Friday, May 05, 2017

மாடு காட்டி என்னை நீ மதிமயக்கலாகுமோ

  கடந்த முப்பது வருடங்களில் குறைந்தது பத்து முறையாவது குடி பெயர்ந்தாயிற்று. வெவ்வேறு ஊர்கள், வீடுகள், பலவிதமான அனுபவங்கள். ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை. அது என்னோடு சேர்ந்து வரும் பழைய குப்பைகள். ஒவ்வொரு முறை வீட்டைக் காலி செய்யும் போதும் விடாப்பிடியாக ஒட்டிக் கொள்ளும் இவற்றைத் தூக்கிப் போட மட்டும் மனம் ஒப்புக் கொள்வதே இல்லை. கல்லூரி நாட்களில் எழுதிய ரெகார்டுகள், ப்ராஜெக்ட் ரிப்போர்ட், ஆராய்ச்சி குறிப்புகள் இத்யாதி. கூகிள் இல்லாத காலமாதலால் நூலகங்களைச் சுற்றி அவைகளை சேகரிக்க பட்டபாடு மனதில் நிழலாடும். மூன்று அலமாரி புத்தகங்கள், பழைய கெசட்டுகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த பலவீனத்தை அறிந்து தான் இப்பொழுதெல்லாம் கண்காட்சிகளுக்கு போவதேயில்லை. அதனால் இன்னமும் குப்பை தான் சேரும் என்பது என் கருத்து.

   நம்முடைய மனமும் இப்படித்தான் விஷய குப்பைகளை போட்டு நிறைத்து கொள்கிறது.
  அது தினத்திற்கு தினம் அதிகமாகிக் கொண்டு போகுமே ஒழிய குறைப்பதற்கான முயற்சி செய்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் நவீனக் குப்பைகள் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் என்ற பெயரில் சித்திரங்கள் மூலமும் சலனப்படங்கள் மூலமும் சில கணங்களிலேயே நினைவில் இடம் பிடித்து மறக்க முடியாத பதிவுகளை செய்து விடுகின்றன. அதை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஏதோ சாதனை புரிந்து போல நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். ட்விட்டர் மூலம்   என்றுமே சந்தித்திராத மனிதர்களோடு அவதூறுகள், சண்டைகள் என்பதையும் காண்கிறோம். இவைகள் இப்படி நம் நேரத்தையும் ஆற்றலையும் வீணடித்துக்கொண்டிருக்கின்றன.

   ஏன், அவற்றில் நல்ல குழுமங்களில் சேர்ந்து நல்ல விஷயங்களைப் பகிரலாமே என்கிற மறுக்க முடியாத வாதம் முன் வைக்கப்படுகிறது. எத்தனை பேருக்கு அவை நெருப்பு என்பது தெரியும்? அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளும் விவேகம் எத்தனை இளம் மனங்களுக்கு உண்டு? பெரியவர்களையே அல்லாட வைக்கும், ஒரு மயக்கத்தை உண்டு பண்ணும் இந்த உபகரணங்கள் இளைய சமுதாயத்தை ஒரு பேய்காற்று போல் அடித்துக் கொண்டு போகின்றது.

   இதை விஷயப்பற்று என்று ஞானிகள் சொல்வார்கள். இதிலிருந்து நாம் ஒதுங்கும் அளவும் நம்முடைய மனம் நம் பேச்சைக் கேட்க வாய்ப்பு அதிகம். இது எது போல என்றால் கிராமத்துக் குழந்தைகள், பொதுவாக, தம் போக்கில் கிடைத்ததை வைத்து விளையாடிவிட்டு அமைதியாக பெரியவர் சொற்படி கேட்கும். அவர்களுக்கு நகரத்து குழந்தைகளின் அதிபுத்திசாலித்தனமோ பிடிவாதமோ இருக்காது. இதற்கு அடிப்படைக் காரணம் விஷய ஞானமில்லாததே. அவர்களுக்கு புதிய விளையாட்டு உபகரணங்களோ அவற்றை பயன்படுத்தும் விதமோ எதுவும் தெரியாது. தெரியாத விஷயங்களைப் பற்றி மனம் கவலைப்பட, ஆசைப்பட முடியாது.

  கடவுளிடம் ஈடுபாடு வரவேண்டுமென்றால் மனதின் வெளிப் போக்கை நம் கட்டுக்குள் வரவேண்டும். அதற்கு ஒருவழி பழைய குப்பைகளை தூக்கிப்போடுவது மட்டுமல்லாமல் புதிதாக சேர்த்துக் கொள்ளாமல் கவனமாக இருக்கவேண்டும், மன அமைதி வேண்டுவோர் யாவருக்கும் இது பொது நியதி. ஆனால் துறவிகளுக்கோ இது ஒரு கட்டாயம். அதனால் கபீர் இதை முதல் கட்டமாக வைக்கிறார்.

தன்னுள் புலனடக்கம் துறவாம்.

    சாதகன் என்று சொல்லிக் கொள்ள விழைவோனின் முதற்படி பயிற்சி புலனடக்கம் ஆகும். துறவி என்ற வார்த்தைக்கு இறுதி லட்சணமும் அதுவே. இந்த மாயை தன்னுடைய கவர்ச்சிகளை ஐம்புலன்களை நோக்கியே வீசுகிறது. அதையும் தாண்டி மன மயக்கத்தைத் தரும் புகழ் என்னும் வலை வீசுகிறது. அதனால் வள்ளுவர் சொல்வது போல்
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து

( ஒரு பிறவியில்  ஐம்புலன்களையும் அடக்கி  விட்டால் ஏழு பிறவிகளுக்கும் அது காப்பாற்றும்)

  எதிரிகளைக் கண்டால் எல்லாவற்றையும் உள்ளிளுத்து அசைவற்றிருக்கும் ஆமை போல் உலக கவர்ச்சிகளை எதிரிகள் போல பாவித்து நமது விவேகத்தால் மனதை அவற்றின் பால் செலுத்தாது காத்துக் கொள்ளவேண்டும். சிவ வாக்கியரும் கடவுளிடம் இந்த பலவீனத்திலிருந்து தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்கிறார்.

ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல
மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கலாகுமோ
கோடுகாட்டி யானையை கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே

(மாடு=செல்வம், கோடு =கொம்பு, தந்தம் )

யானைவடிவில் வந்த கயாசுரனை அவன் தந்தத்தையே முறித்து தோலுரித்த சிவனே! கட்டப்பட்ட ஆட்டை  இரை என மயங்கி சிக்கிக் கொள்ளும் வேங்கையை போல என்னை இந்த உலக செல்வங்களை காட்டி சிக்க வைக்கலாகுமோ? எனக்கு என் நிஜ சொரூபத்தைக் காட்டி வீடு பேற்றை அருள்வாயாக.

இப்போது கபீரின் முழு வரிகளையும் பார்ப்போம்.

विषय त्याग बैराग है, समता कहिये  ग्यान ।
सुखदाई सब जीव सीं, यही भक्ति परमान ॥
( வெளி விஷயங்களில் ஏற்படும் ஆசையைத் துறப்பவனே துறவி. சமநிலைக் கொள்பவன் ஞானி. பிற ஜீவன்களுக்கு சுகத்தை நாடு. அதுவே பரமனில் செய்யும் பக்தி ஆகும்)

மொழிபெயர்ப்பு:
தன்னுள் புலனடக்கம் துறவாம், சமத்துவம் கண்டோரே ஞானியாம்
மன்னுயிர்க் கின்பம் தருதலாம், அதுவே இறைக்கிசைந்த பக்தியாம்

கபீர் பண்டிதரல்ல, ஒரு பாமரன். ஆனால் இந்த ஈரடியில் அவர் அப்படியே பகவத்கீதையின் 12 ஆவது அத்தியாயத்தின் 4 ஆவது சுலோகத்தை உரித்து வைத்திருக்கிறார்.

संनियम्येन्द्रियग्रामं  सर्वत्र समबुद्ध्य: ।
ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रता: ॥  ( 12-4)

புலன்களின் கூட்டத்தை அடக்கி, எங்கும் (எப்போதும்) சமநிலை உடையவரும் எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோரும் என்னையே அடைகிறார்கள்

ஆக மூன்று விதிகள்: புலனடக்கம், சமநிலை, எல்லா உயிர்களிடத்தும் கருணை இவையே இறைவனுக்கு உகந்தது.

    சமத்துவத்தை சுவாமி தயானந்தரின் வாழ்க்கையில் ஏற்கனவே கண்டிருக்கிறோம், பிற ஜீவன்களிடம் கருணை என்பதை கழுதைக்கு கங்கை நீரை வார்த்த ஏகநாதர் உதாரணத்திலும் பார்த்திருக்கிறோம். 

  நாம் இன்னும், புலனடக்கம் என்னும் முதற்படியிலே காலை வைக்காததால் அதைப் பற்றி பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

  காட்டிற்கு சென்று தவம் செய்வதால் புலனடக்கம் வராது என்றும் ஞானிகள் சொல்வார்கள். நம்முடைய பயிற்சிக் களமே இந்த உலகம்தான். ஆகையால் இதை விட்டு ஓடுவதில் அர்த்தம் இல்லை.

   மனம் என்னும் ராஜாவுக்கு இரண்டு மனைவிமார்கள். ஒருவள் அனுபவராணி, இன்னொருவள் விவேகராணி. அனுபவ ராணி உலக விஷயங்களில் சபல புத்தி கொண்டவள். விவேக ராணியோ “நல்லதை சொல்கிறேன் அப்புறம் உங்கள் இஷ்டம்” என்று அமைதியாக போகும் சுபாவம் உடையவள்.

   புலன்கள் என்னும் வேலைக்காரர்கள் பெரும்பாலும் அனுபவராணியின் சொற்படியே கேட்பவர்கள். அவளிடத்தில் சுதந்திரம் அதிகம். அவள் விஷயத்தில் ராஜா என்றும் பலவீனமானவன் தான்#. அனுபவமற்ற ராஜா, விவேக ராணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போகும் போது அனுபவ ராணியின் கை ஓங்கி புலன்களின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போய் ராஜாவுக்கு தலைவலி வரும். அப்போது விவேகராணி சொல்வதெல்லாம் அப்பியாச மந்திரியை கூட வைத்துக் கொண்டால் அந்த வேலைக்காரர்களை அவர் வழிபடுத்துவார் என்பது தான். 
[ நமக்கு சரியென்று தெரிந்தாலும் நல்ல பழக்கங்களை நடைமுறை படுத்த முடியாமல் போவது இதனால்தான் ]

 அவரும் அந்த வேலைக்காரர்களுக்கு, விவேகராணியும் சமஅந்தஸ்து உடையவள், அனுபவராணியின் கட்டளை எதுவானாலும் விவேகராணியிடம் ஒரு வார்த்தை கேட்டு, அரசரிடம் உத்தரவு பெற்றே செய்ய வேண்டும் என்பதில் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பார். அரசரிடமும் விவேகராணிக்கு முக்கியத்துவம் கொடுக்க பரிந்துரை செய்வார்.

   அனுபவராணி என்பது பல பிறவிகளாக நம்மை பீடித்திருக்கும் வாசனைகள் கர்ம வினைகள். தம் ஆதிக்கம் குறைவதை அவை விரும்புவதில்லை. பயிற்சியற்ற மனது (மந்திரி இல்லா ராஜா போல) இரண்டு மனைவிமாரிடையே இழுபட்டு அவதியுறுகிறது. சத்சங்கத்தையும் சான்றோர் உறவினையும் கொள்ளும் போது இந்த பயிற்சி என்பது உடன் நின்று மனம் வலுப்படுகிறது.

   இதெல்லாம் உலக வாழ்க்கையின் தொடர்பு இல்லாமல் காட்டில் வாழ்வதால் எப்படி கிடைக்கும்? ஆகையினாலே தான் துறவு என்பதற்கு காவி உடையோ, வேறு வேஷபூஷணமோ அடையாளமாகது. புலன்களை அடக்கியவரே உண்மையான துறவி என்கிறார் கபீர். 

  உலக விஷயங்களில் நாட்டமற்று கடவுளையே சிந்தித்திருப்பவன் உண்மையான துறவி நாமரசம் என்பதன் ருசி புரிந்து விட்டால் வேறு எதுவும் ருசிப்பதில்லை என்று புரந்தரதாசரும், மீராவும் தியாகராஜரும் ஆண்டாளும் இந்த தேசம் முழுவதும் தோன்றிய மகான்கள் அனைவரும் சொல்லியிருக்கும் போது அது பொய்யாகிவிடுமா என்ன?

  அதன் ருசி அறிய செய்ய வேண்டியதெல்லாம் மனக்குப்பைகள் சேராமல் பார்த்துக் கொண்டு நாமசெபத்தில் நேரத்தை ஒருமுகத்துடன் பூரண சரணாகதியுடன் எல்லாம் அவன் செயல் என்கிற பாவனையோடு செலவழிக்க வேண்டும் என்பதே அவர்கள் சொல்லும் வழி.

8 comments:

 1. மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். மனக்குப்பையைத் தள்ளத் தள்ள அது மீண்டும் மீண்டும் சேர்வது தான் பிரச்னையாக இருக்கிறது. இப்போதைக்கு அனுபவ ராணியின் கை தான் ஓங்கி இருக்கிறது. விவேகம் வருமானு தெரியலை! :( கபீர் சொன்னதை விட நீங்க அதற்கேற்ற திருக்குறள், பகவத்கீதை சுலோகம், சிவவாக்கியர் பாடல்னு தேடி எடுத்துப் போடுவது இன்னமும் பிரமிப்பைத் தருகிறது. ரொம்ப நாள்/மாதம்/வருஷம் (?) கழிச்சு மன நிறைவுடன் படித்த ஒரு பதிவு. பகிர்வுக்கு நன்றி.

  உடல் நலமாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன். ஜாம்நகரில் இருந்து வந்தாச்சா?

  ReplyDelete
 2. இன்று வீட்டுக்கு அருகில் கூடு கட்டி இருந்த குருவிகளின் நான்கு குஞ்சுகள் ந்ல்லபடியாக பறந்து விட்டது, ஒன்று மட்டும் அவசரப்பட்டு கூட்டை விட்டு வெளியே வந்து பறக்க முடியாமல் விழுந்து விட்டது , உதவிக்கு யாராவ்து வந்தால் அதை எடுத்து மீண்டும் கூட்டில் வைப்போம், என்று உதவிக்கு அழைத்து வர போனேன் அதற்குள் அதை காணோம் அது என்னாச்சோ! என்று வருத்தப்பட்டு இறைவனிடம் அந்த குருவி பத்திரமாய் எங்காவது இருக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு இருந்தேன்.

  மனம் சஞ்சல பட்டுக் கொண்டு இருந்த போது உங்களின் பதிவு மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

  //உலக விஷயங்களில் நாட்டமற்று கடவுளையே சிந்தித்திருப்பவன் உண்மையான துறவி நாமரசம் என்பதன் ருசி புரிந்து விட்டால் வேறு எதுவும் ருசிப்பதில்லை என்று புரந்தரதாசரும், மீராவும் தியாகராஜரும் ஆண்டாளும் இந்த தேசம் முழுவதும் தோன்றிய மகான்கள் அனைவரும் சொல்லியிருக்கும் போது அது பொய்யாகிவிடுமா என்ன?

  அதன் ருசி அறிய செய்ய வேண்டியதெல்லாம் மனக்குப்பைகள் சேராமல் பார்த்துக் கொண்டு நாமசெபத்தில் நேரத்தை ஒருமுகத்துடன் பூரண சரணாகதியுடன் எல்லாம் அவன் செயல் என்கிற பாவனையோடு செலவழிக்க வேண்டும் என்பதே அவர்கள் சொல்லும் வழி.//

  எல்லாம் அவன் செயல் என்று சொல்லி கொண்டேன் மனதிடம்.

  இப்படி அடிக்கடி நல்ல விஷ்யங்களை பகிர்ந்து கொண்டு இருங்கள்.

  ReplyDelete
 3. நல்வரவு கீதா மேடம்.
  நாங்கள் ஜாம் நகர் விட்டு மைசூர் வந்து ஒரு வருஷமாச்சு. இனி எப்படி குப்பை சேராமல் பார்த்துக் கொள்வது என்பது தான் என் கவலை :))
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

  ReplyDelete
 4. வருக உமா மேடம்.
  பதிவு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி.
  பாராட்டுக்கு நன்றி

  ReplyDelete
 5. கோமதி மேடம் நல்வரவு,

  //எல்லாம் அவன் செயல் என்று சொல்லி கொண்டேன் மனதிடம்//

  உண்மை உண்மை, மறக்கக்கூடாத உண்மை.
  தாங்கள் தரும் ஊக்கத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி

  ReplyDelete
 6. நன்றி, இப்பதிவுகள், கலங்கரைவிளக்கமாகும், மனிதர்க்கு,

  ReplyDelete
 7. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அன்பரே. நண்பர்களுக்கும் கபீரின் நிழலுக்கு வழிகாட்டவும். மிக்க நன்றி.

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி