என் வாழ்க்கையின் மிகச் சிறந்த அறிவுரையை சுமார் பத்து வருடங்களுக்கு முன் (~1945) கொடுத்தவர் உலகத்தில் மிக உத்தமர்களுள் ஒருவராகப் போற்றப்படும் மஹாத்மா காந்தி அவர்கள்.
பெரும்பாலோர்க்கு மனத்துன்பம் அனுபவிக்கும் காலங்களில் மனித வர்க்கத்தின் மீது நம்பிக்கை மிகக்குறைவாக இருக்கும். அது போல என்னுடைய சோதனைக் காலம் அது. கணவனை இழந்து இரண்டு பெண்களுடன் அனாதரவாய் நின்றேன். இந்திய சட்டத்தின் கண்களில் பெண்கள் ஆண்களைச் சார்ந்தவர்கள்தான். அவர்களுக்கென்று எந்த தனி உரிமையோ நிலையோ சமுதாயத்திலோ சட்டத்திலோ இல்லை.
இதனால் நான் சந்தித்த போராட்டங்களும் அவமானங்களும்தான் எத்தனை! விடுதலைப் போரில் ஆண்களுக்கு சமமாக ப்ங்கேற்று குடும்பத்தைத் துறந்து சிறைவாசங்களை அனுபவித்து நாங்கள் போராடுகையில் அனைவரும் சமம். ஆனால் கணவர் மறைந்ததனால், மகனில்லாத விதவைக்கு குடும்பச் சொத்தில் எவ்வித பாத்யதையும் கிடையாது. கணவன் வீட்டார்கள் விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டனர். அதனால் உறவின் விரிசல் வளர்ந்து கொண்டே போனது. நெஞ்சில் கசப்பு நிறைந்திருந்தது.
இந்நிலையில் ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு அமெரிக்காவிற்கு செல்ல ஆயத்தமானேன். அதற்கு முன் விடைபெறும் வகையில் மஹாத்மாவை சந்தித்தேன். பலவிஷயங்களை பேசிய பிறகு ஒரு கேள்வி எழுப்பினார் “உன் உறவினர்களுடன் சமாதான்ம் செய்து கொண்டாயா ?”
இது எனக்கு பெரும் ஆச்சரியத்தை தந்தது. அவர் அவர்களின் பக்கம் பரிந்து பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.”நான் யாருடனும் சண்டையிட்டதில்லை.ஆனால் தங்களது தனிப்பட்ட வசதிக்காக பழமையான சட்டத்தின் உதவியைத் தேடும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள எனக்கு விருப்பவில்லை “என்று பதிலளித்தேன்.
சில கணங்கள் சன்னலுக்கு வெளியே பார்த்திருந்தார்.பின்னர் என் பக்கம் திரும்பி ஒரு புன்னகையுடன் “நீ கண்டிப்பாக அவர்களை சந்தித்து விடைப் பெற்றுக்கொள். பண்பாடும் இங்கிதமும் இதை எதிர்பார்க்கிறது. இன்னமும் இந்திய பண்பாட்டில் இவை முக்கியமானவை.”
“அது முடியாது. தங்களை திருப்தி செய்வதற்காகக் கூட எனக்கு இன்னல் விளைவிப்பவர்களை என்னால் சந்திக்க இயலாது”
“உன்னைத் தவிர உனக்கு இன்னல் விளைவிக்க வேறொருவரால் முடியாது” என்றார் புன்னகை மாறாமல். "உன் இதயத்தில் இருக்கும் காழ்ப்பு உணர்ச்சிகளை விரைவிலேயே நீ தடுக்காவிட்டால் மேலும் கெடுதலை விளைவித்துக் கொள்வாய்.”
நான் மௌனமாயிருந்தேன். அவர் மேலும் தொடர்ந்தார்.
“சந்தோஷமற்ற இச்சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள நீ வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறாய். ஆனால் யோசித்துப்பார். உன்னிடமிருந்து நீயே தப்பித்துக்கொள்ள முடியுமா ? உன் உள்ளம் கசப்பான எண்ணங்களால் நிறைந்து இருக்கும் போது வெளியிலிருந்து மகிழ்ச்சி கிடைக்குமா? சிறிது தாழ்மையுடன் நடந்து கொள். உன் அன்பிற்குரியவரை நீ இழந்துவிட்டாய். அதுவே பெரும் துக்கம். உன் உள்ளத்தை தூய்மைப்படுத்திக் கொள்ளும் தைரியம் இல்லாததால் அதையும் மீறிய துன்பத்தை உனக்கு நீயே இழைத்துக் கொள்ளலாமா?”
காந்திஜீயின் வார்த்தைகள் மனதை விட்டு அகல மறுத்தன.
சில தினங்களின் மனப் போராட்டத்திற்குப் பின் என் கணவரின் சகோதரரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயணத்திற்கு முன்பாக அவர்களை சந்திக்க விழைவதாகக் கூறினேன். அங்கே சென்று ஐந்து நிமிடங்களுக்குள்ளாக என் வருகையால் அனைவரின் மன இறுக்கமும் விலகியதைக் கண்டேன்.என் எதிர்காலத் திட்டங்களை கூறி அவர்களிடம் ஆசி வேண்டினேன். அது என்னுள் ஒரு அற்புதத்தை விளைவித்தது. ஒரு பெரும் மனப்பாரத்தை இறக்கி வைத்தது போன்ற உணர்வு உண்டானது. பிற்காலத்தில் என்னுள் ஏற்பட்ட பெரும் மாறுதல்களுக்கு அந்த சிறு நிகழ்ச்சி வித்திட்டது.
(Smt Vijayalakshmi Pundit's article republished in Readers'Digest November 2006; original was in 1955 when she was High Commissioner for India )
சான்றோர்கள் சாதாரணமாகச் சொல்லும் சிறிய அறிவுரைகளும் பல அரிய மாற்றங்களை நம் மனதில் ஏற்படுத்த வல்லது என்ற உண்மையை இந்நிகழ்ச்சி மூலம் அறிகிறோம்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
அறம் அறிந்த சான்றோர்களின் இனிய சொற்கள் வஞ்சகம் இல்லாமலும்,மனதிற்கு குளிர்ச்சி உடையதாகவும் இருக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார். இரண்டு காரணங்களை சொல்கிறார். முதலாவது மனதை குளிர்விப்பது. இரண்டாவது அவர்கள் சொல்லில் உள்ள நேர்மை.
மனித மனங்கள் வறண்டு போகாமல் நல்வழிக்கு திருப்பப்படும் அதிசயத்தை ஏற்படுத்துவதால் தான் சாதுக்களின் பேச்சை அமுத மழை என்று சொல்கிறார் கபீர்.
कुटिल वचन सब्से बुरा, जासे होत न छार ।
साधु वचन जल रूप है, बरसे अमृत धार ॥
கடுஞ்சொல் யாவினும் கொடிது, அதனால் அச்சொல் விடுவாய்
சிட்டர் வார்த்தை நீர்போலே, தாரையும் விழுமே இன்னமுதாய்
(சிட்டர் = சிரேஷ்டர், ஞானி, மேலோர்; தாரை= தொடர்ச்சியாய் வருவது, உதாரணம்- எண்ணெய் ஒழுக்கு)
மாற்று :
வன்சொல் தருமே தாபம், வேண்டாம் என்றும் வெவ்வுரை
இன்சொல் ஆகுமே சீதளம், சாது சொல்வதும் அமுதவுரை
(தாபம் = வெம்மை; வெவ்வுரை=கடுஞ்சொல்; சீதளம்=குளிர்ந்தது)
நம் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் உள்ளத்தில் வெறுப்பின் சுவடுகளை சுமக்காமல் வாழ்க்கையை நடத்துவது மிக அவசியம். ஒருவர் எந்தத் துறையை சேர்ந்தவராய் இருப்பினும் மகாத்மாவின் அந்த எளிய அறிவுரை பொருந்தும்.
“No one can harm you but yourself" :
அவர் திருமதி பண்டிட்டிடம் உள்ளத்தை தூய்மைப்படுத்திக் கொள்ளும் தைரியம் இல்லை என்று ஏன் கூறினார்? ஏனெனில் பணிவு மனப்பான்மையை ஏற்கவொட்டாது மனதை நான் என்னும் அகங்காரம் ஆட்டுகிறது. அது மனிதர் மேல் தனக்கிருக்கும் பிடியை விட மறுக்கிறது. வாழ்வில் ஏற்றுக் கொள்ள வேண்டிய சில கட்டாயங்களை ஏற்க முடியாமல் சங்கடப்படுத்துகிறது.
Prayer for Serenity என்று ஒன்று உண்டு. அதன் வாசகங்கள் இப்படி வரும்.
God! give me courage
-to change things that I can;
-accept those I cannot and
-the wisdom to know the difference.
இந்த பிரார்த்தனையின் நோக்கமே மனதில் பணிவு வர வேண்டும் என்பதே. பணிவற்ற மனதில் விவேகம் குடிகொள்ள முடியாது.
பணிவான மனப்பான்மையே நல்லவழி என்ற நம்பிக்கை இருந்தால்தான் வாழ்க்கையின் நிஜங்களை எதிர்கொள்ளும் தைரியம் வரும்.திருமதி பண்டிட்டுக்கு அந்த தைரியத்தை கொடுத்தது காந்திஜியின் கனிவான அறிவுரை.
அதே அறிவுரையை வேறு யாராவது சொல்லியிருந்தால் திருமதி பண்டிட் அதை ஏற்றுக் கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே.
மஹாத்மா சொன்னதோ மிக மிக மென்மையான வார்த்தைகள்தான்.
மென்மை என்ற காரணத்தினால் வலிமையில்லை என்று குறைத்து எடை போட முடியாது. யானையைக் கொல்லும் வல்லமை உடைய ஈட்டி பஞ்சு பொதியை ஊடுருவ முடியாது. கடப்பாரையால் பிளக்க முடியாத பாறையை பசுமரத்தின் வேர் பிளந்து விடும் என்கிறது ஔவையின் நல்வழி பாடல்.
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
“No one can harm you but yourself"
கீதையிலும் (6:5)அதே கருத்துதான் சொல்லப்படுகிறது.
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः ஆத்மாவுக்கு ஆத்மாவே பந்து, ஆத்மாவுக்கு ஆத்மாவே எதிரி. பகைவர் எவரும் வெளியில் இல்லை. நமக்கு நாமே பகை.ஆகையால் வரும் இன்னல்கள் வெளியிலிருந்து வருவது முடியாது.
இப்படி படி்த்தும் ஆராய்ந்தும் கூட மனதில் வேர் விடாத கருத்து எப்படி ஒரு சாதாரண உரையாடல் மூலம் மனதிற்குள் நிரந்தரமாகப் புகுந்து கொள்கிறது ?
செபமந்திரம் சித்தியானவரின் மூலம் உபதேசம் பெறும் போதுதான் சீடருக்கும் மந்திரம் சித்திக்கும் என்று கூறப்படுவதுண்டு. (சீடருக்கு அதில் சிரத்தையும் இருக்க வேண்டும் என்பது வேறு விஷயம் !:))
அது போல் கனிவாகப் பேசுவதையே வாழ்வின் சாரமாக்கிக் கொண்டவர் வாய்வழியாக அறிவுரைகள் வரும் பொழுது அதனோடு அவர்களின் ஆன்ம சக்தியும் சேர்ந்து வருகிறது. அது விதையில் அடங்கிய ஜீவசக்தி போன்றது. புலன்களுக்கு புரியாது. அது ஆன்மாவைத் தொடுவது. அதனால் தான்அது துயர் தீர்க்கும் மருந்தாகிறது.
இனியவைக் கூறல் என்பதை ஒரு பெரும் தர்மம் என்றே திருக்குறளும் திருமந்திரமும் சொல்கின்றன.
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி, அகத்தானாம்
இன்சொலினதே அறம்
திருமந்திரம்:
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுரை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே
சாதுக்கள் விதைக்கும் நல்லெண்ணங்கள், கபீர் சொல்லும் அமுத மழையான இன்சொற்களோடு வரும் போது எந்த வறட்டு மனமும் ஈரமாகி தன்னுள் அந்த விதையை ஏற்று கொள்கிறது.
அவ்விதையிலிருந்து தாழ்மையெனும் வேர் விடுகிறது. அதன் மூலம் மண்ணில்(உலகில்) சுற்றிக் கிடக்கும் ’குப்பைச் சத்தை’களையே எருவாக ஏற்று அதிலிருந்து பயனுள்ள சத்தை(அனுபவத்தை)உறிஞ்சி ஆரோக்கியமான தாவரமாய் வளர்கிறது. வேர் வெறும் சத்தை உறிஞ்சிட மட்டுமல்ல. தாவரத்தின் பலமே அது தான். மண்ணோடு பிடித்து நிலை நிறுத்துவது.
காலப்போக்கில் அது மலர்கள் தரும் செடியாகவோ,பசி தீர்க்கும் பயிராகவோ ஏன் கனிகளும் நிழலும் தரும் மரமாகவோ வளர்ந்து பரிணமிக்கிறது.
அப்படி இறைவன் அளித்துள்ள திறமைகளை மீண்டும் உலகின் நன்மைக்காக வழங்கும் போது மனிதப்பிறவியும் பயனுள்ளதாகிறது.
மனதில் தாழ்மையிருந்தால் வாக்கில் இன்சொல் தானே வந்திடும்.
அருமை. தகவலுக்கு நன்றி.
ReplyDeleteவாழ்கையில் பணிவு அவசியம். எடுத்து எறிந்து பேசுதல், தனக்கெல்லாம் தெரியும் என்பதெல்லாம் பணிவின் எதிரிகளே. விஜயலக்ஷ்மி பண்டிட் பற்றிய அறிதான நிகழ்ச்சியையும் எடுத்துக் காட்டி மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..நன்றி.
ReplyDeleteஇன்னொரு முறை படிக்கவேண்டும்.
//கடுஞ்சொல் யாவினும் கொடிது, அதனால் அச்சொல் விடுவாய்
ReplyDeleteசிட்டர் வார்த்தை நீர்போலே, தாரையும் விழுமே இன்னமுதாய்//
தாரை என் கண்களில் இருந்து!! :(((( அனைத்தும் அனுபவ உண்மைகள்.
உங்களோட பதிவுகளில் மிகச் சிறந்த பதிவு என்று எதைச் சொல்லுவது? அனைத்துமே ஒன்றை ஒன்று தூக்கிச் சாப்பிடுகிறது.
//நம் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் உள்ளத்தில் வெறுப்பின் சுவடுகளை சுமக்காமல் வாழ்க்கையை நடத்துவது மிக அவசியம்//
தெரிஞ்சோ, தெரியாமலோ, இது எனக்குக் கொஞ்சமே கொஞ்சமாவது கை வந்திருக்கிறது என்பது இப்போ யோசித்தால் புரிகிறது. என்னை நானே அலசிக்கொள்ளவும் முடிந்தது இந்தப் பதிவினால்.
"தீதும், நன்றும் பிறர் தர வாரா!"
மிக அருமையான பதிவு.
ReplyDelete" நேற்று " ஈந்த நாற்றங்களிலிருந்து
ReplyDelete" இன்று " நுகரும்
நறுமணங்களுக்கு வா = எனும் கருத்துக்களை எனது
http://vazhvuneri.blogspot.com
ல் நேற்று பதிவிட்டிருந்தேன்.
இதனை மேலும் வலியுறுத்தும் வகையில்,
அழகாக, அழுத்தமாக, ஆதர்ச வழியிலே
அண்ணல் காந்தியின் வார்த்தைகளில் சொல்லியிருக்கிறீர்கள்.
உண்மைதான் !
// உன்னைத் தவிர உனக்கு இன்னல் விளைவிக்க வேறொருவரால் முடியாது”
"உன் இதயத்தில் இருக்கும்
காழ்ப்பு உணர்ச்சிகளை விரைவிலேயே நீ தடுக்காவிட்டால் மேலும் கெடுதலை விளைவித்துக் கொள்வாய்.”//
பரிதாபம் என்னவெனின், இதை உணருமுன், மனிதன் தன் வாழ் நாட்களின் பெரும்பகுதியின் மகிழ்ச்சியினை இழந்து விடுகிறான்.
ஆன்டனி ராபின்ஸ் எழுதிய எமோஷணல் இன்டெலிஜன்ஸ் எனும் நூல் மனித மனதில் ஏதோ ஒரு நிகழ்வில் ஏற்பட்டு, மறையா நிற்கும் எதிர்மறை உணர்வுகளின்
தாக்கத்தையும் பாதிப்பையும் நுணுக்கமாக எடுத்துரைக்கிறது.
ஆங்காரம் உள்ளடக்கி, ஐம்புலனைச்ச்சுட்டறித்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்
என்றார் பத்திரிகிரியார்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
நன்றி வேலன்,
ReplyDeleteமீண்டும் வருக :)
நல்வரவு மதுரையம்பதி,
ReplyDeleteபாராட்டுரைகளுக்கு மிக்க நன்றி.
நன்றி கீதா மேடம்,
ReplyDelete//...அனைத்துமே ஒன்றை ஒன்று தூக்கிச் சாப்பிடுகிறது.//
பசித்தவனுக்குத்தான் உணவு ருசிக்கும். இதில் அதிசயம் இல்லை. அது உங்களுக்கு உள்ள பசியை உணர்த்துகிறது. :))
//"தீதும், நன்றும் பிறர் தர வாரா!"//
ரொம்ப சரி; வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி
வாங்க சரவணன்
ReplyDeleteரசித்துப் படித்திருக்கிறீர்கள். அடிக்கடி வருக. நன்றி
நன்றி சுப்புரத்தினம் ஐயா
ReplyDelete///பரிதாபம் என்னவெனின், இதை உணருமுன், மனிதன் தன் வாழ் நாட்களின் பெரும்பகுதியின் மகிழ்ச்சியினை இழந்து விடுகிறான்///
அனுபவம் போல பெரிய ஆசான் கிடையாது என்று சொல்வார்கள். அடுத்தவர்கள் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டால் ஓரளவு இழப்பைத் தவிர்க்கலாமோ என்னவோ ! அதற்கும் ஒரு மனபக்குவம் வேண்டியிருக்கிறது. எல்லாம் அவன் செயல்!!
தங்கள் ஆசிகளுக்கு நன்றி
//இன்சொலினதே அறம்//
ReplyDeleteஅருமை!
நன்றி ஜீவா
ReplyDelete"மனதில் தாழ்மையிருந்தால் வாக்கில் இன்சொல் தானே வந்திடும்."
ReplyDeleteமிகப்பெரும் வாழ்வியல் உண்மை இதுதான்.. அதை மிகவும் சுவாரசியமாக விளக்கிய தங்கள் பாங்கு அருமை. நன்றி.
//அது போல் கனிவாகப் பேசுவதையே வாழ்வின் சாரமாக்கிக் கொண்டவர் வாய்வழியாக அறிவுரைகள் வரும் பொழுது அதனோடு அவர்களின் ஆன்ம சக்தியும் சேர்ந்து வருகிறது. அது விதையில் அடங்கிய ஜீவசக்தி போன்றது. புலன்களுக்கு புரியாது. அது ஆன்மாவைத் தொடுவது. அதனால் தான்அது துயர் தீர்க்கும் மருந்தாகிறது.//
ReplyDeleteஅருமை. அதுவும் முத்தாய்ப்பாக முடித்த விதமும் அருமை.
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது உங்கள் பதிவுகளைப் படிக்கும் பொழுது மனதுக்கு ஒரு நிறைவு ஏற்படுகின்றது. அந்த விதத்தில் உங்கள் பதிவுகளும் மனதிற்கு கிடைத்த மருந்து தான்.
மிக்க நன்றி, கபீரன்ப!
நன்றி கிருத்திகா,
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி.
//உங்கள் பதிவுகளைப் படிக்கும் பொழுது மனதுக்கு ஒரு நிறைவு ஏற்படுகின்றது//
ReplyDeleteஇதை விட எழுதுபவனுக்கு நிறைவு தருவது வேறென்ன இருக்கமுடியும் ! நீங்கள் டானிக் கொடுத்துவிட்டீர்கள்
ஜீவி ஐயா மிக்க நன்றி
சொல்ல நினைச்சதை கீதா அக்கா முன்னாடியே சொல்லிட்டாங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பவுல் பவுல்.
ReplyDeleteபோகட்டும். ¨சாது வசன்¨ என்பதை சாதுக்களின் வசனம் என்று பொருள் கொண்டு இருக்கிறீர்கள். இரண்டாவதாக கையாண்ட இன்சொல் என்பதே சரி என்று தோன்றுகிறது. ஆனால் அங்கேயும் ¨சாது சொல்வதும் அமுதவுரை¨ என்று மீண்டும் குழம்பிவிட்டது.
நன்றி திவா,
ReplyDelete//ஆனால் அங்கேயும் ¨சாது சொல்வதும் அமுதவுரை¨ என்று மீண்டும் குழம்பிவிட்டது //
பொதுவாக ’மாற்று’ என்பது மிகச் சரியான மொழி பெயர்ப்பு என்றில்லாமல் மையக் கருத்தை வைத்து சற்று எதுகை மோனைகளுக்காக மாற்றி அமைக்கப்படும் முயற்சி.
தாங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டாம் அடியில் “இன்சொல் ஆகுமே சீதளம்” என்பது யாவருக்கும் பொருந்தும் பொது உண்மை.
அதற்கும் மேலே ஒரு படி சென்று சாதுக்களின் உரையை புகழ்வதற்காக சொல்லவரும் போது ’அமுதவுரை’ என்று சொல்லவேண்டியிருக்கிறது. ’அமுதமழை’ என்று சொல்லத்தான் விருப்பம்.ஆனால் முதல் வரியின் கடைசி சீரை அதற்கு ஏற்றாற் போல் மாற்றி அமைக்க தெரியவில்லை.
பின்னாளில் யாராவது இன்னும் நன்றாகச் செய்யக்கூடும் :)
வருகைக்கும் கருத்து பகிர்தலுக்கும் மிக்க நன்றி
//साधु वचन जल रूप है, बरसे अमृत धार ॥//
ReplyDeleteமீண்டும் இந்தப் பதிவைப் படிக்க வந்தப்போ, இந்த வரிகளுக்கான அர்த்தத்தை ஒவ்வொருத்தர், ஒவ்வொரு மாதிரி புரிஞ்சுக்கிட்டிருக்கோம். என்னோட புரிதல், ஞானிகளின் வாய் மூலம் பெறும் உபதேசங்கள் அமுததாரை விழுவதற்குச் சமம். இன்னும் சொல்லப் போனால் அமுததாரையே தான் அவை. என்பதே என்னோட புரிதல், மறுபடியும் குறுக்கிட்டதுக்கு மன்னிக்கவும்.
//சிட்டர் வார்த்தை நீர்போலே, தாரையும் விழுமே இன்னமுதாய்//
ReplyDeleteஉங்களோட ஒவ்வொரு பதிவையும் இதற்கு உதாரணமாய்ச் சொல்லலாம், மிகை இல்லை!
கீதா மேடம்
ReplyDelete//என்னோட புரிதல், ஞானிகளின் வாய் மூலம் பெறும் உபதேசங்கள் அமுததாரை விழுவதற்குச் சமம். இன்னும் சொல்லப் போனால் அமுததாரையே தான் அவை. //
நீங்கள் ரொம்ப சரி. அதில் மாற்றமே இல்லை. திவா அவர்களுக்கு வந்த சந்தேகம் “மாற்று” என்ற வகையில் குறிப்பிடப்பட்டிருந்த மொழி பெயர்ப்பை பற்றியதாகும். அவருடைய புரிதலிலும் ஹிந்தியில் கபீரின் வரிகளைப் பற்றி எந்த சந்தேகமும் இருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
///.....மிகை இல்லை!////
..ஹச்..ஹச் :))
உச்சி ஓவரா குளிர்ந்து போச்சு
ம்ம்ம்ம்ம்ம்...நான் சொல்ல வந்தது வேறு. இப்போது செய்திருக்கும் "சாது சொல்வதும் அமுதவுரை" என்ற கருத்தில் மாறுபடவில்லை. ஆனால் அதைதான் சொல்ல வந்தாரா என்று பார்க்கும்போது இல்லை என்று தோன்றுகிறது. முன் வரியில் கடின் வசன் - கடுமையான சொற்கள்- என்று சொல்லிவிட்டு அடுத்த வரியில் அதற்கு எதிராக சொல்லும்போது அது ஸாது வசன் என்பது இன்சொல் என்றே பொருள் கொள்வது சரியாக இருக்கும் என்று தோன்றியது.
ReplyDeleteநன்றி திவா,
ReplyDelete// முன் வரியில் கடின் வசன் - கடுமையான சொற்கள்- என்று சொல்லிவிட்டு அடுத்த வரியில் அதற்கு எதிராக சொல்லும்போது அது ஸாது வசன் என்பது இன்சொல் என்றே பொருள் கொள்வது சரியாக இருக்கும் //
நீங்கள் குறிப்பிட்ட பிறகுதான் சாது மற்றும் ’குடில்’ என்பதற்கு வேறு பொருள்களும் இருக்கக் கூடும் என்று தோன்றியது. சதுர்வேதியின் ஹிந்தி அகராதியில் போட்டு தேடினேன்.
साधु sa:dhu (nm) a saint, saintly person; hermit; a religious mendicant; (a) good, noble, virtuous; ~वृत्त moral, saintly; ~शील pious, virtuous; ~सम्मत backed by virtuous men;
कुटिल kuṭil : (page 139) कुटाई kuṭa:i: (nf) ramming, pounding; thrashing, crooked; curved, tortuous; perverse;
குடில் என்பதற்கு எதிர்பதமாக உபயோகப்படுத்த வேண்டியிருந்தால் ஷீதல் வசன் என்றோ மீடீ ஷப்த் என்றோ வந்திருக்கும்.இதிலிருந்து முதல் வரியில் கபீர் தவிர்க்க வேண்டியதை சொல்லிவிட்டு செய்ய வேண்டியதை, இரண்டாவது வரியில் சாதுக்களின் உதாரணத்தைக் காட்டி சொல்ல வருகின்றார் என்றே தோன்றுகிறது.
कुटिल= ஹிஹிஹி, சுத்தி வளைச்சுப் பேசறதையும் குறிக்கும் இல்லையா? சொல்லவேண்டியதைத் தெளிந்த நீர்போலத் தெளிவாய், மனதில் சொல்லணும்னு அர்த்தத்திலேயும் வரும்னு தோணுது!
ReplyDeleteவரேன், அப்புறம் என்னை कुटिल வசன் பேசறதாச் சொல்லிடப் போறீங்க! :))))))))))))))))))))
///சொல்லவேண்டியதைத் தெளிந்த நீர்போலத் தெளிவாய், மனதில் சொல்லணும்னு அர்த்தத்திலேயும் வரும்னு தோணுது! ///
ReplyDeleteசுத்தி வளைச்சு (tortuous) பேசுவதை “ஸப்ஸே புரா “ என்று சொல்லக் காரணமில்லை என்பதால் இந்த இடத்தில pounding; thrashing, crooked போன்று வரும் பொருளிலேதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கு. :)))
//அது போல் கனிவாகப் பேசுவதையே வாழ்வின் சாரமாக்கிக் கொண்டவர் வாய்வழியாக அறிவுரைகள் வரும் பொழுது அதனோடு அவர்களின் ஆன்ம சக்தியும் சேர்ந்து வருகிறது. அது விதையில் அடங்கிய ஜீவசக்தி போன்றது. புலன்களுக்கு புரியாது. அது ஆன்மாவைத் தொடுவது. அதனால் தான்அது துயர் தீர்க்கும் மருந்தாகிறது.//
ReplyDeleteஅருமையிலும் அருமை. ஜீவி ஐயா எடுத்துக் காட்டிய இந்த வரிகளே என்னையும் மிகவும் கவர்ந்தவை. அகங்காரம் இல்லா மனதில் பணிவும் அன்பும் தானே நிறைந்து விடும் போலும். மிக்க நன்றி.
நன்றி கவிநயா,
ReplyDeleteபொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் பதிவுகளைப் படிக்க படிக்க மனதில் உள்ள நெகடிவ் எண்ணங்கள் மறையத் தொடங்குகின்றன. வாழ்க்கையின் குறிக்கோள்களை மாற்றி
ReplyDeleteஅமைக்க மனம் விழைகிறது.
சிந்திக்க வைக்கும் சிறப்புள்ள எழுத்துக்களுக்கு நன்றி.
நன்றி வெற்றி மகள்
ReplyDelete//வாழ்க்கையின் குறிக்கோள்களை மாற்றி அமைக்க மனம் விழைகிறது//
தூண்டுகோல் மேலிருந்து வருகிறது. நாம் வெறும் காரண நிமித்தமே.
அன்பிற்கு நன்றி
ஐயா, இன்று தான் நான் உங்கள் பதிவுகளை படித்தேன்.அற்புதம். அபாரம்.நான் படித்த கபீரின் பாடல்கள் என் நினைவுக்கு வருகின்றன.மேலும் பல பதிவுகளை பதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteநல்வரவு ரேவதி திருநாராயணன்,
ReplyDeleteகபீர் வலைப்பூ தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.
//...மேலும் பல பதிவுகளை பதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்///
இந்த இடுகை மூன்றாண்டு பழையது. இதற்குப் பின்னும் பல்வேறு கபீர் தோஹாக்களைக் கொண்ட கட்டுரைகள் வந்துள்ளன. அவைகளையும் படித்து மகிழ Latest Entry என்கிற சுட்டியை பயன்படுத்தவும். அல்லது kabeeran.blogspot.com என்று மட்டும் URL தட்டச்சு செய்து வலைப்பூவை திறக்கவும்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி