Tuesday, December 25, 2007

எறும்பின் பேராசை

ஞான ஸ்நானத்திற்குப் பின்பு ஏசு பிரான் பரிசுத்த ஆவியால் யாருமற்ற ஒரு பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்த நாற்பது நாட்கள் உணவும் நீருமின்றி இறைவனை இடைவிடாது தியானம் செய்து நோன்பு காத்தார். அப்போழுது அவரால் இறைவனின் சாந்நித்தியத்தை முழுவதுமாக உணர முடிந்தது. அவரின் ஆத்ம சுத்தி்யை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் ஒரு சோதனை நடத்தப்பட்டது.

உடல் தளர்ந்து போயிருந்த ஏசுபிரானை சாத்தான் அணுகியது. பசியுற்றிருப்பவனுக்கு முதல் தேவை உணவு தானே. "நீ கடவுளின் குழந்தை என்பது உண்மையானால் இதோ இங்கிருக்கும் கற்களை ரொட்டித் துண்டுகளாக மாற்று" என்றது சாத்தான். அவருக்கு அப்படி மாற்றும் சக்தி இருந்தது என்பதையும் அது அறிந்திருந்தது.

யோக மார்க்கத்திலே சித்தி பெற்றவன் அவைகளை தன் சுயநலத்திற்கு பயன்படுத்தும் போது நிலைதவறி சக்தியை இழப்பான் என்பது தொன்றுதொட்டு நம் ரிஷி முனிகள் சொல்வதை அப்படியே பரிசோதிப்பது போல் இருக்கிறது இந்நிகழ்சி.

அத்தகைய ஒரு தூண்டுதலுக்கு ஆளாகாமல் "ரொட்டி ஒன்றினால் மட்டுமே மனிதன் உயிர்வாழ்வதில்லை. கடவுளின் சித்தப்படிதான் (every word of God) உயிர் வாழ்கிறான்" என்று பதில் கூறினார். அதாவது தனக்குள்ள சித்தி ஆற்றலை தனக்காக பயன்படுத்திக்கொள்ள மறுத்துவிட்டார்.
இதிலிருந்து தன்னை முழுவதுமாக கடவுளிடம் ஒப்படைத்துக் கொண்ட சரணாகதித் தன்மை தெரிகிறது.

அடுத்து அவரை மிக உயரத்திலிருக்கும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று "சாஸ்திரங்களில் கூறியிருப்பதை நீ அறிவாய். தன் தேவதைகளை அனுப்பி காக்க வல்லவன் இறைவன். என்வே நீ கடவுளின் குழந்தை என்பதானால் தேவதைகள் உன்னைக் காப்பாற்றும். இங்கிருந்து கீழே குதி" என்று சாத்தான் உரைத்தது. (satan quoting scriptures ).

" சாஸ்திரங்களிலே உன் கடவுளை நீ பரிசோதிக்கக் கூடாது என்பதையும் கூட சொல்லியிருக்கிறது" என்று பதிலுரைத்தார் சாஸ்திரத்தை முற்றும் அறிந்த ஏசு. இதிலிருந்து அவருக்கு பூரண ஞானம் இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.

கடைசி முயற்சியாக ஒரு மலை சிகரத்திற்கு அழைத்து சென்று "இதோ பார். கீழே கண்ணுக்கெட்டும் தொலைவில் இருக்கும் எல்லா செல்வங்களுக்கும் ராஜ்ஜியத்திற்கும் நீதான் அதிபதி. ஒருமுறை என்காலில் விழுந்து என்னை தலைவனாக ஏற்றுக்கொள்" என்று ஆசை காட்டியது சாத்தான்.

(But Jesus loved His Father. He loved the people of this world, then and now. If Jesus fell down and worshipped Satan He would be turning His back on God.... Now was the time to preach the gospel and give His life in sacrifice before returning to God the Father.
Matt. 24:3, 36; Rev. 11:15; Rev. 20: 2-6.)


"இங்கிருந்து தொலைந்து போ சைத்தானே. கடவுள் மட்டுமே என் தலைவன். அவனது பணிவிடையே என் கடமை" என்று விரட்டிவிட்டார். வேறு வழியில்லாமல் சாத்தானும் அவரை விட்டு விலகியது.

இந்நிகழ்சியிலிருந்து அவருக்கு உலக சுக போகங்களில் பற்று சற்றேனும் இருக்கவில்லை என்பது புலனாகிறது. கடவுளின் மகத்துவத்தை உணர்ந்தவர்க்கு அதன் பின் உலகத்தின் பிற விஷயங்களில் உள்ள நாட்டம் போய்விடும். தன் இஷ்ட தெய்வமான திருமாலைப் போற்றிப் பாடும் தொண்டரடி பொடியாழ்வாரும்.

.......இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
என்று பாடுகிறார்.

இதையே மாற்றி சொல்வதானால் அவன் படைப்பில் உள்ள பிறவிஷயங்களில்- இந்திர லோகமே ஆயினும்- மனம் நாட்டம் கொள்ளும் வரை இறைவன்பால் நாம் சொல்லிக்கொள்ளும் பக்தி பூரணமானதல்ல. ஒருவிதத்தில் அவை ஒரு நிபந்தனைக்குட்பட்டது (conditional) என்றே சொல்லலாம். பூரண சரணாகதி வரும் பொழுது மட்டுமே அஞ்ஞானம் ஒழிந்து ஞானம் பிறக்கிறது. இதையே mutually exclusive என்கிறோம். இருளும் ஒளியும் போல.

இந்த உண்மையை ஒரு எறும்பின் செயலை வைத்துச் சொல்லுகிறார் கபீர்.

चिउंटी चावल ले चली, बिच में मिल गई दाल ।
कहैं कबीर दो न मिलै, इकले दूजी डाल ॥
சிவுன்டி சாவல் லே சலி, பிச் மே மில் கயி தால்
கஹை கபீர் தோ ந மிலை, இக்லே தூஜி டால்

தினைதனை ஈர்த்த உழுவம், வழியில் கண்டது முரியும்
உரைப்பன் ஈங்கு கபீரும், இரண்டில் ஒன்றே முடியும்
( உழுவம் =எறும்பு, ஈர்த்தல்= இழுத்தல், முரி =அரிசி நொய் )

அரிசி தூக்கிச் செல்லும் எறும்பு வழியில் காணும் பருப்புக்கு ஆசைப்பட்டால் இரண்டும் இல்லாமல் போகும் அபாயம் உண்டு( தோ ந மிலை) என்று கபீர் எச்சரிக்கிறார். அதாவது அந்த எறும்பு மாற்றி மாற்றி சிறிது சிறிதாக இரண்டையும் இழுத்துச் செல்ல பார்க்குமாம். அப்படி செய்யும் போது் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேறு எறும்புகள் இரண்டையும் தூக்கிச் சென்றுவிடுமாம்.

எறும்பின் சக்திக்கு தினை அல்லது அரிசி இரண்டில் ஒன்றை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அதுபோல நாம் பிறவி எடுத்ததன் பலன் இறைவன் பால் திரும்ப வேண்டுமானால் இயற்கையின் ஈர்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது என்பதே மகான்களின் அறிவுரை. அதனால் தான்

"ஆசைக்கோர் அளவில்லை; அகிலமெல்லாம் கட்டி ஆளினும் அலைகடல் மீதே ஆணை செலவே நினைவர் ; அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் ; நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இன்னுங் காயகற்பம் தேடி நெஞ்சு புண்ணாவர்; ............ ஒன்று விட்டு ஒன்று பற்றி பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலை அருள்வாய்"

என்று பரிபூரணானந்தத்தில் தாயுமானவர் வேண்டுகிறார்

பரலோகம் வேண்டின் ஏசு பிரான் போல இகலோகத்தை கைவிட வேண்டும்.

அனைவருக்கும் கிருஸ்மஸ் நல்வாழ்த்துகள்.


Thursday, December 13, 2007

இளைத்தவர் சீற்றம் இடும்பைத் தரும்

நானூறு ஆண்டுகளுக்கு முந்தய கதை.

விஜய நகர சாம்ராஜ்யத்தின் வலிவு குன்ற ஆரம்பித்த காலம். அவர்களுக்கு கப்பம் கட்டிய அரசர்களெல்லாம் சற்றே சுயேச்சையாக செயல்பட ஆரம்பித்தனர். அவற்றுள் ஒன்று மைசூர் சமஸ்தானம். மன்னன் ராஜ ஒடையார் அருகிலிருந்த ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மீது படையெடுத்து அங்கிருந்த விஜயநகரத்து பிரதிநிதியான ஸ்ரீரங்கராயனை விரட்டிவிட்டு அதைக் கைப்பற்றிக் கொண்டான். அவனும் தன் சுற்றத்துடன் வடக்கே முப்பது மைல் தூரத்திலுள்ள காவிரிக் கரையின் அருகே மாலிங்கி, தலக்காடு என்று பிரபலமாயிருந்த பகுதிக்கு குடி பெயர்ந்தான். சில நாட்களிலே இறந்தும் போனான்.

அவனது இரண்டாவது மனைவி அலமேலு தன்னுடன், தேவி ரங்கநாயகிக்கு சாற்றி வந்த விலையுயர்ந்த நகைகளையும் எடுத்துச் சென்று விட்டாள். அவை விஜயநகர சாம்ராஜ்யத்தின் சொத்து. அவர்கள் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஆட்சி செய்த வரை ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியும் அவைகளை சாற்றி ரங்கநாயகிக்கு மிகவும் விமரிசையாக பூஜை செய்து வந்தனர். பிற நேரங்களில் அவை அலமேலம்மாவிடமே இருந்து வந்தது.

கோவில் தரப்பிலிருந்து இந்த விஷயம் ஒடையார் மன்னனுக்கு தெரிவிக்கப்பட்டது. தெரிவித்தவர்கள் அதை எப்படி செய்தனரோ தெரியாது. மன்னன் அவை கோவிலுக்கு சொந்தமானது என்று நினைத்துவிட்டான் போலும். அவைகளை திரும்பப் பெறுவதற்காக பலமுறை முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை. அலமேலம்மா ஒரே ஒரு பெரிய முத்தினால் ஆன மூக்குத்தியை மட்டும் கொடுத்து அனுப்பினாள். கடைசியாக தன் படையையே அனுப்பி அவற்றை பலாத்காரமாக கொண்டுவர ஆணையிட்டான். அலமேலு நிராதாரவாக நின்றாள். வெறும் தன்மானப் பிரச்சனை மட்டுமல்ல தன்னை சேர்ந்த சாம்ராஜ்யத்தின் மானமும் அதில் அடங்கியிருந்தது என்று நினைத்தாளோ என்னவோ.

ஒரு சமஸ்தானத்தின் அதிகார பலத்தின் முன்னே அவள் ஒரு துரும்பு. செய்வதறியாது வயிறெரிந்து சாபமிட்டாள்.

தலக்காடு மணற்காடு ஆகட்டும்; மாலங்கி மடுவாய் போகட்டும் ; மைசூர் அரசு வம்சமில்லாமல் போகட்டும்.

காவிரி கரையில் செழிப்பான விளைநிலமாக திகழ வேண்டிய இடத்தில் பத்து சதுர மைல்கள் விஸ்தீரணம் உள்ள ஒரு மணற்காடு உருவானதற்கு புவியியல் காரணங்களை விஞ்ஞானிகள் இன்றும் ஆராய்வதாகக் கேள்வி.
இந்த மணற்காட்டின் நடுவே தான் பஞ்ச லிங்க ஆராதனை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விசேஷமாக நடைபெறுகின்றது. அங்குள்ள அதிக காற்றோட்டத்தால் மணற் குவியில் விரைவிலேயே அந்த கோவில்களை மூடிவிடுகிறது. ஆகையால் தினசரி பூஜைகளை கைவிட்டு பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மூடிக்கொண்டிருக்கும் மணற் குவியலை விலக்கி விசேஷ ஆராதனைகள் நடத்தி வருகின்றனர்.

மாலங்கி மடுவாகட்டும் என்று சாபத்தின் விளைவாக காவிரி ஆறும் தன்போக்கை மாற்றிக் கொண்டு மாலங்கியை நீரில் மூழ்கடித்து மிக ஆழமான சுழலாக மாறியது என்பர். அந்த சுழலில் குதித்து அலமேலம்மா தன்னை மாய்த்துக்கொண்டாள் என்பது செய்தி. அதற்கு காரணம் எதிரிகள் கையில் தன் இறந்த உடல் கூட கிடைக்கக் கூடாது என்பதுதான்.

அந்த இரண்டு சாபங்களையும் நம்ப மறுக்கின்றவர்களும் மறுக்க முடியாத ஒரு சாபம் அரசு வம்சமில்லாமல் போனது.

ராஜ ஒடையாரின் மூன்று மகன்களும் சிறு வயதிலேயே மரணமுற்றனர். அதன்பின் அவனுக்கு புத்திர பேறு இருக்கவில்லை. கடந்த நானூறு ஆண்டுகளாக மைசூரில் அரசனாக அரியணையில் வீற்றிருப்பவருக்கு ஆண் சந்ததியினர் கிடையாது. ஒவ்வொரு முறையும் தத்து எடுத்துக் கொண்டே அரசனை முடிவு செய்திருக்கின்றனர். ( தத்து வந்தவருக்கு மகன் இருப்பினும் அவன் அரியணை ஏறியபின் அவருக்கு சந்தானமில்லாமல் போய்விடும்). சிறிது காலம் ஹைதர், திப்புவின் கை ஓங்கி ஆட்சி நிலவியதும் இந்த குழப்பத்தினால்தான். ஹைதரும் திப்புவும் மைசூர் அரண்மனையை கைப்பற்றவில்லை

பின்னர் ஆங்கிலேயர் ஒடையார் குடும்பத்திற்கு ஆதரவு தந்து ஆட்சியை பலப்படுத்திய பின்னரும் சாபம் தொடர்கிறது. இதைப் போக்கிக்கொள்ள இன்றைய அரச பிரதிநிதி ஸ்ரீகண்ட தத்த ராஜ ஒடையார் பல ஆராதனைகளை நடத்திவருகிறார். அவரும் புத்திர பாக்கியம் இல்லாதவர்.

(புதைபொருள் ஆராய்சி கழகம் The curse of Talakkad என்ற குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. அதைக்காண இங்கே சுட்டவும் )

என்னே அலமேலம்மாவின் சாபம்.

திருக்குறளும் இதைத்தானே சுட்டிக்காட்டுகிறது.

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்.

கபீர்தாஸர் இதையே ஒரு சின்ன உதாரணத்தின் மூலம் புரிய வைக்கிறார்.

दुरबल को न सताइये, जाकी मोटी हाय ।
मुई खाल की सांस से, सार भसम होई जाय ॥


துர்பல் கோ ந சாதாயியே, ஜாகி மோடி ஹாய்
முயீ கால் கீ ஸாஸ் ஸே, ஸார் பஸ்ம் ஹோயி ஜாய்


இளைத்தவர்க்(கு) இன்னா செய்யின், இன்னாங்கு தருமவர் சீற்றம்
உளுத்த விறகின் தணலும் கொள்ளும் அனைத்தும் பற்பம்

( இளைத்தவர் = வலிமையற்றவர், இன்னாங்கு =துன்பம்,
உளுத்தது = புழுவால் அரிக்கப்பட்டது , பற்பம் =பஸ்மம், சாம்பல்)


உளுத்துப் போன மரமானாலும் அதில் கனன்று கொண்டிருக்கும் தீயின் வலிமையை யாரும் குறைத்து மதிக்கமாட்டார்கள். "அக்கினிக் குஞ்சொன்று...... பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு" என்பது பாரதியின் வரிகள்.

வாழ்க்கையில் ஏதோ காரணமாக கஷ்ட தசையில் இருக்கும் நல்லவர்களை ஏமாற்றியோ, பலாத்காரத்தாலோ அவர்களுக்கு சொந்தமான பொருளை அபகரிப்பது அவர்களுக்கு சொல்லொணா மனவேதனைத் தரும்.

நல்லவன் ஒருவன் மனம் நொந்து கொண்டால் அதற்கு காரணமாயிருப்பவரின் குடும்பத்துக்கு கேடு வரும் என்பது தொன்றுதொட்டு இந்த மண்ணில் இருந்து வரும் நம்பிக்கை. "தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ " எவனொருவன் தர்மத்தை காக்கிறானோ அவனை தர்மமே காக்கிறது. அதர்மத்தால் அவதிபடுபவர்களின் நியாமான சீற்றம் சாபமாக மாறி அதர்மத்தில் உழல்வோருக்கு பாடம் புகட்டும் சக்தியாக மாறிவிடுகிறது.

தர்மம் என்பது நம்முள் உறையும் இறைவனின் குரல். அதை மனசாட்சி என்றும் சொல்வதுண்டு. வழிகாட்டும் விளக்காகப் பயன்படும் அது வழி தவறும் போது சுட்டெரிக்கும். அதையே வள்ளுவரும்

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்

என்று குறிப்பிடுகிறார்.

உள்ளிருந்தும், வெளியிருந்தும் சுடுகின்ற சக்தி தர்மத்திற்கு உண்டு.


பிற்சேர்க்கை " 13-12-2007
பல இடங்களில் எழுதி வைப்பதால் சில சமயங்களில் மறந்து விடுகிறது.
உளுத்த விறகு என்ற பொருளில் எந்த வார்த்தையையும் ஹிந்தியில் கபீர் பயன்படுத்தவில்லை. பின்னர் முறையான மொழிபெயர்பு என்று நான் நினைத்து எழுதி வைத்ததை இங்கே தருகிறேன்.


சீறுமவர் சாபம் பொல்லாது, ஒறுத்தல் கூடா இளைத்தவரை
நீறுகாண் தணலும் எரிக்கும், பற்றிய எதையும் இறுதிவரை

Friday, November 23, 2007

சிரிப்பு பாதி அழுகை பாதி

பலருக்கும் தெரிந்த, பிடித்த ஒரு திரைப்படப் பாடல். எங்க வீட்டுப்பெண் படம். முதல் வரி் "சிரிப்பு பாதி அழுகை பாதி, சேர்ந்ததல்லவோ மனித ஜாதி".

உலக நியதியின் படி இன்பம் துன்பம் என்பது மாறி மாறி வருவதே. அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் இன்பமோ துன்பமோ எல்லாம் அவரவர்கள் நிகழ்வை அணுகும் முறையிலே உள்ளது. தனிப்பட்ட வகையிலே எந்த ஒரு நிகழ்வும் நல்லதோ தீயதோ இல்லை. நாம் விரும்பும் வகையில் நிகழ்சிகள் நடக்கும் போது எல்லாம் மகிழ்சியே. அப்படி இல்லாத போது துன்பமே.

உலகின் பெரும்பாலான மக்கள் சிறு குழந்தைகள் போல. தூங்கி எழுந்து பசியாறி வேறு தேவைகள் இல்லாத நிலையில் விளையாட்டில் மனம் ஈடுபட்டு தன்னை மறந்து இருக்கும் ஒரு குழந்தை. அப்பொழுது வீட்டின் ஞாபகமோ தாயின் ஞாபகமோ அதற்கு இருப்பதில்லை. அதுவே விளையாடும் போது அடிபட்டால் உடனே "அம்மா அம்மா" என்று அழுது தீர்த்துவிடும். அதனுடைய தாய் வந்து ஒரு பெரும் முயற்சி எடுத்து சமாதானம் செய்வதற்குள் பிறருக்கு போதும் போதும் என்றாகிவிடும்.

வாழ்க்கையில் நமக்கு சிறு துன்பம் வந்துவிட்டால் உடனே இறைவனின் ஞாபகம் வந்துவிடும். யாருக்கும் இல்லாத துன்பம் நமக்கு மட்டுமே ஏற்பட்டு விட்டது போல் துடித்து விடுவோம். உலகில் நம் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட வரையில் கடவுளின் அவசியம் தெரிவதில்லை. இந்த இயல்பை கபீர் இப்படி உரைக்கிறார்.

सुख के माथे सिल परै, राम हृदय से जाय ।
बलिहारी व दुखकी, पल पल राम रटाय ॥


ஸுக் கே மாதே ஸில் பரை, ராம் ஹ்ருதய் ஸே ஜாய்
பலிஹாரி வ துக்கீ, பல் பல் ராம் ரடாய்


மதியும் சுகத்தில் இறுகிடும், மனமும் ராமனை மறந்திடும்
விதியால் துயரம் வந்திடின்,கதி அவனே என்றே கிடந்திடும்


ஹிந்தியில் पल पल (பல், பல்) என்றால் ஒவ்வொரு கணமும் என்று பொருள். கஷ்டகாலத்தில் ஒவ்வொருகணமும் இடைவிடாது இராமனை செபிக்கக் கூடியவர்கள், சுகமான காலத்தில் கல்நெஞ்சக்காரர்கள் ஆகிவிடுவார்களாம்.

ஒரு வணிகனுக்கு கடன் தொல்லை மிகுதியாகி ஒரு சமயம் பெருமாளிடம் வேண்டிக்கொண்டானாம். "பெருமாளே நீ என் வியாபாரத்தை நல்ல முறையில் பெருக்கிக் கடன் தொல்லையைத் தீர்த்துவிடு. பதிலுக்கு என்னுடைய நிலத்தில் ஒரு காணியை விற்று உனக்கு காணிக்கையாக உண்டியலில் சேர்த்து விடுகிறேன்." அதாவது நிலத்தை விற்றுத் தீர்க்கக்கூடிய கடன் அல்ல. அதை விடவும் பல மடங்கு பெரிது. ஆகவே பெருமாளுக்கு ஒரு சிறிய கமிஷன்.

பெருமாளின் அருளால் விரைவிலேயே அவன் நிலைமை முன்னேறி வியாபாரம் செழித்தது. கடனெல்லாம் தீர்ந்தது. வணிகனின் மனைவி அவனுக்கு வேண்டுதலைப் பற்றி நினைவூட்டிக்கொண்டே இருந்தாள். நிலத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. வணிகனுக்கோ காணி நிலம் விற்றுவரக்கூடிய பணம் இப்பொழுது மிகப் பெரிதாகத் தெரிந்தது. கடவுளையும் [மனைவியை என்று கொள்க :))] திருப்தி படுத்தவேண்டும். பணத்தையும் இழக்கக்கூடாது என்கிற நிலை. பல நாள் யோசனைக்குப் பின் அவனுக்கு ஒரு வழி புலப்பட்டது. தரகர்களிடம் "என் நிலத்தை வாங்குபவர்கள் அதில் காவலுக்கு இருக்கும் நாயையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும். நிலத்தின் விலை ஒரு தங்கக் காசு. நாயின் விலை ஆயிரம் தங்கக் காசுகள்" என்று சொல்லி வைத்தான். எப்படி அவன் தந்திரம் !! இதைத்தான் கபீர் ’சுகத்தில் மதியும் இறுகிடும்’ என்கிறாரோ? (माथे -புத்தி, அறிவு, सिल परै- கல் போலாதல்).

வேறு சில துன்பங்கள் கர்ம வினைகளை ஒட்டி வருவன. பிறவி ஊனம், பெரும் பிணிகள் போன்றவற்றிற்கு இறைவனையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இவைகளை பரமஹம்ஸர் குடிக்கூலி என்பார். குடியிருக்கும் வீட்டிற்கு ஒருவன் வாடகை கொடுத்தாக வேண்டும். இதிலிருந்து விடுதலை எப்போது? தாயுமானவர் இவற்றை ஒரு பொருட்டாக கருதவில்லை. இறைவனின் அருள் வெள்ளம் பெருகும் போது அதன் முன்னே இந்த கர்மாக்கள் என்ன செய்ய முடியும் எனக் கேட்கிறார்.

காகமானவை கோடி கூடி நின்றாலும் ஒரு
கல்லின் முன் எதிர் நிற்குமோ
கர்மமானவை கோடி முன்னே செய்தாலும் நின்

கருணைப் பிரவாக அருளைத்

தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ ... (எங்கும் நிறைகின்ற பொருள்-6)


கர்ம வினைகளெல்லாம் வெறும் காக்கை கூட்டம் போலனவாம். இறைவனின் திருநாமம் என்ற ஒரு கல்லை வீசுங்கள் போதும் அவையெல்லாம் பறந்து போகும் என்கிறார். அந்த உண்மையை உணர்ந்த கபீருக்கும் அதனாலேயே துன்பப் படுபவர்களைக் கண்டால் ஆச்சரியம் தோன்றுகிறது.

दुख में सुमिरन सब करे, सुख में करे न कोए ।
जो सुख में सुमिरन करे, दुख काहे को होए ॥


துக் மே சுமிரன் ஸப் கரே, ஸுக் மே கரே ந கோய் |
ஜோ ஸுக் மே சுமிரன் கரே, துக் காஹே கோ ஹோய் ||


துயரில் துய்வர் அவன் நாமம்,
உயர்வில் உன்ன மறப்பரே

உயர்விலும் உன்னுவராயின்
துயரின் சாயலும் தொலையுமே

(உன்னுதல்= இடைவிடாது நினைத்தல்)

துக் காஹே கோ ஹோய் "என்றால் "துன்பம் எதற்காக வரும்" என்று பொருள்.

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்"


கடவுளின் சிந்தையில் மூழ்கியவனுக்கு பிறருக்கு தீங்கு செய்தல் என்பது இல்லை. அப்புறம் அவனுக்கு துன்பம் எதற்காக வரும். தெய்வ ப்ரீதி, பாப பீதி என்று இதையே ரத்தின சுருக்கமாக சொல்லி வைத்துள்ளனர் நம் பெரியவர்கள்.

Saturday, November 03, 2007

நீரோட்டமும் மனவோட்டமும்

பூங்காவின் ஒரு மூலையில் துப்பாக்கியால் குறி பார்த்து சுடும் பயிற்சியை ஒரு சில இளைஞர்கள் செய்து கொண்டிருந்தனர். இலக்கை விட்டுத் தள்ளியே எல்லோரது குண்டுகளும் துளைத்துக் கொண்டிருந்தன. எவ்வளவு விலகிச் சென்றதோ அதை வைத்தே ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வதும், வேடிக்கைப் பேச்சுமாக நேரம் போய்க் கொண்டிருந்தது.

ஒரு சுவாமிஜி நமட்டுப் புன்னகையுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் தெரிந்த ஏளனமே ஒருவனை உசுப்பேற்றியது. "நீங்களும் ஏன் முயன்று பார்க்கக் கூடாது" என்று வம்புக்கிழுத்தான். வாழ்க்கையில் முன்பின் துப்பாக்கியைப் பிடித்திராத சுவாமிஜி சிரித்துக்கொண்டே தனக்கும் அந்த வேடிக்கை சம்மதமே என்பது போல் கையில் துப்பாக்கியை வாங்கிக் கொண்டார்.

ஒன்று...இரண்டு... மூன்று.

குறிதவறாத குண்டுகள் அவருடைய கரங்களிலிருந்து இயக்கப்பட்ட அதே துப்பாக்கியிலிருந்து. வாயடைத்து நின்றனர் இளைஞர்கள். "நீங்கள் எங்கே பயிற்சி பெற்றீர்கள்?"

"உங்களுடைய தேவை மனப் பயிற்சி. கைப் பயிற்சி அல்ல. மனதை ஒருமுக படுத்துங்கள். பின்னர் எல்லாம் ஒழுங்கு படும்"என்று சொல்லி விடை பெற்றார் சுவாமிஜி.

விவேகானந்தரின் அமெரிக்க விஜயத்தின் போது நடைப்பெற்ற இந்த சம்பவம் வெற்றிக்கு மனஒருமைப்பாடு எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

சரியான முறையில் மனப்பயிற்சி இல்லாவிட்டால் அது கட்டுபாடற்ற நீர் ஓட்டம் போல் பயனற்றதாகி விடும் என்கிறார் கபீர்தாஸரும்.

पानी केरा बुदबुदा, अस मानस की जात ।
देखत ही छिप जायेगा, ज्यों सारा परभात ॥

பானீ கேரா புத்புதா, அஸ் மானஸ் கீ ஜாத்
தேகத் ஹீ சிப் ஜாயேகா ஜ்யோம் ஸாரா பர்பாத்

நில்லாத நீரும் விரயமே,
நில்லாத மனமும் வீழ்வதே
நில்லாது, வைகறைப் புலர்விலே,
தாரைகள் மின்மினி ஒளியுமே

(வீழ்தல் - வீணாகக் கழித்தல். தாழ்வுறுதல், தாரை -நட்சத்திரம், ஒளியுமே -ஒளிர்தல் மற்றும் ஒளிதல் என்ற இரு பொருள்களிலும் கொள்ளலாம்)

ஓடும் நீரை அணையைக் கட்டி தேக்கினால் மின் உற்பத்திக்கும், உணவு உற்பத்திக்கும் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நிலத்தில் சிதறி இங்குமங்காய் பாய்ந்து குறிப்பிட்ட எந்த பயனும் அடையமுடியாதபடி விரயமாகிவிடும்.

அது போலவே மன ஓட்டத்தையும் கட்டுப்படுத்தாதவன் ஆற்றலை இழக்கிறான். எவ்வளவு வேகமாக இந்த விரயம் நிகழ்கிறது என்று கேட்டால் கதிரவன் தோன்றியதும் நட்சத்திரங்களின் ஒளி மறைந்துவிடும் வேகத்தில் நடக்கிறதாம் ! - இது ஹிந்தி மூலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்.

சூரியனையும் நட்சத்திரங்களைக் கொண்டு வெறும் ஆற்றல் வீணாவதைப் பற்றி மட்டுமா கபீர் சொல்லுவார்? அவ்வளவு பொருத்தமாக இல்லை என்று தோன்றியது. இதற்கு மேலும் ஆழ்ந்த உள்நோக்கம் இருக்கும் எனவும் தோன்றியது. அந்நோக்கத்தைப் பற்றி பேசும் முன் இரு மகான்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்சிகளைப் பார்ப்போம்.

இரமணர் அண்ணாமலையாரைத் தேடிச் சென்றது அவருடைய பதினைந்தாவது வயதில். ஞான அனுபூதிக்கு முன்னும் பின்னும் அவர் திருவண்ணாமலையை விட்டு வெளியே சென்றதில்லை. வேறெந்த கல்வியும் யாரையும் தேடிச் சென்று பெற்றதில்லை. ஆனால் தமிழறிஞர்களும் வியக்கும் வண்ணம் உபதேச சாரம் என்ற நூலை அடியவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றினார். முப்பது பாக்கள் கொண்ட அத்வைத சாரமாக விளங்கும் அதை பின்னர் அவரே வடமொழியிலும் அதன் பின்னர் தெலுங்கிலும் படைத்தார். உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவனாய் வெளியே வந்தவருக்கு மூன்று மொழிகளில் உயரிய வேதாந்தத்தை செய்யுள் செய்யும் புலமை எங்கிருந்து வந்தது?

ஷிரடி ஸாயியின் கால்களைப் பிடித்து விட்டுக்கொண்டே நானாஸாஹேப் சாந்தோர்கர் கீதையின் சுலோகங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். ஸாயிக்கு வடமொழி தெரியாது என்ற உண்மையும் தனக்கு வேதாந்தத்தில் உள்ள தேர்ச்சியையும் எண்ணி அவர் கர்வமடைந்திருந்தார்.
பாபா : நானா என்ன முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாய் ?
நானா : கீதையின் ஒரு சுலோகம்.
பாபா : என்ன சுலோகம் . பலமாக கூறு

நானா நாலாவது அத்தியாயத்திலிருந்து 34 ஆவது சுலோகத்தை கூறினார்.
அதன் பின்னர் அதன் பொருள் பற்றிய பாபாவின் பல நுணுக்கமான கேள்விகளுக்கு நானா விடைதெரியாமல் தவித்தார். பாபா நானாவுக்கு அதன் ஒவ்வொரு வார்த்தைக்கான விளக்கவுரையும் வியாசரின் (வியாசரால் சொல்லப்பட்டது தானே மஹாபாரதம்) கண்ணோட்டத்தையும் விவரமாகச் சொல்லச் சொல்ல நானாவுக்கு தன்னுடைய அறிவு எவ்வளவு குறைவானது என்று புரிந்தது.

பெரிய மனிதர் ஒருவர் வீட்டில் எடுபிடி வேலை செய்து வளர்ந்த சாயி சொல்லிக்கொள்ளும் வண்ணம் எந்த படிப்பும் பயின்றவர் இல்லை. ஆனால் ஒரு பெரிய பண்டிதருக்கே கீதைக்கு பொருள் சொல்லும் வல்லமை அவருக்கு எங்கிருந்து வந்தது ?

இந்த இரு நிகழ்சிகளிலும் புலப்படுவது ஒன்றுதான். பூரண ஞானமடைந்தவனுக்கு புறத்தாக ஒன்றும் கிடையாது. அவர்கள் மனதில் ஒன்றை நினத்தவுடனே (சங்கல்பித்த உடனேயே) அதற்கான ஆற்றல் அவர்களின் உள்ளிருந்து பெருகுகிறது. இதையே கபீர், கதிரவன் (ஞான) உதயத்திற்கு ஒப்பிடுகிறார்.

அந்த ஞானத்திற்கு முன்னிலையில் மனிதர்களாகிய நம்முடைய தனிப்பட்ட திறமைகளும், ஆற்றல்களும் சாதனைகளும் பெருமைகளும் எல்லாம் மின்மினிகளின் ஒளிர்தலை போன்றதே. இவையெதுவுமே ஞானிகளுக்கு பெரிய விஷயமில்லை. ஏனெனில் அவர்கள், உலகின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரண காரியம் இருப்பதையும் ஒரு மிகப் பெரிய நியதியின்படி அது நடந்து வருவதையும் முற்றிலுமாக அறிந்தவர்கள் ஆவார்கள். ஆகையால் உலகாதாய வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்வித நாட்டமும் இருப்பதில்லை.

கபீரின் மேற்கண்ட ஈரடியில் அத்தகைய ஒரு ஞானத்தை பெறுவதற்கான மன ஆற்றலை வளர்த்து கொள்வதே வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் அடியில் வீணாகும் ஆற்றலைப் பற்றியும் இரண்டாம் அடியில் அடைய வேண்டிய உண்மையான ஆற்றல் பற்றியும் கூறியிருக்கிறார் எனக் கொள்வோமானால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

Sunday, October 21, 2007

கேடி என்பவன் எங்கே

இன்று விஜயதசமி. அல்லவை தேய்ந்து அறம் பெருக என்று வேண்டி செயலாற்ற வேண்டிய நாள்.

இராமன் தசக்ரீவனை அழித்த நாள் என்றும் அருச்சுனன் அஞ்ஞாத வாசத்திற்கு முத்தாய்ப்பாக மீண்டும் ஆயுதம் ஏந்திய நாள் என்றும் தேவி மஹிஷாசுரனின் கொட்டத்தை முடிவு கட்டிய நாள் என்று பலவாறாக பல பகுதிகளில் போற்றிக் கொண்டாடப் படும் நாள்.

நல்லனவும் தீயனவும் புறத்தே இல்லை. நம் உள்ளே புகுந்து நம் எண்ணத்திற்கு ஏற்றவாறு உலகை நம்முன் நிறுத்துகிறது.

ஒருமுறை கண்ணன் துரியோதனனிடம் யாராவது ஒரு நல்லவனை தேடிப்பிடித்து வா என்று அனுப்புகிறான். அவன் திரும்ப வந்து ”அப்படி ஒருவனை எங்கேயும் காணமுடியவில்லை. எல்லோர் உள்ளும் ஏதாவது ஒரு கெட்ட எண்ணம், தீய சிந்தனை என்னும் போது நல்லவன் எங்கே இருக்க முடியும்” என்றானாம்.
தருமரிடம் இதையே மாற்றி ”நீ யாராவது ஒரு தீயவனை கண்டு வா” என்று கேட்டுக்கொண்டான். தருமன் நாடெல்லாம் சுற்றி வந்து "கண்ணா எனக்கு தீயவன் என்று யாரைப் பற்றியும் எண்ணத் தோன்றவில்லை. எல்லோருள்ளும் பலவிதமான நல்ல குணங்களே கண்டேன். அறியா குழந்தைகள் சிலசமயம் தவறிழைப்பதுண்டு. அதனாலேயே அவர்களை தீயவர்கள் என்று சொல்ல மனமொப்பவில்லை" என்று தன் பார்வையை முன் வைத்தான்.

காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்ற பழமொழிக்கேற்ப இருவரின் பதிலும் அமைந்திருப்பதை காண்கிறோம்.

உலகை சரி செய்ய விழைவோர் முதலில் செய்ய வேண்டியது தம்மை சரி செய்து கொள்ளுதல். அந்த சுய சோதனையை ஆரம்பித்து விட்டால் பின்னர் வேறெதற்கும் நேரம் இருக்காது. அதன் முடிவில் பார்த்தால் ’சரி செய்ய வேண்டியது’ என்று ஒன்றுமில்லை என்பது புரிந்துவிடும் என்கின்றனர் மகான்கள். இதை கபீரின் வரிகளில் பார்ப்போம்.


बुरा जो देखण में चला, बुरा न मिलिया कोए ।
जो मन खोजा आपणा, तो मुझ्से बुरा न कोए ॥

புரா ஜோ தேக்கண் மேன் சலா, புரா ந மிலியா கோயி
ஜோ மன் கோஜா ஆப்ணா, தோ முஜ்ஸே புரா ந கோயி

தீயவன் ஒருவன் எங்கே, தேடிக் கண்டிலேன் இங்கே
தேடிக் கொண்டேன் என்னுளே என்னிலும் தீயவன் இலையே

மாற்று :

கேடன் ஒருவனைத் தேடினேன், இல்லை ஒரு கேடனே
தேடலும் என்னுளே கண்டேன், பெருங்கேடனும் யானே

(கேடன் =தீய எண்ணம் கொண்டவன்)

மாற்று :
கேடி ஒருவனைத் தேடினேன், கண்டி லேனொரு கேடியே
தேடிக் கொள்வேன் என்னுளே, என்னிலும் கேடி இலையே

(கேடி = பழந்திருடன். ஜன்ம ஜன்மங்களாக விரும்பத்தகாத குணங்களை சுமந்து வரும் நாமும் ஒருவகையில் பழந்திருடர்கள் தானே!)

சமூகத்தில் ஒருவன் எப்படி மதிக்கப் படுகிறான் ? அவன் வெளிச்செயல்களை வைத்தா அல்லது அவன் கடைபிடிக்கும் உண்மை நெறிகளை வைத்தா? எவ்வளவு தான் மூடி மறைத்து வெளிவேடம் போட்டாலும் ஒரு நாள் சாயம் வெளுத்து உண்மை வெளி வரும். பின் மிஞ்சுவது அவப் பெயர்தான்.

மானுடரின் அசுர இயல்புகள் எப்படி கட்டுக்குள் இல்லாமல் துன்பம் தருகின்றன என்பதை பட்டினத்தார் அருட்புலம்பலில் உரைக்கிறார்.

அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே
கைச்சும் இன்னுமானங் கழலேனே என்குதே

காமக் குரோதம் கடக்கேனே என்குதே
நாமே அரசென்று நாடோறும் எண்ணுதே

”The more a person is ashamed of himself the more respectable he becomes'' - பெர்னார்ட் ஷா கூறியதாக நினைவு. தன் குற்றங்களை உணர்ந்து அவற்றை களைய முற்படும் பொழுது ஒருவரின் ஆன்ம பலம் உயர்ந்து கொண்டே போகிறது. அதுவே பல அரிய காரியங்களை சாதிக்கும் வல்லமை தருகிறது.

செயற்கரிய செயல்களை செய்வதற்கான ஆற்றல் நம்மிடமிருந்தும் அதை உணரவிடாது தடைசெய்யும் தீய எண்ணங்களை களைந்து விடுவதுதான் உண்மையான அசுர (குணங்களின்) ஒழிப்பு என்பதை கபீரின் விஜயதசமி அறிவுரையாகக் கொள்வோம்.

Sunday, October 07, 2007

நேரம் போற்றின் ஏற்றம் சேரும்

காலம் பொன் போன்றது. அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பள்ளிக்கூட ஆசிரியரிலிருந்து இன்றைய நிர்வாகத்துறை ஆலோசகர்கள், பலதுறைகளைச் சார்ந்த,வெற்றியடைந்த,பெரும் வல்லுநர்கள் யாவரும் கூறுவது இதுவே.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு குறிக்கோள்கள். எல்லாக் குறிக்கோட்களுக்கும் மேலானது இறையிணையடி சேர்வது.ஆகையால் ஞானியர்கள் அதற்கே முதலிடம் தருகின்றனர். கபீரின் பார்வையில் சாதாரண மனிதரின் தினசரி நடவடிக்கைகள் எப்படி உள்ளது பாருங்கள்.

पाँच पहर धन्धे गया, तीन पहर गया सोय ।
एक पहर भी नाम बिन, मुकती कैसे हाय ॥

பாஞ்ச் பஹர் தந்தே கயா, தீன் பஹர் கயா ஸோய்
ஏக் பஹர் பீ நாம் பின், முக்தி கைஸே ஹாய்

ஐந்தைக் கழிப்பர் அல்லலில், மூன்று போகும் துஞ்சலில்
எந்தைக் கில்லை யொருசாமம், முத்திக் கேது உபாயம்

(எந்தை = இறைவன் ; உபாயம் = மார்கம்,வழி)

நாளொன்றுக்கு எட்டு சாமங்கள். பகல் நான்கு, இரவு நான்கு. ஹிந்தியில் இதை பெஹர் என்பர். விழித்திருக்கும் ஐந்து சாமங்களை உலகாதாய விஷயங்களில் அல்லல்பட்டு போக்கி விடுகிறோம். மிச்சமுள்ள மூன்றோ தூக்கத்தில் போய் விடுகிறது. நாள் முழுவதும் முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு சாம நேரமாவது அவனுடைய அருளைப் போற்றினால் முக்திக்கு வழிகிடைக்குமே என்று பரிதாபப் படுகிறார் நம்மைப் பார்த்து.

பரீட்சைக்கு மாணவர்களை தயார் செய்யும் ஆசிரியர் மாணவர்களுக்கு தக்கவாறு தேர்வில் வெற்றி பெற சில வழிகளை போதிக்கிறார். கடினமாக உழைத்து வெற்றி பெறும் திறமை உள்ளவர்களை 90, 100 மதிப்பெண்கள் பெறுவதற்கான ரகசியங்களை சொல்லிக் கொடுக்கிறார்.அவர்களை ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து மணிநேரம் தினமும் படிக்கச் சொல்லி பலவிதமான இடைத்தேர்வுகள் வைத்து வெற்றிக்கு வழி வகுக்கிறார்.

ஆனால் வகுப்பிற்கே வராமல் மட்டம் போட்டுச் சுற்றும் சில பேர்வழிகளுக்கு என்ன வழி ?

" நீங்களும் சுலபமாக பாஸாகி விடலாம். கஷ்டமே கிடையாது. சும்மா க்ளாஸுக்கு வந்து காதால நல்லா கேட்டுக்குங்க. இங்க கேக்கிறத வச்சே முப்பத்தஞ்சு மார்க் வாங்கிடலாம். அப்படியே ஒண்ணு ரெண்டு கொறஞ்சாலும் க்ரேஸ் மார்க் போட்டு பாஸ் பண்ணி விட்டிடுவாங்க" என்று ஆசை காட்டி அவர்களையும் கடைத்தேறப் பார்ப்பார் நல்ல ஆசிரியர்.

அதே யுக்தியை இங்கே கபீரும் கையாளுகிறார். ஒரு சாமம் இறைவனை சிந்தனை செய் என்றால் மிக அதிகம் (மூன்று மணி நேரமா! அம்மாடி!!) என்று கவலைப் படுபவர்களுக்காக ஒரு எளிய வழியை சொல்லுகிறார். அதை கடைப்பிடித்தாலும் பாஸ் செய்துவிடலாம்.

एक घडी आधी घडी, आधी मे पुनि आध ।
कबीर संगत साधु की, कटै कोटि अपराध ॥

ஏக் கடீ ஆதீ கடீ, ஆதீ மே புனி ஆத்
கபீரா சங்கத் ஸாது கீ, கடை கோடி அபராத்

தேடியிரு,நாழிகை ஒன்றோ அரையோ,அரையிலும் அரையோ,
கோடிவினைக் களையும் கபீரா உரவோர் கூடும் அவையோ

(உரவோர் = முனிவர், மேன்மக்கள்)

கடீ என்பது இருபத்தி நான்கு நிமிடங்கள் உடைய அளவை. நாம் இதை ஒரு நாழிகை என்போம். இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம். மூன்று மணிகள் ஒரு சாமம்.

கபீரின் அறிவுரை ஒரு நாழிகை நேரம், முடியாவிட்டால் அரை நாழிகை அதுவும் முடியாதவர்கள் கால் நாழிகை நேரமாவது சாதுக்களை சந்தித்து உரையாடுங்கள். அவர்களின் ஆசிகள் பலகோடி பாவங்களை அறுத்து விடும் என்று ஆர்வத்தைத் தூண்டுகிறார். இதையே சத்சங்கம் என்று பெரியோர்கள் கூறுவர்.

சத்சங்கத்வே நிஸ்சங்கத்வம், நிஸ்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலதத்வம், நிச்சலதத்வே ஜீவன்முக்தி (ஆதிசங்கரர்)

சமுதாயத்தை சாராமல் மனிதன் தனியனாக இருப்பது கடினம். முனிவர்களுக்கும் குடும்பஸ்தர்களின் ஆதரவு வேண்டியிருக்கிறது. ஆசிரமங்களை நடத்துவோரும் அதை நடத்துவதற்கு வருவாய்க்கான வழிகளை யோசிக்க வேண்டியிருக்கிறது. உண்மைத் துறவறம் உலகில் இருந்து கொண்டே இல்லாமல் இருப்பது. தாமரை இலை மேல் நீர் போல. உலகவாழ்விற்கான மோகம் மனதை விட்டு போய்விட்டால் சலன மற்ற நிலையை அடைந்து விடுகிறது.முக்திக்கான அடிப்படையே மனதின் சலனமற்ற நிலைதான். இதற்கான முதற்படிதான் ஆதிசங்கரர் கூறும் சத்சங்கம்.

தொடர்ந்து ஆன்மீக விஷயங்களையே சிந்திக்க சத்சங்கம் வழி வகுக்கிறது.சூழ்நிலக்கேற்றவாறு எண்ணங்கள் உருவாகின்றன. வலிவடைந்த எண்ணங்கள் செயலாற்றல் தருகின்றன.எனவே சரியான சூழ்நிலையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவனுக்கு ஒரு பெரும் கடமை உள்ளது. ஆகையால்தான் கபீர்தாஸரும் "கட் அடிச்சது போதும் க்ளாஸுக்கு வாங்க" என்று அழைக்கிறார்.

Wednesday, September 26, 2007

இருளில்லா ஒரு புவி

கவிஞர்கள் தாம் படித்த பல விஷயங்களை பல விதமாக பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். கண்ணதாசன் அவர்கள், ஷேக்ஸ்பியரின் வரிகள் தந்த உந்துதலால் தோன்றிய பாடல் தான் "தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே .." என்று ஒரு தேன்கிண்ணம் நிகழ்சியில் சொன்னதாக நினைவு. ஒரு பழைய திரைப்படப் பாடல். எங்க பாப்பா படத்தில் சுசீலா அவர்களின் இனிய குரலில் மனதில் தங்கிய இசை.

ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு
ஒரு அன்னை தந்தது
ஒன்று காவல் கொண்டது
ஒன்று கண் வளர்ந்தது ...

கண் வளர்தல் என்பது துயிலுதலை குறிப்பதாகும். ஒரு பறவை துயிலும்போது மற்றொன்று காவல் புரிகிறது ! ஜீவாத்மா இறையுணர்வு இல்லாத போதும் அதைக் காப்பது எப்போதும் விழித்திருக்கும் பரமாத்மா என்னும் பறவை. திரைப்படத்தில் இந்த வகையில் பொருள் படுத்தாவிட்டாலும் இந்த பதிவுக்கு பொருத்தமான வரிகள் இவை. மேற்கண்ட உதாரணம் முண்டக உபநிஷத்தில் வருகிறது. அதைப் பின்னர் பார்ப்போம்.

கபீர் இன்னொரு வகையான பறவை உதாரணத்தை எடுத்துக் கொள்கிறார்.

साई पडे दिन बीतबै, चक्वी दीन्ही रोय ।
चल चक्वा वा देश को, जहाँ रैन न होय ॥

ஸாயி படே தின் பீத்பை சக்வி தீன்ஹி ரோய்
சல் சக்வா வா தேஷ் கோ, ரைன் ந ஹோய்

இறையே! இன்னொரு அந்தியும் சாயுதே, புலம்பும் ஒரு சக்வி
பொறையே துக்கு சக்வா, போவோம் இருளில்லா தொருபுவி

(பொறை ஏதுக்கு= பொறுமை எதற்காக)


சக்வா ஆண்பறவை, சக்வி பெண்பறவை. வடநாட்டில் இக்காதல் பறவைகளை வைத்து இப்போதும் கவிதைகள் எழுதுவோர் உண்டு. ஒரு சாபத்தினால் மண்ணுலகில் பிறந்த தேவலோகத்தை சேர்ந்த இருவரைப் பற்றிய கதை. சாபத்தின்படி பறவைகளாகப் பிறந்த இருவரும் பகல் முழுவதும் சேர்ந்திருக்கலாம். அந்தி சாய்ந்ததும் அவைத் தனித்தனியே இரவை கழிக்க வேண்டும். (சேர்ந்திருந்தால்.....ஒரு வேளை சாபவிமோசனம் தள்ளிக் கொண்டே போயிருக்குமோ என்னவோ). அந்த தனிமை பெரிதும் வாட்டுகிறது சக்வியை. இருளே இல்லாத ஒரு உலகம் இருந்து விட்டால் பின்னர் பிரிவு ஏது? ஆகையால் அத்தகைய உலகத்திற்கு அழைத்துச் செல்லும்படி சக்வா-வை வேண்டிக்கொள்கிறது சக்வி.

கபீரின் ஆன்மா (நமக்காகவும் சேர்த்து) இறைவனை நோக்கி சொல்லும் வேண்டுதலாக இதைக் கொள்ளலாம்.

உலகில், அஞ்ஞான இருளில் நாம் உள்ளளவும் இறைவன் நம்மை விட்டு விலகியே இருக்கிறான். அந்த அஞ்ஞானத்தை விலக்கி நம்மை ஞானத்திற்கு இட்டுச் செல்வதும் அவன் கையிலே உள்ளது. ஆனால் அதற்கான மனப்பக்குவம், ஏக்கம் நம் உள்ளத்தில் இல்லாதபோது அவனும் சும்மா இருந்து விடுகிறான். கபீரைப் போல ஞானிகள் சக்வியின் மன நிலையை அடைந்து பரிதவிக்கின்றனர். ஞானமெனும் விடியலை எதிர் நோக்கி நேரத்தை கழிக்கின்றனர். வாழ்க்கையில் வேறெதுவும் ருசிப்பதில்லை அவர்களுக்கு. உலக விஷயங்கள் என்னும் இருளை வெறுத்து எப்பொழுதும் ஞான ஒளியான இறையின்பத்திலே திளைத்து இருக்க வேண்டுகின்றனர்.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒவ்வொரு இரவும் படுக்கும் முன் காளியிடம்’ உன் காட்சி கிடைக்காமல் இன்னொரு தினமும் வீணானதே’ என்று புலம்புவதுண்டாம்.

ஆனால் நமது நிலையோ முண்டக உபநிஷத்தில் குறிப்பிடப்பெறும் பறவையை ஒத்து உள்ளது.

அதில் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா தொடர்பை விவரிக்கையில் ஒரு மரத்தில் வசிக்கும் இரு பறவைகளுக்கு ஒப்பிடப் பட்டுள்ளது. இதில் ஒன்று அமைதியாக இருந்து இன்னொன்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்.இன்னொன்று அமைதியற்று கிளைகளுக்கு இடையே இங்குமங்குமாய் மாறி மாறி பறப்பதும், பழுத்த பழங்களையும் பழுக்காத காய்களையும் கொத்துவதும் துப்புவதுமாய் நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கும். இதுவே அல்லவோ நமது நிலை.

இந்த இயலாமையை அழகாக நம் கண்முன் தாயுமானசுவாமிகள் நிறுத்துகிறார்

.............தமியனேற்கு அருள் தாகமோ
சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு......
.....................................................யோகமார்க்க
சித்தியோ வரவில்லை சகச நிட்டைக்கும்
என்சிந்தைக்கும் வெகுதூரம், நான்
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாளெந்தநாள்
இந்நாளில் முற்றுறாதோ
இகபரம் இரண்டிலும் உயிரினுக்கு உயிராகி
எங்குநிறை கின்ற பொருளே (6)

________________________________________

இந்த பதிவுடன் இவ்வலைப்பூ தனது இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மிகப்பொறுமையுடன் வாசித்து வரும் அன்பர்கள் யாவர்க்கும் கபீரின் அருள் மழைப் பொழியட்டும். அவனிச்சை இருக்கும் வரையில் இது தொடரும். மேலும் மாற்றங்கள் விரும்பினால் தனி அஞ்சலிலோ பின்னூட்தத்திலோ தயவுசெய்து தெரிவிக்கவும்.

Thursday, September 20, 2007

பாரதியும் கபீரும் -பாகம்-2

போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவிலும் கபீர் மற்றும் பாரதியின் கருத்தொற்றுமைகளை சிலவற்றைப் பார்ப்போம்.

துறந்தார் பெருமை பற்றி சொல்லுகையில் கபீர் இப்படிச் சொல்லுகிறார்.

अब कोई चाहत नहीं, तो चिन्ता नहीं ।
चिन्ता नही तो मन पर कोई भार नहीं ॥

அப் கோயி சாஹத் நஹீ, தோ சிந்தா நஹீ
சிந்தா நஹீ தோ, மன் பர் கோயீ பார் நஹீ

வேட்கைக ளில்லை இனிமேல், அதனால் கவலையும் இல்லை
கவலைகள் போனபின் மனதில், அழுத்தும் சுமைகளும் இல்லை

வியாதிகள் பலவுக்கும் காரணம் மன அழுத்தம் அல்லது கவலைகளின் பெருஞ்சுமை. எதையாவது சாதிக்க அல்லது சம்பாதிக்க வாழ்க்கையில் ஓய்விலா ஓட்டம். சில கூடிவரும். பல கூடாமல் போகும். கூடாதவற்றை நினைத்து காலம் முழுதும் மனம் அழுது புலம்பும். மனித வர்க்கத்துக்கே உரித்தான இம்மாயையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பலரும் பல காலமாக சொல்லி வருகின்றனர். பாரதியாரும் குள்ளச்சாமி புகழில் தாம் பெற்ற உபதேசத்தை இப்படி உரைக்கிறார்.

மற்றொரு நாள் பழங்கந்தை அழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்து கொண்டு என்னெதிரே வந்தான்.

"தம்பிரானே; இந்த தகைமை என்னே ?
முற்றுமிது பித்தருடைய செய்கையன்றோ
மூட்டை சுமந்திடுவதென்னே ? மொழிவாய் " என்றேன்

புன்னகை பூத்த ஆரியனும் புகலுகின்றான்:
"புறத்தே நான் சுமக்கின்றேன்; அகத்தினுள்ளே
இன்னொதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ"
என்றுரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான்.
...............................
எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா !
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர் ;

கடந்தகாலத்தை எண்ணி மருகியே நிகழ்காலத்தின் சந்தோஷங்களை விட்டுவிடாதீர்கள் என்பதை எவ்வளவு ஆணித்தரமாக பாரதியார் உணர்த்துகிறார்.

Less Luggage More Comfort. ஆசைகளை விட்டு விட்டால் சுமைகள் குறைந்து விடும். அப்படி ஆசையைக் கடந்தவர்கள் நிலை என்ன ? அவர்களை ஷாஹ்-இன்-ஷாஹ் என்கிறார் கபீர்.

चाह गयी चिन्ता मिटी, मनवा वेपरवाह ।
जिन को कुछ ना चाहिये वो ही शहन्शाह ॥

சாஹ் கயீ, சிந்தா மிடீ, மனுவா வேபர்வாஹ்
ஜின் கோ குச் நா சாஹியே வோ ஹீ ஷாஹ்-ன்-ஷாஹ்

இச்சையும் போச்சு, கவலையும் போச்சு, லேசாச்சு மனமே
எச்சுமையும் இல்லாதவனே, பூவில் கோலோச்சும் கோனே

(பூவில் = பூமியில்; கோன்= சக்ரவர்த்தி)

ஷாஹ்-இன்-ஷாஹ் என்பது அரசர்களுக்கு அரசன் என்று பொருள் படும். எல்லாவித ஆசைகளையும் துறந்தவன் யாரிடமும் அடிமைத்தனம் மேற்கொள்ள வேண்டியதில்லை. அவனை விட சுதந்திரமானவன் கிடையாது. ஆனால் அரசர்களின் அரசனுக்கு அடிமைத்தனம் இல்லாவிட்டாலும் அரசாட்சியின் பொறுப்புகளோடு அவனுக்கு வரும் கவலைகளுக்கு முடிவு கிடையாது. ஆகையால் கவலையற்ற துறவி அரசனை விட மேம்பட்டவனாகிறான். இதே கருத்தை பாரதியின் வரிகளிலே காண்போம். அவரும் இரண்டே வரிகளில் இந்த கருத்தை அடக்கி விடுகிறார்.

ஒன்றுமே வேண்டாது உலகனைத்தும் ஆளுவர் காண்
என்றுமே இப்பொருளோடு ஏகாந்தத்து உள்ளவரே (பரசிவ வெள்ளம் -14)

’இப்பொருள்’ என்னும் இறைவனை அடைவதற்கு செய்ய வேண்டிய தவமென்ன? தவமா ! பாரதி ஏளனம் செய்கிறார்.

சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை
தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றாற் போதுமடா (21)

தவம் ஒன்றும் இல்லை, ஒரு சாதனையும் இல்லையடா
சிவம் ஒன்றே உள்ளதென சிந்தை செய்தாற் போதுமடா (22)

இறைவனைப் சாத்திரங்களில் அடைக்கவும், அடையவும் முயலும் மனிதர்களைப் பார்த்து கபீரும் சிரிக்கிறார்.

पोथी पढ़- पढ़ जग मुआ, पंडित भया न कोय ।
ढ़ाई आखर प्रेम का, पढै़ सो पंडि़त होय ॥

போதி பட்-பட் ஜக் முவ்வா, பண்டித் பயா ந கோய்
டாய் ஆகர் ப்ரேம் கா, படை ஸொ பண்டித் ஹோய்

(ஆகர்=அக்ஷர் அல்லது அட்சரம் என்பதன் திரிபு)

அளப்பிலா நூல்பலக் கற்றே, ஆன பண்டிதர் இலையே
அன்பின் அருமை தெளிந்தார் அன்றே பண்டிதர் ஆனாரே

ஹிந்தியில் டாய் (4ஆவது ட). -என்றால் இரண்டரை. ப்ரேம் என்ற வார்த்தைக்கு தேவையான எழுத்துக்கள் அல்லது மாத்திரை காலங்கள் இரண்டரையாகும். எவனொருவன் இந்த வார்த்தைக்கு உண்மையான பொருள் அறிந்தவனாகிறானோ அவனே உண்மையில் எல்லாமறிந்த பண்டிதன். இரண்டரை எழுத்துகளுக்குள் அடங்கிய இந்த ரகசியத்தை விட்டு மலை மலையாய் சாத்திரங்களை கரைத்துக் குடித்தும் உண்மையறியாமல் இவ்வுலக மக்கள் மடிகின்றனரே (ஜக் முவ்வா) என்று கபீர் வருந்துகிறார்.

அன்பே உலகின் இயக்கங்களுக்கெல்லாம் ஆதார சுருதி. சங்கீத கலைஞனுக்கு தம்புராவில் சுருதி கூட்டியதுமே எப்படி மனம் அதிலேயே லயித்து விடுமோ அது போல ஞானிகளின் இறையுணர்வு, அன்பிலேயே கரைந்து நிற்பதாகும். இராமகிருஷ்ணர் இதை பாவசமாதி என்பார். அந்நிலையில் வேண்டியவன் வேண்டாதவன் கிடையாது. நல்லதும் கெட்டதும் கிடையாது. எல்லாம் சக்தி மயம்.

செய்க தவம் ! செய்க தவம் ! நெஞ்சே தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம்- வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு (விநாயகர் நான்மணி மாலை)

Sunday, September 09, 2007

பாரதி எதிரொலிக்கும் கபீர்

மகாகவி பாரதியார் சிலஆண்டுகள் காசி மகாநகரத்திலேயே வாழ்ந்து வடமொழியிலும் ஹிந்தியிலும் தேர்ச்சிப் பெற்றிருப்பினும் கபீர்தாஸ் பற்றிய குறிப்பு அவருடைய எழுத்துகளில் எங்கும் காணப்படவில்லை. இது என் தேடுதலில் உள்ள குறைபாடாகவும் இருக்கலாம். யாருக்காவது தெரிந்திருந்தால் தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும்.

சில ஒற்றுமைகள் : இருவருமே வாய்மையே உயிர் மூச்சாய் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வறுமையே சொத்து. ஆனால் அவர்களின் தன்னலமற்ற மனமோ மிக மிகப் பெரியது. அவர்கள் விட்டுசென்ற கவிதைகளோ அமரத்துவம் வாய்ந்தவை.

வேற்றுமை : படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஆன்மீகத்தின் எல்லையைக் கண்டவர் கபீர். அதனால் அவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கிறார். அவரது வாழ்க்கை, ஆழமான கங்கை அமைதியாக சமவெளியில் பாய்ந்து செல்லும் போக்கை ஒத்தது. முறையாக கல்வி கற்றிருந்த பாரதிக்கோ ஆன்மீக நாட்டம் இருப்பினும் வாழ்க்கையில் இன்னும் பிடிப்பு இருந்தது. அவருடைய மனம் பற்றற்ற நிலைக்கும் உலக வாழ்க்கைக்கும் இடையே ஊசலாடுவது பல கவிதைகளில் நன்றாகவே தெரிகிறது. இதன் காரணமாக ஒரு மலையருவியின் ஓட்டத்தோடு விளங்கியது பாரதியாரின் வாழ்க்கை. அதில் வேகம் உண்டு, சீற்றம் உண்டு. காணக் காண சலியாத குதித்து சுழித்து ஓடும் அழகும் உண்டு.

இவ்விருவரின் கவிதை வரிகளுக்கிடையே கண்ட ஒருமித்த சில கருத்துகளைப் பார்ப்போம். காலத்தால் ஐநூறு வருடங்கள் இடைவெளி இருப்பினும் அழியாத உண்மைகள் அவரவர்களுக்குரிய தனித்தன்மையோடு வருகிறது.

गोता मारा सिंधु में, मॊती लाये पैठि ।
वह क्या मोती पायेंगे, रहे किनारे पैठि ॥

கோதா மாரா சிந்து மே, மோதி லாயே பைடி
வஹ் க்யா மோதி பாயேங்கே, ரஹே கினாரே பைடி
(சிந்து = கடல், மோதி =முத்து)

ஆழியுள் குதிப்பர் ஆழ மூழ்குவர், அள்ளி வருவரே முத்து
கூழையர் கூடுவர் கூசியே நிற்பர், எங்கனம் தருவரே முத்து
(கூழையர்= அற்ப மக்கள், அறிவற்றவர்; கூசுதல்= பயத்தல்)

கடலில் மூழ்கி முத்தெடுப்பது ஒரு கடினமான செயல். துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு காரியம் இது. உள்ளே சென்றவருக்கு மூச்சுக் கட்டும் திறமை அசாதாரணமாக இருக்க வேண்டும். கடல் வாழ் பிராணிகளால் எந்த கணமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் பெரும்பாலானவர் தொழிலில் உள்ள அபாயத்தையும் சங்கடங்களையும் சொல்லி முத்துக்குளிக்க விரும்புவனை தடுக்க முயலுவர். மனத்திண்மையுடையவர் அவற்றைப் பொருட்படுத்தாது துணிந்து செயலில் இறங்குவர். அப்பேர்பட்டவர்கள் தான், கடலின் அரிய பொக்கிஷங்களை உலகு வெளிக்காட்டுகின்றனர்.

கபீர் இந்த உதாரணத்தை சொல்வதன் நோக்கம் ஆன்மீகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சாதனைகளை மேற்கொள்ளாமல் வெறும் பேச்சளவிலே நிற்பதால், பிறவி வந்ததன் பயனான, இறையின்பம் அடையப் படாதது என்பதாகும். சாதனைகளை மேற்கொள்ள பெரிய வைராக்கியமும் திடச்சித்தமும் தேவை என்பதை எல்லா ஞானிகளும் உரைக்கின்றனர். எனவே அதை முத்துக்குளிப்பதற்கு ஒப்பாக்கி காட்டுகிறார். ஆயின் நாம் இதை வெறும் ஆன்மீகத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் எந்த ஒரு உயர்லட்சியத்தை அடைவதற்கான தேவை எனக்கொள்ளலாம்.

கபீர் உணர்ச்சியைத் தூண்டும் விதமாக அமைக்கவில்லை ஆனால் சிந்திக்கும் வகையில் கருத்தை முன் வைக்கிறார். ஆனால்கரையோரம் அமர்ந்து கதைப்பேசும் மக்களை பார்க்கையில் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது பாரதிக்கு. இந்திய சுதந்திரப்போரில் பயந்தாங்கொள்ளிகளின் நிலைக்கண்டு பொறுமுகிறார். சுதந்திரம் என்னும் ஒரு உயர் லட்சியத்திற்காக செயல்படாமல் உதட்டளவிலே அனுதாபம் காட்டித் திரிவோரை வேறெப்படி கடிந்துகொள்ள இயலும்.

கூட்டத்தில் கூடிநின்று கூடிப்பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி- கிளியே
நாளில் மறப்பாரடீ (நடிப்பு சுதேசிகள்)

கேட்போரையும் படிப்போரையும் உணர்ச்சி கொள்ளச் செய்யும் வாசகங்கள்.

நிலயாமைப் பற்றி இருவரும் என்ன சொல்கிறார்கள் பார்ப்போமா !

हाथों परबत फाड़ते, समुन्दर घूट भराय ।
ते मुनिवर धरती गले, का कोई गरब कराय ॥

கையால் மலையும் பெயர்ந்தது, குடிகையுள் கடலும் அடைந்தது
வையங் காணா சாதனை, யிவர்கர்வமும் அடங்கும் மண்ணிடை

वैध्य मुआ रोगी मुआ, मुआ सकल संसार ।
एक कबीरा ना मुआ, चेहि के राम आधार ॥

மரித்தான் உரோகியும், வைத்யனும் மரித்தான், மரிப்பரே யாவரும்
மரியான் என்றும் கபீரனும் இராமநாமத் துணைக்கொண்ட பின்னே

மாற்று; (பிற்சேர்க்கை -09/02/08)

பிணியாள் போனான், தீர்த்தவன் போனான், போவரே யாவரு மொருநாள்
தனையாள் இராமன் மந்திரம் சொல்லும், கபீரனுக் கில்லை இறுநாள்

(பிணியாள்= நோயுற்றவன்; தீர்த்தவன்= நோய்த் தீர்த்தவன், மருத்துவன்;
தனையாள்= தன்னை ஆளும்; இறு நாள்=முடிவுநாள்)


நிலையற்ற இவ்வுலகில் வியாதியுள்ளவரும் அவர்களைக் காப்பாற்ற முயலும் வைத்யனும் இறந்து போகின்றனர். அனைத்து உயிர்களுமே ஒருநாள் மறைய வேண்டியனதான். இதிலிருந்து விதிவிலக்கே கிடையாது. கைலாய மலையை கையால் தூக்கிய ராவணனோ அல்லது தன் கமண்டலத்துள் கடலையே அடக்கிய அகஸ்திய முனிவரோ இந்த முடிவிலிருந்து தப்ப இயலவில்லை. எனவே எத்தகைய கர்வம் ஆயினும் அதுவும் ஒரு நாள் மண்ணிலே முடிந்து போகும்.

ஆனால் அமரத்துவம் என்பது இறைவனின் நாமத்தை மீண்டும் மீண்டும் செபிக்கும் போது சித்த சுத்தி ஏற்பட்டு அதன் மூலம் அடையப் படுகிறது. அந்நிலையில் தூல உடலின் உணர்வு போய் பேருணர்வு ஒன்றுதான் எஞ்சியிருக்குமாம். கபீர் தமக்கு இராமநாமத் துணை யிருப்பதால் தனக்கு மரணமே இல்லை என்று அறிவிக்கிறார். இதே கருத்து பாரதியின் எழுத்தில் எப்படி வெளிப்படுகிறது பார்ப்போமா ?

முன்னோர்கள் உரைத்த பல சித்தரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய்விட்டார்
.............
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்;
அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான்
அதற்கடுத்த இராமனுஜனும் போனான்.
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;
பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;
பார் மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்.

மலிவு கண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன் யான்
மடிந்தாலும் பொய் கூறேன். மானுடர்க்கே
நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்
( சொற்களிலே என்ன ஒரு அழுத்தம், தன்னம்பிக்கை)
நாணத்தை, கவலையினத்தை, சினத்தை, பொய்யை
அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்.
மிச்சத்தைப் பின் சொல்வேன் சினத்தை முன்னே
வென்றிடுவீர் மேதினியில் மரணமில்லை.


இவ்வுலகில் இறக்காதவர்கள் யார்? இராமன், கண்ணன் புத்தன் ஏசுவிலிருந்து ராமானுஜன் வரை பட்டியல் போட்டுக்காட்டுகிறார். ஆனால் தனக்கு மட்டும் மரணமில்லை என்றுரைக்கிறார்.

நாணம், கவலை, சினம் பொய் அச்சம் வேட்கை போன்ற அழுக்குகள் எல்லாம் போய் விட்டால் எஞ்சியிருக்கப்போவது என்ன? சுத்தமான மனது ஒன்றுதானே. கபீர் நேரடியாக செய்ய வேண்டிய காரியத்தை சொல்லி விட்டார். ஆனால் பாரதி செய்வதற்கான காரணங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறார்.

மனித குலத்திற்கு பல்வேறு வழிகளிலும் நோய்க்கான காரணங்களையும், தீர்வுக்கான மருந்துகளையும் இம்மகான்கள் போலவே பலரும் சொல்லி வந்திருக்கின்றனர். நமக்குத்தேவை அவர்களின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கை.

இதை எழுத ஆரம்பித்த நோக்கம் செப்டம்பர் 11, பாரதியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலியாக ஒரு பதிவு இருக்கட்டுமே என்பதுதான். மேலும் பல ஒற்றுமைகளை அவ்வப்போது காண்போம்.

Saturday, September 01, 2007

தண்மையில் பெருகும் கங்கை

இனிய பேச்சினால் உலகையே வெல்லலாம் என்பது உலக வழக்கு. ஆனால் அது அவ்வளவு சுலபமாக கைக்கூடுவதில்லை. எல்லா சந்தர்பங்களிலும் எல்லோரிடத்தும் இது சாத்தியப்படும் என்று சொல்ல முடியாது. குறைந்த பட்சம் கடுஞ்சொற்களை தவிர்க்க முயலவேண்டும். ஏனெனில் நல்ல பெயரை சம்பாதித்துக்கொள்வதற்கு பல காலம் பிடிக்கும். ஆனால் இடம் காலம் அறியாத கடுஞ்சொற்களால் ஆயுள் முழுவதுற்குமான கெட்ட பெயர் சுலபமாக வந்து ஒட்டிக்கொள்ளும்.

பலர் தம்மிடம் உள்ள எரிச்சல் மனப்பான்மையை நினைத்தே எரிச்சல் அடைவர். உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாதபோது வெளிவரும் வார்த்தைகளும் கட்டுக்குள் இருப்பதில்லை. பின்னர் அதை எண்ணி வருத்தப்படுவர்.

இந்த பலவீனத்தை எதிர்கொள்வது எப்படி?

எல்லோரையும் நேசி.

சுலபமான வழி ஆனால் மிகக் கடினமான பயிற்சி; போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வண்டி ஓட்டுதல் போல.

பச்சை விளக்கைக் காண்பதற்கும் முன்பே புற்றிலிருந்து கிளம்பும் ஈசல் போல் சீறிப் பாயும் வாகனங்கள். அவற்றின் இடையே வளைந்து நெளிந்து நுழையும்- பலரது பொறுமையையும் சோதிக்கும்- இருசக்கர முச்சக்கர வாகனங்கள். ஒரு சிறு தவறு,எங்கே யாரால் என்று தெரியவில்லை, நடந்து விடுகிறது. பின்னால் ஒரு பெரிய இடிச்சத்தம். நமது வண்டி ஒரு குலுக்கு குலுங்கி முன்னால் தள்ளப்படுகிறது. மிகுந்த அதிர்ச்சியுடன் கீழே இறங்கி பின்னாலிருந்து இடித்த ஓட்டுனரிடம் வாக்குவாதம் துவங்குகிறோம். அவன் சொல்லும் காரணங்கள் மேலும் கோபத்தைக் கிளறுகிறது. அதே சமயம் அவ்வண்டியின் பின்னிருக்கையில் இருந்து ஒருவன் இறங்கி ’டேய் சொங்கி’ என்று உரிமையுடன் கூவுகிறான். கோபம் அவன்பால் வெடிப்பதற்கு பதிலாக அந்த நொடியிலே ஒரு அன்யோன்யம் வந்துவிடுகிறது. ஒரு சிலர் மட்டுமே அறிந்திருந்த பெயரை, பால்ய சிநேகிதன் அடையாளம் காட்டிய உடனேயே சந்தோஷத்தில் ஈகோ, கோபமெல்லாம் மாயம். பழைய அன்பிற்கு அவ்வளவு சக்தி. ’சரி, காப்பீட்டில் வண்டியை சரி பார்த்துக்கொள்ளலாம்’ என்று சுலபமாக சமாதானமாகி விஷயத்தைப் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறோம்.

வாழ்க்கைப் பாதையிலும் நிலைமை இதேதான். முன்னேறத் துடிக்கும் ஒரு சிலருடைய வேகத்திற்கு நம்மால் ஈடுகொடுக்க முடிவதில்லை. அல்லது வேறு சிலருக்கு நமது வேகம் ஒரு பிரச்சனை. வீட்டிலும் வெளியிலும் உரசல்களும் வாக்வாதங்களும் அன்றாட வாடிக்கை ஆகிவிடுகின்றன. அந்த நேரங்களில் நாம் ஒரு’சொங்கி’ யாக, அன்யோன்யத்தை அடையாளம் காட்டுபவராக இருந்தால் எவ்வளவு இனிமையாகி விடும் நம் உறவுகள். அதை வளர்த்துக் கொள்ளவே இனிமையான சொற்களை பயன்படுத்த பெரியவர் யாவரும் சொல்லி வைத்துள்ளனர். வாக்கிலே இனிமை கொண்டவர்களை உலகில் யாவருமே தம்மவராக பாவிப்பர். கபீர் தரும் உதாரணம் இதோ;

कागा काको धन हरै, कोयल काको देत ।
मीठा शब्द सुनाय के, जग अपनो करि लेत ॥


காகா காகோ தன் ஹரை, கோயல் காகோ தேத்
மீடா ஷப்த் ஸுனாய் கே, ஜக் அப்னோ கரி லேத்
.

காகம் கவர்ந்த நிதியமேது, இவர்க்கு தந்துதவிய குயிலுமேது
மோகம் கொள்வர் உலகோரும், குரலில் குயிலுக் கிணையேது

(அப்னோ கரி லேத் என்பது ’தம்முடையதாக பாவிப்பது’. அதாவது தங்கள் குரல் வளத்தை குயிலுக்கு இணையாக்கி பெருமை கொள்வர் என்று புரிந்து கொள்ளலாம்)

எவருடைய செல்வத்தையும் எந்த காக்கையும் தூக்கிக் கொண்டு போகவில்லை. எந்த குயிலும் வந்து ’இந்தா நீ வைத்துக்கொள் ’ என்று எவ்வித பணமுடிப்பும் உலகத்தவர்க்கு கொடுக்கவில்லை. ஆயினும் உலகத்தவர் குயிலையே போற்றுதலுக்கான ஒரு பொருளாக கொண்டுள்ளனர். அதற்கு காரணம் அதன் குரலினிமைதான். மனதை வருத்தாத அதன் இனிமை ’...அங்கு கத்தும் குயிலோசை -சற்றே வந்து காதிற் படவேணும்’ என்று கவிஞனையும் பாட வைக்கிறது. கேட்போரின் மனம் வருந்தாமல் பேசக் கற்றுக் கொண்டால் உலகோர் யாவரும் நம் சுற்றத்தாரே.

சிவபிரகாச சுவாமிகள் வேறொரு உதாரணத்தின் மூலம் இதே கருத்தை வலியுறுத்திகிறார்.

இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண்என்
கதிர் வரவால் பொங்கும் கடல ( நன்னெறி- 18)

பொன்னாலான வளையல்கள் அணிந்த பெண்ணே ! உப்பு நீரும் நல்லநீரும் அருகருகே காணப்படும் இந்த விந்தையான உலகம் இனிய சொற்களுக்கே மகிழுமேயல்லாது கடுஞ்சொற்களுக்கல்ல. கதிரவனின் அனல் கதிர்களுக்கு பொங்காத கடல் சந்திரனின் குளிர்ச்சியான கதிர்களுக்கு பொங்கி எழும்.

வெறும் கடலை பொங்கி எழச் செய்யும் வல்லமை மட்டுமல்ல மலையையும் உடைத்தெறியும் சக்தி குளிர்ச்சிக்கு உண்டு என்பதை கபீர் இன்னொரு தோஹாவில் விளக்குகிறார்.

कुटिल वचन नहीं बोलिये शीतल बैन ले चीन्हि ।
गंगा जल शीतल भया, परबत फो़डा तीन्हि ॥


குடில் வசன் நஹி போலியே ஷீதல் பைன் லே சீன்ஹி
கங்கா ஜல் ஷீதல் பயா, பர்பத் ஃபோடா தீன்ஹி


வலிதரும் வன்சொல் எதற்கு, வழிதரும் இன்சொல் உண்டு
கங்கையும் தண்மையின் பெருக்கு, பொடித்திடும் பர்வத மங்கு

(தண்மை = குளிர்ந்த, பெருக்கு = நீர் பெருக்கு, பர்வதம்= மலை)

கதிரவனின் வெப்பத்தால் ஆவியாகி இருக்கும் நீர், மலைகளிலே உள்ள குளிர்ச்சியால் மழையாகவோ உறைபனியாகவோ மாறி ஓர் உயர்நிலையை அடைகிறது. அந்த உயர்ச்சியே அதற்கு ஒரு அபரிமிதமான சக்தியைக் கொடுக்கிறது. கீழிறங்கி வருகையில் மலையில் உள்ள பாறைகளை தகர்த்துக்கொண்டு செல்லும் ஆற்றலை அது பெறுகிறது. அது போல் ஒருவர் சொல்லும் குளிர்ச்சியான உரைகள் கேட்பவர் மனதில் சஞ்சலத்தையும் கோபத்தையும் களைந்து, ம(ற)றைந்திருக்கும் விவேகத்தை ஒரு நிலைநிறுத்தி அதற்கு ஒரு சரியான செயலாற்றலைத் தருகிறது. களையப்பட்ட கோபமும் பொறுமையின்மையும் தான் துகளான பாறைகள்.

’கங்கையும் தண்மையின் பெருக்கு’ என்பது கங்கை நதி என்பதே இயற்கையில் குளிர்ச்சி யின் விளைவாக உருவானதுதான் என்பதை குறிக்க வந்துள்ளது.

கங்கைக் கரை வாசியாதலால் கபீர் மறவாமல் கங்கைக்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார். ஆனால் அவர் சொன்னதில் உள்ள உண்மை எல்லா நீர் பெருக்குகளுக்கும் பொருந்தும்.

Sunday, August 12, 2007

மேலோர் என்றும் சம நோக்கினரே

கபீர்தாஸருக்கு, அவர் காலத்தில், இருந்த பக்தர்களைக் காட்டிலும் எதிரிகளே அதிகம். எல்லா சீர்திருத்தவாதிகளும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை இதுவானாலும் இரு மதத்தை சேர்ந்தவரும் இந்த எதிர்ப்பைத் தனித்தனியாகக் காட்டினர். கபீருடைய குற்றமெல்லாம், அவர் உள்ளதை உள்ளபடி கூறியதே. வரலாற்றில் இது சாதாரணமாகக் காணப்படுவதுதான்.

ஒருவரை அவரது காலத்திற்கு பிறகு மகானாக ஏற்றுக் கொள்ளும் மனித சமுதாயம் அவர்கள் தம்மிடையே வாழும் காலத்தில் அதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. தமக்குள்ள முக்கியத்துவத்திற்கு இம்மகான்கள் கூறும் உண்மைகள் ஊறு உண்டு பண்ணும் என்ற பய உணர்ச்சியே சிலரை அத்தகைய செயல்களில் தூண்டுகிறது. அப்படியானால் இந்த ஏற்பு பின்னர் எப்படி ஏற்படுகிறது?

இறந்து போன ஒருவர் யாருக்கும் எதிரியாவதில்லை. எனவே காலப்போக்கில் அவர்கள் விட்டுச் சென்ற நல்ல விஷயங்கள் எவ்வித பூச்சுமின்றி நினைவில் நிற்கின்றன. பேசப்படுகின்றன. பொய் எதிர்ப்புகளும் பொறாமை பிரசாரங்களும் வலுவிழந்து மடிந்து போகின்றன. புத்தர் ஏசுவின் காலத்திலிருந்து வள்ளலார், ஷிரடி ஸாயி வரையிலும் காலம் கண்ட உண்மை இது.

சமுதாயத்தின் கோணத்திலிருந்து உண்மை இதுவானால், அம்மகான்கள் சமுதாயத்தை எப்படிக் காண்கிறார்கள் ?

கபீரே விடை சொல்கிறார்.

कोई आवै भाव लै, कोई अभाव ले आव ।
साधु दोऊ को पोषते, भाव न गिनै अभाव ॥

கோயி ஆவை பாவ் லை, கோயி அபாவ் லே ஆவ்
ஸாது தோவூ கோ போஷ்தே, பாவ் ந கினை அபாவ்

அண்டுவர் சிலர் உள்ளன்போடு, அஃதிலார் சிலரும் அண்டுவரே
கண்டிலர் அவருள் வேற்றுமை மேலோரென் றும்சம நோக்கினரே


உள்ளன்பு இல்லாத ஒருவன் நம்மை அணுகும் பொழுது சில சுயநல நோக்கம் இருக்கும் என்பதை யாவரும் அறிவோம். ஆனால் ஏதுமில்லா துறவியை அணுகினான் என்றால் அது அவருக்கு மாசு கற்பிக்கும் நோக்கமே பெரும்பாலும் கொண்டிருக்கும்.

புத்தருடைய வாழ்வில் ஒரு நிகழ்வு. புத்தரின் அமைதியான குணத்தை உடைத்து அவரது இன்னொரு முகத்தை காண்பிப்பதாக ஒருவன் சூளுரைத்து அவர் பிட்சைக்கு போகும் வழியில் நிற்கிறான் ஒருவன். புத்தரும் அமைதியாக வந்து கொண்டிருந்தார். அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி, துறவி என்ற பெயரில் ஊரில் உள்ளவர்களை கூட்டி தனக்கு ஒரு சீடர் குழாமை உருவாக்கி மேலும் பல சோம்பேறிகளை உருவாக்குபவன் என்றெல்லாம் ஏசுகிறான். எல்லாவற்றையும் அமைதியாக நின்று கேட்டுக் கொள்கிறார். பதிலேதும் கூறவில்லை. ஆனால் அவனை விட்டு விலகிச் செல்லவும் இல்லை. ஏசத் தொடங்கியவன் மேலும் பல அபாண்டமான குற்றங்களை அடுக்கிக் கொண்டே போனான். புத்தரின் நிலயில் மாற்றம் ஏதும் இருக்கவில்லை. சுற்றிலும் கூட்டம் சேரத்தொடங்கியது. ஒரு நிலையில் ஏசியவனுக்கு கோபம் அதிகமாகியது. "இவ்வளவு திட்டியும் உனக்கு சற்றும் உரைக்கவில்லையா ?" என்று கேட்கிறான். பேச வேண்டிய தருணத்தைப் புரிந்து கொண்டார் புத்தர்.

"அன்பரே ஒருவர் உமக்கு கொடுக்கும் பொருள் உமக்கு தேவையில்லை என்றால் அது யாருக்குச் சொந்தம் ?" என்று வினவினார்.

" ஏன் அது அவனுக்குத்தான் சொந்தம் " என்று பதிலளித்தான் ஒன்றும் புரியாதவனாக.

"இப்பொழுது நீர் சொன்ன எதையும் எனக்கென நான் கருதவில்லை. ஆகையால் எனக்கு பதில் கூற அவசியமுமில்லை" என்று சொல்லி விட்டு சென்றார்.

சூளுரைத்தவன் செய்வதறியாது நின்றான். ஞானியர்கள் சமநோக்கினராக இருக்க எப்படி இயல்கிறது எனில் அவர்களது அளப்பற்ற கருணையேயாகும்.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும், கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (579)

(கண்ணோடி = இரக்கம் கொள்ளுதல்)

தண்டிக்கப் படவேண்டிய குற்ற இயல்புகள் உள்ளவரிடத்தும் கருணை உள்ளங்கொண்டு இரக்கத்துடன் பொறுத்துக் கொள்ளும் பண்பே தலைசிறந்தது என்று உரைப்பார் திருவள்ளுவரும்.

சமநோக்குடைய சான்றோர் எவரிடமும் எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாது, பகைமையும் இல்லாது வாழ்நாட்களை கழிப்பர்

இதையே ஏற்கனவே பதிக்கப்பட்ட ஒரு தோஹாவில் கபீர் சொல்கிறார்.

சந்தையில் நிற்பான் கபீரன் சந்ததம் வாழ்த்தி இவ்வையம்
சந்ததம் வேண்டிலன் நட்பு, சந்ததம் விலக்குவான் வயிரம் .

Sunday, July 29, 2007

நாளை என்பதை இன்றே செய்மின்

சென்றப் பதிவில் நிதானத்தை கடைபிடிக்கச் சொன்ன கபீரைக் கண்டோம். "தீரே தீரே ரே மனா" என்று மனதுக்கு அமைதி ஊட்டிய அதே கபீர் இங்கே காட்டும் அவசரத்தைப் பாருங்கள்.

कल करे सो आज कर , आज करे सो अब ।
पल मे परलय होएगा, बहूरी करोगे कब ॥

கல் கரே ஸோ ஆஜ் கர், ஆஜ் கரே ஸோ அப்
பல் மே பரலய் ஹோயேகா, பஹூரீ கரோகே கப்

நாளையதை இன்றே செய்மின் இன்றென்பதையும் இன்னே
ஊழியதும் வருமே நொடியில் பின் செய்வதும் நீ என்னே

(இன்னே =இப்பொழுதே : ஊழி = பிரளயம்)

வட இந்தியாவில் மிக மிகப் பிரபலமான தோஹாக்களில் இதுவும் ஒன்று. சர்வ சாமானியனாலும் 'கல் கரே ஸோ ஆஜ் கர்' என்று மேற்கோள் காட்டப்படுவது இது.

இறைவன் யாவருக்கும் வஞ்சமில்லால் கொடுத்துள்ள பெரிய செல்வம், நேரம். ஏழையாயினும் பணக்காரனாயினும் எல்லோருக்கும் அதே இருபத்திநான்கு மணித்துணிகள் தான். ஆனால் அதைத்தான் நாம் எப்படி எல்லாம் வீணடித்து விடுகிறோம். Procrastination என்கிற தள்ளிப்போடும் சுபாவம் நம்மில் பெரும்பாலோருக்கும் உள்ள ஒரு பொது குணம்.

அதிலும் நல்ல விஷயங்களுக்கென்றால் சற்று தாராளமாகவேத் தள்ளிப்போடுவோம்.

காலையில் எழுந்து ஒரு மணி நேரம் நடக்க வேண்டும் என்று தீர்மானித்து ஒரு வாரம் நடந்திருப்போம். ஊரிலிருந்து விருந்தினர் விஜயம் செய்தனர். அது போதாதா காரணம். அவர்களோடு பேசுவதற்கு வேறு நேரமே இல்லை என்று ஒரு சப்பைக்கட்டு கட்டும் மனம். அவர்களெல்லாம் ஊர் திரும்பட்டும் பின்னர் மீண்டும் தொடங்குவோம் என்று சிறிது காலம் தள்ளிப்போடுவோம் அதன் பின் அலுவலக வேலைகள் நிமித்தமாக சில நாள் வெளியூர் பயணம். திரும்பிய பின் 'நான் வீட்டிலேயே யோகா செய்து கொள்கிறேன்' என்று வேறொரு நொண்டிச் சாக்கு. யோகா முழுசாய் மூணு நாள் நடக்காது. காலை தினசரியில் வரும் பரப்பரப்பான செய்திகளில் கவனம் ஓடி விடும். அதை படித்து முடித்ததும் "அய்யோ ஆபீஸுக்கு லேட் ஆச்சு" என்று யோகாவுக்கு ஒரு முழுக்கு.

உடல் ஆரோக்கிய விஷயத்திலேயே நமக்கு இப்படி ஒரு அலட்சியம். பின் மன ஆரோக்கியத்திற்காக சொல்லப்படும் வழிபாடு, தியானம் இவைகள் எப்படி கைக்கூடும் ? இந்த இயற்கையான மனித சுபாவத்தை அறிந்தே கபீர் நிலையாமையை நினைவூட்டும் வகையில் எந்த கணத்திலும் காலன் நம்மை கொண்டு போகக்கூடும் என்று கூறுகிறார். 'பல் மே பிரளய் ஹோயேகா' என்ற சத்தியம் தோய்ந்த வார்த்தைகள் சில நிமிடங்களுக்குள் சுநாமி செய்த பேரழிவை நம் மனக்கண் முன்னே கொண்டு வருகிறது.

அவர் கூறுவதன் பொருள், கடவுள் கொடுத்துள்ள நேரத்தில் நாம் ஆத்ம லாபத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதே. ஏனெனில் கடைசியில் நம்முடன் வர இருப்பது நமது ஆத்ம சிந்தனைகளும் வினைப்பயன்களும் தான். ஆத்ம சிந்தனைகள் இறையருளுக்கு நம்மை தகுதியுடையவராய் ஆக்குகிறது. வினைப்பயனை உடல் அனுபவிக்கிறது.

சுவாமி விவேகானந்தர் சொல்வது போல் ' பூமியில் விழும் ஒவ்வொரு மழை துளியும் கடலை சென்றடைவது போல, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயற்கையின் படைப்பில் எல்லாம் இறைவனை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றன'. ஆத்ம சிந்தனையைப் பெருக்கிக் கொள்ளும் போது வெள்ளத்தின் வேகம் போல் பயணம் துரிதமாகிறது. அதற்கான முயற்சியில்லாமல் பொருள் ஈட்டுவதிலும் சுக போகங்களுக்காக தேடி அலைவதிலும் நேரம் போனால் நிலத்திலே வடிந்து பலகாலம் காத்திருக்க வேண்டிய தரையடி நீராகவோ, குட்டை நீராகவோ, ஏன் சாக்கடை நீராகவோ கூட மாறிப் போய் விடுகிறது நமக்கு கொடுக்கப்பட்ட பிறவி.

பரிபூரணானந்தத்தில் தாயுமானவர், எப்படி இறைவன் அருளுக்காக ஏங்காமல் காலம் வீணாகிறது என்பதை குறிப்பிடுகிறார்.

வாசா கைங்கரியம் அன்றி ஒரு சாதனம்
மனோவாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும்
பழகியறியேன் துறவு மார்க்கத்தின் எண்ணம் போல்
நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த
நினைவையும் மறந்த பொழுது நித்திரை கொள்வேன்....
யோசிக்கும் வேளையில் எல்லாம் உண்பதும்
உறங்குவதுமாய் முடியும் .......

(வாசா கைங்கரியம் = வார்த்தைகளால் பெரிதாக பேசுவது்; வாய்பேச்சு. நினைவிலிருந்து எழுதப்பட்டது. சற்று முன்பின் இருக்கலாம்)

வாலாயமாக பழகுதல் என்றால் முறையாக தொடர்முயற்சியுடன் ஒரு வித்தையை பயிலுவது. மனத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வர அப்படி எதுவும் செய்யாமல் வெறும் உண்டு உறங்கி காலத்தை வீணாக்குகின்றேனே என்று கலங்குகிறார்.

எத்தனை கபீர்கள் வந்தால் என்ன அல்லது தாயுமானவர்களும் பரமஹம்சர்களும் வந்தால்தான் என்ன? அவ்வளவு சுலபமாகவா நம் தலைக்குள் போகிறது ? எல்லாம் உண்பதும் உறங்குவதுமாய் தான் போய்க் கொண்டிருக்கிறது.

Saturday, July 21, 2007

எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்.

நம்மில் பலருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் எடுத்த காரியத்தில் தொடர்ந்து பல தடங்கல்களை கண்ட அனுபவம் இருக்கும். அது வியாபாரத் தொடர்பானதாகவோ, திருமண விஷயமோ அல்லது உத்தியோக உயர்வு வீடு கட்டுதல் இத்யாதி காரணங்களுக்காக இருக்கலாம்.. சில அற்ப காரணங்களுக்காக கூடி வரும் போல இருந்தது கூட தட்டிப் போவதும் உண்டு. அத்தகைய நேரங்களில் -குறிப்பாக இந்திய மண்ணில் -நம்மை நாமே தேற்றிக் கொள்ள சொல்லிக் கொள்ளும் பொன்மொழி "எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்".

பல நாட்களுக்குப் பிறகு பின்னோக்கிப் பார்க்கையில் அப்படித் தட்டிப் போனதே வேறொரு வகையில் நல்லதாய் போனது என்று சந்தோஷப் படுவதும் உண்டு.

Many a time we are blessed by not getting what we desired.

வாழ்க்கையை ஒரு தத்துவக் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கற்றுக் கொள்ளும் போது மன உளைச்சலைப் பெருமளவு தவிர்க்கலாம். காலம் கனிவதன் அவசியம் தெரியாத போது நம் முயற்சிகளெல்லாம் வீணாகப் போனதாக எண்ணி மனம் துன்பப் படுகிறது. காலமறிந்து செயலாற்றுதலின் முக்கியத்துவத்தை வள்ளுவரும் ஒரு அத்தியாயம் முழுவதுமாக உரைக்கிறார்.

கொக்கக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.


பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கு போல அமைதியாக இருக்க வேண்டும். காலம் வாய்த்த பொழுது கொக்கு விரைந்து குத்துதல் போல விரைந்து செயல்பட வேண்டும்.

உள்ளத்தில் அமைதி இருக்கும் போதுதான் காலம் கனிந்து வருவதை அறியும் விவேகம் இருக்கும். அமைதி கொள்ளும்படி கபீர் மனதிற்கு உபதேசிக்கிறார். அதுவும் எப்படி ? ஒரு அழகிய உதாரணத்துடன்;

धीरे धीरे रे मना, धीरे सब कुछ होए ।
माली सीचे सौ घडा, ऋतु आये फल होए ॥


தீரே தீரே ரே மனா, தீரே ஸப் குச் ஹோயே
மாலீ ஸீசே ஸௌ கடா, ருது ஆயே பல் ஹோயே


நிறைவுறும் காரியம் யாவுமே, மெல்ல மெல்லவே மனமே
இறைப்பினும் குடந்நூறு தினமே காலத்தே வரும் பலனே


தாவரங்களுக்கு தண்ணீர் இன்றிமையாததுதான். தோட்டக்காரன் நாள் முழுவதும் நீர் இறைக்கலாம். ஆனால் தண்ணீர் ஒன்று மட்டும் செடி கொடிகளின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில்லையே. தோட்டக்காரனின் அவசரத்திற்காக அவை காய்த்து விடுவதில்லை. அதற்குரிய பருவம் வரும் பொழுது பூப்பூத்து காயாகி பின் கனியாகவும் தருகிறது. நம் முயற்சிகளுக்கான பலன் என்ன என்பதையும் எப்பொழுது தரவேண்டும் என்பதையும் காலம் அறியும்.

சீனாவில் ஒரு குறிப்பிட்ட மூங்கில் வகையைப் பற்றிச் சொல்வதுண்டு. சுமார் பன்னிரண்டு வருடங்கள் அதன் விதைகள் நேர்த்தி செய்து பாதுகாக்கப்பட்டால் பன்னிரெண்டாவது வருடத்தில் அது முளைவிடும். அடுத்த ஆறு மாதங்களில் அதன் வளர்ச்சி சுமார் தொன்னூறு அடிகள் ! இது நம் ஊரின் குறிஞ்சி பூக்களைப் போல் பன்னிரெண்டு வருட சுழற்சியை ஒத்ததாக இருக்கிறது இல்லையா! பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு நடக்க வேண்டிய அந்த வெளிப்பாட்டுக்காக உரிய மாற்றங்கள் ஏதோ அந்த விதைக்குள்ளே (அல்லது செடிக்குள்ளே) தொடர்ந்து நடைப்பெற்றிருக்க வேண்டும். நம் புற கண்களுக்கு அவை தெரிவதில்லை அவ்வளவுதான்.

ஒரு வருடத்திற்குள்ளான பருவ மாற்றங்களை பூகோள ரீதியாக தெரிந்து வைத்திருக்கிறோம். பல வருடங்களுக்குட்பட்ட உயிரியல் சார்ந்த பருவங்கள் பற்றி- மேலே சொன்ன உதாரணங்களைப் போல- வெகு குறைவாகவே நாம் அறிவோம். பல ஜென்மங்களில் தொடர்ந்து வரும் வினைவழி சார்ந்த வெளிப்பாடுகளை (பலன்களை) யாரே அறிவார்?

கபீர் ஒரு வகையில் ஔவையாரின் கருத்துக்களை (மூதுரை 05) எதிரொலித்திருக்கிறார் எனலாம்.

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றி பழா.

ஆனால் யாரும் தமது முயற்சியின்மைக்கு, தள்ளிப் போடும் சுபாவத்திற்கு நேரம் வரவில்லை என்பதை ஒரு போலியான காரணமாகக் கொள்ளக் கூடாது. முயற்சியின்மையை வன்மையாகக் கண்டிக்கிறார் கபீர். அதை வேறொரு சமயம் பார்ப்போம்.

Saturday, June 16, 2007

கபீரும் காமுகனும்; கபீருக்கு வந்த சோதனை

இயற்பகை நாயனார் என்று ஒரு சிவனடியார். பரமசிவன் ஒரு அந்தண வேடம் பூண்டு, அவரை அணுகி அவரது மனைவியையே யாசிக்கிறான்.முகம் சுளிக்காது அவருடன் கற்புக்கரசியான மனைவியை வழியனுப்பியதுமல்லாமல் தானே வழித்துணையாகவும் செல்கிறார்.
கொடுத்த வாக்கைக் கடைசி வரை காப்பாற்றுதலே ஒருவனின் தலையாய கடமை என்பதை போற்றிய காலம் அது. முழுக்கதையையும் வலைப்பூவிலே வாசிக்க இங்கே சொடுக்கவும் . இத்தகைய சோதனை கபீருக்கும் வருகிறது.

ஒருமுறை ஒரு பெரிய அடியார் குழாம் அன்றைய பிட்சைக்காக கபீர் வீட்டை அடைந்தது. கபீருக்கு இது ஒரு சோதனையானது. வீட்டில் பண்டங்கள் இருந்ததோ மிக மிகக் குறைவு. வெளியில் கடனோ தலைக்கு மேல். யாரை அண்டினாலும் அவமானம் தான் மிஞ்சும் என்ற நிலை. கபீரின் பரிதவிப்பைக் கண்ட அவரது மனைவி, லோயி, தயங்கித் தயங்கி ஒரு விஷயத்தை வெளியிடுகிறாள்.

"மூலைக் கடை சேட் டிற்கு என் மேல் ஒரு கண். பலமுறை பலவிதமாக சாடைமாடையாக பேசியிருக்கிறான். அவன் விருப்பத்திற்கு இணங்கினால் அவனால் இப்போதுள்ள பிரச்சனைத் தீரும்"

இதைக் கேட்ட கபீரின் கண்கள் கலங்கியது. லோயியின் தியாகம் அவரை வேதனையுறச் செய்தது.

பசித்தவன், உணவில் ருசி பற்றிய எண்ணத்தை விடுவான். களைத்துச் சோர்ந்தவன் தூங்குவதற்கு மெத்தை என்ற எண்ணத்தை விடுவான். அதுபோல் காமம் தலைக்கேறியவன் வெட்கம் என்ற குணத்தை விட்டுவிடுவான்.

விருந்தோம்பலை தலையாய கடமையாகக் கொண்ட கபீர் வேறு வழி தெரியாமல் சம்மதிக்கிறார். லோயி கடைக்கு சென்று அன்று இரவே சேட் டை சந்திப்பதாகச் சொல்லி தேவையான பொருட்களைப் பெற்று விருந்தினர்களின் பசியாற்றி வழியனுப்பி வைக்கிறாள்.

அந்தி நெருங்கியது. இருவரின் உள்ளத்திலும் எந்த சலனமும் இல்லை. கபீர் தமது ராம ஜெபத்தில் ஆழ்ந்திருந்தார். தாமரை இலை நீர் போல் உலகில் ஒட்டாமல் வாழ்க்கை நடத்திய தம்பதிகள் அவர்கள். அந்நேரம் பெரிதாக மழை வேறு பிடித்துக்கொண்டது. அங்கே சேட் டிற்கு பதைபதைப்பு ஆரம்பமாகி விட்டது. தான் ஏமாற்றப் பட்டு விட்டோமோ என்ற கவலை மனதை அரிக்கத் தொடங்கியது. ஆனால் குறித்த நேரத்தில் கதவு தட்டப்பட்டது. சொல்லியபடி லோயி அங்கே நின்றிருந்தாள்.

உற்சாகமாக அவளை வரவேற்று பலவிதமான அழகு பொருட்களையும் அணிகலன்களையும் வாசனைத் திரவியங்களையும் கொடுத்து அழகு படுத்திக்கொள்ள ஒரு அறைக்குள் அனுப்பி வைக்கிறான் சேட்டு. வெளியே நிலைக்கொள்ளாமல் மேலும் கீழுமாக அவன் உலாத்திக் கொண்டிருந்த பொழுது மீண்டும் ஒரு முறை கதவு தட்டப்பட்டது.

இப்போது அங்கே நின்றிருந்தது ஊர் காவல் அதிகாரி. "நீ ஏதோ பொருட்களைப் பதுக்கி வைத்திருக்கிறாயாமே ! உன் வீட்டை சோதனையிட வேண்டும்" என்று வீம்பாக உள் நுழைந்து தேடத் துவங்கினான். கடைசியாக சாத்தியிருந்த அறை முன்னே நின்று அதைத் திறக்கச் சொன்னான். சேட் டுக்கு கைகால்கள் வெட வெடக்கத் தொடங்கியது.

உள்ளே கபீரின் மனைவியைக் கண்டதும் " இவள் கபீர்தாஸின் மனைவியாயிற்றே. அவர்களது வறுமையைப் பயன் படுத்திக்கொள்ள உனக்கு வெட்கமாயில்லை" என்று அவனை திட்டி அவளை பத்திரமாக அவர்கள் வசித்த தெரு வரைக்கும் துணை சென்று வீடு சேர்த்தான்.

நடந்ததை அறிந்த கபீருக்கு உள்ளம் பதைத்தது. கொடுத்த வாக்கை தவறிவிட்டோம் என்ற அவப்பெயர் வந்துவிடுமே என்று சேட் டின் வீட்டை அடைந்து அவனிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். அவனையும் அழைத்துக்கொண்டு காவல் அதிகாரி வீட்டை அடைந்து கதவை கோபத்துடன் தட்டினார்.

அரைகுறைத் தூக்கத்தோடு கதவைத் திறந்த காவல் அதிகாரிக்கு கபீரின் கோபத்திற்கான காரணம் புரியவில்லை. தம்மிருவரில் ஏற்பட்டிருந்த ஒப்பந்தப்படி தன் மனைவியை தானே சேட் டின் வீட்டிற்கு அனுப்பியிருக்கையில் இதில் அந்த அதிகாரி தலையிட அவசியமென்ன என்பதே கபீரின் வாதம். ஆனால் அந்த அதிகாரியோ கபீர் பேசுவது எதுவுமே தனக்கு புரியவில்லை என்று சாதித்தான். ஒரு நிலையில் சண்டையாக மாறி கைகலப்புக்கு முற்றியது.

கபீரின் செவிகளிலே திடீரென்று ஒரு அசரீரி ஒலித்தது.
"என்னை இன்னுமா தெரியவில்லை கபீர் ?"
மின்னல் போல கபீருக்கு எல்லாம் புரிந்து விட்டது.
காட்டுவழியிலே தியாகராஜருக்கு காவல் செய்த அதே ராமன் அதற்கும் முன்பே கபீருக்கும் காவல் புரிந்துள்ளான். அந்த ஆதர்ச தம்பதியரின் கௌரவம் காக்க அவன் காவல் அதிகாரி உருவில் போட்ட நாடகம் இது. உண்மையான காவல் அதிகாரிக்கு நடந்தது எதுவும் தெரியாது.

அவர்களின் மனத்தூய்மையை கண்டு அவமானமுற்ற சேட் தன் கீழ்மைக்காக அத்தம்பதிகளின் கால்களில் பணிந்து மன்னிப்பு வேண்டினான்.
காமம் என்ற பொல்லாத வழுக்குப் பாதை மனித வர்க்கத்தை கீழே தள்ளுவது போல் வேறொன்றை இணையாக சொல்லமுடியாது. அதற்கு காரணம் புலன்களை சர்வ ஜாக்கிரதையாக கையாளாமல் விடுவதே ஆகும். இதை கபீர் இப்படி குறிப்பிடுகிறார்.

कामी तो निरभय भया, करै न काहूं संक ।
इन्द्री केरे बसी पडा़ भुगते नरक निसंक ॥


காமி தோ நிர்பய் பயா, கரை ந காஹூ சன்க்
இன்த்ரீ கரே பஸீ படா, புக்தே நரக் நிஸன்க்


நிர்பயமானான் காமியுமே, விட்டான் நல்வினை யாவையுமே
நரகக்குழியில் வீழலுமே, புலன்கள் போட்டன நாடகமே

(நிர்பயம் =பயம் இல்லாமல் போவது)

கதை நடுவே பொருள் கூறப்பட்டிருந்தாலும் - கதை ஓட்டத்திற்காக - குறிப்பிடாமல் விடப்பட்ட தோஹா இதோ:

कामी लज्जा न करै, मन मांहीं अहलाद ।
नींद न मांगै साथरा, भूख न मांगै स्वाद ॥


காமி லஜ்ஜா ந கரை, மன் மாஹி அஹ்லாத்
நீன்த் ந மாங்கை ஸாத்ரா, பூக் ன மாங்கை ஸ்வாத்


உலோலனுக் கில்லை இலச்சை, உள்ளுள் கிளர்ந்தது இச்சை
உறுதுயிலும் தேடுமோ மெத்தை, உறுபசிக் கெதுவும் பிச்சை


(உலோலன்=காமுகன் ; இலச்சை = லஜ்ஜை, வெட்கம் ; உறு = மிகுதியான )

Sunday, June 10, 2007

ஈயா மனிதரும் எட்டாப் பழமும்


திருமகள் ஒரு ஊர் சுற்றி. ஓரிடத்தில் நிற்பதை அறியாள். அதனால் உலகத்தாரும் அவள் பின்னே சுற்றுகின்றனர். இந்த ஊர் சுற்றிக்கு ஒரு சிலர் பாடம் கற்பிக்க நினைத்து ஒரு பெட்டியிலோ, பையிலோ, கிணற்றிலோ (இக்காலத்தில் வங்கியிலோ) அடைத்து வைத்து விடுகின்றனர். இதனால் பலருக்கு அவள் கண்ணில் படாமல் கையில் கிடைக்காமல் இருந்து விடுகிறாள். ஆனாலும் பூட்டி வைப்பவர்களுக்கு ஒரு உண்மை புரிவதில்லை. அந்த உண்மையை நாலடியார் எடுத்துச் சொல்லுகிறது.

கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப்படும்।

(பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். இல்லை தானாவது அனுபவிக்க வேண்டும். இரண்டுமில்லாத கருமித்தனம் உடையவன் செல்வம் , வீட்டுக்குள் அழகிய கன்னிப் பெண்களை எவ்வளவு நாள் வைத்து பாதுகாத்தாலும் அவர்கள் மணமாகி கணவன் வீடு போய் விடுவது போலாகும்.)

'துய்த்தல்' அல்லது அனுபவிப்பது என்பது திருமகள் கைமாறிக் கொண்டே இருப்பதற்கான ஒரு வழி। அவளுடைய ஓட்டத்திற்கு துணை போவது. நாம் துய்க்காமல் விட்டாலும் கூட அவள் போய்விடுவாள். இதை யாவரும் அறிவது அவசியம். அனுபவிக்காமல் அவளை இழப்பதை விட அனுபவித்து அவளை வழி அனுப்புவது மேலானது அன்றோ!

பிறருக்கு கொடுத்து உதவாதவர் பற்றி கபீரின் வார்த்தைகளில் பார்ப்போம்। இது வடநாட்டில் மிகப் பிரபலமான தோஹாக்களில் ஒன்று.

बढा हुआ तो क्या हुआ जैसे पेड खजूर
पंथी को छाया नहीं फल लागे अति दूर

படா ஹுவா தோ க்யா ஹுவா, ஜைஸே பேட் கஜுர்
பந்தி கோ சாயா நஹீம், பல் லாகே அதி தூர்
ஓங்கி உயர்ந்து விட்டால் என்னே ஈச்சந் தருபோலே
ஒதுங்க இல்லை நிழலே எட்டாதே இச்சைத் தருபழமே

ஈச்சமரம் உயரமாக வளர்ந்து நிற்கும்। அதனடியில் வழிப்போக்கர்கள் ஓய்வெடுப்பதற்கான நிழல் இருக்காது. போகட்டும் அதனுடைய பழத்தைப் பறித்துப் பசியாவது ஆறலாம் என்றால் அதுவும் எட்டாத உயரத்தில் அல்லவோ இருக்கிறது. இந்த மரத்தினால் யாருக்கு என்ன பயன் ? சமூகத்திலே செல்வத்தால் உயர்ந்து பிறர்க்கு உதவாதவர்கள் அத்தகைய ஈச்ச மரத்தைப் போன்றவர்கள் என்கிறார் கபீர். பட்டினத்து அடிகள் அத்தகைய மனிதர்களை ஏன் படைத்தாய் என்று இறைவனிடம் அங்கலாய்கிறார்.

நாயாய் பிறந்திடின் நல்வேட்டை
ஆடி நயம் புரியும்
தாயார் வயற்றில் நரராய்ப்
பிறந்துபின் சம்பன்னர் ஆய்க்
காயா மரமும் வறள் ஆம்
குளமும் கல் ஆவும் என்ன
ஈயா மனிதரை ஏன் படைத்
தாய்கச்சி ஏகம்பனே.

(கல் ஆவும் = கல்லால் ஆன பசு ; சம்பன்னர் = செல்வமெலாம் பெற்றவர்)

கல்லால் வடிவமைக்கப்பட்ட பசு எப்படி பால் தர இயலாதோ அது போல் எல்லா செல்வங்கள் இருந்தும் பிறருக்கு கொடுத்து உதவாதவர்கள் கல்நெஞ்சர்। ஒரு காய்க்காத மரத்தையும் வறண்ட குளத்தையும் போல இருந்தும் இல்லாதவர்கள் அவர்கள்। அத்தகையவரைக் காட்டிலும் ஒரு நாய் பிறவி கொடுப்பின் தன் எஜமானனுக்காக வேட்டையில் உதவி புரிந்து ஒரு பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்ததாகவாவது இருக்கும் என்று காஞ்சியின் ஏகம்பனிடம் முறையிடுகிறார் பட்டினத்தார். கபீரும் நாயை வைத்து பல தோஹாக்களை செய்துள்ளார். ஒன்று இங்கே.

நாய்களின் இனப்பெருக்க முறை, இயற்கை அமைத்திருக்கும் விதம், கண்டு கபீருக்கு ஒரு வேடிக்கையான உதாரணம் தோன்றுகிறது. அதை கருமிகளை கிண்டல் செய்யப் பயன் படுத்துகிறார்.

सूम थैली अरु श्वान भग दोनो एक समान ।
घालत में सुख ऊपजै, काढ़ निकसै प्रान ॥

ஸூம் தைலி அரு ஷ்வான் பக் தோனோ ஏக் ஸமான்
காலத் மேய்ன் ஸுக் ஊபஜை, காட் நிக்ஸை ப்ரான்

உலோபியின் சுருக்குத் தயிலி, ஒக்கும் சுனகன் யோனி
எக்குதலில் ஏகக் களிப்பு, எடுக்கையில் ஏனோ தவிப்பு

(தயிலி= பை, சுருக்குத்தயிலி =பணப்பை . சுனகன் = நாய். யோனி = கரு வாய். எக்குதல் =உள்வாங்குதல், உள்ளிடல்)

செல்வம் வருகையில் காட்டும் சந்தோஷம், கொடுக்க வேண்டும் என்னும் போது உயிரே போகுமளவு துன்பமாய் விடுகிறது என்பதை எத்தனை நகைச்சுவை உணர்வோடு சுட்டிக் காட்டியிருக்கிறார். அவரருகே இருந்து கேட்டவர்கள் சிரிப்பை கற்பனைதான் செய்து கொள்ள வேண்டும். நினைக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் உவமை இது.

Sunday, May 27, 2007

கீழே வந்தவன் திளைத்திருப்பான்

மலையடிவாரங்களில் உள்ள தோட்டங்களில் யானைகளின் தொந்தரவு அதிகமாகி விட்ட படியால் அவைகளைத் தடுக்க மின்வேலி அமைத்துக் கொண்டிருந்தனர் சில விவசாயிகள். அதைப்பற்றி கேட்ட பொழுது அவர்கள் சொன்னது "எல்லாம் தண்ணியத் தேடிதாங்க கீழ வருது. மலை மேல தண்ணி கெடச்சதுன்னா அதுங்க மேலேயே சுத்திக்கிட்டு இருக்குமுங்க. மனுசங்க இருக்கிற எடத்துக்கு வராதுங்க " என்றனர். பொறிதட்டினாற் போல
கபீரின் ஒரு தோஹாவுக்கு சட்டென்று விளக்கம் கிடைத்தது.

ऊँचे पानी ना टिके नीचे ही ठहराय
नीचा होय सो भरी पिये, ऊँचा प्यास जाय


ஊன்சே பானீ நா டிகே, நீசே ஹீ டஹராய்
நீசா ஹோய் ஸோ பரீ, ஊன்சா ப்யாஸ் ஜாய்


உயரே நிலைக்குமோ விண்ணிழி நீரும், விரைந் திறங்கி மடுவாகும்
உயரே நிற்பவன் தவித்திருப்பான், இறங்கி வந்தவன் திளைத்திருப்பான்
(விண்ணிழி = விண் +இழி வானத்திலிருந்து இறங்கிய. மடு =நீர் நிலை)

முதலில் படித்து மொழி பெயர்த்தபொழுது இது இன்றய நடைமுறைக்கு பொருந்துமா என்ற கேள்வி மனதில் தோன்றியது. தற்காலத்தில் மின் வசதிகள் பெருகிவிட்ட நிலயில் தண்ணீர் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லப் படுகிறது.

இந்நிலையில் மேலே இருப்பவன் தவித்திருப்பான் என்று எப்படிச் சொல்வது என சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில் மேலே சொன்ன சம்பவம் மிகச் சரியான உதாரணமாகத் தோன்றியது. கவிஞர்கள், ஞானிகளின் சொற்கள் என்றும் பொய்க்காது. நமது புரிந்து கொள்தலில் வேண்டுமானால் முன்பின் முரண் இருக்கலாம் என்பதும் புரிந்தது. உயரே இருப்பவன் இறங்கி ஆகணும்.
இறைவனின் அருள் மழை எல்லோருக்குமாகத்தான் பொழிந்து கொண்டிருக்கிறது.அதை உணர்ந்து அனுபவிக்க முடிபவர்களுக்கு வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே. உணராமல் போனவர்களுக்கு துன்பமே.

உணர்பவர்கள் யார், உணராதவர்கள் யார்?

ஈடுபட்டுள்ள செயலோடு தன்னை கர்த்தாவாக ஐக்கியப் படுத்திக்கொண்டு 'எல்லாம் தன்னால் நடக்கிறது, வெற்றிகளுக்கெல்லாம் தன் திறமையே காரணம் என்று நினைத்துக் கொள்வது; வராமல் போன வெற்றிகளுக்கு பலரிடமும் குறை கண்டு பலரையும் தூற்றிக்கொண்டுத் திரிவது ' இவையே பெரும்பாலும் காணப்படும் உலகினரின் இயல்பு. கபீரின் கண்ணோட்டத்தில் கூற வேண்டுமானால் இவர்கள் 'உயரே' வசிப்பவர்கள். இவர்கள் மனம் கரடுமுரடான பாறைகளால் ஆனது. நம்மில் காணப்படும் போட்டி, பொறாமை பாசாங்கு, இவைகளே அப்பாறைகள். அத்தகைய நெஞ்சங்களுக்கு இறைவனின் அருளைப் போற்றவோ தக்கவைத்துக்கொள்ளவோ நேரமும் அவசியமும் தெரிவதில்லை. இதனால் அவர்கள் மனம் வறண்டவர்களாக சுயநலப் போக்குள்ளவர்களாகக் காணப்படுவர். அகந்தையினால் தங்களை மிக உயர்ந்தவர்களாக எண்ணிக் கொள்ளும் போக்கு உடையவர்கள் இவர்கள். இவர்கள் பொதுவாக நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தேடி அலைவர். இவர்களின் நிலை நீருக்காக தவிப்பவர்களை ஒக்கும்.

கீழிருப்பவர்கள் யார்? இவர்கள் மன அடக்கம் உள்ளவர்கள். யாவரையும் சமமாக பாவிக்கக் கூடியவர்கள். பிறருடைய துன்பத்தைக் கண்டபோது மனம் வருந்தி அவர்களுக்கு உதவி செய்ய விரைபவர்கள். இத்தகைய குணங்களால் அவர்களுக்கு மகிழ்ச்சி இயல்பாகக் கூடுகிறது. தங்களுக்கு இறைவன் அளித்திருக்கும் வளமைக்கு இடைவிடாது நன்றி தெரிவிப்பவர்கள்.(இணைப்பைச் சுட்டவும்). அவர்கள் நன்றிக்குக் காரணம் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வளமைகூட இல்லாது பலரும் வாழ்க்கை நடத்தவில்லையா என்ற எண்ணம் தான். நன்றி பெருகும் மனதில் பிறரை குறைகூறும் குணம் இருக்காது. குறைகளை காணா மனம் மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன அறியும். அதுவே இறைவனின் கோவில் ஆகிறது. அவர்கள் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்கள். அடக்கமுடையவரின் மனநிலையை இராமலிங்க அடிகள் அழகாக எடுத்துரைக்கிறார்.


எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளம் தான் சித்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்து கொண்டேன் அவ்
வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட
என் சிந்தை மிக விழைந்ததாலோஎளியார்க்கு ஏவல் செய்ய விரும்பும் மனம் இன்னும் எத்தனை எளிமையானதாக இருந்திருக்க வேண்டும்.


மகிழ்ச்சியைத் தேடி அலைவோருக்காக சொல்லியிருக்கும் கபீரின் உதாரணம் மிக எளியது. யாவரும் புரிந்து கொள்ளக்கூடியது.

Saturday, May 19, 2007

கம்பனும் கபீரும்

இறைவனைப் போற்ற, அவனுடைய குணாதிசயங்களை, எத்தனை விதமாக பல காலங்களிலும் பல மகான்களும் பாடியிருக்கின்றனர் ! அவனை (அல்லது அவளை) புராணக்கதைகளுடன் இணைத்து அவரது பராக்கிரமங்களைப் போற்றி மகிழ்வது ஒரு வகை. இதை சகுண உபாசனை (வழிபாடு) என்பர் பெரியோர். அதாவது தமக்குப் பிடித்த வடிவத்திற்கு ஒரு குணத்தைக் கற்பித்து அதிலேயே லயத்து விடுவது. திரையில் பார்க்கும் நமக்குப் பிடித்த நடிகர் நடிகைகள் மேல் அளவு கடந்த ஒரு பிரேமையை வளர்த்துக் கொள்வதும் பின் அவர்களின் பித்தாக மாறுவதும் ஒரு வகையில் சகுண உபாசனைதான். அத்தகைய ஈடுபாடு கடவுளை நோக்கித் திரும்பும் பொழுது பக்தியின் உச்சத்தை பக்தன் அடைகிறான். இது பக்தி மார்க்கம்.

ஆனால் ஞான மார்க்கத்தில் உள்ளோர் அணுகுமுறையே வேறுவிதமாகும். ஆதிசங்கரர் சொல்வது போல நேதி (ந+இதி) "இது அல்ல" என்பதாக ஒவ்வொன்றாக, புலன்களால் அறியப்படுபவற்றை- விலக்கிக் கொண்டே போனால் கடைசியில் எஞ்சியிருக்கும் ஆத்ம உணர்வுதான் மனிதன் அறிய வேண்டிய இறையுணர்வு என்பர். "வாக்கும் மனமும் இல்லா மனோலயம்..." என்று ஔவையார் போற்றும் நிலை அது. அங்கே உருவ வழிபாடு மறைந்து தானே எல்லாமாகி நிற்கும் அத்வைத நிலை கைகூடுமாம். இதற்கு நிர்குண (குணமற்ற) உபாசனை என்று பெயர்.

அத்தகைய உயர்ந்த நிலையை அடைந்த பின்னும் அவர்கள் உருவ வழிபாட்டை துறப்பதில்லை. இதுவும் நம் போன்ற சாதாரண மனிதர்களின் முன்னேற்றத்திற்காகவே. மணிவாசகர் இந்த இரண்டு முறைகளையும் இணைத்து வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி என்று புலன்களால் உணரப்படுவனற்றிலிருந்து ஆரம்பித்து உண்மையுமாய் இன்மையுமாய் என்றும் உரைக்கிறார். அதேபோல் அருணகிரியாரும் உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்று சகுணத் தன்மையையும் நிர்குணத்தன்மையையும் ஒருங்கே போற்றுகிறார்.

கம்பராமாயணத்தின் யுத்தகாண்டத்தில் வரும் இறைவணக்கம் இப்படி உள்ளது.
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் பலவே ஆம்;
அன்றே என்னின் அன்றே ஆம்; ஆம் என்று உரைக்கின் ஆமே ஆம்
இன்றே என்னின் இன்றே ஆம்; உளது என்று உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பிக் குடி வாழ்க்கை ! நமக்கு என்னோ பிழைப்பு ? அம்மா !


இந்தக் கருத்தை அப்படியே கபீரும் ஒரு தோஹாவில் பிரதிபலிக்கிறார்.

एक कह तो है नहीं दॊ कहूं तो गारी
है जैसा तैसा रहे कहे कबीरा बिचारी


ஏக் கஹ் தோ ஹை நஹி, தோ கஹும் தோ காரி
ஹை ஜைஸா தைஸா ரஹே, கஹே கபீரா பிசாரி


ஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்
என்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்

(உரையில் = உரை+இல் ; உரைக்க இயலாத)

கம்பனின் அடிகளை நினைவூட்டும் பொருட்டே மொழிபெயர்ப்பிலும் அதே நடை கையாளப்பட்டுள்ளது. முதலில் செய்யப்பட்டிருந்த மொழிபெயர்ப்பையும் இங்கே தருகிறேன்.

ஒன்றே என்னில் சரியன்று இரண்டு என்றுரைக்கின் தவறேயாம்
சொல்லற்று உரைப்பான் கபீர்அது என்றும் எதுவோ அதுவேயாம்


இந்த மொழிபெயர்ப்பை எழுதி வைத்து பல மாதங்களுக்கு பின்பே கம்பரின் மேற்கண்டப் பாடலை காண நேர்ந்தது. இரண்டிலும் காணப்பட்ட "ஆம்" என்ற இயைபு மோனையும் 'என்று உரைக்கின்' என்கிற சொல்லாட்சியும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதனால் இரண்டிற்குமுள்ள ஒற்றுமையை பலப்படுத்த அடிக்கு இருமுறை 'ஆம்' என்ற இயைபு வரும் வண்ணம் மாற்றியமைத்தேன்.

கம்பர் நான்கு அடிகள் வைத்து சகுணம் நிர்குணம் இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கடவுளைப் போற்றுகிறார். ஆனால் கபீர் இரண்டாம் அடியிலேயே தன் இயலாமையை தெரிவித்துக் கொள்ளுகிறார்.

"உரையற்ற தொன்றை உரை செய்யும் ஊமர்காள்" என்னும் திருமந்திர அடிகளின் பெருமையை உணர்ந்தவர் போல் அதற்கு மேலும் ஏதாவது சொல்ல முற்பட்டால் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது போலாகும் என்று நினைத்தாரோ என்னவோ!

எனக்கு ஒன்றும் தெரியாது ' அது என்றும் எதுவோ அதுவே' என்று முடித்து விட்டார்.

கம்பர் "ஆம்" என்ற வகையில் இறைவனின் எல்லா குணங்களையும் ஏற்றுக் கொண்டு போகிறார். ஆனால் கபீரோ "சரியன்று" "தவறு" என்று எதிர்மறைப் பொருளாய் அணுகுகிறார். இது மேலே சொன்ன "நேதி" வகையைச் சாரும். எப்படிச் சொன்னால் என்ன ? " இருள் இல்லை" என்றாலும் "வெளிச்சம் உள்ளது" என்றாலும் ஒரே நிலையைத்தானே குறிக்கும்.

பிசாரி ( பரிதாபத்திற்க்குரியவன்) என்று கபீரும் 'என்னோ பிழைப்பு அம்மா ' என்று கம்பரும் முடிவினில் காட்டியிருக்கும் ஒரு இயலாமையில் -இறைவனின் பெருமையை சொற்களால் அடக்கமுடியாத் தன்மையை- இருவரின் எண்ண ஒற்றுமையை காணமுடிகிறது.

Thursday, April 12, 2007

திகம்பரர் நடுவே மடிவாளன்

ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு. It is better to keep away from the mire than washing it off. மழைகாலத்தில் நம்மை வேகமாகத் தாண்டிச் செல்லும் வண்டிகள் சேற்றை வாரியிறைத்து செல்லும் போது ஒதுங்கி ஒதுங்கி செல்லும் அவஸ்தை, பட்டவர்களுக்குத்தான் தெரியும். அதே போல் சமூகத்தில் தகாத மனிதர்களுடன் சேர்க்கை வரும் பொழுது அதி கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களை முற்றும் விலக்கவும் முடியாது; ஒட்டி உறவாடவும் முடியாது. அத்தகைய நிலை பல காரணங்களால் ஏற்படலாம். சிலரை வியாபர நோக்கத்தோடு அணுக வேண்டியிருக்கலாம். ஒரு சிலர் அதிகாரிகளாகவோ சக ஊழியராகவோ வாய்க்கலாம். பல சமயங்களில் சுயநல காரணங்களுக்காக ஒரு சிலர் நம்மை சுற்றி வரலாம்.

அத்தகையவர்களின் முக்கிய ஆயுதம் என்ன? ஒருவனை ஆசை வலையில் அடிமைப் படுத்தி தமது சுய காரியங்களை சாதித்துக் கொள்வதாகவே இருக்கும். எனவே புலனின்பங்களைத் துறக்கத் தெரிந்தால் வெகு சுலபமாக அத்தகைய இக்கட்டான நிலைமைகளினின்று விடுபடலாம். இதைக் கபீர் எவ்விதம் உரைக்கிறார் பார்ப்போம்.

कबीरा संगति साधुकी जौ की भूसी खाय
खीर खाँड़ भॊजन मिले ताकर संग न जाय
.

கபீரா சங்கதி சாது கீ ஜௌ கீ பூஸி காய்
கீர் காண்ட் போஜன் மிலே தாகர் சங்க் ந ஜாய்


கூழும் உப்பே ஆயினும் கபீரா, நல்லாரிணக்கம் அறிந்திரு
கூட்டும் பருப்பும் கிடைப்பினும் அல்லாரிணக்கம் துறந்திரு.


(அல்லது)

கைப்பிடி அவலே ஆயினும் கபீரா நல்லோர் அவைதனை சேர்ந்திரு
நெய்யொடு விருந்து மணக்கினும் அல்லார் மனைதனை துறந்திரு.

பல தியாகச் செம்மல்கள் பிற்காலத்தில் பெரிய பதவிகள் தம்மைத் தேடி வந்த போதும் அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் வெறுத்து ஒதுக்கினர். அவர்களால் அத்தகைய பொறுப்புகளை நிர்வகிக்க முடியாது என்பதால் அல்ல. பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்னர் தாம் தினமும் சந்திக்கப் போகும் மனிதர்களையும் அத்தகைய பதவிகளைச் சுற்றி வரும் சுயநலமிகளின் எதிர்பார்ப்பும், பூர்த்தி செய்யாவிடில் வரப்போகும் இன்னல்களும் அது ஒரு சகதியான பாதை என்பதை உணர்த்தி விடுகின்றன. பதவிகளால் வரும் சுகங்களைவிட மன துன்பங்களே அதிகம் என்ற காரணத்தால் தவிடு, கூழ் அவல் இவற்றிலேயே திருப்தியுடன் மகிழ்சியுடன் காலத்தை கழித்தனர். அது மேலோர் காட்டும் வழி.

ஆச்சாரியா வினோபா பாவே மகாத்மாவின் அஹிம்சா கொள்கையின் வாரிசாக கருதப்பட்டவர். விரும்பியிருந்தால் எத்தகைய பதவியும் சுதந்தரத்திற்குப் பின் அவர் வகித்திருக்க முடிந்திருக்கும். ஆனால் அவரோ பவுனாரில் (மஹாராஷ்ட்ரா) ஆசிரமம் அமைத்துக்கொண்டு பூதானம், கிராம முன்னேற்றம் என பல உயரிய இலட்சியங்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார். 1951 முதல் 1964 வரை பாதயாத்திரை மூலம் இந்தியா முழுவதும் சுற்றி 42 லட்சம் ஏக்கர் நிலங்களை பூதானமாகப் பெற்று ஏழைகளுக்கு வழங்கச் செய்தார். சம்பல் கொள்ளைக்காரர்கள் அவரது அஹிம்சா முறையினால் ஈர்க்கப்பட்டு 1960 ல் பெருமளவில் சரணடைந்தனர். 1970 க்கு பிறகு தன்னை முழுவதுமாக இறைநாட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டார். எளிமைக்கு உதாரணமான அத்தகையவரின் ஆசிரமத்திற்கு ஒருவர் சென்றிருந்தால் நெய்யும் பருப்புமா மணக்கும் ? ஆனால் அன்பிற்கு அங்கே குறைவிருக்காது. நாலடியாரில் வரும் ஒரு பாடலை இங்கே நினைவு கூறுதல் பொருந்தும்.

கழுநீருட் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்- விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங்காய்.


அரிசி களைந்த கழுநீரில் இட்டு சமைத்த கீரை உணவு என்றாலும் உள்ளன்போடு படைக்கப்பட்டால் அதுவே அமுதமாகும். சிறந்த பொரியல் துவையல் வகைகளுடன் சேர்த்து பரிமாறுகிற நல்ல வெள்ளரிசி சோறு என்றாலும் உள்ளன்பில்லாதவர் கொடுக்க உண்பது எட்டிக்காயை உண்பது போலாகும்.

நற்குணங்களைப் போற்றாதார் நடுவில் ஒருவன் வாழ நேர்ந்தால் அது துன்பம் தருவதே ஆகும்.

கபீரின் இன்னொரு ஈரடி நமது நற்பண்புகளை மேன்மேலும் பலப்படுத்தக்கூடிய நண்பர் வட்டத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

जहां न जाकॊ गुन लहै, तहां न ताकॊ ठावं
धोबी बसके क्या करे, दिगम्बर के गांव


ஜஹா ந ஜாகோ குண் லஹை, தஹா ந தாகோ டாவ்
தோபீ பஸ்கே க்யா கரேன் திகம்பர் கே காவ்


குடிபோக வேண்டா, குணம் போற்றார் நடுவே
மடிவாளனும் எதற்கு ஆடை அறியார் நடுவே.


(திகம்பரர் = ஆடை அணியாதவர்; மடிவாளன் =வண்ணான்)

நல்ல குணங்களை கொள்ளாதோர் ஆடையற்றவரைப் போல். (இங்கே அவதூத நிலைமை அடைந்து ஆடை துறந்தவர்களைப் பற்றி குறிப்பிடுவதாகக் கொள்ளக்கூடாது. திகம்பரர் என்று ஜைன முனிகளில் ஒரு பிரிவு உண்டு. அவர்களும் ஆடை எதுவும் அணிவதில்லை. கபீர் குறிப்பிடுவது கலாசாரத்தால் ஆடை அணியும் பழக்கம் இல்லாதவர்களைப் பற்றி. குழப்பதைத் தவிர்க்கவே ' ஆடை அறியார்' என்று மொழி பெயர்ப்பில் கையாளப் பட்டுள்ளது.)

எங்கே ஒருவனுடைய நற்குணங்களும் திறமைகளும் மதிப்பில்லாத நிலை உள்ளதோ அங்கே அவன் இருந்து அடையப் போவது என்ன? அவர்கள் மத்தியில் வசிப்பதனால் காலம் வீணாகும். அது திகம்பரர் வசிக்கும் ஊரில் சலவைத் தொழிலாளி தொழில் செய்ய முற்படுவது போலாகும். எனவே தன் திறமைக்கும் நற்குணங்களுக்கேற்ப வசிக்கும் சூழலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கபீர் வலியுறுத்துகிறார்.

வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். சர்வ ஜித் வருடத்தில் சர்வ சுப காரியங்களும் ஜெயம் பெறுவதாக.

Sunday, March 25, 2007

குலம் தருமோ பெருமை ?

கல்விப்பெருமை, செல்வத்தின்கண் பெருமை, அதிகாரப்பெருமை மற்றும் வனப்பின் பெருமை இவையாவும் மனித குலத்தை ஆட்டிப் படைக்கும் ஒரு பெரும் மாயையின் சக்தி. ஓரளவு இவைகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பெருமை உண்டு. அது தான் குலப்பெருமை.

மனிதகுலம், காணும் எல்லாவற்றிலும் ஒரு உயர்ச்சி அல்லது தாழ்ச்சி கற்பிக்கிறது. இவைகளுக்கு குதிரை, பசு, காளை நாய் பூனை போன்ற விலங்குகளும் விதிவிலக்கல்ல. ஆயிரக்கணக்கில் பணம் கொட்டி உயர் ஜாதி நாய்க் குட்டிகளை செல்வந்தர்கள் வாங்கி செல்வதை காண்கிறோம். அதனுடன் கணிணியில் பதிவு செய்யப்பட்ட அதன் மூதாதையர்களின் வரலாறும் உண்டு. எவ்விதத்திலும், எந்த நிலையிலும் அதன் உயர்ச்சிக்கு குறைவு ஏற்படவில்லை என்பதை நிரூபிக்கவே இந்த ஏற்பாடு.

இப்படி இருக்கையில் தன் இனத்தை மட்டும் விட்டுவைப்பானா மனிதன். 'அவங்க ராஜா பரம்பரை' 'எங்கள் முப்பாட்டனார் திவான் பகதூராக்கும்' என்பன சில, கடந்த கால நிகழ்வுகளிலேயே, பெருமை பேசித்திரியும் பலரது போக்காகும். சாதி சண்டைகள் என்பது பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாகும். இதற்கு எந்த ஒரு தேசமும் விதிவிலக்கு அல்ல. இது வேறுபாடு பாராட்டும் பாமர மனிதருடைய போக்கு. படைப்பு எல்லாவற்றிலும் ஒருமையை ஓர்ந்து, அன்பு போற்றும் ஞானிகள் இதை மாற்ற முயற்சிக்கின்றனர்.

ஆறறிவு கொண்ட மனிதனை அவன் பின்பற்றும் பண்பாடுகளையும் கொள்ளும் கோட்பாடுகளையும் கொண்டே தரம் பிரிக்க வேண்டுமே அன்றி பிராணிகளைப் போன்று பிறக்கும் குடியைக் கொண்டு அல்ல. அவைகளின் குணம் வெறும் மரபு வழியாக நிர்ணயிக்கப் படுகிறது. ஆனால் மனிதனுக்கோ அவனுடைய பூர்வ ஜன்ம கர்மவினைகளை ஒட்டியே குணங்களும் திறமையும் அமைகின்றது.

ஹரிபிரசாத் சௌராசியாவின் புல்லாங்குழல் இசையில் மயங்காதவர்களே இருக்க முடியாது. இவர் சிறுவனாக இருக்கும் பொழுதே அதை கற்க மிக்க ஆர்வம் கொண்டு பல சிரமங்களுக்கிடையே உழைத்து வெற்றி கண்டவர். சிரமங்களுக்கான காரணம் அவருடைய குடும்பத்தில் இசை என்பதின் வாசனை கூட கிடையாது. அவரது தந்தையார் ஒரு குத்து சண்டை வீரர். தன்னைப் போலவே தன் மகனும் அதில் தேர்ச்சி பெற்று முன்னுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர். அந்த குடியிலே ஒரு இசை மேதை பிறக்க வேண்டும் என்பது இறைவன் சித்தம்.

நான்மணிக்கடிகையில் வரும் ஒரு பாடல்:

கள்ளி வயற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று
ஒள் அரிதாரம் பிறக்கும் ; பெருங்கடலுள்
பல் விலய முத்தம் பிறக்கும் ; அறிவார் யார்
நல் ஆள் பிறக்கும் குடி ?


நாம் பொதுவில் பயனற்றவையாகக் கருதும் முள் நிறைந்த கள்ளி, உப்பு கரிக்கும் கடல், காட்டில் வாழும் மான் ஆகியவை கூட பல மதிப்பற்ற பொருள்களை தர வல்லன. அதைப் போன்றே மேன்மக்கள் பிறக்கவேண்டிய குடி இதுதான் என்று எவரும் நிர்ணயம் செய்ய முடியாது.

ஒரு அபூர்வப் பிறவி வந்து தன்னுடய குலத்திற்கே பெருமை சேர்த்துப் போய்விடுகிறது. அதன் பின், சந்ததியினர் பொறுப்பு அதிகமாகிறது. இதை ஒரு நல்ல உதாரணத்துடன் கபீர் சுட்டிக் காட்டுகிறார்.

ऊंचॆ कुल मॆं जनमिया, करनी ऊंच न हॊय
सुबरन कलस सुराभरा, साधू निन्दा सॊय


ஊஞ்சே குல் மேன் ஜன்மியா, கர்னீ ஊஞ்சா ந ஹோய்
சுபரன் கலஸ் ஸுரா பரா, ஸாது நிந்தா ஸோய்


பிறப்பு தருமோ பெருமை, ஒருவர் செய்வினையாயின் கடை
சிறப்பு தருமோ பொற்கலம், உரவோர்க்கண் கள்ளாகும் கடை


(உரவோர் =மேன்மக்கள்; சுபரன் என்பது சுவர்ணம் என்பதன் திரிபு)

கள்ளுண்ணாமை, புலால் மறுப்பு, இன்னா சொல்லாமை போன்ற நற்குணங்களை மேன்மக்கள் வாழ்க்கையின் நியதியாகக் கொள்வர். அத்தகைய ஒருவர் விலையுயர்ந்த தங்கக் கலசத்திலேயே படைக்கப் பட்டாலும் கேடு விளைவிக்கும் கள்ளை நிந்திப்பர். அது போல் சமுதாயத்தில் ஒருவனுடைய செயல் கீழ்தரமானதாக இருப்பின் அவன் உயர் குடியில் பிறந்திருந்தாலும் அவன் நிந்தனைக்குரியவனே.

வள்ளுவர் சொல்வதும் அதுவே:

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை


ஆகவே நல்ல சந்ததியருக்கு அடையாளம் குடிப் பெருமைக்கு களங்கம் வராமல் நடந்து கொள்வதே.

சாதாரண மனிதர்களே சாதிபேதங்களில் மாட்டிக் கொண்டு முழிக்கும் போது, சிறுமதியோர் சாதுக்களையும் ஞானிகளையும் விட்டு வைப்பார்களா ? அதிலும் கபீர் இந்த விஷயத்தில் சற்று அதிகமாகவே அடிபட்டவர். ஆனால் ஞானிகள் இத்தகைய சில்லறைத்தனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அறிவுரைத் தேவைப்படுவது சாதாரண ஜனங்களுக்கே. அவர்களுக்கு கபீர் கூறுகிறார்.


जाति न पूछॊ साधु की, पूछि लीजिऎ ज्ञान
मॊल करॊ तलवार की, पडा रहन दॊ म्यान


ஜாதி ந பூசோ ஸாது கீ, பூசி லீஜியே ஞான்

மோல் கரோ தல்வார் கீ, படா ரெஹன் தோ ம்யான்


குலம் பொருட்டு ஆவது என், அடியவர் நிறை தெரிந்து ஏற்று
பலம் பொருட்டு குனை வாள் சிறப்பு, கிடக்கட்டும் அதன் தடறு

(தடறு= ஆயுத உறை ; நிறை =மாட்சிமை ; ஏற்று= போற்று ; குனை வாள் = கூர்மையான வாள் )

போருக்கு புறப்பட்டிருக்கும் ஒருவன் எடுத்துச் செல்ல வேண்டிய வாளின் உறுதியையும் கூர்மையையும் பார்த்து தேர்ந்தெடுப்பானா அல்லது வாளின் உறையையும் அதன் வேலைப்பாட்டையும் பார்த்து எடுத்துச் செல்வானா? மனித உடல் வெறும் கூடு. ஒருவரின் ஆன்மீக சக்தியை இந்தக் கூட்டைப் பார்த்து முடிவு செய்தல் கூடாது. பிறப்பை ஒட்டி அந்த சக்தி நிச்சயிக்கப் படுவதில்லை. அது பல பிறவிகளின் மூலம் தவம் செய்து வந்திருக்கும் ஒரு சக்தி. அத்தகைய மாட்சிமை உடையவரின் குடிப்பிறப்பைப் பற்றி விவாதிப்பதே தவறு. தமிழ் மண்ணில் ஒரு நந்தனார், மகாராஷ்டிரத்தில் ஒரு நாமதேவர் (இவருடய தந்தை தையல் தொழில் செய்தவர்), கர்நாடகத்தில் குயவர்கள் குடும்பத்தைச் சார்ந்த கோரக்கும்பர் இப்படி இறை அனுபூதி பெற்ற மகான்கள் எண்ணிற்கடங்காது.


கண்ணன் கீதையில் சொல்வது (9-32) :

என்னை சரணடைந்தவர், பெண்ணோ, வைசியனோ அல்லது சூத்திரனோ யாராயிருப்பினும் மிக உன்னத நிலையை அடைந்தவர் ஆவர்.


மேற்கண்ட மகான்கள் கண்ணனின் கூற்றை மெய்ப்பித்தவர்கள். எனவே எத்தகைய சந்தர்பத்திலும் குலம் சாதி போன்ற எண்ணங்களை மனதுக்குள் அனுமதிக்கக் கூடாது. இதற்காக குறைந்த பட்சம் ஒன்றை நாம் கடைப்பிடிக்க முடியும். எங்கெல்லாம் சாதி மத சர்சைகள் நடக்கின்றதோ அவற்றை விட்டு விலகியிருந்தாலே ஆன்மீக மார்க்கத்தில் மேலும் ஒரு படி ஏறி விட்டோம் என்று வைத்துக் கொள்ளலாம்.