Thursday, July 17, 2008

எழுதித் தீருமோ எம் குரு பெருமையும்

கல்லூரியில் மகனையோ மகளையோ சேர்க்கும் முன் பல மத்திய தர குடும்பங்களில் பல மாதங்களுக்கு பெரிய வாத பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருக்கும். பல்விதமான துறைகள், ஒவ்வொரு துறையிலும் பல உட்பிரிவுகள். பல தரப்பட்ட கல்லூரிகள். இப்பெரிய உலகில் அக்குழந்தைகள் அடியெடுத்து வைப்பதற்கு தைரியம் கொடுக்கும் வகையில் பேசுவோரே இல்லை. பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி மனதைக் குழப்பியும் பயமுறுத்தியும் விடுவர்.

கடைசியில் ஒரு பெரியவர் ஒரு முத்தாய்ப்பு வைக்கிறார். “இதோ பாரு! நீ எந்த ஃபீல்டல போனாலும் பெரிய ஆளா வரலாம். உனக்கு வேண்டியது கஷ்டப்பட்டு படிக்கிற குணமும், கடவுள் மேல நம்பிக்கையுந்தான். அம்மா அப்பாவுக்கு பணக்கஷ்டம் மனக் கஷ்டம் இல்லாத மாதிரி எந்த சப்ஜெக்ட்டை எந்த காலேஜ்-ல வேணுமானாலும் எடுத்து படி. அவன் வழி காட்டுவான்

ஆன்மீகத்திற்கு வேண்டியதும் இந்த மனப்பக்குவமே, "அவன் வழி காட்டுவான்"

எல்லாத் துறைகளைப் போலவே ஆன்மீகத்திலும் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உண்டு. அவரவரும் கடந்து வந்த பாதையை வைத்து தத்தம் அனுபவங்களைக் கொண்டு கடவுளைப் பற்றி விவரிக்கின்றனர். எல்லோர் சொல்வதும் ஏதோ ஒரு விதத்தில் சரியே. ஆனால் அது எல்லாமே குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்து வர்ணித்தது போலவே ஆகும். இந்த நடைமுறை நிலையை கபீரும் ஏற்றுக் கொள்கிறார்.

गुरु गुरु में भेद है, गुरु गुरु में भाव ।
सोइ गुरु नित बन्दिये, शब्द बतावे दाव ॥


குரு குரு மே பேத ஹை, குரு குரு மே பாவ் |
ஸோயி,குரு நித் பந்தியே, ஷப்த் பதாவே தாவ் ||


குரு குருவிலும் பேதம் உண்டு, குரு குருவிலும் பாவனை வேறு
குரு அவனடி தினம் பணிந்திடு, நாதத்தில் கூட்டிடும் நாதன் பேறு

(நாதன் பேறு = இறைவன் என்ற செல்வம் )


[ இரண்டாவது அடியை உரைநடையில் “நாதத்தில் நாதன் பேறு கூட்டிடும் குரு, அவனடி தினம் பணிந்திடு” எனக் கொள்க.]

'ஷப்த் பதாவே தாவ்' என்று கபீர் சொல்வது ஔவையின் “சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி, சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி'' என்ற வரிகளை நினைவூட்டுகிறது.

சப்தம் அல்லது நாதம் சிருஷ்டியில் முதலில் தோன்றியதாக சொல்லப்படுகிறது. ஆன்மீகத்தின் கடைசி கட்டத்தில் சாதகன் உணரும் நிலையும் அதுவே எனப்படுகிறது. சிவமே எல்லாவற்றிலும் நாதமாய் விளங்குகிறது என்கிறது திருமந்திரம்.

சத்தமும் சத்தமனமும் மனக்கருத்து
ஒத்தறிகின்ற இடமும் அறிகிலர்
மெய்த்தறிகின்ற இடம் அறிவார்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே (1973)

நாதமும் அதனை உணர்கின்ற மனமும் மனக்கருத்து ஒருமித்துச் சிவம் உள்ள இடத்தையும், யாரும், அறியார். அதை உள்ளபடி உணர்ந்தாரானால் சிவ பெருமான் இருக்குமிடம் அதுவே என்பதை அறிவர்.

அதை உணர்ந்தே பட்டினத்தாரின் சீடராகிய பத்திரகிரியாரும்

வேதாந்த வேதமெல்லாம் விட்டு ஏறியே கடந்து
நாதாந்த மூலம் நடு இருப்பது எக்காலம் ? -

என்று ஏங்குகிறார்.

தமக்கென்று வாய்த்த குருவின் உரையில் நம்பிக்கை வைத்து அவர் சொல்லியபடி பயிற்சிகளை செய்து கொண்டு போனால் தானே வழி பிறக்கும். குரு உபதேசித்த மந்திரம் கையில் கொடுக்கப்பட்ட விளக்கு போல. அதன் துணையுடன் பாதையை பிடித்துக் கொண்டு போனால் முன்னேறிச் செல்ல முடியும். அதைவிட்டு சுற்றிலும் இருக்கும் இருளைக் கண்டு பயந்து இருந்த இடத்திலே அழுது கொண்டிருப்பவனுக்கு முன்னேற்றம் ஏது? கபீர் அதனால் தான் நாமசெபத்தின் பயனை மேலும் வலியுறுத்துகிறார்.

नाम भजोमन बसि करो, यही बात है तंत ।
काहे को पढि पचि मरो, कोटिन ज्ञान गिरंथ ॥


நாம் பஜோமன் பஸி கரோ, யஹி பாத் ஹை தந்த் |
காஹே கோ படீ பசீ மரோ, கோடின் ஞான் கிரந்த் ||


செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவைநூறு படிப்பதும் வீணே

மாற்று

மனமே செபித்து வசிகொள், இதுவே நாதன் அருளின் இரகசியம்
தினமே செப்பிடும் சாத்திரம் நூறு, இன்னும் அதுவோ அவசியம்

ஆராய்ச்சியால் அறியப்படுபவன் அல்ல கடவுள். ஆராய்ச்சி செய்து நூற்றுக் கணக்கான புத்தகங்கள் எழுதலாம், படிக்கப்படலாம். ஆனால் அவையெல்லாம், வள்ளலாரின் மொழியில் “சாத்திரக் குப்பை” தாம்.

சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம் ?

என்று பத்திரகிரியார் குறிப்பிடும் (மெய்ஞான புலம்பல்: 155 ) சூத்திரமே குருவழி வரும் மந்திர உபதேசம். அதை முறையாக செபித்தால் அது இறைவனிடம் இட்டுச் செல்லும். அதை உறுதி செய்வது போல் இருக்கிறது திருமந்திரத்தின் இன்னொரு பாடல்.

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது;
நாத முடிவிலே நஞ்சுஉண்ட கண்டனே

இருட்டு நேரத்தில் தன் படகை அடைய வேண்டிய படகுகாரன் படகைக் கட்டி வைத்திருக்கும் சங்கிலியை பிடித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் முன்னேறிச் சென்று படகை அடைவது போல, ஒவ்வொரு முறை நாமத்தை உச்சரிக்கும் போதும் சங்கிலியின் ஒரு இணைப்பின் அளவு இறைவனை நெருங்குகிறோம் என்பாரம் அன்னை சாரதா தேவி.

இன்று வியாச பூர்ணிமை. குரு மேன்மையை நினைவு கூற சிறப்பான தினம். கபீர் தமது குரு மீது வைத்துள்ள அன்பையும் பெருமையும் ஒருங்கே அவரது கீழ்கண்ட ஈரடியில் காணலாம்.

सब धरती कागद करूं , लिखनी सब बनराय ।
सात समुद्र का मसि करूं, गुरु गुण लिखा न जाय ॥

ஸப் தர்தீ காகத் கரூன், லிகனீ ஸப் பன்ராய் |
ஸாத் ஸமுத்ர் கா மஸி கரூன், குரு குண் லிகா ந ஜாய் ||


அடவி மரங்கள் கோலாகும், இத்தரை யெலாமாகும் பத்திரம்
கடலேழும் மசியாகும், எழுதித் தீருமோ எம்குரு பெருமையும்

(அடவி= காடு ; கோல்= எழுது கோல்; இத்தரை = நிலம்; பத்திரம்= காகிதம்.; மசி =எழுதும் மை)

ஞானியர் அருளில் ஞாலம் ஒளிரும்.

Wednesday, July 09, 2008

கடுகுக்குள்ளே தெரியும் மலை

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மிகச் சிறியது என்றால் கடுகும், ஊசியும். இவைகளை வைத்துதான் எத்தனை விதமான கதைகள், நிகழ்சிகள் வர்ணனைகள். 
 "கடுகைத் துளைத்தேழ் கடல் புகட்டி, குறுகத் தரித்தகுறள்" என்று திருக்குறளின் பெருமை பேசுவார் இடைக்காடர். 

 ”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று மருதவாணன் சொல்லி மறைகிறான் திருவெண்காடருக்கு (பட்டினத்தார்).

  மரணம் நிகழாத வீட்டிலிருந்து கையளவு கடுகை கொண்டுவரச் சொல்கிறார் புத்தர், குழந்தையை இழந்த அபாக்யவதியின் துயர் தீர்க்க. 

 அரசன், சிகந்தர் லோடியின் அழைப்பிற்கு கபீர் வருவதில் தாமதம். ஏனென்று விசாரித்தபோது ”ஊசியின் காதளவு துவாரத்தில் ஒட்டகங்களின் அணிவகுப்புச் செல்லும் விந்தையைக் கண்டு இறைவனின் பெருமையை எண்ணி வியந்து கொண்டிருந்தேன்” என்றார். 

 ஊசியின் காதில் ஒட்டகங்கள் நுழையும் வரை நம்பிக்கையில்லாதவனுக்கு சுவனபதியில் இடம் கிடையாது என்பது இஸ்லாத்தில் கூறப்படும் கருத்து என்று அறிகிறோம். 

 நம்பிக்கையைப் பற்றிச் சொல்லும் போது ”கடுகளவாவது உங்களுக்கு நம்பிக்கை உண்டானால் அந்த மலையையும் நகர்த்தலாம்” என்றார் ஏசு பிரான் (மத்தேயு: 17-20). 

 இறைவனின் பெருமையில் நம்பிக்கை வைத்தாலே மலையை நகர்த்த முடியுமென்றால் அந்த இறைவனே மனது வைத்தால் ஆகாததும் உண்டோ. அதை மனதில் வைத்தே கபீர் சொல்கிறார். 

  साँई से सब होते है, बन्दे से कुछ नाहि ।
 राई से पर्वत करे, पर्वत राई माहिं ॥
ஸாயி ஸே ஸப் ஹோதே ஹை, பந்தே ஸே குச் நாஹி |
 ராயி ஸே பர்வத் கரே, பர்வத் ராயி மாஹி || 

பெருமாள் செய்வதே எல்லாம், இவனால் ஆவது இல்லை எதுவும் 
பெருமலையும் கடுகுள் அடங்கும், அவனால் கடுகே மலையும் ஆகும்

அடிமுடி காணாக் கிடைக்கா ஜோதியாக நின்ற அண்ணாமலையாராகட்டும் “ஸர்வதஹ பாணி பாதம் தத் ஸர்வோக்ஷி ஷிரோ முகம்“ என்று சொல்லும் பகவத்கீதையின் வர்ணனையாகட்டும், 'ஓங்கி உலகளந்த உத்தம' னாய் நின்ற வாமனனாகட்டும், மண்ணைத் தின்ற வாயில் அண்ட சராசரங்களை காட்டிய வண்ணமாகட்டும் எல்லாமே இறைவனின் எல்லையற்ற தன்மையை நமக்கு கோடிட்டு காட்டுகின்றன. 

 ஆனால் இப்படியெல்லாம் சொல்லும் போது சாதாரணமான மனிதனின் புத்திக்கு எட்டுமோ இல்லையோ என்பதனால் அவர்களுக்கும் எளிதாக புரியும்படி கடுகையும் மலையையும் உவமித்து கபீர்தாஸர் சொன்னார்.

 பெரிய மலை கடுகுக்குள் அடங்கியது எவ்வாறு? ஊசியின் காதில் ஒட்டகம் எவ்வாறு போயிற்றோ அப்படிதான். சிகந்தர் லோடிக்கு கபீர் கூறிய விளக்கம்

இந்த உலகத்தின் காணப்படும் காட்சிகள் யாவுமே ஊசியின் காதை விடச் சிறியதான கண்ணின் கருமணியின் வழியாகத்தானேப் பார்க்கப்படுகிறது. காணப்படும் பொருட்கள் அனைத்தையும் ஒளிவடிவில் மாற்றி அதை ஊசியளவு துளையில் செலுத்தும் மகிமை அவனன்றி யாரால் முடியும்? இது மலை கடுகான விதம். 

 கடுகு மலையாவது எப்படி? அதற்கு அதிவீரராம பாண்டியர் பதிலளிக்கிறார். கடுகைப் போலவே சிறியதான மீனின் சினையை உவமையாக்கி சொல்லும் பாடலை பாருங்கள். 

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் 
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை 
அணி தேர் புரவி ஆட்பெரும் படையோடு 
மன்னர்க்கு இருக்க நிழலாகுமே. (வெற்றி வேற்கை) 

 மீனின் முட்டையைக் காட்டிலும் அளவில் நுண்ணியதான விதை, சில காலத்திலேயே ஒரு மன்னன் தன் படையுடன் வந்து அதனடியில் தங்கி இளைப்பாறும் அளவிற்கு நிழல் தரும் மரமாக வளர்ந்து நிற்கிறதாம். அப்படையில் தேர்கள் யானைகள், குதிரைகளும் கூட உண்டாம் ! அப்படி ஒரு சிறிய விதையில் பெரிய மரத்தை அடைத்து வைத்த வல்லமை யாருடையது ?. 

இன்னும் சிறிது காலம் போனால் அம்மரத்தினின்று விழும் விதைகள் ஒரு பெரும் காட்டையே கூட உருவாக்க வல்லது. இப்படித்தான் கடுகளவில் உள்ள சக்தி பரந்து விரிந்து இறைவனின் பெருமையை விளங்கச் செய்கிறது. இந்த விளக்கங்களெல்லாம் அறிவு பூர்வமாக அணுக முயலும் போது எழுவன.

 உணர்வு பூர்வமாக பார்க்கப்போனாலும் எப்படியெல்லாம் சிந்தனை போகிறது. இணையத்தில் படித்தக் கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி:

  ............................... ஆழ்வார்களைப் பரமாணு வாக்கியவர் பெரியாழ்வார். ஆழ்வார்கள் திருமாலைப் போற்றிப் பாடித் தமக்குப் பாதுகாப்பை யாசித்தார்கள். பெரியாழ்வாரோ தெய்வத்தின் மீதிருந்த அபரிமிதமான அன்பினால் அவனுக்கே பாதுகாப்பு கவசம் போடும் முகமாகப் 'பல்லாண்டு ' பாடி வைத்தார். இப்போது பிற ஆழ்வார்கள் கடுகு பெரியாழ்வார் மலை. பெரியாழ்வாரைக் கடுகாக்கி மன்னிக்கவும் பரமாணுவாக்கித் தான் மலையானாள் ஆண்டாள். பெரியாழ்வாரின் தெய்வத்தையே காதலித்து வலிந்து தொடர்ந்து மணம் புரிந்து வென்று காட்டியதில். ................................. 

 இப்படி பக்தர்கள் தம்மை, அத்யந்த பக்தியில் ”தான்” என்ற எண்ணத்தைச் சுருக்கிக் கொண்டு, கடுகு போல் ஆகுமளவும் அவன் அருளால் அவர்களின் பக்தியின் பெருமை மலையளவுக்கு உயர்ந்து விடுகிறது. அப்படிப்பட்ட பக்தியால் தான், பக்தர்களுக்கு வரும் மலை போன்ற துன்பம் கூட கடுகாகிப் போகிறது. 

 திரௌபதியின் அக்ஷயப் பாத்திரத்திலிருந்த ஒரே பருக்கை அன்னத்தை வாங்கிப் புசித்து கண்ணன், துர்வாசருக்கும் அவரது பெரும் சிஷ்ய கோடிகளுக்கும் விருந்துண்ட திருப்தியை ஏற்படுத்தி பாண்டவர்களுக்கு வரவிருந்த சாபத்திலிருந்து காப்பாற்றியது, மலை போன்ற துன்பத்தை கடுகாக்கியதற்கு ஒரு உதாரணம். 

 அந்த பரந்தாமனின் மாயை பல சமயங்களில் நம் அறிவை மங்கச் செய்து கடுகு போன்ற ஒன்றுமில்லாத விஷயத்தை மலை போல பெரிதாக்கி மன அமைதியை இழக்க வைக்கிறது. 

 உதாரணமாக லியோ டால்ஸ்டாயின் கதையொன்றில் சிறு குழந்தைகளின் விளையாட்டுச் சண்டை எப்படி பெரியவர்கள் அளவில் கலகமாக வளர்கிறது என்பதை படிக்கும் போது உணர்கிறோம். கலகத்தின் உச்சத்தில் ஒரு பெரியவர் வந்து சண்டைக்குக் காரணமான அக்குழந்தைகள் அதைப் பற்றிய நினைவே இன்றி தங்களை மறந்து மீண்டும் விளையாடிக் கொண்டிருப்பதைப் சுட்டிக் காட்டும் போது பெரியவர்கள் யாவரும் வெட்கிச் செல்கின்றனர்.

 இன்னொரு சிறியக் கதை. ஒரு முனிவர், காட்டில் போய்க் கொண்டிருந்த வேடனையும் வேடிச்சியையும் பார்த்து ’அப்பா பசிக்கு ஏதாவது கொடு’ என்று வேண்டினார். வேடிச்சி உடனே கீரை பறித்து வந்து சமைக்க ஆரம்பித்தாள். சமையல் தயாராவதற்கு முன்பே முனிவர் மோனத்தில் ஆழ்ந்து விட்டார். நேரம் கழிந்தது. முனிவரின் தவம் கலைவதாயில்லை. வேடனும் வேடிச்சியும் தம் வழியே சென்றனர். 

நாட்கள் மாதங்கள், வருடங்கள் என்று உருண்டோடின. காலப்போக்கில் அவரை மண் மூடியது. பின்னொரு நாளில் ஒரு அரசனும் அரசியும் போய்க் கொண்டிருந்தத் தேரின் குதிரைகள் அந்த மண் மேட்டைத் தாண்டிச் செல்ல மறுத்தன. கூடவே சென்ற ஆட்கள் மேட்டைக் கரைத்தனர். அடியிலிருந்த முனிவர் தவம் கலைந்து கண் திறந்தார். வணங்கி நின்ற அரசனையும் அரசியையும் பார்த்து “கீரை எங்கே?” என்று வினவினார். இருவரும் ஏதும் புரியாமல் விழித்தனர். 

 அவருடைய கணக்கிற்கு நிகழ்ச்சியின் தொடர்பு அப்படியே இருந்தது. அதே வேடனும் வேடிச்சியும் வேறொரு பிறவியில் முன்பு தடைபட்டுப்போன விருந்தோம்பலை பூர்த்தி செய்ய விதியால் வரவழைக்கப் பட்டிருந்தனர். மனிதரின் கணக்கில் பல ஆண்டுகள் என்பது அவருடைய மோனத்தில் சில கணங்களாக சிறுத்து விட்டிருந்தது. 

 ஆனால் மனிதர்களாகிய நாம் சில நிமிடங்களிலேயே பல வருட வாழ்க்கையை நம்முடைய கனவு அனுபவங்களில் வாழ்ந்து விடுகிறோம்!! இங்கே சில கணங்கள் என்பது பல வருடங்களாக நீடிக்கப்படுகிற விந்தையை காண்கிறோம். 

 இப்படி அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் எல்லாவற்றிலும் கடுகை மலையாக்கி, மலையை கடுகாக்கி அவன் விளையாடிக் கொண்டிருப்பதைக் காணும் போது கபீரின் கூற்றை யாரால் மறுக்க முடியும்?

 நம்கால கவிஞரையும் இந்த மலையும்- கடுகும் விட்டு வைக்கவில்லை. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ..................
மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் 
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம் 
துணிந்து விட்டால் எந்த சுமையும் தலையில் தாங்கலாம்
குணம்.... குணம்.. அது கோவிலாகலாம் 

கடுகு-மலையை வைத்து எனக்கு தோன்றியவற்றை சொல்லிவிட்டேன். உங்களுக்கு தோன்றுபவற்றையும் சொல்லுங்கள்.