Friday, November 15, 2019

பரோபகாரம் பரமன் வடிவம்     ’தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே’ என்று தமிழ் மூதாட்டி உலகில் எல்லாவற்றைக் காட்டிலும்  மிகப் பெரியது தொண்டர்களின் பெருமை என்று பாடி வைத்தார்.  இறைவன் தன்னை இகழ்ந்தாலும் பொறுத்துக் கொள்வான் ஆனால் தம் தொண்டரை இகழவோ துன்புறுத்தவோ செய்தால் பொறுக்கமாட்டான் என்று அம்பரீசன் பிரகலாதன் போன்றவர்கள் கதைகள் சொல்லி புரிய வைக்கின்றனர் பௌராணிகர்கள்.

தொண்டு நெறி என்பது இறைவனை அடைய ஒரு சுலபமான பாதையாக ஞானிகள் அமைத்து வைத்திருக்கிறார்கள். அனைத்திலும் இலங்குபவன் இறைவன். ஆகையால் ஜீவகாருண்யமும் தந்நலமற்ற சேவையும் கடவுளுக்கு செய்யப்படும் ஆராதனையாகவே கருதப்படுகிறது. தொண்டு நெறியில் நின்று அடியார்களுக்கு சேவை செய்தவர்கள் ஏராளம். அடியார்களுக்கு இலவச திருவோடு வழங்கிய திருநீலகண்டர், யார் எதைக் கேட்பினும் இல்லையென்னாத இயற்பகை நாயனார், சிவனடியார்களின் ஆடைகளை சலவைசெய்து கொடுப்பதையே சேவையாக செய்த திருக்குறிப்புத் தொண்டரடிகள், பார்வையற்றவராக இருந்தும் திருக்குளத்தை சீரமைத்த தண்டியடிகள், கோயிலில் திருவிளக்கு ஏற்றுவதையே தொண்டாக செய்த நமிநந்தியடிகள் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும்.


  அவர்களில் தலையாயவர் உழவாரப் பணி செய்த திருநாவுக்கரசர். துறவியாக இருந்து உலக விருப்பு வெறுப்புகளிலிருந்து நீங்கியிருப்பினும் பிற உயிர்களின் நலம் பேணுதலே தலையாய கடமை என்று வாழ்ந்தது இவருடைய துறவறம் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தது என்பதைக் காட்டுகிறது. அவருடைய துறவு மனப்பான்மையின் மேன்மையை உலகோர் அறியச் செய்ய சிவபெருமான் ஒரு சின்ன லீலை புரிகிறார்.
திருப்புகலூரில் அவர் உழவாரப் பணி செய்த இடமெல்லாம் பொன்னும் வெகுதூரம் ஒளிவீசும் நவமணிகளும் கிடைக்குமாறு செய்தார் இறைவன். அதை சேக்கிழார் சொல்லும் போது

செம்பொன்னு நவமணியுஞ் சேண்விளங்க வாங்கெவையு
மும்பர்பிரான் றிருமுன்றி லுருள்பருக்கை யுடனொக்க
வெம்பெருமான் வாகீச ருழவாரத் தினிலேந்தி
வம்பலர்மென் பூங்கமல வாவியினிற் புகவெறிந்தார்
.

பிரித்து எழுதி படித்தால்
செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கு எவையும்
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க
எம்பெருமான் வாகீசர் உழவாரத்தினில் ஏந்தி
வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார்.  

(திருமுன்று =கோயில் வளாகம்;; பருக்கை உடன் ஒக்க =கற்கள் போன்ற )

வாகீசர் என்றாலும் நாவுக்கரசர் என்றாலும் பொருள் ஒன்றே. அவர் உழவாரப்பணியின் போது கிடைத்த விலையுயர்ந்த பொன் ஆபரணங்களை கற்களோடு சேர்த்து கமல மலர் பூக்கும் குளத்தினுள் எறிந்தார். அதாவது அவருக்கு இரண்டும் ஒன்றாகவே காணப்பட்டது. வெறும் கற்கள் அடியவர் நடந்து செல்கின்ற பாதையில் இடையூறு செய்யும். விலைமிக்க ஆபரணங்கள் அடியவர் வாழ்க்கைப் பாதையில் இடையூறு உண்டு பண்ணி அவர்கள் ஈசனோடு சேரும் பயணத்தை தடை செய்யும் என்ற காரணத்தால் அவர்களையும் காக்கும் பொருட்டு அவற்றை நீரில் எறிந்தார் என்று பொருள் சொல்வர்.

   இப்படிப்பட்ட இறையடிவரின் அருள் வேண்டி எப்போதும் அவரைச் சுற்றி ஒரு அடியவர் கூட்டம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேன் உள்ள மலரைத்தானே தேனீக்கள் நாடும். அதை கபீரின் கண்ணோட்டத்தில் சொல்வதானால்
परमारथ हरि रुप है, करो सदा मन लाये |

पर उपकारी जीव जो, सबसे मिलते धाये ||

பரோபகாரம் பரமன் வடிவம், பண்ணிடு சதா மனம் உவந்தே
பரோபகாரி தம் வாழ்விலே, அரவணைத் திருப்பார் அனைவரையுமே
(கபீர் சொல்லும் அரவணைப்பை கட்டுரையின் பிற்பகுதியில் துறவியின் வாழ்வில் காண்போம்)
    தன் அடியார் புடைசூழ  திருஞானசம்பந்தரோடு திருவீழிமிழலை என்ற திருத்தலத்தை அடைகிறார் அப்பர் பெருமான். இருவரும் கோவிலுக்கு கிழக்கிலும் மேற்கிலுமாக மடம் அமைத்து பலகாலம் இறைசேவையில் காலம் கழிக்க தீர்மானிக்கின்றனர். அவ்வேளையில் அங்கே பஞ்சம் சூழுகிறது. மடத்திற்கு தானியங்கள் கொடை குன்றிப்போய் வெளியே வணிகர்களிடையே காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை வந்தது. பண்டமாற்று முறையும் கொடையுமே புழக்கத்திலிருந்த சமூகத்தில் காசுக்கேது வழி? மடத்தை நாடி வரும் சிவனடியார்களுக்கும் ஊர் பொது மக்களின் பசி தீர்க்கவும் சிவனிடமே முறையிடுகின்றனர். 
சிவபெருமானும் அவர்களுடைய கனவில் தோன்றி அடுத்த தினம் முதல் நிலைமை சீராகும் வரை இருவருக்குமே தனித்தனியாக கோவில் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பலிபீடத்தில் படிக்காசு கிடைக்குமென்றும் அதை வைத்து அவரவர் மடத்தில் அன்னதானத்தை தொடரலாம் என்றருளினார்.
இதன் மூலமும் ஈசுவரன் ஒரு பெரிய உண்மையை சிறிய லீலை செய்து மக்களுக்குப் புரியவத்தார்,
அதில் நாவுக்கரசருக்கு கிடைத்த காசு எவ்வித குறையுமின்றி ( வாசி இன்றி) வணிகர்களால் ஏற்கப்பட்டது. சம்பந்த பெருமானுக்கு வைக்கப்பட்ட காசு கறையுடன் (வாசி யுடன்) கூடியதால் அதன் தரத்தை நிர்ணயிக்க வணிகர் காலம் தாழ்த்தி குறைந்த மதிப்புடன்  ஏற்றுக்கொண்டனர். இதை சேக்கிழார் பெரிய புராணத்தில் கீழ்கண்டவாறு உரைக்கிறார்
அல்லார் கண்டத்து அண்டர் பிரான்
  அருளால் பெற்ற படிக்காசு
பல்லாறு இயன்ற வளம் பெருகப்
  பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு
  பொழுதும் பறை நிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறு இட்டார்
  துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்.  (பெரியபுராணம் 1525)


ஈசர் மிழலை இறையவர் பால்
  இமையப் பாவை திருமுலைப் பால்
தேசம் உய்ய உண்டவர் தாம்
  திருமா மகனார் ஆதலினால்
காசு வாசியுடன் பெற்றார் கைத்
  தொண்டு ஆகும் படிமையினால்
வாசி இல்லாக் காசு படி
  பெற்று வந்தார் வாகீசர்.   ( பெரியபுராணம் 1526)
 இதனால் ஞானசம்பந்தர் மடத்தில் அன்னதான சேவை காலந்தாழ்ந்தது.  கறைபடிந்த காசு எதனால் என்று யோசிக்கத் தொடங்கினார்.
திருஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்
..
 சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த
ஒருகாசு வாசிபட மற்றக் காசு
..
 நன்றாகி வாசிபடா தொழிவான் அந்தப்

பெருவாய்மைத் திருநாவுக் கரசர்
தொண்டால்
.. பெறுங்காசாம் ஆதலினாற் பெரியோன் தன்னை
வருநாள்கள் தருங்காசு வாசி தீரப்
..
 பாடுவன்என் றெண்ணிஅது மனத்துட் கொண்டார்  (பெ.பு :2467)
பிறருக்கு தொண்டு செய்வதில் பெரும் மகிழ்வுற்ற ஈசன் அதனை உயர்த்திக் காட்டுவதற்கு இப்படி ஒரு நாடகமாடினான். அதன் பின் ஞானசம்பந்த பெருமான் “
வாசி தீரவே
காசு நல்குவீர்
மாசின் மிழலையீர்
ஏச லில்லையே 
 என்று பதிகம் பாடி தன்னுடைய மடத்திற்கு அருளப்பட்ட படிக்காசையும் குற்றமற்றதாக பெற்று மக்களின் பசிப்பிணி தீர்த்தார்.
”பரோபகாரம் இதம் சரீரம்” என்று வடமொழி சுபாஷிதம் சொல்கிறது. அதையே வள்ளுவரும்
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் (214)
எனக் கூறுகிறார். தம்மைப் போன்ற சக உயிர்களின் பசி பிணி போன்ற தேவைகளை அறிந்து அதற்கேற்ப உதவ முன் வருபவரே நிஜத்தில் வாழ்பவர்கள். ஏனைய மக்கள் இருப்பினும் இல்லாதிருப்பினும் ஒன்றே. அவர்கள் செத்தவர்களை போலாவார்கள் என்கிறார்.
இது ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி. இன்று போலி மடாதிபதிகளும் ஆசிரமங்களும் பெருகிவரும் நேரத்தில் நம்பிக்கை தருவதற்கென்றே ஈசன் சிலர் உண்மையான துறவிகளையும் நம்மிடையே நடமாட விடுகிறான்.
     இந்த ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி அப்படிப்பட்ட மிகப்பெரும் சமூக சேவகர் ஒருவரை நாம் இழந்தோம். அவர் 88 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களில் விளக்கேற்றியவர். இலட்சக் கணக்கான ஏழை மாணவர்களுக்கு உணவு உடை எழுத்தறிவு வழங்கியவர்.  அந்த சேவை  சமய சாதி வாதங்களுக்கு அப்பாற்பட்டது.  ஏழை மக்களின் முன்னேற்றமே இறைவனுக்கு செய்யப்படும் உண்மையான தொண்டு என செயலாற்றியவர் அம்மகான்.

   நடமாடும் கடவுள் என்று போற்றப்பட்ட  இவரைப் பற்றி அவர் சமாதியடைந்த உடனேயே எழுத வேண்டும்  என்று விரும்பினாலும் ஏனோ  அதை செயல்படுத்த முடியாமல் போய் விட்டது.

     கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீ பஸவேஸ்வர் வழிநடந்து சிவ ஆராதனை செய்பவர்கள் லிங்காயதர்கள் எனப்படுவர். அவர்களுக்கும் பல ஊர்களில் நம்மூர்களில் இருப்பது போலவே ஆதீனம் மடம் என்பதெல்லாம் உண்டு. அப்பேற்பட்ட ஒரு மடம் தான் ஸ்ரீ சித்தகங்கா மடம். இது பெங்களூரிலிருந்து 70 கிமீ தூரத்திலுள்ள துமுகூர் என்ற நகரத்தில் உள்ளது.

     அதன் மடாதிபதியாக 1941-ல் பொறுப்பேற்ற ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ  சிவகுமார சுவாமிகள்,  மடம் என்பது வெறும் சமயத்தை போதிப்பதல்ல; வாழ்க்கை நெறிகளை பின்பற்றுவதில்  முன்னுதாரணமாய்  இருக்க வேண்டிய ஒன்று என்பதில் உறுதியாக இருந்து செயல்பட்டவர். தமது குரு காட்டிய வழியில் அன்னதானத்தை (தாஸோஹம்) மடத்தில் விடாது நடத்தியவர்.  சித்தகங்கா மடம் 1960 -ல் அந்த சுற்றுவட்டாரத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது ஆயிரக்கணக்கான மக்களுக்கு தினமும் உணவளித்தது. அம்மடத்தின் சமயலறை அடுப்புகள் ஓய்வில்லாது எரிந்து கொண்டே இருக்குமாம்.
    
 தாஸோஹம் என்பது ”நான் தாஸன், அடியவன்” என்ற பணிவான உள்ளத்தோடு விருந்தினரை உபசரிக்க வேண்டிய பண்பு.   எவ்விதத்திலும் தன்னை உயர்ந்தவனாகக் கருதி விடக்கூடாது.  அப்பொழுது தான் உதவி ஏற்பவரின் உள்ளம் அமைதியோடு இருக்கும். இதைக் கபீர்தாஸரும்  மிக முக்கிய குணமாகக் கருதுகிறார்

तिन समान कोई और नहि, जो देते सुख दान |
सबसे करते प्रेम सदा, औरन देते मान ||
பிறன்மனங் குளிரச்  செய்வார்  சேவை, செய்வோர்க்கு நிகரில்லை
பெறுவோர்  தகைமைப் பேணி, செய்யும் அன்புக்கு ஏதெல்லை
(தகைமை= மாட்சிமை, பெருமை)
மாற்று
எவரும் ஒப்பில்லை அவனுக்கு, மனங்குளிர சேவை தருவோனுக்கு
எவரையும் அன்பால் அணைத்து, போற்றுவர் தகைமை பெறுவோனுக்கு
    உதவி செய்யும் போது பெறுபவரின் முகங்கோணாத வகையில் அவருக்குரிய சில பெருமைகளை எடுத்துச் சொல்லி, அப்பேற்பட்டவருக்கு உதவக் கூடிய பேறு தனக்கு கிடைத்திருப்பதால் மகிழ்ச்சி அடைவதாக இருக்க வேண்டும். இது சேவையின் முக்கிய அங்கம்.
தாஸோஹத்தின் அடிப்படையும் அதுவே. அதில் உணவுடன் கல்வி மற்றும் மருத்துவம் இரண்டையும் சேர்த்துக் கொண்டார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி.

    கல்வி  ஒன்றே மக்களின் முன்னேற்றத்திற்கு வழி என்பதை சுவாமிஜி பூரணமாக உணர்ந்ததால்  வேதபாடசாலைகள், பள்ளிக்கூடங்கள், பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், கலைக் கல்லூரி, மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கூடம் என  125 கல்வி சாலைகள் இன்று திறம்பட தும்கூரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் துவக்கப்பட்டு இயங்கி வருகின்றன. ஏழை மாணவர்களுக்கு பாகுபாடின்றி அனைத்தும் இலவசம். மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 45000க்கும் அதிகம்.
    இப்போது மடத்தில் தங்கி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 9000.  பலர் சுவாமிஜியின் இடைவிடாத தந்நலமற்ற உழைப்பைக் கண்டு தம்மையும் அந்த மடத்தின் சேவையில் இணைத்துக் கொண்டு சேவையாற்றுகின்றனர். 1954 ஆம் ஆண்டு  ஏற்கனவே பயன்பெற்ற (Alumni) மாணவர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக பல திட்டங்களையும் நடத்திச் செல்ல சேவகர்களை அனுப்பி வைக்கிறது. அதில் உள்ள உறுப்பினர்களே 50000 க்கும் மேலே.
 நூற்றிப் பதினொரு வயது இப்பூவலகில் நடமாடி சேவை புரிந்த சிவகுமார சுவாமிகள் 90 வயது வரையிலும் பள்ளிச் சிறுவர்களுக்கு கணிதம் ஆங்கிலம், மற்றும் சமஸ்கிருதம் வகுப்பு எடுத்து வந்தார். விவசாயிகளுக்கு உதவும் வகையில் வருடாவருடம் விவசாயிகள் திருவிழா, கண்காட்சி கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தார்.
   அப்பர் சுவாமிகள் போலவே தம்முடைய சமாதியின் இடத்தை தாமே முடிவு செய்து அதன் கட்டமைப்பையும் முடித்து தம் இறுதிநாளை எதிர்பார்த்திருந்தார். உயிர்பிரிய சில மணி நேரம் முன்பு தன் உதவியாளர்களிடம் மதிய உணவிற்கு முன்பு என் உயிர் போய்விட்டால் யாவரும் உணவு அருந்திய பின்னரே அதை அறிவிக்க வேண்டும்’” என்று கூறியது குழந்தைகள் பசித்திருக்கக்கூடாது என்பதில் எவ்வளவு கரிசனம் கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. அவர்களும் அவர் கூறியபடியே அவர் சிவலோகம் அடைந்ததை மதிய உணவுக்குப் பின்னரே அறிவித்தனர்.  
மேதகு அப்துல் கலாம் 2007 -ல் சுவாமிஜியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றபோது தமது கவிதையை வாசித்து பின்னர் அதை பாராளுமன்றத்திலும் மேற்கோள் காட்டி சுவாமிகளின் அர்ப்பணிப்பை போற்றினார்.

காலங்காலமாக விளங்கி வரும் இந்நாட்டின் பாரம்பரியம்  அழிந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஈசன் தன் சிவ கணங்களுள் ஒருவரை அவ்வப்போது அனுப்பி  மக்களை சீர்திருத்துகிறான் போலிருக்கிறது

7 comments:

 1. வணக்கம் கபீரன்ப,

  இந்தப் பதிவின் தலைப்பு சொல்லும் பொருளை நிலைநிறுத்தும் பொருட்டு தான் 'மனம் உயிர் உடல்' என்னும் நீண்ட தொடரை எழுத முற்பட்டிருக்கிறேன். இது வரை கிட்டத்தட்ட 18 பகுதிகள்
  நிறைவுற்ற நேரத்திலும் இன்னும் பிரதான கருத்தை எடுத்துரைக்கும் நிலைக்கு வராமல் பிராகாரச்சுற்றிலேயே இருக்கிறேன்.

  பதிவை முழுதும் படித்து விட்டு பிறகு வருகிறேன். தங்களை இங்கு கண்டதில் ஏற்பட்ட மகிழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

  ReplyDelete
 2. சிவகுமார சுவாமிகளை தெரிந்து கொண்டேன்.

  //உயிர்பிரிய சில மணி நேரம் முன்பு தன் உதவியாளர்களிடம் மதிய உணவிற்கு முன்பு என் உயிர் போய்விட்டால் யாவரும் உணவு அருந்திய பின்னரே அதை அறிவிக்க வேண்டும்’” //

  எவ்வளவு கருணை மிக்கவர் தாய் போல!
  குழந்தைகள் பசியாறியபின் தன் மறைவை சொல்ல வேண்டும் என்ற உன்னத வேண்டுகோளை கடைபிடித்த சீடர்களை பாராட்ட வேண்டும்.

  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் பற்றி மிக அருமையாக கபீர் பாடல்களுடன் சேர்த்து கொடுத்தீர்கள்.

  மிக அருமையான பதிவு.

  ReplyDelete
 3. //1954 ஆம் ஆண்டு ஏற்கனவே பயன்பெற்ற (Alumni) மாணவர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக பல திட்டங்களையும் நடத்திச் செல்ல சேவகர்களை அனுப்பி வைக்கிறது. அதில் உள்ள உறுப்பினர்களே 50000 க்கும் மேலே.//
  சேவை தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வாசித்து முடித்தேன். மனம், தெய்வீகமானது.

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி ஜீவி ஐயா.
  //இன்னும் பிரதான கருத்தை எடுத்துரைக்கும் நிலைக்கு வராமல் பிராகாரச்சுற்றிலேயே இருக்கிறேன்.//
  என் முயற்சிகளிலும் ஏதேனும் தொடர் கட்டுரைகளை எழுதும் போது பூர்வாங்கங்களை எவ்வளவு சொல்ல வேண்டும் என்கிற பிரச்சனை எழும்.ஏனெனில் அப்பொழுது நம் மனதில் எழும் எல்லா கேள்விகளையும் வாசகர்களின் கேள்விகளாக(FAQ) நினைத்து பதில் சொல்ல முற்படுகிறோமோ எனத்தோன்றுகிறது. R K நாராயண் ஒருமுறை சொன்னது போல் ‘I killed my hero even before he was born' என்கிற வழிமுறை தான் சரியோ?
  தங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

  ReplyDelete
 6. நல்வரவு கோமதி மேடம். சான்றோர்களை நினைவுகூர்வதே சத்சங்கம். அதில் தவறாது பங்கேற்று ஊக்கமளிக்கும் தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி