Thursday, May 22, 2008

அன்னை எத்தனை அன்னையோ !

ஆசுகவி காளமேகம் பற்றிய பாடம் துணைப் பாட நூலில் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்தது. கூடவே தமிழ் முக்கிய பாடத்தில் இருந்த அவரது சிலேடை கவிதைகள் அவர் மேல் ஒரு பிடிப்பை ஏற்படுத்தின. பல வருடங்களுக்குப் பின் இராமகிருஷ்ண விஜயத்தில் படித்த அவரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி. இது பலரும் அறிந்திருக்கக் கூடிய கதைதான்.

கவி காளமேகம் வைஷ்ணவத்திலிருந்து சைவத்திற்கு தன் பக்தியை மாற்றிக்கொண்டவர். ஒருநாள், பெருமழையில் வழியில்லாமல் திருக்கண்ணபுரக் கோவிலில் ஒதுங்க முற்பட்டார். அங்கிருந்த வைஷ்ணவர்கள் அவரிடம் ''கண்ணபுரத்தானை உயர்த்திப் பாடுவதானால் உமக்கு இடமுண்டு '' என்று வழி மறித்தனர்.'ஆஹா அதற்கென்ன' என்றவர் “கன்னபுரம் மாலே கடவுளிலும் நீ அதிகம்'' என்று முதல் அடியை சொல்லி உள்ளே புகுவதற்கு வழி செய்து கொண்டார். மழை விட்டதும் கிளம்பும் போது தன் குறும்பைக் காட்டினார்.

கன்னபுரம் மாலே கடவுளிலும் நீ அதிகம்
உன்னிலும் யான் அதிகம்; ஒன்றுகேள்-முன்னமே

உன் பிறப்பு பத்தாம் உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை.

என் பிறப்பு எண்ணத் தொலையாதே !


இப்பாடலைத் தொடர்ந்து இன்னும் ஒரு பாடல் இருந்தது. அதில் “நான் எண்ணிறந்த பிறவிகளில் குடித்திருக்கும் தாய்ப்பால் உன் பாற்கடலினும் பெரிது“ என்பதாக பொருள் வரும். அப்பாடல் மதுரை தமிழ் திட்ட தொகுப்பில் காணக் கிடைக்கவில்லை இந்த இரண்டாம் பாடல் பற்றிய விவரம் தெரிந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

எப்படியோ! காளமேகம் நம்மையும் கூட பெருமாளை விட பெரிய ஆளாக்கி விட்டார். ஏனெனில் நாம் கூட காளமேகத்திற்கு நம் பிறப்புகளின் எண்ணிக்கையில் சளைத்திருக்க மாட்டோம். ஹூம் ! எப்படியெல்லாம் பெருமை கொள்ள முடிகிறது மனிதனால் !!

வெறும் எண்ணிக்கையில் பெருமை கொள்ளும் விஷயமா இது ? இன்பம் தரும் விஷயமாக இருந்தால் பெருமை கொள்ளலாம். பிறவி என்பதே துன்பமயமானது என்னும் போது ‘பிறவிப் பெருங்கடலை நீந்தும்' வகையறியாது காலம் கழிப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்.

அதனால் கபீர் போன்ற ஞானிகளுக்கு உலகமக்கள் பிறப்பை கொண்டாட்டத்திற்கான காரணமாக கொள்ளும் போது வருத்தம் மேலிடுகிறது.

बेटा जाये क्या हुआ, कहा बजावै थाल ।
आवन जावन होय रहा, ज्यों कीडी़ के नाल ॥

பேடா ஜாயே க்யா ஹுவா, கஹா பஜாவை தால் |
ஆவன் ஜாவன் ஹோயி ரஹா, ஜ்யோன் கீடீங் கே நால் ||


பிறந்தான் குமரன் என்று, குமண்டை குணலி எதற்கு
பிறந்து மடிவன கீடம், நெளியும் சலதியில் பாரங்கு


(குமண்டை=செருக்கிய செயல், குணலி=ஆரவாரக் கூத்து, கீடம்= புழுக்கள், சலதி=சாக்கடை)

சாக்கடையில் பிறக்கின்ற புழுவும் கூட உண்டு, உறங்கி(?) இனப்பெருக்கம் செய்து பின் மடிகிறது. அதை விட எந்த வகையில் நம்முடைய இந்த பிறவி உயர்ந்ததாகிறது ?

..............................................
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்

வல்லசுரராகி முனிவராய் தேவராய்ச்

சொல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்....
(சி்வபுராணம்)

என்று மாணிக்க வாசகர் இறைவன் படைப்பின் தன்மை குறித்தும் மனிதனின் குறிக்கோள் குறித்தும் ஒருங்கே சொல்லிவிடுகிறார்.

சங்கரரைப் போல பிறவியிலேயே ஞானியாக இருக்க முடியாதுதான். அட ராமானுஜரைப் போலவோ, இராகவேந்திரரைப் போலவோ இல்லறத்தில் இருந்து பின் குரு சேவையால் உயர்ந்து வழிகாட்டிகளாக முடியாவிட்டாலும் பரவாயில்லை. நந்தனார் போலவோ ஆண்டாள் போலவோ பக்தி செய்ய இயலாவிட்டாலும் போகட்டும். வயதுக்கேற்ற முதிர்ச்சியே இல்லாமல் 'மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காத பிறவி' களைப்பற்றி என்ன சொல்வது ?

கண்களில் திரைப் பூத்து பார்வை மங்கிவிட்டது. செவிகளின் கேட்கும் திறன் குன்றி விட்டது. தலையில் வெள்ளிக்கம்பிகள் போல நரைமயிர் ஒளிர்கின்றது. ஆயினும் மன்னன் யயாதி போல உலக சுகங்களை தொடர்ந்து அனுபவிக்கும் ஆசை விடுவதில்லை. அப்படிப் பட்டவர்களை கண்டு கபீருக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது.

आंखि न देखे बावरा, शब्द सुनै नहि कान ।
सिर के केस ऊजल भये, अबहूं निपट अजान ॥


ஆன்கி ந தேகே பாவ்ரா, ஷப்த் சுனை நஹி கான் |
ஸிர் கே கேஸ் ஊஜல் பையா, அப்ஹூ நிபட் அஜான் ||


கண்ணிலே ஒளியும் மங்குது, செவியிலே ஒலியும் மெலியுது
தலையிலே நரையும் ஒளிருது, கடையிலே பேதமை நிற்குது

(கடையிலே= மரணகாலத்தில், பேதமை=அஞ்ஞானம்)

மாற்று :
ஒளியிழந் தனவே கண்கள், செயலிழந் தனவே செவிகள்
வெளியே றும்வழி தேடார்,பின்னும், வெளிற்முடி வெளியாரே


(வெளியேறும் வழி= முத்திக்கான வழி; தேடார் = தேட மாட்டார்கள்; வெளிறு=வெண்மை; வெளியார்= அறிவற்றவர்கள் )

ஒரு புகழ் பெற்ற பெண், ஆங்கில, உபன்யாசகர் சொன்ன ஒரு நிகழ்ச்சி. அவரது அமெரிக்க சொற்பொழிவுகளுக்கு ஏகக் கூட்டம். பாதிக்கு மேல் தமிழ் பேசுபவர்கள். ஒரு முறை நிகழ்ச்சி துவங்க இன்னும் அவகாசம் இருந்தது. பார்வையாளர் இருக்கையில் ஏதொவொரு பின் வரிசையில் சொற்பொழிவாளர் அமர்ந்திருக்கிறார். அவர் முன் அமர்ந்திருந்திருந்த இரு தமிழ் மூதாட்டிகள் ஏதேதோ பேசிக் கொள்வது இவர் காதில் விழுகிறது. அப்போது ஜீன்ஸ் பாண்ட் அணிந்த ஒரு இளம் பெண் இவர்களை தாண்டிச் சென்றாள். பேச்சை பாதியிலே நிறுத்தி, அவள் போன திசையை பார்த்தபடியே ஒரு மூதாட்டி சொன்னது

“அடுத்த ஜென்மத்திலாவது அமெரிக்கால பொறந்து ஜீன்ஸு, ரேபான் க்லாஸ் மாட்டிகிட்டு சுத்தணும்”.

!!!!!!!

ஓரிரு முறை, மகளுக்காகவோ, மருமகளுக்காவோ வெளிநாடு சென்று வந்த பல வயதில் முதிர்ந்த பெண்மணிகள் ஊர் திரும்பிய பின் காலை நேரங்களில், அது வரை நாம் அவரணிந்து கண்டிராத, பாண்ட்-டும் ரெபோக் ஷூவுமாக வாக்கிங் செல்லும் மாற்றத்தை பலர் கண்கூடாக கண்டிருக்கிறோம். “ ரொம்ப கம்ஃபர்டபலா இருக்கு” என்பது சொல்லப்படும் ஒரு காரணம். ஆனால் உள்ளுக்குள் தாம் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆதங்கம். உண்மையில் இவையெல்லாம் தேகாபிமானத்தால் எழக்கூடிய ஆசைகளே.

இவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடும் பொழுது நாம் வெளிப்படுத்திக் கொள்வது நம் மன முதிர்ச்சி இன்மையையே.

கழிந்துபோன இளமை, ஆனால் முடிவில்லாத புதுப் புது ஆசைகள். பிறப்பென்னும் பிணியை தொடர வைக்கும் சங்கிலி. நம்முடைய இந்த நிலை கண்டு பெரியவர்கள் வேறென்ன செய்ய முடியும் ? கபீர் போலவும் பட்டினத்தார் போலவும் ஒரு பாட்டை பாடி வைத்துவிட்டு போகத்தான் முடியும்.

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ

பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ

பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சென்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்

இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ

என் செய்வேன் கச்சி ஏகம்பநாதனே.
(திரு ஏகம்பமாலை)


அருகில் காணப்படும் ஓவியம் இறுதி தீர்ப்பு நாள் பற்றிய ஓர் ஓவியம். அதைக் கண்டபோது கபீர் சொன்ன ”சலதியில் நெளியும் புழுக்கள்” நினைவுக்கு வந்தது. ஓவியர் கிட்டோ,(Gitto) 16 ஆம் நூற்றாண்டு.

18 comments:

  1. எத்தனை அன்னையர், எத்தனை தந்தையர், எத்தனை பிறவி வருமோ... இப்படி ஒரு பாடல் கோபலகிருஷ்ண பாரதியின் நந்தனர் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது! அதனை இது நினைவு படுத்துகிறது!

    திரு ஏகம்பமாலை - இது யார் இயற்றியது கபீரன்பன் - இந்த நூல் இணையத்தில் எங்கேனும் கிடைக்குமோ?

    ReplyDelete
  2. வருக ஜீவா.

    திருஏகம்ப மாலை பட்டினத்தார் இயற்றியது. அவருடைய பாடல் தொகுப்புகளில் கண்டிப்பாக இருக்கும். மதுரை தமிழ் திட்டத்திலும் கிடைக்கும்.

    //இப்படி ஒரு பாடல் கோபலகிருஷ்ண பாரதியின் நந்தனர் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது ///

    பல ஞானிகளின் கருத்தை கவிஞர்களும் கலைஞர்களும் காலத்திற்கேற்றவாறு பயன்படுத்தி கொள்வது மக்களுக்கு நல்லதே அல்லவா ?

    ReplyDelete
  3. நீங்கள் சொன்னபடியே கிடைத்துவிட்டது கபீரன்பன்!
    மதுரை திட்டத்தில்: சுட்டி
    திருவேகம்பமாலை என்று தலைப்பு இருந்தது - நீங்கள் பிரித்து பொருள் சொல்லவிட்டால், உடனே தெரிந்திருக்காது, நன்றிகள்!

    ReplyDelete
  4. மிக்க சந்தோஷம் ஜீவா.

    நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பு சுட்டி பலருக்கும் பயன்படும்.

    நன்றி

    ReplyDelete
  5. "உண்மையறிந்தவர் உன்னைக்கணிப்பரோ மாயையே
    மனத்திண்மையுள்ளாரை நீ செய்வது
    மொன்றுண்டோ மாயையே.......
    இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்
    அற்ப மாயையே தெளிந்தொருமை
    கண்டார் முன்னம் ஓடாது
    நிற்பையோ மாயையே.."
    என்று பாரதியும் சொல்லியுள்ளான் பலசமயம் நாம் கடந்து வந்து பாதைகளைத்திரும்பிப்பாற்கும் போது தான் நாம் செய்த அபத்தங்கள் புரிய ஆரம்பிக்கும் அதை தற்போதைய வாழ்வில் நடைமுறைப்படுத்தி பழக ஆரம்பித்தால் பிறப்பெனும் பயணம் குறைய வாய்ப்பிருக்கும் தானே...

    ReplyDelete
  6. நல்வரவு கிருத்திகா

    //,,,பாதைகளைத்திரும்பிப்பாற்கும் போது தான் நாம் செய்த அபத்தங்கள் புரிய ஆரம்பிக்கும் அதை தற்போதைய வாழ்வில் நடைமுறைப்படுத்தி பழக ஆரம்பித்தால் .. ///

    நம் வாழ்க்கை மூலமே அபத்தங்களைப் பற்றிய அனுபவ பாடம் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. உன்னித்துப் பார்த்தால் (சாட்சி பாவமாக) நம்மை சுற்றி உள்ள எல்லா நிகழ்ச்சிகளிலும் நல்லன மற்றும் அல்லாதானவற்றை பிரித்தறிய முடியும். அதற்கு பெரியவர்கள் சொல்லி இருக்கும் வழிமுறைகள் துணை செய்யும். அந்த அனுபவத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலமும் பயணம் குறைய வாய்ப்புகள் அதிகம்.

    சரிதானே ? :)

    நன்றி

    ReplyDelete
  7. திரு ஏகம்பமாலையில் 42வது பா, மனிதப்பிறப்பு ஒரு சீரியல் தொடர் கதை போல ( கோலங்கள்
    அல்லது ஆனந்தம் ) எனச் சொல்லிய பட்டினத்தார், 7 வது பாடலிலே இப்பிறப்புத்தொடரினை
    அறுக்க, அல்லது அதிலிருந்து விடுபெறவும் விமோசனம் பெறவும் வழி கூறுகிறார்.

    கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
    நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின் அஞ்செழுத்தைச்
    சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும்
    எல்லாப்பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே.

    பிழை என்னவெனச் சொல்லியதன் மூலம் அப்பிழைகளைச் செய்யாதிருக்கவேண்டும் என வேண்டுவார்
    பட்டினத்தார். மனம் திடப்பட்டது. மாயை அகன்றபின் மன நிலை எப்படி இருக்கும் ? எது கிடைக்கிறதோ
    அதைக்கொண்டு உயிர் வாழவேண்டும் என்பார்.

    " உடை கோவணம் உண்டு உறங்கப் புறந்திண்ணை யுண்டு உணவிங்கு
    அடைகாய் இலையுண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே
    விடையேறும் ஈசர் திரு நாமம் உண்டு இந்த மேதினியில்
    வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே ! "
    "
    எது நடப்பினும் நடக்காது இருப்பினும் அது ஈசன் செயல் என்று
    நடப்பதற்கெல்லாம் ஒரு சாட்சியாகவே தனைக் கண்ட
    மெய்ஞானி பட்டினத்தார்.

    கபீர் ஒரு புறம் அனித்தியத்தை நித்தியம் என நினைத்து கர்வம் கொள்ளாதே எனவும்
    எச்சரித்திருக்கிறார்.

    बेटा जाये क्या हुआ, कहा बजावै थाल ।
    आवन जावन होय रहा, ज्यों कीडी़ के नाल ॥

    தேகம் அனித்தியம் மரணம் நிச்சயம். இந்த தேகத்தை வைத்துக்கொண்டு கர்வப்படுவதற்கு
    என்ன இருக்கிறது ? காலன் ஒரு நாள் கொண்டு போக காத்து இருக்கிறான்

    கபீர் கஹா கர்வியொள, கால் கஹை கர் கேஸ்
    நெள ஜாணை கஹா மாரிசீ, கை கர் கை பர்தேஸ்.

    ஆகவே, உயிர் உள்ளவரை,
    "ஒன்றென்றிரு ! தெய்வம் உண்டென்றிரு. உயர் செல்வமெல்லாம்
    அன்றென்றிரு. பசித்தோர் முகம்பார் ! நல்லறமும் நட்பும்
    நன்றென்றிரு. நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
    என்றேன்றிரு ! மனமே உனக்கே உபதேசம் இதே "

    என்பார் பட்டினத்தார்.
    நாம் கேட்கிறோமா !

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  8. Ekambamalai by pattinathar consists of forty three stanzas. I shall send the same to Jeeva, if he needs it.
    subbu rathinam.
    thanjsai.

    ReplyDelete
  9. //ஓரிரு முறை, மகளுக்காகவோ, மருமகளுக்காவோ வெளிநாடு சென்று வந்த பல வயதில் முதிர்ந்த பெண்மணிகள் ஊர் திரும்பிய பின் காலை நேரங்களில், அது வரை நாம் அவரணிந்து கண்டிராத, பாண்ட்-டும் ரெபோக் ஷூவுமாக வாக்கிங் செல்லும் மாற்றத்தை பலர் கண்கூடாக கண்டிருக்கிறோம். “ ரொம்ப கம்ஃபர்டபலா இருக்கு” என்பது சொல்லப்படும் ஒரு காரணம். ஆனால் உள்ளுக்குள் தாம் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆதங்கம். உண்மையில் இவையெல்லாம் தேகாபிமானத்தால் எழக்கூடிய ஆசைகளே.//

    உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளன. ஆனால் ஒரு நெருடல்.

    உடனே உங்கள் அறிமுகத்தைப் பார்த்தேன். ஒரு ஆணின் கண்ணோட்டம் தெரிகிறது. என் மனதில் எழுந்த கேள்வி- 'before generalising all the women wanting to project themselves as young things..does anyone know the difference of wearing a saree and walking with canvas shoes? does any one experience the inconvenience? why would old women want to show off their body at the old age?. If at all they wanted to, they would have shown off in many other ways. Why can't a man simply accept that it is comortable to wear a trouser and shoes and walk better?. Moreover, all through their lives, Indian women are made to feel guilty for having a good body, and figure. It is women are pulled up when men ogle at them! In this scenerio where does the sense of showing off and feeling young comes?

    ReplyDelete
  10. மிக அறியனவற்றை தந்தமைக்கு நன்றி கபீரன்பன்.

    ReplyDelete
  11. வெற்றிமகள்,
    /உண்மையில் இவையெல்லாம் தேகாபிமானத்தால் எழக்கூடிய ஆசைகளே.//
    இது ஆணின் கண்ணோட்டத்தில் சொன்னதாக நான் கொள்ளவில்லை - பொதுவாக இருபாலாருக்கும் சொன்னதாகவே தெரிகிறது.
    இந்த விஷயத்தில் deduce செய்வது முழுமுழுக்க சரியில்லா விட்டாலும், அப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள் அல்லவா. அவர்களை உதாரணமாகக் கொண்டு, இந்தக் கருத்தின் பார்வையை, கோணத்தைக் மட்டும் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  12. வெற்றிமகள் அடி வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி.

    // 'before generalising all the women wanting to project......//
    அப்படி ஒரு எண்ணம் வரும்படியாகவா எழுதியிருக்கிறேன்? அப்படித் தோன்றினால் மன்னித்து விடுங்கள். என் குடும்பத்தைச் சார்ந்த பெண்மணிகள் பலரும் பலமுறை வெளிநாடுகளுக்கு பயணம் போய் வந்த பின்னும் எவ்வித மாற்றமும் இல்லாது முன்போலவே வாழ்க்கையை தொடர்கிறார்கள். எனவே என் மனதில் பொதுப்படையாக்கிச் சொல்லும் எண்ணம் கிடையாது.

    //Why can't a man simply accept that it is comortable to wear a trouser and shoes and walk better? //

    Now, you have made generalized statement. :)

    உடைகள் காலத்திற்கு ஏற்றபடி, ஈடுபட்டுள்ள வேலக்கேற்றபடி, சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறுதலுக்கு உட்பட்டவை என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. எனவே அதைக் குறித்து என்னளவில் எந்த விவாதமும் இல்லை. முன்னம் சொல்லப்பட்ட பெண் உபன்யாசகர் சொல்லிய நிகழ்ச்சியை ஒட்டி நாமும் காணுகின்ற அனுபவத்தை மட்டுமே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

    கட்டுரையில் சொல்லவந்தது தேகாபிமானம் பற்றியது. அதில் தலைக்கு சாயம், உதட்டு சாயம், முடிதிருத்திக் கொள்ளும் பாணி என வேறு பலவும் அடங்கும்.

    ஆண்களுக்கும் இதில் (இளமையாகக் காண்பித்துக் கொள்வதில்) அதே அளவு ஈடுபாடு உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஒருவர் தம்முடைய முதுமையை மறைக்கச் செய்யும் எந்த செயலும், தம் இயல்புக்கு பொருந்தாவற்றை பொருந்தாத சூழ்நிலைகளில் செய்ய முற்படும் பொழுது நகைப்புக்கு இடமாகக் கூடும் என்ற கண்ணோட்டத்துடன் மட்டும் காணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  13. மதுரையம்பதி நல்வரவு

    // மிக அறியனவற்றை தந்தமைக்கு நன்றி //

    நன்றி, அடிக்கடி வாருங்கள்.

    ReplyDelete
  14. // இது ஆணின் கண்ணோட்டத்தில் சொன்னதாக நான் கொள்ளவில்லை//

    உங்கள் புரிதலுக்கு நன்றி ஜீவா.

    ReplyDelete
  15. நன்றி சுப்பு ரத்தினம் ஐயா,

    1.//கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி....//

    2. // "ஒன்றென்றிரு ! தெய்வம் உண்டென்றிரு.... //

    எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பாடல்கள். முதலாவதை தினமும் இரண்டு முறையாவது சொல்லிக் கொள்வேன். கருத்து செறிவுள்ள ஒரு ‘அபராத-க்‌ஷமா ஸ்தோத்திரம்'

    இரண்டாவதும் எனக்கு மனப்பாடம். இவற்றை பதிவுகளில் எங்காவது பயன்படுத்த வேண்டும் என்றிருந்தேன். நீங்களே அதை செய்து விட்டீர்கள். நன்றி

    ReplyDelete
  16. Thanks for being graceful about my comments. I appreciate your blogs and learn a lot from it.

    ReplyDelete
  17. நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய செய்திகளை அரும் பாடல்களுடன் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி!

    ReplyDelete
  18. வாங்க கவிநயா,
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி