Tuesday, January 26, 2010

அவன் கொல்லன், நான் இரும்பு

அப்துல்லா ஷா முகமது நபியின் வழித்தோன்றல். அவரது தந்தை ஷா முகமது தெர்விஷ் அரேபிய மற்றும் பெர்ஷியன் மொழிகளிலும் புனித குரான் ஓதுவதிலும் அரிய தேர்ச்சி பெற்றிருந்தார்.

இளவயதிலேயே ஆன்மீகத் தாகம் கொண்டவராகத் திகழ்ந்தார் அப்துல்லா. அவரது மூத்த சகோதரி அவருக்கு தியானம் செய்வதில் பயிற்சி அளித்தார். தந்தையிடம் அரபி மற்றும் பர்ஷிய மொழிகளின் இலக்கியங்களைக் கற்று தேர்ச்சி அடைந்தார். சில சுஃபி ஞானிகளின் தொடர்பினால் சித்திகள் சிலவும் கைவரப் பெற்றது. ஆனால் தன்னை உணர வேண்டும் என்ற அவா பூர்த்தியாகவில்லை. அது அவரை தேடலில் ஈடுபடுத்தியது. அதற்கான வழிகாட்டி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தார்.

அவரது நிலையை கபீரின் வரிகளில் சொல்ல வேண்டுமானால்

जैसा ढूंढत मै फिरुं, तैसा मिला न कोय ।

ततवेता तिरिगुन रहित, निरगुन सो रत होय ॥

எவரைத் தேடி அலைவனோ, அவரை இன்னம் கண்டிலேன்

எவரும் திரிகுணம் கடந்து, நிர்குணம் தோய்ந்து நின்றிலர்

(திரிகுணம் = தமஸ்,ரஜஸ், சத்துவம்)

சுஃபி க்வாத்ரி எனப்படும் தேடல் வழிமுறைக்கும் அத்வைத வழிமுறைக்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. அநல் ஹக் ( நானே அவன்) என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சுஃபி முறை. அஹம் பிரம்மாஸ்மி ‘சிவோஹம்என்பதற்கு நிகரானது.

தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கப்பெறும் “ என்ற உண்மைக்கு ஏற்ப தேடுவது மிக அரிய உண்மையானால் அதற்கான அவகாசம் எடுத்துக் கொள்ளும். ஆனால் கிடைக்காமல் விடாது.

“புல்லா நீ லாகூர் அருகே தோட்டம் போட்டு கறிகாய்கள் பயிர் செய்யும் இனாயத் ஷாவை போய் பாரேன். அவர் பரம்பொருளின் உண்மை தெரிந்தவர் என்று சொல்கிறார்கள் என்று யார் மூலமோ தெய்வம் வழிகாட்ட லாகூருக்கு பயணமானார் புல்லா ஷா என்று பின்னாளில் அழைக்கப்பட்ட அப்துல்லா ஷா.

தோட்டத்தினுள் இனாயத் வெங்காயப் பயிரிடையே எதையோ கவனித்துக் கொண்டிருந்த போது அருகிலிருந்த மாமரத்திலிருந்து ஒரு காய் அவரது காலருகே விழுந்தது. மந்திரத்திலே விழுந்த மாங்காய் அது.

அகாலத்தில் பழுக்காமல் காய் தானே விழுவது சாத்தியமல்லவே என்று தலை நிமிர்ந்துப் பார்த்தார் இனாயத் ஷா. வெளியே புல்லா ஷா நின்றிருந்தார்.

“ஏனப்பா என் தோட்டத்தில் விளையாடுகிறாய் ?என்று வினவினார் தோட்டக்காரன்.

“ ஐயா நான் மரம் ஏறவும் இல்லை கல்லெறியவும் இல்லைஎன்று பணிவாக பதிலுரைத்தார் புல்லா.

“ஓ! நீ புத்திசாலித் திருடன். வா உள்ளே“ என்று தன் சீடனை உள்ளே அழைத்தார் இனாயத். கடவுளின் பெயரைச் சொல்லித் திருடலாமா என்று செல்லமாக கடிந்து கொண்டே “தலையை ஏன் கவிழ்த்துக் கொள்கிறாய்? நிமிர்ந்து பார் “ என்று குரு அருளினார்.

புல்லாவின் கண்கள் குருவின் கண்களை நேருக்கு நேர் கண்டதுமே உள்ளொளி பாய்ந்தது. அவர் தன்னை மறந்தார், சூழ்நிலையை மறந்தார். அதுவரை அறியாத ஆனந்த பரவசம் அவரைப் பற்றிக் கொண்டது.

நரேந்திரருக்கும் பரமஹம்ஸருக்கும் ஏற்பட்ட உறவு போல் அது ஒரு தெய்வீக உறவு. நரந்திரனைப் போலவே குருவை பரீட்சித்து பார்த்தார் சீடன் புல்லா ஷா. அதை மகிழ்ச்சியாக ஏற்று பரமஹம்ஸரைப் போலவே சீடனின் தகுதியறிந்த குரு இனாயத். ஆனால் இந்த மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்கவில்லை சீடனுக்கு.

அந்த ஊரின் மௌல்விகளுக்கு, உயர்குலமான சையது வழியில் பிறந்த புல்லா ஒரு தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த அர்யன் னோடு சுற்றுவது பிடிக்கவில்லை. புல்லாவின் வீட்டிலும் இதற்கு ஏக எதிர்ப்பு.

அவருக்கு தன் குரு மீது இருந்த பக்தியும் தம்மைச் சார்ந்தவர் படுத்திய பாடும் பல பாடல்களில் ஒலித்த்து.

ஓ புல்லா,

என் தலைவன் இனாயத் அன்றோ

என் இதயத்தின் தெய்வம் அவன்

நான் இரும்பு, அவன் கொல்லன்

நீச்சல் தெரிந்த வீரன் அவன்

வகையறியா அபலை நான்

அவனே துணைக்கு வருவான்

கரை சேர்ப்பான் திண்ணம்.

எனக்கு ஏனிந்தப் பற்று (அவனிடம்) ?

வசைகளும் வம்புகளும் கேட்கவோ

வசைபாடுவர் மன்னியும் சோதரியும்

அலியின் புகழுக்கு களங்கமா என்று ?

ஓ புல்லா,

உன்னை

இறைவன் இணைத்தான் இனாயத்துடன்

மரகதம் ரத்தினம் பூட்டினான் அவன்

வசந்தத்தின் அழகை விரும்பினால்

இனாயத்தின் அடிமை ஆவாய்

தனக்கு குரு இனாயத் ஷா மூலம் கிடைத்த மகிழ்ச்சியை ஆபரணங்கள் பூட்டி மகிழ்ச்சி கொள்ளும் பெண்ணிற்கு ஒப்பிடுகிறார் புல்லா ஷா.

இறைவனைத் தேடுவதே பிறவிக்கு வசந்தம். அதன் அழகை, பெருமையை புரிந்து கொள்ள வேண்டுமானால் முறையான குருவை சார்ந்திருக்க வேண்டும்.

அதற்கு பலவித சோதனைகள் வரும். அதில் ஒன்று குடிப்பிறப்பை சுட்டிக்காட்டி சமூகம் செய்யும் கேலிக் கூத்து.

நம்மூரிலே நம்மாழ்வரும் அதை ஒரு பாசுரத்திலே இடித்துரைக்கிறார்.

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை

நலந்தான் இலாத சண்டாள சண்டாளார்கள் ஆகிலும்

வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கா என்று உள்

கலந்தார், அடியார் தம்அடியார் எம் அடிகளே

இறைவனுடைய அடியவன் என்றால் அவன் எத்துணை கீழ் பிறப்பின்னாக இருப்பினும் அவனது அடியார் யாமே என்று உருகி உரைக்கிறார் ஆழ்வார் பெருமான்.

கபீரும் இதை
குலம் பொருட்டு ஆவதன், அடியவர் நிறைதெரிந்து ஏற்று

பலம் பொருட்டு குனைவாள் சிறப்பு, கிடக்கட்டும் அதன் தடறு

என்று ஏற்கனவே சொல்லியதைக் கண்டுள்ளோம்.

இது புல்லா ஷாவுக்கு சோதனைகளின் ஆரம்பம். இதன் தொடர்ச்சியை அடுத்த இடுகையில் காண்போம்.

அது வரை புல்லா ஷாவின் அருமையான பாடல் ஒன்றை பொருள் விளக்கத்துடன் கீழுள்ள இணைப்பில் கண்டும் கேட்டும் மகிழவும். ச்மீபகாலத்தில் புகழ் பெற்ற பாடல் இது.


Tuesday, January 05, 2010

பேரன்பு விற்பனைக்காம், விரைவீர்

ஒரு காலத்தில் ஐரோப்பிய மத குருமார்கள் சிலர் சுவர்கத்திற்கு பயணச் சீட்டு வழங்கினராம் ! அவரவர் வசதிக்கு ஏற்ப அங்கே ஒரு இடத்தை முன்பணம் கட்டி பதிவு செய்து கொண்டுவிட்டால் மரணத்திற்குப் பின் கவலைப் படத் தேவையில்லை.

[ஒருவேளை அப்படி ஏதாவது சொன்னால்தான் பணத்தை கொடுக்க முன்வருவார்கள், தேவாலயத்தின் பணிகளுக்கு நிதி கிடைக்கும் என்று அதை ஒரு யுக்தியாகப் பயன்படுத்தி இருக்கலாம். இல்லாவிட்டால் சுய நலத்தில் ஊறிக் கிடக்கும் சமுதாயம் தர்ம காரியங்களுக்கென்று கொடை கொடுக்க முன்வருவதில்லையே :(
]

புது இடத்திற்கு போவது என்றாலே யாவருக்கும் ஒரு கவலை. அதுவும் மரணத்திற்குப் பின் போகும் இடம் எப்படியோ!

"நீ ரங்கநாதன் ஸ்டீரிட்க்கு போடி, அம்மா அப்பா-வத் தவிர எல்லாத்தையும் வாங்கிட்டு வரலாம்”. முதன்முறையாக சென்னைக்கு புறப்பட்டிருந்த பெண்மணிக்கு சென்னையை நன்கு அறிந்த நண்பி, எங்கே எது கிடைக்கும் என்பது பற்றி கொடுத்த மிக சுருக்கமான வழிகாட்டும் தகவல்.

’அப்பா அம்மாவைத் தவிர’ என்பது அவர்கள் காட்டும் அன்பைப் பற்றியதாகும். அன்பு என்பது கடையில் கிடைக்கும் சரக்கு அல்ல. தாய் தந்தையர் அன்பு தன்னலமற்றது. அதற்கு விலை கிடையாது. ஆனால் கபீர், யாரோ அன்பை விற்பதாக கேள்விப்பட்டார். அதற்கான விலையையும் கேட்டறிந்தார். அதைப் பற்றி என்ன சொல்கிறார் பார்ப்போம்.

प्रेम बिकाता मैं सुना, माथा साटै हाट ।
पूछत बिलम न कीजिये, तत छिन दीजै काट ॥


பேரன்பு விற்பனைக்காம், விரைவீர்; சிரமே அதற்கு விலையாம்
பேரத்தில் பொழுதைப் போக்காதீர்; சிரம்த ருவதும் தகுமேயாம்

(சிரம்=தலை)

பேரின்ப நெறிக்கு "தன்னலமற்ற அன்பே" முன்பதிவுச் சீட்டு. அச்சீட்டுக்கு எவ்விலை வேண்டுமாயினும் கொடுக்கலாம். அதற்கு தலையே கொடுப்பதானாலும் தவறில்லை என்பது கபீரின் வாக்கு. அதை மெய்பித்தவன் குமணன் என்னும் குறுநில மன்னன். தலையைக் கொடுக்க முன்வந்த வள்ளல் குமணனின் பெயரை சொல்லி கொங்கு மண்டலத்தின் பெருமை பாடுகிறார் கார்மேகக் கவிஞர்.

நாட்டினைத் தம்பிக் கொ(ள்)ளக், காடு சென்று நலிவுறு நாள்
பாட்டு இசைத்து ஓர் புலவன் வேண்ட என் தலைபற்றி அறுத்
தீட்டி என் தம்பி இடத்து ஈயின், கோடி பொன் எய்தும் என்று
வாட்டம் கை தரும் அக்குமணன் கொங்கு மண்டலமே


புலவர் பெருந்தலைச் சாத்தனாரின் வறுமை நிலையும் அதைக் கேட்ட குமணனின் மன வாட்டத்தையும் தன் தலையை கொய்து சென்று தம்பிக்கு காட்டி பொன் பெற்று வறுமை தீர்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்ட குமணன் கதையை மிக அழகாக சொல்லியிருக்கிறார் தமிழாசிரியர் திருமதி ருக்மணி சேஷஸாயி பாட்டி சொல்லும் கதைகள் என்ற வலைப் பக்கத்தில். அவசியம் படிக்கவும்.

கபீர் வேறொரு பார்வையிலும் அன்பிற்காக உயிரையும் கொடுப்பது மனிதருக்கு இயல்பான பண்பு என்பதை கூறுகிறார்

प्रेम न बाडी उपजै , प्रेम न हाट बिकाय ।
राजा परजा जो रुचै, शीश देय ले जाय ॥


செய்யதிலே விளைவதில்லை பேரன்பு, சந்தையிலே விற்ப வருமில்லை
சுவைக்கண்ட கோமகனோ குடிமகனோ, சிரமும் தரத்தயங் குவதில்லை

(செய் அதிலே= வயலிலே )

மனிதப் பிறவிக்கு மட்டுமே அன்பை ஒரு குணமாக போற்றும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அது, மலையில் பிறந்து மலையிலேயே மறைந்து போகும் சிறு சிறு நீரோடைகள் போல, தாய் தந்தை, மகன் மகள் என்பது போன்ற நம்முடைய சிறு வட்டத்துள்ளே உற்பத்தியாகி மறைந்து போகிறது.

கோமகனுக்கான உதாரணத்தை குமணனுடைய வாழ்க்கையில் காண்கிறோம். குடிமக்களும் அதே அளவு அன்பின் நிறைவு உடையவர்களே.

பொதுவாக சிறுவர்களிடையே, அவர்களுடைய கபடமற்ற உள்ளத்தாலோ என்னவோ, அன்பின் பெருக்கு காட்டு வெள்ளம் போல் திடீரென்று வெளிப்படுவதை காணலாம்.

பிராசி சந்தோஷ் ஸென் என்கிற பத்து வயது சிறுமி நான்கு குழந்தைகளை மின்சார விபத்திலிருந்து காப்பாற்றினாள். அந்த துணிச்சலான காரியத்தில் மின்சாரத் தாக்குதலினால் அவளது இடது கை கருகி விரல்கள் துண்டிக்கப் பட வேண்டியதாயிற்று.(2008)

ரதுல் சந்திர ராபா மற்றும் ரிதுபர்ணா போரோ என்ற இருவரும் உல்ஃபா தீவிரவாதிகளை துரத்திச் சென்று ஒருவனை பிடித்தனர். ”எங்கள் கண்ணெதிரிலேயே எங்கள் ஆசிரியரை கொல்லும் போது நாங்கள் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்?” என்பதே அவர்களின் சாகசத்திற்கான காரணமாகச் சொல்லினர் (2005).

கந்தகுமார் என்ற பதினொரு வயது தமிழ்நாட்டு சிறுவன் ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட ஊர்தியிலிருந்து இரண்டு சகமாணவர்களைக் காப்பாற்றிய பின் மூன்றாமவனை காப்பாற்றும் முயற்சியில் தன் உயிரை இழந்தான் (2004)
(நன்றி : http://en.wikipedia.org/wiki/National_Bravery_Award)


தன் உயிருக்கு பாதகம் வரும் போது எதிர்த்து போராடி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயற்கை தரும் சக்தியை அட்ரினல் சக்தி என்பர் விஞ்ஞானிகள். பிறருக்காக தன்னுயிரை துறக்கத் துணியும் இந்த சக்தியை எந்த பெயர் கொண்டு அழைப்பது? அன்புனல் சக்தி (அன்பின் புனல்) என்று சொல்லலாமா ? .

தினந்தோறும் இந்த அன்புனல் சக்தி பல நூறு ஜீவன்களில் வெளிபட்டுக் கொண்டிருக்கிறது. உலகை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அன்பின் விலையாக தம் உயிரையே கொடுத்து சரித்திரத்தில் அமரர்களாக ஜீவிக்கின்றனர் பலர். அவர்கள் தாம் உண்மையான ஜீவிகள். கபீரின் மேற்கண்ட ஈரடியை மெய்ப்பித்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

இயல்பாக இருக்கக்கூடிய இந்த அன்பு என்கிற உணர்ச்சியை பெருக்கிக் கொள்வது எப்படி? நம் உள்ளம் வற்றாத ஒரு அன்பின் ஊற்றாக மாறுவது எப்படி என்பன போன்ற கேள்விகள் கூடவே எழுகின்றன.

அந்த அன்பு வெளிப்படாமல் போவதற்கு காரணம் நம்மிடமுள்ள ‘பிறரை எடைப் போடுவது’ என்கிற குறையே ஆகும். இந்த காரணத்தால் எதற்கெடுத்தாலும் பிறரிடம் குறைகளைக் காணும் தீயகுணம் ஒட்டிக் கொள்கிறது.

‘Judge not, that ye be not judged என்கிற வாசகம் விவிலியத்தில் வருவது.[மத்தேயு(7:1)].

'When we judge others we don't have time to Love them' என்பது அன்னை தெரஸா அவர்களின் அணுகுமுறை. அதை அடிப்படை கோட்பாடாக கொண்டால் விரைவிலேயே நம்முடைய அந்தக் குறைபாடு நீங்கி அவரைப் போலவே அனைவரையும் நேசிக்கும் அன்பு புனல் நம்மிடமிருந்து தொடர்ந்து பெருகும்.

அந்த அணுகுமுறை நம்முள் உறுதிப்பட வேண்டுமானால், குற்றம் குறைகளற்ற, இறைவனைத் துணை கொள்ள வேண்டும்.

மனிதர்களின் குறைகளை பாராட்டமாட்டேன் என்று விரதம் எடுத்துக் கொண்டாலும் பல சமயங்களில் நமக்கு உள்ள பொறுப்பு காரணமாக சிலரிடம் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாகி விடுகிறது. கண்டிப்பதும் அவசியமாகிறது.

கேட்பவருக்கு நாம் சொல்வது பிடிக்காமல் போகலாம், நம்மை தூற்றலாம். அப்போது நமக்கு இருப்பது இறைவனின் துணையே ஆகும். ஏசு பெருமான் போல ‘ Father, forgive them, for they know not what they do. (Luke 23:34) என்று பிரார்த்தித்துக் கொள்ளும் வகையில் அவர்கள் மீதுள்ள நம் அன்பை விட்டுவிடாமல் இருக்க முடியும். அதற்கு கடவுளை விட பெரும் துணை யாரிருக்க முடியும்?

இந்த பயிற்சி தொடருமானால் நமது அன்பு, ஆற்றுப் பெருக்கு போல பெருகி வழியெங்கும் புத்துணர்வு பாய்ச்சி இறைவனாம் பெருங்கருணைக் கடலை சேரும். அப்படிச் சேர்ந்தவர்களே ஞானிகள். அந்த அன்புப் பெருக்கு ஏற்படும் போது அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை நம்மாழ்வார், மணிவாசகர் போன்ற பேரருளாளர்களின் அனுபவத்தால் அறியலாம்.

காணுமாறு அருளாய் என்றென்றே கலங்கிக்
கண்ணநீர் அலமர, வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே
பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணா!
தொண்டனேன் கற்பகக் கனியே,
பேணுவார் அமுதே! பெரிய தண் புனல்சூழ்
பெருநிலம் எடுத்த பேராளா !


உன் காட்சிக்கென அருள் வேண்டி உள்ளம் கலங்கி, கண்ணீர் சொரிந்து துன்புறுகிறேன். வினைத்துன்பத்தில் சிக்கியுள்ள என்னை பேணுமாறு பலவிதமாய் உன் பெயரை பிதற்றி துன்புறுகிறேன். ராமனாகவும் கண்ணனாகவும் அவதரித்தவனே ! தொண்டர்களுக்கு கற்பகக் கனியே, ஆழியில் மூழ்கிய பூமியை மீட்டெடுத்தவனே எனக்கு காட்சி அருள்வாய் -- நம்மாழ்வார்

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரைஆர் கழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.


(விரையாற் கழல் = மணம் நிறைந்த திருவடி ; கைதான் நெகிழ விடேன்= ஒழுக்கத்தை விடமாட்டேன்; உடையாய்= தலைவனே, இறைவனே)

இறைவா! உனது, மணம் நிறைந்த திருவடியைப் பெறுதற்கு என் உடல் புளகித்து, நடுநடுங்கி கைகளைத் தலைமேல் வைத்து, கண்களில் நீர் வடிந்து, மனம் புழுங்கி, பொய்நீங்கி, உன்னைக் குறித்து வணங்கித் துதிக்கின்ற ஒழுக்கத்தை நான் தளர விட மாட்டேன். ஆதலால் எனது நிலைமையை, நீ நோக்கி உன் அடியாருள் ஒருவனாக ஏற்றுக் கொள்வாயாக! - மாணிக்கவாசகர்

சமுத்திரத்தை நோக்கிய பயணத்தில் வழியிலே பல கோடி ஜீவன்களுக்கு வாழ்வளிக்கும் ஆற்றுப் பெருக்கு போல ஞானிகளின் அன்பு பெருக்கு மற்றவர்களையும் உய்விக்கிறது. கபீராகவும் மணிவாசகராகவும் நம்மாழ்வாரகவும் பலப் பல ஜீவ நதிகள் இந்த பூமியை வளப்படுத்தி வருகின்றன.