குருவின்றி ஞானம் இல்லை என்பது ஆன்மீகத்தின் அரிச்சுவடி பாடங்களில் ஒன்று. கபீர் தாஸ் அவர்களின் ஒரு ஈரடி இதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
कबीरा ते नर अन्ध है, गुरु को कहते और ।
हरि रूठे गुरु ठौर है, गुरु रुठै नहीं ठौर ॥
மனிதரில் அவனே குருடன், கபீரா, குருவை அறியாதவன் |
அரி முனிந்தால் குருவுண்டு, குரு முனிந்தால் யாருண்டு ||
( அரி = ஹரி ; முனி = கோபம், வெறுப்பு)
கடவுளே நமது கர்மங்களினால் நம்மீது வெறுப்படைந்திருந்தாலும் குருவானவர் நமக்கு அடைக்கலம் தந்து அவற்றின் கடுமையை தணிக்கச் செய்ய வல்லவர். ஆனால் அத்தகைய குருவிற்கே நம்மீது கோபம் ஏற்பட்டுவிட்டால் அப்போது அந்த கடவுள் கூட துணை வரமாட்டான். அப்படிப்பட்ட குருவை புரிந்து கொள்ள முடியாத மனிதரெல்லாம் குருடருக்கு ஒப்பானவர் என்பதே இதன் பொருள். (ஹிந்தியில் ठौर (டௌர்) என்றால் அடைக்கலம். )
நானும் சில வருடங்களாக எனக்கேற்ற குருவை எப்படிக் கண்டறிவது என்ற சிந்தனையிலேயே காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தேன். சுவாமி ஓம்காரானந்தாவை சென்று சந்திக்க ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் அவர் திடீரென்று கோவிட் தொற்றில் சமாதி அடைந்து விட்டார். என் தேடல் தொடர்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு யூட்யூப் காணொளியில் ஸ்ரீ வி. வி. பிரம்மம் என்பவரை பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
ஆந்திராவில் தாடிபத்ரி யில் அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். சிறு வயதிலிருந்து பஞ்சாட்சிர செபம் செய்து திருவண்ணாமலை ரமணருடைய சமாதி முன் ஆத்ம சாட்சாத்காரம் பெற்றவர். இது நடந்தது அவருடைய இருபத்தியெட்டாம் வயதில். தற்போது 79 வயதாகியுள்ள ஸ்ரீ பிரம்மம் ஒரு விருத்தாஸ்ரமும் அனாதைகளுக்கான இல்லத்தையும் ஸ்ரீ ரமணரின் பெயரில் தன் ஓய்வூதியத்தை மட்டும் நம்பி நடத்தி வருகிறார். யாரிடமும் நிதி கேட்டு செல்வதில்லை. அவருடைய பிள்ளைகளும் மருமகனும் இவைகளை கவனித்துக் கொள்வதில்அவருக்கு பேருதவியாக இருக்கின்றனர்.
" அவருடைய சொற்பொழிவை கேட்க அறையில் நுழைந்த உடனே என்னை ஒரு பேரமைதி கவ்விக் கொண்டது. அப்போது இன்னமும் அவர் அறைக்குள் வந்திருக்கவில்லை. சொற்பொழிவிற்குப் பின் கேள்வி பதில் நிகழ்ச்சியும் இருந்தது. பலரும் பற்பல கேள்விகளுடன் வந்திருந்தனர். ஆனால் அவர் பேசி முடித்ததும் எல்லோருடைய சந்தேகங்களும் மறைந்து போயின. கேள்விகள் இல்லாமலே அவரவர்களுக்கு தேவையான பதில் கிடைத்திருந்தது. எந்த அமைதியை வாழ்நாளெல்லாம் நான் தேடினேனோ, குருஜியின் சந்திப்பிற்குப் பின் அதை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து அனுபவித்தேன்"
மேற்கண்ட அனுபவத்தை சொல்லியிருப்பவர் "யங்கா" என்னும் செக்கோஸ்லோவேகிய அன்பர். அந்த காணொளியை பதிவின் கடைசியில் காண்போம்.
இப்படி பலவாறாக தூண்டப்பெற்று அப்பெருமானை சந்தித்து ஆசிகள் பெற்று வரவேண்டும் என்ற நோக்கத்தோடு சென்ற மாதம் 23 ஆம் தேதி புட்டபர்த்தியிலிருந்து கிளம்பி, என் மனைவி மகனுடன், அவருடைய இல்லத்தை சென்றடைந்தோம். அவரை நமஸ்கரித்த பின் அவருடைய முதல் கேள்வி ( எல்லாம் ஆங்கிலத்தில் நடந்த உரையாடல்)
" எதற்காக என்னைத் தேடி வந்தீர்கள்" ?
" தங்களுடைய ஆசிகளை பெற்றுச் செல்லலாம் என்று....."
" எங்கிருந்து வருகிறீர்கள் ?"
"புட்டபர்த்தி "
"சத்யஸாயியே ஒரு அவதாரம். அவர் சொன்னதை கடைபிடித்தால் போதும். அதைவிட்டு ஏனிப்பிடி சுற்றுகிறீர்கள்? "
( அமைதி)
"ஆசி வேண்டுமென்றால் அதற்கு தகுதி வேண்டுமல்லவா?"
(பொட்டென்று முகத்தில் யாரோ அறைந்தது போலிருந்தது. )
" சரி, தியானம் செய்வது உண்டா?"
"குருஜி, காலை மாலை காயத்ரி செபம் செய்வேன், அடிக்கடி நாமசங்கீர்த்தனம், குருவார பூஜை என்று வீட்டில் ஏதாவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்...."
"அவைகளெல்லாம் வெறும் மனதை சுத்தப்படுத்துவதற்கே அல்லாமல் அவற்றால் சாட்சாத்காரம் கிடைக்காது. It is all play of the mind . The ego will not go. தியானம் செய்யுங்கள். தினமும் விடாது செய்யுங்கள்" என்று அறிவுறுத்தினார்.
'நமது இயற்கை குணமே ஆனந்தம், ஒரு குழந்தைக்கு உள்ளது போல. யாவும் மனதின் சலனம். அதில் அமைதியை தேடுவதும் அடங்கும்'.
காயத்ரி செபம் செய்யும் போது அதன் மூலத்தில் எழும் சப்தத்தை கவனி.
( இதைத்தான் மாணிக்கவாசகர் " ...உய்ய என் உள்ளத்து ஓங்காரமாய் நின்ற மெய்யா " என்று சிவ புராணத்தில் கூறுகிறாரோ !)
என்று பலவாறான விளக்கங்களை தந்து நாற்பது நிமிடங்களை எங்களுக்காக ஒதுக்கினார். நேரம் மதியம் 2:00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
விடைபெறும் முன் என் மனைவிக்கு மட்டும் சுமார் பத்து நிமிடங்கள் தலை மீது கையிட்டு தியானத்தின் அமைதியை உணர்த்தினார்.
அது அவர் விடாது செய்து வரும் குருவார குரு பூஜையின் பலன் என்று நான் நினைத்துக் கொண்டேன். ( எனக்குத்தான் தகுதி இல்லையென்பதை ஆரம்பித்திலேயே உணர்த்தி விட்டாரே) .
அவரை நமஸ்கரித்து விடைபெற்ற பின் அவருடைய இல்லத்திலிருந்து நான்கைந்து கி மீ தூரத்திலிருந்த ஆஸ்ரமத்திற்கு ஒரு உதவியாளர் அழைத்துச் சென்று எங்களுக்கு மதிய உணவு அளித்தார். பெண்ணாற்றங்கரையில் அமைந்த அந்த ஆசிரமத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். நூறு சிறுவர் சிறுமியரை தினமும் பாலித்தல் வேண்டும் என்றால் இறைவனுடைய சங்கல்பம் இல்லாமல் முடியாது.
மனதை ஒதுக்கி இதயத்தால் (அன்பினால்) மட்டுமே சாட்சாத்காரம் கிட்டும் என்பதை காணொளி நேர்காணலிலும் அவர் வலியுறுத்துவதைக் காணலாம்.
இந்த நிலையை அடைவதற்குத்தான் ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்ற பக்தியும் சரணாகதியும் தேவைப்படுகிறது.
முழுவதுமாக பாருங்கள்
மனதை ஒதுக்கி இதயத்தால் (அன்பினால்) மட்டுமே சாட்சாத்காரம் கிட்டும்//
ReplyDeleteஉண்மை. மனதை இறைவனிடம், மற்றும் அனைவரிடமும் அன்பு செலுத்தினால் மட்டுமே கிட்டும் அமைதி.
அருமையான பதிவு.
குருவின் சொல்படி தியானம் செய்வோம்.
அவரின் ஆசிகளிய பெறுவோம்.
குருவே சரணம். 2023ம் வருடத்திற்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி கோமதி மேடம். குருவே சரணம்._/\_
ReplyDeleteஅபாரம். அருமை....
ReplyDelete