Monday, March 28, 2011

கோட்டான் அறியுமோ மார்த்தாண்டன் மகிமை ?

(ஆவுடையக்காள் தொடர்ச்சி...4.)

மனதிற்கு உபதேசம் செய்வது உலக மக்களுக்கு உபதேசம் செய்வதற்கான ஒரு யுக்தி. ஆகையால் பல ஆன்றோர்கள் பாடல்களை மனதிற்கு உபதேசம் செய்வது போல அமைத்துத் தந்திருக்கிறார்கள். அவ்வகையில் தன்யாசி ராகத்தில் ஆவுடையக்காள் இயற்றிய ஒரு பாடலைக் காண்போம்.

பல்லவி
அவித்தை வசத்தை அடையாதே மனமே
ஆனந்தாப்தியில் அமர்ந்திராய் மனமே


அனுபல்லவி

கொஞ்சமாய் ஒரு வித்தை படித்தால்
பஞ்சாஸத் கோடி விஸ்தீர்ண மண்டலத்தில்
மிஞ்சின பேருண்டோ என்பார்
கொஞ்சியே கர்வத்தை அடைந்து கொக்கரிக்கும், மனமே


சரணம்
பக்த ஜனங்களான பேர்கள், மனமே
உத்தம சுலோகனை கீர்த்தனம் செய்தால்
கத்துகிறாளென்று சொல்லுவார்
ஸர்வகாலமும் காது கேட்கப்படாமல் கரிக்கும் ( அவித்தை)

ஸாதுக்கள் கதையைக் கேட்க, மனமே
சிரத்தை உள்ளவன் போலே வந்து தலையாட்டி கேட்கும்
வாதுக்காகிலும் இங்கே வருவார்
மகத்தானத் தர்க்கத்தால் வாய் மூட அடிக்கும் (அவித்தை)

அஞ்ஞானமானதோர் விருக்ஷம் மனமே, அதில்
அனுதினமும் காம குரோத லோப மோகங்கள் தளிர்க்கும்
ஞானமாகிற கத்தியாலே அதை வேரோடு வெட்டி
வெங்கடேசுவரரைச் சேராய் ( அவித்தை)


அவித்தையின் லட்சணத்தை சொல்வதன் மூலம் அஞ்ஞானிகளின் போக்கையும் படம் பிடிக்கிறார் அக்காள். சத்சங்கங்களுக்குள் வந்து தம்முடைய பாண்டித்தியத்தை தர்க்க வாதங்கள் மூலம் காட்டிக் கொள்ள முற்படுவோர் பலர்.

இறைவனுடைய புகழ் பாடுகின்ற இடத்தில் சுருதி, லயம், குரல் வளம் போன்ற இசை லட்சணங்களையே பிரதானமாய் வைத்து பாடத் தெரியாதவர்களை ’கத்துகிறாள்’ என்று குறைசொல்வதும் ஒருவகையில் பாண்டித்திய கர்வத்தையே குறிக்கும். தங்களை மிஞ்சிய பேர் கிடையாது என்று கொக்கரிக்கும் மனது உடையவர்கள் அவர்கள்.

அக்காள் சொல்வது போல் அனுதினமும் அவர்களுள் அஞ்ஞானம் விதவிதமாக துளிர்விட்டு பெரிய மரம் போல் வேர் விடுகிறது.

அவர்களுக்கு ஞானிகளின் உபதேசம் மனதில் ஏற்புடையதாகாது. அவர்களிடம் ஞானிகளின் பெருமைகளைப் பற்றி எடுத்துக் கூறினாலும் பயன் இருக்காது. உள்ளத்தில் அவ்வளவு இருட்டு. சகமனிதரை எடை போடுவது போலவே அவர்களையும் எடை போடுவார்கள். அவ்விஷயங்களை அவர்களிடம் பேசுவதே தவறு. ஏனெனில் அவர்கள் மகாத்மாக்களைக் குறித்து தவறாகப் பேசினால் அந்த பாவத்திற்கு அவர்களை இட்டுச் சென்ற குற்றமும் நம்முடையதாகி விடுமன்றோ !
அஞ்ஞானிகளுக்கு உபதேசம் செய்வது அர்த்தமற்றது என்பதை சொல்ல வரும் போது கோட்டான்களின் உதாரணத்தை சொல்கிறார் ஆவுடையக்காள்

ஜாதிக் குதிரையின் குணத்தை
வெகு வியாதி பிடித்த கிழக்கழுதை அறியுமோ
மூடிக் கிடக்கும் குடத்துள்ளே
வெண்கலத்து பிரதீதி தெரியுமோ
கோட்டான் சமூகமெல்லாம் கூடி
மார்த்தாண்ட ஸ்வரூபத்தின் மகிமையை அறியுமோ
கூத்தாடி கையில் குரங்கு போல்
தேட்டாளி அவித்தைக்கு வசப்பட்டு கிடக்கும்
........

(பிரதீதி , n.= 1. Clear apprehension or insight; அறிவு. 2. Fame; கீர்த்தி. 3.Delight; மகிழ்ச்சி ;
மார்த்தாண்டன்= சூரியன் : தேட்டாளி = ??)


கோட்டான் இரவிலே சுற்றுவது, பகல் வெளிச்சம் அதற்கு ஆகாது. ஏதாவது மரப்பொந்தின் இருட்டிலேப் பகலைக் கழித்து இரவு கவிந்ததும் வெளியே வரும் குணம் உடையது. அதற்கு சூரியனின் பெருமைப் பற்றித் தெரியாது. வேறு பறவைகள் அவன் பெருமையை எடுத்துக் கூறினாலும் அந்த சூரியன் இல்லாமலேயே நாங்கள் வாழவில்லையா என்று விதண்டா வாதத்தில் ஈடுபடக்கூடும்.

தம்முடைய இரவு வாழ்க்கையே ஆதவனின் வருகையால்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற உண்மையும் அவைகளுக்கு தெரிந்திருக்கப் போவதில்லை. அப்படி இருட்டிலேயே (அஞ்ஞானத்திலே) வாழ்ந்து, மறைந்து போகும் தன்மை உள்ளவர்களோடு தம் சக்தியை விரயமாக்க வேண்டியதில்லை என்பதை கபீர்தாஸரும் வலியுறுத்துகிறார்.

पशुवा सों पालौ पर्यो, रहु रहु हिया न खीज ।
ऊषर बीज न ऊगसी, बोव दूना बीज ॥


கருணையுடன் மேலோர் உரைப்பினும், செவிமடுக்கும் நீசனும் இல்லை
கரம்பையில் இரட்டிப்பு விதைப்பினும், முளைத்தெழும் விதையும் இல்லை

(கரம்பை =பாழ்நிலம்)

இரண்டு மடங்கு விதையைத் தூவினாலும் பாழ்நிலத்தில் விதை முளைக்காது.
அன்பு (அல்லது இரக்கம்) என்னும் ஈரம் இல்லாத மனதில் நல்ல புத்திமதிகளும் வழிகாட்டும் உரைகளும் பயனற்றவை ஆகின்றன. ஈரம் இல்லாத மண் இறுகும். அங்கங்கே வெடிப்புகள் தோன்றும். அது போல அன்பற்ற உள்ளங்களும் இறுகி சுயநலம், தற்பெருமை, பேராசை என்பனவாய் வெடித்து பாளம் பாளமாகக் காட்சியளிக்கும்.

”தமஸோர்மா ஜோதிர் கமயா” என்பது பிரார்த்தனை. இருளிலிருந்து வெளிச்சத்திற்கு இட்டுச் செல்லவும் பெருங்கருணையாளனான கடவுளின் கருணை வேண்டும்.

இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின்தன்மை நினைப்பற நினைந்தேன்....


என்று மணிவாசகப் பெருமான் திருப்பெருந்துறை சிவனை நினைத்துப் போற்றுவது போல் என்றாவது இறையருள் பொழியும் போது ஈரம் பிடிக்கும். பின் அன்பு சுரக்கும். அது வரை எது சொன்னாலும் அதற்கு பலன் இருக்காது.

மழையறிந்து விதைப்பவன் போல ஆன்றோர்கள் அந்த ஈர மனப்பக்குவம் அடைந்தவர்களுக்கே உபதேசம் செய்ய விரும்புவர். அது இல்லாதவரை உழவன் வறண்ட நிலத்தை ஒதுக்குவது போல் நம்மை நீசர்களாய் ஒதுக்கி வைப்பர். நாமும் கோட்டான்கள் போல அஞ்ஞான இருளிலே அலைந்து கொண்டிருப்பவராவோம்.

மித்தையை நம்பி விஷய போகம் புசித்து
சத்துருக்கள் சித்தம் தவிடு பொடியாக்குவித்து,
அஞ்ஞானத்தாலே அறிவிழப்பர் மானிடர்கள்
..........
இலக்கமற்ற ஜன்மத்தை எண்ணத் தொலையாது
மறித்துமிங்கு ஓடிவரும் மாயமிது ஏதென்றால்,
(அதை) அறிந்து விசாரிக்கின் ஆத்மாவே நாமென்னும்,
தேகமொடு போகம் ஸ்திரமென்றிருக்கிறவன்
மூடர்களில் மூடன் முழுதும் அஞ்ஞானி அவன்

ஞானசட்சு தான் விளங்கி நன்றாகவே அறிந்தால்
தோன்றுவது கானல் ஜலம் சிப்பியதில் வெள்ளியே போல்,
மோகம் விட்டுப் பார்க்கிறவன் மோக்ஷ ஸ்வரூபி கண்டாய்
(என்று) தாமரையாள் மார்பன் தனஞ்சயற்கு சொல்லி நின்றார்.


மேலே கண்டது கிருஷ்ணன் அருச்சுனனுக்கு சொல்வதாக ஆவுடையக்காள் இயற்றிய ஸ்ரீ பகவத்கீதா ஸாரஸங்கிரஹம் என்ற பாடற் தொகுப்பில் வருவது. தேகத்தை நிலையானது என்று நினைந்து உலக போகங்களுக்காக அல்லாடுபவர்களே பெரும் அஞ்ஞானிகள்.

மேலும் குரு இல்லாமல் அஞ்ஞானம் விலகாது என்பதையும் அழகிய உவமைகளோடு விளக்குகிறார்.

காதம் வழி சப்பாணி கடுகு நடந்தோடுதல் போல
ஊமை பல வார்த்தைகளும் உண்டென்று உரைத்தல் போல
செவிடனுக்கு கான வித்தை தெரியுமென்று கேட்பது போல

வருமெனக்கு என்று சொல்லி வாயடியாலே அடித்துத்
திரிகிறது மாத்திரமே, திடனாக ஆத்மாவை
அறியப் போகாது கண்டாய் ஆசாரியர் அன்றியிலே,
வந்தாலும் நில்லாது மரணஜன்மம் போகாது.

சிரவண பலத்தாலே சற்றுண்டு புண்ணியங்கள்
(என்று) உலகளந்த மாதவனார் உள்மானம் சொல்லி நின்றார்


(அறியப் போகாது கண்டாய் ஆசாரியார் அன்றியே = குரு இல்லாமல் அறிய முடியாது)


பகவத்கீதை சாரம் அன்றி, ஆவுடையக்காள் அவர்கள் ஞானகுறவஞ்சி நாடகம், ஞான வாஸிஷ்டத்தில் சொல்லப்படும் சூடாலை கதை, வேதாந்த கப்பல், ஸ்ரீ வித்யை சோபனம் போன்ற அபூர்வ பாடல்கள் திரட்டுகளை இயற்றியிருக்கிறார். அவரது அனுபோக ரத்னமாலை என்ற பாடல் தமது குருநாதர் பிரிவுக்காக இரங்கல் முறையில் பாடப்பெற்றிருக்கும் அற்புத அத்வைத சாரம்.

தன் குருவின் ஆணைப்படி மீண்டும் செங்கோட்டைக்குத் திரும்பி அவர் பலகாலம் மக்களுக்கு நல்வழிகாட்டியதாக சொல்லப்படுகிறது. இப்போது கிடைத்திருக்கும் பாடல்களெல்லாம் அப்போது திரட்டப்பட்டவையாக இருக்க வேண்டும். ஒரு ஆடி அமாவசையன்று குற்றாலமலையேறிச் சென்றவர் திரும்பவே இல்லையென்றும் எங்கு தேடியும் அவரது தேகம் கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சங்கரரைப் போலவும் மணிவாசகரைப் போலவும் விதேக முக்தி அடைந்தார் என்று கருதுவர் சிலர்.

பவபயங்கள் போக்கிவைத்து பரமபதம் தந்தவர்க்கு
பக்தி வைராக்கிய நிலை தந்தவர்க்கு
நேதி நேதி வாக்கியத்தால்;
நிச்சயங்கள் காட்டி வைத்த நிர்மலர்க்கு
ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்.

[ஆய்குடி வெங்கடராம சாஸ்திரி அவர்களின் முயற்சியால் முதல் பாடல் திரட்டு 1953-ல் வெளிவந்தது. பாரதியாரை தாய்வழி சித்தப்பாவாக உறவு முறை கொண்ட ஸ்ரீமதி கோமதி ராஜாங்கம் பல பாடல்களை செங்கோட்டை பகுதிகளில் பயணம் செய்து திரட்டி அவ்வப்போது ஆன்மீக சஞ்சிகைகளில் கட்டுரை வடிவில் வெளியிட்டு வந்தார். அவர்களிடமிருந்து அக்காளின் பாடல்களை பெற்று ஞானானந்த தபோவனத்தை சேர்ந்த நித்யானந்த கிரி ஸ்வாமிகள் இப்போது (2002) வெளியிட்டு இருக்கிறார்கள். விலாசம் : ஸ்ரீ ஞானானந்த நிகேதன், தபோவனம் அஞ்சல்,-605756,விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு]

9 comments:

 1. மிக்க நன்றி,

  அநுபவம் தோயந்த ஆடம்பரமில்லாத நடை ஆவுடையக்காளுடையது.

  சிருங்கேரி மட வெளியீடான
  ‘ஸ்ரீ சங்கர க்ருபா’ வில் கோமதி ராஜாங்கம் அவர்கள் தொடராக எழுதி வந்தார். அப்போது அவர் ஸ்ரீ வைகுண்டத்தில் வசித்து வந்தார்


  தேவ்

  ReplyDelete
 2. அருமையாக தந்திருக்கிறீர்கள்.

  //அன்பு (அல்லது இரக்கம்) என்னும் ஈரம் இல்லாத மனதில் நல்ல புத்திமதிகளும் வழிகாட்டும் உரைகளும் பயனற்றவை ஆகின்றன.//

  இதை படிக்கையில் கொஞ்சம் பயமா இருந்தது. ஈரமான மனசையும் பெரியோர் சொல் கேட்டு கீழ்ப்படிந்து தக்க வைத்துக் கொள்ளும் தன்மையையும் இறைவன் அருள வேண்டும்.

  (கத்துறதில் தப்பில்லைன்னு தெரிஞ்சு ஆறுதல். நமக்கு 'கத்தாம' இருக்க முடியாது. ஹி...ஹி...:)

  ReplyDelete
 3. வருக தேவராஜன் ஐயா,

  கோமதி ராஜங்கம் அவர்கள் பற்றிய தகவலுக்கு நன்றி. சுவாமி நித்யானந்த கிரி அவர்களை காசியில் சந்தித்து பல கையெழுத்து பிரதிகளையும் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளையும் பெற்று வந்தார் என்கிற நூல் குறிப்பிலிருந்து அங்கும் பலகாலம் (கடைசி காலம்?) இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

  பல பெரியவர்கள் பாதுகாத்து வந்திருக்கும் பொக்கிஷம் அக்காளின் பாடல்கள். அதற்கு கைம்மாறு கிடையாது.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 4. நல்வரவு கவிநயா,

  //(கத்துறதில் தப்பில்லைன்னு தெரிஞ்சு ஆறுதல். நமக்கு 'கத்தாம' இருக்க முடியாது. ஹி...ஹி...:) //

  குழந்தையின் மழலை கத்தலானாலும் ’அன்னைக்கு’ சங்கீதமே, இனிமையே!!

  ரசித்து படித்ததற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. //இரண்டு மடங்கு விதையைத் தூவினாலும் பாழ்நிலத்தில் விதை முளைக்காது.
  அன்பு (அல்லது இரக்கம்) என்னும் ஈரம் இல்லாத மனதில் நல்ல புத்திமதிகளும் வழிகாட்டும் உரைகளும் பயனற்றவை ஆகின்றன. ஈரம் இல்லாத மண் இறுகும். அங்கங்கே வெடிப்புகள் தோன்றும். அது போல அன்பற்ற உள்ளங்களும் இறுகி சுயநலம், தற்பெருமை, பேராசை என்பனவாய் வெடித்து பாளம் பாளமாகக் காட்சியளிக்கும்.//

  கபீரன்பன், சரியாக சொன்னீர்கள். உங்களுக்கு எல்லோர் மேலும் அனபு இருந்ததால் தான் ஆவுடை அக்காளின் பாடலை படித்து நாங்களும் பயன் பெற எங்களுக்கும் அளித்தீர்கள்.

  பொக்கிஷத்தை பகிர்ந்து அளிக்க அன்பு வேண்டும் அல்லவா?
  சுயநலம் இருந்தால் நீங்கள் மட்டும் வைத்து இருப்பீர்கள்.

  இப்படி நிறைய பொக்கிஷங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  ஆவுடை அக்காளுக்கு வணக்கங்கள்.
  கபீரன்பனுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 6. //பவபயங்கள் போக்கிவைத்து பரமபதம் தந்தவர்க்கு
  பக்தி வைராக்கிய நிலை தந்தவர்க்கு
  நேதி நேதி வாக்கியத்தால்;
  நிச்சயங்கள் காட்டி வைத்த நிர்மலர்க்கு
  ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்.//

  படித்து முடித்ததும் கண்கள் கசிந்த நிலையில் ஒரு பெருமுச்சு தான் வெளிப்பட்டது.

  ஈரமுள்ள நெஞ்சினராய் நம் மனதை வைத்துக் கொள்வதே முதல் படி என்று தெரிகிறது. அதில் மெய்யடியார்களின் கீர்த்திகள் விதைகளாய் விழுந்து அவை விருஷங்களாய் மனத்தில் கிளைக்கட்டும்! அதற்கு இறைவனின் அருள் எஞ்ஞான்றும் துணையிருந்து
  காக்கட்டும் என்று இறைஞ்சி வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

  ஞானச் சரிதமாய் ஈடில்லா பெருமைக்குரிய அக்காளின் சரிதத்தை மிகுந்த ஈடுபாட்டோடு நெகிழ்ச்சியோடு சொன்ன உங்களுக்கு ரொம்பவும் நன்றி. ஞானி ஆவுடையக்காளைப் பற்றி முதல் முதலாய் உங்கள் மூலம் தான் அறியப்பெற்றேன் என்பதில் அந்த நன்றி என்னுள் பன்மடங்கு பெருமை பெறுகிறது.

  மிக்க அன்புடன்,
  ஜீவி

  ReplyDelete
 7. வருக கோமதி மேடம்,

  //இப்படி நிறைய பொக்கிஷங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.//

  எனக்கும் ஆசைதான். இதற்காகவாவது பல மகான்களைப் பற்றி படிக்க முடிகிறது. பிறருக்கு சொல்ல வேண்டும் என்பதால் மேற்போக்காக படிக்காமல் சற்று ஆழமாகவே படித்து அறிய வேண்டியிருக்கிறது.அதுவும் தங்களைப் போன்ற ஆர்வமுள்ள வாசகர்கள் காத்திருப்பார்கள் என்ற எண்ணமே மிகவும் பொறுப்புடன் செயல்பட வைக்கிறது. வாசக அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.

  ஆர்வத்துடன் விடாமல் படித்து கருத்து சொல்லி வரும் தங்களுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 8. நல்வரவு ஜீவி ஐயா,

  //ஈரமுள்ள நெஞ்சினராய் நம் மனதை வைத்துக் கொள்வதே முதல் படி என்று தெரிகிறது. அதில் மெய்யடியார்களின் கீர்த்திகள் விதைகளாய் விழுந்து அவை விருஷங்களாய் மனத்தில் கிளைக்கட்டும்//

  இந்த வலைப்பூ தாங்கள் விரும்புகிற வகையில் தொடர்ந்து பயனளிக்க தங்கள் ஆசிகள் என்றும் துணை புரியும் என்ற நம்பிக்கை உண்டு.

  மிகுந்த ஈடுபாட்டுடன் படித்து ஆதரவு தரும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 9. ஸாதுக்கள் கதையைக் கேட்க, மனமே
  சிரத்தை உள்ளவன் போலே வந்து தலையாட்டி கேட்கும்
  வாதுக்காகிலும் இங்கே வருவார்
  மகத்தானத் தர்க்கத்தால் வாய் மூட அடிக்கும்//

  இப்போதும் இப்படித் தான் பல இடங்களிலும் நடக்கிறது. அப்போவோ சொல்லிட்டாங்க ஆவுடையக்கா. நாஞ்சில் நாடன் எழுதி இருப்பதையும் முன்னாலே நீங்க கொடுத்த சுட்டி மூலம் படிச்சேன். நன்றி.

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி