Sunday, February 19, 2012

யானும் தானாய் ஒழிந்தானே

எந்த ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டுமென்றாலும் ஒருவருடைய ஜாதகத்தில் குரு பலம் கூடி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. இந்த குரு, நவக்கிரங்களில் ஒன்றான வியாழ பகவானின் சஞ்சரிப்பு பலன் என்று சொல்லப்படுகிறது. என் போன்று, குருவை அறியாதவர்களுக்கு அந்த குருபலமே போதும் என்று சும்மா இருந்தே வாழ்க்கையை கழிப்பது வாடிக்கையாய் விடுகிறது.

ஒரு சிலருக்கோ வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே குரு அருள் துளிர் விடத் தொடங்குகிறது. அப்படிப்பட்டவர்களுள் ஒருவர் அகோரமணி தேவி. இளம் வயதிலேயே கணவனை இழந்திருந்த அவளுக்கு ஒரு வைஷ்ணவ குரு மூலமாக கோபால மந்திர உபதேசம் கிடைத்து. பால கோபாலனே அவளுக்கு பிடித்த தெய்வம். குழந்தைப் பேறு வாய்க்க இயலாத அவளுக்கு குட்டி கிருஷ்ணன் லீலைகளைக் கேட்பதே ஆனந்தப் பொழுது போக்கு. அதனால் கோபாலனின் மந்திரமே அவள் வாழ்க்கைக்கு பிடிப்பாயிற்று. அவளுடைய அண்ணன் நீல்மாதவ் பட்டாச்சாரியா பணியாற்றிய ராதாமாதவ் கோவிலுக்கு தினமும் வந்து சிறு சிறு கைங்கரியங்கள் செய்வது அங்கேயே அமர்ந்து வெகு நேரம் செபம் செய்வது என வழக்கப்படுத்திக் கொண்டாள்.

ராதா மாதவ் கோவிலை நிர்வகித்த கோவிந்த தத்தரின் மனைவிக்கு அகோரமணியின் எளிமை, மனத்தூய்மை மிகவும் பிடித்துப் போனது. அதனால் அவளை கோவிலினுள்ளே இருந்த ஒரு சிறிய அறையில் வசிக்குமாறு அழைப்பு விடுத்தாள். அடுத்த முப்பது வருடங்களுக்கு அதுவே அவளது வாசஸ்தலமாகியது. இருவருக்குமிடையே இருந்த வயது வித்தியாசம் சத்சங்கத்திற்கு தடையாகவில்லை. அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து தியானம் செபம் செய்வது அகோரமணி தேவிக்கு வெகு இயல்பாக கைகூடியது. சில நாட்கள் இரவு வெகு நேரம் வரையிலும் கோபாலனின் நாமசெபத்தில் தன்னை மறந்து ஈடுபட்டதுண்டு.

குருபலம் உடையவர்களுக்கு நாட்கள் அப்படியே போய்விடுமா என்ன!

கமார்ஹட்டியில் வசித்த இந்த பெண்மணிகளுக்கு தட்சிணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணரைப் பற்றி யாரோ சொல்லவே அவரை சந்திக்கும் ஆர்வம் பற்றிக் கொண்டது. இவர்களைக் கண்ட மாத்திரத்திலேயே அன்புடன் அவர்களை வரவேற்றார் குருதேவர். அவரே சில பாடல்களைப் பாடி அவர்களது மனதை கொள்ளை கொண்டார். அவர்களை அடிக்கடி வந்து போகும்படி அன்பாய் அழைப்பும் விடுத்தார். காந்தம் இரும்பை ஈர்க்கத் தொடங்கியது.

சில நாட்களுக்குள் அவரை சந்திக்கும் ஆர்வம் அதிகமாகவே கடையில் சிறிது தின்பண்டம் வாங்கிக் கொண்டு குருதேவரை அடைந்து நமஸ்கரித்தாள். தயக்கத்துடன் தின்பண்டங்களை அவர் முன் வைப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே உரிமையுடன் அதை பறித்துக் கொண்டு ராமகிருஷ்ணர் சுவைக்கத் தொடங்கினார். அதை பாராட்டியதுடன் அடுத்த முறை வரும்போது தேங்காய் பர்பி நீயே செய்து கொண்டு வா என்று அன்புடன் கட்டளையிட்டார். தேங்காய் பர்பிக்கு பிறகு லட்டுக்கு ஆசைப்படுவது அதற்கப்புறம் வேறொரு தின்பண்டம் என்றவாறு ஒவ்வொரு முறையும் அவளிடம் வெறும் தின்பதை பற்றியே பேச்சு சுற்றி சுற்றி வந்தது. ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. அகோரமணிக்கு ஏமாற்றம் ஏற்படத் துவங்கியது. தனக்கு ஆன்மீக சாதனையில் வழிகாட்டுவார் என்றால் இந்த மனிதர் எப்போதும் தின்பதைப் பற்றியே பேசுகிறாரே..இனிமேல் இவரை சந்திப்பதில் அர்த்தமில்லை என்று நினைக்கத் தொடங்கினாள்.

ஒருநாள் அதிகாலையில் தன் தியானத்தை முடித்து கண் திறந்தபோது அவளுக்கு பெரும் ஆச்சரியம். சற்று தூரத்தில் குருதேவர் வலது முஷ்டியை இறுகப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். கனவா நிஜமா என்று ஊர்ஜிதம் செய்ய அவரைத் தொட முயற்சித்தபோது மாயமாய் மறைந்து போனார். அவர் இருந்த இடத்தில் இப்போது பாலகிருஷ்ணன் அதே வலது முஷ்டியை இறுகப் பிடித்தவாறு அவளை நோக்கி ஓடி வந்தான். தின்பதற்கு வெண்ணெய் கொடு என்றான். விடியலுக்கு காத்திருக்கும் இருட்டில் அந்த ஏழை வெண்ணெய்க்கு எங்கு போவாள். அவனோ விடுவதாயில்லை.அடுக்கப்பட்டிருந்த சட்டிகளை துழாவிக் கிடைத்த பிட்டு மாவை தேங்காயும் சர்க்கரையும் சேர்த்து உருண்டை பிடித்து கொடுத்தாள். அதுவே போதும் என்பது போல் தின்று விட்டு விளையாடத் தொடங்கி விட்டான். அகோரமணி செபம் செய்ய அமர்ந்தால் அவளுடைய செபமாலையை பறித்துக் கொண்டு ஓடுவது, அவளை அமர விடாமல் தன்னுடன் விளையாட அழைப்பது, கூச்சலிட்டுக்கொண்டு அறைக்குள்ளே சுற்றி சுற்றி வருவது என்பதாக அகோரமணியின் இஷ்ட தெய்வம் அவள் முன்னே ஓடியாடத் தொடங்கினான். அவளுக்கு தரையில் கால் பாவவில்லை. விடிந்ததும் கோபாலனைத் தூக்கிக் கொண்டு குருதேவரை காண ஓடினாள்.

அவரைக் கண்டதுமே மடியில் இருந்த கோபாலன் அவருள் மறைந்து போனான். ராமகிருஷ்ணரோ பாவசமாதியில் கோபாலனைப் போலவே தவழ்ந்து வந்து அவளது மடியில் படுத்துக் கொண்டார். தன்னை விட பதினான்கு வயது இளையவரான குருதேவரை வாத்ஸல்ய பாவத்துடன் அணைத்துக் கொண்டார் அகோரமணிதேவி. உடல் நினைவிருந்தால் தானே வயது, ஆண், பெண் என்ற வித்தியாசமெல்லாம். அந்த நேரத்தில் அது பெரும் உணர்வுக்குள்ளே தோய்ந்து போன இரு பெரும் ஆத்மாக்களின் சங்கமம். உடல் என்னும் கருவி உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் விடாது. அவளது கண்களிலிருந்து ஆறாய் நீர் பெருகி குருதேவரை நனைத்தது. குழந்தையற்ற தனக்கு தாய்மை பாசத்தை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பை எண்ணி எண்ணி அவள் மனம் உருகியது. சிறிது நேரம் கழித்து குருதேவர் எழுந்து கட்டிலின் மீது அமர்ந்து கொண்டார். அவளது தலையை அன்புடன் நீவி கொஞ்சம் கொஞ்சமாக நினைவுலகுக்கு கொண்டு வந்தார். அன்றிலிருந்து அவளுடன் குட்டி கோபாலன் விளையாடுவது, நீர் கொண்டு வர அல்லது சுள்ளி பொறுக்கப் போகும்போது கூடவே வருவது, அவளுடைய கையையே தலையணையாகக் கொண்டு உறங்குவது என்பதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. தனக்கென குழந்தை ஒன்று இருந்திருந்திருந்தால் என்னென்ன இன்பம் கிட்டியிருக்குமோ அத்தனையும் குருதேவரின் அருளால் அவளுக்கு கிட்டியது. சில மாதங்களுக்குப் பிறகு ராமகிருஷ்ணர் அவளுக்குக் கொடுத்த அந்த காட்சியை சிறிது சிறிதாக குறைத்து விட்டார். மானுட உடல் ஒரு அளவுக்கு மேல் இத்தகைய நிலையில் நிலைக்க இயலாது என்பதை புரிய வைத்தார். அவளுக்கு தியானம் செபம் போன்றவை எதுவும் தேவையில்லை விட்டு விடலாம் என்று அறிவுறுத்தினார். பழக்கதோஷத்தால் விட முடியாவிட்டால் குருதேவருக்காக செய் என்ற வழிமுறையையும் சொல்லிக் கொடுத்தார்.

ஒவ்வொருமுறையும் குருதேவரை சந்திக்கப் போகும்போது ஏன் அவர் தின்பண்டத்தைப் பற்றியே பேசினார் என்பது அகோரமணிக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத்தொடங்கியது. அவளைக் கண்டதும் அவர் பாலகோபாலனின் மனநிலையை அல்லவோ அவர் அடைந்து விடுகிறார். குழந்தையின் புத்தி தின்பதும் விளையாடுவதும் தானே. அது பல வருடங்களாக அவள் செய்த நாமசெபத்தின் முதிர்ந்த நிலை. குருவே அவள் முன் குழந்தையாக மாறிப்போனார். இதற்கு இடம் காலம் என்பனவெல்லாம் தடையல்ல.

இந்த மன நிலையை கபீர் அழகாக சித்தரிக்கிறார்.

कहैं कबीर गुरु प्रेम बस, क्या नियरै क्या दूर ।
जाका चित्त जासों बसै, सो तेहि सदा हज़ूर ॥

பத்தி போதும் குருவுக்கு, கபீரா, அருகென்ன தூரமென்ன ?
சித்தம் அவனுள் தோய்ந்தால், உடனே அருகில் இருப்பான்


மாற்று
குருவுக்கு அருகோ தூரமோ கபீரா, பக்தி செய்தால் போதும்
உணர்வும் அவனுள் கரைந்தால், முன்னே நிற்பான் எப்போதும்


குருவும் இறைவனும் வேறு வேறு அல்ல. அவனே இவன், இவனே அவன். ஆகையால் அவனையே நினைத்திருப்பவர்களுக்கு அவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இறையருள் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஏனென்றால் அவர்கள் வெளியே இல்லை. பக்தரின் உள்ளத்தின் உள்ளிருந்தே அல்லவோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையே “யானும் தானாய் ஒழிந்தானே” என்று நம்மாழ்வார் போற்றுகிறார்.

உணர்வில் உம்பர் ஒருவனை
அவன தருளால் உறல்பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன்.
அதுவும் அவனது இன்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும்மற்
றுலப்பி லனவும் பழுதேயாம்
உணர்வைப் பெற வூர்ந்திறவேறி
யானும் தானாய் ஒழிந்தானே.


இந்த உடம்பு , உணர்வு, உயிர் மற்று உலகில் உள்ள எல்லா கவர்ச்சிகளும் பழுதுடையவையே என்ற உணர்வை என்னுள் தூண்டி அவனின்றி நானில்லை என்று ஆத்மாவில் நிலைப்பெறச் செய்து எனக்கும் அவனுக்கும் வித்தியாசமில்லாமல் செய்த இந்த அருள்கூட அவனது இன்னருளால் அன்றோ நடைபெறுகிறது என்று வியந்து பாடுகிறார் நம்மாழ்வார். ’உணர்வின் உள்ளே இருத்துதலைத்தான் தலையாயக் கடமையாக கபீரும் சொல்கிறார்.

ஜடாதரி வழங்கிய ராம்லாலா விக்ரகத்தில் தன் உணர்வை பதித்து குழந்தை ராமனை நேரில் தரிசித்து விளையாடி மகிழ்ந்த ராமகிருஷ்ணருக்கு அகோரமணியின் ஆன்ம சாதனை உள்ளம் கவர்ந்ததாயிற்று. அவளை எப்போதும் கோபாலேர்-மா [கோபாலனின் தாய்] என்றே குறிப்பிடுவார்.

நாத்திகம் பேசிய நரேந்தரிடம் அவளைக் கண்டு பேசுமாறு பணித்தார். கிராம மக்களுக்கே உள்ள எளிமையுடன் எழுத்தறிவில்லாத அகோரமணி குருதேவரின் அருளைக் கூறக்கூற நரேனுக்கு கண்ணில் நீர் பெருகியது. அவள் சொல்வது யாவும் சத்தியம் என்று அவர் உள்ளம் சொல்லியது. இறைவன் அன்பருக்கு எப்போதும் எளியவனே என்ற உண்மை புரிந்தது. அவளுடைய கடைசி காலம் வரை விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதா அவளுக்கு பணிவிடை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

[ஆதாரம் : Saints & Mystics, Sri Ramakrishna Math, Mylapore Chennai -ISBN 81-7823-319-3 ]
-----------------------
பல வருடங்களுக்கு முன் இரண்டு முறை கொல்கத்தா சென்றும் தட்சிணேஸ்வரத்திற்கு செல்ல முடியவில்லையே என்ற மனக்குறை இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக ஒரு கருத்தரங்கில் பங்கு கொள்ள அழைப்பு வந்தபோது தட்சிணேஸ்வரம் சென்று அந்த மகான் புழங்கிய புண்ணிய பூமியை வணங்கி வந்தேன். அவர் வாழ்ந்த அறைக்குள் பலரும் மௌனமாக தியானத்தில் இருந்தனர். நானும் சில நிமிடங்கள் அமர்ந்து அங்கிருந்த அமைதியை உள்வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். நம்மாழ்வார் சொல்வது போல அதுவும் அவனது இன்னருளே. உழைப்புக்கு ஏற்ற பலன்தானே கிடைக்கும்.
எனக்குள்ள குரு பலம் இதுதான் போலும். :))

இன்று ராமகிருஷ்ண ஜெயந்தி. அரவிந்தாசிரம ஸ்ரீ அன்னையின் ஜெயந்தியும் கூடவே வருகிறது. யாவருக்கும் குரு அருள் பெருகட்டும் என வேண்டிக்கொள்கிறேன். சில தட்சிணேஸ்வரத்து படங்கள் உங்களுக்காக.

நம்முடைய வாழ்க்கையும் இந்த பறவைகளைப் போலவே அறியாமையில் கழிந்து போகுமோ !

22 comments:

 1. வெகு நாளுக்குப்பிறகு ஸத்ஸங்க ஸுகம் தருகிறீர்கள். நன்றி

  கோபால மா என அழைக்கப்படும் அகோரமணி தேவியின் பக்தியை
  ரா கணபதி அவர்கள் எழுதியதும் நினைவில் நிழலாடியது.

  பரமஹம்ஸ தேவ சரிதம் சொல்லும்
  ஒவ்வொருவரும் அத்புதமானவர்கள்


  தேவ்

  ReplyDelete
 2. பதிவைப் பார்த்ததும் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. படித்து விட்டு நிதானமாக வருகிறேன்.

  ReplyDelete
 3. ஆஹா, அற்புதம், அதி அற்புதம், அகோரமணி ஆழ்ந்து போனாளோ இல்லையோ, நீங்கள் ஆழ்ந்து போயிருப்பதை உணர்ந்தேன். அருமையான வர்ணனை. பொருத்தமான பிரபந்தப் பாடல். வழக்கம்போல் வெகு நிதானமாக மனதை ஈடுபடுத்திச் செதுக்கிய சிற்பம். அழகான, ஜீவன் ததும்பும் சிற்பம். கண்முன்னே தோன்றிய காட்சிகள். கொடுத்து வைத்தவர். பொறாமையாகவே இருக்கு.

  குரு என் ஜாதகத்தில் இருக்காரா என்னன்னே எனக்குத் தெரியலை; அவ்வளவு முட்டாள்! நீங்களாவது குருவை அறியாவிட்டாலும் குருபலத்திலாவது திருப்தி காண முடிந்ததே. வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. பல வருடங்களுக்கு முன்பு தேவியை தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது. மாதாவின் அற்புத ரூபம் இன்னும் கண்ணில் நிற்கிறது.

  நன்றி.

  ReplyDelete
 5. ரொம்ப நாட்களுக்குப் பிறகு பார்த்ததில், அதுவும் கோபலன் தாயுடன் பார்த்ததில், மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் உண்டாயிற்று.

  குருதேவரின் திருவடிகள் சரணம் சரணம்.

  ReplyDelete
 6. நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !

  ReplyDelete
 7. // பரமஹம்ஸ தேவ சரிதம் சொல்லும்
  ஒவ்வொருவரும் அத்புதமானவர்கள்//

  உண்மைதான் தேவராஜன் ஐயா, அவர் மூலம் எத்தனை சாதகர்கள் உலகின் பார்வைக்குத் தெரிய வந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாயிருக்கிறது.
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 8. //படித்து விட்டு நிதானமாக வருகிறேன்.//

  காத்திருகிறோம் ஜீவி சார். கபீரைக் கண்டதும் சந்தோஷம் உங்களுக்கு. உங்கள் யாவரது பின்னூட்டத்தைக் கண்டதும் அதே அளவு சந்தோஷம் எனக்கும். நன்றி

  ReplyDelete
 9. //..அழகான, ஜீவன் ததும்பும் சிற்பம். கண்முன்னே தோன்றிய காட்சிகள். //

  கீதா மேடம், கண்ணன் கதையில் நீங்கள் செதுக்காத சொற்சித்திரங்களா !!
  உங்களுக்கு தாராள மனசு.பாரட்டறீங்க. மிக்க நன்றி

  ReplyDelete
 10. நல்வரவு வெற்றிமகள்,

  // மாதாவின் அற்புத ரூபம் இன்னும் கண்ணில் நிற்கிறது.//

  உண்மைதான். எல்லோரும் வரிசையில் அமைதியாக சென்றதால் தரிசனம் மிக நன்றாகவே கிடைத்தது.

  நன்றி

  ReplyDelete
 11. //ரொம்ப நாட்களுக்குப் பிறகு பார்த்ததில்,.....//

  வாங்க கவிநயா, உங்க கருத்தையேதான் தேவராஜன் ஐயாவும் ஜீவிசாரும் சொல்லியிருக்காங்க. எனக்கும் எழுத ஆசைதான். ஆனா இப்போ படிக்ககூட நேரம் கிடைக்கிறதில்லை. ராமகிருஷ்ண ஜெயந்திக்காக ஒரு பதிவாவது போட்டாகணுங்கற முடிவை அவனே நடத்திக் கொடுத்தான் என்பதுதான் உண்மை.
  பதிவு பிடித்திருப்பது கண்டு எனக்கும் மகிழ்ச்சி. நன்றி

  ReplyDelete
 12. நல்வரவு தனபால் அவர்களே,

  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
  தொடர்த்து வாருங்கள்.

  ReplyDelete
 13. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிற பதிவுதாநேன்றாலும், கங்கை பிரவகித்து வருவது போல அந்த இடைவெளியைக் காணாமல் அடித்துக் கொண்டு போய் விட்டது!ஸ்ரீ ராம கிருஷ்ணருடைய ஜன்ம தினத்தில், ஒரு அருமையான பதிவைத் தந்ததற்கு ஹ்ருதயபூர்வமான நன்றி!

  ReplyDelete
 14. நல்வரவு கிருஷ்ணமூர்த்தி சார்.
  இப்போதுதான் அன்னையைப் பற்றிய தங்கள் இடுகையை படித்தேன். எதை செய்யணுமோ அதை செய்யாமல் வேறு எதிலோ காலம் போய்க் கொண்டிருப்பதை நினைத்தால் ஒரு குற்ற உணர்வு கூட தோன்றுகிறது .
  நடுவே ஏதோ ஒரு சத்சங்க காரியமாவது செய்ய முடிந்தால் அதுவும் ஒரு அணிற் சேவைதான்.
  பாராட்டுக்கு நன்றி

  ReplyDelete
 15. இத்தனை நாள் இடைவெளி விட்டு வந்த பதிவு, இத்தனை நாள் காத்திருந்த இடைவெளியைப் பஞ்சாய் பறக்கடித்து விட்டது. அன்று விட்டதின் தொடர்ச்சியைப் படிப்பது போன்றே உணர்வு.

  உணர்வுபூர்வமான ஆகர்ஷிப்பு இல்லையெனில் இவ்வளவு பிடிப்புடன் எழுதியிருக்க (விவரித்திருக்க) முடியாது. குருபலன் வாய்க்கப் பெறும் பேறு பெற்றவர் நீங்கள் என்பதில் எள் முனையேனும் சந்தேகமில்லை.

  தங்களுக்கு முடிந்த பொழுதெல்லாம் எங்களைப் பரவசப்படுத்துங்கள்.

  ReplyDelete
 16. மீள்வருகைக்கும், வழக்கம் போல் மிகவும் ரசித்து படித்து வாழ்த்தியதற்கும்,தங்கள் ஆசிகளுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

  ReplyDelete
 17. ஒரு சிலருக்கோ வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே குரு அருள் துளிர் விடத் தொடங்குகிறது. அப்படிப்பட்டவர்களுள் ஒருவர் அகோரமணி தேவி. //

  அகோரமணியின் இஷ்ட தெய்வம் அவள் முன்னே ஓடியாடத் தொடங்கினான். //

  அகோரமணியின் வரலாறு இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

  குருவின் அருளால் அகோரமணியின் இஷ்டதெய்வம் காட்சி கொடுத்தாரே குருவால் ஆகாது ஏதாவது உண்டா!

  //குருவும் இறைவனும் வேறு வேறு அல்ல. அவனே இவன், இவனே அவன். ஆகையால் அவனையே நினைத்திருப்பவர்களுக்கு அவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இறையருள் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஏனென்றால் அவர்கள் வெளியே இல்லை. பக்தரின் உள்ளத்தின் உள்ளிருந்தே அல்லவோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையே “யானும் தானாய் ஒழிந்தானே” என்று நம்மாழ்வார் போற்றுகிறார்.//

  உண்மை. குருவும், கடவுளும் வேறு வேறு அல்ல.


  தட்சிணேஸ்வரம் சென்று அந்த மகான் புழங்கிய புண்ணிய பூமியை வணங்கி வந்தேன்//

  1978லில் நாங்களும், மகான் புழங்கிய புண்ணிய பூமியை வணங்கி வந்தோம்.


  நம்முடைய வாழ்க்கையும் இந்த பறவைகளைப் போலவே அறியாமையில் கழிந்து போகுமோ !//

  போகது கபீரன்பன், இறைவனையும், குருக்களையும் தேடும் உங்கள் உள்ளம் எப்படி அறியாமையில் கழியும்! எங்களை போன்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறீர்கள்.

  நான் ஊருகளுக்கு போய் விட்டதால் இந்த பதிவை பார்க்கவில்லை.
  இப்போது தான் பார்க்கும் பேறு பெற்றேன். நன்றி ,நன்றி.

  ReplyDelete
 18. நல்வரவு கோமதி மேடம்
  அகோரமணி தேவி பற்றிய பதிவு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி.

  //நான் ஊருகளுக்கு போய் விட்டதால் இந்த பதிவை பார்க்கவில்லை.//

  அதனால் என்ன! நானும், தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் பொறுமை கூட இல்லாமல் ஏதேதோ அலுவல் விஷயமாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். தங்கள் அன்புக்கு மிக்க நன்றி. வணக்கம்

  ReplyDelete
 19. படித்து , மன அமைதி அடைந்தேன்.இதமாக உள்ளது.
  நமஸ்காரம்.

  தமிழ் கருவூலம் பற்றி, தெரிவித்ததற்கு, நன்றி. என் பதிவிலும் சேர்த்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 20. இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

  தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

  மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_1097.html

  ReplyDelete
 21. இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

  தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

  மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_1097.html

  ReplyDelete
 22. கபீர்தாசரின் அறிவுரைகளில் எனக்கு மிகவும் பிடித்தது.

  துன்பப்படும்போது இறைவனை நினைக்கிறீர்களே
  இன்பத்தில் ஆழ்ந்திருக்கும்போதும் இறைவனை நினைத்தால் உங்களுக்கு ஏன் துன்பம் வருகிறது? .

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி