Thursday, June 25, 2009

குஞ்சரம் சிதர்த்த சிறுகவளம்

வரவுக்கும் செலவுக்கும் முடிச்சு போடுவதுதான் பட்ஜெட். பலர் சிக்கனத் திலகங்கள், கணக்கு போட்டு் செலவு செய்வார்கள். வேண்டிய செல்வம் இருந்தும் செலவே செய்ய விரும்பாத மகோதையர்களும் இருப்பார்கள். இன்னும் சிலருக்கு கையிலே காசு நிற்கவே நிற்காது, பாரதியார் போல.

இதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை சமன்படுத்த வந்த அரசியல் வழியமைப்புகள் எல்லாம் தோற்று விட்டன.
சட்டத்தால் சாதிக்க முற்படுவது எதுவும் பயத்தை அடிப்படையாகக் கொண்டது. அது நிலைத்து நிற்காது. சுயநலம் என்ற எலி சட்டத்துள் இருக்கும் பொத்தல்களுக்கு இடையே புகுந்து தன்னிச்சையை பூர்த்தி செய்து கொள்ளும்.

அதுவே அன்புணர்ச்சியை தூண்டிவிட்டு அந்த எலி புத்தி தலையெடுக்காமல் செய்தால் ஏற்றத்தாழ்வுகள் குறைவதற்கான வாய்ப்புகள் பெருகும். அதை காலம் காலமாக நமது நாட்டில் பெரியவர்கள் நடைமுறை படுத்தி வந்திருக்கின்றனர். இங்கே ஒரு நல்ல உதாரணத்தை சொல்கிறார் குமரகுருபரர்.

முருகன் அருளால் வாக்சித்தி பெற்ற குமரகுருபரர் காசியிலேயே திருபனந்தாள் மடம் நிறுவி வடமொழியிலும் தமிழ் மொழியிலும் புலமை பெற்றவர்.
அவர் பல அரிய கருத்துகளை சொல்லி வைத்திருக்கிறார். அதில் ஒன்று

வாங்கும்
கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின்
தூங்கும் களிறோ துயறுரா - ஆங்கது கொண்டு
ஊரும் எறும்பு இங்கு ஒருகோடி உய்யுமால்
ஆரும்
கிளையோடு அயின்று

(தூங்கும் களிறு= அசைந்து கொண்டிருக்கும் யானை)

”தன் உணவில் ஒரு சிறு கவளம் சிதறினால் யானைக்குப் பெரிய நட்டம் எதுவும் இல்லை. ஆனால் அது எறும்பு போன்ற எத்தனை கோடி ஜீவன்களுக்கு வாழ்வளிக்கிறது என்பதை நினைத்து வசதி படைத்த பெரும் தனவந்தர்கள் தங்கள் செல்வத்தை மனமுவந்து சமூகத்தின் நற்காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதால் அவர்களின் பெரும் நிதிக்கு எந்த குறைவும் வந்துவிடாது” என்ற கருத்தை வலியுறுத்துகிறார் குமரகுருபர சுவாமிகள்.

இந்த உண்மை புரியாத ஸ்ரீனிவாஸ நாயக்கனோ ஒரு அந்தணன் கேட்ட ஒரு சிறிய உதவி செய்ய மனமின்றி அவரை அலைக்கழித்தான். நவ கோடி நாராயணன் என்று பண்டரிபுரத்தருகே புகழ்பெற்ற வைர வியாபாரியாக இருந்த அவன் உதவினால் தன் பேரனின் பூணூல் கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று அந்தணன் ஒருவன் ஒரு நாட்காலையில் அவன் கடை வாயிலில் நின்றான்.

’நாளை வாரும்’ என்று அனுப்பி வைத்தான் ஸ்ரீனிவாஸன். அடுத்த நாளோ காலையிலிருந்து அந்தி கடைமூடும் வரை அவரது கடையிலேயே ஓர் ஓரமாக கால்கடுக்க நின்றிருந்தான் அந்த அந்தணன். அன்று முழுவதும் அரண்மனையிலிருந்து வருவோரும் போவோருமாக இருந்தனர். கடை மூடும் சமயத்தில் அவரை அப்போதுதான் பார்ப்பது போல “ லெட்சுமி வருகின்ற நேரத்தில் ஏதும் தர இயலாதே. நாளை அஷ்டமி. நீங்கள் தசமி தினம் வாருங்கள் பார்ப்போம்” என்று சொல்லி அனுப்பினான் கொடாக்கண்டன் ஸ்ரீனிவாஸன்.

பல தசமிகள் வந்து போயின. விடாக் கண்டனான அந்தணன் சளைக்கவில்லை.

கடைசியாக ஸ்ரீனிவாஸனுக்கு ஒரு யுக்தி தோன்றியது. சில காசுகளை பையில் போட்டு அந்தணன் கையில் கொடுத்தான். அதைப் பிரித்து பார்த்த போது புரிந்தது எல்லாம் செல்லாத காசுகள் என்பது. “ ஐயா ! இவை செல்லாக் காசுகள்” என்று தயங்கியபடியே உரைத்தான் அந்தணன். “ செல்லும், செல்லும்.. செல்ல வேண்டிய இடத்தில் செல்லும்” என்று முகத்தை திருப்பியபடியே பேச்சில் விருப்பமில்லாதவனாய் பதிலளித்தான் வைர வியாபாரி ஸ்ரீனிவாஸ நாயக்கன்.

அந்தணனுக்கு தான் ’செல்ல வேண்டிய இடம்’ எதுவென்று புரிந்தது. வியாபரியின் வீட்டை அடைந்து மனைவியார் சரஸ்வதி பாய்-ஐக் கண்டு முறையிட்டான். அவரும் தன் கணவரின் செயலுக்காக வெட்கினார். ஆயினும் அவரை மீறி அவருக்கு விருப்பமில்லாததை தான் எதுவும் செய்ய இயலாத நிலை குறித்து வருத்தம் தெரிவித்தார்.

அந்தணன் நயமாக ஒரு கருத்தை முன் வைத்தான். தந்தை கொடுத்த சீதனம் முறைப்படி அவருக்கு உரியதுதானே. அதனை தானம் செய்வதால் தவறேதுமில்லை என்று சொன்னான். அதுவும் உண்மைதான் என்று மனதிற்குப் படவே தன் வைர மூக்குத்தியை கழற்றி அவருடைய சுப செலவுகளுக்கென கொடுத்து விட்டாள்.

அந்தணனுக்கோ பணம் வேண்டும். அதை நேரே அந்த வியாபாரியின் கடைக்கே கொண்டு சென்று இதை வைத்துக் கொண்டு பணம் தாரும் என வேண்டினான். அது தன் மனைவியுடையது என்று அடையாளம் கண்டு கொண்ட ஸ்ரீனிவாஸன் “எங்கு கிடைத்தது?” என்று வினவினான்.

” நல்ல மனம் படைத்த அன்பர் ஒருவர் கொடுத்து உதவினார்” என்றான் அந்தணன்.

“ மிகவும் சுமாரான வைரம். அம்பது தங்கக் காசுகள் பெறும்” என்று சொல்லி கொடுத்தான். அந்தணனுக்கு வந்த காரியம் முடிந்தது. அந்தணன் கிளம்பியதும் கடை ஆள் ஒருவனை அவரை பின் தொடர்ந்து எங்கு செல்கிறார் என்பதை கண்டு வர அனுப்பினான் ஸ்ரீனிவாஸன்.

பின்னர் அந்தணர் கொடுத்த மூக்குத்தியை பெட்டியில் பத்திரப்படுத்தி வீட்டுக்கு விரைந்தான். அந்த நேரத்தில் கணவரை சற்றும் எதிர்பார்க்காத சரஸ்வதி அம்மையாருக்கு தர்ம சங்கடமாகி விட்டது. மூக்குத்தி எங்கே என்ற கேள்விக்கு எடுத்து வருகிறேன் என்று உள்ளே போனவள் இறைவன் முன்னே நின்று அழுதார்.
“அந்த பிராமணனை ஏன் அனுப்பினாய்? என்னால் என் கணவரிடத்து பொய் சொல்ல முடியாது. எனக்கு முன்னே இருக்கும் ஒரே வழி உயிரைப் போக்கிக் கொள்வதுதான்” என்ற எண்ணங்களுடன்,காதில் அணிந்திருந்த தோடிலிருந்து ஒரு வைரக்கல்லை பொடித்து விஷமாக அருந்தத் தலைப்பட்டார்.

ஆச்சரியம்! அந்த குவளையின் உள்ளே ஏதோ உலோகச் சத்தம் கேட்டது. துளாவிப் பார்த்ததில் அந்தணருக்கு கொடுத்த அதே மூக்குத்தி. மகிழ்ச்சியுடன் கணவரிடம் கொண்டு சென்றார். வாயடைத்து நின்றான் ஸ்ரீனிவாஸ நாயக்கன். காதில் வைரக் கல்லை காணவில்லை. அவனுக்கு என்ன நடந்தது என்று புரிந்து விட்டது. குற்ற உணர்வால் அவள் உயிரை மாய்த்துக் கொள்வதை அவனால் தாங்க முடியவில்லை. சரஸ்வதி அம்மையாரும் நடந்த உண்மைகளை மறைக்காமல் கூறினார்.

உடனே கடைக்கு ஓடினான் ஸ்ரீனிவாஸன். அவன் பத்திரப்படுத்தி வைத்த மூக்குத்தி மாயமாகி விட்டிருந்தது. அதே நேரத்தில் அவன் அனுப்பிய ஆள் வந்து அந்த அந்தணன் பாண்டுரங்கன் சந்நிதியில் மாயமாய் மறைந்து போனதை சொன்னான்.

இப்போது ஸ்ரீனிவாஸ நாயக்கனின் அகக்கண் திறந்தது. பாண்டுரங்கனே தன்னை இடைவிடாது துரத்தித் துரத்தி ஆட்கொண்டிருக்கிறான் என்பதை நினைக்க நினைக்க அவன் மனம் மருகியது. எப்பேர்பட்ட பாவியாகி விட்டேன். யாருக்கும் கிடைக்காத விட்டலன் என் வீட்டிற்கும் கடைக்குமாக நடையாய் நடந்திருக்கிறானே. என் அறிவீனத்தைப் போக்குவதற்காக எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறான் ! செல்லாக் காசை வாங்கிக் கொண்டு எல்லாவற்றிலும் பெருநிதியான அருட்செல்வத்தை வாரி வழங்கிவிட்டானே என்று பலவாறாக துயருற்று அரற்றினான்.

பின்னாளில் அவன் மனம் வருந்தி பாடிய பாடல் ஒன்று

தப்புகளெல்லா நீனு ஒப்பி கொள்ளோ
நம்மப்ப, - காயபேகு திம்மப்பா நீனே


(தப்புகளையெல்லாம் நீ ஒத்துக்கொள் என்னப்பனே - காத்திடல் வேண்டும் திம்மப்பனாகிய நீனே )
.............
அதிதிகளெந்து பந்ரெ மனெகெ -நா
தியில்ல, கூடது எந்தெ

(அதிதி என்று வந்தால் வீட்டிற்கு, நான் கதியில்லை (அவர்களுக்கு உணவளிக்கக்) கூடாது என்றேன்)

யதிகள கூட நிந்திஸிதெ கொனெகெ- ஸ்ரீ
பதி த்ருஷ்டியிடு ஈ பாபி கடெகெ


(சாதுக்களையும் கூட இறுதியில் நிந்தித்தேன் ;ஸ்ரீபதியே உன் கடைக்கண்ணை இந்த பாவியின் பக்கம் இடு)
..........
எஷ்டு ஹேளலி அவகுண ளெல்லா -அவு
அஷ்டு இஷ்டு எந்து எணிகெ இல்லா
த்ருஷ்டி யிந்லி நோடோ தீனவத்ஸலா- ஸர்வ
ஸ்ருஷ்டிகெடை புரந்தர விட்டலா


(அவகுணங்களை எவ்வளவு என்று சொல்வேன் -அவைகள் இவ்வளவு அவ்வளவு என்று எண்ணிக்கையில் இல்லை
கருணையுடன் பார் தீனவத்ஸலா- சர்வ சிருஷ்டிக்கும் உடையவனாகிய புரந்தர விட்டலனே )


(கன்னட சொற்கள் : காய பேகு =காப்பாற்ற வேண்டும் ; திம்மப்பா =இறைவனை செல்லமாக குறிப்பது ; மனெகெ=வீட்டிற்கு; கொனேகெ=இறுதியாக; கடெகெ= பக்கமாக ; நோடு= பார்; ஒடைய =உடையவன் சொந்தக்காரன்; எணிகெ= எண்ணிக்கை)

ஸ்ரீனிவாஸ நாயக்கன் புரந்தரதாஸனாக மாறிய கதை இது.

பாண்டுரங்கனின் பெரும் அருள்நிதி கிட்டியதும் உலகில் அவர் ஈட்டிய பெருஞ் செல்வமல்லாம் யானையின் சிறு கவளத்தின் சிதறல் போன்றாகி விட்டது. அது எம்மாத்திரம் என்று தன் செல்வத்தையெல்லாம் ஏழை எளியவர்களுக்கு வாரி வாரி வழங்கிவிட்டார். வெறும் கட்டிய துண்டுடன் மனைவி மக்களுடன் கிளம்பி விஜயநகரத்தை அடைந்து வியாசராயரின் சீடராகி- புரந்தரதாஸனாகி - ஹரி சேவையிலேயே காலம் கழித்தார்.

குமரகுருபரர் போல பண்டிதர் அல்லர் கபீர்தாசர், ஆனால் காலத்தால் முந்தையவர். மிக சுலபமாக எளியவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அவரும் அதே உதாரணத்தை சொல்லியிருக்கிறார்.

कुंजर मुख से कन गिरा, खुटै न वाको आहार ।
कीडी कन लेकर चली, पोषन दे परिवार


குஞ்சரம் சிதர்த்தது சிறுவத்தம், குஞ்சரத்துக் கில்லை நட்டம்
சஞ்சரித்த எறும்பின் கூட்டம், கண்டதோர் உணவின் தேட்டம்


(குஞ்சரம் =யானை; சிதர்த்தல்= சிந்துதல் ; வத்தம்= சோறு ; தேட்டம்=சம்பாதனை)

தானம் செய்வதில் மனிதர்கள் தயக்கம் கொள்ளக்கூடாது என்ற வகையில் இதற்கு பொதுவாக பொருள் கொள்ளலாம்.

மிக செல்வந்தர்களான புரந்தரதாஸருடைய வாழ்க்கையும் பட்டினத்தார் வாழ்க்கையும் காட்டுவது, ஞானம் வந்தபின் அதுவே பெருஞ்செல்வமாகி விடுகிறது. அந்நிலையில் எவ்வளவு உலகச் செல்வமானாலும் அது தூசு போல கணக்கற்று போகிறது.

இன்னுமொரு வகையில் பார்த்தாலும் அவர்கள் யானையை போன்று ஆன்மீகத்தில் உயர்ந்து நிற்பவர்கள். நாம் எறும்புகள் போல் அவர்கள் காலடியில் ஊர்ந்து கொண்டிருக்கிறோம்.

கர்னாடக சங்கீதத்திற்கே இலக்கணம் வகுத்தவர் என்று போற்றப்படுபவர் புரந்தரதாஸர். வெங்கடாசல நிலையம், பாக்யத லக்ஷ்மி பாரம்மா, ஆடிசிதளு யசோதா போன்றவை மிகவும் புகழ்பெற்ற பாடல்கள். இறைவனை போற்றுவது மட்டும் அல்லாமல் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் பல தத்துவ பாடல்களையும் இயற்றியவர்.

புரந்தரர் 475000 பாடல்கள் பாடியதாக சொல்லப்படுகிறது. அது அவர் பெற்ற அருள் நிதியிலிருந்து நமக்காக சிந்தியது. அதி்லும் நமக்கு கிடைத்திருப்பது சுமார் 800 பாடல்களே. எறும்புகளாகிய நாம் அவற்றை ஜீரணித்து கொள்ளவே எவ்வளவு காலம் பிடிக்குமோ !

Monday, June 08, 2009

பக்தி வலையில் படுவோன்

புகைவண்டியில் பயணம் செய்யும் போது, நமக்கு சம்பந்தமே இல்லாத நபர்களின் பல ரசமான உரையாடல்களை கேட்க முடிகிறது. அவற்றில் பல, நேரம் கழிவதற்கு பயன்படுகிறது, சில வாழ்க்கைக்கு பாடமாகலாம், இன்னும் சில சிந்திக்க வைக்கலாம். அப்படி சிந்திக்க வைத்த ஒரு நிகழ்ச்சி:

தொழிற்சாலை வாழ்க்கையில் தங்களுடைய பழைய அதிகாரி ஒருவரைப் பற்றிய உரையாடலின் சாரம்.

முதலாம் நபர் : மனுசன் ரொம்ப கடிசு தான். வேலைன்னு வந்தாச்சுன்னா எல்லாப் பசங்களும் பயந்து நடுங்குவாங்க

இரண்டாம் நபர் : ஆனா அதே அளவுக்கு நல்ல மனசும் கூட... பாருங்க ! ஒரு நாளு இன்கிரிமெண்ட் பத்தல, அப்படி இப்படின்னு பேசிகிட்டு இருக்கிறப்போ அவரு கேட்டாரு நீ பணத்தை எதில போட்டு வச்சிருகேன்னு. நானும் கிண்டலா பணம் இருந்தாத்தானே போட்டு வைக்கறதுக்கு அப்படீன்னு பதில் சொன்னேன்.
அவரு சிரிச்சு கிட்டே ’முதல்ல ஏதாவது ஒரு ப்ளாட் வாங்கி போடு. பத்து வருசம் கழிச்சு பத்து மடங்கு வெலைக்கு போகும். நீ இன்கிரிமெண்ட் நம்பிக்கிட்டிருந்தேன்னா இப்படியே தான் இருப்பே’ ன்னு சொன்னாரு. நானும் பணத்துக்கு எங்க சார் போறதுன்னு கேட்டேன். அதுக்கு அவரு பிஃஎப் எதுக்கையா இருக்குன்னு கேட்டாரு. அப்போ 25000 ரூபாய்க்கு பீபி குளத்துக்கு பக்கத்தில ப்ளாட் வாங்கி போட்டேன். அவரே மேலே பேசி ஒரே வாரத்துல ஃபி.எஃப் பணத்தை ரிலீஸ் பண்ணினாரு. இன்னிக்கு அங்க ரேட் அஞ்சு லட்சத்துக்கு மேலே.


இரண்டாம் நபரின் வார்த்தைகளில் பெருமை தெரிந்தது. சரியான நேரத்தில் வழிகாட்டிய அதிகாரியை நன்றியுடன் நினைத்து பார்க்கவும் செய்தது.

எல்லா அரசாங்கங்களும் தங்களுடைய குடிமக்களுக்கான சேம நலத்தைப் பற்றி பல திட்டங்கள் நடைமுறை படுத்தியுள்ளன. நமது நாட்டில் அது தொழிலாளர் சேம வைப்பு நிதி (Employee Provident fund). இது ஓய்வு பெற்ற பின் ஒருவருக்கு வழங்கப்படுவது. அதிலும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வட்டியை ஓய்வூதியமாகவும் அவருடைய காலத்திற்குப் பின் அவரை நம்பியிருக்கும் குடும்பத்தார்க்கு மொத்தத் தொகையாகவும் கொடுக்கப் படுகிறது.

சேமிப்பு நிதியிலிருந்து குடும்ப விசேஷம் போன்றவற்றை காரணம் காட்டி கடனாக பெற்றுக்கொள்ளலாமே ஒழிய நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடியாது. திருப்பிக் கட்ட வேண்டும். ஆனால் அசையா சொத்து அல்லது திருமணத்திற்காக எடுக்கும் பணம் கடனாகாது.

சேமிப்பு நிதியை நல்ல வழியில் பயன்படுத்தும் வழியை சொல்லி அதற்கான ஏற்பாடும் செய்திருந்தார் அந்த அதிகாரி.

மைக்ரோ லெவலில் மனிதர்கள் தங்களை ரட்சித்துக்கொள்ள இப்படி ஒரு ஏற்பாடு செய்து கொண்டிருந்தால் மேக்ரோ லெவலில் மனிதப் பிறவியை கடைத்தேற்றும் பொறுப்பு உள்ள இறைவனும் ஒரு ஏற்பாடு செய்யாமலா விட்டிருப்பான் ?

அப்படி அவன் ஏற்படுத்தியிருக்கும் வைப்பு நிதி தான் ’பக்தி’ அக்கௌண்ட் அல்லது ”பக்தர் சேம வைப்புக் கணக்கு
நம்முடைய எல்லா வினைகளும் காலக்கிரமத்தில் பலன்கள் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்த ’பக்தி’ கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும் வைப்பு மட்டும் எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவனே அறிவான். அது ஒரு ரிசர்வ் ஃபண்ட்
அந்த கணக்கு ஒரு அளவை எட்டியதும் அவனே ஒரு அதிகாரியை (குருவை) அனுப்பி அதை மேற்கொண்டு எப்படி பெருக்கிக் கொள்வது என்பது பற்றி வழிகாட்டுகிறான். அதன் மூலம் மிக விரைவிலேயே நமது பக்தி பிரபாவம் பெருகி நம்மை அவனிடம் கொண்டு சேர்க்கிறது.

பக்திபாவம் பெருகப் பெருக மற்ற வினைகள் அற்றுப் போகின்றன. அந்த வினைகள் செயலிழந்து போவதை அவித்த விதைக்கு ஒப்பிடுகிறார் இடைக்காட்டு சித்தர்.

அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே -பத்தி
அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே.


பக்தி உணர்ச்சி மேலிட்டால் அது பழைய வினைகளையும் செயலிழக்க வைக்கும் வல்லமை உடையது; பக்தி இல்லாதவர் வினைச் சுழலிலேயே சிக்கித்தவிப்பர்; கதிகாண முடியாது என்பதெல்லாம் சித்தருடைய உரையிலிருந்து புலனாகிறது.

அதனால்தான் அவ்வப்போது இருப்பிற்கு ஏற்ப அதிகாரிகள் மூலம் அதை தீவிரப்படுத்துக்கிறான் இறைவன்.

ஆனால் வினைகளை அவிக்கும் அளவுக்கு பக்தி கணக்கில் இருப்பு இருந்தால் தானே அதை செயலாக்க முடியும் ? நம் பயணம் துரிதமடையும் ?

இந்த சேம வைப்பு கணக்கில் இருப்புக் கணக்கு எப்படி ஏறுகிறது ?

ஏதோ ஒரு வேலையாக எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம். மனமெல்லாம் அந்த வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. வழியிலே ஒரு குழந்தை ஏந்திய சிறுமி பிச்சைக்காக கையை ஏந்துகிறாள். நம்மை அறியாமலே அவளுக்கு பாக்கெட்டில் இருக்கும் எட்டணாவையோ ஒரு ரூபாயோ போட்டுச் செல்கிறோம்.

இன்னொருமுறை நெரிசல் மிக்க பேருந்து நிலையத்தில் எங்கு செல்வது என்று புரியாது திகைத்து வழிகேட்கும் மூதாட்டியை அவருக்கு உரிய பேருந்தில் அழைத்துச் சென்று ஏற்றி விட்டிருப்போம்.
மற்றொரு முறை வங்கியில் காசோலை எழுதத் தெரியாத அன்பருக்கு அதை பூர்த்தி செய்து பணம் எடுப்பதற்கு உதவி செய்திருப்போம்....

சம்பளம் வாங்கியதும் பிடித்தல்களைப் பற்றி கவலைப்படாமல் கையிலுள்ள பணத்திற்காக திட்டம் போடுவது போல நம் சிந்தனை ஓட்டம் நம் வேலையை பற்றியதாக இருப்பதால் இவை எதுவும் நினைவில் நிற்பதில்லை, பிரதிபலன் கருதாது செய்யப்பட்ட இக்கருமங்களுக்கு என்ன பலன் இருக்க முடியும்?

இறைவனின் கணக்கு மிகச் சரியாக வேலை செய்வதால் இவற்றையெல்லாம் விட்டு விடுவதிலை. அதை நம் பெயரில் பக்தர் சேம வைப்பு கணக்கில் சேர்த்து விடுகிறான்.

வீட்டில் ஒருவருக்கு உடல் சரியில்லை, நோன்பு நேர்க்கிறோம். சரியாவதும் இல்லாததும் விதிப்படி நடக்கிறது. ஆனால் நோன்பு நேர்த்ததின் பலன் எந்த கணக்கில் சேர்க்கிறது?

மழைக்காகவோ குளிருக்காகவோ வேலைக்காரி பழைய துணிகளைக் கேட்டு வாங்கி செல்கிறாள். அதை யாரும் கணக்கு பார்ப்பதில்லை. அன்னதானம் செய்கிறேன் என்றோ கூழ் ஊத்துகிறோம் என்று நன்கொடை கேட்டு வருவோர்க்கு பத்தோ இருபதோ கொடுத்து அனுப்புகிறோம், இவற்றுக்கானக் கணக்கு எங்கே வைக்கப்படுகிறது ?

இப்படி எண்ணிறந்த முறையில் அன்பின் விளைவால் வெளிப்படும் தன்னலமற்ற ஒவ்வொரு செயலையும் அவரவர்க்கான பக்தர் சேம நல வைப்பில் சேர்த்து விடுகிறான். அது என்றைக்கிருந்தாலும் அவருடைய நலத்திற்கே பயன்படுத்தப்படுகிறது.

எத்தனை யுகங்கள் ஆனாலும் அந்தக் கணக்கு மறக்கப்படுவதில்லை என்று கபீர்தாஸர் உறுதி அளிக்கிறார்.

भक्ति बीज पलटै नहीं, जुग जाय अनन्त ।
ऊंच नीच घर अवतरै, होय सन्त का सन्त ॥


பத்தியெனும் வித்துக்கு அழிவில்லை, யுகம் அனந்தம் கழியினுமே
முத்தருக் கில்லை குடிமேல் கீழென்றும், முத்த ரென்றும் முத்தரே


(பத்தி=பக்தி; வித்து =விதை ; முத்தர்= ஞானிகள் ; யுகம் அனந்தம்= கணக்கற்ற யுகங்கள்)

[** கபீர்தாஸ் காலத்தில் ஜாதி வித்தியாசங்கள் மிகவும் தீவிரமாகவே இருந்தது. அவரையும் இழிகுலத்தை சேர்ந்தவர் என்று வெறுத்தவர்கள் உண்டு. பல உண்மையான சாதகர்களுக்கும் கூட இது ஒரு பெரும் மனத்தடையாக இருந்தது. எனவேதான் ஞானியரை அண்டி வழி தேட விரும்புவோர்க்கு குடி பிறப்பைப் பற்றிய எண்ணம் தடையாகி விடக் கூடாது என்ற ஆதங்கத்தில் சொல்லப் பட்டதாக நினைக்க வேண்டிருக்கிறது.]

அன்பின் அடிப்படையில் எழும் எந்த ஒரு செயலும் பக்தியின் வெளிப்பாடுதான். இறைவனுக்கு மிகவும் உவப்பு தருவது அதுவே. அப்போது அவனே இழுத்து அணைத்துக் கொள்கிறான்.

அதை உணர்த்தும் விவிலியத்தில் வரும் சில வரிகள்: (Matthew)

Come, ye blessed of my Father, inherit the kingdom prepared for you from the foundation of the world: (25:34)

for I was hungry, and ye gave me to eat; I was thirsty, and ye gave me drink; I was a stranger, and ye took me in (25:35)...."....,

'I can guarantee this truth: Whatever you did for one of my brothers or sisters, no matter how unimportant [they seemed], you did for me. (25:40)


எம் தந்தையால் ஆசீர்வதிக்கப் பெற்றவர்களே வருக. பிரபஞ்சத்தில் உங்களுக்கெனவே உருவாகப்பட்ட சாம்ராஜ்யம் இதோ.

(ஏனெனில்) நான் பசித்திருந்தேன் எனக்கு உணவளித்தீர்; தாகத்தில் தவித்தேன் அருந்த தண்ணீர் கொடுத்தீர்; நான் அயலாள் ஆயினும் உள்ளே வரவேற்றீர்...

உங்களுக்கு இந்த உண்மையை நான் உறுதியளிக்கிறேன். என்னுடைய சகோதரர்கள் அல்லது சகோதரிகளில் ஒருவருக்கு நீங்கள் ஏது செய்திருப்பினும் - அது முக்கியத்துவமே இல்லாததாய் காணப்பட்டாலும்- அது நீங்கள் எனக்கே செய்ததாகும்.


இப்படி பல ஜன்மாந்திர சேம வைப்புக் கணக்கின் பயனாக இன்று நம் மனம் ஆன்மீக வழிக்கு திரும்பியுள்ளது. ஆன்மீக விஷயங்களை கேட்பதில் நாட்டம் கொள்கிறது. ஞானியர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும் அவர்களை கண்டு அணு்கி உய்வடையவும் விழைகிறது்.

மனிதப் பிறவி கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொண்டால் ஆன்மீகப் பாதையில் நமது முன்னேற்றம் துரிதமாகும். அக்காரணத்தினால்தான் ஞானியரை, அவரது குடி பிறப்பு பற்றிய சிந்தனை அற்று பக்தி உணர்ச்சியோடு அணுக வேண்டுமென்று கபீர் வலியுறுத்துகிறார். ஏனெனில் அவர்களுடைய சத்சங்கம் மூலமாகவே நம் அறியாமை விலகி பக்தியையும் ஞானத்தையும் பெருக்கிக் கொள்ள முடியும்.

பலர் நினைப்பது போல் பக்தி என்பது கடுமையான தவம் அல்ல. மனதில் பக்தி (அன்பு) இல்லாமல் கண்மூடித்தனமாக உடலை வருத்தி செய்யும் நோன்புகளால் பயனில்லை என்பதை திருமூலரும் சொல்லுகிறார்.

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம்குழை வார்க்கு அன்றி
என்போன் மணியினை எய்த வொண்ணாதே.


இறைவன் ஆராதனைக்கென தன்னுடையே எலும்பையே விறகாக்கி, தன் தசையை அறுத்து தீயில் பொரித்து நைவேத்தியமாய் படைப்பினும் என்னைப்போல் அன்போடு உள்ளம் உருகி நெகிழ்வார்களுக்கல்லாமல் இறைவனை அடைய முடியாது.

இடைக்காட்டுச் சித்தர், விவிலியம், திருமூலர் யாவரும் சொல்வதை வைத்துப் பார்த்தால் அன்பும் பக்தியும் ஒன்றே. பிறரிடத்து காட்டும் தன்னலமற்ற உதவிகள் அனைத்தும் அன்பின் வெளிப்பாடே. அதை பக்தியின் கணக்கிலே இறைவன் சேர்த்துக் கொள்கிறான். பக்தியினால் பழைய வினைகள் அழிந்து போகும் (அவித்த வித்து).

பக்தியுடன் கூடிய நம்முடைய சிறு சிறு செயல்களின் பலன் ஆன்மீகத்தில் மேலும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை நல்லவர்கள், சாதுக்கள் சேர்க்கை போன்றவற்றின் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

கண்ணன் மூலமும் கீதையில் அதே உறுதிமொழி வழங்கப்படுகிறது.

“न हि कल्याण-कृत् कश्चित दुर्गतिम् तात गच्छति" : (6:40)

சத் காரியங்களில் ஈடுபட்டவனுக்கு துர்கதி என்பது கிடையாது.


எதை வைத்து கண்ணன் இந்த உறுதி மொழி கொடுத்தான் என்ற பின்ணணியை கபீர்தாஸர் நமக்குத் தெளிவாக சொல்லிவிட்டார். "எத்தனை யுகங்கள் ஆனாலும் அழியாத சேமிப்புக் கணக்கா" ! சரி சரி. கபீர்தாஸர் மாதிரி ஆசான் இருக்கும்போது நமக்கென்ன கவலை.