Saturday, December 05, 2009

இன்சொலான் ஆகும் கிளமை

காலை எட்டு மணியிலிருந்து சுமார் பதினொரு மணிவரை, நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டு , அரை கிமீ தூரத்திலிருந்த மெயின் ரோடு அலுவலகத்தை நடந்தே அடைந்தேன். வெயில் அசாத்தியமாக இருந்தது.

வாயிலில் வேட்டி கட்டிய கிராமத்து இளைஞன் காத்து நின்றிருந்தான். ஒடிசலான தேகம், வற்றிய கன்னங்கள். “யாரு வேணும்?” என்று கேட்டுக்கொண்டே பூட்டைத் திறந்து உள் நுழைந்தேன். ”உங்களத் தான் பார்க்கணும்னு வந்தேன்” என்ற அவன் உள்ளே வரவில்லை. கிராமத்துப் பக்க மக்களுக்கு உள்ள அடக்கம் தெரிந்தது. ”வாப்பா, உள்ளே வா” என்றழைத்தேன். நடுங்கிய கரங்களில் ஒரு உறையை நீட்டினான். வேலைக் கேட்டு வந்த விண்ணப்பம், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

" ... I shall discharge all my duties to the fullest satisfaction of your esteemed office.."

”என்ன படிச்சிருக்கே ?”
பத்தாவது ஃபெயில், சார்.
ஒரு புன்முறுவலோடு ”யாரு எழுதி கொடுத்தா இந்த லெட்டரெ?” என்று கேட்டேன்.
”எங்க மாமா; ........ ஸ்கூலு வாத்தியாரா இருக்காரு”.

பொதுவாக வேலைக்கான விண்ணப்பம் என்றாலே ஆங்கிலத்தில் தான் எழுதப்படவேண்டுமென்ற நினைப்பு பலருக்கு உண்டு.

அவனுக்கு நிறுவனத்தின் அன்றைய நிலைமையை விளக்கி, விரைவிலேயே உற்பத்தி துவங்கப்படும் பொழுது அவனுடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்று சொன்னேன்.

“சார், குடும்பம் ரொம்ப கஷ்டத்துல இருக்கு சார்....பார்த்து செய்யுங்க”

அவனுடைய குடும்பத்தில் யார் யார் என்னென்ன செய்கிறார்கள் விவரங்களை கேட்டுக் கொண்டேன். வசதியற்ற குடும்ப பின்ணணி என்பது புரிந்தது.

‘சரிப்பா ! எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும் இல்லையா. நாம நெனச்ச உடனே எதுவும் நடக்கிறதில்லையே! கூடிய சீக்கிரம் பாக்கலாம்!” என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

இம்மாதிரி சிலர் வருவதும் விண்ணப்பங்கள் கொடுப்பதும் அந்த காலகட்டத்தில் வாடிக்கைதான். அதனால் அதை பெரிதாக நினைத்து பார்க்கவில்லை. ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவனிடமிருந்து ஒரு அஞ்சல் அட்டை வந்தது. அவனுக்கு முகம் கொடுத்து நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியதற்கு தமிழில் நன்றி தெரிவித்திருந்தான். அதில் முகஸ்துதி இருக்கவில்லை. அது அவன் உள்ளத்திலிருந்து வந்தது என்பது புரிந்தது. ஒருவேளை வேறு பல இடங்களில் அவன் அனுபவம் கசப்பாக இருந்ததோ என்னவோ !

முதன்முறையாக, ஒரு உரையாடல் இனிமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எனக்குப் புரிய வைத்த நிகழ்ச்சி அது. நான் சாதாரணமாக பேசிய வார்த்தைகள் எவ்வளவு தூரம் அவனுடைய வாடிய உள்ளத்திற்கு தெம்பு அளித்திருக்கிறது என்பதை அவனுடைய வரிகளில் படித்த போது ஆச்சரியமாக இருந்தது.

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.


முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதெ அறவழியில் அமைந்த பண்பாகும்.


பள்ளிக்கூடத்தில் வள்ளுவர் கூறியதை படித்திருந்தாலும் மனதில் வேர்விடாத கருத்து இந்த ஒரு அஞ்சல் அட்டை மூலமாக மறக்க முடியாத பாடமாகி விட்டது.

’அகத்தானாம் இன்சொலின்’ என்னும் போது இனிமையான சொற்கள் உள்ளத்திலிருந்து உண்மையாய் வரவேண்டியவை என்று புரிகிறது. அது எப்போது உண்மையாகும் என்பதை கபீர்தாஸ் சற்று விரிவாகக் கூறுகிறார்.

ऐसी वाणी बोलिए, मन का आपा खोये
अपना तन शीतल करे, औरन को सुख होए


நவில்வீர் நயமுடனே தானடங்கி தனுவடக்கி
தம்மன்பர் தம் உள்ளங் குளிரும் உரைகளே

(தான் அடங்கி= மனதில் ஆணவமற்று ; தனு அடக்கி = உடல் அவையவ கட்டுபாடுடன் )

மாற்று :
தானெனு முணர்வு களைந்து, தனுவதால் குற்றம் தவிர்த்து
அன்பர் தம் அகம் குளிர்வித்து, நவில்வீர் நும்முரை தேர்ந்து

( நும்முரை = உமது உரை)

Body language என்பதை இன்றைய நிர்வாக இயலில் கூர்ந்து கவனிக்கின்றனர்.

ஒருவர் இருக்கையில் அமரும் விதம், உரையாடலின் போது கைகளின் பிரயோகம், முகத்தில் காட்டப்படும் பாவனைகள் (கண் விரித்தல், நெற்றி சுருக்குதல், உதடு சுழித்தல், கொட்டாவி ), சத்தம் போட்டு சிரிப்பது, நையாண்டியாக கைகால்களை ஆட்டுவது, சோம்பல் முறித்தல் போன்றவை உடலால் ஏற்படக்கூடிய குற்றங்கள் ஆகும். இவற்றைக் கொண்டு, ஒருவர் எவ்வளவுதான் இனிமையாகப் பேசினாலும் அவருடைய பேச்சு எவ்வளவு தூரம் உண்மை அல்லது போலி என்பது புரிந்து விடும். ’அப்னா தன் ஷீதல் கரே’ என்பதன் மூலம் கபீர் பேசுபவரின் உடற்மொழி கட்டுக்குள் அமைதியாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உரைக்கிறார்.

அடுத்து மனதை பற்றி நிற்கும் குறை. இது அகங்காரத்தைச் சார்ந்தது. பேச்சின் தொனியிலேயே இது தெரிந்து விடும். தொனியின் மாறுபாட்டால் சொல்லவரும் கருத்தின் பொருள் மாறி போக வகையுண்டு.

பாண்டவர்களை ஒழித்து விடுவதாக சபதமிட்டு அஸ்வத்தாமன் அவர்களை துரத்திக் கொண்டு வந்தான். கண்ணனின் யோசனை ஏற்று அவர்களை ஒரு குழியினுள் பதுங்கச் செய்து அதை மூடி அதன் மேல் துர்வாசர் அமர்ந்து கொண்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் துர்வாசரை அணுகி அவர்களைப் பற்றி விசாரிக்கிறான் அஸ்வத்தாமன். ”ஆமாம் நான் அவர்களை எனக்கு அடியில்தான் ஒளித்து வைத்திருக்கிறேனாக்கும்” என்று மிகவும் கோபம் கொண்டவர் போல் கூறினார். கோபத்தில் நக்கலாக பேசுகிறார் என்று நினைத்து அவர் கோபத்துக்கு அஞ்சி அஸ்வத்தாமன் அங்கிருந்து விலகிப் போய்விட்டான்.

இப்படி நம் குரலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் (modulation) எப்படி கேட்பவர் உள்ளத்தில் பலவிதமான பாவனைகளை ஏற்படுத்தும் என்பதை ஒரு நிர்வாகயியல் பயிற்சி அரங்கில் சிறிய உதாரணத்துடன் விளக்கினர்.

பயிற்சியாளர் கரும்பலகையில் கீழ்கண்டவாறு எழுதினார்.

மணி பார்வதியை அடித்தான் என்று நான் சொல்லவில்லை

இந்த சொற்றொடரில் முதலில் ‘நான் சொல்லவில்லை’ என்பதை அழுத்தம் கொடுத்து சொல்லிப் பாருங்கள். கேட்பவர்களுக்கு ‘ வேறு யாரோ சொல்லியிருக்கவேண்டும் ‘ என்ற பாவனைத் தோன்றும்.

அதையே மணி என்ற வார்த்தைக்கு மாத்திரம் அழுத்தம் கொடுங்கள். இப்போது அடித்தவர் மணி அல்ல வேறு எவரோ என்ற பாவனை தரும். பார்வதி அடி வாங்கியது உண்மை. ஆனால் அதில் மணிக்கு சம்பந்தம் இல்லை .

அடுத்ததாக ’பார்வதியை ’ என்பதில் அழுத்தம் கொடுத்து சொல்லுங்கள். மணி அடித்தது உண்மை. ஆனால் பார்வதியை அல்ல.


இவ்வாறு நமது அன்றாட பேச்சில் நாம் சொற்களை கையாளும் விதம் பல விதமான பாவனைகளை கேட்பவர் மனதில் உண்டாக்கும்.

ஆகவே பேச்சு என்பது வெறும் எண்ணங்கள், நிகழ்வுகள் மட்டுமல்லாமல் உணர்வுகளும் கலந்து வெளிப்படுவது.

ஒருவன் தவறு செய்திருக்கலாம் என்பது நமது ஊகம். ஆனால் அவனைப் பற்றிய முந்தைய நிகழ்வுகள் அவன் தான் குற்றவாளி என்ற முடிவுக்கே இட்டு சென்று நமது வார்த்தைகளிலும் அதற்கான தொனி வெளிப்பட்டு விடும். அதை ஆங்கிலத்தில் prejudice என்பர். நமது கருத்துகளே சரி என்கிற அகங்காரத்தினால் வருவது. எனவேதான் மன அமைதியில்லாமல் எது பேசினாலும் அங்கே பொருட் குற்றம் வரக்கூடும்

அதனையே ”மன்கா ஆபா கோயே” என்று கபீர் சொல்கிறார்.

பல நேரங்களில் ஏதும் பேசாமலே மௌனம் காப்பது உத்தமம். ஞானிகள் பெரும்பாலும் கைகொள்வது இந்த அணுகுமுறைதான். தம் குறைகளை காது கொடுத்து ஒருவர் கேட்டாலே சொன்னவருக்கு பாதி மனப்பாரம் குறைந்து விடும். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் சேவை.

மனிதப் பிறவி என்பதே அந்த இறைவனின் சொரூபம் என்றும் நமது இயல்பான குணமே ஆனந்தம் என்று ஞானிகள் சொல்கிறார்கள். ஆனந்தமாயுள்ளவனிடம் கோபமிருக்காது, அகங்காரமிருக்காது. அப்போது வெளிவரும் சொற்கள் யாவுமே இன்பம் தருபவையாகவே இருக்கும்.

அதனால்தான் குழந்தைகளின் பேச்சு யாவரையும் கவருகிறது.

சிறுபஞ்சமூலம் இந்த உண்மையை “இயல்புக்கு மாறான வன்சொற்களால் பகைமை வரும்” என்று சொல்கிறது. ஆமாம் வன்சொற்கள் மனித இயல்புக்கு மாறானவை. அவனது இயல்பு ஆனந்தம். அதனால் அவன் சொற்கள் இன்சொல்லாகவே இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இன்சொலான் ஆகும் கிளமை; இயல்பு இல்லா
வன்சொல்லில்ன் ஆகும் பகைமைமன்-மென்சொல்லித்
ஓய்வு இல்லா ஆரருளாம் அவ்வருள் நன்மனத்தான்
வீவு இல்லா வீடாய் விடும்.


(கிளமை= உறவு ; வீவு இல்லா = அழிவு இல்லாத ; வீடு =மோட்சம்)

[இனிய மொழிகளால் உறவு ஏற்படும்; இயல்புக்கு மாறான கொடிய சொற்களால் பகைமை வரும் ;மென்மையான சொற்களால் தொடர்ந்து பெருமையும் அருளும் பெருகும்; கருணையுள்ள நெஞ்சத்தால் கேடில்லா வீடு பேற்றை பெறலாம். ]

புல்லாங்குழலில் இனிய நாதம் வருவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் மூங்கிலில் நேரான அடைப்புகளற்ற உட்கூடு இருக்கவேண்டும். வளைந்து இருக்கும் மூங்கிலில் மூச்சுக் காற்றின் பாதை சீராக இருக்காது. அடைப்புகள் உள்ள குழலிலும் இசைக்கு வாய்ப்பில்லை. நம் மனம் அகங்காரம், தன்னலம் போன்ற கோணல்கள், அடைப்புகள் இல்லாமல் போகும் போது அழகான புல்லாங்குழல் போலாகிறது. அதை அவன் கை கருவியாக்கி செயல்பட்டால் நம் பேச்சு ஒவ்வொன்றும் இனிய நாதமாக இருக்கும். எப்போதும் பிறர்க்கு மகிழ்ச்சி ஊட்டுவதாக இருக்கும் என்பர் சான்றோர்கள்.

”அகத்தான் இன்சொலினிதே அறம்” என்று வள்ளுவர் சொல்வதும் “மன்கா ஆபா கோயே” என்று கபீர் சொல்வதும் ஆன்மீகப் பயணத்தில் இந்த முக்கியமான கட்டத்தை அடைவதற்காகத்தான். ஏனெனில் வீடு பேறு நோக்கிய பயணத்தில் அது ஒரு மைல்கல்.

20 comments:

  1. ////////மனித பிறவி என்பதே அந்த இறைவனின் சொரூபம் என்றும் நமது இயல்பான குணமே ஆனந்தம் என்று ஞானிகள் சொல்கிறார்கள். ஆனந்தமாயுள்ளவனிடம் கோபமிருக்காது, அகங்காரமிருக்காது. அப்போது வெளிவரும் சொற்கள் யாவுமே இன்பம் தருபவையாகவே இருக்கும்.
    /////////
    படிப்பதற்கே அழகாய் இருக்கிறது. அப்படி ஒரு முதிர்ச்சி வராதா என்று ஏக்கமாய் இருக்கிறது. நன்றி அய்யா.

    ReplyDelete
  2. ////////
    நம் மனம் அகங்காரம், தன்னலம் போன்ற கோணல்கள், அடைப்புகள் இல்லாமல் போகும் போது அழகான புல்லாங்குழல் போலாகிறது. அதை அவன் கை கருவியாக்கி செயல்பட்டால் நம் பேச்சு ஒவ்வொன்றும் இனிய நாதமாக இருக்கும்.
    /////////////
    கேள்வியை எழுப்பி
    அதற்கு பதிலும் அளித்திருக்கிறீர்கள் அய்யா
    நன்றி.

    ReplyDelete
  3. ஸத்யம் அதைக்காட்டிலும் நுண்ணியதாக ரிதம் என்றெல்லாம்
    அறநூல்கள் வகைப்படுத்தியுள்ளன;
    நீங்கள் மேலும் தெளிவுபட விளக்கியுள்ளீர்கள். வழக்கம்போல் அருமையாக உள்ளது.

    தேவ்

    ReplyDelete
  4. உரைக்கிறீர்கள் உண்மையின் உரைதனை வரவேற்கிறேன் அதனை இன்னும் பல...

    ReplyDelete
  5. நல்வரவு fundoo

    @ வாருங்கள் bxbybz

    வரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  6. வணக்கும் தேவராஜன் ஐயா,

    //ஸத்யம் அதைக்காட்டிலும் நுண்ணியதாக ரிதம் என்றெல்லாம்
    அறநூல்கள் வகைப்படுத்தியுள்ளன
    //

    ரிதம் என்பது மனம்,மொழி,செயல் இவற்றில் முரண் இல்லாமல் சத்தியத்தை கடைபிடிப்பது என்று நினைக்கிறேன். மேலும் விளக்கினால் வாசகர்கள் பலருக்கும் பலனளிக்கும்.

    தங்கள் ஆசிகளுக்கு நன்றி

    ReplyDelete
  7. வாங்க கேசவன்

    // உரைக்கிறீர்கள் உண்மையின் உரைதனை வரவேற்கிறேன் //

    உரைத்ததும் உரவோர் உரைதானே! உண்மையின்றி போகுமா :)

    தங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி

    ReplyDelete
  8. அருமையிலும் அருமை! வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை. மிக்க நன்றி.

    ReplyDelete
  9. Beautiful words said in a beautiful manner. :-)
    Rama Rama Rama ! (I read your last post. :-))

    ReplyDelete
  10. நல்வரவு கவிநயா,


    //அருமையிலும் அருமை!//

    இன்னொரு இடுகை எழுதுவதற்கான தெம்பு வந்துவிட்டது. மிக்க நன்றி.

    ReplyDelete
  11. வாங்க ராதா

    //Rama Rama Rama ! (I read your last post. :-)) //

    இன்னும் ஹேங்கோவர் போகலியா! :)). ராமநாமத்தில் ஹேங்கோவர் இருந்தா ரொம்ப சந்தோஷப் படவேண்டிய விஷயம்தான்.
    நல்லதே நடக்கும்.
    நன்றி

    ReplyDelete
  12. //மணி பார்வதியை அடித்தான் என்று நான் சொல்லவில்லை//

    அட! நீங்க சொல்ற மாதிரி குறிப்பிட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுக்கும் பொழுதும், வெவ்வேறு பொருளைத் தான் தர்றது!

    ஒரே வரி; ஒவ்வொரு வார்த்தை அழுத்தத்திற்கும் வெவ்வேறான அர்த்தங்க்ள்!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சப்தஸ்வர தூண்கள் மாதிரி! ஒரே கல்லானான தூண்! ஒவ்வொரு தட்டலுக்கும் வெவ்வேறான ஓசை இன்பம்!

    ஒண்டர்புல்!

    ReplyDelete
  13. //பல நேரங்களில் ஏதும் பேசாமலே மௌனம் காப்பது உத்தமம்.//

    அமுத வாக்கு!

    என்ன பேசினாலும் சரியான புரிதல் இன்றி மென்மேலும் விவாதமாகும் இரைச்சலுக் கிடையே, இந்த மெளனம் அபார வலிமை வாய்ந்தது. அதன் அருமையை, பெருமையை அனுஷ்டித்தோரே அறிவர்.

    ReplyDelete
  14. //ஆமாம், வன்சொற்கள் மனித இயல்புக்கு மாறானவை. அவனது இயல்பு ஆனந்தம். அதனால் அவன் சொற்கள் இன்சொல்லாகவே இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.//

    அருமை, ஐயா!

    ReplyDelete
  15. அந்த புல்லாங்குழ்ல் உவமை எவ்வளவு அற்புதமாய் இருந்தது என்கிறீர்கள்!..

    //”அகத்தான் இன்சொலினிதே அறம்” என்று வள்ளுவர் சொல்வதும் “மன்கா ஆபா கோயே” என்று கபீர் சொல்வதும் ஆன்மீகப் பயணத்தில் இந்த முக்கியமான கட்டத்தை அடைவதற்காகத்தான். ஏனெனில் வீடு பேறு நோக்கிய பயணத்தில் அது ஒரு மைல்கல்.//

    பேறாகிய வீட்டை அடைவதற்கான பயணத்திற்கான வழிநடத்துதல் அழகாக இருந்தது, கபீரன்ப! இந்த மைல்கல் நிதானமாகவும், நின்று நின்றும், அனுபவித்தும் கடக்கத் தோன்றுகிறது..
    வழிகாட்டுவதற்கு மிக்க நன்றி, அன்ப!

    ReplyDelete
  16. நன்றி ஜீவி ஐயா,

    //இந்த மைல்கல் நிதானமாகவும், நின்று நின்றும், அனுபவித்தும் கடக்கத் தோன்றுகிறது..//

    ஹைவே சாலையை வடிவமைத்தது யாரோ; மிகவும் சொகுசான பேருந்து தயாரித்ததும் வேறு எவரோ.

    பயணத்தில் தூங்காமல் கண்ணாடி வழியே இயற்கையின் அற்புதத்தை கண்டு ரசிக்கும் ஒரு சிலர் கடைசியில் பயணம் இனிமையானதற்கு ஓட்டுனரைப் பாராட்டும் போது அவர் நாணத்துடன் ஏற்றுக் கொள்கிறார்.

    நின்று நிதானமாகப் படித்து பல பின்னூட்டுங்கள் இட்டு தாங்கள் பாராட்டும் போது என் நிலைமையும் அந்த ஓட்டுனர் போலத்தான்.

    வேறு என்ன சொல்லமுடியும் ? மிக்க நன்றி.

    ReplyDelete
  17. //பல நேரங்களில் ஏதும் பேசாமலே மௌனம் காப்பது உத்தமம்.//


    mmmmmmmmmmm

    ReplyDelete
  18. @கீதா மேடம்

    //mmmmmmmmmm//

    :) நன்றி.

    ReplyDelete
  19. //இவ்வாறு நமது அன்றாட பேச்சில் நாம் சொற்களை கையாளும் விதம் பல விதமான பாவனைகளை கேட்பவர் மனதில் உண்டாக்கும்.

    ஆகவே பேச்சு என்பது வெறும் எண்ணங்கள், நிகழ்வுகள் மட்டுமல்லாமல் உணர்வுகளும் கலந்து வெளிப்படுவது//

    பல சமயங்களிலும் மெளனம் சிறந்த மொழி என்பதாலேயே இரு முறை படிச்சும் பேசாமல் போனேன், ஆனால் நேத்திக்கு "எங்கே பிராமணன்?" தொடரில் ஸ்வரப் பிசகால் ஏற்படும் அர்த்த மாற்றங்கள் பற்றிய விளக்கங்கள் கேட்டதும் உங்களோட இந்தப் பதிவும், இந்தக் குறிப்பிட்ட வரிகளுமே நினைவில் வந்தன. ராத்திரி உடனே பின்னூட்டம் கொடுக்க முடியலை. எவ்வளவு உணர்ந்து ஆழமாய்ச் சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள்??? மனமார்ந்த நல்வாழ்த்துகள். உங்கள் பணி மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. அருமை! சிறுபஞ்சமூலத்தைப்பற்றி ஏதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்த பொழுது, உங்களுடைய இந்த blog கைக்கண்டு பிடித்தேன். எவ்வளவு அழகாக எழுதியுள்ளீர்கள்! எனக்கும் திருவள்ளுவரையும் கபீரையும் பிடிக்கும். கபீருடைய
    पाहन पूजे हरि मिलै, तो मैं पूजूं पहार। ताते यह चाकी भली, पीस खाय संसार। என்பதைப்படித்த போது திருவள்ளுவருடைய
    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின் என்னும் குறள் தான் நினைவுக்கு வந்தது.
    உங்கள் அனுபவத்தையும் இணைத்து, சுவையாக எழுதியுள்ளீர்கள். வாழ்க!

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி