Sunday, April 14, 2013

சிந்தை கொள்ளும் விஷயப் பிரமை

ஒரு பெரும் பணக்காரர் கண்டிப்பான விடுமுறை எடுத்துக்கொண்டு  யாருடைய உபத்திரமும் இல்லாத தன்னுடைய தீவு பங்களாவில் சில தினங்களைக் கழிக்கச் செல்லுகிறார். அலைபேசி, தொலைபேசி, கணிணி மூச் !! எதுவும் கிடையாது. 

அடர்ந்த தென்னந்தோப்பு. அமைதியான கடலலையின் ஓசை; நினைத்த போதெல்லாம் கடல் நீராட்டம். கேட்ட போதெல்லாம் தித்திப்பான இளநீர் வெட்டிக் கொடுக்க களங்கமில்லா சிரித்த முகத்துடன் ஒரு வாளிப்பான இளைஞன். மரங்களுக்கிடையே கட்டப்பட்ட வலைத்தொட்டிலில் மதியத் தூக்கம். சற்றே மாறுதலான நாட்கள் அவருக்கு உற்சாகம் ஊட்டியது.

தன் கடின உழைப்பால் தான் முன்னேறி வந்த பாதை அவர் மனத்திரையில் நிழலாடத் தொடங்கியது. இந்த இளைஞன் கேட்பாரில்லா தீவில் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறானே என்ற எண்ணமும் தோன்றியது.

" நீ என்னுடன் அமெரிக்காவுக்கு வந்து விடேன். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு”
“வந்து என்ன செய்ய வேண்டும் ஐயா?”
“உன்னை ஒரு நல்ல இடத்தில் வேலைக்கு சேர்த்து விடுகிறேன். நன்றாக தொழில் கற்றுக் கொள்ளலாம்”
”அப்புறம்?”
”திறமையை வளர்த்துக் கொண்டால் நீயே தொழில் துவங்கலாம்.”
”அப்புறம்?”
”உன்னைத் தேடி நிறைய வாடிக்கையாளர்கள் வருவார்கள். செல்வம் பெருகும்”
“அப்புறம் ?”
“நீ வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். என்னைப் போல் சொந்தக் கப்பல், ஒரு தீவு பங்களா போன்றவற்றைக் கூட வாங்கும் அளவுக்கு செல்வம் சம்பாதிக்கலாம்”
“அப்புறம்?”
‘ இதென்ன கேள்வி? இப்போது என்னால் எப்படி சந்தோஷமாக விடுமுறையை கழிக்க முடிகிறது பார்த்தாயா ! அது போல் நீயும் சந்தோஷமாக இருக்கலாம்” “
”இப்பொழுதும் நான் சந்தோஷமாகவேத் தானே இருக்கிறேன். அதை ஏன் அமெரிக்காவுக்கு வந்து [தொலைத்து] பின்னர் இந்த தீவுக்கு தேடிக் கொண்டு வர வேண்டும்?”

இளைஞனின் அப்பாவித்தனமான கேள்வி அந்த பணக்காரரின் அகக்கண்ணைத் திறந்ததோ இல்லையோ கண்டிப்பாக நம் யாவரது சிந்தனையையும் தூண்டக்கூடியது தான்.
ஏதோ ஒரு கண்மூடித்தனமான வாழ்க்கைப் போக்கு. எதற்கு ஏன் என்று சிந்திக்கக் கூட அவகாசம் இல்லாமை. இந்த பொருள் ஈட்டலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து இறைவன் பால் கவனத்தை திருப்புவது என்பது அனேகமாக இல்லை என்றே ஆகிவிட்டது.
தினசரி சுவாமிக்கு விளக்கேற்றுதல், ஏதோ சிறிது தானம் தருமம் செய்தல், அவ்வப்போது கோவில் தீர்த்தம் என்று சுற்றி வருதல் முடிந்தால் கதாகாலக்‌ஷேபமோ சத்சங்கமோ என்று மாதத்தில் ஓரிரு மணி நேரம் செலவழித்தால் அதுவே பெரிய விஷயம். நாம் மிகவும் சாத்வீகமான வாழ்க்கை கைகொண்டு இறையன்பராகி விட்டோம் என்ற போலி திருப்தி மனதுள் குடிகொண்டு விடுகிறது. 

தொலைக்காட்சி முன் அமர்ந்தால் ஏதேனும் செய்தி சானலில் லட்சம் கோடிகள் ரூபாய் ஊழல் பற்றி விஸ்தாரமாக விவரணை. சென்ற வருட ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் மறந்து போயாச்சு.
சென்ற நூற்றாண்டில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய கப்பல் கப்பலாய் இந்திய மக்கள் உலகின் பல பாகங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இந்த நூற்றாண்டிலும் வயிற்றுப் பிழைப்புக்காக கடல் கடந்து பயணித்துக் கொண்டே இருக்கின்றோம்.

அன்றும் இன்றும் என்றும் ஒன்றே! எப்போதும் நம்மைப் பற்றிய எண்ண ஓட்டங்களே மனதை ஆக்கிரமித்துக் கொள்ள, காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறோம்.

காலையில் தவறாது நீராடி, இறைவனைத் தொழுவது என்பது ஒரு சடங்காகிப் போனது.  இதில் ஏதாவது நமது ஆன்மாவின் முன்னேற்றத்திற்கு உதவுகிறதா ? இப்படி மக்கள் நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கின்றனரே என்கிற ஆதங்கம் கபீர் அவர்களின் ஈரடியில் வெளிப்படுகிறது.

आतम द्रुष्टि जानै नहीं न्हावै प्रादहि काल ।
लोक लाज लीया रहै, लागा भरम कपाल ॥

ஆத்மாவைக் கண்டா ரில்லை,அதிகாலை நீராடுவர் நிதம்நிதம்
பாத்திரமில்லா விஷயப் பிரமையும்  நிரம்புதே சிந்தை முழுதும்

(பாத்திரம் =தகுதி, அருகதை;)
இப்படி அருகதையற்ற செல்வத்தை சிந்தையில் இருத்தி மருகிய திருவெண்காடரை மருதவாணர் வடிவில் மகனாய் தோன்றிய சிவபெருமான் அவருக்கு ஆத்மசாட்சாத்காரம் வழங்க செய்த நாடகம்தான் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”. தம் மகனுக்கு முற்றிலும் சிவானந்தப் பேறு எய்தும் பக்குவம் வந்திருப்பதை அறிந்த அவருக்கும் பற்றற்ற துறக்கும் பக்குவம் வந்தெய்தியது.

பட்டைக் கிழித்துப் பருவூசி தன்னைப் பரிந்தெடுத்து
முட்டச் சுருட்டி என் மெய்குழலாள் கையில் முன்கொடுத்து
கட்டியிருந்த கனமாயக்காரிதன் காமமெல்லாம்
விட்டுப்பிரியவென்றோ இங்ஙனே சிவன் மீண்டதுவே.

 
என்ற எண்ணத்துடன் செல்வமெல்லாவற்றையும் சேந்தனார் என்ற கணக்கரிடம் ஒப்புவித்து வேண்டியவர்களுக்கெல்லாம் வழங்குமாறு பணித்து ஊர் பொது மண்டபத்தில் சென்று நிட்டையில் ஆழ்ந்தார். உண்மை அறியாத மன்னன் சேந்தனார் திருவெண்காடரை ஏமாற்றி பொருள் அழிப்பதாகக் கேள்விப்பட்டு அவரை சிறை செய்யச் சொல்லி அடிகளைக் காண பொது மண்டபம் சேர்ந்தான்.
”துறவறம் பூண்டதால் தாம் பெற்ற பயன் யாது ?” என்று அடிகளாரிடம் வினவினான்.  அவரிடம் சிவானந்தப் பேற்றைச் சொல்லி புரிய வைக்கக் கூடிய தருணம் அல்ல அது. அதற்கான தகுதியும் மன்னனிடம் கிடையாது.
அவர் புரிந்துகொள்ளும் வகையிலே, நயமாக
”மன்ன ! நீ நிற்க யாம் அமர்ந்திருப்பதுமான இதுவே எம் துறவின் பயன் “ என்று பதிலுரைத்தார்.

பின்னொரு நாளில் அவர் கபீர் சொல்லும் ஆத்மதத்துவத்தைக் கண்ட பின்னர் பாடுகிறார்

விட்டேன் உலகம். விரும்பேன் இருவினை. வீணருடன்
கிட்டேன்; அவர் உரை கேட்டும் இரேன். மெய் கெடாத நிலை
தொட்டேன். சுகதுக்கம் அற்று விட்டேன் தொல்லை. நான்மறைக்கும்
எட்டேன் என்னும் பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே

அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப் போன வெளிதனிலே வியப்பு ஒன்று கண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே.


நான்கு வேதங்களுக்கும் அட்டாங்க யோகத்திற்கும் பிடிபடாத ஒரு பேரின்ப நிலையாகப் போற்றுகின்றார் பட்டினத்து சித்தர்.
நமக்கும் அது எட்டாத வரை சித்தர் பெருமக்களின் பார்வையில் நாமெல்லாம் வீணர்கள்.

அதனால் தான் அவர்கள் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்து பல அரிய செயல்களை செய்து வழிகாட்டுவதாகக் கேள்வி.

கபீர்தாஸர் சொல்லும் விஷயப் பிரமை வெறும் பொருளீட்டலுக்கு மட்டுமல்ல. அதிகாரத்தை வேண்டி அல்லது புகழ் வேண்டி செய்யப்படும் அனைத்து செயல்களும் அதில் அடக்கம். இறுதியில் எஞ்சப்போவது ஒன்றும் இல்லை.

நேற்றுதான் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் சரித்ராமிருதம் படித்து முடித்தேன். சுமார் 1300 வருடக்களுக்கு முன் ஆந்திராவில் பிதாபுரம் என்ற ஊரில் அவதரித்த அவர் அப்போதே சமர்த்த ராமதாஸர், ராகவேந்திரர், சதாசிவபிரம்மேந்திரர், ராமலிங்க அடிகள் சிரடி சாயி இன்னும் பல மகான்களின் அவதாரத்தை முன்னுரைத்திருக்கிறார்.  ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் சித்தர்கள் எப்போதும் இந்த உலக சேமநலத்தை கண்காணித்து வருகின்றனராம்.

மேலும் அறிய :  வாழ்க்கை வரலாறுஸ்ரீபாத ஸ்ரீவல்லப சமஸ்தானம் 

தர்மத்தின் பாதையில் இருப்பவர்களுக்கு ஒரு கெடுதலும் வராது என்ற நம்பிக்கையுடன் நமக்களிக்கப்பட்ட நேரத்தை இறை நாமத்தில் செலவிட்டு மகான்கள் போற்றும் பாதையாக புத்தாண்டு ”விஜய” வருடத்தை வரவேற்போம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

20 comments:

  1. நேற்றுதான் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் சரித்ராமிருதம் படித்து முடித்தேன். சுமார் 1300 வருடக்களுக்கு முன் ஆந்திராவில் பிதாபுரம் என்ற ஊரில் அவதரித்த அவர் அப்போதே சமர்த்த ராமதாஸர், ராகவேந்திரர், சதாசிவபிரம்மேந்திரர், ராமலிங்க அடிகள் சிரடி சாயி இன்னும் பல மகான்களின் அவதாரத்தை முன்னுரைத்திருக்கிறார். ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் சித்தர்கள் எப்போதும் இந்த உலக சேமநலத்தை கண்காணித்து வருகின்றனராம். //

    கேடகவே இனிமை அளிக்கிறது. சித்தர்கள் எல்லோர் மனதிலும் நல்லதை விதைக்கட்டும்.

    ReplyDelete
  2. ”இப்பொழுதும் நான் சந்தோஷமாகவேத் தானே இருக்கிறேன். அதை ஏன் அமெரிக்காவுக்கு வந்து [தொலைத்து] பின்னர் இந்த தீவுக்கு தேடிக் கொண்டு வர வேண்டும்?”//

    நல்ல பதில்.
    நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டியது.
    எதையாவது தேடிக் கொண்டே இருக்கிறோம் வாழ்க்கையில்.
    இதில் உங்களை சேர்ந்த்துக் கொள்ள கூடாது, நீங்கள் பக்குவ பட்டவர்கள்.
    எதை தொலைத்தேன் அதை தேட வேண்டும் என்று கேட்டாலும் கேட்பீர்கள் அந்த வாலிபன் கேட்டது போல்!

    ReplyDelete
  3. கபீர்தாஸர் சொல்லும் விஷயப் பிரமை வெறும் பொருளீட்டலுக்கு மட்டுமல்ல. அதிகாரத்தை வேண்டி அல்லது புகழ் வேண்டி செய்யப்படும் அனைத்து செயல்களும் அதில் அடக்கம். இறுதியில் எஞ்சப்போவது ஒன்றும் இல்லை.//

    ஆம், உண்மை இறுதியில் எஞ்சப்போவது ஒன்றும் இல்லை.
    வெகு நாட்களுக்கு பின் வந்தாலும் அருமையான விஷயங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தர்மத்தின் பாதையில் இருப்பவர்களுக்கு ஒரு கெடுதலும் வராது என்ற நம்பிக்கையுடன் நமக்களிக்கப்பட்ட நேரத்தை இறை நாமத்தில் செலவிட்டு மகான்கள் போற்றும் பாதையாக புத்தாண்டு ”விஜய” வருடத்தை வரவேற்போம்.
    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.//
    மகான்களை போற்றும் பதிவுகளை நீங்கள் தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விஜய வருடத்தை வரவேற்கிறோம், உங்களையும் தான்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  5. நெடுநாட்களுக்குப் பிறகு பதிவில் உங்களைப் பார்த்தது உங்களையே பார்த்த மாதிரி இருந்தது. இத்தனை நாட்கள் இடைவெளியில் எந்த மாற்றமும் இல்லை. நேற்று இரவு சொன்னதின் தொடர்ச்சியை இன்று தொடர்கிற மாதிரி உங்கள் பணியைத் தொடர்ந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    'அப்புறம்?' கேள்வியே மகத்துவமாகத் தெரிகிறது. ஞானப்பயணத்தின் ஒவ்வொரு படிக்கட்டிலும் அந்த அற்புத கேள்வியே அடுத்ததுக்கு இட்டுச் செல்லும் வழிகாட்டியாய் முடிவிலாத பாதை எங்கணும் தொடர்கிறது.
    எஞ்ஞான்றும்,எந்த நிலையிலும், எந்த அடைதலிலும், எதன் முடிவிலும், நித்ய சிரஞ்சீவியாக நிலைத்து நிற்கும் கேள்வி, 'அற்புறம்?'

    சிந்தனையைக் கிளறி விட்டமைக்கு நன்றி. அந்தக் கிளறுதலுக்காக நிறைய எழுத புத்தாண்டு வேண்டுகோள். ஸ்ரீ விஜய புத்தாண்டு வாழ்த்துக்கள். தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. விஜய வருஷ புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    விஜய வருஷத்தில் விஷய பிரமையிலிருந்து
    விலக வழி காட்டும் பதிவு இது.

    ஆத்மா சந்தோஷித்த நிலையில் தான் எப்பொழுதுமே இருக்கிறது.
    அதைக்கவனியாது இருக்கும் உடலும் உடலையே நினைத்துக்கொண்டிருக்கும்
    மனமும் தான் துன்பத்தில் ஆழ்கின்றன. இன்பத்தை களிக்கின்றன.
    இரண்டிற்குமுண்டான இடைவெளியையும் அறியாது திணறுகின்றன,.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  7. நல்வரவு கோமதி மேடம்,
    மிகவும் ரசித்து படித்து ஒன்றுக்கு நாலாக பின்னூட்டமிட்டு வாழ்த்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி

    ///...நீங்கள் பக்குவ பட்டவர்கள்.
    எதை தொலைத்தேன் அதை தேட வேண்டும் என்று கேட்டாலும் கேட்பீர்கள் அந்த வாலிபன் கேட்டது போல்!///

    உண்மையிலேயே அப்படி எனக்கு ஒரு தகுதி இருந்திருந்தால் இப்படி பதிவு எழுதுவேனா என்பதே சந்தேகம். நான் மிக மிக சராசரி மனிதன். ஏதோ அவன் தரும் ஒரு மன உந்துதலால் எழுதுகிறேன். தங்களைப் போன்ற ஆத்திக அன்பர்களின் ஆதரவும் இன்னொரு காரணம். அது எப்போதும் தொடர்ந்து இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  8. ///நெடுநாட்களுக்குப் பிறகு பதிவில் உங்களைப் பார்த்தது உங்களையே பார்த்த மாதிரி இருந்தது. ///

    ஜீவி சார், தங்கள் பின்னூட்டமும் அதே அளவு மகிழ்ச்சியளிக்கிறது.

    //...சிந்தனையைக் கிளறி விட்டமைக்கு நன்றி. அந்தக் கிளறுதலுக்காக நிறைய எழுத புத்தாண்டு வேண்டுகோள்.//

    தங்கள் ஆசிகளுடன் தொடரவே விருப்பம். கபீர்தாஸரின் விருப்பமும் சேரட்டும் என பிரார்த்திக்கிறேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  9. நல்வரவு சுப்பு சார்,

    //உடலும் உடலையே நினைத்துக்கொண்டிருக்கும்
    மனமும் தான் துன்பத்தில் ஆழ்கின்றன. இன்பத்தை களிக்கின்றன.
    இரண்டிற்குமுண்டான இடைவெளியையும் அறியாது திணறுகின்றன,.///

    கச்சிதமாக சொல்லிவிட்டீர்கள். இதைவிட சுருக்கமாக சொல்லமுடியுமா என்பது சந்தேகமே.
    புது வருடத்திலும் தங்கள் வழிகாட்டுதல் தொடரட்டும் என வேண்டிக்கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
  10. விஜய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

    அருமையான சிந்தனைப் பதிவுடன் தொடங்கிய புத்தாண்டு, அவ்விதமே தொடர, இறைவன் அருளட்டும்...

    ஜீவி ஐயா (மன்னியுங்கள், தொடர் வாசிக்க இயலாமையால் இங்கேயே...), சுப்பு தாத்தா, கோமதி அரசு அம்மா, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. பதிவை மீண்டும் காண்பதில்
    மகிழ்ச்சி; தொடர்ந்து பதிவிட்டு வரவும்

    அன்புடன்
    தேவ்

    ReplyDelete
  12. வருக கவிநயா
    வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வணக்கம் தேவராஜன் சார்,
    தங்களுடைய ஆசிகளின்படியே நடக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்.
    மிக்க நன்றி

    ReplyDelete
  14. கவிநயா, உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.
    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

    ReplyDelete
  15. விஜய புத்தாண்டு வாழ்த்துகள

    பதிவை மீண்டும் காண்பதில்
    மகிழ்ச்சி; தொடர்ந்து பதிவிட்டு வரவும்

    ReplyDelete
  16. மீள்வரவு குறித்து மகிழ்ச்சி!

    ReplyDelete
  17. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  18. இந்தப் பதிவு எனக்கு அப்டேட் ஆகலை! அதான் தவற விட்டிருக்கேன். எப்படி??? போகட்டும்,

    வழக்கம் போல் அருமையான செறிவான முத்து. ஸ்ரீபாத வல்லபர் குறித்த சுட்டிக்கும் நன்றி. குஜராத்திலேயே செட்டில் ஆகிற எண்ணமா? :))))) மறுபடி பதிவு போட்டால் ஒரு மெயில் தட்டவும்.

    ReplyDelete
  19. //கபீர்தாஸர் சொல்லும் விஷயப் பிரமை வெறும் பொருளீட்டலுக்கு மட்டுமல்ல. அதிகாரத்தை வேண்டி அல்லது புகழ் வேண்டி செய்யப்படும் அனைத்து செயல்களும் அதில் அடக்கம். இறுதியில் எஞ்சப்போவது ஒன்றும் இல்லை.//

    ஆமாம், ஆனாலும் எல்லாரும் ஏன் ஓடிண்டே இருக்காங்கனு புரியலை! :((

    ReplyDelete
  20. @ YRSK Balu
    @ Vasudevan Tirumurti
    தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற இறைவன் அருள் வேண்டுகிறேன். நன்றி
    @ திண்டுகல் தனபாலன் -வலைச்சரத்தின் முதல் வாசகர் தாங்கள் தான் என்று எண்ணுகிறேன். தொடரட்டும் தங்கள் சேவை.

    @ கீதா சாம்பசிவம்
    //.. குஜராத்திலேயே செட்டில் ஆகிற எண்ணமா?..//
    //ஆனாலும் எல்லாரும் ஏன் ஓடிண்டே இருக்காங்கனு புரியலை! //

    நான் என்னை மனசில் வச்சு எழுதியதைக் கண்டுபிடுச்சுட்டீங்களே !! பெரிய சைகாலஜிஸ்ட்-தான் நீங்கள் :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி