Sunday, March 25, 2007

குலம் தருமோ பெருமை ?

கல்விப்பெருமை, செல்வத்தின்கண் பெருமை, அதிகாரப்பெருமை மற்றும் வனப்பின் பெருமை இவையாவும் மனித குலத்தை ஆட்டிப் படைக்கும் ஒரு பெரும் மாயையின் சக்தி. ஓரளவு இவைகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பெருமை உண்டு. அது தான் குலப்பெருமை.

மனிதகுலம், காணும் எல்லாவற்றிலும் ஒரு உயர்ச்சி அல்லது தாழ்ச்சி கற்பிக்கிறது. இவைகளுக்கு குதிரை, பசு, காளை நாய் பூனை போன்ற விலங்குகளும் விதிவிலக்கல்ல. ஆயிரக்கணக்கில் பணம் கொட்டி உயர் ஜாதி நாய்க் குட்டிகளை செல்வந்தர்கள் வாங்கி செல்வதை காண்கிறோம். அதனுடன் கணிணியில் பதிவு செய்யப்பட்ட அதன் மூதாதையர்களின் வரலாறும் உண்டு. எவ்விதத்திலும், எந்த நிலையிலும் அதன் உயர்ச்சிக்கு குறைவு ஏற்படவில்லை என்பதை நிரூபிக்கவே இந்த ஏற்பாடு.

இப்படி இருக்கையில் தன் இனத்தை மட்டும் விட்டுவைப்பானா மனிதன். 'அவங்க ராஜா பரம்பரை' 'எங்கள் முப்பாட்டனார் திவான் பகதூராக்கும்' என்பன சில, கடந்த கால நிகழ்வுகளிலேயே, பெருமை பேசித்திரியும் பலரது போக்காகும். சாதி சண்டைகள் என்பது பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாகும். இதற்கு எந்த ஒரு தேசமும் விதிவிலக்கு அல்ல. இது வேறுபாடு பாராட்டும் பாமர மனிதருடைய போக்கு. படைப்பு எல்லாவற்றிலும் ஒருமையை ஓர்ந்து, அன்பு போற்றும் ஞானிகள் இதை மாற்ற முயற்சிக்கின்றனர்.

ஆறறிவு கொண்ட மனிதனை அவன் பின்பற்றும் பண்பாடுகளையும் கொள்ளும் கோட்பாடுகளையும் கொண்டே தரம் பிரிக்க வேண்டுமே அன்றி பிராணிகளைப் போன்று பிறக்கும் குடியைக் கொண்டு அல்ல. அவைகளின் குணம் வெறும் மரபு வழியாக நிர்ணயிக்கப் படுகிறது. ஆனால் மனிதனுக்கோ அவனுடைய பூர்வ ஜன்ம கர்மவினைகளை ஒட்டியே குணங்களும் திறமையும் அமைகின்றது.

ஹரிபிரசாத் சௌராசியாவின் புல்லாங்குழல் இசையில் மயங்காதவர்களே இருக்க முடியாது. இவர் சிறுவனாக இருக்கும் பொழுதே அதை கற்க மிக்க ஆர்வம் கொண்டு பல சிரமங்களுக்கிடையே உழைத்து வெற்றி கண்டவர். சிரமங்களுக்கான காரணம் அவருடைய குடும்பத்தில் இசை என்பதின் வாசனை கூட கிடையாது. அவரது தந்தையார் ஒரு குத்து சண்டை வீரர். தன்னைப் போலவே தன் மகனும் அதில் தேர்ச்சி பெற்று முன்னுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர். அந்த குடியிலே ஒரு இசை மேதை பிறக்க வேண்டும் என்பது இறைவன் சித்தம்.

நான்மணிக்கடிகையில் வரும் ஒரு பாடல்:

கள்ளி வயற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று
ஒள் அரிதாரம் பிறக்கும் ; பெருங்கடலுள்
பல் விலய முத்தம் பிறக்கும் ; அறிவார் யார்
நல் ஆள் பிறக்கும் குடி ?


நாம் பொதுவில் பயனற்றவையாகக் கருதும் முள் நிறைந்த கள்ளி, உப்பு கரிக்கும் கடல், காட்டில் வாழும் மான் ஆகியவை கூட பல மதிப்பற்ற பொருள்களை தர வல்லன. அதைப் போன்றே மேன்மக்கள் பிறக்கவேண்டிய குடி இதுதான் என்று எவரும் நிர்ணயம் செய்ய முடியாது.

ஒரு அபூர்வப் பிறவி வந்து தன்னுடய குலத்திற்கே பெருமை சேர்த்துப் போய்விடுகிறது. அதன் பின், சந்ததியினர் பொறுப்பு அதிகமாகிறது. இதை ஒரு நல்ல உதாரணத்துடன் கபீர் சுட்டிக் காட்டுகிறார்.

ऊंचॆ कुल मॆं जनमिया, करनी ऊंच न हॊय
सुबरन कलस सुराभरा, साधू निन्दा सॊय


ஊஞ்சே குல் மேன் ஜன்மியா, கர்னீ ஊஞ்சா ந ஹோய்
சுபரன் கலஸ் ஸுரா பரா, ஸாது நிந்தா ஸோய்


பிறப்பு தருமோ பெருமை, ஒருவர் செய்வினையாயின் கடை
சிறப்பு தருமோ பொற்கலம், உரவோர்க்கண் கள்ளாகும் கடை


(உரவோர் =மேன்மக்கள்; சுபரன் என்பது சுவர்ணம் என்பதன் திரிபு)

கள்ளுண்ணாமை, புலால் மறுப்பு, இன்னா சொல்லாமை போன்ற நற்குணங்களை மேன்மக்கள் வாழ்க்கையின் நியதியாகக் கொள்வர். அத்தகைய ஒருவர் விலையுயர்ந்த தங்கக் கலசத்திலேயே படைக்கப் பட்டாலும் கேடு விளைவிக்கும் கள்ளை நிந்திப்பர். அது போல் சமுதாயத்தில் ஒருவனுடைய செயல் கீழ்தரமானதாக இருப்பின் அவன் உயர் குடியில் பிறந்திருந்தாலும் அவன் நிந்தனைக்குரியவனே.

வள்ளுவர் சொல்வதும் அதுவே:

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை


ஆகவே நல்ல சந்ததியருக்கு அடையாளம் குடிப் பெருமைக்கு களங்கம் வராமல் நடந்து கொள்வதே.

சாதாரண மனிதர்களே சாதிபேதங்களில் மாட்டிக் கொண்டு முழிக்கும் போது, சிறுமதியோர் சாதுக்களையும் ஞானிகளையும் விட்டு வைப்பார்களா ? அதிலும் கபீர் இந்த விஷயத்தில் சற்று அதிகமாகவே அடிபட்டவர். ஆனால் ஞானிகள் இத்தகைய சில்லறைத்தனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அறிவுரைத் தேவைப்படுவது சாதாரண ஜனங்களுக்கே. அவர்களுக்கு கபீர் கூறுகிறார்.


जाति न पूछॊ साधु की, पूछि लीजिऎ ज्ञान
मॊल करॊ तलवार की, पडा रहन दॊ म्यान


ஜாதி ந பூசோ ஸாது கீ, பூசி லீஜியே ஞான்

மோல் கரோ தல்வார் கீ, படா ரெஹன் தோ ம்யான்


குலம் பொருட்டு ஆவது என், அடியவர் நிறை தெரிந்து ஏற்று
பலம் பொருட்டு குனை வாள் சிறப்பு, கிடக்கட்டும் அதன் தடறு

(தடறு= ஆயுத உறை ; நிறை =மாட்சிமை ; ஏற்று= போற்று ; குனை வாள் = கூர்மையான வாள் )

போருக்கு புறப்பட்டிருக்கும் ஒருவன் எடுத்துச் செல்ல வேண்டிய வாளின் உறுதியையும் கூர்மையையும் பார்த்து தேர்ந்தெடுப்பானா அல்லது வாளின் உறையையும் அதன் வேலைப்பாட்டையும் பார்த்து எடுத்துச் செல்வானா? மனித உடல் வெறும் கூடு. ஒருவரின் ஆன்மீக சக்தியை இந்தக் கூட்டைப் பார்த்து முடிவு செய்தல் கூடாது. பிறப்பை ஒட்டி அந்த சக்தி நிச்சயிக்கப் படுவதில்லை. அது பல பிறவிகளின் மூலம் தவம் செய்து வந்திருக்கும் ஒரு சக்தி. அத்தகைய மாட்சிமை உடையவரின் குடிப்பிறப்பைப் பற்றி விவாதிப்பதே தவறு. தமிழ் மண்ணில் ஒரு நந்தனார், மகாராஷ்டிரத்தில் ஒரு நாமதேவர் (இவருடய தந்தை தையல் தொழில் செய்தவர்), கர்நாடகத்தில் குயவர்கள் குடும்பத்தைச் சார்ந்த கோரக்கும்பர் இப்படி இறை அனுபூதி பெற்ற மகான்கள் எண்ணிற்கடங்காது.


கண்ணன் கீதையில் சொல்வது (9-32) :

என்னை சரணடைந்தவர், பெண்ணோ, வைசியனோ அல்லது சூத்திரனோ யாராயிருப்பினும் மிக உன்னத நிலையை அடைந்தவர் ஆவர்.


மேற்கண்ட மகான்கள் கண்ணனின் கூற்றை மெய்ப்பித்தவர்கள். எனவே எத்தகைய சந்தர்பத்திலும் குலம் சாதி போன்ற எண்ணங்களை மனதுக்குள் அனுமதிக்கக் கூடாது. இதற்காக குறைந்த பட்சம் ஒன்றை நாம் கடைப்பிடிக்க முடியும். எங்கெல்லாம் சாதி மத சர்சைகள் நடக்கின்றதோ அவற்றை விட்டு விலகியிருந்தாலே ஆன்மீக மார்க்கத்தில் மேலும் ஒரு படி ஏறி விட்டோம் என்று வைத்துக் கொள்ளலாம்.

2 comments:

  1. //எங்கெல்லாம் சாதி மத சர்சைகள் நடக்கின்றதோ அவற்றை விட்டு விலகியிருந்தாலே ஆன்மீக மார்க்கத்தில் மேலும் ஒரு படி ஏறி விட்டோம் என்று வைத்துக் கொள்ளலாம்.//
    ஆஹா, முடிவும் இனிது.

    ReplyDelete
  2. ஒஷோவின் பல நூல்களில்
    கபீரை பற்றி சிறு சிறு குறிப்புகளை வாசித்து இருக்கிறேன்..

    கபீருக்கா ஒரு blog பார்த்தேன்..

    படித்தேன்... பரவசமானேன்.

    வாழ்த்துக்கள்..
    சூர்யா
    துபாய்
    butterflysurya@gmail.com

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி