Wednesday, December 27, 2023

நாமம் தோய்ந்த மூச்சு

 இன்று திருவாதிரை( 27-12-2023)

விறகு வெட்டியான சேந்தனாரின் பக்திப் பெருமையை தில்லை பெருமான் உலகறியச் செய்த நாள்.  அவருடைய எளிய வீட்டிற்கே சிவனடியாராகச் சென்று அவர் படைத்த களியை விரும்பி ஏற்று களிக்கு  திருவாதிரைக் களி என்று ஏற்றம் கொடுத்த நாள். களிநடனம் புரிபவன் களியில் களி கண்டான்.

பின்னர் அவரை பல்லாண்டு பாடும்படி பணித்து அதன் பின் தேரோட்டம் தடையின்றி சென்றதாக அவருடைய வரலாறு சொல்கிறது.

அப்போது அவர் பாடிய "மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள்" என்று தொடங்கி " பல்லாண்டு கூறுதுமே" என்று முடியும் பதிமூன்று பாடல்களும் ஒன்பதாம் திருமுறையாக சைவத் திருமுறை பகுப்பில் போற்றப் படுகிறது.

என்னிடத்தில் இருக்கும் தமிழ் வேதத் திரட்டிலிருந்து ஒருமுறை அதைப் படித்து விட்டு என்னுடைய திருவாதிரை வழிபாட்டை  நிறைவு செய்த திருப்தியில் வேறு சில பக்கங்களைப் புரட்டினேன். 

அப்போது  மணிவாசகப் பெருமானின் "யாத்திரைப் பத்து" கவனத்தைக் கவர்ந்தது.  அதில் நான்காவது பாடலில் 'அடியார் ஆனீர் எல்லீரும் அகலவிடுமின் விளையாட்டை....' என்ற வரிகள் ஏனோ என்னை தடுத்து நிறுத்தியது.

இப்போது நான் செய்து கொண்டிருக்கும் தோத்திரம் எல்லாமே வெறும் விளையாட்டு தானோ?  எனக்கு சேந்தனாரைப்போலவும் பிற அடியார்களைப் போலவும் பக்தி எப்போது வரும்?  

'செடிசேர் உடலைச் செலநீக்கிச் சிவலோகத்தே நமை வைப்பான் பொடி சேர்  மேனி புயங்கன் தன் பூவார் கழற்கே'  என்று அவர் நமக்கு உறுதி மொழி அளித்தாலும் நமக்கு அதற்கான தகுதி வேண்டாமோ! 

அத்தகுதியை அடைந்த மாணிக்கவாசகர் அத்தகைய பக்தர்களின் நிலையை வருணிப்பதை பார்ப்போம். 

நல்காது ஒழியான் நமக்கு என்று உன்
நாமம் பிதற்றி நயன நீர்
மல்கா வாழ்த்தா வாய் குழறா
வணங்கா மனத்தால் நினைந்து உருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்
பரவிப் பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி
அருளாய் என்னை உடையானே.  ( கோயில் மூத்தத் திருப்பதிகம் )

( மல்கா என்பதை மல்கி என்றும்  வாழ்த்தா என்பதை வாழ்த்தி என்றும் குழறா என்பதை குழறி என்றும் வணங்கா என்பதை வணங்கி என்றும் பொருள் கொள்ள வேண்டும் )

இறைவனிடம் ' உன் நாமம் பிதற்றி' என்று சொல்லும் போது அடியார்கள் அதைத் தவிர வேறொன்றையும் நினைக்கவோ பேசவோ மாட்டார்கள் என்பது புரிகிறது.  அடுத்து வரும் வரிகள் அத்தகைய பக்தர்களின் உடல் மற்றும் மனநிலையை விவரிக்கின்றன.

அவர் சொல்லும் எந்தத் தகுதியும் என்னிடம் இல்லை என்பதை உணரும் போது ஏனிந்த நிலைமை என்று ஆராயத் தோன்றுகிறது.  "அகலவிடுமின் விளையாட்டை" என்று  அவர் போதிப்பதை கடைபிடிக்காததால் வரும் விளவுதான் என்கிற காரணமும் புரிகிறது.

கபீர்தாஸரின் ஈரடி ஒன்று இதை உரைகல் போல மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

सांस  सुफल सो  जानिये ,जो सुमिरन में जाय | 

और सांस यौं ही गये , करि करि बहुत उपाय  || 

இதன் பொருள் "நீ விடுகின்ற மூச்சு பயனுள்ளதாயிற்று இறைநாமத்துடன் கூடிவந்தால்.  இல்லாவிடில்  ஏதேதோ வெளிவிவகாரங்களினால் வீணாய் போய்விட்டது. "

யத் யத் கர்ம கரோமி  தத் தத் அகிலம் சம்போ தவ ஆராதனம் என்று சிவ மானஸ ஸ்துதியில் சொல்வது போல்  அவனுடைய நினைவாகவே என் கடமைகளை செய்கின்றேனா என்றால் இல்லையென்பதே உண்மை.

ஒருநாளைக்கு மனிதர்களின் சுவாசம் 21000 முறை நடைபெறுகிறதாம். கபீர் சொல்வது போல் 21000 முறையும்  கடவுள் சிந்தனையோடிருந்தால் கண்டிப்பாக சேந்தனாரைப் போலவோ மாணிக்கவாசகர் போலவோ அந்த உயர் நிலையை அடையலாம்.  ஆனால் உலக நடப்பில் மனம் உழன்று அது சாத்தியமின்றி நம்மை அலைகழிக்கிறது

தமிழில் மொழி பெயர்ப்பு

நாமம் தோய்ந்த மூச்சோ ? நாளெல்லாம் நல்லதாச்சு |

நாமம் சேராத மூச்சோ ?  பொழுதெல்லாம் வீணாய் போச்சு ||

2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து கொண்டிருக்கிறது.

புதிய வருடத்திலாவது சற்று முன்னேறுவதற்கான சத்சங்கங்களைத் தேடிப் பிடிப்போம்.

அனைவருக்கும் குரு அருளும் இறையருளும் பெருகட்டும்.

2 comments:

  1. மிக அருமையான பதிவு.
    மாணிக்கவாசகரின் திருவாசகம் தினம் படிக்கிறோம்.
    தேவாரம், திருப்புகழ், மேலும் பல பக்தி பாடல்களை படிக்கிறோம். மாலை 5 முதல் ஆறு வரை வாட்ஸ் அப்பில் குழு அமைத்து

    நாளில் அந்த ஒரு மணி நேரம் நல்ல பொழுதாக போவதாய் நினைத்து கொள்வேன்.

    //"நீ விடுகின்ற மூச்சு பயனுள்ளதாயிற்று இறைநாமத்துடன் கூடிவந்தால். இல்லாவிடில் ஏதேதோ வெளிவிவகாரங்களினால் வீணாய் போய்விட்டது. "//

    கபீர் சொல்வது போல பொழுதுகள் வீணாய் போகிறது .
    எந்த வேலை செய்தாலும் அந்த வேலையை இறைவனை வணங்கி , அந்த நாளை அவனை வணங்கி ஆரம்பிக்கிறேன்.

    //புதிய வருடத்திலாவது சற்று முன்னேறுவதற்கான சத்சங்கங்களைத் தேடிப் பிடிப்போம்.

    அனைவருக்கும் குரு அருளும் இறையருளும் பெருகட்டும்.//

    புது வருட வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
    குருவருள் , இறையருள் பெருகட்டும்.
    நல்ல பதிவுக்கு நன்றி.



    ReplyDelete
  2. மிக்க நன்றி கோமதி மேடம். ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி