ஒரு பேராசியருடன் சில வருடங்களுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்தில் கண்ட உண்மை ஒன்றைக் காண்போம்
" போறும் சார், எங்கப் போனாலும் பேசினதையே பேசிகிட்டு,சொல்றதுக்கோ கேக்கறதுக்கோ புதுசா ஒண்ணும் இல்லே. நெஜமா ரிசர்ச் பண்றவங்க யாரும் இப்படி கான்ஃபரன்ஸ்,செமினார்-ன்னு அலையறது இல்லே. பத்து வருஷம் இருபது வருஷம் தபஸ் மாதிரி செய்யணும். வேணான்னாலும் விடறது கிடையாது. யாரோ பணம் குடுக்கறான் என்கிறதுக்காக சும்மாவாச்சும் ஒரு கும்பலைக் கூட்டி அரைச்ச மாவை அரைக்கிறதே ரொம்ப பேருக்கு தொழிலாப் போச்சு. கடைசியிலப் பார்த்தா வெறும் வேஸ்ட் ஆஃப் டைம், டிராவல் அண்ட் எனெர்ஜி.... "
இப்படி சொன்னவர் சாதாரண கல்லூரிப் பேராசியர் அல்ல. உலகப் புகழ் பெற்ற ஒரு ஆராய்ச்சியாளர். அவருடைய துறையிலே அவர் ஒரு ஜாம்பவான். அவருடைய பெயரை அழைப்பிதழில் போட்டாலே கருத்தரங்கம் வெற்றி பெற்றுவிடும், கருத்தரங்கம் நடத்துவதற்கான நிதியை சுலபமாக திரட்ட முடியும் என்ற நம்பிக்கையில் பலரும் அவருடைய பெயரை பயன்படுத்திக் கொள்ள விழைந்த காலம் அது. அவருடையத் துறையில் அவர் ஒரு மிக முக்கியப் புள்ளி. வருடத்தில் ஆறுமாதங்கள் வெளி நாட்டுப் பயணங்களிலேயே கழிந்தது.
பெயரும் புகழும் பெருமளவில் இருந்தும் ஒரு நிலையில் விரக்தி மனதில் புகுந்து கொண்டு விடுகிறது. முன்னேற்றமின்மை என்பது தடையாகத் தெரிகிறது. நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம், இவற்றின் அர்த்தமென்ன என்றெல்லாம் மனம் கேள்வி எழுப்புகிறது.
அரிய ஆய்வுகளில் ஈடுபட்டு தொண்டாற்றும் விஞ்ஞானிகளுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமையைப் பற்றி என்ன சொல்வது ?
இந்த நிலையை இராமலிங்க சுவாமிகள் "உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்று அந்தோ வீணே சுழன்று மெலிகின்றேன்" என்று மனம் வருத்தப்பட்டு உரைக்கிறார்.
அவரைப் போலவே கபீர்தாஸரும் அர்த்தமின்றி காலம் கழிவதை சுமை எருதுடன் ஒப்பிட்டு சொல்கிறார்.
बनजारे के बैल ज्युं , भरमि फिर्यो चहुंदेस ।
खांड लादि भुस खात हैं, बिन सतगुरु उपदेश ॥
சரக்கு வண்டி மாடு போல், நாற்திசையும் சுற்றித் திரிவரே
சரக்கோ கரும்பு தின்பதோ புல், சத்குரு மொழி நாடாதவரே
மாற்று :
கரும்பை சுமந்துத் திரியினும்,வைக்கோல் தின்னுது எருது
குருமொழி கேளா உலகோர், கழிப்பரே வீணில் பொழுது
பிறவியின் முழு சாரமே குருவைப் பிடித்துக் கொண்டு இறைநாமத்தின் ருசியை அறிவதுதான். ஆனால் பெரும்பாலோர், வைக்கோற்புல் தின்றே வாழ்க்கையைக் கழிக்கும் எருது போல், சாரமற்ற உலகியல் ஆசைகளில் காலத்தை கழிக்கின்றோமே என்கிற பரிதாபத்தினால் கபீர் உரைக்கிறார்.
கபீர்தாஸருடைய கருத்தை விளக்குவது போல் வள்ளலார் பெருமான் பாடுகிறார்.
கானல் இடை நீரும், ஒரு கட்டையில் கள்வனும்
காணுறு கயிற்றில் அரவும்
கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
கதித்த பித்தளையின் இடையும்
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை
மாயையில் கண்டு வீணே
மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
வாழ்வென்றும் மானம்என்றும்
ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
உள் என்றும் வெளி என்றும்வான்
உலகென்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை
உண்மை அறிவித்த குருவே
தானமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
சாரமற்ற வைக்கோற் புல்லை வள்ளலாரும் எப்படியெல்லாம் விளக்கி விட்டார்!
மனை, மகவு, உறவுகள், மானம், நிதி, உடல் போன்ற எனது எண்ணங்களெல்லாம் கற்பனையில் தோன்றியவையே. அவை, கானலில் நீர் போலவும், இரவு நேரத்தில் வேலிக் கட்டையை கள்வனாகப் பாவிப்பதும், வழியில் குறுக்கே கிடக்கும் கயிற்றை பாம்பாக நினைத்து அஞ்சுவது போலும் அர்த்தமற்றவைகளாகும். வெறும் கிளிஞ்சலை வெள்ளி என்றும் பித்தளையை தங்கம் என்றும் நினைக்கின்ற அறியாமையைச் சேர்ந்தது ஆகும்.
இறைவன் அருள் என்னும் தங்கத்தின் முன்னே உலக வசியங்களெல்லாம் பித்தளையைப் போன்றதே ஆகும்.
மேலும் அவர் குருவருளை தேடாத கால விரயத்தை கபீரைப் போலவே சொல்லி வருத்தப் படுகிறார்.
காணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல் தலைமேல்
பூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்று அந்தோ
வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே! இன்னல் மிகச்சுமக்கும்
தூணே என இங்கு எனை விதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே
தூண் கட்டடத்தின் பாரம் சுமப்பதற்காகவே கட்டப்படுவது. உணர்ச்சியற்றது. கபீர் சொல்லும் எருதுக்காவது சற்று உணர்வுகள்- கஷ்ட சுகங்கள் இருக்குமோ என்னவோ. கல் தூணுக்கு அப்படி எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட உணர்ச்சியற்ற கல்தூணைப் போல வெறும் துன்பங்களை சுமப்பதற்காகவே பிறவி எடுத்து விட்டேனோ? உனது அடியார்கள் சிறப்பைப் போற்றத் தெரியாமல் பொய்களைப் பேசி உலகில் வீணாகக் காலத்தைப் போக்குகின்றேனே என்று வருந்தி சொல்லும் போது ஞானிகளுக்கிடையே உள்ள கருத்து ஒற்றுமை பளிச்சிடுகிறது.
கபீர் சரக்கு இழுக்கும் மாடுக்கு மனிதரின் போக்கை உதாரணம் சொன்னால் இராமலிங்க அடிகள் பட்டி மாடுக்கு ஒப்பிடுகிறார்.
கொட்டிலை அடையாப் பட்டிமாடு அனையேன்
கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த
கடையனேன் கங்குலும் பகலும்
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை
அறவுண்டு குப்பை மேற் போட்ட
நெட்டிலை அனையேன் என்னினும் வேறு
நினைத்திடேல் காத்தருள் எனையே
(அட்டில்= சமையற்கட்டு; கங்குல்= இரவு; பூஞை = பூனை நெட்டிலை= நீண்ட வாழை இலை)
பட்டி என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் திரிய அனுமதிக்கப்பட்ட இடம். கொட்டிலை போல அங்கே மழை வெயில் பாதுகாப்பு கிடையாது. மாலையானதும் கொட்டிலைச் சேராமல் திரியும் மாட்டை பட்டிக்குள் விரட்டி சேர்ப்பர். ஆகையால் அடங்காமல் திரியும் மாட்டை பட்டி மாடு என்று சொல்லும் வழக்கு வந்தது. கொட்டைகள் பரப்பி... கடையனேன் என்பது அழகாக அலங்கரிக்கப் பட்ட மஞ்சத்தில் சுகம் காண விரும்பும் கடை குணம் உள்ளவன் என்று பொருள்படும். அடுக்களையைச் சுற்றிவரும் பூனையின் குணம் ஒத்தவனாகும் என்னை, குப்பை மேல் வீசி எறியப்படும் எச்சில் இலை போன்றவனாயினும் வேறாக நினைக்காமல் என்னைக் காத்தருள்வாய் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறார்.
கபீரும் வள்ளலாரும் போன்ற மகான்கள் நம் கால விரயத்தை பலவாறாக சுட்டிக்காட்டி நம்மை இறைவன் பக்கம் திருப்ப விழைகிறார்கள். ஆனால் நம்முடைய புத்தியோ பட்டிமாடு போலவே அலைகிறது.
வழக்கம் போல் அருமையான பதிவுக்கு நன்றி, பாதி எழுதும்போதே திடீர்னு கமெண்ட் பப்ளிஷ் ஆயிடுச்சு! :D
ReplyDeleteஆனால் நம்முடைய புத்தியோ பட்டிமாடு போலவே அலைகிறது.//
ReplyDeleteஎவ்வளவு உண்மையான வார்த்தைகள்?? ஆனாலும் திருந்த மாட்டேன்னு இப்படியே இருக்கோமே????
பிறவியின் முழு சாரமே குருவைப் பிடித்துக் கொண்டு இறைநாமத்தின் ருசியை அறிவதுதான்
ReplyDelete- what a golden words
- to get guru, man to do good karma in lot of births.
- now you are doing also in under good karma.
வாங்க கீதா மேடம்,
ReplyDelete//...பாதி எழுதும்போதே திடீர்னு கமெண்ட் பப்ளிஷ் ஆயிடுச்சு //
உங்க கணிணி தயவால ஒரு எக்ஸ்ட்ரா கமெண்ட் கணக்கில கூடிடுச்சு. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
நன்றி பாலுசார்,
ReplyDeleteகட்டுரை உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. கபீர் கட்டுரை எழுதும் நேரமாவது பயனுள்ளதாக இருக்கிறதே என்ற சந்தோஷம் தருகிறது. மிக்க நன்றி
என்னதான் கொட்டிலை அடையாப் பட்டி மாடுபோலத் திரிந்தாலும் அதையும் விட்டுவிடாமல் தேடி வந்து சேர்த்துக் கொள்கிற இடைப்பையன் "மா சுச:" கவலை வேண்டாம் என்று அபயம் தந்திருக்கிறானே!
ReplyDeleteஅவன் மனது வைத்தால் அல்லவா, விரையமும் விரையமில்லாமல் போவதும் நடக்கும்!
நல்வரவு கிருஷ்ணமூர்த்தி சார்,
ReplyDelete//அவன் மனது வைத்தால் அல்லவா, விரையமும் விரையமில்லாமல் போவதும் நடக்கும்!///
மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
வள்ளலாரின் மனநிலை வந்து விட்டால் இடைப்பையனும் கண்டிப்பாக வந்து விடுவான் :)
நெட்டிலை அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்தருள் எனையே
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
//பட்டி என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் திரிய அனுமதிக்கப்பட்ட இடம்//
ReplyDeleteஅப்போ கோவில்பட்டி, அத்திப்பட்டி, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்றவை எல்லாம், கபீரன்பன் ஐயா? :)
//மனை, மகவு, உறவுகள், மானம், நிதி, உடல் போன்ற எனது எண்ணங்களெல்லாம் கற்பனையில் தோன்றியவையே. அவை, கானலில் நீர் போலவும்//
என்ன தான் இந்த உலக வாழ்வுக்கு மட்டும்-ன்னு சொன்னாலும், பெற்றோர், மனை, மகவு எல்லாம் வெறுமனே கற்பனை என்பது எப்படி ஐயா? கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்!
இறைவன் அருள் = தங்கம் தான்! ஆனா அதுக்காக சமைப்பது போன்ற செயல்களுக்குப் பித்தளையைப் பயன்படுத்தாமலும் இருக்க முடியாதே! வள்ளலார், கபீர் இது பற்றி பேசி இருக்கிறார்களா? இன்னும் கொஞ்சம் மேல் விளக்கம் எடுத்துச் சொன்னாத் தெரிஞ்சிப்போம்!
வாங்க ரவிஷங்கர்,
ReplyDelete//அப்போ கோவில்பட்டி, அத்திப்பட்டி, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்றவை எல்லாம், கபீரன்பன் ஐயா? :)//
பட்டி என்பதற்கு பல பொருட்கள் உண்டு என்பதை உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமிருக்காது. சிற்றூர் என்பதும் அவற்றுள் ஒன்று. சீலை, ஆட்டுக்கிடை, திருட்டு மாடு என்பது போன்ற பொருட்களும் உண்டு.
கட்டாக்காலி kaṭṭā-k-kāli
, n. < கட்டு- + ஆ neg. +. Ox or cow suffered to roam at large, or that is not put into the stall by night; பட்டி மாடு
பட்டிபெயர்-த்தல் paṭṭi-peyar-
, v. intr. < பட்டி¹ +. To remove cattle; கால்நடையைப் புறம்பே செலுத்துதல். (W.)
இதிலிருந்து அடைக்கப்பட்ட கால்நடை என்பதும் புரிகிறது
உங்களுடைய அடுத்தக் கேள்விக்கு அப்புறம் பதில் சொல்றேன்.
@ ரவிஷங்கர்
ReplyDelete//என்ன தான் இந்த உலக வாழ்வுக்கு மட்டும்-ன்னு சொன்னாலும், பெற்றோர், மனை, மகவு எல்லாம் வெறுமனே கற்பனை என்பது எப்படி ஐயா? கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்! //
மேலே வள்ளலாரு சொல்லியதைப் பார்த்தோம். அவருக்கு முன்பே தாயுமானவர்,பட்டினத்தார், திருமூலர் இன்னும் விஷயம் தெரிஞ்சவங்க எத்தனையோ பேர் சொல்லிட்டாங்க. இன்னும் தாண்டவராய ஸ்வாமிகளுன்னு ஒருத்தர் சொன்னதா தி.வா. சார் ஆறுமாசம் பெரிய விளக்கப் பதிவுகளே போட்டிருக்காரு.
அவங்க முன்னாடி அனுபவம் இல்லாத நான் என்னத்தை விளக்க முடியும் சொல்லுங்க ! :)
@ ரவிஷங்கர்
ReplyDelete//இறைவன் அருள் = தங்கம் தான்! ஆனா அதுக்காக சமைப்பது போன்ற செயல்களுக்குப் பித்தளையைப் பயன்படுத்தாமலும் இருக்க முடியாதே! வள்ளலார், கபீர் இது பற்றி பேசி இருக்கிறார்களா? இன்னும் கொஞ்சம் மேல் விளக்கம் எடுத்துச் சொன்னாத் தெரிஞ்சிப்போம்!//
"கரும்பினுடைய அருமையை ருசிக்காமல் வைக்கோல் தின்னும் மாடு" என்னும் போது வைக்கோலுக்கு உள்ள பயனை மறுக்கவில்லை. ஒரு கிலோ வைக்கோல் தின்னும் நேரத்தில் ஒரு கிலோ கரும்பைத் தின்றால் எனர்ஜி வேல்யூ கண்டிப்பாக அதிகம் தானே!
பித்தளையில் யாரும் முதலீடுகள் செய்வதில்லை. எவ்வளவு அவசியமோ அவ்வளவுதான் வைத்துக் கொள்வர். உபரி சேமிப்பை தங்கமாகத் தானே மாற்றி வைத்துக் கொள்ளப் பார்க்கிறோம்.
உலகக் கடமைகளை எவ்வளவு குறைந்த நேரத்தில் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவில் முடித்துக் கொண்டு உபரி நேரத்தை இறை செபத்திலும் சத்சங்கத்திலும் ஈடுபடுத்தச் சொல்கின்றனர் ஞானிகள். அது தங்கத்தில் முதலீடு செய்வது போன்றது.
நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம் என்பதைப் பொறுத்து நமக்கு கொடுக்கப்பட்டநேரம் நல்ல முறையில் பயன்படுத்தப் பட்டதா இல்லையா என்பது தீர்மானமாகிறது.
//கபீரும் வள்ளலாரும் போன்ற மகான்கள் நம் கால விரயத்தை பலவாறாக சுட்டிக்காட்டி..//
ReplyDeleteஅவர்கள் விரையம் என்று நினைத்ததெல்லாம், விரையமாகாமல் நமக்குப் பயன் தரும் பாடங்களாகிப் போன அதிசயம் தான் என்னே!
நல்வரவு ஜீவி சார்,
ReplyDeleteமகான்கள் வாழ்க்கையை வாழ்ந்து காட்டும் விதமே மக்களுக்கு பெரும் படிப்பினைதான். அதனால்தானோ என்னவோ அவர்களது சொற்கள் என்றும் வழிகாட்டுபவையாக இருக்கின்றன.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வணக்கம்.
ReplyDeleteஉங்கள் பதிவைப் படிப்பது எனக்கு ஒரு அற்புதமான அனுபவம். மிக அருமை.
நல்வரவு உமா அவர்களே,
ReplyDeleteதமிழ் ஆர்வமும் நல்ல கவிஞருமான தங்கள் வரவுக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.
தங்கள் கட்டுரையின் கருத்து மிக நன்று. மரபு பா வில் [எழுசீர் ஆசிரிய மண்டிலம்] என் முயற்சி.
ReplyDeleteசுமப்பது கரும்பு சுவைப்பதோ வைக்கோல்
சுற்றியேத் திரிந்திடு மாடாய்
அவனியில் யானும் மனிதனாய்ப் பிறந்த
அருமையை அறிந்திடா தென்றும்
கவலையில் மூழ்கி களிப்பிலே திளைத்து
கழித்தனை நாளுமுன் நாமம்
தவமென நினைத்து தொழுதிட நன்றே
தரணியில் மானிடப் பிறப்பே.
நன்றி உமா மேடம்,
ReplyDeleteதங்களுடைய உற்சாகம் மிக்க மகிழ்ச்சி தருகிறது.
தங்களின் அழகான படைப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி