கள் குடித்த ஒரு குரங்கை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் போக்கு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அடுத்து அதனுள் ஒரு பிசாசு புகுந்து கொண்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். இது இன்னும் அதிகப்படியான குழப்பம். அது போதாது என்று அதனை ஒரு தேளும் கொட்டி விட்டால் அந்த குரங்கின் நிலைமை எப்படி இருக்கும் ? இப்படித்தான் உலகத்தில் பெரும்பாலோரது போக்கும் காணப்படுகிறது என்று சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்.
மனிதனின் மனம் ஆசையென்னும் கள் குடித்து அறிவிழந்து தள்ளாடுகிறது. அந்த நேரத்தில் அகங்காரம் என்னும் பிசாசும் உள்ளே குடி புகுந்து கொள்கிறது. அந்நிலையில் அவனை பொறாமை என்னும் தேள் கடித்து வலியில் கண்மண் தெரியாமல் குதிக்க வைக்கிறது. அந்த நேரத்தில் என்ன நடக்கும் ?
.......
கவர் பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர்,
கிடந்து உழல அகப்பட்டீரே !
என்று பட்டினத்து அடிகள் கிண்டல் செய்வது போல மாயை விரித்த பலவிதமான ஆசை வலைகளில் நமக்கு நாமே துன்பத்தைத் தேடி அகப்பட்டுத் தவிக்கிறோம்.

கட்டுப்படுத்தப்படாத மனம் நம்மை மீண்டும் மீண்டும் மாயையில் கிடந்து உழல வைக்கிறது.
கபீர்தாஸரும் குரங்கு உதாரணத்தையே எடுத்துக் கொள்கிறார். அதை கட்டியாள வழியும் சொல்கிறார்.
कबीर मन मरकट भया, नेक न कहुं ठहराय ।
राम नाम बांधै बिना, जित भावै तित जाय ॥
வானரம் ஆனது மனது கபீரா, நில்லாது நிலைஒருக் கணமே
பிணைக்கும் ராம நாம மன்றி, தன்வழித் திரிந்து அலையுமே
ஒரு இடத்தில் கட்டி வைத்து முறையான பயிற்சி கொடுத்தால் குரங்கு வழிக்கு வந்துவிடும். மனமும் வழிக்கு வரும் என்பதை குறிக்கவே ராமநாம செபத்தை பிணைக்கும் கயிறாக உபதேசிக்கிறார் கபீர். இறைவனுடைய நாமசெபத்தில் மனதை விடாமல் நிறுத்தினால் அதனுடைய பிற ஆட்டங்களெல்லாம் கட்டுக்குள் வந்துவிடும்.
ஒரு குட்டிக் குரங்கு வழி தவறி அரண்மனை காவலாளர்களிடம் சிக்கிக் கொண்டது. அவர்கள் அதைப் பிடித்துக் கட்டி வைத்தனர். அதைக் கண்ட அரசன் தினமும் தான் போய்வரும் வழியில் கட்டி வைக்கச் சொன்னான். அவ்வழியாக போகும் போது தினமும் ஒரு கோலை எடுத்து அதன் தலையில் ஒரு அடி அடித்து பின்னர் அதற்கு தின்பதற்கு ஏதேனும் கொடுத்து விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டான். ஒரு நிலையில் கட்டி வைக்கப்பட்ட குரங்கு அரசனை தூரத்தில் கண்டதுமே அடிக்குப் பயந்து ஒளிய ஆரம்பித்தது. அதன் பரிதாபமான நிலையைக் கண்ட மந்திரி ஒருவர் ’காரணமின்றி ஜீவஹிம்சை செய்வது பாவம்’ என்று குரங்குக்காக பரிந்துரைத்தார்.
சரியென்று அதன் கட்டை அவிழ்த்து விட்டு அதற்கு சுதந்திரம் கொடுத்தான் அரசன்.
பழக்கத்தின் காரணமாகவும் தின்பதற்கு ஏதேனும் கிடைக்கும் என்பதாலும் அந்த குரங்கு (இப்போது குட்டி அல்ல) அரண்மனை வளாகத்திலே திரிந்தது. தினமும் அரசன் வரும் வழியிலே காத்திருந்து தனக்கு கொடுக்கப்பட்டதை தின்று வந்தது.
அதன் பயம் சிறிது சிறிதாக விலகி அவன் பின்னாலேயே தொடர்ந்து செல்ல ஆரம்பித்தது. பின்னர் அரசவை அரியணையிலும் ஏறி விளையாட ஆரம்பித்தது. அப்போதும் அரசன் அதை பற்றிக் கவலைப்படவில்லை. மற்றவர்களுக்கோ தர்ம சங்கடமாக இருந்தது. ஒரு நாள் அரசனின் மகுடத்தையே தள்ளிவிட்டு வேடிக்கைப் பார்த்தது. மந்திரி பொறுக்க முடியாமல் அதைப்பிடித்து கட்டிப்போட உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார்.
அரசனும் சிரித்துக் கொண்டே அதைப் பிடித்துக் கொண்டு போகும்படி சொன்னான். ஆனால் அதைப் பிடிப்பது அவ்வளவு சுலபமா என்ன ! அங்கிருந்த அனைவருக்கும் வெகுநேரம் பெரும் விளையாட்டு காட்டியது அந்த குரங்கு.
“பார்த்தீரா மந்திரியாரே. பயம் போய் விட்டால் நம் மனமும் இப்படித்தான் நம்மை ஆட்டி வைக்கிறது. முன்னர் ஒவ்வொரு முறை குரங்கை அடிக்கும் போதும் என் மனதை அதனில் உருவகப் படுத்தி அதை கட்டுக்குள் வைப்பதாக எண்ணி செய்தேன். அதே சமயம் அந்த ஜீவன் மீது பரிதாபம் கொண்டு தின்பதற்கு ஏதாவது கொடுத்தேன். பின்னர் தங்கள் ஆலோசனை பேரில் அதை அவிழ்த்து விட்டேன். இப்போது அதன் விளைவை நீங்களே பார்க்கிறீர்கள்.”
மந்திரிக்கு இப்போது அரசனின் செய்கைக்கான உள்நோக்கம் புரிந்தது.
பயம் நீங்கிய நிலையில் உள்ளே புகுந்து கொள்வது தான் விவேகானந்தர் குறிப்பிடும் பிசாசு. அதாவது ஆணவப்பிசாசு அல்லது அகப்பேய். அது மனிதனை தன் வழியே எங்கெங்கோ இழுத்துச் சென்று விடும்.
அகப்பேய் சித்தர் மனதை பெண்பேயாக பாவனை செய்து அவருடைய பாடல்களில் வரிக்கு வரி ’அகப்பேய்’ என்று விளிக்கிறார்.
பிறவித் தீர வென்றால்... அகப்பேய், பேதகம் பண்ணாதே
துறவியானவர்கள்.... அகப்பேய், சும்மா இருப்பார்கள்
ஆரலைந்தாலும்.... அகப்பேய் , நீ அலையாதேடி
ஊரலைந்தாலும்....அகப்பேய், நீ ஒன்றையும் நாடாதே
மனதின் பேயாட்டத்தை அமைதி படுத்த ஒன்றையும் நாடாது இருக்குமாறு உபதேசிக்கிறார் சித்தர் பெருமான்.
தன்னை சரணாகதிக்கு தயார் செய்து கொள்ளாதவன் இந்த குரங்கின் பிடியிலிருந்து விடுபட முடியாது. அகப்பேய் ஆட்டுவிக்கும் அளவும் சரணாகதி ருசிக்காது. ஆனால் வாயளவில் எல்லாம் புரிந்த மாதிரி பேசிக்கொண்டே கானல் நீர் போன்ற உலக வேட்கைகளை துரத்திக் கொண்டே இருப்போம் என்கிறார் திருமூலர்.
பெருக்கப் பிதற்றில் என் ? பேய்த்தேர் நினைந்து என் ?
விரித்த பொருட்கெல்லாம் வித்து ஆவது உள்ளம்,
பெருக்கில் பெருக்கும்; சுருக்கில் சுருக்கும்;
அருத்தம் அத்தனை; ஆய்ந்து கொள்வார்க்கே (2036)
(பேய்த்தேர் =கானல்நீர் போன்ற ; விரித்த பொருள் = விரிந்த பிரபஞ்சம்)
உலகம் நிலையற்றது` என்பதைக் கூறும் நூல்களைப் பலவாக எடுத்துச் சொல்லி, அவற்றின் பொருளையும் பலவாறாக விளக்கிப் பேசினாலும், `உலகம் கானல் போல்வது` என்பதைக் கல்வியளவிலும் கேள்வியளவிலும் உணர்ந்தாலும் அவை யெல்லாம் இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாவன அல்ல. ஏனெனில், நிலையாதவற்றின் மேல் அவாக்கொண்டு ஓடி அவற்றுள் முன்னர் ஒன்றைப் பற்றிக் கிடந்து, பின்பு அதனை விட்டு மற்றொன்றின் மேல் தாவி அதனைப் பற்றிக் கிடந்து இவ்வாறு முடிவின்றிச் செல்வது மனமே. அதனால் அஃது அவ்வாறு முடிவின்றி ஓட விட்டால், அது புலனுணர்வை முடிவின்றித் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும். மனத்தை ஓட விடாது நிறுத்திவிட்டால், புலன் உணர்வின் தோற்றமும் இல்லையாய் விடும். ஆகையால் மனத்தை யடக்குதலே இந்திரிய அடக்கத்திற்கு நேர்க் கருவியாகும்.` இந்திரியங்களை அடக்குமாறு எவ்வாறு` என ஆராய்பவர்க்கு அறிய வேண்டிய பொருளாயிருப்பது அவ்வளவே. (விளக்கம் நன்றி : thevaram.org)
மனம் சிவத்தைப் பற்றப் பற்ற உலகினைப் பற்றிய சிந்தனை சுருங்கி அது மெல்ல மெல்ல வழிக்கு வந்து விடும் என்பதையும் கபீரைப் போலவே சுட்டிக்காட்டுகிறார் திருமூலர்.
நடக்கின்ற நந்தியை நாடோறும் உன்னில்
படர்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிகொண்ட சிந்தை குறி வழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக் கோயிலாமே. (2039)
(நடக்கின்ற நந்தி =உயிர்களிலெல்லாம் பொருந்தி இயங்கும் சிவன்; நாடோறும்= நாள்தோறும் ;உன்னில்= தியானித்தால்; குறிவழி நோக்கல்= சிவனை எண்ணுதல் ; வடக்கொடு தெற்கு =வடதுருவத்தினின்று தென்துருவம் அடங்கிய நிலப்பகுதி அனைத்தும் வழிபாட்டிற்குரிய தலங்களே)
உயிர் செய்யும் செயல் யாவற்றிலும் தானும் உடனாய் நின்று செய்யும் சிவனை அறியாது அனைத்துச் செயல் களையும் தானே செய்வதாகக் கருதி மயங்குகின்ற உயிர் அம் மயக்கத்தினின்றும் நீங்கி அவனை இடைவிடாது உணர்ந்து நிற்பின், ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல அதனை விடுத்து அவனிடத்தே சென்று ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கிய நிலை ஒருவர்க்கு வாய்க்குமாயின், உலகில் உள்ள அனைத்துக் கோயில் களும் அவரது மனமாகிய அந்தக் கோயிலாகவே அமைந்துவிடும் (விளக்கம் நன்றி :thevaram.org)
இடைவிடாது உணர்ந்து நிற்பதற்கான சாதனமே நாம செபம். அதனால்தான் மகான் கபீர் நம்மை அதனைக் கொண்டு இறைவனுடன் பிணைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார். இல்லாவிட்டால் குரங்கு மீண்டும் மீண்டும் ஆப்பை பிடுங்கி சிக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு.
(இன்று குரு பூர்ணிமை. யாவருக்கும் குரு அருள் பெருகட்டும்)
குரு பூர்ணிமைக்கு ஆன்மீக குருக்களான திருமூலரில் இருந்து விவேகாநந்தர் வரைக்கும் எடுத்துச் சொல்லிய பாங்கிற்கு வாழ்த்துகள். அருமையான பதிவு.
ReplyDelete//பொறாமை என்னும் தேள் கடித்து வலியில் கண்மண் தெரியாமல் குதிக்க வைக்கிறது.//
இதைப் படிச்சப்புறமும் பொறாமையாவும் இருக்கு. :D
gi,
ReplyDeletewonderfull article.
this is one of the best article for nama japa.
2. mind control is not at all easy.
we surrender guru feet . he will take care. yogiramsuratkumar said -whatever you will do , you do for the sake of this begger. i will take care .
in vedanta - asked us to watch the mind as a object.
3. why you taking long time to write another article?
//3. why you taking long time to write another article? //
ReplyDeleteஎன்னிக்கோத் தான் முத்துக் கிடைக்கும், தினம் தினம் கிடைக்காது. அதுக்கெனத் தனி நாள், கணக்கு எல்லாம் இருக்கு. இந்த மாதிரி நேரம் எடுத்துக்கிறதாலேயே ஒவ்வொரு பதிவும் சிறப்பாகவே இட முடிகிறது. வாழ்த்துகள் மீண்டும். தீவிர உழைப்பின் வெற்றி இது.
எனக்கு ஊகிக்கிற சக்தி கொஞ்சம் கம்மி!
ReplyDeleteதலைப்பைப் பார்த்து விட்டு, அப்புறம் பதிவுக்குள், கள் குடித்த குரங்கைத் தேளும் கொட்டிவிட அதன் நிலைமை எப்படியிருக்கும் என்பதை படித்தவுடனேயே, எனக்கு வேறு ஒரு சம்பவம் தான் நினைவுக்கு வந்தது.
துக்ளக் பத்திரிகையை ஆரம்பிப்பதென முடிவு செய்து, சோ ராமசாமி அதைப் பற்றி உங்கள் கருத்தென்ன என்று சக நடிகர்கள் சிலரிடம் கேட்டுப் பதிவு செய்து, அதை முதல் இதழிலேயே வெளியிட்டிருந்தார். சிவாஜி கணேசனிடம் கேட்ட பொது, இந்த கள் குடித்த குரங்கு கதையைச் சொல்லி, அதைத் தேளும் கடித்தால் எப்படியிருக்குமோ, அதை மாதிரித்தான் உன் பத்திரிகையும் இருக்கும் என்று 'ஆசீர்வாதம்' செய்த சம்பவம் நினைவுக்கு வந்தபோது, இப்படி ஒரு நிலைமை வந்தால் நன்றாகத்தானே இருக்கும் என்று தான் தோன்றியது என்னவோ உண்மை!இப்படி சோவுக்கு உபதேசம் செய்த முற்றும் அறிந்த சிவாஜி, தானே ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்ததும், அதன் கொள்கை விளக்கமாக என்தமிழ் என் மக்கள் என்று ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டதும் தனிக் கதை!
வேடிக்கை ஒருபக்கம் இருக்க,
குரங்கு அங்கேயும் இங்கேயும் தாவுகிற மாதிரி, மனமும் நேரெதிரான இரு முரண்பாடுகளுக்கிடையில் சஞ்சரிப்பது, அதன் இயல்பு, அந்தப்படியே, உண்மையை அறிந்துகொள்கிறபடி தான், மனிதனுடைய பிறவி, வளர்ச்சி இருக்கிறது.
இந்த உதாரணத்தை விட, அவ்வளவு பெரிய யானை, அதன் துதிக்கையில் ஒரு சின்னச் சங்கிலி, அல்லது குச்சி, இப்படி எதையாவது கொடுத்து விட்டால், அது அதை வைத்துக் கொண்டே விளையாடிக் கொண்டு அடங்கி இருப்பதைப் போல, மனதிற்கு விளையாட எதைக் கொடுக்கிறோமோ, அதற்குத் தகுந்தாற்போலத் தான் விளைவுகளும் இருக்கும்!
சாத்வீகமான இயல்பு எட்டுகிற வரையில், அவஸ்தைகளை அனுபவிக்க வேண்டியது தான்!
வாங்க கீதாமேடம்.
ReplyDeleteரசித்து இரண்டு முறை பாராட்டியதற்கு இரண்டு நன்றி.
நல்வரவு பாலு சார்,
ReplyDelete// why you taking long time to write another article? //
இது உங்கள் ஆர்வத்தை காட்டுகிறது.மாதம் இரண்டு பதிவுகள் என்ற கணக்கில் கபீர் இடுகைகளை இட்டு வருகிறேன். இது வரை அவன் அருளால் நடந்து வந்திருக்கிறது.
பழைய இடுகைகளையும் படித்து கருத்து சொல்லவும்.
உற்சாகமூட்டும் தங்கள் ஆதரவுக்கு நன்றி
எப்போதும் போல கலக்கலான பதிவும்.
ReplyDeleteஆமாம், நாமஸ்மரணையில் திளைக்கப் பழகிட்டா வேற ஏதும் வேண்டியிருக்காது என்றே பல ஆசார்யர்களும் சொல்லியிருக்காங்க...
நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்
ReplyDeleteஇந்த உதாரணத்தை விட, அவ்வளவு பெரிய யானை, அதன் துதிக்கையில் ஒரு சின்னச் சங்கிலி, அல்லது குச்சி, இப்படி எதையாவது கொடுத்து விட்டால், அது அதை வைத்துக் கொண்டே விளையாடிக் கொண்டு அடங்கி இருப்பதைப் போல,....
மனதை (மத)யானைக்கு ஒப்பிட்டு திருமூலரும், அப்பர் சுவாமிகளும் இன்னும் பலரும் சொல்லியிருக்கிறார்கள். தாங்கள் சொல்லியிருப்பது அடங்கிய மனது என்ற வகையில் மிகப் பொருத்தமே.
தொடர்ந்து தரும் உற்சாகத்திற்கு நன்றி
பாராட்டுக்கு நன்றி மதுரையம்பதி
ReplyDelete// நாமஸ்மரணையில் திளைக்கப் பழகிட்டா வேற ஏதும் வேண்டியிருக்காது//
பழகிட்டா ???? அதிலே தானே பிரச்சனை. :))
கபீரன்பன் ஐயா
ReplyDeleteஅடியேனுக்கு ஒரு சந்தேகம்! பெரியோர்கள் தவறாக எடுத்துக் கொள்ளலீன்னா கேட்கிறேன்!
குரங்கைக் கட்டுப்படுத்துவது அவசியம் தான்! இல்லையென்றால் தறி கெட்டு விடும், ஆப்பசைத்து விடும்! உண்மை!
ஆனால் அந்தக் குரங்கு கட்டுப்படுத்தும் போது, பிணைக்கப்பட்டிருப்பதால் கட்டுக்குள் அடங்குகிறதே தவிர, அதன் நன்மையே என்று கருதி அடங்குவதில்லை! பிணைப்பு நீங்கினால் மறுபடியும் ஆட்டம் தலை தூக்கிக் கொள்ளும்!
அப்படி இருக்க, முதல் நிலைக் கட்டுப்பாடுக்காகப் போடப்படும் பிணைப்புகள்
1. எப்போது நீங்கும்?
2. இல்லை நீங்காது என்றென்றும் பிணைத்த வண்ணமே இருக்கணுமா?
3. பிணைப்பையும் தாண்டி, தன் இன்பத்திற்கே என்று குரங்கு உணர்வது எப்போது? எப்படி?
ராம நாமம் வெறுமனே பிணைக்கும் கயிறு என்பதை மனம் சற்றே ஒப்புக் கொள்ள மறுக்கிறது! :)
அடியேன் சொல்ல வருவது புரிந்திருக்கும்-ன்னு நினைக்கிறேன்! ஏதாச்சும் தவறாகச் சொல்லி இருந்தேன்-ன்னா மன்னியுங்கள்!
வாங்க கே.ஆர்.எஸ்.
ReplyDeleteஅருவருப்பு தரும் கம்பளிப் பூச்சியின் இயற்கை ஊர்ந்து செல்லுதல். அதுவே வண்ணத்துப்பூச்சியான பின் பறப்பது மட்டுமன்றி மனதுக்கு பிடித்தமானதும் ஆகி விடுகிறது.
இரண்டு நிலைக்கும் இடையே, தன்னை சுற்றித் தானே நூல் சுற்றிக்கொள்ளும் நிலை கூட்டுப்புழு. அங்கே நிகழும் மாயம் என்ன?
மனதின் முதல் நிலை குரங்கு புத்தி. நாமசெபத்திலே அது தன்னைச் சுற்றிக்கொண்டு அதனுள்ளே கிறங்கி அடையும் இறுதி மாற்றம் இறை நிலை.
பரிணாம வளர்ச்சியில் சுபாவங்கள் ஏற்றநிலை அடைவது இயற்கையின் நியதி. அதற்கு மனித மனமும் விதிவிலக்கல்ல.
ஒரு உதாரணத்தை விளக்க இன்னொரு உதாரணம் !!:))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//ஒரு உதாரணத்தை விளக்க இன்னொரு உதாரணம் !!:))//
ReplyDeleteஇரண்டாம் உதாரணம் சூப்பரு! :)
//அருவருப்பு தரும் கம்பளிப் பூச்சியின் இயற்கை ஊர்ந்து செல்லுதல்.//
இத, இத தான் எதிர்பார்த்தேன்! :)
ஆக பூச்சி நிலை என்பதும் இயற்கையானதே! வெறுக்கத்தக்கது அல்ல! அது தன்னைத் தானே, இராம நாமத்தால் நூல் சுற்றி நூல் சுற்றி, பட்டாம்பூச்சி ஆவதே அழகு!
குரங்கும், விதியே-ன்னு பிணைக்கப்பட்டிருக்கணும்-ன்னு இல்லாமல், இந்த ரெண்டாம் உதாரணம் நல்லா இருக்கு!
என் இராமனின் நாமம் வெறும் பிணைக்கும் கயிறு அல்ல! அணைக்கும் கயிறு! கம்பளிப் பூச்சியை பட்டாம் பூச்சியாக நூல் சுற்றி நூல் சுற்றி அணைக்கும் கயிறு! :)
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே!
சகஸ்ர நாம தத் துல்யம்
ராம நாம வராணனே!
பக்த கபீர் தாசர் திருவடிகளே சரணம்!
நன்றி கே.ஆர்.எஸ்
ReplyDelete///குரங்கும், விதியே-ன்னு பிணைக்கப்பட்டிருக்கணும்-ன்னு இல்லாமல், இந்த ரெண்டாம் உதாரணம் நல்லா இருக்கு!///
விருப்பமற்ற மனது நிர்பந்தத்தால் கட்டப்பட்டால் விதியேன்னுதான் கிடக்கணும். அதனுடைய புத்தியில் பெரும் மாற்றம் இராது.
பொதுவாக மையக் கருத்தை வலுப்படுத்துவதே கட்டுரைகளின் நோக்கம். அதனால் உதாரணங்களும் அதை அனுசரித்தே இருக்கும்.
”Don't put all the eggs in one basket”
என்பதையும் அறிவீர்களே :))
// இறைவனுடைய நாமசெபத்தில் மனதை விடாமல் நிறுத்தினால் அதனுடைய பிற ஆட்டங்களெல்லாம் கட்டுக்குள் வந்துவிடும்.//
ReplyDeleteநிலையிலா வாழ்வில் நிலைத்திருப்பது ராமனது திரு நாமமே
ராம் ஜெபன் க்யோன் சோட் தியா ? க்ரோத் ந சோடா ஜூட் ந சோடா சத்ய வசன் க்யோன் சோட் தியா ?
ராம நாமத்தை ஜெபிப்பதை ஏன் விட்டு விட்டாய் ? கோவத்தை விட வில்லை. பொய் பேசுவதை விடவில்லை. உண்மை பேசுவதை விட்டுவிட்டாயே
என கருத்துடன் அமைந்த கபீரின் பாடலை , இங்கே
எம்.எஸ். அம்மா பாடுவதை கேட்கலாம்.
http://www.youtube.com/watch?v=WGVpxfpqCbc
//ராம நாமம் வெறுமனே பிணைக்கும் கயிறு என்பதை மனம் சற்றே ஒப்புக் கொள்ள மறுக்கிறது! :) //
துவக்கத்தில் பிணைக்கிறது. பின் மனம் அதில் லயித்தபின் இணைக்கிறது. அதற்கும் பின்னே நம்மை
அணைக்கிறது. (hugs) அணைத்து, மனதிலுள்ள காம க்ரோத மத லோப மாத்ஸர்யங்களை எல்லாவற்றையுமே அணைக்கிறது. (extinguishes)
என்றுமே துணையாக நிற்கிறது. நம்மை ரக்ஷிக்கிறது.
ராம நாமம் ஜன்ம ரக்ஷக மந்த்ரம்.
// பிணைப்பையும் தாண்டி, தன் இன்பத்திற்கே என்று குரங்கு உணர்வது எப்போது? எப்படி?//
நான் உணர்ந்து விட்டேன். (எனக்கு இப்போ வயசு 68)
சுப்பு ரத்தினம்.
பின்னூட்டத்தில் உதாரணம் மிக அருமை!
ReplyDeleteவாழ்க!
*எப்போது நீங்கும்?*
ReplyDeleteகபாலிந் ! பிக்ஷோ மே ஹ்ருதய கபிம் அத்யந்த சபலம்
த்ருடம் பக்த்யா பத்வா சிவ பவததீநம் குரு விபோ !!
(சிவாநந்த லஹரி)
”கபாலியே , நீயோ ‘ஊரிடும் பிச்சை’ கொள்பவன்; என் மனக் குரங்கை உறுதியான பக்திக் கயிற்றால் கட்டி உனக்கு வசப்படுத்திக் கொள்.”
(எனக்கும் நல்லது; உனக்கும் பிழைப்பு நடக்கும்) என்பதுபோல்
வேண்டுவார் ஆதி சங்கரர்.
ஈசனின் பிடிக்குள் போனால் ஆட்டம் ஒடுங்கிப் பிணைப்பு நீங்கும் என்று தெரிகிறது.
தேவ்
நன்றி சுப்பு ரத்தினம் ஐயா
ReplyDelete//.... பின்னே நம்மை
அணைக்கிறது. (hugs) அணைத்து, மனதிலுள்ள காம க்ரோத மத லோப மாத்ஸர்யங்களை எல்லாவற்றையுமே அணைக்கிறது. (extinguishes)
என்றுமே துணையாக நிற்கிறது. நம்மை ரக்ஷிக்கிறது ///
மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
மனம் ஒரு குரங்கு. குரங்கின் தன்மை. ஒரு மரத்தில் தன் சிறு குட்டிகளுடன் கிளைகளில் ஆடிக்கொண்டு இருக்கும்.திடீரென்று அப்படியே மறு கிளைக்குத் தாவும். அப்ப்டித்தாவும் பொழுது குட்டிகளுக்கு சொல்லாது. ஆனால் தாய் குரங்கு தாவுவதைக் கண்ட குட்டிகள் மின்னல் வேகத்தில் தாவி தாயைப் பற்றிக் கொள்ளும். அப்படி எதாவது ஒரு குட்டி பற்றிக்கொள்ளாவிட்டால் அதை அந்தத் தாய் குரங்கு பிறகு தன்னுடன் சேர்த்துக்கொள்ளாது.அப்படித்தான் மனமும் அதுபாட்டுக்கு தாவிக்கொண்டே இருக்கும் நாம்தான் அதோடு செல்லவேண்டும் ஜபம் செய்து கொண்டு இருக்கும்போது ஒரு செகண்டில் 100 வித தாவல் இருக்கும். அதை ஸ்திரப் படுத்திக்கொண்டு மனத்தோடு ஒருகிணைந்தால் சன்மார்க்கம் கிடைக்கும்.
ReplyDeleteஅபூர்வமான கபீர் ,பட்டினத்தார், கருத்துக்கள் பதிந்த பதிவு நன்றி.
நல்வரவு திவா சார்,
ReplyDeleteவாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி
வருக தேவராஜன் ஐயா,
ReplyDelete//..என் மனக் குரங்கை உறுதியான பக்திக் கயிற்றால் கட்டி உனக்கு வசப்படுத்திக் கொள்....//
ஆதிசங்கரர் சிவனை குரங்காட்டி ஆக்கியும் மகிழ்ந்த அழகான-கட்டுரைக்கு பொருத்தமான- மேற்கோளை எடுத்துக் காட்டியதற்கு எல்லா வாசகர்கள் சார்பிலும் மிக்க நன்றி
தி.ரா.ச ஐயா வருக வருக.
ReplyDelete//அப்படித்தான் மனமும் அதுபாட்டுக்கு தாவிக்கொண்டே இருக்கும் நாம்தான் அதோடு செல்லவேண்டும் ஜபம் செய்து கொண்டு இருக்கும்போது ஒரு செகண்டில் 100 வித தாவல் இருக்கும்..//
’அதோடு செல்ல வேண்டும்’ என்பதை நான் புரிந்து கொண்டது: சாட்சியாக இருந்து அதை போகிற போக்கில் விட்டு வேடிக்கைப் பார்க்க வேண்டும்; அதனோடு involve ஆகக்கூடாது.
என்ன சரியா ?
மிகவும் சரி கபீரன்பன். சாக்ஷிபூதமாக இருக்கவேண்டும்.அதில் லயப்பட்டு விடக் கூடாது.வெம்புலியையும் அடக்கலாம், நீர்மேல்நடக்கலாம்...... ஆனால் மனத்தை ஒரு செகண்டு நிலை நிறுத்த முடியாது.
ReplyDelete// ஆனால் மனத்தை ஒரு செகண்டு நிலை நிறுத்த முடியாது.//
ReplyDeleteதி. ரா. ச சொல்வது நூற்றுக்கு 99.999999........................99 விழுக்காடு யதார்த்தமே.
माला तो कर् मे फिरै जीब् फिरै मुख् माहि
मनुवा तो दहु दिसि फिरै य तो सुमिरन् नाहि
மனதை ஒரு நிலைப்படுத்தாது, பத்து திசைகளிலும் திரிய அனுமதித்து வாய் உதடுகள் மட்டும் ராம் ஜெபம் செய்து, கைகள் ஜெபமாலை உருத்திராட்சத்தை
உருட்டிக்கொள்வது ஜெபம் அல்ல , ராம் ஸ்மரணை இல்லை ! என்பார் கபீர் .
கஷ்டம்தான் . இக்கட்டான சூழ்னிலை. மனதை ஒருனிலைப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் முடியவில்லை.
நம்மால் முடியாது போ என்று சொல்லி விடுவதா என்ன ?
இருப்பினும் ஒரு வார்த்தை. முடியாது என்பதை மனதில் கொண்டோமானால்,
என்றுமே எப்போழுதுமே முடியாது.
முடியும் என்று முதற்கண் நினைக்க வேண்டும் .
யத் மாவம் தத் பவதி என்கிறது வாக்கியம்.
எதை நினைக்கிறோமே அது ஆக் ஆகிறோம்.
மனதை நம் ஒவ்வொருவராலும் ஒரு நிலைப்படுத்த இயலும் என முதற்கண் நம்புவோம்.
இருப்பினும் ' அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ' என்றிருப்பதால் அவன் அருள் கடாக்ஷம் தேவை.
அதற்கு முதற்படி, ஸத்சங்கம். அதன் வழியே அஸத் என்ன என்பது என்று புலப்பட்டு அதிலிருந்து விடுபட வழி பிறக்கும்.
' ஸத் ' தில் மனம் தெளிவு பெற ஸத்தில் மனத்தை இருத்துவது ஸாத்தியம்.
ஸாதனம் ஒன்று வேண்டுமே !
அது தான்
கபீரன்பன் வலைப்பதிவு .
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
http://pureaanmeekam.blogspot.com
சூரி சார் நீங்கள் சொல்வது சரிதான். நானவது கொஞ்சம் மரியதையோடு சொன்னேன். ஆனால் தியகரஜஸ்வாமிகளோ மிகவும் கடுமையா சாடுகிறார். "மனசு நில்ப சக்திலேகபோதே மதுர கண்ட பூஜ எமி வினுவுரா மனசா"என்ற ஆபோகி ராக கீர்த்தனையில் மனசை ஒரு நிலையில் வைக்கமுடியாமல் போனால் மணி அடித்து பூஜை செய்து என்ன பயன் என்று தன்னுடைய மனசையே கேட்டுக்கொள்கிறார். அவருக்கே அப்படி என்றால் நான் எம்மாத்திரம்
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDelete//மனதின் முதல் நிலை குரங்கு புத்தி. நாமசெபத்திலே அது தன்னைச் சுற்றிக்கொண்டு அதனுள்ளே கிறங்கி அடையும் இறுதி மாற்றம் இறை நிலை.//
அழகாகச் சொன்னீர்கள். நாமம் சொல்லி நன்மை பெறுவோம்.
"ஒரு இடத்தில் கட்டி வைத்து முறையான பயிற்சி கொடுத்தால் குரங்கு வழிக்கு வந்துவிடும். மனமும் வழிக்கு வரும் என்பதை குறிக்கவே ராமநாம செபத்தை பிணைக்கும் கயிறாக உபதேசிக்கிறார் கபீர். இறைவனுடைய நாமசெபத்தில் மனதை விடாமல் நிறுத்தினால் அதனுடைய பிற ஆட்டங்களெல்லாம் கட்டுக்குள் வந்துவிடும்."..
ReplyDeleteஉண்மைதான்... மந்திரோபசத்திற்காக ஏங்கி நின்ற யோகிராம் சுரத்குமாருக்கு அவரது குருநாதர். அய்யா பாப்பா ராமதாஸ் தந்தது ராம நாமம் தானே... அதைத்தானே.. அவரும் நமக்காக விட்டுச்சென்றுள்ளார்.....