Showing posts with label திருமூலர். Show all posts
Showing posts with label திருமூலர். Show all posts

Saturday, December 25, 2021

அவ்வியம் பேசி அறங்கெடுதல்

      இன்று கிருஸ்மஸ் தினம்.  2021 ஆம் ஆண்டும்  நிறைவு பெறப் போகிறது. இரண்டு வருடங்களாக வைரஸ் தொற்று காரணமாக தளர்ந்து போன உலக மக்கள் சிறிது சிறிதாக இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

   ஓரளவுக்கு இந்த வைரஸ்,  மனிதருக்கு அவர்களுடைய ஆற்றல்களின் எல்லையை சுட்டிக் காட்டியுள்ளது. இயற்கையை வெல்ல வேண்டும் என்னும் போதெல்லாம் அவர்களுடைய தலையில் ஒரு குட்டு வைக்கப்படுகிறது.

மனிதனுக்கு வேண்டியது பணிவு, நன்றியுணர்ச்சி.

இதை அவன் மறக்கும் போது அவன் அழிவை நோக்கிப் பயணக்கிறான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.  எப்போது தன்னம்பிக்கை அதிகமாகி ஆணவம் தலையெடுக்குமோ அப்போது இந்த நோய் ஆரம்பிக்கிறது.

இதன் முதல் அறிகுறி பிறரிடம் குறை அல்லது குற்றம் காண்பது. 

"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" ஔவையாரின் முது மொழி. 

விவிலியத்தில் இதைப் பற்றிய மிக முக்கியமான எச்சரிக்கை அடிக்கடி மேற்கோள் காட்டப் பெறுகிறது.


 "பிறரை ஒரு விரலால் சுட்டும் பொழுது மூன்று விரல்கள் உன்னை சுட்டுகின்றன என்பதை நினை"

குற்றம் குறைகள் இல்லாதவர் எவரும் இருக்க முடியாது;  தன்னைத் திருத்திக் கொள்ள முயல்பவனுக்கு பிறர் குற்றங்கள் பெரிதாகத் தெரியாது என்பதே இதன் மூலம் சொல்லப்படுகிறது.

மேலும் ஜீஸஸ் சொல்லுவார்.

" ஒருவரை ஒருவர் எடை போட்டு குற்றங் காணாதீர். கடவுளின் ஆணைகளை பின்பற்றுவோர் எவரும் பிறர் குறைகளை பேசுவதில்லை. அது அந்தக் கடவுளின் ஆணையையே, கடவுளையே, குற்றம் சொல்வதாகும். எப்போது குற்றங்களை பேசுகிறீர்களோ அப்போதே அவன் ஆணையை மீறினவர்கள் ஆவீர்கள். கடவுள் ஒருவரே சட்டம் இயற்ற வல்லவர் தீர்ப்பும் சொல்லக் கூடியவ்ர். இதில் நீங்கள் யார் உடனிருப்பவர்களை குறை சொல்ல? " (மத்தேயு 7:1)

" .......நீ பிறரை குற்றம் பார்க்காவிட்டால் கடவுளும் உன் குற்றங்களை பொருட்படுத்தமாட்டார். பிறரை மன்னித்து விடு. கடவுளும் உன்னை மன்னிப்பார். பிறருக்கு  தானம் செய். உன்னுடைய அளவையிலேயே பலமடங்கை திருப்பி அவர் அளிப்பார் " ( ல்யூக் 7-37-38)

 இதே கருத்தை கபீரும் தம்முடைய ஈரடி ஒன்றில் உரைக்கிறார்.

दोस पराए देखि करि, चला हसन्‍त हसन्‍त |
अपने याद न आवई, जिनका आदि न अंत  ||

பிறன்தன் குறைகள் பேசி எள்ளி எள்ளி  நகைப்பரே | 

மறந்தும் தம் குறை நினையார், அதற்கு ஆதி யந்த மிலையே ||

இந்த உண்மையை உணர்ந்த  ஆன்மீக அருளார்கள் தம்மை எப்போதும் உயர்த்தி கொள்வதே இல்லை. ஏனெனில் அவர்கள் இறைவனை முழுதும் நம்பி இருப்பவர்கள். அவனுடைய படைப்பில் குற்றம் குறைகள் இருப்பதாக அவர்கள் நம்புவதில்லை. ஏதோ ஒரு பெரிய திட்டத்தோடு தான் அந்த கடவுளின் நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்கை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர் என்னும் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள். 

நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்

ஆயினும் அருளிய அருட்பெருஞ்சோதி  ( 308)  

என்று அருட்பிரகாச வள்ளலார் தம் தகுதி இன்மையை அருட்பெருஞ்சோதி அகவலில்  பாடுகிறார்.

அப்படி இருந்தும் அவன் ஆட்கொள்ளத் தயாராக இருக்கிறானே என்பதையும் நினைந்து போற்றுகிறார்.

கூற்று உதைத்து என்பால் குற்றமும் குணம் கொண்டு 

ஆற்றன் மிக்கு அளித்து அருட்பெருஞ்சோதி 

என்று இறைவனின் பெருங்கருணையை போற்றுகிறார்.

பணிவுடையவனையே  இறைவன் எப்போதும் இறைவன் விரும்புகிறான்.  அதனால் தான் மாணிக்கவாசகருக்கும் தானே ஒரு வேதியர் வடிவில் வந்து அவருக்காக திருவாசகத்தை எழுதி அருளினார். சுமார் முப்பது பாடல்களில் தன்னை நாயினும் கடையனாக பாவித்து தனக்கு அருள் செய்த சிவன் பெருமையை பாடுகிறார்.

நாயிற் கடைபட்ட நம்மையும் ஒரு பொருட்படுத்து

தாயிற் பெரிதும்  தயாவுடைய தம்பெருமான் 

மாயப்பிறப்பு அறுத்தாண்டான் என் வல்வினையின்

வாயிற் பொடி அட்டி பூவல்லிக் கொய்யாமோ -   ( திருப்பூவல்லி )

ஒருவன் தன்னுடைய நிறைகுறைகளை ஆராயத் தலைப்பட்டால் , கபீர் சொல்வது போல் முடிவில்லா குறைகளே அதிகம் காணப்படும்.  விளைநிலத்தில் தோன்றும் களைகள் போன்றவை அவை. அதற்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை.

 வினைப்புலமாகிய இப்பிறவியில், களைகளை களையக் களைய மீண்டும் மீண்டும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கும், இந்த களையும் முயற்சியில் பணிவு உள்ளம் கொண்டவன் மட்டுமே ஈடுபட்டிருப்பான். அவனுக்கு பிறரது  குறைகளை பேச நேரம் ஏது?

அம்முயற்சியின் பயனாக அவன் மீது எல்லையில்லாக் கருணை கொண்டு -வள்ளல் பெருமான் சொல்வது போல் - அவனுடைய குற்றங்களையும் குணமாகவே கொண்டு இந்த மாயப் பிறப்பை அறுத்து அவனை ஆட்கொள்ள முன் வருகிறான் இறைவன்.

செய்யக்கூடாதவற்றை பட்டியலிடும் போது திருமூலர் சொல்வது அவ்வியம் பேசாதீர் என்பதே.  அவ்வியம் என்றால் பிறரது குற்றங் குறைகளை அலசுவது. அதனால் செய்கின்ற அறங்கள் போய் பாவம் வரும் என்கிறார்.

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்

வெவ்வியனாகி பிறர்பொருள் வவ்வன்மின்

செவ்வியனாகிச் சிறந்துண்ணும் போது ஒரு

தவ்விக் கொடுண்மின் தலைபட்ட போதே  - திருமந்திரம் 

பிறரைப் பற்றி புறங்கூறி பாவத்தை தேடிக் கொள்ளாதீர்கள்.

தீய குணம் கொண்டு பிறர் பொருளுக்கு ஆசைப் படாதீர்கள்

உண்ணும் போது மற்றவர்கட்கு கொடுத்து உண்ணும் நல்ல பண்பை பேணுங்கள்

இவற்றை செய்தால் நீங்கள் நலமாக வாழ்வீர்கள். பிறருக்கு நன்மை செய்தால் இறைவன் நமக்கு நன்மை செய்கிறார்- இதுவே உலக நியதி.

அனைவருக்கும் கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.


 





Tuesday, December 26, 2017

பன்றியும் பசுமுசு வானரம்

பழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : 

சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் 
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள் 

இப்படி ஆயிரம் ஆயிரம் குணங்கள் எழுவது ஏன் ?
 எப்படி ஆயிரமாயிரம் வர்ணங்கள் மூன்று அடிப்படை வர்ணங்களான (Primary colours)  சிவப்பு மஞ்சள் நீலம் என்பனவற்றின் பலவித கலவைகளாக உருவெடுத்தனவோ அப்படியே தாமசம், ரஜசம் சத்துவம் என்ற மூன்று அடிப்படை குணங்களின் கலவைகளாக மனிதர்களின் ஆயிரம் குணங்களை கொள்ளலாம்.

Sunday, July 17, 2016

விளக்கில் விளங்கும் விளக்கவர்


மந்திரங்களில் சிறந்தது காயத்ரி. ஆண் பெண் வேற்றுமையின்றி எல்லோராலும் எக்காலத்தும் சொல்லப்படலாம். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பழக்கப்படுத்தினால் அவர்கள் பண்பட்டவர்களாகவும் புத்தி கூர்மையுடனும்  திகழ்வார்கள் என்றெல்லாம் போற்றாத ஆன்மீகக் குருக்களோ, சமயத் தலைவர்களோ கிடையாது எனலாம். அதன் அர்த்தம் புரிந்து கொண்டு மனம் ஒன்றி சொல்லும் போது அதன் பலன் பலமடங்கு பெருகிடும் என்றும் சொல்கின்றனர். புரிந்து கொள்ள அர்த்தம் என்று பார்த்தால் 

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக 
என்பதாக வெகு எளிதாகவே இருக்கிறது.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் ‘மனம் ஒன்றி’ நம்மால் சொல்ல முடியாமல் போவது தான். இதனால்தான் ஒருவேளை அதன் மகிமை புலப்படாமல் போகிறதோ என்னவோ என்று தோன்றுகிறது. 

பெரிய மஹான்களும், சத்தியம் அறிந்த பெரியோர்களால் போற்றப்படும் ஒன்றின் பெருமை நமக்கு புரிபடாமல் போகும்போது குறை நம்மிடம் தானே !
பல வருடங்களாக மனதை நெருடிக் கொண்டிருக்கும் இந்த விஷயத்தை புரிந்து கொள்ள முடியாமல் மனதை எப்படி ஒன்ற வைப்பது?

இப்படி இருக்கும் போது LIGHT MEDITATION பற்றிக் கேள்விப்பட்டு அதை கை கொள்ளலாம் என்று விவாதிப்போது ‘காலங்காலமா சொல்ற காயத்ரிய விட்டுட்டு  லைட் மெடிடேஷனாம். அதுக்கு மந்திரம் வேண்டாமாம். காயத்ரியில வர்ற ஒவ்வொரு சப்தத்துக்கும் ஒரு வைப்ரேஷன் இருக்கு. நம்முடைய உடம்புல இருக்கிற அத்தனை நாடிகளையும் அது சுத்தப்படுத்துகிறது. அதை விட்டுவிடுவதா?” என்று ஒரு குட்டு. 

நம் தேடல்களுக்கு ஒரு விடை கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் காலம் உருண்டு கொண்டுதான் இருக்கிறது. ஆராய்ச்சி புத்தியுள்ளவனுக்கு ஆன்மீகம் கிட்டாது என்ற சொல் வழக்கு சரிதான் போலும். எனக்கு ஆன்மீகம் கைகூடவில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் தேடி அலைவதினாலோ என்னவோ.  

இந்நிலையில் ஞானதேவரின் ஞானேஸ்வரியின் ஆங்கில மொழி பெயர்ப்பை வாசிக்க நேர்ந்த்து. ஞானேஸ்வரி என்பது பகவத் கீதைக்கு மராட்டிய மொழியில் அவர் எழுதியுள்ள விளக்கம். 
அது எளிய பாடல்களாக பாமரர்களுக்கும் புரியும் வகையில் அன்றைய மொழி வழக்கில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் எழுதியது. பகவத்கீதையின் ஒரு சுலோகத்திற்கு பல சுலோகங்களில் விளக்கம் இருக்கும். அதில் பல எளிய உதாரணங்கள் இருக்கும். 
அவருடைய சகோதரர்கள் சகோதரியின் வாழ்க்கை சரிதம் மிக அற்புதமான பக்தி இலக்கியம் ஆகும்.

பகவத் கீதை அத்தியாயம் 18-ல் “பிரஹ்ம பூத:…” என்று ஆரம்பிக்கும் 54 ஆவது சுலோகத்தின் விளக்கமாக 39 செய்யுட்களில் விளக்கம் (1091-1129) தந்திருக்கிறார். அதில்  1116 வது செய்யுளின் பொருள்* என் தேடலுக்கு விடை கொடுப்பது போல்  தோன்றியது.

“ it is the light by which there is experience of the existence or non existence of the world, just as our pure being on which experiencing of dream state or the waking state takes place.”

[*Shri Dnyaneshwari by Diwakar Ghaisas : Published by Keshav Bhikaji Dhawale, Mumbai]

இதைத் தான் உள்ளே ஒளிரும் ஆத்மா என்று குறிப்பிடுகின்றனரோ ! 
அதற்கு உலகில் நடக்கும் எந்த விவகாரத்திலும் சம்பந்தம் கிடையாது. அதே சமயத்தில் அது இல்லாமல் போனால் விவகாரமே கிடையாது.

ஞானதேவர் இதை ஒரு விளக்கின் வெளிச்சத்துடன் தொடர்பு படுத்துகிறார். விளக்கின் ஒளி கொண்டு கூத்து நடக்கலாம். அல்லது திருடர்கள் தங்கள் பங்கை பிரித்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் ஆதாரமாக இருப்பது விளக்கின் ஒளி. அவர்கள் நடவடிக்களால் அது பாதிக்கப்படுவதில்லை. அது இருக்கும் வரை பலவித நடப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கும். அது போய்விட்டால் யாவும் முற்றிலும் நின்று போய்விடும்.
இப்பொழுது காயத்ரி மந்திரத்தில் போற்றப்படும் அந்த சுடருக்கானத் தியானத்தின் பொருள் பிடிபட்டது போல் இருக்கிறது. 

எந்த சுடரால் மூவுலங்களும் இயங்குகின்றனவோ அதே சுடரால் இந்த உடலின் இயக்கமும் நடக்கிறது. அது எதனாலும் பாதிக்கப்படாத தன்மை உடையது. அந்த தன்மையை அடைவது தான் இந்த செபம் செய்வதின் நோக்கம்.
.
எவனொருவன் தன்னைச் சுற்றி நடக்கும் செயல்களால் நிலைகுலையாது சாட்சி பாவத்துடன் தடுமாற்றமில்லாமல் கடமைகளை செய்ய முடிகிறதோ அவனே சிறந்த சாதகன். அதை சாதிக்கக் கூடிய வழி காயத்ரி மந்திரத்தின் இந்த ”விளக்கின் சாட்சி” தாத்பர்யத்தில் மனம் ஒன்றினால் சுலபமாகி விடும்.

தத்தளிப்பவன் கையிற்கு பிடித்துக் கொள்ள கட்டை கிடைத்தது போலாயிற்று. இப்போது தினசரி எண்ணங்கள் எது வேண்டுமானலும் செபத்தின் போது வரட்டுமே. அதை வெளிச்சத்தில் வேடிக்கை பார் என்று மனதிற்கு சொல்ல முடிகிறது. ஏனெனில் அவ்வெளிச்சம் இல்லையென்றால் நாமே இல்லையே! அந்த எண்ணங்கள் நம்மை அடித்துக் கொண்டு போகாமல், நாம் அமர்ந்திருப்பதே செபத்திற்காக என்று அதை இழுத்து வர முடிகிறது. இதைத் தொடர்து பயிற்சி செய்தால் செய்வோரின் முயற்சியின் ஆழம் பொருத்து முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. .

இப்போது பகவத்கீதையின் மூல சுலோகத்திற்குப் போவோம். (18-54)
“When he becomes one with brahman, he is very peaceful in his consciousness: he does not feel sorry about anything nor desires to get anything; he has equanimity towards all Beings and thus he attains the supreme devotion for me”.

அதே தான் இது.  

மிக அழகாக எளிமையாகச் சொல்லிவிட்டாரே ஞானதேவர்  என்று தோன்றியது. அந்த சுடரை தியானம் செய்யச் செய்ய வெளியிலே இருக்கும் இறைவன் உள்ளே சுத்த சித்துருவமாய் எம்பெருமானாய் ஒளிர்விடத்  தொடங்குகிறான். அப்போது அவனுக்கு தேவைகள் இல்லை. வள்ளலார் சொல்வது போல் எவ்வுயிரும் தம் உயிராய் எண்ணும் பக்குவம் வந்துவிடுகிறது. அதனால் தான் அவரும் அந்த பரஞ்சோதியை அருட் பெருஞ்சோதியாய் போற்றியிருக்கிறார்.
  
இதே உண்மை ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கதைகளினாலோ ஆதிசங்கர் மற்றும் எண்ணற்ற ஆசார்யர்களின் விவரணைகளாலோ ஏன் பிடிபடாமல் போயிற்று? ஏனென்றால் கேள்விகள் இல்லாமல் விடைகள் மனதில் ஒட்டுவதில்லை. அவை மறந்து போகக் கூடிய வெறும் விஷயங்களாகத் தான் இருக்கும்.

பசித்தவனுக்குத்தான் உணவு ருசிக்கும். பசி எடுக்கையில் உணவு படைக்க அன்னையோ மனைவியோ வருவது போல ஞானப் பசியைத் தீர்க்கவும் ஒரு குரு அவசியம்.  அந்த குருவின் அவசியத்தை கபீர் கூறுகிறார்:

पीछे लागा जाई था,  लोक वेद के साथी ।
आगैं थैं सतगुरु मिल्या, दीपक दिया साथि ॥

பின்பற்றிச் சென்றேன் உலகோரை, வேதங்கள் சொல்லும் வழியிலே
என்பற்றித் தந்தார் குருவும், பயனுண்டு விளக்குக்கு வழியிலே

கபீர் சொல்வது ஞானவிளக்கு. குரு கொடுக்கும் ஞான விளக்கு கைக்கு வந்த பின்னே எந்த பாதையில் சென்றாலும் வழி தவறாது குறி போய் சேரலாம்.  அந்த ஞான விளக்கு இல்லாமல் ஆன்மீகப் பயணம் முடியாது.

வேறொருவர் சொல்கிறார் என்பதாலோ அல்லது வேதங்கள் அல்லது கிரந்தம் இப்படி சொல்லியிருக்கிறதே என்றோ பிடிவாதம் பிடிக்கும் மனதுக்கு வழியில் முன்னேற்றம் இருப்பதில்லை. ஏதேதோ அல்ப காரணங்களால் தடைபட்டு போகிறது. அந்த தடைகளை களைந்து நமக்கு வழி காட்டுபவர் குரு. இதை திருமூலர் வரிகளிலும் காணலாம்.

விளக்கினை  யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே ( திருமந்திரம்1818)

ஞானம் என்னும் விளக்கை ஏற்றினால் அருவமான இறைவனைப் (வெளியைப்) பற்றி அறியலாம். அப்படிப்பட்ட ஞானம் வந்த பின் பல பிறவிகளாக தொடர்ந்து வருகின்ற கர்மவினையால் வரும் வேதனைகள் மறையும். அதற்குத் தேவை அதே ஞானம் உடைய ஒரு வழிகாட்டி. அவர்கள் அந்த ஞானத்தைப் படைத்திருப்பதனாலேயே சுயம் பிரகாசிகள் –விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே !!

காயத்ரி மந்திரத்தை செபிப்பதால் நாடி சுத்தி ஏற்படும் என்பதை விளக்கினின் முன்னே வேதனை மாறும் என்று திருமூலரும் உறுதி செய்கின்றாரோ !

இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது குரு ரவிசங்கர் சொன்ன விளக்கம் ஒன்று whatsapp-ல் வந்தது. நிர்குண ஜோதி தியானத்தின் ஆராய்ச்சிகளின் நடுவே  சகுண உபாசனையும் அதே உண்மைக்கு இட்டுச் செல்கிறது என்று புரிந்தது.

பாண்டு என்பது பஞ்ச பூதங்களைக் குறிக்கும். ரங்கா என்பது அரங்கம் அல்லது மேடை. எனவே பாண்டுரங்கா என்பது பஞ்சபூதங்களினால் அமைக்கப்பட்ட இவ்வுலக மேடை. அடல் அல்லது விட்டல் என்றால் அசையாதிருப்பது, எல்லாவற்றையும் ஆட்டிவைப்பவன். இயக்குனர் ஆனால் அவன் அதில் இல்லை. அவனே விட்டலன்.  
எனவே பாண்டுரங்க விட்டலன் என்னும் போதும் அதே பரம்பொருள் சகுணமாக் சுட்டிக்காட்டப்படுகிறது

ஜுலை 19 அன்று குரு பூர்ணிமையில், இந்நாட்டின் பெரும் குருமார்களின் தாள் வணங்கி அவர்கள் அருள் என்றும் இவ்வுலகிற்கு வழி காட்டுவதாக என்று வேண்டிக் கொள்கிறேன்.

பின் குறிப்பு : சுப்பு தாத்தா ஏற்கனவே மேற்கண்ட கபீர் ஈரடியை, ஜீவி ஐயாவின் அகல் விளக்கு அற்புதம் என்ற பதிவில் பின்னூட்டமாக குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு நன்றிகள்.

எண்ணிக்கையில் 9 என்பது Divine Number என்று போற்றப்படுகிறது. இந்த பதிவின் போது எடுத்துக்காட்டானஅனைத்து குறிப்புகளின் இலக்கங்களின் கூட்டு 9 –ல் முடிவு பெற்றுள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. முதலில் கீதை 18 ஆம் அத்தியாயம். அடுத்து 54 வது சுலோகம். ஞானேஸ்வரியில் 1116 ஆவது சுலோகம் கடைசியில் திருமூலரின் செய்யுள் 1818

எங்கிருந்தோ அவர்கள் ஆட்டுவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது J

Saturday, January 08, 2011

சிறப்பு இடுகை -விருந்தினர் பதிவு-8

முதலில் புத்தாண்டு வாழ்த்து, அதுவும் முக்கிய விருந்தினரிடமிருந்து :)


(click the figure for larger view)

{என்ன இது? கபீர் வலைப்பூவிலே வந்து தன்னுடைய வலைப்பூவுக்கு ஆள் சேர்க்கிறாரே என்று யாரும் அவரைத் தப்பாக நினைக்க வேண்டாம். அது அவருடைய நகைச்சுவை உணர்வை சுட்டிக் காட்ட அவருடைய 2007 வருடத்து பதிவிற்கு நான் கொடுத்த புதுப் பொலிவு..ஹி ஹி அவ்வளவுதான். }

யானைக்குட்டியை கண்டதுமே விருந்தினர் யாரென்று தெரிந்திருக்க வேண்டுமே!
ஆயிரம் இடுகைகள் தாண்டிய பதிவர் திலகம், இதிகாசச் செம்மல், தாமிரபரணி கண்டார், திருக்கையிலாயம் கொண்டார், சிதம்பரம் வென்றார், அண்ணாமலையை ஆட்கொண்டார், இராம காதையுடனும் கண்ணன் கதையுடனும் இணைய உலகின் ஈடில்லாத் தானைத் தலைவி வருகிறார்,.... வருகிறார் .....பராக்.... பராக்
என்று கட்டியம் கூறி வரவேற்கப்பட வேண்டியவர் நம் தலைவி. அவரை உங்களுக்கு அறிமுகம் செய்வது கை விளக்கால் சூரியனை காட்ட முயல்வது போன்ற நகைப்பிற்கான விஷயம்.

ஆனால் சூரியனுக்கு நீராஜனம் காட்டினால் அது ஆசியை வேண்டுவது போலாகி விடுமல்லவா !

அதற்கான வாய்ப்பை நல்கிய இன்றைய சிறப்பு விருந்தினரான திருமதி கீதா சாம்பசிவம் அவர்களை உங்கள் அனைவர் சார்பாகவும் மனமார வரவேற்கிறேன்.

இவருடைய பதிவு உலகப் பயணத்தைப்பற்றி தமது ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிந்தாமணியில் கூறியிருக்கிறார், படியுங்கள்.

அவர் இடுகைகளை பிரசுரிக்கும் வேகம் கண்டு எப்போதும் பிரமிக்கிறேன்! தொடர்ந்து எழுதும் பழக்கம் இருக்கும் ஒரு பதிவர் வாரம் ஒரு இடுகை எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம். கொஞ்சம் சுறுசுறுப்பானவர் வாரம் இரண்டு இடுவர். வியாபார நோக்கத்தோடு எழுதும் ஒரு சிலர் தினம் ஒன்று கூட எழுதலாம்.

ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாரத்திற்கு ஒன்பது இடுகைகளை இடும் தலைவியின் எனர்ஜியை என்ன சொல்வது ? வாரத்திற்கு ஒன்பது இடுகைகள் !!!!!! நான் சொல்லவில்லை. கூகிள் ரீடர் சொல்கிறது. இது எண்ணங்கள் வலைப்பூவில்மட்டும். இன்னமும் மூன்று நான்கு வலைப்பூக்கள் , நான்கோ ஐந்தோ குழுமங்கள்; போதாதற்கு பஸ் (BUZZ) ட்ரெயின் என்று எங்கெங்கே பார்த்தாலும் கீதா மேடம் தான். அவர்கள் எழுதுவதை படிக்கக்கூட நமக்கு நேரம் இல்லாமல் முழிக்கிறோமே இவர் எப்படி இப்படி எழுதித் தள்ளுகிறார்? அவர் தொடாத துறையே கிடையாது எனலாம். ஏதாவது ஆட்களை நியமித்து தட்டச்சு செய்ய ஆபீஸ் மாதிரி நடத்துறாரா என்ற சந்தேகம் கூட வருவது உண்டு !

எப்படியோ தரமான வாசிப்பிற்காக சிரிக்கச் சிரிக்கவும், சிந்திக்க வைக்கவும், நம் கலாசாரத்தை மறக்காமல் போற்ற வேண்டியவைகளை அவ்வப்போது நினைவு படுத்தியும் சுறுசுறுப்புடன் செய்து வரும் இவரது எழுத்து சேவை பதிவுலகில் அபாரமானது.

இவர் எத்தனை வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார் என்ற கணக்கு சரியாகத் தெரியாது. எனக்கு கிடைத்த வரையில் இவரது வலைப்பூக்களும் இடுகை எண்ணிக்கைகளும் வருமாறு.

எண்ணங்கள் (1125 +) கண்ணனுக்காக ( 36) சாப்பிடலாம் வாங்க (27) பேசும் பொற்சித்திரமே (38) என் பயணங்களில் (128 ) ஆன்மீகப்பயணம் (302) (பக்தி) ராம ஆஞ்சனேய பிரபாவங்கள் .....etc

நம் நாட்டின் புராண இதிகாசங்களையும் அதிகம் அறியப்படாத வரலாறுகளையும் ஆழமாகப் படித்து அவற்றை மெகா சீரியல்கள் போலவே அலுப்பில்லாமல் எழுதிக் குவிக்கிறார் கீதா சாம்பசிவம் அவர்கள். அதற்கு அவரே கொடுத்த விளக்கம் :
இந்த ஞானம், யோகம், பிரம்மம் பற்றியும் எழுதாமல் ஏன் புராணக் கதைகள், இதிஹாசக் கதைகள்னு தெரிஞ்சதைப் பத்தி எழுதறேனும் சிலர் கேட்கிறாங்க. நமக்குத் தெரிஞ்சிருந்தாலும் இது பற்றிய முழு அறிவு சில பெரியவங்களுக்கே இருக்கிறதில்லை. அதோட இளைய தலைமுறைக்குச் சுத்தமா இந்த அறிவு இல்லை. அவங்களுக்கு மறுக்கப் பட்டே வந்திருக்கின்றது. இப்போது இணையம் மூலமாய்ப் பலருக்கும் இது சென்றடையும். மேலும் பிரம்மம் பற்றி அறிய வேண்டுமானால் கொஞ்சமாவது இறை உணர்வு, நம்பிக்கை வேணும். முதலில் அதை வளர்த்துக்கணும் இல்லையா? நான் இப்போது தான் பக்தி என்னும் படியிலேயே நிற்கின்றேன். அந்தப் படியைக் கடந்து மேலே செல்லவேண்டும். ஒருவேளை இந்தப் பிறவியில் அது நடக்குமா, நடக்காதா தெரியலை. எத்தனை பிறவி எடுக்கணுமோ தெரியாது. எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மறவாத உள்ளம் வேண்டும் என்பதே என் ஒரே எண்ணம்.

ஜீவி ஐயாவைப் போலவே இவரும் ஒரு தீவிர வாசிப்பு பழக்கம் உடையவர் என்பதை அவருடைய பல பதிவுகள் மூலம் அறியலாம். அதை, சிறு வயதில் அவர் படித்து மனதில் நின்று விட்ட உதாரணத்தின் மூலம் அறியலாம்:
....அந்தப் புத்தகம் தான் "கல்கியின் அமரதாரா". கல்கி அவர்கள் தன் வாழ்நாளின் கடைசியில் எழுத ஆரம்பித்து முடிக்காமலே போனது

‘’ மனதின் எண்ண அலைகளின் ஓட்டமும், ஒரே சமயத்தில் இருவருக்கும் சேர்ந்தாற்போல் எண்ணங்கள் பரிமாற்றம் ஆகும் விந்தையும் சிலிர்க்க வைக்கும். கதையைப் படித்த எல்லாருக்கும் இப்படி இருக்குமா? அல்லது இருந்ததா? தெரியாது! என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு அதிசயம், ஆனந்தம், அபூர்வம், அழகு, எல்லையற்றது!. அவ்வளவுதான். இம்மாதிரியான அன்பை நான் அப்போதுதான் முதன்முதலாய் உணர்ந்தேன். ’’

அந்த அன்பின் அதிசயம் அவரை மிக உறுதியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ இன்றையக் கட்டுரைக்கு அவர் இட்டிருக்கும் தலைப்பும் ‘அன்பெனும் அக்ஷயப் பாத்திரம்”. சென்ற இடுகையில் ஒளியேற்றிய அன்பு இந்த இடுகையில் அட்சயப்பாத்திரமாய் யாவர் மனதையும் நிறைக்க வருகிறது. கீதா சாம்பசிவம் அவர்களை வருக வருக வருக என்று வரவேற்கிறேன்.

இனி விருந்தினர் படைப்பு .....


அன்பெனும் அக்ஷய பாத்திரம்!

கபீரன்பரின், "ஈரக்கம்பளம் சுமையதிகம்" என்னும் பதிவின் இந்தக் குறிப்பிட்ட வரிகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஏனெனில் என்னுடைய குணத்தைச் சுட்டுவதாலோ என்னமோ தெரியவில்லை. அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டிப் பலரும் பெரும் மதிப்பும், மரியாதையும் காட்டுவது பல சமயங்களில் கூச்சத்தையும் எல்லாவற்றையும் விட பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. பாராட்டுக்களின் சுமை என்னை அந்தக் கழுதை சுமக்கும் ஈரக்கம்பளத்தை நினைவூட்டுகிறது. அந்தப் பதிவின் குறிப்பிட்ட இந்தப் பத்திகளே என்னைக் கவர்ந்தவை:

அரைகுறை அறிவுள்ளவர்கள்தான் அதிகம் ஆர்பரிப்பவர்கள் வெண்கலத்தைப் போல. எப்படி உயர்ந்த பொன்னால் செய்தக் கலம் எந்த ஒலியும் எழுப்பாதோ அது போல உயர்ந்தவர்கள் எல்லா காலத்தும் அமைதியோடு இருப்பார்கள்.

ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண விரும்புவோர்க்கு விவாத குணம் இருப்பின் அது ஒரு பெரிய தடைக்கல். சதாசிவ பிரம்மேந்திரர்க்கு இருந்த அந்த பலவீனத்தை போக்குவதற்காகவே அவரை சற்றே மௌனம் காக்கச் சொன்னார் அவரது குரு. அவரோ அதை சிரமேற்க் கொண்டு வாழ்நாள் முழுதுமே மௌனியாகி விட்டார்.

தாயுமான சுவாமிகளின் குருவும் மௌன குருதான்.


இங்கே சொல்லி இருப்பதோ மெளனம், மெளனம், இது தான் ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள், முன்னேற்றம் காண விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது. ஆனால் குறைகுடமாய்க் கூத்தாடும் என்னையும் மதித்து, அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டி என்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் முக்கியமாய்க் கபீரன்பருக்கும் இதை எவ்விதம் தெளிவாக்குவது??

நான் இன்னும் ஆரம்பப் பாடத்தையே ஆரம்பிக்கவில்லை. ஞான வழி என்பதை என்னால் இன்னமும் நினைக்க முடியவில்லை. ஏனெனில் அதற்கு அடிப்படையான பள்ளிப்படிப்பு பக்தியில். அதிலேயே இன்னும் தேர்ச்சி அடையவில்லையே? பக்தி என்றால் என்ன என்பதையே இன்னும் தெரிந்து கொள்ள முயலவில்லை. சாதாரணமாக எல்லாரும் நினைப்பதைப் போலவே கண், மூக்கு, முகம், காது, கைகள், கால்கள் உள்ள ஒரு தேவதையை என் பக்திக்கு என்ற ஏற்பட்ட ஒரு மூர்த்தியை என் இஷ்ட தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் அதைத் தாண்டி அப்பால் போகவில்லை. போக இயலவில்லை என்றே சொல்லலாம்.

நம் கண்ணுக்குத் தெரியாத நிர்குணப்பரமாத்மாவிடம் அன்பு/பக்தி செலுத்துவது என்பதை இன்னமும் என்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றே சொல்லவேண்டும். எனக்குத் தெரிந்தது எல்லாம் நான் வணங்கும் அந்த மூர்த்தியின் பெருமைகளையும், மஹிமைகளையும் எடுத்துச் சொல்லும் புராணங்களில் இருந்து சின்னச் சின்னத் துளிகளே. அதுக்கே இவ்வளவு ஆரவாரம், ஆர்ப்பாட்டத்தோடு இருக்கேன். ஆண்டவனிடம் இன்னமும் பரிபூரண சரணாகதி செய்யும் மனப்பக்குவம் வரவில்லை. பரம்பொருளிடம் அன்பு வைக்கவேண்டும். ஆசை வைக்கக் கூடாது. ஆனால் நானோ ஆசைதான் வைத்திருக்கிறேன். அன்பே சிவம் என்று சொல்லிய திருமூலரின் வார்த்தைகளை உன்னிப்பாய்க் கவனித்தால் புரியும்.

அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே


இதன் பொருள் தெளிவு. யாருக்கும் சொல்லவேண்டியதில்லை. ஆனால் அத்தகையதொரு அன்பைத் திரும்ப எதையும் பிரதிபலனாய் எதிர்பாராத அன்பைக் கொடுக்கிறேனா?? என்னுள்ளே குடிகொண்டிருக்கு அந்த சிவனைக் கண்டு பிடித்து என் ஜீவனை அதனுடன் இணைத்துக்கொள்ளும் வழியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேனா? இல்லை என்பதே பதில். இன்னமும் உலகத்து ஆசைகளை விட்டொழிக்கவில்லை. மாயையாகிய அந்த ஆசைகளும், அவற்றில் ஈடுபாடும், பற்றும் அறவே ஒழியவில்லை. இறைவனிடம் அன்பு செலுத்தச் செலுத்த ஆசைகள் தோன்றுவதையும் முளையிலேயே அறுத்து எறிய வேண்டும் என்கிறார் திருமூலர்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.


இன்னும் ஆசைகள் அகலவில்லை. மாயையில் இருந்து விடுதலை பெறவும் இல்லை. அதற்குண்டான முயற்சிகளும் செய்யவில்லை. மாயை மனதை விட்டு அகல மறுக்கிறது என்றே சொல்லலாம்.

மாயை மாயை என்பர் அறிவாரில்லை மாயையை
மாயையாவது அதுவே மனம் விட்டு அகல மறுப்பதுவே


மாயா மாயை மரியா மனம் உழன்று ஓய்ந்ததே தேகம்
ஓயாது உரைப்பான் கபீர் ஒழியாதே அவாவெனும் தாகம்


கபீரின் ஈரடிகளிலே நம் கபீரன்பர் மேற்கண்ட வாறு மொழிமாற்றம் செய்துள்ளது என்னைப் பொறுத்த வரையிலும் முற்றிலும் பொருத்தமான ஒன்று. என்னிடம் இன்னமும் ஆசைதான் இருக்கிறது.

ஆசைகள் அறுந்து மனம் ஈசனை நாடவேண்டும். இங்கே ஈசன் என்று சொல்லி இருப்பது, நாம் வடிவாய் வணங்கும் விக்ரஹங்களில் அல்ல.

உள்ளே உள்ள அன்பு ஊற்றுச் சுரந்து அதில் தெரியும் ஜோதி மயமான ப்ரபிரும்மத்தை. அன்பு ஊற்றுப் பெருகவேண்டும்.

அன்பானது கொடுக்கும் பொருள்.

அக்ஷய பாத்திரத்தில் எவ்வாறு எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கோ அது போல் கொடுக்கக் கொடுக்க ஊற்றிலிருந்து சுரக்கும் தண்ணீர் போல் கொடுக்கக் கொடுக்க மீண்டும் மீண்டும் அன்பு சுரக்கும்.

ஊற்றுக் கண்ணிலிருந்து தண்ணீர் இறைக்க இறைக்க மீண்டும் மீண்டும் சுரப்பது போல. குழந்தை எத்தனைக் குடித்தாலும் தாய்க்கு மீண்டும் மீண்டும் பால் சுரப்பது போல கொடுக்கக் கொடுக்கக் குறையாத அன்பு ஊற்றுச் சுரக்கவேண்டும்.

அன்பு என்பது பிரதிபலன் எதிர்பாராமல் கொடுத்துக் கொண்டே இருப்பது. கொடுக்கக் கொடுக்க நம் மனம் நிறைகிறதே அதில் தான் பரிபூரண ஆனந்தம் தோன்றும். ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளை விடவும் மனிதனுக்கு மனதும், புத்தியும் பண்பட்டே தான் இருக்கிறது. ஆனாலும் நாம் சரிவர அதைப் பயன்படுத்துவதில்லை.

ஆசையை அன்பு எனத் தவறான புரிதலில் இருக்கிறோம்.

நம் மனதும், புத்தியும் உள்ளிழுக்கப்பட்டு, நான் என்ற அஹங்காரம் ஒழிந்து ஈசனிடம் ஒருமைப்பட்ட நிலையில் செலுத்தும் அன்பையே பக்தி என்றும் சொல்லலாம். அத்தகையதொரு அன்பு எத்தனை பிறவி எடுத்தாலும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஆசையை ஒழிக்க வேண்டும். இந்த அவா என்னும் ஆசையை ஒழிப்பது குறித்து வள்ளுவப் பெருமானும் ஒரு அதிகாரமே எழுதி உள்ளார்.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பினும் வித்து.


எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தின் வித்தே இந்த அவா என்னும் ஆசைதான் என்று பரிமேலழகர் உரை கூறுகிறது. அந்த அவாவை ஒழிக்கவேண்டும். இதற்குத் தேவை ஒருமையுடனேயே ஈசன் திருவடி நினைந்து நினைந்து உருக வேண்டும். நாமே அதுவாகி ஒன்றோடு ஒன்று கலக்கவேண்டும். நாவுக்கரசப் பெருமான் சொன்ன மாதிரி,

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"


என்னும்படிக்கு மெய்ம்மறந்த நிலையில் ஆன்மா அந்தப் பரம்பொருளோடு ஒன்ற வேண்டும்.

இங்கே அன்பின் தத்துவம் பற்றி, அன்பே கடவுள் என்பதைப் பற்றி என் ஆதர்ச புருஷர்களின் ஒருவரான விவேகாநந்தர் கூறி இருப்பதைப் பார்ப்போமா?? இது 1896-ம் ஆண்டு சுவாமி அவர்கள் மாக்ஸ்முல்லருடன் ஆன தமது தரிசனத்திற்குப் பின்னர் கூறியவை. தன் சீடர் ஆன லெக்கெட் என்பவருக்குப் பிரேமையின் மாபெருங்கடல் ஆன சுவாமி எழுதியது பின்வருமாறு:

"சாத்தான் என்று ஒருவன் இருந்தால் அவனைக் கூட நேசிக்கும் நிலைக்கு நான் மெல்லச் சென்று கொண்டிருக்கிறேன். தாசிகள் வசிக்கும் ஒரு விடுதியில் அவர்களைப் பற்றித் தவறாக ஒரு வார்த்தை நினையாமல் உடன் வாழக் கூடியவனாக இருக்கிறேன். சுற்றியுள்ள தீமையைத் தீமையாகக் காணாவிட்டால் உலகுக்கு நல்லது செய்யமுடியாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. மாறாக வேலை செய்யும் ஆற்றல் என்னிடம் அபரிமிதமாய்ப் பெருகியுள்ளது.

எல்லாரையுமெல்லலவற்றையும் அநுகிரஹிக்கவேண்டும் என்று ஆர்வம் கொள்கிறேன். நான் ஒருவிதப் பரவச நிலையை அடைந்து விடுகிறேன்.

நான் பிறந்த தினத்தை வாழ்த்துகிறேன். இங்கு-இந்த மண்ணுலகில்- நாம் எத்தனையோ அன்பையும் தயையும் பெற்றுவிட்டேன். பூரணப் பிரேமையாகிய எது என்னைப் படைத்ததோ, அது என்னுடைய நற்செயல்கள், கெட்ட செயல்கள் சகலத்தையும் காத்திருக்கிறது. நான் யார்?? எப்போதுமே அவன் கையிலுள்ள ஒரு கருவி என்பதைத் தவிர நான் யார்?? அவனுடைய பணிக்காகத் தானே நான் எனது சகலத்தையும்- என் அன்பு மனிதர்களை, என் இன்பத்தை, என் வாழ்வை -நீத்துவிட்டேன்!நான் பிறந்திருக்கிறேன்! அவன் என்னோடு விளையாடுகிற அன்பன். நான் அவனுடைய விளையாட்டுத் தோழன். இந்தச் சராசரத்தில் அர்த்தமோ அறிவோ எதுவும் கிடையாது. எந்த அறிவால் அவனைக் கட்ட முடியும்! லீலை செய்கிற அவன் ஒருவனே இத்தனை கண்ணீராகவும் சிரிப்புக்களாகவும் விளையாடுகிறான்.

இது ரொம்ப வேடிக்கையான உலகம். இதில் ரொம்ப ரொம்ப வேடிக்கையானவன் அவனே. ஆதி அந்தமற்ற அன்பனாகிய அவனை விட வேடிக்கையை நீங்கள் காண முடியாது. ஜன சமுதாயம் எல்லாம் இந்தப் பரந்த மைதானமாகிய உலகத்தில் சகோதரர்களாக, தோழர்களாக விளையாடுவதற்காக விடப்பட்ட கும்மாளிக் குழந்தைகளின் சங்கமே அல்லவா? இதில் யாரைப் புகழ்வது? யாரைப் பழிப்பது? எல்லாமே அவனது லீலை அல்லவா? விளக்கம் வேண்டும் என்கிறார்கள். ஆனால் அவனை எப்படி விளக்க இயலும்?? அவனுக்கு புத்தி கிடையாது; அறிவுமுறைகளும் கிடையாது. நமக்குச் சின்னஞ்சிறிய புத்தியையும் அறிவுமுறைகளையும் தந்து அவன் நம்மை முட்டாள் ஆக்குகிறான். ஆனால் இப்போது நான் முட்டாளாக மாட்டேன். இனி அவன் என்னைத் தூங்கு மூஞ்சியாகக் காண மாட்டான். ஏதோ ஓரிரு விஷயங்கள் கற்றிருக்கிறேன்.

அறிவுக்கும் படிப்புக்கும் பேச்சுக்கும் அப்பால்-அப்பாலுக்கும் அப்பால்--அன்பு என்ற உணர்ச்சியும், "அன்பன்" என்ற உணர்ச்சியும் இருக்கின்றன. தோழா, வா! கிண்ணத்தை நிரப்பு; இந்த அன்பால் நாம் போதை கொள்வோம்.''


[நன்றி : ’அறிவுக்கனலே அருட்புனலே’ ரா. கணபதி, இராமகிருஷ்ணாமடம், சென்னை; பக்கங்கள் 698-700]


அன்புக் கிண்ணத்தை வழிய வழிய நிரப்பி உட்கொண்டு தெய்வ போதை பெற்ற விவேகாநந்தரே தம்மை ஓரிரு விஷயங்கள் மட்டுமே கற்றிருப்பதாய்ச் சொல்லும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்??


இன்றைய கடினமான வாழ்க்கையில் சாதாரணமாய் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் செலுத்தும் அன்பே மறைந்து கொண்டு வருகிறது. அந்த அன்பு மீண்டும் துளிர் விட ஆரம்பித்தால் அதிலிருந்து மனம் மெல்ல மெல்ல ஆசைகள் ஒழிந்து எண்ணங்கள் ஒழிந்து உணர்வுகள் மறைந்து அன்பு பெருக ஆரம்பிக்கும். அத்தகையதொரு அன்பு என்னிடம் மட்டுமில்லாமல் இந்தப் பரந்த உலகின் மாந்தர் அனைவரிடமும் துளிர்க்கப் பிரார்த்திக்கிறேன்.

அதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். முதலில் நம் குடும்பம் என்று ஆரம்பிக்கும் இந்த அன்பு நாளாவட்டத்தில் விரிவடைந்து மற்ற உயிர்களையும் தன்னை உயிராகத் தெரிவித்துக்கொண்டு கொண்டாடிக் குதூகலிக்க வைக்கும்.


பின்னர் இதுவே மேலும் விரிந்து குரு பக்தி/அன்பு, ஈசனிடம் பக்தி/அன்பு என்று போய் இன்னும் மேலே இன்னும் மேலே என்று போய்க் கடைசியில் இரண்டும் ஒன்றாய்க் கலந்து தன்னையும் மறந்துவிடும்.

அத்தகையதொரு அன்புப் பிரவாகம் அனைவரிடத்திலும் சுரக்கப் பிரார்த்தித்துக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.

------------------------------------------------------------------------
நன்றி நவிலல்

கீதா மேடம், இறைவன் என்றென்றும் எழுதுவதில் உங்களுக்குள்ள ஆர்வத்தைக் குறையாமல் பார்த்துக் கொள்ளட்டும். தங்களுடைய "எண்ணங்கள்" இன்று போல் என்றும் அட்சயப் பாத்திரமாய் நல்ல விஷயங்களை உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கட்டும். சூரியனின் பல்வேறு நிலைகளில் வானம் பல வேறு வர்ணங்களை அள்ளித் தெளித்து நம் மனங்களை கொள்ளை கொள்வது போல் உங்களது எண்ணங்களும் பல ரசங்களையும் அள்ளித் தெளிக்கட்டும்.

Madam, what is the secret of your energy ? :))

என்னைப் போன்றவர்களுக்கு -இன்று இல்லை நாளை-ஏதாவது சந்தேகம் என்றால் ‘கீதா மேடம் கண்டிப்பாக இதை பற்றி எழுதியிருப்பார்கள், பார்ப்போம்’ என்ற எண்ணத்தோடு நீங்கள் பதிந்து வைத்திருக்கும் ”எண்ணங்களை” தேடி வருவோம். உங்கள் சேவை வாசகர்க்கு தேவை ! [ நானும் தொண்டன் தானே :))]

”இப்போ யாரை எடுத்தாலும் அவங்க சொல்றது ரொம்ப பிசி , நேரமே கிடைக்கலைன்னுதான். அதுவும் இப்போ உள்ள தலைமுறைக்கு எல்லாமே பிசிதான். அவங்களுக்கு தொலைபேசியில் பேசி சொந்தங்களுடனோ, வீட்டுப் பெரியவங்களுடனோ நலம் விசாரிக்கக் கூட முடியாமல் பிசி....

என்றெல்லாம் 'பிசி' என்பவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை படித்திருக்கிறோம். சொல்லிக் கொள்ளாமலே பிசியாக எப்போதும் இருக்கும் நீங்கள் பல குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே செய்து வரும் எழுத்துலக சேவைக்கு வாசகர்கள் கடமைப் பட்டவர்கள். இதனிடையே கபீர் வலைப்பூவிற்கும் எழுத நேரம் ஒதுக்கி இதனை சிறப்பித்திருக்கிறீர்கள். பணிவான வணக்கங்களுடன்,மிக்க நன்றி

தங்கள் குடும்பத்தாருக்கும் வாசகர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

Monday, December 27, 2010

சிறப்பு இடுகை -விருந்தினர் பதிவு -7

ஆசிரியர் அறிமுகம்

பள்ளி நாட்களிலும் கல்லூரி பருவத்திலும் படிக்கும் ஆர்வம் மிக இருந்தும் கதைகள், நாவல்கள் போன்றவை பல காரணங்களால் என் மனதை ஈர்க்காமலே இருந்தது. எழுதுபவர்களுக்கும் பிரசுரிப்பவர்களுக்கும் பணம் ஈட்ட இது ஒரு வழி என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

இந்த எண்ணம் இன்று மாறிவருகிறது. சமூகக் கதைகளில் மனதை பாதித்தவை என்று சொல்லக்கூடிய அளவில் எதுவும் இல்லாமல் போனதற்கு என் தேர்ச்சி இன்மை காரணமே ஒழிய படைப்புகள் இல்லாமல் போகவில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

சில அற்புதப் படைப்பாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர். நவீன இலக்கியங்களும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன என்பதெல்லாம் வலையுலகுக்கு வந்த பின்பு பூவனத்தில் படித்து அறிந்து கொண்டேன். விந்தன் முதல் பாலகுமாரன் வரை பல பெரும் எழுத்தாளர்களின் வாழ்க்கைப் பிண்ணணியை மட்டுமல்லாது அவர்களின் கதைகளையும் கதாபாத்திரங்களையும் சிலாகித்து அவர்களின் பன்முக பரிமாணங்களை சுவைபட கூறப்பட்டுள்ள பாங்கை படித்த பின்னர் தான் எழுத்துலகைப் பற்றிய என் தவறான கணிப்புகளை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தேன்.

அந்த மாற்றத்திற்கு காரணமானவர் திரு ஜீவி அவர்கள்
.

அவருடைய எழுத்துலகப் பயணம் 1957 லேயே துவங்கியது என்று ஒருமுறை படித்ததாக நினைவு. அவருடைய வலைப்பூவை பற்றி அவரது சொற்களாலே அறிய வேண்டுமென்றால் “ வலைப்பூ 'பூவனம்' ஒரு சிற்றிதழ் போல. இலக்கியம், ஆன்மிகம், தற்சார்புக் கட்டுரைகள் என்று தேர்ந்தெடுத்த உள்ளடக்கங்கள் கொண்ட ஒரு பத்திரிகையைப் புரட்டுவது போல இருக்கும்”.


இது எவ்வளவு உண்மை என்பதை அறிய பூவனத்தில் அவர் இடுகைகளிலிருந்து ஒரு சில உதாரணங்கள் மட்டும் இங்கே.


"
உயிரில் கலந்து உணர்வில் ஒன்றி" ஐந்திணை ஐம்பதிலிருந்து அன்பிற்காக தியாகம் செய்யும் பாடல் ஒன்று (மாறன் பொறையனார் பாடல்) கதை வடிவில் ஆரம்பித்து இலக்கியச் சுவையுடன் முடிகிறது. பிறர்க்காக வாழும் வாழ்க்கையே சிறப்பு என வலியுறுத்தும் புறநானூற்றுச் சுவை தரும் இடுகை என ஒன்று.

இலக்கியத்தமிழ் மட்டுமல்ல இசைத் தமிழும் இவரது பூ வனத்தில் உண்டு. கலைமகள் முதல் முருகன் வரை பாடல்கள் இயற்றி மகிழ்பவர் திரு ஜீவி.
அழகன் முருகன் (மணிரங்கு), சிவன் (கல்யாணி), உப்பிலியப்பன்(ராகமாலிகை) என பட்டியல் பெரிது.

ஜீவி அவர்களின் கவிதைகளை படிப்பவர்களுக்கு அவருடைய நுண்மையான கவனிப்பும் அதை யதார்தத்தில் பகிர்ந்து கொள்ளும் திறனும் வியக்க வைக்கும்.
கிழிசல் என்ற கவிதை உழைக்கும் வர்க்கத்தில் தம் மனப் போராட்டத்தையும் வாழ்க்கைப் போராட்டத்தையும் எதிர்கொள்ளும் கணவன் மனைவி பற்றிய ஒரு அன்பு மயமான சொற்சித்திரம். இருப்பது என்ற தலைப்பில் ”இருப்பது இல்லாதது” பற்றி அவர் எழுதியிருக்கும் வரிகள் மிக சுவையானவை மட்டுமல்ல வெகுநேரம் சிந்திக்கவும் வைக்கக் கூடியவை.
..............
அது இருக்கையிலேயே
அதன் இல்லாமையும்
பழக்கப்பட்டுப் போயின்
இருப்பின் மகத்துவமும்
இல்லாது போகலாம்
இப்படியாக இல்லாமையின்
வெறுமையில்
இருப்பின் இழத்தலை
வென்று கடக்கலாம்
..................
எல்லாவற்றினும் மேலாக அவருக்கு முக்கியமானது அவரது ஆன்மீகத் தேடல். அது
மனஓசையாக பூவனத்தின் முதல் இடுகையிலேயே வெளிவந்தது.
............
மார்பில் கைவைத்து பார்க்கையில்
மனசில் உணரமுடிந்தது துடிப்பை
தன்னில் தானாய் என்னில் அதுவாய்
என்னுள் கலந்துபோன உயிரின் ஓசை
பிரயத்தனப்பட்டால் தான் உணர்வாய்
புரிகிறது என்னும் உண்மை புரிந்தது
என்னில் உறங்கும் உள்ளொளியும்
நான் எனும் சுயம் ஒழித்து
தன்னில் கரைந்தால் தான்
தட்டுப்படும் போலிருக்கு.


அந்த தேடல் விரிந்து “
ஆத்மாவை தேடி “ என்னும் ஒரு கருத்தரங்கப் பகிர்வாக மெய்ஞானம், விஞ்ஞானம் கலந்த கருத்துக் களமாக பல படிமங்களில் இரண்டு பாகமாக எண்பது இடுகைகளுக்கும் மேலாக பெருகி ஒரு அறிவு களஞ்சியமாக திகழ்கிறது. இப்படி ஒரு தொடரை எழுத வேண்டுமென்றால் அவரது வாசிப்பு எவ்வளவு அகலமும் ஆழமும் உடையது என்பதை எண்ணி எண்ணி மனம் வியக்கிறது.
கடைசியாக ஜீவி அவர்களின் கதைகளைப் பற்றி ஒரு வார்த்தை. அவைகளிலே தீய எண்ணம் உடைய கதாபாத்திரங்களையே காணமுடியாது. யாவரும் அன்பு மயமானவர்கள். பிறருக்காக விட்டுக் கொடுப்பவர்கள். சந்தர்ப்ப வசத்தால் ஒரு தர்மசங்கடமான நிலை தலையெடுக்கும் அல்லது சந்தேகம் தோன்றக்கூடிய வாய்ப்பு எழும். பின்னர் கதிரவனைக் கண்ட பனிபோல் அவை எப்படி அன்பினால் கரைந்து போய்விடும் என்ற வகையிலேயே பொதுவாக இருக்கும்.

அன்பு மயமான ஒருவரால் வேறு எப்படி எழுத முடியும்?


கார்த்திகை தீபத் திருநாளன்று எழுதப்பட்ட கபீரின் வலைப்பூவுக்கான இக்கட்டுரைக்கு
அகல்விளக்கு அற்புதம் என்று தலைப்பிட்டு அன்பின் பெருமையை பேசவிருக்கிறார். வாசகர்கள் சார்பாக திரு ஜி. வெங்கடராமன் அவர்களை வணங்கி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இனி ஜீவி ஐயா .......
------------------------------------------------------------------------

அகல் விளக்கு அற்புதம்

ஆரம்பத்தில் மகான் கபீர் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. வடக்கில் வாழ்ந்த ஓர் ஆன்மீகப் பெரியவர் என்கிற மட்டில் அன்பர் கபீரன்பனின் 'கபீரின் கனிமொழிகள்' வாசிப்பு தொடர்ந்தது. பிடிப்பு ஏற்பட ஏற்பட இடுகை போட கொஞ்சமே காலம் தாமதமானாலும் நாளாவட்டத்தில் இன்னும் ஏன் அடுத்த பதிவு போடக்காணோம் என்று ஏக்கம் ஏற்பட்டது. அந்த ஏக்கத்திற்குக் காரணம் இருந்தது.

இந்தண்டை அந்தண்டை பராக்கு பார்க்காமல் ஒரு தவம் போல பதட்டப்படாமல், நிதானமாய் மகான் கபீரின் பன்முக தரிசனத்தை அவர் கொடுத்த பொழுது இந்தப் பதிவுக்கு வருவது, வந்து வாசிப்பது, வாசிக்க ஏங்குவது இதெல்லாம் வழக்கமான பழக்கமாயிற்று. இந்த ஈர்ப்புக்கு முக்கிய காரணம், மகான் கபீர் இப்பூவுலகில் வாழ்ந்து காட்டிய பேற்றை அவர் அணுஅணுவாக விவரித்த பாங்கு. தாயுமானவர், பட்டினத்தார், வள்ளலார், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று நமக்கும் பழக்கப்பட்டுப்போன தென்னகத்து தவச்சீலர்களின் பாடல் வரிகளை எடுத்தாண்டு மகான் கபீரின் வாய்மொழிகளாம் வாய்மை மொழிகளை நமக்குத் தெரிவித்தமையால் கபீர்தாசரைப் புரிந்து நம்மைப் புரிந்து கொள்வதில் எந்த தடுமாற்றமோ தயக்கமோ இல்லாது போயிற்று.

சொல்லப்போனால், நம்மை நாமே புரிந்து கொள்வதற்காகத்தான் எல்லாமே. தவழும் பருவத்திலிருந்து தள்ளாடும் பருவம் வரை இந்த புரிபடல் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி இந்த நேரத்தில் இன்ன நடப்பது என்பது கூட இறைவனின் வரமாகிப் போகிறது.

அன்பு, பிரேமை, பக்தி என்று பக்குவமடைதலின் வரிசை நீண்டு முக்திக்கு வாசல் திறக்கும் பேற்றை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது

கபீர்தாசருக்கும் இந்த அன்பு தான் அவரது வாழ்வின் ஆதாரசுருதியாக இருந்திருக்கிறது. இறைவனிடத்து வைக்கும் தீவிர அன்பு பக்தியாகப் பரிமளிக்கும் என்பது அவரது வழிகாட்டல். அதனாலேயே, 'தன்னலமற்ற அன்பு பேரின்ப நெறிக்கு முன்பதிவுச் சீட்டு' என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

ஏழைகளிடத்து வைக்கும் அன்பு இறைவனிடத்து இட்டுச் செல்லும் என்றும், இல்லாதோர் இறைவனிடம் வைக்கும் அன்பு அந்த இறைவனையே அவர் வீட்டு வாசலுக்கு இட்டு வரும் என்றும் எடுத்துச் சொன்னவர் அவர்.
உண்மை பக்தர் இரவிதாஸருக்காக கங்கை அவர் தொழில் செய்த தொட்டியிலேயே எழுந்தருளினாள் என்பது திகைக்கச் செய்யும் செய்தி, இல்லையா?... எப்படிப்பட்ட இரவிதாஸர்?.. 'இராமஜெபம் இருக்கையில் வேறொன்றும் வேண்டேன் பராபரமே' என்று கைகுவித்து இறைவனை தன் இதய சிம்மாசனத்தில் இருத்திக் கொண்ட இரவிதாஸர்!

அன்பு பக்தியாக குணமாற்றம் கொண்டு மூலமான இறைவனோடு இணையும் இரசவாதம் அற்புதமானது.

கபீரின் மொழியில் அவர் அன்பன் குறிப்பிட்டபடி

सबै रसायन हम किया प्रेम रसायन् न कोय ।
रंचक तन में संचरै, सब तन कंचन होय ॥


அவிழ்தம் பலப்பலக் கண்டேன் அன்பின் நிகராய் கண்டிலேன்
தனுவில் ஒருதுளி புகுந்தது, தனுவெலாம் பொன் மயமானது.

தினமும் பூஜை செய்தது சிவபெருமானின் சிலையாக இருந்தது, சிவகோசரியாருக்கு. கண்ணப்ப நாயனாருக்கோ, தான் கொண்டிருந்த மாசு மருவற்ற பக்தியே சிவபெருமானாக இருந்தார். இந்த அன்பின் பிரதியான பக்தியே காளத்திநாதரின் கண்களில் இடம் வலம் என்று மாறி மாறி குருதி வழிந்த பொழுது தன் கண்களை ஒவ்வொன்றாக நோண்டி எடுத்து பெருமானின் முகத்தில் அப்பி வைக்க வைத்தது.

ஆதி சங்கரரின் சிவானந்த லஹரீயின் அறுபத்து மூன்றாவது சுலோகம் கண்ணப்ப நாயனாருக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

मार्गवर्तितपादुका पशुपते रङ्गस्य कूर्चायते
गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।
किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते
भक्ति: किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ॥

மார்க்காவர்த்தித-பாதுகா பசுபதே-ரங்கஸ்ய கூர்ச்சாயதே
ண்டூஷாம்பு-நிஷேசனம் புர-ரிபோர்-திவ்யாபி-ஷேகாயதே|
கிஞ்சித் க்ஷித-மாம்ஸசேஷ-கலம் நவ்யோபஹாராயதே,
க்தி: கிந் ந கரோத்யஹோ வநசரோ க்தாவதம்ஸாயதே ||


'காட்டு வழியெல்லாம் நடந்து நடந்து தேய்ந்த கண்ணப்பரின்
செருப்பு பெருமானின் மூர்த்திக்கு அபிஷேகத்திற்கு முன்
சிரசில் வைக்கப்படும் கூர்ச்சம் போலாகிறது. அவர் வாயிலிருந்து கொப்பளித்த நீரில் நனைந்தது தெய்வத்தன்மை பொருந்திய அபிஷேகம் போலாயிற்று. கொஞ்சமே கடித்து பார்த்த மாமிசத்தின் பாக்கிக் கவளம் புத்தம் புதிதான நைவேத்தியம் போலாகிறது. அஹோ! காட்டில் வசிக்கும் வேடர் பக்த சீலராகிறார்! ஆழ்ந்த பக்தி எதைத்தான் செய்யாது?' என்று பிரமிக்கிறார்.


திருநாவுக்கரசு சுவாமிகளோ தமது தேவாரத்து திருக்குறுக்கை வீரட்டத் திருப்பதிகத்தில்,

காப்பதோர் வில்லு மம்புங் கையதோ ரிறைச்சிப் பாரம்
தோற்பெருஞ்ச் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலச மாட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்டனாரே

என்று கண்ணப்ப நாயனாரின் சரிதம் சொல்ல,

ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் -- சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து

என்று காரைக்கால் அம்மையாரும் அன்பென்னும் போர்வையினால் பிறவா யாக்கைப் பெரியோனைப் போர்த்தி தன் நெஞ்சத்தில் மாயத்தால் மறைத்து வைக்க,

அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

-- என்று திருமந்திரம் முடித்து வைக்கிறது.

முதல் மூன்று ஆழ்வார்கள் கதை நமக்குத் தெரியும். மூவரும் தாயின் கர்ப்பத்தினின்று பூவுலகில் பிறவி எடுத்தவர்கள் அல்லர். தமிழகத்தின் வெவ்வேறு திருத்தலங்களில் அடுத்த நாள் அதற்கடுத்த நாள் என்று அவதரித்தவர்கள். மூவருக்கும் ஐப்பசி மாசம். ஜென்ம நட்சத்திரங்கள் தாம் அடுத்தடுத்தது. பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரத்தில் திருவோண நட்சத்திரத்திலும், பூதத்தாழ்வார் மாமல்லையில் அவிட்ட நட்சத்திரத்திலும், பேயாழ்வார் திருமயிலையில் சதய நட்சத்திரத்திலும் அவதரித்தனர்.

தென்பெண்ணை ஆற்றங்கரையில் நடுநாட்டில் உள்ள திருத்தலம் திருக்கோவலூர். தீராத விளையாட்டுப் பிள்ளை இங்கு திருவிக்கிரமனாய் காட்சி தருகிறார். கண்ணனை, கார்மேக வண்ணனைத் தரிசிக்கும் ஆவலில் மூவரும் வெவ்வேறு தலங்களிலிருந்து திருக்கோவலூர் வருகின்றனர். இந்த மூவருக்கும் திருக்கோவலூரில் ஒரு சந்திப்பு ஏற்படுத்தி அவர்களிடம் நெருக்கமாய் நெருங்க வேண்டுமென்பது பெருமானின் ஏற்பாடு.

மூவரும் இரவு தங்கலுக்கு ஒதுங்கிய இடம் ஒன்றாகிறது. அடியார் ஒருவர் இல்லத்து இடைக்கழி. அந்த சின்னஞ்சிறிய இடத்தில் ஒருவர் படுக்கலாம்; இருவர் அமரலாம்; மூவர் நிற்கலாம். இவர்கள் மூவராகையால் நின்று கொண்டே இரவைக் கழிக்கலாம் என்று தீர்மானிக்கையில், கண்ணுக்குப் புலப்படாத இன்னொருவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இன்னும் நெருக்குகின்ற உணர்வு. நாலாவதாய் சேர்ந்து கொண்டவர் யார் என்று இருட்டை விரட்டிப் பார்த்து அறிய ஒவ்வொருவராக ஞான விளக்கேற்றி உணர முற்படுகின்றனர்.

பொய்கை ஆழ்வாரை அடுத்து பூதத்தாழ்வார் ஏற்றிய அகல் அன்பு ஒளியேந்தி பளீரென்று பளீரிட்டுப் பிரகாசிக்கின்றது.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா -- நன்புருகி
ஞானச்சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.

பூதத்தாழ்வார் ஏற்றிய அகல், அன்பு அகல். அன்பை அகலாக்கி, ஆர்வத்தை நெய்யாய் அதில் வார்த்து, இனிய மனத்தை திரியாய் அதில் இட்டு நாராயணனுக்கு ஞானச்சுடர் ஏற்றுகிறார் அவர். ஆர்வ நெய்யில், இன்ப மனத்திரி அன்பு அகலில் ஒளிவிட்டு ஜொலிக்கிறது.

கபீரும் தன் ஆழ்ந்த அன்பை விளக்க ஒரு விளக்கு ஏற்றி அதன் ஒளியில் தன் தலைவன் முகம் காண ஏங்குகிறார்.

इस तन का दीवा करू, बाती मेल्यु जीव ।
लोही सींची तेल ज्यों, कब मुख देखू पीव ॥

உடலே அகலாய் உயிர் மூச்சும் அதிலிட்டத் திரியாய்
உதிர நெய்யில் ஒளிர்கையில் பதிமுகம் காண்பதெப்போ?

அன்பிற்கினியவன் தன்னை விட்டுப் பிரிந்த நேரத்து அவன் வருகையை எதிர் நோக்கி கையில் அகலுடன் காத்திருக்கிறாளாம் இளம் பெண் ஒருத்தி. அவன் திரும்புகையில் இருட்டில் அகல் வெளிச்சம் அவன் முக தரிசனம் கிடைக்க உதவும் என்பது அவளது எதிர்பார்ப்பு.

கபீருக்குக் கிடைத்த அகல் அவரது உடலேயாம். உடல் அகலில் உயிர் மூச்சைத் திரியாக்கி உதிர நெய்யில் நனைக்கிறார் கபீர். அகல் சுடர்விடும் அந்த ஆத்ம ஜோதியில் இறைவனைக் காண அவன் தரிசனம் கிடைப்பதெப்போ எனக் காத்திருக்கிறாராம்.

காலங்கள் வேறுபடலாம்; தருணங்கள் வெவ்வேறாய் இருக்கலாம்; தேச எல்லைகள் கூட கிழக்கு மேற்கு என்று எங்கெங்கோ மாறி மாறுபடலாம். இறைவனிடத்து பேரன்பு கொண்ட அருளாளர் சிந்தையெல்லாம் சந்தித்துப் போய்த் தங்குமிடம் ஒன்றே.

அன்பே உருவாய்க் கொண்ட அன்பூரே அது!

நமது இலக்கியங்களும் சரி, வழிபடுத்தப்பட்ட வாழ்க்கை முறைகளும் சரி, இறைவனுடன் ஒன்றி வாழ வழியேற்படுத்தி இருக்கின்றன. இன்னொன்று. இறைவனிடம் மனம் ஒன்ற ஒன்றத்தான் 'தான்' என்னும் அகம்பாவம் அழிந்து உண்மையான 'தானைத்' தானே கண்டு கொள்ளும் பாக்கியம் கிட்டும்.

தன்னைத் தானே உண்மையாக அறிதல் என்பது வாழ்க்கையில் வெற்றிகளை ஈட்டக் கிடைத்த வரப்பிரசாதம். அந்த சித்தி கைவரப்பெற்றவர், தொட்ட காரியம் எல்லாம் துலங்கும். இறை பக்தியும் கூட இருந்து இரும்புக் கோட்டையென அவரைக் காக்கும்.

நிறைய எழுத மனம் அவாவுகிறது. அதை வேறோர் சமயம் செய்வதே சரி.

'நான்கு வருடம்; நூறு இடுகை. அதுவும் மகான் கபீரின் கனிமொழிகளைப் பற்றியே' என்று கபீரன்பர் செய்து வருவது சாதாரண விஷயம் இல்லை. மேற்பட்டப் படிப்பு ஆராய்ச்சிகளுக்குக் கூட இவ்வளவு சிரத்தையுடன் மெனக்கிடுவதில்லை. இறைவன் அருள் இருப்பதாலேயே இதெல்லாம் சாத்தியமாகியிருக்கிறது என்பது உள்ளம் உணர்ந்த உணர்த்தல்.

தமது கடுமையான உழைப்பு கொண்டு ஒரு சத்சங்கத்தை கபீரன்பன் நிறுவியிருக்கிறார் என்கிற நினைப்பே மோலோங்குகிறது.

மகான் கபீரிடத்து கொண்ட பிரேமை 'கபீரன்ப'ரானது. அன்பு அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தான் அவரது இயற்பெயரை விடுத்து 'கபீரன்ப!' என்று அவரை அழைப்பதே நெருக்கமாகப் படுகிறது!
----------------------------------------------
நன்றி நவிலல்

நாவில் உணவின் சுவை நிற்பது சில கணங்களே. செவிவழி நுகரும் இசையின் மயக்கம் நினைவில் சில மணிநேரம் நீடிக்கக்கூடும். ஆனால் நல்ல எழுத்துகளின் வாசிப்பின் சுவை மனதில் வாழ்நாள் முழுவதும் உடன் நிற்பது என்பது இப்பொழுது புரிகிறது.

அந்த வாசிப்பின் சுவையை பகிர்ந்து கொள்ளவும் ஒரு திறமை வேண்டும். ஜீராவில் ஊறும் குலோப்ஜாமூன் அத்தனை இனிப்பையும் தன்னுள் இழுத்துக் கொள்வது போல் பெரும் எழுத்தாளர்களின் வாசிப்பிலேயே ஊறிப்போன திரு ஜீவி அவர்களும் அப்படி ஒரு சுவை பட எழுதும் எழுத்தாளராக பரிமளிப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது.


அவர் இந்த அன்பன் மீது வைத்திருக்கும் அன்பிற்கு என்றென்றும் கடமை பட்டிருக்கிறேன். ஜீவி மற்றும் சூரி ஐயா போன்ற பெரியவர்களின் ஆசிகளே இறைவனின் ஆசீர்வாதமாக செயல்படுகிறது என்றால் மிகையில்லை
.

நமக்காக நேரம் ஒதுக்கி கருத்து செறிவுள்ள ஒரு கட்டுரையை சுவையாகப் படைத்து இந்த வலைப்பூவை கௌரவித்ததற்கு திரு ஜீவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவருடைய எழுத்துலக சேவை பல காலம் நம் யாவருக்கும் வழிகாட்டட்டும் என்று வேண்டிக் கொண்டு அவருக்கு நன்றி சொல்கிறேன்.

திரு ஜீவி அவர்களுக்கும் வாசக அன்பர்களுக்கும் வரும் ஆங்கில புத்தாண்டு 2011 ஒளிமயமாக இருக்கட்டும் என பிரார்த்திக்கிறேன். நன்றி.

Sunday, July 25, 2010

மூப்பெனும் நாய், காலனாம் வேடன்

அரச போகத்தைத் துறந்து உண்மையைத் தேடி புறப்பட்டார் சித்தார்த்தர். பல கடுமையானத் தவமுறைகளை முயற்சி செய்து உடலும் உள்ளமும் சோர்ந்து போயிருந்த நிலையில் வழியில் பாடிக் கொண்டே சென்ற பெண்மணி ஒருவரின் பாடல்வரிகள் அவருக்கு முக்கியப் படிப்பினையை தந்ததாகக் கூறுவர்.

”இசை வேண்டின் யாழில் அதி இறுக்கமானக் கம்பிகளும் கூடாது, இறுக்கமில்லாக் கம்பிகளும் உதவாது. அளவோடு இறுக்கிய கம்பிகளே நயமான இசைத் தரும் கருவியாகும்”

அது மனித உடலுக்கும் பொருந்துவதாகக் கருதி தன் வழிமுறைகளை மாற்றி கொண்டாராம். அரச வாழ்க்கை அவருக்கு இறுக்கமில்லா கம்பியின் நிலை. அது ஞானத்திற்கு இசைவாகாது. பின்னர் உக்கிரமான உடலை வருத்திக் கொள்ளும் தவம். இதுவும் ஞானத் தேடலில் உதவாது. திருமூலர் சொல்வது போல் உபாயமாக உடலைப் பேண வேண்டும். உண்பது உறங்குவது பேசுவது போன்றவற்றில் மிதமானப் போக்கை கைகொண்டால் உடல் நல்ல வழியில் இருக்கும்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே
(திருமந்திரம்)


கபீர் இதே கருத்தை ஒரு இசை சாதனத்தை உவமையாக வைத்துச் சொல்கிறார். உடல் தான் கருவி. ஆன்மா அதை இசைப்பவன். கருவியின் நரம்புகள் சரியான முறையில் பராமரிக்கப் படாவிட்டால் கருவியின் பயன் என்ன ? அதை இசைப்பவனாகிய ஆன்மா அதை விட்டு போய்விட்டால் பாவம் அந்த உடலால் பிறருக்கு பயன் தான் என்ன ?

कबीर जंत्र न बाजई, टूट गये सब तार ।
जंत्र बिचारा क्या करै, चला बजावन हार ॥

கருவியும் இசைக்காது கபீரா, அறுந்துள நரம்புகள் யாவுமே
கருவியும் பாவம் என்செயும், இசைப்பவன் போன பின்னே

அருணகிரியாரும் அந்த பயனற்ற நிலைக்கானக் காரணத்தை விரிவாகவே விளக்குகிறார்.

இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்
டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட்
டிருக்கு மண்சல வீடுபு குந்திட் ...... டதில்மேவி


[ரத்தமும் சீழும், மூளை, எலும்பு, உள்ளே இருக்கும் மாமிசம், பசிய
குடல், நரம்புகள், இவைகளைக் கொண்டு ஆக்கப்பட்டு
அழுத்தமாகக் கட்டப்பட்டு மண்ணாலும், நீராலும் ஆன
வீடாகிய உடலில் நுழைவு பெற்று, ]


இதத்து டன்புகல் சூதுமி குந்திட்
டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட்
டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் ... டிடமாயா


[அதில் இருந்துகொண்டு இன்பகரமாகப் பேசும்
சூதான மொழிகள் அதிகமாகி கிளைத்து எழுகின்ற
பொருளாசை என்கின்ற பறவை பிறர் தெளிவாக எடுத்துச்
சொன்னாலும் தெளியாமல் மேலும் மேலும் பறப்பதாயிருக்க]
,

பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்
துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்
பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் ...... தடிமேலாய்ப்

[உலக மாயை மிகுந்து, உண்டாகின்ற வாதம், சுரம், பித்தம் இவைகளின்
வேதனைகளோடு பல வகையான வாயுக்களும் அதிகரித்து,இருக்கின்ற
உடல்வலிமையும் சில தினங்களுக்குள் ஒடுங்கி, தடி மேல் ]


பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்
குலத்தெ னும்படி கூனிய டங்கிப்
பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் ....சடமாமோ

[கை ஊன்றுவதாகி, பல நாட்கள் செல்ல குரங்குக்
கூட்டத்தவன் என்று சொல்லும் படியாக உடல் கூனி, சத்துக்கள்
அடங்கி, மரணம் வந்திடும் சமயத்தில் பயப்படுவதான
இந்த உடலால்ஏதேனும் பயன் உண்டோ? ]

{விளக்கவுரை நன்றி kaumaram.org }

பிறந்த கணத்திலிருந்து நம்மை மரணம் துரத்திக் கொண்டிருக்கிறது. காலன் என்னும் வேடனுக்கு நம்மை பலமிழக்கச் செய்யும் தந்திரம் மிக நன்றாகவேத் தெரியும். வேடனொருவன் தன்னுடைய நாயை ஏவிவிட்டு முயலை பலமிழக்க செய்வது போல் இரவு பகல் எனும் நாய்கள் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. வேடன் பிடியில் எப்போது வேண்டுமானாலும் சிக்கிக் கொள்ளலாம். அவன் நாய்கள் துரத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கவும் நிற்கலாம். சோர்ந்து போய் கடைசியில் அவன் காலடியிலே தானே விழவேண்டும் !! அப்படி ஒரு உதாரணத்தை கபீர் நமக்கு சொல்லிக்காட்டுகிறார்.

முதுமை விரட்டுது நாயைப் போலே, இளமையாம் முயலோடுது நித்தமே
எமனெனும் வேடனும் எதிரே, இடையில் நீ நாடும் சுகமும் மித்தையே

அந்த வேடத்தினிடத்தில் ஒரு நல்ல குணம் உண்டு. இடைவிடாது இறைவனை எண்ணிக்கொண்டு ஓடினால் அவனே நாய்களின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றிவிடுவான். இரவு பகலற்ற ஒரு வெளியில் கொண்டுபோய் சேர்த்துவிடுவான். அங்கே நாய்களின் பயம் கிடையாது. கணக்கணமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட வேண்டிய அவசியமும் இல்லை. அது மார்க்கண்டேயர் காலத்தில் அவனுக்கு இடப்பட்டக் கட்டளை.

பதத்தெழு மந்திர(ம்) அஞ்செழுத்(து) ஓதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி(ர்) உண்ண, வெகுண்(டு)அடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை யுத்தமனே


பஞ்சாட்சர மந்திரத்தை மிகுந்த விருப்பத்தோடு செபிக்கின்ற பெருமையுடைய சிறுவனின் இன்னுயிரைக் காப்பதற்காக மிகுந்த சினத்தோடு எழுந்து, கண்களினின்று இரத்தம் சொரியும் வகையில் எமனை உதைத்துத் தள்ளியப் பெருமை உடையவன். திருக்கடவூரில் உறைபவன். அந்த உத்தமன் திருக்கழலை தொழுவோம் என நாவுக்கரசர் போற்றுகிறார்.

நிலையாமையை நினைவில் நிறுத்தி மரணபயம் வெல்வதற்கு மணிகண்டன் தாளே கதி.

Thursday, November 19, 2009

உடமையும் வறுமையும் ஒரு வழி நில்லா

சக்கிலியன் ஸைமன் குடிசையின் முன்னே பெரிய கோச் வண்டி வந்து நின்றது

மூன்று குதிரைகளால் இழுக்கப்பட்ட ஸ்லெட்ஜ்-கோச்சில் அந்த வட்டாரத்தின் மிகப் பெரும் சீமான் ஸைமனின் குடிசைக்கு முன்னே வந்து நின்ற போது ஸைமனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. குடிசையின் தாழ்வான கதவில் தலையை குனிந்து உள்ளே வந்த அவனைப் போன்ற ஒரு ஆகிருதி, தேககாந்தியை ஸைமைன் கண்டதில்லை. பின்னாலேயே அவன் வேலைக்காரனும் உடன் வந்து நின்றான்.

அவன் பேச்சும் போக்கும் ஆணையிடுவது போன்று இருந்தது. ஜெர்மனியிலிருந்து தருவிக்கப் பட்ட மிக விலையுயர்ந்த பதப்படுத்திய தோலைக் காட்டி ’இது போல் தோலைக் கண்டிருக்கிறாயா’ என்று கேட்டான். ஸைமன் இல்லையென்று தலையசைத்தான். ’இதன் விலை தெரியுமா உனக்கு?’ என்று மிரட்டுவது போலக் கேட்டான். ’இருபது ரூபிளாக்கும்’ என்றதும் ஸைமன் வாயடைத்து நின்றிருந்தான்.

நடக்கும் போது சுருக்கங்கள் விழாது, ஒரு வருடத்துக்கு உழைக்கக்கூடிய,
குதிகால் உயரம் உள்ள முழுக்காலணிகளை தயாரித்துக் கொடுக்க முடியுமா என்று சீமான் கேட்டான். ஸைமன் மைக்கேலைப் பார்த்தான். மைக்கேல் கனவானைப் பார்க்கவில்லை. அவன் பின்னாலிருந்த சுவர் மூலையை உற்று நோக்கி கொண்டிருந்தான். திடீரென்று அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. முகத்தில் ஒரு புதிய ஒளி தோன்றியது.

”என்ன தயார் செய்ய முடியுமா?” என்று சீமானின் குரல் அதிகாரத் தொனியில் வினவியது. ”கண்டிப்பாக செய்து தருகிறேன்” என்று மைக்கேலின் சம்மதம் இல்லாமலே சொன்னான் ஸைமன். “நினைவிருக்கட்டும், அதில் சுருக்கங்கள் வரக்கூடாது. சரியாகத் தைக்காமல் பின்னால் ஏதேனும் பிரச்சனை வந்தால் உங்களை போலீஸிடம் ஒப்படைத்து விடுவேன்” என்று சொல்லியவாறே தன் ஒரு காலை நீட்டினான். உடனே அவனது வேலைக்காரன் அவனது காலணியை விலக்கினான். சீமான் குளிருக்காக அணிந்த கால் உள்ளுறையும் மிக விலையுயர்ந்தது என்பது தெரிந்தது. ஸைமன் அவன் பாதங்களை ஒரு தாளில் வரைபடமாக பதிவெடுத்துக் கொண்டான்.

சீமானின் மிடுக்கான பேச்சும் தோற்றமும் ஸைமனுக்கும் அவன் மனைவிக்கும் மிரட்சியை உண்டு பண்ணியது. அவன் திரும்பி வெளியே செல்ல எத்தனித்த போது நிமிர்ந்த தலை குனிய மறந்ததால் வாயில் நிலையில் மோதிக் கொண்டது. தலையைத் தேய்த்தவாறு மீண்டும் போலீஸ் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே கோச் வண்டியில் ஏறி சென்றான் அந்த சீமான்.

மைக்கேல் ஸைமனிடம் வந்து சேர்ந்து சில வருடங்கள் ஓடி விட்டிருந்தன. அவன் வந்து சேர்ந்த விதமே விசித்திரம். மைக்கேல் அவசியமின்றி பேசுவதே இல்லை. எவ்வளவு தேவையோ அவ்வளவே பேசினான். அவன் முகத்தில் வருத்தமோ சந்தோஷமோ கண்டதில்லை. மூன்றே தினங்களில் பல வருட அனுபவமுள்ள ஒரு சக்கிலியன் ஒப்ப வேலையைக் கற்றுத் தேர்ந்தான். அவனுடைய திறமையில் முழு நம்பிக்கை உடையவனாய் இருந்தான் ஸைமன். சீமான் விட்டுச் சென்ற தோல் துண்டை எடுத்து மைக்கேல் வெட்ட ஆரம்பித்தான். ஆனால் மேற்கொண்டு அவன் அதை செருப்பாக தைத்துக் கொண்டிருந்தான். பாதங்களை மூடும் முழுக் காலணியாக வடிவமைக்கவில்லை.

ஒருபுறம் அவன் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் ஸைமன் அவன் போக்கிற்கே விட்டு விட்டான். மைக்கேலின் எந்த முடிவும் தவறாக இருக்காது என்ற நம்பிக்கையே அதற்கு காரணம். அன்று மாலைக்குள்ளாகவே மீண்டும் அந்த குதிரை வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த வேலைக்காரன் சீமான் கொடுத்த அந்த தோலை திருப்பி தரும்படி சீமாட்டி பணித்ததாகவும் அந்த தோலில் சீமானின் காலளவுக்கு ஒரு செருப்பு போதுமென்றும் கூறினான்.

ஸைமனின் ஆச்சரியம் எல்லை கடந்தது. ஏனிந்த மாற்றம் என்று வினவினான். போகும் வழியிலேயே சீமான் உயிர் துறந்ததாகவும் அவனுடைய பிணந்தான் வீடு சென்று இறங்கியதாகவும் சொல்லிய வேலைக்காரன் இப்போது தேவைப்படும் செருப்பு அவருடைய இறுதி யாத்திரைக்கு எனவும் தெரிவித்தான். தயாராக இருந்த செருப்பையும் மிச்சம் இருந்த தோல் பகுதிகளையும் சுருட்டிக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தான் ஸைமன்.


WHAT MEN LIVE BY ? [மனிதர் வாழ்வது எதனால் (நிர்ணயிக்கப்படுகிறது)? ] எனப்படும் லியோ டால்ஸ்டாயின் கதையிலிருந்து ஒரு பகுதியே மேலே படித்தது. இக்கதையில் மைக்கேல் ஒரு தேவதூதன். கடவுளின் ஆணை ஒன்றை மீறியதற்காக பூமியில் மூன்று கேள்விகளுக்கு விடையறிந்து வர அனுப்பப்பட்டவன். அந்த மூன்று கேள்விகள்:

1) What dwells in men ? -- மனிதருள் நிறைந்திருப்பது எது ?

2) What is not given to him ?- அவர்களுக்கு அளிக்கப்படாதது எது ?

3) What men Live by ? -மனி்தர் வாழ்வது எதனால் ?

இரண்டாவது கேள்விக்கான விடையை அந்த சீமானின் வருகை மூலம் அறிந்து கொண்டதாலே அவன் முறுவலித்தான்.

யாருக்கு எப்போது எது தேவை என்பதை கடவுள் மட்டுமே அறிவான். ”தன்னுடைய தேவைகள் எவையெவை என்பதை பூரணமாக அறியும் அறிவே மனிதனுக்கு அளிக்கப்படாதது”. அந்த சீமானின் வாழ்க்கை மூலம் மைக்கேல் தெரிந்து கொண்ட விடை இது.
{முதல் கேள்விக்கும் மூன்றாம் கேள்விக்கும் விடை ’அன்பு’ என்பது கதையோட்டத்தில் விளக்கப்படுகிறது.}
சில நிமிடங்களிலே உயிர் போகப் போகின்றத் தருணத்திலும் தனக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு உழைக்கக்கூடிய காலணிகளை கேட்க்கும் சீமானைப் போன்றவர்களே உலகத்தோர் என்பதை மிக அழகான கதை மூலம் விளக்கியுள்ளார் டால்ஸ்டாய் அவர்கள். இதுவே நிலையாமை.

’உலகத்திலேயே மிக ஆச்சரியம் தரும் விஷயம் யாது?’ என்கிற யக்ஷனுடைய கேள்விக்கு தருமபுத்திரர் கொடுத்த விடையும் நாம் யாவரும் அறிந்ததே. தினம் தினம் இறப்பவர்களை கண்முன்னே கண்டு கொண்டே இருப்பினும் நாம் மட்டும் சாஸ்வதம் என்கிற வகையில் செயல்படும் மனிதரை விட வேறு என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

திருமூலர் இந்த நிலையாமையை நாடகப் பாணியில் கொண்டு செல்கிறார். ஒவ்வொரு வரியிலும் ஒரு காட்சியை கண்முன்னே நிறுத்துகிறார்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக் கொடியாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே


[அடப்பண்ணி= உணவை சமைத்து ; அடிசில் = சமைக்கப் பட்ட உணவு; மடக்கொடி =இளம் மனைவி ; இறை= சிறிது]

நாட்டுக்கு நாயகன் நம் ஊர் தலைவன்
காட்டுச் சிவிகை ஒன்று ஏறி கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே

[கடைமுறை =இறுதி முறையாக ; நம்பி= தலைவன்; நடக்கின்ற வாறே= நடந்து போகும் விதம்]

தில்லியில் ஒரு மிகப் பெரும் நிறுவனம், பத்து மாடி கட்டிடம் (Corporate Office) ஒன்றை, மூன்று வருட காலத்தில் கட்டியது. அதன் சேர்மனாக இருந்தவர் ஓய்வு பெறுவதாக அறிவித்து அவரது இளைய சகோதரர் புதிய கட்டிடத்தில் சேர்மனாகப் பதிவியேற்பார் என்ற அறிவிப்பு வெளியாகி தேதியும் குறிப்பிடப்பட்டு திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுவிட்டன. சேர்மனுக்கான அலுவலகம் பலருடைய உழைப்பால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. ஆயின் இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில் பதவியேற்க வேண்டிய அந்த இளைய சகோதரர் மாரடைப்பால் திடீரென்று காலமானார். அப்போது நிறுவனத்தில் நிலவிய ஏமாற்றத்தை சொல்லி முடியாது.

அத்தகைய சோக நிகழ்ச்சிகளைக் காணும் போது கபீர் அவர்களின் கூற்றில் உள்ள உண்மை சுரீரென்று் உறைக்கிறது.

कबीरा गर्व न कीजीयॆ, ऊंचा दॆख आवास
काल परौ भुंई लॆटना, ऊपर जम्सी घास

செருக்கு வேண்டா கபீரா, வானளாவும் மாடம் என்று
எருக்கு விளையக் காண்பர் ஆ!, காலன் கிடத்தும் இடங் கண்டு


(புல் முளைக்கும் என பொருள்வரும் ’ஜம்ஸி காஸ்” என்று கபீர் சொல்லியிருப்பது எதுகை அமைப்புக்காக எருக்கு முளைப்பதாக மாறியுள்ளது )

காலம் தான் காலன். ஒவ்வொரு நொடியும் மரணத்தின் வாசலை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த உலகுக்கு வேண்டியவற்றை சேர்த்தாகி விட்டது. குடும்பத்தினருக்கும் இன்னொரு தலைமுறைக்கு வேண்டியது இருக்கிறது.

தேவைகளை சுருக்கிக் கொள்ளத் தெரிவதில்லை. ஒன்று தொட்டு ஒன்று, எதன் காரணமாகவோ அது வளர்ந்து கொண்டே போகிறது. எதையோ பற்றிக் கொண்டு எதையோ தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

கடைசியில் இவையெதும் உடன் வரப்போவதில்லை, தெரியும். உடன் வரக் கூடியதை சம்பாதிக்க மனம் ஈடுபடுவதில்லை. ’காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்பதன் பொருள் தெரிந்தும் மனதுள் இறங்குவதில்லை. அது தன் போக்கில் இழுத்துக் கொண்டே போகிறது. அப்போது அது சந்திக்கும் ஏற்றத் தாழ்வுகள்தான் எத்தனை எத்தனை! அதை அதிவீரராம பாண்டியர் வரிகளில் பார்ப்போம்.

உடமையும் வறுமையும் ஒரு வழிநில்லா

குடைநிழலிருந்து குஞ்சரமூர்ந்தோர்
நடைமலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர்

சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ் சாலை அடையினும் அடைவர்

அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசரோடு இருந்து அரசு ஆளினும் ஆளுவர்

குன்றத்தனைய இருநிதி படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்

எழுநிலை மாடம் கால்சாய்ந்துக்குக்
கழுதை மேய் பாழாகினும் ஆகும்


[ நண்ணுதல் = சேர்தல்; அறக்கூழ் சாலை= தர்ம சத்திரம் ]

காலன் எவருக்கும் தனி மரியாதை கொடுப்பதில்லை. அரண்மனை வாசமிருக்கும் மன்னனும்,வெளியே திரியும் பிச்சைக்காரனும் அவன் புத்தகத்தில் ஒன்றே.

அதனால் இடையே ஏற்படும் பலவிதமான செருக்குகள் இறுதியில் அர்த்தமில்லாமல்போய்விடுகிறது . குலச் செருக்கு,செல்வச் செருக்கு, கல்விச் செருக்கு,அதிகாரச் செருக்கு இப்படி பலவாறாக நம்மை ஆட்டிப் படைக்கும் மாயை ஒரே கணத்தில் அவற்றை ஏதுமில்லாமலும் செய்து விடுகிறது.

இப்படி எத்தனைத் தினங்கள் (அல்லது பிறவிகள் )கழியப் போகின்றன. மனதிற்கு இவைகளிலுள்ள நிலையாமை ஏன் புரியாமல் போகிறது? இதை குறிப்பிடும் வகையிலும் கபீர் சொல்லும் இன்னொரு ஈரடி:

क्या करियॆ क्या जॊडिये, थॊडॆ जीवन काज
छाडि छाडि सब जात है, दॆह गॆह धन राज


அற்ப வாழ்வு அவனியிலே, அலைவ தென்ன அடைந்த தென்ன
சொற்ப தினமே போயின யாவும், தனம் திவரம் கிருகம் தேகம்

( திவரம்= தேசம், ராஜ்யம் )

இந்த மனம் இறைவன் பெயரில் இருக்கும் சுகத்தை அறியாததனால் தானே இப்படிக் கிடந்து உழலுகி்றது.

அவன் தான் இந்த சக்கரச் சுழலுக்கு அச்சு. வண்டிச் சக்கரத்தின் விளிம்பில் அமர்ந்திருக்கும் ஈ, பாதையின் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப குலுங்கிக் குலுங்கி பயணம் செய்யும். அது மெள்ள நகர்ந்து அச்சாணியை அணுகுமளவும் ஆட்டம் குறைந்து கொண்டே போகும். கடைசியில் அச்சாணியிலே அமர்ந்து விட்டால் பாதையின் மேடு பள்ளங்கள் அதை பாதிக்காது.

ஆகவே பரம சுகம் தரும் கடவுளின் நாமத்தைப் பிடித்துக்கொள். இறைவனுக்கு அருகே செல்வதற்கு அதுவே வழி. இல்லாவிட்டால் காலன் வாயிலில் மீண்டும் மீண்டும் புகுவதே வேலையாகிவிடும். இதற்கு விதிவிலக்கு என்பதே கிடையாது என்று எச்சரிக்கிறார் கபீர்.

कबीर सब सुख राम है, औरहि दुख की रासी ।
सुर नर मुनि अरु असुर सुर, पडे काल की फांसि ॥


இராம நாமமே பரமசுகம் கபீரா, மற்றன வெல்லாம் துன்பமயம்
தேவ முனிவரும் நராசுரரும், சேர்வரே கடையில் காலன்வயம்

( நராசுரர்= நரர்+அசுரர்)


புரந்தரதாஸருக்கும் அதே கருத்து. ராம ராமா என்னிரோ என்கிற அவருடைய பாடல் ஒன்றை சமீபத்தில் சிருங்கேரி சென்றிருந்த போது நண்பர் ஒருவருடைய மகள் இப்பாடலை பாடக் கேட்டு மனது உருகியது. 
பின்னர்  யுட்யூப்-ல் தேடியபோது அதே பாடல் கிடைத்தது . ஸ்ரீ புரந்ததாஸரின் அந்த பாடலின் சாராம்சம் இது தான். பாடலையும் கேட்டு மகிழுங்கள்.

கட்டிய மனைவியும் கூட வர மாட்டார் ;ராம ராமா என்று சொல்லுங்கள்.
தன்னவர் என்று வளர்க்கப்பட்ட மக்களும் தன்னவர் ஆவதில்லை; ராம ராமா என்று சொல்லுங்கள்.
நிலம், கால்நடை தான்யம் தனம் யாவும் விட்டு செல்வனவே; ராம ராமா என்று சொல்லுங்கள்.
கெட்ட சம்ஸாரம் இது, சுகம் என்பது கிஞ்சித்தும் இல்லை ராம ராமா என்று சொல்லுங்கள்.
சிருஷ்டியில் முதல்வனான புரந்தர விட்டலனை மறவாது
ராம ராமா என்று சொல்லுங்கள்.
நரஜென்மம் என்பது ஸ்திரமில்லை, அந்த கோமளாங்கன் நாமம் அந்த (கடைசி)வேளைக்கு வராது. ராம ராமா என்று சொல்லுங்கள்.



இப்போதிலிருந்தே இறைவன் நாமத்தை செபித்து பழகாவிட்டால் கடைசி நேரத்தில் அது துணைக்கு வராது என்பதையும் புரந்தரதாஸர் குறிப்பிட்டு சொல்கிறார்.

நம் கல்நெஞ்சைக் கரைக்க இன்னும் எத்தனை கபீர்களும் புரந்தரரும், திருமூலரும் வரவேண்டுமோ தெரியவில்லை.

Thursday, November 05, 2009

பக்தித் துவாரம் குறுகியது

அந்த சிறுவனை ட்யூஷனுக்கு அழைத்து வந்திருந்தார் அவனுடைய தாய். கபடமற்ற கண்கள். அவன் நெற்றியில் சிறு திருநீற்றுக் கீற்று. பாலமுருகனையே கண்டது போல் இருந்தது. சாதுவான பையன் என்பதை சொல்லத் தேவையே இல்லை.
“ சார், இவனுக்கு எல்லார் கிட்டேயும் நல்ல பேர். டீச்சர்ஸ் கூட அவனைப் பத்தி ரொம்ப நல்ல மாதிரிதான் சொல்றாங்க. வீட்டுலேயும் அவனால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தன்பாட்டுக்கு நேரத்துக்கு எழுந்து, குளிச்சு சாப்பிட்டு ஸ்கூலுக்கு கெளம்பிடுவான். எந்த பிடிவாதமும் கிடையாது. சொன்ன பேச்சை கேட்பான். ஆனா எந்த ஸப்ஜெக்டிலேயும் மார்க் மாத்திரம் வர மாட்டேங்குது. கிட்டத்தட்ட எல்லா ஸப்ஜெக்ட்லேயும் ஃபெயில். எங்களுக்கு என்ன செய்றதுன்னே புரியவில்லை. ஏண்டா! டீச்சர் சொல்றது புரியலையான்னு கேட்டா பதிலே சொல்ல மாட்டான். ஸ்லோ லெர்னர். இவன் ஒரு மனுஷனா ஆவானா சார் ? என்று மிகுந்த கவலையுடன் விசாரித்தார்.

இப்படிப்பட்ட கவலைதான் ஞானிகளுக்கும் பல பக்தர்களை காணும் போது ஏற்படுகிறது. அந்த பக்தர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. சராசரி நித்ய கடமைகளை தவறாமல் செய்கின்றனர். ஆனால் அவற்றின் மூலம் கற்க வேண்டிய பாடத்தை மட்டும் கற்றுத் தெளிவதில்லை. இவர்கள் எப்போது தேறி ஞானத்தை அடையப் போகிறார்கள் என்ற ஆதங்கம் அவர்களை ஆட்கொள்கிறது. யோகி வேமனாவுக்கும் தன் தாயாரின் விஷயத்தில் அப்படி ஒரு கவலைத் தோன்றியது.

வேமனா ஆந்திராவின் மிகப் புகழ் பெற்ற யோகி. அனு வேம ரெட்டி என்ற அரசனின் தம்பி. இளம் வயதில் வழி தவறியவராய் இருப்பினும் சிவயோகி ஒருவரின் தொடர்பினால் ஞான வழிக்கு திரும்பினார். அவருடைய ஆயிரக்கணக்கானப் பாடல்கள் இன்றும் ஆந்திரத்தில் ஆன்மீக ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறது.

அவருடைய தாயார் தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பினார்.

’நீ திரும்பி வரும் பொழுது இந்த தாமிர தாயத்து தங்கமாய் மாறியிருக்குமா பார்ப்போம்’ என்று ஒரு ரட்சை அணிவித்து அனுப்பி வைத்தார். அம்மையாரும் புரீ காசீ கயா போன்ற பல புண்ணிய தலங்களில் நீராடி கோவில்களில் பூசைகள் செய்து பலமாதங்களுக்கு பின்னர் திரும்பினார். அவருக்கு வேமனா கூறியிருந்தது மறந்தே போயிருந்தது.

வேமனா அவரைக் கண்டதும் தாயத்து தங்கமாய் மாறியதா என்று தாயத்தைக் காட்டச் சொன்னார். செப்பு செப்பாகவே இருந்ததைக் கண்டு ’பக்தியும் சிரத்தையும் இல்லாமல் செய்யும் எந்த யாத்திரைக்கும் பலனிராது’ என்றார். தாயாருக்கும் பிறருக்கும் புரியவில்லை. அதெப்படி செப்பு தங்கமாக முடியும் என்று வினவினர்.

’முடியும்’ என்று சொல்லி அந்த தாயத்தை வாங்கி ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மேல் சிறிது நீரை சொரிந்தார். யாவரும் வியக்கும் வண்ணம் செப்பு தாயத்து தங்கமாக மாறியது. அதை தாயாரின் கையில் வைத்து ‘உண்மையான பக்தி இருந்தால் நீ இருக்குமிடமே காசி. ஏனிந்த சிரமம்?’ என்று கூறினாராம்.

வேமனா குறிப்பிடும் தங்கம், மனிதர்கள் கோவில் குளம் என்று சுற்றுவதெல்லாம் இறைவனின் பெருமையை உன்னி உன்னி படைப்பில் சர்வமாக வியாபித்து இருக்கும் அவன் பால் அன்பு பெருகி வர வேண்டிய மன மாற்றத்தைக் குறிப்பதாகும். ஆனால் சாமானியர்களான நமக்கோ எப்போதும் நம்மைப் பற்றிய சிந்தனையிலேயே ஊறி இருப்பதால் உண்மையான பக்தி என்பது என்னவென்றே புரிவதில்லை. இது வகுப்பிலே அமர்ந்திருந்தாலும் பாடத்தில் கவனம் செலுத்தாத மாணவன் போன்றது.

புரியாததன் விளைவாக கடைசியில் பலனேதும் இல்லாமல் போகிறது. வேமனாவின் தாயாரைப் போலே, கிடைக்காத பலனைப் பற்றிய ஞானமும் குறைவே. ஞானிகள் இந்த நிலையை கண்டு பரிதாபம் கொள்கின்றனர். இதை கபீர் இலவு காத்தக் கிளிக்கு ஒப்பிடுகிறார்.

जप तप दीखै थोथरा, तीरथ व्रत विशवास ।
सूआ सेमल सेइया, यौं जग चला निरास ॥


செல்வார் யாத்திரை, நேர்வார் நோன்பு, செபதபத்திலு மாசை
இலவு கொத்தும் கிளி போலும், இறுதியில் நிற்பதோ நிராசை


புண்ணியம் வரும் பாவம் போய்விடும் என்று செய்யப்படும் பலவிதமான விரதங்கள், யாத்திரைகள், செப தபங்கள் எல்லாம் கடைசியில் அர்த்தமின்றி போய்விடுவதாக கூறுகிறாரே கபீர் என்ற சந்தேகம் எழலாம். உண்மையில் அவற்றிற்கான பலன் எப்போதும் உண்டு. ஆனால் அது பிறவிச் சுழலிலிருந்து விடுதலை தராது. ஞானிகள் எதிர்பார்ப்பது பிறவித் தளையிலிருந்து விடுதலையைத்தானே !

பையன் அடுத்த வகுப்பிற்கு போக வேண்டும். எத்தனை வருடங்கள் ஒரே வகுப்பில் பெஞ்சை தேய்க்க முடியும்? எனவே தான் கபீர் காலவிரயத்தை இலவு காத்த கிளிக்கு ஒப்பிடுகிறார்.

பரமஹம்ஸர் பக்தியின் நிலையை இரண்டாகப் பிரித்து சொல்கிறார். முதல் நிலை வைதீக பக்தி. இரண்டாம் நிலை பிரேம பக்தி. முதல் நிலையில் சாத்திரப்படி ஏதேனும் வழிபாட்டு முறையை மேற்கொண்டு சிரத்தையுடன் நடத்தி வருவது. அப்படி செய்வதே நாளடைவில் இரண்டாம் நிலைக்கு இட்டுச் சென்று தன்னுடையது என்று எதுவுமின்றி எல்லாம் இறைவனுக்காகவே, இறைவனாகவே காணும் மனப் பக்குவத்தை பக்தன் அடைவது.

நேரத்தில் எழுந்து குளித்து, சாப்பிட்டு பள்ளிக்கு போவது போன்றது வைதீக பக்தி. அங்கே சொல்லிக் கொடுக்கப்படும் பாடத்தை கேட்டுத் தெளிவது பிரேம பக்தி. சத்கர்மங்கங்களிலும் சத்சங்கங்களிலும் தீவிரமான நாட்டம் கொண்டு குரு உபதேசத்தை மனதில் நிறுத்தி கடைபிடிப்பது பிரேம பக்தி. புரிந்து கொண்ட பாடத்தின் இறுதி நிலை என்ன? திருமந்திரம் விடை சொல்கிறது.

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறி உற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவமாகுமே.

(பயில்வுற்று= பயின்று; துரிசு அற்று=குற்றம் இல்லாத)

உலகில் பெரும்பாலானவர் முதல் இரண்டு வகையில் அடக்கம். சரியை பல தலங்களுக்கும் சென்று பரம்பொருளை வழிபடுவது. கிரியை என்பது மாலை மலர் சாற்றி, அர்ச்சனை, நிவேதனம் செய்து உள்ளும் புறமும் வழிபடு்வது. யோக நெறியில் புகுவதற்கான அருளை பெறும் முன் சரியை கிரியையில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அடைய இருக்கும் வகுப்பில் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படிப்பட்ட பக்தர்களுக்கு இறைவன் அருள் நிலைக்கிறது என்பதை மற்றொரு பாடலில் சொல்கிறார் திருமூலர்.

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமலரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்குழல் சேர வொண்ணாதே

(ஊனினை நீக்கி= உடற்பற்றை நீக்கி )

கானகத்தில் கிடைக்கும் எல்லா மலர்களையும் மணம் கமழும் சந்தனத்தையும் பூசித்தாலும் உடற்பற்றை நீக்கி உணர்பவர்க்கல்லாமல் இறைவன் திருவடியை அடைய முடியாது.

இந்த ஊன் பற்றை விலக்குவதில் தான் பிரச்சனை. தன்னால் எல்லாம் நடக்கிறது என்ற எண்ணம் குறுக்கே வந்து முன்னேற்றத்தைத் தடுக்கிறது. இதை ஆணவமலம் என்பர் ஞானிகள். மனதில் ஆணவமலம் இருக்கும் வரை உடற் பற்றும் இருக்கும். அதை முழுவதுமாக மாய்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதை இன்னொரு ஈரடி மூலம் கபீர் விளக்குகிறார்.

भक्ति दुवारा सांकरा, राई दशवें भाय ।
मन तो मैंगल होय रहा, कैसे आवै जाय ॥


பத்தித் துவாரம் குறுகியது, கடுகளவில் பத்தில் ஒன்று
மத்தம் பிடித்தக் களிறது, மனமும் உட்புகும் வழியெது ?


மனதைப் பிடித்திருக்கும் ஆணவ மலம் மதம் பிடித்த யானையைப் போன்றதாம். அதனை கடுகின் அளவில் பத்திலொரு பாகம் அளவே இருக்கும் பக்தி எனப்படும் துவாரத்தின் வழியே நுழையச் செய்வது எப்படி என்று வினவுகிறார் கபீர்தாஸ்.

நாக மஹாசயரைப் போல் அன்பே வடிவினராய் தொண்டராம் தொண்டருக்கு...தொழும்பனாய் மாறினால் முடியும்.

அன்பு முதிர்ந்தால் ஆணவம் உதிர்ந்து விடும். அப்போது இறைவன் அவன் நெஞ்சத்தை கோயிலாய் கொள்கிறான்.

அன்பின் முதிர்ச்சியை இன்னொருவர் வாழ்க்கையில் காண்போம். திருமூலர் சொல்லும் ஊன்பற்று நீங்கி எல்லா உயிர்களிலும் இறைவனையே கண்டவர். அவரும் ஒரு தல யாத்திரை மேற்கொண்டார். அவரு்டையது பெரிய யாத்திரை.

முதல் கட்டமாக கங்கையை அடைந்து அங்குள்ள புண்ணிய தலங்களை சேவித்தார். அடுத்த கட்டமாக அங்கிருந்து குடங்களில் கங்கையை நிரப்பி காவடியாக சுமந்து ராமேஸ்வரம் சென்று அங்கே ராமர் பூஜித்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறே போய்க் கொண்டிருக்கும் பொழுது வழியிலே ஒரு கழுதை தாகத்தால் வாய் உலர்ந்து மரணத்தைத் தழுவும் நிலையை எட்டியிருந்தது. யாத்ரிகரது மனம் மிகவும் இளகியது. சுற்றும் முற்றும் நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படவில்லை. தேடிக் கொண்டு வருவதற்குள் கழுதையின் உயிர் பிரிந்தாலும் பிரிந்து விடும் என்கிற நிலை.

கையில் இருப்பது சிவனுக்கென கொண்டு செல்லும் கங்கை நீர் மட்டுமே. ஒரு பிராணியின் தாகத்தைத் தீர்க்க போதுமானதா என்பதும் புரிய வில்லை. அந்த ஜீவனிலும் குடியிருப்பது சிவன் தானே. அதைக் காப்பாற்ற பயன்படாத நீர் எவ்வளவு புண்ணிய தீர்த்தமாய் இருந்தென்ன?

உத்தவனுக்கு கிருஷ்ணன் சொல்லவில்லையா ’எல்லாவற்றிலும் என்னையே காண்பாய். என்னை சோதிப்பதற்காக்வே தான் இப்படி ஒரு நிலைமையை காட்டியிருப்பான் போலும்’ என்றெல்லாம் அவர் எண்ணம் ஓடியது. ஒரு உயிரை காப்பாற்றுவதைக் காட்டிலும் பெரிய தர்மம் இருக்க முடியாது என்பதை ஆழமாக உணர்ந்தார். குடத்தில் இருந்த கங்கை நீரையெல்லாம் அந்த அப்பாவி ஜீவனை குடிக்கச் செய்தார். உடனிருந்தவர் ராமேஸ்வரத்திற்கு என்ன செய்வது என்று கேட்டனர். இதோ இதுவே தான் ராமேஸ்வரம் என்று பதில் சொன்னாராம். அவரைப் பொறுத்தவரை எந்த சிவனுக்காக நீரை கொண்டு சென்றாரோ அவனை அது அடைந்து விட்டது.

பக்தியென்பதை முழுமையாகப் புரிந்து கொண்டு வழிபாடு செய்த அந்த யாத்ரிகனே ஏகநாத் என்று மகாராஷ்டிரத்தில் போற்றப்படும் மகான். மகாராஷ்டிரத்தில் ஞானேஸ்வரரின் கீதையைப் போலவே ஒவ்வொரு வீட்டிலும் ஏகநாதருடைய பாகவதம் மிகவும் போற்றப்படும் ஒரு இலக்கிய படைப்பு ஆகும். காலத்தால் ஞானேஸ்வரருக்கு பிற்பட்டவர். முன்னூறு ஆண்டுகளுக்கு பிந்தையவர் ஆயினும் ஞானேஸ்வரரின் தரிசனம் கிடைத்து அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரது ஞானேஸ்வரியை செப்பனிட்டு மீண்டும் வெளியிட்டவர் அவரே என்றும் சொல்வர்.

கபீரின் எந்த ஈரடியை யாருடைய பார்வையில் புரிந்து கொள்ள முற்பட்டாலும் சுற்றிச் சுற்றி ஒரே மையப்புள்ளிக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஆம் அன்பு ஒன்றுதான் அச்சாணியாக உலகைத் தாங்கி நடத்திச் செல்கிறது.

Friday, August 07, 2009

அரியவனோ எளியவனோ இறைவன் ?

அந்த காவியுடை சாது காட்டிலே அமர்ந்து கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார். தினமும் காலையும் மாலையும் நிலை கொள்ளாமல் தவிப்பதும் ஏதோ ஒரு வகைத் தேடலிலும் ஈடுபட்டிருந்ததை கவனித்த வேடன் ஒருவனுக்கு அவர் மேல் இரக்கம் பிறந்தது.

அவரை நெருங்கி “ஐயா தாங்கள் தேடுவது என்னவென்று சொன்னால் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்” என்றான்.

அவருக்கோ சிரிப்பு வந்தது. மந்திர சித்தியைப் பற்றி அந்த வேடனுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது?

”உன்னால் முடியாதப்பா” என்று சுருக்கமாக பதில் உரைத்தார்.

முடியாது என்று அவர் சொன்னதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

“எனக்கு இந்த காட்டில் தெரியாத மரமோ செடியோ பிராணியோ கிடையாது. நீங்கள் தேடும் பொருளை அடையாளம் சொல்லுங்கள். மருந்துக்கான பூவா, இலையா அல்லது ஏதேனும் அரிய பொருளா சொல்லுங்கள். நான் எப்பாடுபட்டாவது உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கிறேன்.” என்று விடாமல் சொன்னான். அவன் அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை.

”நான் தேடுவது ஒரு விசித்திரமான மிருகம். அதற்கு சிங்கத்தின் தலை, மனிதனின் உடல், கூரிய நகங்கள். அடர்ந்த பிடரி. முடிந்தால் தேடிப் பிடித்து வா” என்று அனுப்பினார்.

“அட இப்படி ஒரு மிருகத்தை நான் கண்டதே இல்லையே ! அப்படி ஒன்று இருந்தால் அது இல்லாமல் திரும்பமாட்டேன்” என்று சொல்லி விசித்திரமான அந்த மிருகத்தைத் தேட ஆரம்பித்தான். அன்றைய பொழுதும் சாய்ந்தது. அடுத்த நாள் விடியும் பொழுது அந்த மிருகம் இன்று கிடைக்காவிட்டால் உயிரை விட்டுவிடுவது என்ற முடிவோடு தேட ஆரம்பித்தான். நீரும் உணவும் இன்றி தேடி அலுத்து நிராசையின் விளிம்பில் இருந்தவனுக்கு திடீரென்று ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.

அந்த திசையில் சென்றதுமே அந்த விசித்திர மிருகம் கண் முன்னே நின்று கொண்டிருந்தது. ”ஓ நீதானா அது” என்றபடியே சந்தோஷத்துடன் அருகேயிருந்த கொடிகளை அறுத்து அதைக் கட்டி தர தர வென்று இழுத்து வந்து முனிவர் முன் நிறுத்தினான். அந்த விசித்திர மிருகம் ஒரு நாயைப் போல இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தது.

“ சாமி இதோ நீங்க தேடுற பிராணி” என்று மகிழ்ச்சியுடன் கூவினான்.

சாதுவுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அவருக்கு தெரியவில்லை என்பது வேடனுக்கு புரியவில்லை. “இதோ ..இதோ” என்று மீண்டும் மீண்டும் அது நிற்கும் இடத்தைக் காட்டினான்.

அவன் தன்னம்பிக்கையோடு காட்டும் போது குழம்பிய மனதினராய் அவ்வேடனை பரிதாபமாகப் பார்த்தார். தன் கண்களை நம்புவதா அல்லது அந்த வேடனை நம்புவதா என்று புரியாமல் திகைத்தார். அப்போது சிங்கத்தின் கர்ச்சனை மட்டும் மிக அருகிலிருந்து கேட்டது. அந்த தபஸ்விக்கு உண்மை பளிச்செனப் புரிந்தது.

“பிரபோ இந்த எளியவனுக்கு காட்சி தரும் தாங்கள் என்னை கை விட்டுவிட்டீரே !” என்று கதறினார்.

“அப்பனே காலம் கனியும் போது உன்னிலும் என்னைக் காண்பாய்” என்று அசரீரியாய் பதில் வந்தது.

(மீதிக் கதையைப் பின்னர் பார்ப்போம்)

நமக்கு ஒரு குழப்பம். அங்கே இறைத் தாகத்தில் தவிப்பவனுடைய கண்களுக்கு அரியவனாகி நிற்கிறான். ஏதுமறியா அப்பாவிக்கு வேடனுக்கு எளியவனாகி நிற்கிறான். என்ன ஒரு விந்தை ?

இவன் யார் பிடியில் அகப்படுவான் யார் பிடியில் சிக்கமாட்டான் என்பதைத் தீர்மானிக்க யாராலும் இயலாது. எனவே அவனுடைய நிலைப்பாடு இந்நேரத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எவரும் அறுதியிட்டு கூற முடிவதில்லை.

அதே குழப்பம் கபீருக்கும் ஏற்படுகிறது.

भारी कहौं तो बहु डरौं, हलका कहूं तौ झूठ ।
मैं का जाणौं राम कूं, नैनूं कबहूँ न दीठ ॥


அரியவன் என்னலும் தயக்கம்,எளியவன் என்பதும் பொய்யே
அறியேன் யானும் இராமனை, விழிகள் கண்டது மில்லையே


(’டரௌ’ என்று கபீர் பயன்படுத்தியுள்ள சொல் ‘பயத்தைக்’ குறிப்பதாகும். அது ’உண்மையற்றதாகி விடும்’ என்ற பயமே தவிர இறைவனைக் குறித்த பயம் அல்ல. தமிழாக்கத்திற்கு தயக்கம் என்ற சொல் பொருத்தமாகத் தோன்றுகிறது )

அலகிலா விளையாட்டு உடையான் அவனடி சரணாவதைத் தவிர இறைவன் போக்கை ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது.

சாதுவிற்கு அவன் எளியவன் அல்லன். ஆனால் வேடனின் பார்வையில் அவன் அரியனும் அல்லன்.

ஆகையால்தான் ” அவனைப் பற்றி என்ன சொல்ல முடியும்? இராமனை நான் பார்த்ததும் இல்லை”என்று அவன் மகிமையை உணர்த்த இயலாதவராய் அடக்கத்தோடு உரைக்கிறார் கபீர்.

யாருக்கு எது நன்மை செய்யும் அதை எப்போது தரவேண்டும் என்னும் இறைவன் சித்தத்தை யாராலும் அறிய முடியாது என்பதை திருமூலரும் கூறுகிறார்.

அகன்றார் வழிமுதல் ஆதி பிரானும்
இவன்தான் என நின்ற எளியனும் அல்லன்
சிவன்தாள் பலப்பல சீவனும் ஆகும்
நயன்தான் வரும் வழி நாம் அறியோமே


( அகன்றார் = முனிவர்கள்; நயன்தான் வரும் வழி= நன்மைகள் வருகின்ற விதம்)


இப்போது ’காலம் கனியும் போது உன்னில் என்னை காண்பாய்’ என்று சொன்னக் கதைக்கு வருவோம்.

(பட உதவி madhumurali.org :நன்றி)

எங்கோ மோனத்தில் ஆழ்ந்திருந்த பத்மபாதரின் மனக்கண் முன்னே காபாலிகன் சங்கரரை பலி கொடுப்பதற்கு நெருங்கி வரும் காட்சி விரிந்தது. அவர் உபாசித்த நரசிம்ம மந்திரம் அவரை முழுவதுமாக ஆட்கொண்டது. தன் குருவை காப்பாற்ற வேண்டி பெரும் கர்ஜனையுடன் ஆகாயத்திலே எழும்பி புயல் போல் காபாலிகனின் குகையுள் புகுந்தார்.

முன்னொரு நாளில் இரண்ய கசிபுவை எப்படி கையால் தூக்கி அவன் குடலை நரசிம்மம் உருவியதோ அதே கதியை காபாலிகனுக்குக் கொடுத்தார்.

மற்றவர்கள் ஓடிவந்து சமாதியிலிருந்த சங்கரரை எழுப்பினர். இரத்தத்தில் தோய்ந்த சீடனின் உக்கிர வடிவில் நரசிம்மனை கண்ட சங்கரர் உடனே பிரஹ்லாதனைப் போல உக்கிரத்தை தணிக்க நரசிம்மத் தோத்திரம் இயற்றினார்.

சங்கரரை சிவனின் அவதாரமாகவே சொல்வதுண்டு.

சிவனிடமிருந்து வரம் பெறுவதற்காகவே காபாலிகன் சங்கரரை அணுகி அவரது முழு சம்மதத்தின் பேரிலேயே பலியிடுவதற்கு முற்பட்டான். அவருடைய சங்கல்பமில்லாமல் பத்மபாதருக்கு அந்த உத்வேகம் வந்திருக்காது. எல்லாம் அறிந்த சங்கரர் அவனுக்கு அப்படி ஒரு முடிவை கொடுத்தது ஏன் ?

அங்கே தந்திர மார்க்கத்தின் வழி வந்த காபாலிகனுக்கு முக்தியும் தரவேண்டியிருந்தது. இங்கே பத்மபாதருடைய மந்திரசித்திக்கும் ஒரு பூரணத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

’நன்மைகள் வரும் வழி நாம் அறியோமே’ என்று திருமந்திரம் சொல்வதும் ”அறியேன் யானும் இராமனை” என்று கபீர் கூறுவதிலும் உள்ள உண்மை ஒன்றுதான்.

Strange are the ways of God !

Saturday, July 18, 2009

அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம்

கல்லூரிகள் திறக்கும் நேரம் இது. பெரும்பாலான புது மாணவர்களுக்கு உற்சாகத்தை விட கவலை அதிகம். அதுவும் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டியவர்கள் கவலையெல்லாம் சந்திக்கப் போகும் ராகிங் பற்றியதே என்றால் மிகையாகாது. குருக்ஷேத்ராவில் பொறியியல் படிப்பிற்காக சேர்ந்த மாணவொருவன் ஒரே வாரத்தில் கல்லூரியை விட்டே ஓடி வந்து விட்டான். மீண்டும் அங்கு போவதற்கு மறுத்து விட்டான். பல நாட்கள் அவன் பட்ட துன்பமும் தாய் தந்தையருக்கு ஏற்பட்ட துன்பமும் சொல்லி முடியாது.

ஒருவனைச் சுற்றி பலபேர் கூடி பாட்டுப் பாடச் சொல்வது ஆடச் சொல்வது எல்லாம் ராகிங்-ல் சர்வசாதாரணம். அதில் தரக்குறைவான நடத்தைகளும் பேச்சுகளும் புது மாணவனை புண்படுத்தும் வகையிலேயே இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் நிஜ வாழ்க்கையில் திரைப்படம் போலே அடித்து வீழ்த்தி தப்பிக்க முடியாது போகின்றதே :(

நம் ஒவ்வொருவரை சுற்றியும் தினமும் ஐந்து பேர். தூங்கும் நேரம் தவிர எந்நேரமும் நம்மை ஆட்டிவைக்கிறார்கள் அவர்கள் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் போது புது மாணவனைப் போலவே எப்போதடா விடுதலை என்று ஏங்கிப் போகிறது மனது. கபீர் இந்நிலையைப் பற்றி சொல்வதைக் காண்போம்.

कबीर बैरी सबल है, एक जीव रिपु पांच ।
अपने-अपने स्वाद को, बहुत नचावै नाच ॥


வைரியின் பலமதிகம் கபீரா, ஒன்றுக் கெதி்ராய் அஞ்சுமே
தத்தம் போக்கில்ஆட்டுமே, அரங்கில் பல்வகைக் கூத்துமே


(வைரி=எதிரி ; ஒன்று= ஒரு சீவன்; அஞ்சுமே= ஐந்து புலன்களுமே; அரங்கு என்பது உலகத்தை குறிக்கவந்தது)

ஐம்புலன்கள் என்ற எதிரிகள் தத்தம் விருப்பத்திற்கேற்ப மனிதனை ஆட்டிப் படைக்கின்ற நிலையை இந்த ஈரடியில் சித்தரித்திருக்கிறார் கபீர்தாஸ்.

புத்திக்கு நல்லன எவை என்பது தெரிந்தும் அவற்றைப் பற்றிக் கொள்ள முடியாமல் புலன்வழியே அல்லாதனவற்றில் விருப்பு கொண்டு தினங்கள் கழியும் போது குற்ற உணர்ச்சி பலமாக பிடித்தாட்டுகிறது. அதனாலேயே பல நேரங்களில் மன அழுத்தம் அதிகமாகிவிடுகிறது. கண்ணதாசன் போலொரு கவிஞனுக்கு பழி உணர்ச்சியும் அதிகமாகி படைத்தவனை தண்டிக்கவும் சொல்கிறது.
............
”அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவிட்டுப் பார்த்திருப்பேன்.
படுவான், துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
.......”

கடவுளே ஆனாலும் புலனின்பங்களின் இழுப்பிலிருந்து தப்புவது எளிதல்ல என்னும் கற்பனை சராசரி மனிதனுக்கு ஆறுதல் தந்தாலும் பிரச்சனைக்கு விடையாவதில்லை. அதற்கு ஞானிகளின் வழியையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது

ஞானிகளும் புலன்களின் சக்தியை குறைத்து மதிப்பிடவில்லை. அவைகளின் பலத்தை யானைகளின் பலத்திற்கு ஒப்பிடுகின்றனர். மாணிக்க வாசக பெருமான் சொல்வது

ஆனை வெம்போரில் குறுந்தூறு எனப்புல
னால் அலைப்பு உண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினை
யேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமு
தத்தையும் ஒத்
தூனையும் என்பினையும் உருக்கா நின்ற
ஒண்மையனே


யானை நடந்தாலே அடியில் புற்களும் புதர்களும் நசுங்கும். அவைகளிடையே போர் ஏற்பட்டால் சிறிய புதரின் கதி எப்படியிருக்கும்? அப்படி ஒரு புதர் சிக்குண்டு அவதிப் படுவது போலே புலன்களுக்கு நடுவில் சிக்கித்தவிக்கும் என்னை விட்டு விடுவாயோ என்று கலங்குகிறார் மணிவாசகர்.

யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடும். அப்பொழுது ஏற்படும் அபாயத்தைக் காட்டிலும் மதம் பிடித்த -கூட்டத்தை விட்டு ஒதுங்கிய -ஒற்றை யானை மிகவும் அபாயகரமானது என்பர். அதனாலோ என்னவோ கபீர் ஒற்றை யானையாக புலன்கள் வசப்பட்ட மனதை இன்னுமொரு ஈரடியில் சித்தரிக்கிறார்.

कबीर मनहि गयंद है, आंकुस दे दे राखु ।
विष की बेली परिहरो , अमृत का फल चाखु ॥


கரியதன் பலமுண்டு மனதிற்கு, கைகொள் கபீரா ஒரு தோத்திரம்
கரியதை ஒழிக்க வழியுண்டு, கைகொள் அமிழ்தமாம் தோத்திரம்


[கரியதன் பலம் =யானையின் பலம்; தோத்திரம் = 1)அங்குசம் :2) வழுத்துதல் ,போற்றுதல்; கரி்யதை =நஞ்சுடைய மனதை]

தோத்திரம் என்பதற்கு அங்குசம் என்று இன்னொரு பொருளும் உண்டு. வழிக்கு கொண்டு வரத் தேவைப்படுவது யானைக்கும் ஒரு தோத்திரம் மனதுக்கும் ஒரு தோத்திரம் !

அங்குசத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்பட்டு யானைக்கு சுதந்திர மனப்பான்மை போய் அடிமை மனப்பான்மை வந்து விடுகிறது. நம்முடைய மனமும் இறைவன் நாமத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்படும் பொழுது சரணாகதி அடைந்து அமைதி படுகிறது. அதை “அங்குஸ் தே தே ராகு” என்கிறார் கபீர். அவர் மட்டுமல்ல திருமந்திரமும் அதையே உபதேசிக்கிறது.

அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத்து அடக்கவல்லார்கட்கே
அஞ்சு ஆதி ஆதி அகம்புகல் ஆமே.
(977)

உடல் என்ற காட்டுக்குள் ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகள் வாழ்கின்றன. அஞ்சு எழுத்தாகிய ’நமசிவாய’ வை அங்குசம் ஆக்கி ஐம்புலன்களையும் ஒரு சேர அடக்க வல்லவர்களுக்கு அந்த ஐந்திற்கும் ஆதியாகி நிற்கும் ஆதிமுதல்வன் வீடு சேரலாம்.

நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடுஞ்சுடர்
நஞ்செம் பிரான்என்று நாதனை நாள்தோறும்
துஞ்சும் அளவும் தொழுமின்; தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே
( )

[நஞ்செம்பிரான் =நம்+செம்மை+பிரான் ; அஞ்சற்று விட்டது = சங்கிலி அறுபட்டொழிந்த]

அணையா விளக்காய் எல்லா உள்ளங்களிலும் நிறைந்து ஒளிவிடும் செம்பிரானை உணர்ந்து நாள்தோறும் உறங்கச் செல்லும் வரை வழிபடுங்கள். அவனை அவ்வாறு வழிபடாது புறக்கணித்தால் ஐம்பொறிகளும் கட்டிய சங்கிலி அறுபட்டொழிந்த யானை போன்று கட்டுக்கடங்காமல் போய்விடும்.

துஞ்சுமளவும் தொழுமின் என்பதை இறக்கும் வரையிலும் என்ற பொருளிலும் கொள்ளலாம். அப்போது வாழ்நாள் முழுதும் இடைவிடாமல் சிந்தித்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
(picture courtesy : Indian Holidy dot com)

சென்ற இடுகையின் பின்னூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்ட மாதிரி அமைதியான யானை அடங்கிய மனதுக்கு அழகான உதாரணம். தன்னைச் சுற்றி எவ்வளவு தாரை தம்பட்டைகள், அடித்து கொண்டாட்டங்கள் நடத்தினாலும் அமைதி குலையாது மணிக்கணக்காக கோவில் உற்சவங்களில் பங்கு கொள்ளும் பக்குவத்தை காண்கையில் பெரும் ஆச்சரியம் ஏற்படும். பலமுறை ஞானிகளின் மனமும் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்ததுண்டு. தங்களைச் சுற்றி எது நடந்தாலும் அதில் அவர்கள் சம்பந்தப்படாதவர்களாகவே இருப்பார்கள்.

அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இளைஞர் பகவான் ரமணரை அண்ணாமலையார் கோவில் யானையுடன் சேர்த்து எடுத்திருந்த ஒரு புகைப்படத்தை தபால் மூலம் அனுப்பி வைத்தார். அதன் பின் பக்கத்தில் “சரீரத்தை அறியாத பெரிய ஆத்மாவும் ஆத்மாவை அறியாத பெரிய சரீரமும் ஒரே இடத்தில்” என்பதாக குறிப்பும் எழுதியிருந்தார்.

அதற்கு என்ன அர்த்தம் என்று நாகம்மாள் கேட்டதற்கு பகவான் சொன்ன பதில்:

“எவ்வளவு ஆகாரம் கொடுத்தாலும் போதாது என்று பிளிறிக் கொண்டே இருப்பதாலோ என்னவோ அதை ஆத்மாவை அறியாத பெரிய சரீரமென்று குறிப்பிட்டிருக்கிறார். நான் எப்போதும் ஆடி அசைந்து மெதுவாக நடந்து எப்படி எப்படியோ நிற்கிறேன் இல்லையா! அதனாலோ என்னவோ நான் சரீரத்தை அறியாத ஆத்மாவாம். அதுதான் அவர் அபிப்பிராயமாக இருக்கலாம்”
.

பூரண ஞானிக்கு தேகபாவனை இருப்பதில்லை என்பதை உயர்த்தி இளைஞர் குறிப்பு எழுதிய போதும் அதை வெகு நயமாக வேடிக்கையாக திசை திருப்பியது ரமணரின் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு.

இன்னொரு முறை குஞ்சு சுவாமிகள் பகவானின் தேக நடுக்கத்தையும் கோலூன்றும் அவசியமும் நடுவயதிலேயே வந்து விட்டது குறிப்பிட்டு காரணம் வினவிய போது, ”பெரிய யானையை சின்ன குடிசைக்குள் கட்டி வைத்தால் குடிசையின் கதி என்னவாகும்? இதுவும் அவ்வளவுதான் !” என்று பதில் கூறினாராம்.

மனித உடல் என்னும் சிறு கூட்டிலே அடைப்பட்டிருக்கும் நிலையை விஸ்வத்தை தன்னுள் உணர்ந்த மகான் எவ்வளவு எளிமையாக விளக்கி விட்டார் !!

ஆன்மீகத்திலிருந்து யானையை பிரிக்கமுடியாது. ஆனைமுகத்தான் முதற்கடவுள். ஆன்மீக இலக்கியத்திலும் யானைக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு.

இரண்டாவது ஈரடிக்கு மாற்று:
குஞ்சரம் போலாச்சு மனசு, கபீரா அங்குசம் வீசு
நஞ்ச துவும்போ யாச்சு, நாமா மிர்தம் வந்தாச்சு