Saturday, July 18, 2009

அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம்

கல்லூரிகள் திறக்கும் நேரம் இது. பெரும்பாலான புது மாணவர்களுக்கு உற்சாகத்தை விட கவலை அதிகம். அதுவும் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டியவர்கள் கவலையெல்லாம் சந்திக்கப் போகும் ராகிங் பற்றியதே என்றால் மிகையாகாது. குருக்ஷேத்ராவில் பொறியியல் படிப்பிற்காக சேர்ந்த மாணவொருவன் ஒரே வாரத்தில் கல்லூரியை விட்டே ஓடி வந்து விட்டான். மீண்டும் அங்கு போவதற்கு மறுத்து விட்டான். பல நாட்கள் அவன் பட்ட துன்பமும் தாய் தந்தையருக்கு ஏற்பட்ட துன்பமும் சொல்லி முடியாது.

ஒருவனைச் சுற்றி பலபேர் கூடி பாட்டுப் பாடச் சொல்வது ஆடச் சொல்வது எல்லாம் ராகிங்-ல் சர்வசாதாரணம். அதில் தரக்குறைவான நடத்தைகளும் பேச்சுகளும் புது மாணவனை புண்படுத்தும் வகையிலேயே இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் நிஜ வாழ்க்கையில் திரைப்படம் போலே அடித்து வீழ்த்தி தப்பிக்க முடியாது போகின்றதே :(

நம் ஒவ்வொருவரை சுற்றியும் தினமும் ஐந்து பேர். தூங்கும் நேரம் தவிர எந்நேரமும் நம்மை ஆட்டிவைக்கிறார்கள் அவர்கள் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் போது புது மாணவனைப் போலவே எப்போதடா விடுதலை என்று ஏங்கிப் போகிறது மனது. கபீர் இந்நிலையைப் பற்றி சொல்வதைக் காண்போம்.

कबीर बैरी सबल है, एक जीव रिपु पांच ।
अपने-अपने स्वाद को, बहुत नचावै नाच ॥


வைரியின் பலமதிகம் கபீரா, ஒன்றுக் கெதி்ராய் அஞ்சுமே
தத்தம் போக்கில்ஆட்டுமே, அரங்கில் பல்வகைக் கூத்துமே


(வைரி=எதிரி ; ஒன்று= ஒரு சீவன்; அஞ்சுமே= ஐந்து புலன்களுமே; அரங்கு என்பது உலகத்தை குறிக்கவந்தது)

ஐம்புலன்கள் என்ற எதிரிகள் தத்தம் விருப்பத்திற்கேற்ப மனிதனை ஆட்டிப் படைக்கின்ற நிலையை இந்த ஈரடியில் சித்தரித்திருக்கிறார் கபீர்தாஸ்.

புத்திக்கு நல்லன எவை என்பது தெரிந்தும் அவற்றைப் பற்றிக் கொள்ள முடியாமல் புலன்வழியே அல்லாதனவற்றில் விருப்பு கொண்டு தினங்கள் கழியும் போது குற்ற உணர்ச்சி பலமாக பிடித்தாட்டுகிறது. அதனாலேயே பல நேரங்களில் மன அழுத்தம் அதிகமாகிவிடுகிறது. கண்ணதாசன் போலொரு கவிஞனுக்கு பழி உணர்ச்சியும் அதிகமாகி படைத்தவனை தண்டிக்கவும் சொல்கிறது.
............
”அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவிட்டுப் பார்த்திருப்பேன்.
படுவான், துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
.......”

கடவுளே ஆனாலும் புலனின்பங்களின் இழுப்பிலிருந்து தப்புவது எளிதல்ல என்னும் கற்பனை சராசரி மனிதனுக்கு ஆறுதல் தந்தாலும் பிரச்சனைக்கு விடையாவதில்லை. அதற்கு ஞானிகளின் வழியையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது

ஞானிகளும் புலன்களின் சக்தியை குறைத்து மதிப்பிடவில்லை. அவைகளின் பலத்தை யானைகளின் பலத்திற்கு ஒப்பிடுகின்றனர். மாணிக்க வாசக பெருமான் சொல்வது

ஆனை வெம்போரில் குறுந்தூறு எனப்புல
னால் அலைப்பு உண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினை
யேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமு
தத்தையும் ஒத்
தூனையும் என்பினையும் உருக்கா நின்ற
ஒண்மையனே


யானை நடந்தாலே அடியில் புற்களும் புதர்களும் நசுங்கும். அவைகளிடையே போர் ஏற்பட்டால் சிறிய புதரின் கதி எப்படியிருக்கும்? அப்படி ஒரு புதர் சிக்குண்டு அவதிப் படுவது போலே புலன்களுக்கு நடுவில் சிக்கித்தவிக்கும் என்னை விட்டு விடுவாயோ என்று கலங்குகிறார் மணிவாசகர்.

யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடும். அப்பொழுது ஏற்படும் அபாயத்தைக் காட்டிலும் மதம் பிடித்த -கூட்டத்தை விட்டு ஒதுங்கிய -ஒற்றை யானை மிகவும் அபாயகரமானது என்பர். அதனாலோ என்னவோ கபீர் ஒற்றை யானையாக புலன்கள் வசப்பட்ட மனதை இன்னுமொரு ஈரடியில் சித்தரிக்கிறார்.

कबीर मनहि गयंद है, आंकुस दे दे राखु ।
विष की बेली परिहरो , अमृत का फल चाखु ॥


கரியதன் பலமுண்டு மனதிற்கு, கைகொள் கபீரா ஒரு தோத்திரம்
கரியதை ஒழிக்க வழியுண்டு, கைகொள் அமிழ்தமாம் தோத்திரம்


[கரியதன் பலம் =யானையின் பலம்; தோத்திரம் = 1)அங்குசம் :2) வழுத்துதல் ,போற்றுதல்; கரி்யதை =நஞ்சுடைய மனதை]

தோத்திரம் என்பதற்கு அங்குசம் என்று இன்னொரு பொருளும் உண்டு. வழிக்கு கொண்டு வரத் தேவைப்படுவது யானைக்கும் ஒரு தோத்திரம் மனதுக்கும் ஒரு தோத்திரம் !

அங்குசத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்பட்டு யானைக்கு சுதந்திர மனப்பான்மை போய் அடிமை மனப்பான்மை வந்து விடுகிறது. நம்முடைய மனமும் இறைவன் நாமத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்படும் பொழுது சரணாகதி அடைந்து அமைதி படுகிறது. அதை “அங்குஸ் தே தே ராகு” என்கிறார் கபீர். அவர் மட்டுமல்ல திருமந்திரமும் அதையே உபதேசிக்கிறது.

அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத்து அடக்கவல்லார்கட்கே
அஞ்சு ஆதி ஆதி அகம்புகல் ஆமே.
(977)

உடல் என்ற காட்டுக்குள் ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகள் வாழ்கின்றன. அஞ்சு எழுத்தாகிய ’நமசிவாய’ வை அங்குசம் ஆக்கி ஐம்புலன்களையும் ஒரு சேர அடக்க வல்லவர்களுக்கு அந்த ஐந்திற்கும் ஆதியாகி நிற்கும் ஆதிமுதல்வன் வீடு சேரலாம்.

நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடுஞ்சுடர்
நஞ்செம் பிரான்என்று நாதனை நாள்தோறும்
துஞ்சும் அளவும் தொழுமின்; தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே
( )

[நஞ்செம்பிரான் =நம்+செம்மை+பிரான் ; அஞ்சற்று விட்டது = சங்கிலி அறுபட்டொழிந்த]

அணையா விளக்காய் எல்லா உள்ளங்களிலும் நிறைந்து ஒளிவிடும் செம்பிரானை உணர்ந்து நாள்தோறும் உறங்கச் செல்லும் வரை வழிபடுங்கள். அவனை அவ்வாறு வழிபடாது புறக்கணித்தால் ஐம்பொறிகளும் கட்டிய சங்கிலி அறுபட்டொழிந்த யானை போன்று கட்டுக்கடங்காமல் போய்விடும்.

துஞ்சுமளவும் தொழுமின் என்பதை இறக்கும் வரையிலும் என்ற பொருளிலும் கொள்ளலாம். அப்போது வாழ்நாள் முழுதும் இடைவிடாமல் சிந்தித்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
(picture courtesy : Indian Holidy dot com)

சென்ற இடுகையின் பின்னூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்ட மாதிரி அமைதியான யானை அடங்கிய மனதுக்கு அழகான உதாரணம். தன்னைச் சுற்றி எவ்வளவு தாரை தம்பட்டைகள், அடித்து கொண்டாட்டங்கள் நடத்தினாலும் அமைதி குலையாது மணிக்கணக்காக கோவில் உற்சவங்களில் பங்கு கொள்ளும் பக்குவத்தை காண்கையில் பெரும் ஆச்சரியம் ஏற்படும். பலமுறை ஞானிகளின் மனமும் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்ததுண்டு. தங்களைச் சுற்றி எது நடந்தாலும் அதில் அவர்கள் சம்பந்தப்படாதவர்களாகவே இருப்பார்கள்.

அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இளைஞர் பகவான் ரமணரை அண்ணாமலையார் கோவில் யானையுடன் சேர்த்து எடுத்திருந்த ஒரு புகைப்படத்தை தபால் மூலம் அனுப்பி வைத்தார். அதன் பின் பக்கத்தில் “சரீரத்தை அறியாத பெரிய ஆத்மாவும் ஆத்மாவை அறியாத பெரிய சரீரமும் ஒரே இடத்தில்” என்பதாக குறிப்பும் எழுதியிருந்தார்.

அதற்கு என்ன அர்த்தம் என்று நாகம்மாள் கேட்டதற்கு பகவான் சொன்ன பதில்:

“எவ்வளவு ஆகாரம் கொடுத்தாலும் போதாது என்று பிளிறிக் கொண்டே இருப்பதாலோ என்னவோ அதை ஆத்மாவை அறியாத பெரிய சரீரமென்று குறிப்பிட்டிருக்கிறார். நான் எப்போதும் ஆடி அசைந்து மெதுவாக நடந்து எப்படி எப்படியோ நிற்கிறேன் இல்லையா! அதனாலோ என்னவோ நான் சரீரத்தை அறியாத ஆத்மாவாம். அதுதான் அவர் அபிப்பிராயமாக இருக்கலாம்”
.

பூரண ஞானிக்கு தேகபாவனை இருப்பதில்லை என்பதை உயர்த்தி இளைஞர் குறிப்பு எழுதிய போதும் அதை வெகு நயமாக வேடிக்கையாக திசை திருப்பியது ரமணரின் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு.

இன்னொரு முறை குஞ்சு சுவாமிகள் பகவானின் தேக நடுக்கத்தையும் கோலூன்றும் அவசியமும் நடுவயதிலேயே வந்து விட்டது குறிப்பிட்டு காரணம் வினவிய போது, ”பெரிய யானையை சின்ன குடிசைக்குள் கட்டி வைத்தால் குடிசையின் கதி என்னவாகும்? இதுவும் அவ்வளவுதான் !” என்று பதில் கூறினாராம்.

மனித உடல் என்னும் சிறு கூட்டிலே அடைப்பட்டிருக்கும் நிலையை விஸ்வத்தை தன்னுள் உணர்ந்த மகான் எவ்வளவு எளிமையாக விளக்கி விட்டார் !!

ஆன்மீகத்திலிருந்து யானையை பிரிக்கமுடியாது. ஆனைமுகத்தான் முதற்கடவுள். ஆன்மீக இலக்கியத்திலும் யானைக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு.

இரண்டாவது ஈரடிக்கு மாற்று:
குஞ்சரம் போலாச்சு மனசு, கபீரா அங்குசம் வீசு
நஞ்ச துவும்போ யாச்சு, நாமா மிர்தம் வந்தாச்சு

Wednesday, July 08, 2009

ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கு

தலைப்பைப் படித்ததுமே இடுகை எதைப்பற்றியது என்று பலரும் ஊகித்து விட்டிருப்பார்கள் :))

கள் குடித்த ஒரு குரங்கை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் போக்கு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அடுத்து அதனுள் ஒரு பிசாசு புகுந்து கொண்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். இது இன்னும் அதிகப்படியான குழப்பம். அது போதாது என்று அதனை ஒரு தேளும் கொட்டி விட்டால் அந்த குரங்கின் நிலைமை எப்படி இருக்கும் ? இப்படித்தான் உலகத்தில் பெரும்பாலோரது போக்கும் காணப்படுகிறது என்று சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்.

மனிதனின் மனம் ஆசையென்னும் கள் குடித்து அறிவிழந்து தள்ளாடுகிறது. அந்த நேரத்தில் அகங்காரம் என்னும் பிசாசும் உள்ளே குடி புகுந்து கொள்கிறது. அந்நிலையில் அவனை பொறாமை என்னும் தேள் கடித்து வலியில் கண்மண் தெரியாமல் குதிக்க வைக்கிறது. அந்த நேரத்தில் என்ன நடக்கும் ?
.......
கவர் பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர்,
கிடந்து உழல அகப்பட்டீரே
!

என்று பட்டினத்து அடிகள் கிண்டல் செய்வது போல மாயை விரித்த பலவிதமான ஆசை வலைகளில் நமக்கு நாமே துன்பத்தைத் தேடி அகப்பட்டுத் தவிக்கிறோம்.


கட்டுப்படுத்தப்படாத மனம் நம்மை மீண்டும் மீண்டும் மாயையில் கிடந்து உழல வைக்கிறது.

கபீர்தாஸரும் குரங்கு உதாரணத்தையே எடுத்துக் கொள்கிறார். அதை கட்டியாள வழியும் சொல்கிறார்.

कबीर मन मरकट भया, नेक न कहुं ठहराय ।
राम नाम बांधै बिना, जित भावै तित जाय ॥


வானரம் ஆனது மனது கபீரா, நில்லாது நிலைஒருக் கணமே
பிணைக்கும் ராம நாம மன்றி, தன்வழித் திரிந்து அலையுமே


ஒரு இடத்தில் கட்டி வைத்து முறையான பயிற்சி கொடுத்தால் குரங்கு வழிக்கு வந்துவிடும். மனமும் வழிக்கு வரும் என்பதை குறிக்கவே ராமநாம செபத்தை பிணைக்கும் கயிறாக உபதேசிக்கிறார் கபீர். இறைவனுடைய நாமசெபத்தில் மனதை விடாமல் நிறுத்தினால் அதனுடைய பிற ஆட்டங்களெல்லாம் கட்டுக்குள் வந்துவிடும்.

ஒரு குட்டிக் குரங்கு வழி தவறி அரண்மனை காவலாளர்களிடம் சிக்கிக் கொண்டது. அவர்கள் அதைப் பிடித்துக் கட்டி வைத்தனர். அதைக் கண்ட அரசன் தினமும் தான் போய்வரும் வழியில் கட்டி வைக்கச் சொன்னான். அவ்வழியாக போகும் போது தினமும் ஒரு கோலை எடுத்து அதன் தலையில் ஒரு அடி அடித்து பின்னர் அதற்கு தின்பதற்கு ஏதேனும் கொடுத்து விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டான். ஒரு நிலையில் கட்டி வைக்கப்பட்ட குரங்கு அரசனை தூரத்தில் கண்டதுமே அடிக்குப் பயந்து ஒளிய ஆரம்பித்தது. அதன் பரிதாபமான நிலையைக் கண்ட மந்திரி ஒருவர் ’காரணமின்றி ஜீவஹிம்சை செய்வது பாவம்’ என்று குரங்குக்காக பரிந்துரைத்தார்.

சரியென்று அதன் கட்டை அவிழ்த்து விட்டு அதற்கு சுதந்திரம் கொடுத்தான் அரசன்.

பழக்கத்தின் காரணமாகவும் தின்பதற்கு ஏதேனும் கிடைக்கும் என்பதாலும் அந்த குரங்கு (இப்போது குட்டி அல்ல) அரண்மனை வளாகத்திலே திரிந்தது. தினமும் அரசன் வரும் வழியிலே காத்திருந்து தனக்கு கொடுக்கப்பட்டதை தின்று வந்தது.

அதன் பயம் சிறிது சிறிதாக விலகி அவன் பின்னாலேயே தொடர்ந்து செல்ல ஆரம்பித்தது. பின்னர் அரசவை அரியணையிலும் ஏறி விளையாட ஆரம்பித்தது. அப்போதும் அரசன் அதை பற்றிக் கவலைப்படவில்லை. மற்றவர்களுக்கோ தர்ம சங்கடமாக இருந்தது. ஒரு நாள் அரசனின் மகுடத்தையே தள்ளிவிட்டு வேடிக்கைப் பார்த்தது. மந்திரி பொறுக்க முடியாமல் அதைப்பிடித்து கட்டிப்போட உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார்.

அரசனும் சிரித்துக் கொண்டே அதைப் பிடித்துக் கொண்டு போகும்படி சொன்னான். ஆனால் அதைப் பிடிப்பது அவ்வளவு சுலபமா என்ன ! அங்கிருந்த அனைவருக்கும் வெகுநேரம் பெரும் விளையாட்டு காட்டியது அந்த குரங்கு.

“பார்த்தீரா மந்திரியாரே. பயம் போய் விட்டால் நம் மனமும் இப்படித்தான் நம்மை ஆட்டி வைக்கிறது. முன்னர் ஒவ்வொரு முறை குரங்கை அடிக்கும் போதும் என் மனதை அதனில் உருவகப் படுத்தி அதை கட்டுக்குள் வைப்பதாக எண்ணி செய்தேன். அதே சமயம் அந்த ஜீவன் மீது பரிதாபம் கொண்டு தின்பதற்கு ஏதாவது கொடுத்தேன். பின்னர் தங்கள் ஆலோசனை பேரில் அதை அவிழ்த்து விட்டேன். இப்போது அதன் விளைவை நீங்களே பார்க்கிறீர்கள்.”

மந்திரிக்கு இப்போது அரசனின் செய்கைக்கான உள்நோக்கம் புரிந்தது.

பயம் நீங்கிய நிலையில் உள்ளே புகுந்து கொள்வது தான் விவேகானந்தர் குறிப்பிடும் பிசாசு. அதாவது ஆணவப்பிசாசு அல்லது அகப்பேய். அது மனிதனை தன் வழியே எங்கெங்கோ இழுத்துச் சென்று விடும்.

அகப்பேய் சித்தர் மனதை பெண்பேயாக பாவனை செய்து அவருடைய பாடல்களில் வரிக்கு வரி ’அகப்பேய்’ என்று விளிக்கிறார்.

பிறவித் தீர வென்றால்... அகப்பேய், பேதகம் பண்ணாதே
துறவியானவர்கள்.... அகப்பேய், சும்மா இருப்பார்கள்

ஆரலைந்தாலும்.... அகப்பேய் , நீ அலையாதேடி
ஊரலைந்தாலும்....அகப்பேய், நீ ஒன்றையும் நாடாதே


மனதின் பேயாட்டத்தை அமைதி படுத்த ஒன்றையும் நாடாது இருக்குமாறு உபதேசிக்கிறார் சித்தர் பெருமான்.

தன்னை சரணாகதிக்கு தயார் செய்து கொள்ளாதவன் இந்த குரங்கின் பிடியிலிருந்து விடுபட முடியாது. அகப்பேய் ஆட்டுவிக்கும் அளவும் சரணாகதி ருசிக்காது. ஆனால் வாயளவில் எல்லாம் புரிந்த மாதிரி பேசிக்கொண்டே கானல் நீர் போன்ற உலக வேட்கைகளை துரத்திக் கொண்டே இருப்போம் என்கிறார் திருமூலர்.

பெருக்கப் பிதற்றில் என் ? பேய்த்தேர் நினைந்து என் ?
விரித்த பொருட்கெல்லாம் வித்து ஆவது உள்ளம்,
பெருக்கில் பெருக்கும்; சுருக்கில் சுருக்கும்;
அருத்தம் அத்தனை; ஆய்ந்து கொள்வார்க்கே (2036)


(பேய்த்தேர் =கானல்நீர் போன்ற ; விரித்த பொருள் = விரிந்த பிரபஞ்சம்)


உலகம் நிலையற்றது` என்பதைக் கூறும் நூல்களைப் பலவாக எடுத்துச் சொல்லி, அவற்றின் பொருளையும் பலவாறாக விளக்கிப் பேசினாலும், `உலகம் கானல் போல்வது` என்பதைக் கல்வியளவிலும் கேள்வியளவிலும் உணர்ந்தாலும் அவை யெல்லாம் இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாவன அல்ல. ஏனெனில், நிலையாதவற்றின் மேல் அவாக்கொண்டு ஓடி அவற்றுள் முன்னர் ஒன்றைப் பற்றிக் கிடந்து, பின்பு அதனை விட்டு மற்றொன்றின் மேல் தாவி அதனைப் பற்றிக் கிடந்து இவ்வாறு முடிவின்றிச் செல்வது மனமே. அதனால் அஃது அவ்வாறு முடிவின்றி ஓட விட்டால், அது புலனுணர்வை முடிவின்றித் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும். மனத்தை ஓட விடாது நிறுத்திவிட்டால், புலன் உணர்வின் தோற்றமும் இல்லையாய் விடும். ஆகையால் மனத்தை யடக்குதலே இந்திரிய அடக்கத்திற்கு நேர்க் கருவியாகும்.` இந்திரியங்களை அடக்குமாறு எவ்வாறு` என ஆராய்பவர்க்கு அறிய வேண்டிய பொருளாயிருப்பது அவ்வளவே.
(விளக்கம் நன்றி : thevaram.org)

மனம் சிவத்தைப் பற்றப் பற்ற உலகினைப் பற்றிய சிந்தனை சுருங்கி அது மெல்ல மெல்ல வழிக்கு வந்து விடும் என்பதையும் கபீரைப் போலவே சுட்டிக்காட்டுகிறார் திருமூலர்.

நடக்கின்ற நந்தியை நாடோறும் உன்னில்
படர்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிகொண்ட சிந்தை குறி வழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக் கோயிலாமே. (2039)


(நடக்கின்ற நந்தி =உயிர்களிலெல்லாம் பொருந்தி இயங்கும் சிவன்; நாடோறும்= நாள்தோறும் ;உன்னில்= தியானித்தால்; குறிவழி நோக்கல்= சிவனை எண்ணுதல் ; வடக்கொடு தெற்கு =வடதுருவத்தினின்று தென்துருவம் அடங்கிய நிலப்பகுதி அனைத்தும் வழிபாட்டிற்குரிய தலங்களே)

உயிர் செய்யும் செயல் யாவற்றிலும் தானும் உடனாய் நின்று செய்யும் சிவனை அறியாது அனைத்துச் செயல் களையும் தானே செய்வதாகக் கருதி மயங்குகின்ற உயிர் அம் மயக்கத்தினின்றும் நீங்கி அவனை இடைவிடாது உணர்ந்து நிற்பின், ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல அதனை விடுத்து அவனிடத்தே சென்று ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கிய நிலை ஒருவர்க்கு வாய்க்குமாயின், உலகில் உள்ள அனைத்துக் கோயில் களும் அவரது மனமாகிய அந்தக் கோயிலாகவே அமைந்துவிடும் (விளக்கம் நன்றி :thevaram.org)

இடைவிடாது உணர்ந்து நிற்பதற்கான சாதனமே நாம செபம். அதனால்தான் மகான் கபீர் நம்மை அதனைக் கொண்டு இறைவனுடன் பிணைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார். இல்லாவிட்டால் குரங்கு மீண்டும் மீண்டும் ஆப்பை பிடுங்கி சிக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு.

(இன்று குரு பூர்ணிமை. யாவருக்கும் குரு அருள் பெருகட்டும்)