Wednesday, May 27, 2020

வரும் ஒன்று போமொன்று- எதுவும் நிலையன்று


இம்முறை ஒரு மாறுதலுக்காக ஒரு சிறு கதை. திரு புதுமைப்பித்தனின் சொற்சித்திரம். அதன் பின்னர் இதையொட்டி  கபீர் வழியில் நம்  எண்ணவோட்டம்.

தெரு விளக்கு 

தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு. 

தனிமையாக ஏகாங்கியாக தனது மங்கிய வெளிச்சத்தை பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது. 

இளமை மூப்பு சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும் உரிமையில்லை. எனவே தெரு விளக்கிற்கும் இப்போது மூப்புப் பருவம். 
நிற்கும் கல்-உடம்பு சிறிது சாய்ந்து விட்டது. 

Monday, May 04, 2020

உன் சூதே இது அருணாசல !


     தறிகெட்டு தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்த உலகத்திற்கு ஒரு வேகத்தடை போட்டுள்ளது கொரானோ. விமானங்கள் இல்லை, புகைவண்டிகள் இல்லை பேருந்துகள் இல்லை. எல்லா நாடுகளிலும் ஊரடங்கு என்ற பெயரில் உலகமே முடங்கிக் கிடக்கிறது.

  அனைவரும் எப்படி குடும்பத்தோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்பது   என்று வல்லுனர்கள் தொலைகாட்சியிலும் சமூக வலைத்தளங்களிலும்  விவரிக்கிறார்கள்.  ஒவ்வொருவரும் தத்தம் தனித் திறமை வளர்த்துக் கொள்ள அற்புதமான வாய்ப்பு என்கின்றனர். நேரமில்லை என்று ஓடியவர்களை யோகாவும் தியானமும் செய்யுங்கள் என்று பிரதமர் முதல் தொலைக்காட்சி நெறியாளர் வரை யாவரும் நினைவு படுத்துகின்றனர்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

அப்பாடா ! இனி அங்கே இங்கே என்று யாரும் கூப்பிட மாட்டார்கள்.கலியாணம் கோவில் என்றெல்லாம்  சுற்ற வேண்டியதில்லை.  சாலை நெரிசலில் சிக்கி விழி பிதுங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம், எதையாவது உருப்படியாக செய்வோம் என்று நானும் திட்டம் தீட்டினேன். மீண்டும் கபீர் எழுத வேண்டும், புது புது யுக்திகளை படம் வரைவதில் கையாண்டு பார்க்க வேண்டும்.  இரமணரின் உபதேச சாரம் மனப்பாடம் செய்ய வேண்டும், குறைந்தது ஒரு அத்தியாயமாவது பகவத்கீதை படிக்க வேண்டும், தரவிறக்கம் செய்து  படிக்காமல்  இருக்கும் திருவாசகத்தை படிக்கத்  தொடங்க வேண்டும்    இத்யாதி

   மூன்று வாரங்களுக்கு பின் ஏதாவது முன்னேற்றம் உண்டா என்றால் இல்லை என்றே சொல்வேன்.  திட்டத்தில் பத்து சதவீதம் கூட வெற்றியில்லை.  ஏதேதோ காரணங்கள்.  ஆனால் பெரிய காரணம் நான் வைத்திருக்கும் கைப்பேசி மூலம்  நம் மனதிற்குள் புகுந்துள்ள   வைரஸ் களான வாட்ஸ் ஆப், முகநூல் ட்விட்டர் போன்ற  மென்பொருட்களின்  மயக்கமே.

நேரத்தைக் கொல்லும் மானிடக் கொல்லிகள்.

அவைகள் நேரத்தைக் கொல்ல (Time pass, killing time)) உதவுகின்றன என ஒப்புக் கொண்டால்   கண்டிப்பாக நம் ஆயுளையும்  சேர்த்தே கொல்லுகின்றன என்பதை மறுக்க முடியாது. இதை சொல்வது  திருவள்ளுவர்.

நாளது ஒன்று போல் காட்டி  உயி(ர்) ஈரும் 
வாளது உணர்வார் பெறின்.

கால அளவாக காட்டப்படும் ஒவ்வொரு நாளும் உயிரை அறுக்கும் வாள் என்று கூர்ந்து அறியும் சான்றோர் உணர்வர்.

இந்த உண்மையும் வாட்ஸ்-ஆப்பில் வந்த ஒரு பகிர்வைப் பார்த்ததும் தான் உறைக்கிறது

மக்கள் செய்யும்  காலவிரயம் என்பது ஒரு மாயையின் விளையாட்டு என்பதை அக்ஷர மணிமாலையில் இரமணர்  "இறைவனின் சூது" என்று வருணிக்கிறார்.

"ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீயிலையோ அருணாசல 
  ஒருவனாம் உன்னை ஒளித்தெவர் வருவார்? உன் சூதேயிது அருணாசல"

 உன்னை ஏமாற்றி கள்வர்கள் உள்ளே எப்படி உள்ளே வரமுடியும்? ஆகையால் நீ வேண்டுமென்றே இந்த ஐம்புலன்களை தந்து என்னை திசை திருப்புகிறாய்" என்று உரிமையுடன் இறைவனை சாடுகிறார். அவர் முழித்துக் கொண்டு கள்வர்களை விரட்டி அடிக்க வல்லவரானார். ஆனால் நாமோ இன்னமும் ஏமாந்து அமர்ந்திருக்கிறோம்.

கபீரும்இந்த ஏமாறுதலை பயிரைக் காக்காத விவசாயிக்கு ஒப்பிடுகிறார்.

बिन रखवारे बाहिरा, चिड़ियों खाया खेत |
अरधा परधा ऊबरे, चेति सके तो चेत ||

 விரட்டு வாரில்லா வயலிலே பறவைகள் தின்றன தினைதனை
 திரட்ட முடிந்தால் திரட்டிடு அரைகுறை யாயினும் விளைச்சலை

கள்வர்கள் என்று ரமணர் சொன்னதைத்தான்   பறவைகள் என்று கபீர் சொல்கிறார்.

நமக்கு தேவையான ஒன்றை இன்னொருவன் எடுத்து சென்றால் அதற்கு நம் கவனக் குறைவே காரணம்.

இங்கே நாம் இழப்பது நேரத்தை ; இறை சிந்தனையோடு கூடிய தர்ம காரியங்கள் செய்யாமல் கழிக்கும் நாட்களை. அதற்குக் காரணம் புலன் கவர்ச்சிகளால் நம் கவனம் தவறுவதே ஆகும்.

இந்த இயலாமை அப்பர் பெருமானையும் திருமங்கை ஆழ்வாரையும் கூட வாட்டுகிறது.

சக்கரத்து அண்ணலை வேண்டிக்கொள்ளும் ஆழ்வார் பாடல் :
இடகி லேனோன் றட்ட கில்லேன் ஐம்புலன் வெல்லக்கில்லேன்
கடவனாகி காலந்தோறும் பூப்பறித் தேத்த கில்லேன்
மடம் வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய்
தடவு கின்றேன்  எங்குக் காண்பன் சக்கரத் தண்ணலையே?  (3305 )

[இடகிலேன் : இரப்பவர்க்கு எதையும் ஈவதறியேன்
 ஒன்று அட்டகில்லேன் : தாகமுற்றவர்க்கு நீர் தந்திலேன்
 கடவனாகி : நியதியுடையவனாகி  ; காலம் தோறும் உரிய காலங்களில்
 அயர்ப்பு ஆய்: அவ்விவேகி ஆகி ;  தடவுகின்றேன் : தேடுகின்றேன் ]

கோவலூரில் குடியிருக்கும் இறைவனை இறைஞ்சி அப்பர் பாடியது :
தடுத்திலேன் ஐவர் தம்மைத் தத்துவத்து உயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப் பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார வார்வலித் தன்பு திண்ணம்
கொடுத்திலேன் கொடிய வாநான் கோவல்வீ ரட்ட னீரே.

கோவலூர்ப் பெருமானே ! ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய் , எம் பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மனங்கொண்டு , அவன் திருவடிகளில் சேர்ப்பிக்கப் பல மலர்களையும் பறித்துக் தொகுக்காதேனாய் , மனம் நிறைய அன்புகொண்டு அவ் வன்பை எம்பெருமான் பால் செலுத்தேனாய் அடியேன் கொடியேனாகக் காலம் கழித்துவிட்டேனே ! ( நன்றி ; Thevaram.org)

இப்படி ஐம்பொறிகளை கட்டுப்படுத்தாமல் எந்தவித ஆன்மீக முன்னேற்றமும் இருக்கமுடியாது என்பதை சான்றோர்கள் யாவரும் சொல்லியிருக்கிறார்கள்.  உலக விஷயங்களிலே பற்று உண்டாவதற்கு காரணமே இவைதான்.

அது இன்றைய வாட்ஸ்-ஆப் வரைக்கும் வந்து விட்டது.  மகிழ்ச்சியை பகிர்கிறோம் என்ற பெயரில்  இது வணிகத்தைப்  பெருக்கி மனங்களை சுருக்கி காலத்தைக் கொன்று மனிதத்துவத்தையும் அழித்துக் கொண்டு வருகின்றது என்றால் மிகையில்லை. 

பற்றற்றான் பற்றை பற்ற பற்று விட வேண்டும் என்பதை  முதல் அத்தியாயத்திலேயே சொல்லிவிட்டார் வள்ளுவர்.

மீண்டும் கபீருக்கு வருவோம்.' திரட்ட முடிந்தால் திரட்டு' என்று ஒரு சந்தேகத்தை ஏன் எழுப்புகிறார்?  அவருக்கு நன்கு தெரியும் மனிதர்கள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது . இன்னும் எவ்வளவு நாட்கள் மீதி உள்ளனவோ தெரியாது. அதற்குள்ளாகவாவது மருட்சியை  விட்டு பெரியவர்கள் சென்ற பாதையில் சென்று பார் என்று உபதேசிக்கிறார்.

அதையே வள்ளல் பெருமானார் வார்த்தைகளில் பார்த்தால்
"அருள் அறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம் 
 மருள் அறிவு என்றே வகுத்த மெய் சிவமே 
 அருட் பேறதுவே அரும் பெறற் பேறு
  இருட்  பேறு அறுக்கும் என்று இயம்பிய சிவமே  (990  அருட்பெருஞ்சோதி அகவல்)

கடவுளை சிந்தித்து இருந்தால்  மருள் நீங்கி விடும்.

இந்த உண்மைகளை சற்றாவது நினைத்துப் பார்க்க கொரானாவை  அனுப்பிய -யாவற்றையும் கடந்து நிற்கும்- அந்த  கடவுளுக்கு நன்றி.