர் எப்போதும் இலையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளைத் தனித்தனியாக ருசிக்காமல் எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டி பிசைந்து உண்பதே வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் தனிப்பட்ட வகை பற்றிய ருசி அறியமாட்டார். யாராவது குறிப்பிட்டுக் கேட்ட போது
“....எனக்கு ஒன்றிலே தான் ருசி. இவர்களுக்கு பின்னத்தில்தான் ருசி. என்ன செய்வது? அவரவர்கள் ருசிக்குத் தகுந்த மாதிரி தானே சாப்பாடு அமையும் “ என்று பெரிய தத்துவத்தை மிக எளிய முறையில் அன்பர்களுக்கு உணர்த்தி விட்டார்.

இதிலிருந்து பகவான் ரமணர் ஏகாத்ம சொரூபானுபவத்திலேயே திளைத்திருந்தார் என்பது புலனாகிறது. ஆத்மாவை தன்னில் உணர்ந்த பின்னர் தன்னைச் சுற்றி அமர்ந்து உணவு உண்ணும் ஒவ்வொருவரும் அதே ஆத்மாவின் பிம்பங்களே என்ற உண்மை அவருள் மிளிர்ந்ததால் அவர் பளிங்கு மண்டபத்தின் மாயைக்கு அப்பாற்பட்டவராய் ஆகிவிட்டிருந்தார்.

அக்காள் தம் குரு ஸ்ரீதர வெங்கடேசுவரரை மேற்கண்ட பாடலில் புகழ்வது போலவே, ரமணரும் ‘ஸஹஸ்ரத்தில் ஒருத்தர், சாமர்த்திய கர்த்தர்; ஸர்வமும் பிரம்மமாய் தானே ஸர்வமாய்” திகழ்ந்த ஞானி. அக்காளைப் போலவே கபீரும் இம்மாதிரி சாமர்த்தியசாலிகள் போற்றப் படவேண்டியவர்கள் என்று இன்னொரு ஈரடியில் சொல்கிறார்.

माया तो ठगनी भई, ठगत फिरै सब देस ।
जा ठग ने ठगनी ठगी, ता ठग को आदेस ॥


ஏய்ப்பதே தொழிலாம் மாயைக்கு, ஏய்த்துத் திரிவாள் சகமெலாம்
ஏய்ப்பவளை ஏய்ப்பவர் வந்தால், ஏய்ப்பவரை ஏற்றிப் போற்றலாம்


அந்த சாமர்த்தியசாலியை உறுதியாகப் பற்றிக் கொண்டால் அவன் நம்மையும் உடனழைத்து செல்லுவான்.

हम तो बचिगे साहब दया से शब्द डोर गहि उतरे पार ।
कहत कबीर सुनो भाई साधो इस
ठगनी से रहो हुसियार ।


”குருவின் உபதேச மந்திரத்தைப் பிடித்துக் கொண்டு நாங்கள் பிழைத்துக் கொண்டோம்; கபீர் சொல்கிறான், சாதுக்களே! கவனமாயிருங்கள் அந்த கள்ளியிடம்“ என்று கபீர் இன்னொரு பாடலிலும் மாயையைப் பற்றி எச்சரிக்கிறார்.

மாயையின் பிடியிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் குருவின் அருள் நாடி அவரை கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு கிளிக்கண்ணியாக ஆவுடையக்காளும் பாடுகிறார்.

எத்தனையோ கோடி ஜென்மம் எடுத்தேன் கணக்கில்லாமல்
போதமிழந்து விட்டேன்
கிளியே, புத்தி மயக்கத்தினால

போதம் தெளிவேனோடி போக்குவரத்தை விட்டுத்
தேறித் தெளிவேனோடி கிளியே

பரப்பிரம்ம வஸ்துவன்றோ பரமகுரு கிருபையால்
பற்றிப் பிடிப்போமடி கிளியே இப்பவமும் துலையுமடி

எட்டாத கொப்பு அடியோ என்னால் முடியுமோடி
தட்டிப் பறிக்க என்றால் கிளியே ஸாதுக்கள் வேணுமடி

ஆதி அந்தமற்ற ஆசாரியார் கிருபையினாலே
எட்டிப் பறிப்போமடி கிளியே, எல்லோரும் புஜிப்போமடி

பற்றிப் பறிப்போமடி கிளியே பிரம்ம ரஸத்தை
எல்லோரும் புஜிப்போமடி கிளியே, எல்லோரும் புஜிப்போமடி


( போதம் = ஞானம்; போக்குவரத்தை விட்டு = பிறப்பு இறப்பு இல்லாமல்; எட்டாத கொப்பு= உயரமான மரக்கிளை; இப்பவம் துலையுமடி = பிறவிப்பிணியை தொலைத்தல் )

’வாருங்கள் யாவரும் இங்கே பெருநிதியாம் பிரம்மரஸம் நாமெல்லாம் புசிக்கவென்றே காத்திருக்கிறது’ என்று கபீரும் அக்காளும் எவ்வளவு கூவிய போதும் நம் காதுகளில் விழுவதே இல்லையே !! மாயையின் இருளில் உறங்கிக் கிடக்கும் நமக்கு விழிப்பே வராதா :(

(குறிப்பு : நீளம் கருதி ஆவுடையக்காளின் பாடல்களில்- பொருள் சிதையா வண்ணம் -சில பகுதிகளையே சுட்டிக் காட்டி இருக்கிறேன். முழுப்பாடல்கள் கொடுக்கப்படவில்லை. இவைகள் ஞானானந்த நிகேதன், தபோவனம் அவர்களால் பிரசுரிக்கப்பட்ட ‘செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் -பாடல் திரட்டு’ என்ற புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ( www.gnanananda-niketan.org)

Thursday, February 10, 2011

சித்தமிசை இல்லை வேறு தெய்வம்

செங்கோட்டை சீமையிலே குடும்பப் பெண்கள் மத்தியிலே கலந்து விட்டிருந்த கும்மிப்பாட்டு கோலாட்டப் பாட்டு, பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போமா?

கோலாட்டப்பாட்டு :

ஆதியிலே ஒன்றானாய் கோலே அப்புறம் இரண்டானாய் கோலே
வேதமும் அறியாக் கோலே, வேதாந்தக் கோலே
...........
நத்தையாய் புழுவாய் நண்டாய் நரியாய் பரியாய் வண்டாய்
எத்தனை ஜென்மமோ கொண்டாய் என்னத்தைக் கண்டாய்

காசி ராமேசுவரம் சென்றாய் காகம் போல் முழுகியே நின்றாய்
உன்னாசை போச்சுதோ மூடா என்றால் ஆச்சுதோ நன்றாய்

போற்றியார் அடிபணிந்து பந்துக்களும் வீடும் விட்டு
கூற்றுவன் அழைக்கும் போது கூட வராது

புருஷன் பெண்டாட்டி பொய்யே புத்திரன் பிதாவும் பொய்யே
பெருமை சிறுமை பொய்யே பிரம்மமே மெய்யே

ஆகாவழிக்கு அதிதூரம் ஆத்ம அனாத்ம விசாரம்
தொகுத்துப் பார்க்க இது நேரம் தோன்றுமே சாரம்


----------------------------------------------
கும்மிப்பாட்டு
கும்மியடி பெண்கள் கும்மியடி
அகோர ஸம்ஸார சாகரத்தில்
ஜென்மக் கடலை கடத்தினவர் பாதம்
சிந்தித்து கும்மியடியுங்கடி தினம்
வந்தித்து கும்மியடியுங்கடி


ஐந்து தத்வமும் ஒன்றாய் கூடி
ஒரு ஆள்ரூபம் அறிவுமில்லை
ஐந்து பூத விகாரத்தினுள்
ஸ்வபிரகாசத்தை
மேவியே கும்மிடியுங்கடி
மனம் தாவியே கும்மியடியுங்கடி

பாவ அபாவத்தை விட்டு அகன்று
பரிபூரணப் பால்குடித்து ஆனந்தமாய்
தேவாதிகளுக்கும் தெரியாத துரீயத்தை
தெரிந்து கும்மியடியுங்கடி
மனம் பூரித்து கும்மியடியுங்கடி

அறிவிலே அறிவால் அறிவாய்
அறிந்து அதை அறிவாய்
அறிவு மாத்திரம் ஆக இருந்ததை
அறிந்து கும்மியடியுங்கடி
தன்னை அறிந்து கும்மியடியுங்கடி

---------------------------------

எப்படி இருக்கிறது இந்த அத்வைத ரஸம் ? அது ஆவுடையக்காள் வடித்து வைத்திருக்கும் ஞானரஸம்.

மகாராஷ்ட்ரத்தில் ஜனாபாய் பக்தி ரஸத்தை நெல் இடிக்கும் போதும், மாவரைக்கும் போதும் களைப்பைக் களைய பெண்களுக்கு மத்தியில் எளிமையானப் பாடல்களாய் சொல்லிக் கொடுத்தார்.

ஆவுடையக்காளோ ஓய்வு நேர விளையாட்டாய் கும்மிப்பாட்டிலும் கோலாட்டப் பாட்டிலும் ஞானக் குறவஞ்சியாயும் பெண்கள் மூலமாய் வீட்டில் அனைவருக்கும் மிக உயர்ந்த அத்வைத கருத்துகளை எளிய உதாரணங்களால் புரிய வைத்த பெண் ஞானி. அவரை இன்னொரு ஔவையார் என்றும் குறிப்பிடுவதுண்டு.

அறியா பருவத்திலே திருமணம் நடந்து கணவனையும் இழந்த அபாக்கியவதி. அன்றைய நடைமுறைப்படி கைம்பெண்ணாக்கப்பட்டு பலத்தக் கட்டுபாடுகளுடன் வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கப்பட்டிருந்த அவலநிலை. அதிகாலை ஊர் விழிக்கும் முன்னே எழுந்து ஆற்றங்கரைக்கரைக்கு சென்று நித்திய கடன்களை கழித்து பொழுது புலரும் முன்னே வீட்டிற்கு வந்துவிட வேண்டும். அவளுக்கு அனுமதிக்கப்பட்ட வெளி உலகத் தொடர்பு அவ்வளவு தான். பல பூர்வ ஜென்ம தவங்களால் அவள் மனது இறைவனுடைய அருளுக்காக ஏங்கியிருந்தது. தனக்கு வழிகாட்ட யாராவது குரு ஒருவர் கிடைக்கமாட்டாரா என்று தவித்திருந்தது.

ஒரு நாள் வழக்கம் போல் அதிகாலை இருட்டு நேரத்தில் ஆற்றின் படித்துறை அருகே கிடந்த ஒரு மாவிலைக் காம்பை எடுத்து பல் தேய்ப்பதற்காக வாயில் வைத்ததுமே ஒரு வினோதமான உணர்ச்சி தேகம் முழுவதும் வியாபித்தது. தேங்காய்க்குள் கழன்று கொண்ட கொப்பரை போலே தேகம் வேறு தான் வேறு என்ற எண்ணம் பலமாய் ஆட்கொண்டது. சற்று தூரத்தில் மரத்தடியே தியானத்தில் அமர்ந்திருந்த மகான் ஒருவரை கண்ணுற்று அவரது பாதத்தை அடைந்து சேவித்தார். அவரும் கருணை பொங்க அவளது தலை மேல் கைவைத்து “பிரம்மம் சத்யம்” என்ற சத்ய மொழியை சொல்லி அருள் பொழிந்தார். அக்கணமே ஆவுடையக்காளுக்கு சமாதி நிலை கூடியது.

ஸ்ரீதர அய்யாவாள் என அறியப்படும் அந்த மகான் பயன்படுத்திய மாவிலைக் காம்பின் மகிமையே ஆவுடையக்காளின் ஆன்மீகப் பயணத்தின் துவக்கமானது என்பர். வெங்கடேச குரு என்றும் சாந்த நரசிம்மர் என்றும் தவறாமல் ஒவ்வொரு பாடலிலும் குருவைப் பணிந்து போற்றும் அவருக்கு குரு அருளாலே வாணியின் அருளும் வந்தது.

படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஜனாபாயைப் போலவே அவ்வட்டார பேச்சு வழக்கிலே அத்வைத சித்தாந்தம் குற்றால அருவி போல் பாய்ந்து பெருகியது. ஞானிகளுக்கே உரிய கம்பீரத்துடன் அவர் வெளிப்படுத்திய கருத்துகள் அன்றைய சமுதாயத்தில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது.

ஆலையந்தோறும் அலைந்து திரிந்தது போரும் போரும்
மனதாலயம் தன்னில் அரனாரிருப்பதைப் பாரும் பாரும்
உன் தெய்வம் என்தெய்வம் என்று உழன்றதும் போரும் போரும்
தன்னுள் தெய்வம் என்றெண்ணி இருப்பதைப் பாரும் பாரும்
ஓதிப் படித்ததோர் மந்திர கர்மங்கங்களும் போரும் போரும்
புத்தி யுக்தி அனுபவத்தால் முக்தி கிடைத்ததைப் பாரும் பாரும்

இன்னொரு பாடலில்

அம்புலியில் தெய்வமென்று சாதிப்பார் சீமையிலே
தாருவிலே தெய்வமென்று சாதிப்பார் வையகத்தே
தாமிரத்தே தெய்வமென்று ஸாதிப்பார் தரணியிலே
மிருத்யுவே தெய்வமென்று விழுவார் உலகினிலே
அப்புவே தெய்வமென்று ஆடுவார் தீர்த்தாதி
அக்கினியே தெய்வமென்று ஆகுதிகள் பண்ணிடுவார்


என்பதாக புரிந்து கொள்ளாமல் செய்யப்படும் பலப்பல வழிபாடுமுறைகளின் தன்மையை வரிசைப் படுத்துகிறார்.

தன்னை உணர்ந்தவனுக்கு தெய்வங்கள் தேவையில்லை என்பதில் கபீரும் உடன் படுகிறார். அவையெல்லாம் குரு அருள் சித்திக்கும் வரையில்தான் என்பதை அடிக்கடி சொல்வார். அப்படிச் சொல்லும் ஒரு ஈரடி

और देव नहीं चित्त बसै, मन गुरु चरण बसाय ।
स्वल्पाहार भोजन करु, तृष्णा दूर पराय ॥


சித்தமிசை இல்லை வேறு தெய்வம், சித்தம் நாடுவதோ குருசரணம்
சொற்பமாய் போனதே போசனம், பற்பல இச்சையும் போயின தூரம்


மனமோ குருவின் வசமாகிவிட்டது, சித்தத்தில் வேறு தெய்வங்கள் கிடையாது. உணவின் தேவையோ மிகசொற்பம், உலக விஷயங்களில் ஆர்வமும் குன்றி போனது என்று உரைக்கிறார் கபீர். குருவின் திருவடியில் மனம் ஈடுபாடு கொண்டதால் தனக்குக் கிடைத்த அனுபவத்தை சொல்லும் போது ஆவுடையக்காளும் கபீரின் மொழியை உறுதி செய்கிறார். அத்வைத மெய்ஞான ஆண்டி என்கிற பாடலிலிருந்து சில வரிகள் :

என் சொல்வேன் என் சொல்வேன் இவன் எங்கிருந்து வந்தாண்டி
இன்னம் இன்னம் ஜன்மம் எடுக்கவே என்றிருந்தேண்டி

ஆறு வைரியை அவன் அண்டவிடாமல் அடித்தாண்டி
தாறுமாறக்காரன் அவன் துரீய நிலையைத் தந்தாண்டி

காமக்ரோதாதிகளை காறுவாறு தொடுத்தாண்டி
தொண்ணூறாரு பேரை துண்டித்து போட்டு விட்டாண்டி

வெகுவான போகத்தை புசிக்கவே என்றிருந்தேண்டி
பார்வை ஒன்றினாலே போகத்தை மாற்றியே வைத்தாண்டி

பார்த்த இடமெல்லாம் பரிபூர்ணமாய் தோற்றி வைத்தாண்டி
வார்த்தைகளெதுவும் காணேன் மௌனமதாக்கி விட்டாண்டி


[காறுவாறு =காறுபாறு= கவனிப்பாயிருத்தல், மேற்பார்வை செய்தல்]

தொண்ணூறாரு பேரை துண்டித்து போட்டு விட்டாண்டி
36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.
ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.
ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

(நன்றி : கௌமாரம்.காம்) ]


மெய்ஞானம் வாய்க்கப் பெற்றவருக்கு அதன் பின்னர் எதிலும் பிடிப்பு இருப்பதில்லையாம். கனவு கலைந்து எழுபவனுக்கு மீண்டும் கனவு பற்றிய கவலை உண்டோ ? திருப்புகழில் அருணகிரியாரும் இந்த உலக இச்சைகளை சூடான பொருட்களை கை உதறுவது போல் உதற விழைவதாக உரைக்கிறார். முப்பதும் (+)ஆறாறும் (6x6=36) (+)முப்பதும் வேறான என்னும் போது 96 தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட மோனநிலை அடைவது எப்போது என்று அவரும் குறிப்பிட்டிருக்கிறார்.

சுட்டது போல் ஆசை விட்டு உலக ஆசார
துக்கமிலா ஞான சுகம் மேவிச்
சொற்கரண அதீத நிற்குணம் ஊடாடு
சுத்த நிராதார வெளி காண
மொட்டு அலர் வாரீச சக்ர சட் ஆதார
முட்டவு மீதேறி மதி மீதாய்
முப்பதும் ஆறாறு முப்பதும் வேறான
முத்திரையா மோன மடைவேனோ

............
அப்படி ஒரு மோன நிலையை தனக்குக் கொடுத்த குருவை எங்கிருந்து இவன் வந்தாண்டி என்று ஆச்சரியத்துடன் ஆவுடையக்காள் போற்றுகிறார். பார்வை ஒன்றினாலேயே போகத்திற்கான இச்சைகளை மாற்றி வைக்க வல்லவர் குரு என்பதையும் அவருடைய மெய்ஞான அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்கிறோம்.

கபீர் குறிப்பிடும் உலக ஆசைகள் குறைவதையும் உணவின் மேல் பிடிப்பு இல்லாமல் போவதற்கும் இது தான் காரணம். ஆவுடையக்காளுக்கும் தேகப்பற்று நீங்கி விட்டது. ஆனால் இன்னமும் உயிர் அதனோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதே என்ற ஆச்சரியம். அந்த வினாவை தம் குருவிடமே வைக்கிறார்.

ஐயா ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழ வேண்டாமோ ?
தேகமிருந்த உளவு சொல்லும், நீர் தேசிகரே !

அம்மா ! ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழுமானால்
அஞ்ஞான ஜனங்களுக்கு யாராலே விமோசனமாம்?
சரீரமிருக்கிறது பலருக்கு உபகாரமன்றோ? என்று
காரணமூர்த்தி யுரைத்தார் கருணையுடன்;


பல்லாயிரக்கணக்கான ஜீவன்களுக்கு பல நூறு ஆண்டுகள் வழிகாட்ட வேண்டியவர் அல்லவா அவர் ! சுமார் முன்னூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றி பெண்களுக்கும் அத்வைதம் சித்திக்கும் என்பதை வாழ்ந்து காட்டியவர். ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாமரனுக்கும் புரியும் வகையில் வேதாந்த கருத்துகளை பாடி வைத்திருக்கிறார். மிக சரளமாக, பல விதமான எடுத்துக்காட்டுகளுடன் நகைச்சுவையாகவும் கருத்துகளை சொல்வதில் அவர் சமர்த்தராக இருந்தார்.

சிலவற்றை அடுத்த இடுகையில் காண்போம்.

அவரைப் பற்றிய மேலும் பல விவரங்களையும் பாரதியாரின் பாடல்களில் ஆவுடையக்காளின் தாக்கம் பற்றியும் நாஞ்சில் நாடன் அவர்களின் வலைப்பூவில் படிக்கலாம்.