மந்திரங்களில் சிறந்தது காயத்ரி. ஆண் பெண் வேற்றுமையின்றி எல்லோராலும் எக்காலத்தும் சொல்லப்படலாம். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பழக்கப்படுத்தினால் அவர்கள் பண்பட்டவர்களாகவும் புத்தி கூர்மையுடனும் திகழ்வார்கள் என்றெல்லாம் போற்றாத ஆன்மீகக் குருக்களோ, சமயத் தலைவர்களோ கிடையாது எனலாம். அதன் அர்த்தம் புரிந்து கொண்டு மனம் ஒன்றி சொல்லும் போது அதன் பலன் பலமடங்கு பெருகிடும் என்றும் சொல்கின்றனர். புரிந்து கொள்ள அர்த்தம் என்று பார்த்தால்
Sunday, July 17, 2016
விளக்கில் விளங்கும் விளக்கவர்
மந்திரங்களில் சிறந்தது காயத்ரி. ஆண் பெண் வேற்றுமையின்றி எல்லோராலும் எக்காலத்தும் சொல்லப்படலாம். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பழக்கப்படுத்தினால் அவர்கள் பண்பட்டவர்களாகவும் புத்தி கூர்மையுடனும் திகழ்வார்கள் என்றெல்லாம் போற்றாத ஆன்மீகக் குருக்களோ, சமயத் தலைவர்களோ கிடையாது எனலாம். அதன் அர்த்தம் புரிந்து கொண்டு மனம் ஒன்றி சொல்லும் போது அதன் பலன் பலமடங்கு பெருகிடும் என்றும் சொல்கின்றனர். புரிந்து கொள்ள அர்த்தம் என்று பார்த்தால்
Friday, December 17, 2010
சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை -6
மேடையேறி ஒரு சிறுவன் பாடிக்கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு தானும் பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே உண்டு. சங்கீதத்தின் ஆழமும் தெரியாது, எதிரே அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்களின் மகத்துவமோ பெருமையோ தெரியாது [தெரிந்திருந்திருந்தால் அவன் மேடை ஏறியே இருக்கமாட்டான்].
அவன் பாடி முடித்ததும் பெரியவர் ஒருவர் அவனுக்கு பரிசளித்து வெகுவாகப் பாராட்டி உற்சாகம் அளிக்கிறார். அவரைப் பற்றி பிற்காலத்தில் அறிந்து கொள்ளும் போது வாயைப் பிளக்கும் வண்ணம் இவர் முன்பா அரைகுறையான நான் பாடினேன் என்ற நாணம் தோன்றும். அப்படி பாராட்டி உற்சாகம் தந்து கொண்டிருக்கும் ஒரு பெரியவர் இன்று முன்வந்து நமக்கு சிறப்பு இடுகை தரவிருக்கிறார்.
கபீரையும் வள்ளுவரையும் ஒப்பிட்டு ’60 களிலேயே மேற்படிப்பு ஆராய்ச்சி மேற்கொள்ள விழைந்தவர். அப்படியானால் இரண்டு மொழிகளிலும் அவருடைய தேர்ச்சி எவ்வளவு இருக்க வேண்டும் !
அர்த்தமுள்ள வலைப்பதிவுகள் என்ற பெயரில் ஒரு வலைப்பூவைத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக நூற்றுக்கணக்கானப் பதிவுகளைப் படித்து அவற்றை தமது வலைப்பூவில் இணைப்புகளுடன் சுட்டிக் காட்டி வாசகர்களை ஒரு தரமான வாசிப்பு அனுபவத்திற்கு உயர்த்த பாடுபட்டவர். அவற்றில் வாரம் ஒரு முறை ஒரு சிறப்பான இடுகையை தேர்ந்தெடுத்து அதற்கு மகுடம் சூட்டி வாழ்த்தியவர். ஒரு முறை கபீரின் கனிமொழிகள் இடுகை ஒன்றுக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது.
வலையுலகின் விதவிதமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எல்லா விதங்களிலும் வாசகர்களைக் கவரும் அவருடைய ஆர்வம் பல இளம் தலைமுறையினரையும் வெட்கமுறச் செய்யும். சங்கீதப்பிரியர், அதற்கென ஒரு தனி வலைப்பூ. மூவி ராகாஸ்,மூவிங் ராகாஸ் என்னும் அந்த வலைப்பூவில் கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி இசை கோப்புகளுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட திரைப்படப் பாடல்களின் இசை நுணுக்கத்தை தொகுத்து தருகிறார். தமிழ் மறை தமிழர்நெறி என்று இன்னுமொரு வலைப்பூ. இதை திருமூலர் முதல் சுப்பிரமணி பாரதிவரை இலக்கியம் மற்றும் நடைமுறை சமூகக் கண்ணோட்டத்துடன் பல விஷயங்களுக்கு கருத்து சொல்லும் களமாக வைத்திருக்கிறார். ஆன்மீகம் என்ற பெயரில் ஆன்மீக விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள மட்டுமே ஒரு வலைப்பூ. கவிநயா போன்ற கவிஞர்களின் கவிதை வெளியான சில மணிநேரங்களிலேயே அதற்கு ராகம் போட்டு பாடி யூட்யூபில் வலையேற்றவும் செய்து விடுவார். அவருடைய உற்சாகம் யாவரையும் தொற்றிக் கொள்ளக்கூடியது. நகைச்சுவை உணர்வும் மிக்கவர் என்பதையும் “ உலகமே நாற்றம் .ஒரு தினுசான சாக்கடை தான்” போன்ற வர்ணனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட சிறப்புகளுக்கு உரியவரான திரு சுப்புரத்தினம் என்கிற சூரியநாராயண சிவா அவர்களே இந்த சிறப்பு இடுகையின் ஆசிரியர். அவரை வாசகர் சார்பில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
எச்சரிக்கை : கபீரின் ஈரடிகள் மழைபோல் பொழிய போகிறது. நனைந்து மகிழ வேண்டிய அருள் மழை. அதனோடு இன்னிசைக் காற்றும் சேர்ந்து வாசகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கப் போகிறது.
--------------------------------------------------
கபீரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என அன்பர் திரு கபீரன்பன் பணித்தவுடன் ஒப்புதல் அளித்துவிட்டேன்.
இருப்பினும் கபீரைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டிருக்கிறேனா என்ற ஐயப்பாடு என் மனதிலே என்றென்றுமே உள்ளது. சொல்லப்போனால், 1957 முதல் கபீரின் தோஹாக்களை நான் பிரசார சபா தேர்வுகளுக்குக் கற்க துவங்கின காலத்திலிருந்து, ப்ரவீண் முடித்தபின்னும் சுமார் 1000 தோஹாக்களுக்கு மேல் மனப்பாடமாகத் தெரிந்தபின்னும் அதே நிலைதான். காரணம், கபீரின் பரிமாணம் அத்தகையது.
அவரை எந்த நோக்கிலிருந்து பார்த்தாலும், ஒரு பழுத்த ஆன்மீக வாதியாக, ஒரு தத்துவ ஞானியாக( தேரா சாயீ துஜ் மேய்ன் ஜோ ப்ஹுபன் மேய்ன் பாஸ்) , சமூக சீர்திருத்த வாதியாக, மூடப்பழக்க வழக்கங்களை அழிக்கும் நோக்குடையவராக ( பாஹன் பூஜென் ஹரி மிலை, தொ மைம் பூஜும் பஹாட்), ராம பக்தராக ( जिसी घटी प्रीती न प्रेम कि, पुनि रसना नहीं राम , ते नर इस संसार में उपजि गए बेकार ) எப்படிப்பார்த்தாலும் அவர் ஒரு வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதராக, தெய்வத்துள் வைக்கப்படுபவராக இருக்கிறார்.
உலகத்தே ஆசானைப்போன்றவர் எவருமே இல்லை. அன்னை, தந்தை, உறவினர், நண்பர் யாவருமே இருப்பினும் நல்ல ஒரு குருவினைப்போன்று மிக நெருங்கிய சொந்தம் எவரும் இல்லை. உறவினர் யாவரும் உலக பந்தங்களே. உலகத்திலே ஒருவனை முழுகடிப்பதிலே தான் கண்ணாக இருக்கையிலே குரு ஒருவர் தான் தனது சீடனை இந்த இக லோக இருட்டிலிருந்து வெளிக்கொணர்ந்து அறிவு நிலையாம் ஞான ஒளியைத் தருவதிலே முனைப்புடன் இருப்பார். அப்படிப்பட்ட குரு சாதாரண மனிதனான என்னை ஒரு தேவனாக ஆக்கிவிட்டாரே, அந்த குருவிடம் தினந்தோறும் எத்துணை முறை நான் நன்றி சொல்வேன், என கபீர் சொல்வதைக்கேட்டு இக்கட்டுரையைத் துவங்குவோம்.
பலிஹாரி குரு ஆபணை, த்யொள்ம் ஹாடி கை பார்.
ஜினி மானிஷ் தைம் தேவதா, கரத் ந லாகி பார்.
கபீர் ஒரு இணையற்ற ராம பக்தர். கபீரின் பக்தி ஸாகரத்தில் முழுகியவர் பிறவிப்பெருங்கடல் நீந்தி இறைவனடி நிச்சயம் சேருவார் என்பதில் ஐயம் உண்டோ ?
கபீர் கண்ட ராமன் என எழுதுவோமா ? இல்லை , கபீர் அனுபவித்த ராமன் என சொல்வோமா?
கபீரின் மனதுக்கிசைந்த ராமன் பற்றி எழுதுவோம்.
ராமனைப் புரிந்துகொள்வதிலே அவனைப் போற்றுவதிலே, துதிப்பதிலே இருக்கும் வேற்றுமைகள், அந்த நாமம் நமக்கு என்ன நல்லது செய்கிறது என்று சொல்லும்பொழுது மறைந்து போகிறது.
ஒரு இடத்துக்குப் போகணும், டிரையினிலே போகலாமா, பஸ்ஸிலே போகலாமா இல்லை, ப்ளேனிலே போகலாமா என யோசித்துக்கொண்டிருந்தபொழுது நான் மனசாலேயே அங்க ஆல்ரெடி போய்விட்டேன் என்று சொல்வதையும் நாம் கண்டு அனுபவிக்கத்தான் வேண்டும்.
ஆக, இந்த கட்டுரையில், இரண்டு நிலைகளிலும் ராம பக்தியை, மாயா ரஹித பிரும்மன் ஆகவும், அதே சமயத்தில் மாயா சஹித பிரும்மன் ஈஸ்வரன் ஆகவும் சந்திப்போம். சிந்திப்போம்.
ராம நாமத்தை சொல்ல, உச்சரிக்க, ராமனின் பக்தியில் மெய் மறக்க, கபீர் கூவியதைப்போல் வேறு யாரும் பாமர மக்களுக்குப் புரியும் வண்ணம் சொன்னார்களா என எனக்குத் தெரியவில்லை. அந்த ராம நாமத்தை ஒரு தடவை சொன்னால்,ஆயிரம் தரம் சொன்னால் மாதிரி.
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹாச்ர நாம தச்துல்யம் ஸ்ரீ ராம நாம வராஹனே
நிற்க. ராமனைப் பற்றி கபீர் என்ன சொல்கிறார் என்ற உடனேயே நமது கண்களில், ராமன் ஒரு சீதா ராமனாக, கோதண்டராமனாக, ஜெயராமன், பட்டாபி ராமன்,ரகுராமன், கோசலைராம, கல்யாண ராமன், வேங்கட ராமன் , தசரத ராமன், இப்படி பல்வேறு நாமாக்களைக்கொண்ட ராமனாக சித்தரித்துக் கொண்டால், அதற்கு கபீர் பொறுப்பில்லை.
முதலில் நமக்கு தெரிந்த ராமனின் கதையை கேட்போமா ?
எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடுவதை முதலில் கேட்போம்.
சகுணவாதியான துளசிதாசரைப்பார்த்தால்,அவரைப்போல் ராம பக்தர் இருப்பரோ என்று வியக்கிறோம்.
துளசிதாஸரின் ராம சரித மானஸில் ”துமக் சலத் ராமசந்த்ர” லதாமங்கேஷ்கர் அவர்கள் குரலில்
நாம் காணும் சர்வ குணஸ்ரேஷ்டனான Sarva guna sampannan, ragu kula nayakan Aana ராம பிரான், பக்த தியாகராஜர் எழுபத்தி இரண்டு மேள கர்த்தா ராகங்களிலும் பாடியிருக்கும் இராம பிரான் சகுண பிரும்மன். அவதார புருஷன்.
’யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத’ என்று அதர்மத்தை வென்று தர்மத்தை நிலை நாட்ட வந்த பரம்பொருள்.அந்த பரம்பொருள் ராமனாக அவதாரம் செய்தபொழுது, அப்பாலகன் ராமனுக்கு குலசேகர் ஆழ்வார் பிரபந்தத்தில் தாலாட்டு பாடி மகிழ்வார். ராமனிடம் அவர் காட்டும் வாத்ஸல்யத்துக்கு ஈடு ஏது!
ராகவனனே தாலேலோ இங்கே கேளுங்கள். பாம்பே ஜெயஸ்ரீ
|
Mannupugazh - பெருமாள் திருமொழி (Divya prabhandam)
Lyrics: Kulasekhara aazhwar ;Singer: Bombay Jayashree (Album: Vatsalyam); Raga : Nilambari
மும்மூர்த்திகளில் ஒருவராம் பக்த தியாகராஜரின் கீர்த்தனைகளில், அந்த யதுகுல, ராகவ ராமன், ராஜா ராமன், கோசலை ராமன் அழகிலே மயங்கி, அவனுடைய குணாதிசியங்களை எல்லாம் சொல்லி சொல்லி, பாடி பாடி மகிழ்ந்து, ராமா, நீயே எனக்கு எல்லாம் எனக் கதறி, ராமா ! என்னை இகலோக பந்தங்களில் இருந்து விடுவித்து மோக்ஷமதை தா என பிரலாபிக்கும், கண்ணீர் வடிக்கும் நிலை ஸர்வகுண ஸம்பன்ன ப்ரதீக உபாசனையின் ப்ரத்யக்ஷ உதாரணம்.
ராமா ! நீயே சர்வ குண ஸம்பன்ன தாரி. நீ வா என்று அழைக்கும் பக்த தியாகராஜர் அவர்களைப்பார்ப்போம்.
[Let all be attentive. Oh Ramachandra,please come. Oh Rama the repository of all virtues,please enter. ]
இதே பாடலை பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் குரலில் கேட்க
ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே
ரகுநாதாய நாதாயா சீதாயா பதயே நமஹா
என்று சொல்கிறோம்.
அதே சமயத்தில் இந்த நிர்குண சம்ப்ரதாய கபீர் ராம பக்தியில் திளைத்தவர் , என்று சொல்லும்போது அந்த நிர்குண நிராகார சத், சித், ஆனந்த ஸ்வரூபியாக உள்ள பரபிரும்மத்தையே ஹரி எனவும் ராமன் எனவும் குறிப்பிடுகிறார் எனக்கொள்ளுதல் வேண்டும்.
என்ன சொன்னாலும், சகுண பிரும்ம உபாசனையானாலும், நிர்குணமான இறை தத்துவமாக இருந்தாலும் சரி, ராம என்று ஒரு முறை சொல்லிவிட்டாலும் போதும் பாபங்கள் எல்லாமே நீங்கிவிடும் என்று இருவருமே சொல்கிறார்கள்.
கபீரைப் பொறுத்தவரை, ராம் என்பது ஒரு இறைவனது பேரொளியில் அடைக்கலமாய், தன்னை மறந்து , "தன்னை " இழந்து,அந்த பிரும்மனில் சான்னித்யம் அடைந்து, தானும் அந்த பிரும்மனும் ஒன்றே எனத் தெளிந்த அத்வைத நிலை. தத்துவம். ஆயினும் இறைவனை அடைய அவர் சென்ற வழி, மார்க்கம், பக்தி மார்க்கம். ராஜ யோகம், ஞான யோகம், கர்ம யோகம் யாவையும் விடுத்து,பக்தி மார்க்கத்தைக் கடைப் பிடித்து ஒழுகியவர் கபீர்.
பக்தி திராவிட உபஜை, லாயே ராமனந்த்.
பர்கத் கியா கபீர் நே , சப்த தீப் நவ காண்ட்
என சொல்லப்படும் உக்தி படி,
கபீர் தனது குருவின் உபதேசம் " ராம் " எனப்பெற்று, அதைப் போற்றி தமது தத்துவத்தை, நாரத பக்தி எனும் பெயர் சூட்டி, அதன் அடிப்படை தத்துவமே எல்லா ஜீவ ராசிகளிடம் அன்பு பூண்டு இருப்பதே இறைவனை அடையும் ஒரே வழி என தமது தோஹாக்கள் வழியே சொல்லியிருக்கிறார்.
இறைவனை ப்ரேம ஸ்வரூபி ஆகவும், அன்பின் வடிவாகவும் கண்டு, அன்பின் வழியேதான் அந்த ராமனை அடைவது எளிதான வழி எனவும் சொல்கிறார். அந்த காலத்திய பக்தி மார்க்கங்களுக்கு அப்பாற்பட்ட வழி நாரத பக்தி எனச் சொல்லப்பட்டது.
(# நாரத பக்தி பற்றிய விவரமான குறிப்பு கட்டுரையின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது#)
அவரது ஹரி, அவரது ராம் நிர்குண, நிராகார, அத்விதீய, அத்வைத இறைவன் மாயா ரஹித பிரும்மன் ஆவான். உலக வாழ்க்கையில், லெளகீக ரீதியில் நமக்கெல்லாம் பரிச்சயமான , பிரதீக உபாசனை படி, அந்த பிரும்மதிற்கு ஒரு உருவத்தைக் கொடுத்து, அக்கடவுளை பிரதிஷ்டை செய்து, பூஜை முடிந்தவுடன் அவனை யதா ஸ்தானம் அனுப்பும் பக்தி மார்க்கம் அல்ல அவருடையது. சுருக்கமாக சொல்லப்போனால், அவரது ஹரி, அவரது ராமன், மாயா ரஹித பிரும்மன். ஒரு புரிதலுக்குச் சொல்லபோனால், அது கிட்டத்தட்ட இது போல்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
ஆனாலும், கபீருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.
பஹன் பூஜை ஹரி மிலை,
தொ மை பூஞ்சும் பஹாட் என்பவர் கபீர்.
அவர் வழி தனி வழி. ராமா ராமா என உருகினாலும் அவரது ராமன் நிர்குணம், நிராகாரம், ஸர்வ வ்யாபி,ஸர்வ ப்ரேமி.
நம்முடைய பாரம்பரிய வழக்கம் உருவ வழிபாடு.
உருவ வழியே அருவத்திற்குச் செல்ல நமது யோக மார்க்கங்கள் வழி காட்டுகின்றன.
தியானத்தின் வழியாக, இறைவனை அடையச்சொல்வது ராஜ யோகம். ராஜ யோகத்திலே, யமம், நியமம் என்று தொடங்கி ஆசனம், பிராணாயாமம் ,பிரத்யாஹர்ரம், தாரண, த்யானம், சமாதி என எட்டு நிலைகள் புரிந்துகொள்வதற்கே முடியவில்லையே ? இதை சாதனை செய்வது எங்கனம் ?
அது சரி . யோகங்களைப் படிப்போம் என்றால், ஹட யோகம், லய யோகம், மந்திர யோகம், ராஜ யோகம். ஹட யோகத்திலே ஹ என்றால் ஞானம். ட என்றால் ஆனந்தம். ஹட யோகத்தில் குண்டலினி ஷக்தி யை உசிப்பி விடவேண்டுமாம்.
இந்த மஹா குண்டலினி சக்திதான் மஹா பிரளயித்திலும் இருக்கிறதாம். மூலாதார சக்கிரத்தில் ஒரு முக்கோணம் வடிவத்தில் இந்த குண்டலினி ஒரு பாம்பு போல் மூனரை அடிக்கு சுருட்டி படுத்து கொண்டு இருக்கிறதாம். இதை எழ வைக்க வேண்டுமாம்.( யோவ் ! பயமா இருக்கிறதையா !!)
இது போல் ஸ்வாதிஷ்டான சக்ரம், மணி பூரக சக்ரம், அனஹத் சக்ரம், விஷுத்த சக்ரம், ஆங்கயா சக்கிரம், பிரம்மா ரங்கரா சக்கிரம், ( தலை சக்கிரம் போல் சுழல் கிறதே அய்யா !! இந்த காலத்தில் இதுவெல்லாம் புரிந்துகொள்ள முடியுமா ? அதற்கு எனக்கு நேரம் கிடையாதே !! )
இதுவெல்லாம் போதாது என்று எனது நண்பர் வேங்கட ராமன் சாஸ்திரம் படித்தவர் அவ்வப்பொழுது, ஈடா, பிங்களா, சுஷும்னா நாடிகளைப் பற்றி தெளிவாகச் சொல்கிறேன் என்று குழப்புவார். (என்னை விட்டுடுங்க சார் !!)
அப்ப கபீர் சொல்லுவார்:
[ab mohin raam baroso thera, aur kown kaa karown nihor]
ஹரியை நம்பி அவனை நினை, அது போதும். இந்த கலி யுகத்திலே நாம ஜபம் செஞ்சாலே போதும்.
(அப்பாடா ! ஆளை விடுடா !)
இப்படி, யோகா மார்க்கம், ராஜ மார்க்கம், கர்ம மார்க்கம் எனும் மற்ற மார்கங்களை
எல்லாம் விடுத்து, ராமனுஜரின் சீடராம் கபீர் பக்தி மார்க்கத்தின் நுழைவாயிலை, ராமனது ஸ்மரணையின் மகத்துவத்தை, ராம நாம உச்சாடனத்தை, கபீர் எடுத்துரைத்தது பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் இருந்தது.
எல்லா மார்க்கத்தினைக் காட்டிலும் பக்தி மார்கமே சிறந்தது எனச்சொல்லும் கபீர் பக்தி மார்கத்தில் ராம நாம ஸ்மரணைதனை எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் எளிது என்கிறார்.
कबीर् कहता जात है, सुणता है सब् कोइ
राम् कहे भला होइगा, नहि तर् भला न होइ ||
कबीर् कहै मै कथि गया, कथि गया ब्रम् महेश्
राम् नाव् ततसार् है, सब् काहू उपदेस
எல்லா தத்வங்களின் ஸாரமும் ராம நாமம் தான். இதை
நான் சொல்லவில்லை, பிரும்மாவும் சிவனும் இதே தான் சொல்கிறார். பிரம்மனும் மஹேஸ்வரனும் போற்றும் ராம நாம உச்சாடனைத்தை அதன் மகிமையை கபீர் எடுத்துக்காட்டியதை அடுத்த இடுகையில் காண்போம்.
----------------------------------------
நாரத பக்தி சூத்திரத்தை ஒட்டியக் குறிப்புகளும் கபீரின் பாடல்களில் உண்டு என்பதைப் பற்றிய சுப்புரத்தினம் ஐயா அனுப்பியுள்ள இன்னொரு குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
May I add naradha bhakthi as the contemporaries of Kabir called the same included at least eleven formats that were usual amongst the saguna upasaka krama also.
This would be evident from the ஆஸக்திகள் (aasakthis) detailed below:
1. குண மஹாத்மிய சக்தி [guna mahathmiyamasakthi ]
Govyandha gun gaayiye
thathai bhayee param nirdhan
2. ரூப சக்திrupasakthi
loot chooti khelai vikaraal, ananth kala natvar gopal
3. பூஜா சக்தி poojasakthi
jehi pooja man bhaavai, sow poojanahaar na jaanai.
4. ஸ்மரண சக்தி smaranasakthi.
kahai kabeer jogee aru kangam ai sab jhooti aasa
guru prasaadi rahi chathrig jyun nihachai bhagathi nivaasaa
5. தாஸ்ய சக்தி Dasyasakthi
kahai kabeer sevom bhanvaari.
6. சக்ய சக்திsakyasakthi
( nil )
7. காந்த சக்தி kaanthasakthi.
hari mera priya main raam hi bhahuriya
8. வாத்ஸல்ய சக்தி vatsalyasakthi
hari mera piv , main raam kee bhahuriyaa
9. தன்மய சக்தி thanmayasakthi
virahin piya paavai nagin, jiyaraa thalpai maayi
kai virahin ke meech dhai, kai aapaa dhikalaayi
10. பரவிரஹ சக்தி para virahasakthi
bhahuth thinan ko johathee, bhat thumhaari raam
jiv tharasai thuj milan koon mani naahin vishraam.
11. ஆத்ம நிவேதன சக்தி aathmanivedhanaasakthi
maagho main aisaa aparaadhee, theri bhagathi heth nahin saadhi.
The inclusion of all these sakthis in his poetry does in no way indicate that kabir has astrayed away from his main Nirguna Sampradaya. These scholars say indicate to the extent kabir was influenced or 'taught' by his guru Ramanandh or the scholars of his age.
----------------------------------
வானிலை அறிக்கை : அடுத்த சில நாட்களுக்கு (அருள்) மழை தொடரும் :)))
Monday, May 05, 2008
விளைந்ததோ ஆமிலம், விழைவதோ ஆமிரம்
எழுதும் மை வைக்கப்பட்டிருக்கும் இடமா அது, அதுவும் அந்த அகால வேளையில்! 'உங்கள் தாம்பூல எச்சில் சாயத்தில் கையெழுத்திட்டு கொடுங்கள் போதும்' என்று சொல்லி ரசீது பெற்று செல்கின்றனர்.
பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு கோபண்ணாவுக்கு திடீரென்று விடுதலை. அரசாங்கத்துக்கு சேர வேண்டிய வரிப்பணத்தை பத்ராசலத்து ராமன் கோவில் கட்டுவதற்காக செலவிட்டு விட்டார் என்று தண்டனை அனுபவித்து வந்தார். பணத்தை திருப்பிக்கட்டும் வரையில் சிறைவாசம் விதிக்கப் பட்டிருந்தது.
இவர் ஆந்திர மாநிலத்து மணிவாசகப் பெருமான்.
மறுநாள் காலை பத்ராசலராமன் கோவில் ராமன் காலடியில் அந்த ரசீது காணப்பட்டது. பக்தனுக்காக ஒரு மானுடனின் எச்சிலையும் சுமந்தான் இராமன். கோபண்ணாவின் பக்தியை உணர்ந்த தானி ஷா அந்த நிதியை மீண்டும் கோவில் செலவுக்கென கொடுத்து விடுகிறான்.
பத்ராசல ராமதாஸர் என்று பிற்காலத்தில் போற்றப்பட்ட கோபண்ணாவுக்கு மனதில் ஒரு சந்தேகம்.
தான் பன்னிரெண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய காரணம் என்ன? அதே ராமனின் கருணை இன்னும் முன்பே வந்திருக்கலாமே. பின்னொரு நாளில் அவருக்கு கூறப்பட்ட காரணம், பிந்தைய சென்மம் ஒன்றில் அவர் ஒரு கிளியை பன்னிரெண்டு நாட்கள் கூண்டில் அடைத்து வைத்திருந்தாராம். அந்த கிளியின் மனத்துன்பம் இந்த சென்மத்தில் தொடர்ந்து வந்து பீடித்தது என்று அறிந்து கொண்டாராம்.
தானே புரி வினையால் சாரும் இரு பயனும்
தானே அனுபவித்தல் தப்பாது - தான் நூறு
கோடி கல்பம் சென்றாலும் கோதையே! செய்த வினை
நாடி நிற்கும் என்றார் நயந்து.
என்கிறது நீதி வெண்பா. நம் செய்கைகளின் நல்லதும் கெட்டதும் அதற்குரிய பலனை கொடுக்காமல் விடாது. நிழலைப் போலே பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதைப் பற்றி கபீர் சொல்ல வருவதும் அதைத்தான்.
करता था तो क्युँ रहा, अब काहे पछताये ।
बोये पेड बबूल का , आम कहा से खाये ॥
கர்தா தா தோ க்யூ ரஹா, அப் காஹே பச்தாயே |
போயே பேட் பபூல் கா, ஆம் காஹா ஸே காயே ||
செய்வினை விளையாட்டு வேடிக்கை, பின்னாலே வேதனையே வாடிக்கை
செய் அதிலே விளைந்ததோ ஆமிலம், பின் இவரும் விழைவரே ஆமிரம்.
(செய்வினை= செய்கின்ற செயல்கள், செய்= வயல்; ஆமிலம்= புளியமரம் ஆமிரம் =மா மரம்)
கபீர் சொல்லும் பபூல் என்பது கருவேல மரத்தை குறிப்பது. சொல் நயத்திற்காக ஆமிரம் ஆமிலம் என்று கையாளப்பட்டிருக்கிறது.
What you sow, so you reap. கருவேல மரத்தை (அல்லது புளிய மரத்தை) வளர்த்து விட்டு பின்னர் அதில் மாங்காய் வேண்டும் என்று ஆசைப்பட்டால் எப்படி முடியும் ?
நாம் அனுபவிக்கக் கூடிய சுகதுக்கங்களுக்கான முழு பொறுப்பும் நம்முடையதே. இப்போது வெறுக்க தக்க சூழ்நிலைகளில் இடர்படுகிறோம் என்றால் எப்பொழுதோ அது போன்ற வெறுக்கத்தக்க சூழ்நிலையை பிறர்க்கு நாம் உண்டாக்கியிருக்க வேண்டும், பத்ராசலர் கதையில் கண்டது போல.
மனித உடலை விளைநிலத்திற்கு ஒப்படும் வழக்கம் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. இது வினைநிலம்.
'ஐவருக்குமாம் ஒரு செய் விளைந்தது....' என்பார் திருமூலர்.
'நெஞ்சப்புனத்து வஞ்சக் கட்டையை வேரற அகழ்ந்து' ...என்பார் பட்டினத்து அடிகள்
பல்வேறு வினைகளால் வந்திருக்கும் உடல், மீண்டும் நல்ல வினைகளை ஆற்றி பிறவித் துன்பத்திலிருந்து கரை காண்பதற்கான ஒரு வாய்ப்பு. ஆகவே திருவள்ளுவரும் கூறுவார்.
துறப்பார்மன் துப்புர(வு) இல்லார், உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
அனுபவிக்க வேண்டிய துன்பங்களெல்லாம் அனுபவித்து, அனுபவிப்பதற்கு எதுவும் இல்லாதவன் நிலையான இன்பமாகிய வீடு பேறு அடைய வேண்டிய துறவியாவான்
மானுட உடலே வினைகளின் விளைநிலம். இதில் மனம் உழவன்.
நல்ல உழவன் பாடுபட்டு நிலத்தை சீர் திருத்தி நீர்பாய்ச்சி நல்ல விதைகளை ஊன்றி களை பறித்து தனக்கும் சமூகத்திற்கும் உபயோகமாகும் பொருட்களை உற்பத்தி செய்கிறான்.
மனிதன் செய்யக் கூடிய தர்ம காரியங்கள்தான் நல்ல விதைகள். அவன் மனதில் உருவெடுக்கும் தீய எண்ணங்களும் ஒரு வகை விதைகளே. அவைகள் அதிகம் வளர்ந்தால் முறையான பயிரை தலையெடுக்க விடாத களைகள் எனப்படும்.
களைகளை வளர விட்டு பின்னால் துன்பமுறும் பொறுப்பற்ற உழவன் போல் தீய வினைகளின் பலன் வரும் போது அறிவற்றவன் மனம் துன்பத்தை அனுபவிக்கிறது. கபீரின் இன்னொரு ஈரடி அந்த அறியாமையை கண்டு எள்ளுகிறது.
काया खेत किसान मन, पाप पुन्न दो बीब ।
बोया लूनै आपना, काया कसकै जीब ॥
காயா கேத் கிஸான் மன், பாப் புன் தோ பீப் |
போயா லூனை ஆப்னா, காயா கஸ்கை ஜீப் ||
காயமே நிலம், மனமே உழுநன், பாவ புண்ணியமே வித்தாம்
முன்னதை விதைத்தவன் நீ, பின்னதை என்னோ நோவதாம்
(காயம்=உடல்; முன்னதை = முதன்மையாக குறிப்பிடப்பட்டுள்ள பாவத்தை ; பின்னதை = பின் +அதை = சில தினங்களுக்குப் பிறகு+ செய்த காரியத்தை ; நோவதாம் =வருந்துதல் )
நம் மனதில் ஏற்படும் மிகச்சிறிய எண்ண ஓட்டங்களும் மிக வலுவானவை. அவை அழியாது நின்று அதற்குண்டான வடிவத்தைப் பெறும் என்பதற்கு பாகவதத்தில் பூதனையின் செயலை உதாரணமாகச் சொல்வர்.
உருவில் பச்சிளம் பாலகன், அந்த அந்தண சிறுவன் மகாபலியை யாசகத்திற்காக அணுகிய போது அருகே இருந்த அவன் மகளுக்கு மனதில் தாய்பாசம் பொங்கியது. அவனை அள்ளியெடுத்து உச்சிமுகர வேண்டும் போலிருந்தது. விரைவிலேயே அச்சிறுவனால் தன் தந்தையின் பெருமை சிறுமைபட்ட பொழுது அவனை ஒரேயடியாக அழித்து விடத் துடித்தது அவள் மனது.
மிகச் சிறிய இடைவெளியில் ஏற்பட்ட அந்த மனவோட்டத்தில் எத்தனை வேறுபாடு. இரண்டும் நேரெதிர் துருவங்கள். யுகங்கள் கழிந்தன. இப்போது மகாபலியின் மகள் பூதனை என்ற அரக்கியாக சென்மம் எடுத்திருந்தாள். கம்சனால் ஏவப்பட்ட பூதனை பாலூட்டும் வகையில் குழந்தை கிருஷ்ணனை அழித்துவிடப் பார்க்கிறாள்.
முதலில் எந்த விஷ்ணு அவதார குழந்தையைக் கண்டு எண்ணங்கள் உருக்கொண்டனவோ பின்னர் அதே விஷ்ணுவின் அவதாரத்தில் அதே
எண்ணங்கள் செயல் வடிவம் பெறுகிறது. அவனாலேயே அந்த செயல் வடிவமும் முற்றுப் பெறுகிறது.
நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் அழிவதில்லை. நாமே மறந்து போயிருப்பினும் தக்க காலத்தில் உருப் பெற்று நமக்கு இன்பமோ துன்பமோ கொடுக்கின்றன. இக்கருத்தை சொல்லும் ஒரு நாலடியாரின் பாடலோடு நிறைவு செய்வோம்.
சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே ஆகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத்து என்னை பரிவு (110)
குறையாது கூடாது முறை மாறி போகாது. வர வேண்டிய காலத்தில் வந்தே தீரும் எவராலும் அதை தடுக்கவும் இயலாது. கருவில் உருவாகும் போதே உயிர்க்கு விதிக்கப்பட்டு விட்ட உண்மை . இது உணர்ந்து கொள்ளாமல் துன்பம் வரும்போது அதை எண்ணி வருந்தி என்ன பயன் ? (பரிவு- வருத்தம் )
Saturday, November 03, 2007
நீரோட்டமும் மனவோட்டமும்
Sunday, June 10, 2007
ஈயா மனிதரும் எட்டாப் பழமும்
திருமகள் ஒரு ஊர் சுற்றி. ஓரிடத்தில் நிற்பதை அறியாள். அதனால் உலகத்தாரும் அவள் பின்னே சுற்றுகின்றனர். இந்த ஊர் சுற்றிக்கு ஒரு சிலர் பாடம் கற்பிக்க நினைத்து ஒரு பெட்டியிலோ, பையிலோ, கிணற்றிலோ (இக்காலத்தில் வங்கியிலோ) அடைத்து வைத்து விடுகின்றனர். இதனால் பலருக்கு அவள் கண்ணில் படாமல் கையில் கிடைக்காமல் இருந்து விடுகிறாள். ஆனாலும் பூட்டி வைப்பவர்களுக்கு ஒரு உண்மை புரிவதில்லை. அந்த உண்மையை நாலடியார் எடுத்துச் சொல்லுகிறது.
கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப்படும்।
(பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். இல்லை தானாவது அனுபவிக்க வேண்டும். இரண்டுமில்லாத கருமித்தனம் உடையவன் செல்வம் , வீட்டுக்குள் அழகிய கன்னிப் பெண்களை எவ்வளவு நாள் வைத்து பாதுகாத்தாலும் அவர்கள் மணமாகி கணவன் வீடு போய் விடுவது போலாகும்.)
'துய்த்தல்' அல்லது அனுபவிப்பது என்பது திருமகள் கைமாறிக் கொண்டே இருப்பதற்கான ஒரு வழி। அவளுடைய ஓட்டத்திற்கு துணை போவது. நாம் துய்க்காமல் விட்டாலும் கூட அவள் போய்விடுவாள். இதை யாவரும் அறிவது அவசியம். அனுபவிக்காமல் அவளை இழப்பதை விட அனுபவித்து அவளை வழி அனுப்புவது மேலானது அன்றோ!
பிறருக்கு கொடுத்து உதவாதவர் பற்றி கபீரின் வார்த்தைகளில் பார்ப்போம்। இது வடநாட்டில் மிகப் பிரபலமான தோஹாக்களில் ஒன்று.
बढा हुआ तो क्या हुआ जैसे पेड खजूर
पंथी को छाया नहीं फल लागे अति दूर
படா ஹுவா தோ க்யா ஹுவா, ஜைஸே பேட் கஜுர்
பந்தி கோ சாயா நஹீம், பல் லாகே அதி தூர்
ஒதுங்க இல்லை நிழலே எட்டாதே இச்சைத் தருபழமே
ஈச்சமரம் உயரமாக வளர்ந்து நிற்கும்। அதனடியில் வழிப்போக்கர்கள் ஓய்வெடுப்பதற்கான நிழல் இருக்காது. போகட்டும் அதனுடைய பழத்தைப் பறித்துப் பசியாவது ஆறலாம் என்றால் அதுவும் எட்டாத உயரத்தில் அல்லவோ இருக்கிறது. இந்த மரத்தினால் யாருக்கு என்ன பயன் ? சமூகத்திலே செல்வத்தால் உயர்ந்து பிறர்க்கு உதவாதவர்கள் அத்தகைய ஈச்ச மரத்தைப் போன்றவர்கள் என்கிறார் கபீர். பட்டினத்து அடிகள் அத்தகைய மனிதர்களை ஏன் படைத்தாய் என்று இறைவனிடம் அங்கலாய்கிறார்.
நாயாய் பிறந்திடின் நல்வேட்டை
ஆடி நயம் புரியும்
தாயார் வயற்றில் நரராய்ப்
பிறந்துபின் சம்பன்னர் ஆய்க்
காயா மரமும் வறள் ஆம்
குளமும் கல் ஆவும் என்ன
ஈயா மனிதரை ஏன் படைத்
தாய்கச்சி ஏகம்பனே.
(கல் ஆவும் = கல்லால் ஆன பசு ; சம்பன்னர் = செல்வமெலாம் பெற்றவர்)
கல்லால் வடிவமைக்கப்பட்ட பசு எப்படி பால் தர இயலாதோ அது போல் எல்லா செல்வங்கள் இருந்தும் பிறருக்கு கொடுத்து உதவாதவர்கள் கல்நெஞ்சர்। ஒரு காய்க்காத மரத்தையும் வறண்ட குளத்தையும் போல இருந்தும் இல்லாதவர்கள் அவர்கள்। அத்தகையவரைக் காட்டிலும் ஒரு நாய் பிறவி கொடுப்பின் தன் எஜமானனுக்காக வேட்டையில் உதவி புரிந்து ஒரு பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்ததாகவாவது இருக்கும் என்று காஞ்சியின் ஏகம்பனிடம் முறையிடுகிறார் பட்டினத்தார். கபீரும் நாயை வைத்து பல தோஹாக்களை செய்துள்ளார். ஒன்று இங்கே.
நாய்களின் இனப்பெருக்க முறை, இயற்கை அமைத்திருக்கும் விதம், கண்டு கபீருக்கு ஒரு வேடிக்கையான உதாரணம் தோன்றுகிறது. அதை கருமிகளை கிண்டல் செய்யப் பயன் படுத்துகிறார்.
सूम थैली अरु श्वान भग दोनो एक समान ।
घालत में सुख ऊपजै, काढ़ निकसै प्रान ॥
ஸூம் தைலி அரு ஷ்வான் பக் தோனோ ஏக் ஸமான்
காலத் மேய்ன் ஸுக் ஊபஜை, காட் நிக்ஸை ப்ரான்
உலோபியின் சுருக்குத் தயிலி, ஒக்கும் சுனகன் யோனி
எக்குதலில் ஏகக் களிப்பு, எடுக்கையில் ஏனோ தவிப்பு
(தயிலி= பை, சுருக்குத்தயிலி =பணப்பை . சுனகன் = நாய். யோனி = கரு வாய். எக்குதல் =உள்வாங்குதல், உள்ளிடல்)
செல்வம் வருகையில் காட்டும் சந்தோஷம், கொடுக்க வேண்டும் என்னும் போது உயிரே போகுமளவு துன்பமாய் விடுகிறது என்பதை எத்தனை நகைச்சுவை உணர்வோடு சுட்டிக் காட்டியிருக்கிறார். அவரருகே இருந்து கேட்டவர்கள் சிரிப்பை கற்பனைதான் செய்து கொள்ள வேண்டும். நினைக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் உவமை இது.
Thursday, April 12, 2007
திகம்பரர் நடுவே மடிவாளன்
அத்தகையவர்களின் முக்கிய ஆயுதம் என்ன? ஒருவனை ஆசை வலையில் அடிமைப் படுத்தி தமது சுய காரியங்களை சாதித்துக் கொள்வதாகவே இருக்கும். எனவே புலனின்பங்களைத் துறக்கத் தெரிந்தால் வெகு சுலபமாக அத்தகைய இக்கட்டான நிலைமைகளினின்று விடுபடலாம். இதைக் கபீர் எவ்விதம் உரைக்கிறார் பார்ப்போம்.
कबीरा संगति साधुकी जौ की भूसी खाय
खीर खाँड़ भॊजन मिले ताकर संग न जाय.
கபீரா சங்கதி சாது கீ ஜௌ கீ பூஸி காய்
கீர் காண்ட் போஜன் மிலே தாகர் சங்க் ந ஜாய்
கூழும் உப்பே ஆயினும் கபீரா, நல்லாரிணக்கம் அறிந்திரு
கூட்டும் பருப்பும் கிடைப்பினும் அல்லாரிணக்கம் துறந்திரு.
(அல்லது)
கைப்பிடி அவலே ஆயினும் கபீரா நல்லோர் அவைதனை சேர்ந்திரு
நெய்யொடு விருந்து மணக்கினும் அல்லார் மனைதனை துறந்திரு.
பல தியாகச் செம்மல்கள் பிற்காலத்தில் பெரிய பதவிகள் தம்மைத் தேடி வந்த போதும் அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் வெறுத்து ஒதுக்கினர். அவர்களால் அத்தகைய பொறுப்புகளை நிர்வகிக்க முடியாது என்பதால் அல்ல. பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்னர் தாம் தினமும் சந்திக்கப் போகும் மனிதர்களையும் அத்தகைய பதவிகளைச் சுற்றி வரும் சுயநலமிகளின் எதிர்பார்ப்பும், பூர்த்தி செய்யாவிடில் வரப்போகும் இன்னல்களும் அது ஒரு சகதியான பாதை என்பதை உணர்த்தி விடுகின்றன. பதவிகளால் வரும் சுகங்களைவிட மன துன்பங்களே அதிகம் என்ற காரணத்தால் தவிடு, கூழ் அவல் இவற்றிலேயே திருப்தியுடன் மகிழ்சியுடன் காலத்தை கழித்தனர். அது மேலோர் காட்டும் வழி.
ஆச்சாரியா வினோபா பாவே மகாத்மாவின் அஹிம்சா கொள்கையின் வாரிசாக கருதப்பட்டவர். விரும்பியிருந்தால் எத்தகைய பதவியும் சுதந்தரத்திற்குப் பின் அவர் வகித்திருக்க முடிந்திருக்கும். ஆனால் அவரோ பவுனாரில் (மஹாராஷ்ட்ரா) ஆசிரமம் அமைத்துக்கொண்டு பூதானம், கிராம முன்னேற்றம் என பல உயரிய இலட்சியங்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார். 1951 முதல் 1964 வரை பாதயாத்திரை மூலம் இந்தியா முழுவதும் சுற்றி 42 லட்சம் ஏக்கர் நிலங்களை பூதானமாகப் பெற்று ஏழைகளுக்கு வழங்கச் செய்தார். சம்பல் கொள்ளைக்காரர்கள் அவரது அஹிம்சா முறையினால் ஈர்க்கப்பட்டு 1960 ல் பெருமளவில் சரணடைந்தனர். 1970 க்கு பிறகு தன்னை முழுவதுமாக இறைநாட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டார். எளிமைக்கு உதாரணமான அத்தகையவரின் ஆசிரமத்திற்கு ஒருவர் சென்றிருந்தால் நெய்யும் பருப்புமா மணக்கும் ? ஆனால் அன்பிற்கு அங்கே குறைவிருக்காது. நாலடியாரில் வரும் ஒரு பாடலை இங்கே நினைவு கூறுதல் பொருந்தும்.
கழுநீருட் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்- விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங்காய்.
அரிசி களைந்த கழுநீரில் இட்டு சமைத்த கீரை உணவு என்றாலும் உள்ளன்போடு படைக்கப்பட்டால் அதுவே அமுதமாகும். சிறந்த பொரியல் துவையல் வகைகளுடன் சேர்த்து பரிமாறுகிற நல்ல வெள்ளரிசி சோறு என்றாலும் உள்ளன்பில்லாதவர் கொடுக்க உண்பது எட்டிக்காயை உண்பது போலாகும்.
நற்குணங்களைப் போற்றாதார் நடுவில் ஒருவன் வாழ நேர்ந்தால் அது துன்பம் தருவதே ஆகும்.
கபீரின் இன்னொரு ஈரடி நமது நற்பண்புகளை மேன்மேலும் பலப்படுத்தக்கூடிய நண்பர் வட்டத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
जहां न जाकॊ गुन लहै, तहां न ताकॊ ठावं
धोबी बसके क्या करे, दिगम्बर के गांव
ஜஹா ந ஜாகோ குண் லஹை, தஹா ந தாகோ டாவ்
தோபீ பஸ்கே க்யா கரேன் திகம்பர் கே காவ்
குடிபோக வேண்டா, குணம் போற்றார் நடுவே
மடிவாளனும் எதற்கு ஆடை அறியார் நடுவே.
(திகம்பரர் = ஆடை அணியாதவர்; மடிவாளன் =வண்ணான்)
நல்ல குணங்களை கொள்ளாதோர் ஆடையற்றவரைப் போல். (இங்கே அவதூத நிலைமை அடைந்து ஆடை துறந்தவர்களைப் பற்றி குறிப்பிடுவதாகக் கொள்ளக்கூடாது. திகம்பரர் என்று ஜைன முனிகளில் ஒரு பிரிவு உண்டு. அவர்களும் ஆடை எதுவும் அணிவதில்லை. கபீர் குறிப்பிடுவது கலாசாரத்தால் ஆடை அணியும் பழக்கம் இல்லாதவர்களைப் பற்றி. குழப்பதைத் தவிர்க்கவே ' ஆடை அறியார்' என்று மொழி பெயர்ப்பில் கையாளப் பட்டுள்ளது.)
எங்கே ஒருவனுடைய நற்குணங்களும் திறமைகளும் மதிப்பில்லாத நிலை உள்ளதோ அங்கே அவன் இருந்து அடையப் போவது என்ன? அவர்கள் மத்தியில் வசிப்பதனால் காலம் வீணாகும். அது திகம்பரர் வசிக்கும் ஊரில் சலவைத் தொழிலாளி தொழில் செய்ய முற்படுவது போலாகும். எனவே தன் திறமைக்கும் நற்குணங்களுக்கேற்ப வசிக்கும் சூழலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கபீர் வலியுறுத்துகிறார்.
வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். சர்வ ஜித் வருடத்தில் சர்வ சுப காரியங்களும் ஜெயம் பெறுவதாக.
Sunday, March 25, 2007
குலம் தருமோ பெருமை ?
மனிதகுலம், காணும் எல்லாவற்றிலும் ஒரு உயர்ச்சி அல்லது தாழ்ச்சி கற்பிக்கிறது. இவைகளுக்கு குதிரை, பசு, காளை நாய் பூனை போன்ற விலங்குகளும் விதிவிலக்கல்ல. ஆயிரக்கணக்கில் பணம் கொட்டி உயர் ஜாதி நாய்க் குட்டிகளை செல்வந்தர்கள் வாங்கி செல்வதை காண்கிறோம். அதனுடன் கணிணியில் பதிவு செய்யப்பட்ட அதன் மூதாதையர்களின் வரலாறும் உண்டு. எவ்விதத்திலும், எந்த நிலையிலும் அதன் உயர்ச்சிக்கு குறைவு ஏற்படவில்லை என்பதை நிரூபிக்கவே இந்த ஏற்பாடு.
இப்படி இருக்கையில் தன் இனத்தை மட்டும் விட்டுவைப்பானா மனிதன். 'அவங்க ராஜா பரம்பரை' 'எங்கள் முப்பாட்டனார் திவான் பகதூராக்கும்' என்பன சில, கடந்த கால நிகழ்வுகளிலேயே, பெருமை பேசித்திரியும் பலரது போக்காகும். சாதி சண்டைகள் என்பது பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாகும். இதற்கு எந்த ஒரு தேசமும் விதிவிலக்கு அல்ல. இது வேறுபாடு பாராட்டும் பாமர மனிதருடைய போக்கு. படைப்பு எல்லாவற்றிலும் ஒருமையை ஓர்ந்து, அன்பு போற்றும் ஞானிகள் இதை மாற்ற முயற்சிக்கின்றனர்.
ஆறறிவு கொண்ட மனிதனை அவன் பின்பற்றும் பண்பாடுகளையும் கொள்ளும் கோட்பாடுகளையும் கொண்டே தரம் பிரிக்க வேண்டுமே அன்றி பிராணிகளைப் போன்று பிறக்கும் குடியைக் கொண்டு அல்ல. அவைகளின் குணம் வெறும் மரபு வழியாக நிர்ணயிக்கப் படுகிறது. ஆனால் மனிதனுக்கோ அவனுடைய பூர்வ ஜன்ம கர்மவினைகளை ஒட்டியே குணங்களும் திறமையும் அமைகின்றது.
ஹரிபிரசாத் சௌராசியாவின் புல்லாங்குழல் இசையில் மயங்காதவர்களே இருக்க முடியாது. இவர் சிறுவனாக இருக்கும் பொழுதே அதை கற்க மிக்க ஆர்வம் கொண்டு பல சிரமங்களுக்கிடையே உழைத்து வெற்றி கண்டவர். சிரமங்களுக்கான காரணம் அவருடைய குடும்பத்தில் இசை என்பதின் வாசனை கூட கிடையாது. அவரது தந்தையார் ஒரு குத்து சண்டை வீரர். தன்னைப் போலவே தன் மகனும் அதில் தேர்ச்சி பெற்று முன்னுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர். அந்த குடியிலே ஒரு இசை மேதை பிறக்க வேண்டும் என்பது இறைவன் சித்தம்.
நான்மணிக்கடிகையில் வரும் ஒரு பாடல்:
கள்ளி வயற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று
ஒள் அரிதாரம் பிறக்கும் ; பெருங்கடலுள்
பல் விலய முத்தம் பிறக்கும் ; அறிவார் யார்
நல் ஆள் பிறக்கும் குடி ?
நாம் பொதுவில் பயனற்றவையாகக் கருதும் முள் நிறைந்த கள்ளி, உப்பு கரிக்கும் கடல், காட்டில் வாழும் மான் ஆகியவை கூட பல மதிப்பற்ற பொருள்களை தர வல்லன. அதைப் போன்றே மேன்மக்கள் பிறக்கவேண்டிய குடி இதுதான் என்று எவரும் நிர்ணயம் செய்ய முடியாது.
ஒரு அபூர்வப் பிறவி வந்து தன்னுடய குலத்திற்கே பெருமை சேர்த்துப் போய்விடுகிறது. அதன் பின், சந்ததியினர் பொறுப்பு அதிகமாகிறது. இதை ஒரு நல்ல உதாரணத்துடன் கபீர் சுட்டிக் காட்டுகிறார்.
ऊंचॆ कुल मॆं जनमिया, करनी ऊंच न हॊय
सुबरन कलस सुराभरा, साधू निन्दा सॊय
ஊஞ்சே குல் மேன் ஜன்மியா, கர்னீ ஊஞ்சா ந ஹோய்
சுபரன் கலஸ் ஸுரா பரா, ஸாது நிந்தா ஸோய்
பிறப்பு தருமோ பெருமை, ஒருவர் செய்வினையாயின் கடை
சிறப்பு தருமோ பொற்கலம், உரவோர்க்கண் கள்ளாகும் கடை
(உரவோர் =மேன்மக்கள்; சுபரன் என்பது சுவர்ணம் என்பதன் திரிபு)
கள்ளுண்ணாமை, புலால் மறுப்பு, இன்னா சொல்லாமை போன்ற நற்குணங்களை மேன்மக்கள் வாழ்க்கையின் நியதியாகக் கொள்வர். அத்தகைய ஒருவர் விலையுயர்ந்த தங்கக் கலசத்திலேயே படைக்கப் பட்டாலும் கேடு விளைவிக்கும் கள்ளை நிந்திப்பர். அது போல் சமுதாயத்தில் ஒருவனுடைய செயல் கீழ்தரமானதாக இருப்பின் அவன் உயர் குடியில் பிறந்திருந்தாலும் அவன் நிந்தனைக்குரியவனே.
வள்ளுவர் சொல்வதும் அதுவே:
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை
ஆகவே நல்ல சந்ததியருக்கு அடையாளம் குடிப் பெருமைக்கு களங்கம் வராமல் நடந்து கொள்வதே.
சாதாரண மனிதர்களே சாதிபேதங்களில் மாட்டிக் கொண்டு முழிக்கும் போது, சிறுமதியோர் சாதுக்களையும் ஞானிகளையும் விட்டு வைப்பார்களா ? அதிலும் கபீர் இந்த விஷயத்தில் சற்று அதிகமாகவே அடிபட்டவர். ஆனால் ஞானிகள் இத்தகைய சில்லறைத்தனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அறிவுரைத் தேவைப்படுவது சாதாரண ஜனங்களுக்கே. அவர்களுக்கு கபீர் கூறுகிறார்.
जाति न पूछॊ साधु की, पूछि लीजिऎ ज्ञान
मॊल करॊ तलवार की, पडा रहन दॊ म्यान
ஜாதி ந பூசோ ஸாது கீ, பூசி லீஜியே ஞான்
மோல் கரோ தல்வார் கீ, படா ரெஹன் தோ ம்யான்
பலம் பொருட்டு குனை வாள் சிறப்பு, கிடக்கட்டும் அதன் தடறு
(தடறு= ஆயுத உறை ; நிறை =மாட்சிமை ; ஏற்று= போற்று ; குனை வாள் = கூர்மையான வாள் )
போருக்கு புறப்பட்டிருக்கும் ஒருவன் எடுத்துச் செல்ல வேண்டிய வாளின் உறுதியையும் கூர்மையையும் பார்த்து தேர்ந்தெடுப்பானா அல்லது வாளின் உறையையும் அதன் வேலைப்பாட்டையும் பார்த்து எடுத்துச் செல்வானா? மனித உடல் வெறும் கூடு. ஒருவரின் ஆன்மீக சக்தியை இந்தக் கூட்டைப் பார்த்து முடிவு செய்தல் கூடாது. பிறப்பை ஒட்டி அந்த சக்தி நிச்சயிக்கப் படுவதில்லை. அது பல பிறவிகளின் மூலம் தவம் செய்து வந்திருக்கும் ஒரு சக்தி. அத்தகைய மாட்சிமை உடையவரின் குடிப்பிறப்பைப் பற்றி விவாதிப்பதே தவறு. தமிழ் மண்ணில் ஒரு நந்தனார், மகாராஷ்டிரத்தில் ஒரு நாமதேவர் (இவருடய தந்தை தையல் தொழில் செய்தவர்), கர்நாடகத்தில் குயவர்கள் குடும்பத்தைச் சார்ந்த கோரக்கும்பர் இப்படி இறை அனுபூதி பெற்ற மகான்கள் எண்ணிற்கடங்காது.
கண்ணன் கீதையில் சொல்வது (9-32) :
என்னை சரணடைந்தவர், பெண்ணோ, வைசியனோ அல்லது சூத்திரனோ யாராயிருப்பினும் மிக உன்னத நிலையை அடைந்தவர் ஆவர்.
மேற்கண்ட மகான்கள் கண்ணனின் கூற்றை மெய்ப்பித்தவர்கள். எனவே எத்தகைய சந்தர்பத்திலும் குலம் சாதி போன்ற எண்ணங்களை மனதுக்குள் அனுமதிக்கக் கூடாது. இதற்காக குறைந்த பட்சம் ஒன்றை நாம் கடைப்பிடிக்க முடியும். எங்கெல்லாம் சாதி மத சர்சைகள் நடக்கின்றதோ அவற்றை விட்டு விலகியிருந்தாலே ஆன்மீக மார்க்கத்தில் மேலும் ஒரு படி ஏறி விட்டோம் என்று வைத்துக் கொள்ளலாம்.
Tuesday, February 20, 2007
வேடதாரிகளின் வேடிக்கைகள்
ஒரு சிலர் அறியாமையால் அப்படி நடந்து கொண்டால் வேறு சிலர் தம்மை பிறரை விட அதி புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு நகைப்புக்கு இடமளிக்கிறார்கள். கபீர் குறிப்பிடும் கீழ் கண்ட மனிதன் ஒரு அறிவிலி. அவனுடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?
अहिरन की चोरी करै करॆ सुई का दान
ऊंचा चटिकर दॆखता कॆतिक दूर विमान
அஹிரன் கீ சோரீ கரை கரே ஸுயீ கா தான்
ஊஞ்சா சடிகர் தேக்தா, கேதிக் தூர் விமான்
உலைக்கல்லே திருடுவான், செய்வனே ஊசி யளவு தானம்
உயரே ஏறித் தேடுவான், எதுவரை வந்தது விமானம்
அஹிரன் என்பது கொல்லன் உலைக்களத்தில் பயன்படுத்தப்படும் உலைக்கல். இதுவும் இரும்பால் ஆனது. மிகவும் எடையுள்ளது. காய்ச்சிய இரும்புத் துண்டை இதன் மேல் வைத்தே சம்மட்டியால் அடித்து விரும்பிய வடிவமைப்பை கொண்டு வருவர். இதை ஆங்கிலத்தில் anvil என்று உரைப்பர்.
அடிப்படையில் நம் கவிதை நாயகனுக்கு கொஞ்சம் திருட்டுகுணம் அதிகம். எங்கே வேண்டுமானாலும் சென்று எதை வேண்டுமானாலும் சாமர்த்தியமாக தூக்கிக் கொண்டு வந்து விடுவான். அவனுக்கு உலைக்கல் போன்ற தூக்குவதற்கே சிரமமான பொருள் ஒன்றும் பெரிய விஷயமில்லை. அத்தகையவன் எப்பொழுதோ ஒரு கதை கேட்க நேரும் பொழுது ஏழைகளுக்கு தானம் செய்பவர்களை வைகுண்டத்திற்கு புஷ்பக விமானத்தில் விஷ்ணு தூதர்கள் அழைத்து செல்வார்கள் என்று கேள்விப் பட்டிருந்தான். அவனுக்கும் ஏதோ ஒரு நாளில் ஒரு ஏழைக்கு சிறிய தானம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவன் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. சொர்க்கத்திற்கு டிக்கெட் கிடைத்து விட்டதாகவே நினைக்கிறான். அவன் வீட்டு மாடி ஏறி வைகுண்டம் வானத்தில் எந்த திசையில் உள்ளது என்று தேடுகிறான். விஷ்ணு தூதர்கள் எந்த பக்கத்திலிருந்து வரக்கூடும் என்றும் ஆராய்கிறான். கண்டிப்பாக இவன் புத்திசாலியாக இருக்க முடியாது. அவன் தன் கற்பனை உலகில் வாழ்பவன். ஆனாலும் நகைச்சுவைக்கு குறைவில்லை.
அதிபுத்திசாலிகளின் விதம் இன்னொரு வகை.
माला तिलक तॊ भॆष है , राम भक्ति कुछ और
कहैं कबीर जिन पहिरिया, पाँचॊं राखै ठौर
மாலா திலக் தோ பேஷ் ஹை, ராம் பக்தி குச் ஔர்
கஹை கபீர் ஜின் பஹிரியா, பான்ஞ்சோ ராகை டௌர்
திலகம் மாலை வேடமோ பலே, இராம பக்தியே வேறே
திகழும் பக்தி அவருளே கபீரா, ஐந்தும் அடக்குவார் உள்ளே
'ஐந்தும் அடக்குவாருள்ளே' என்பது ஐம்புலன்களையும் தம் கட்டுக்குள் வைத்திருப்பவர்களை குறிப்பதாகும்.
பலரும் பெரும் பக்திமான்கள் போல திருநீறு அல்லது திருமண், ருத்திராட்ச மாலைப் போன்ற பல சமயச் சின்னங்களைப் பகட்டாக வெளிக்காட்டிக் கொண்டு தினம் முழுவதும் வலம் வருவார்கள். ஆயின் உள்ளத்திலே சிறிதளவும் கட்டுப் பாடின்றி புலன் வழி போக்கிலேயே காலத்தைக் கழிப்பர். இவர்களைப் பொருத்தவரை இறைவன் அவனுடைய இடத்திலிருந்து நமது பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டு நமக்கு அருள் புரிபவன் (ஒரு வேளை அது அவனுடைய கடமை என்றும் நினப்பார்களோ). நாம் வேளைக்கு தக்கபடி கிடைத்ததை அனுபவிப்போம் என்ற வகையில் அவர்கள் போக்கு இருக்கும். செய்கின்ற உபதேசத்திற்கும் செயலுக்கும் ஒரு தொடர்பும் இருக்காது.
ராமகிருஷ்ணர் சொல்லிய கதையில் ஒரு பகுதி. ஒரு பசு தோட்டத்தில் நுழைந்து செடிகளையெல்லாம் மேய்ந்து விடுகிறது. அந்தத் தோட்டம் ஒரு பிராமணனுக்கு சொந்தமானது. அவனுக்கு வந்த கோபத்தில் அடி அடியென்று அடித்து அந்த பசு இறந்து விடுகிறது. பசுவின் சொந்தகாரன் வந்து '"கடவுளுக்கு அருகே" இருக்கும் ஒரு பிராமணனுக்கு இப்படி ஏன் புத்தி போயிற்று என்று சண்டைக்கு வருகிறான். பிராமணன் சளைத்தவனா என்ன ? இதோ பார். மனிதனின் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு தேவதை அதிபதி. கண்ணுக்கு சூரிய சந்திரர்கள், கையிற்கு இந்திரன், காதுக்கு வாயு இத்தியாதி. ஆகவே உன் பசுவை கொன்றது கைக்கு அதிபதியான இந்திரனே. அவனைப் போய் கேள்." என்று சண்டைக்கு வந்தவனை மடக்கினான். சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு, இத்தகைய அதிபுத்திசாலிகளுடன் பேசுவதில் தன் நேரம் விரயமாகும் என்றுணர்ந்த மாட்டின் சொந்தக்காரன் பிராமணனைத் திட்டிக் கொண்டே சென்றுவிட்டான். கோபம் என்ற உணர்ச்சியின் மீது சிறிதும் கட்டுப் பாடற்ற தன் செயலை அந்த பிராமணன் நியாயப் படுத்த முனைவதுதான் நகைப்பிற்கு உள்ளாகிறது. வெளிப்பார்வைக்கு சாத்வீகன் போல காட்சியளித்தாலும் உள்ளே குரூர மனப்பான்மையும் பொய் பேசுதலும் குணமாகக் கொண்ட இத்தகையவர் எப்படி இறைவன் அருளுக்கு பாத்திரமாக முடியும் என்பதே கபீரின் கேள்வி.
உண்மை பக்தியை, சிவ போகத்தை, வளர்த்துக் கொள்ளும் முறையை பட்டினத்தார் கூறுகிறார்.
அஞ்சக் கரம் எனும் கோடாலி கொண்டு இந்த ஐம்புலனாம்
வஞ்சப் புலக்காட்டை வேர் அற வெட்டி வளங்கள் செய்து
விஞ்சத்திருத்தி சதாசிவம் என்கின்ற வித்தை இட்டுப்
புஞ்சக் களை பறித்தேன் வளர்த்தேன் சிவ போகத்தையே
(அஞ்சக்கரம் = நம: சிவாய என்ற நாமம், ஐந்து அட்சரம்; அக்ஷரம் என்பது அக்கரம் ஆகும்
வஞ்சப் புலக் காட்டை = ஐம்புலன்கள் வஞ்சகம் செய்து மனதை திசைதிருப்பும் இவ்வுலகப் பற்றை
புஞ்சக் களை= காமம் என்கின்ற களை)
தூய்மையான பக்தி ஒருவருள் வளரவேண்டுமானால் ஐம்புலன்களையும் வெட்டித் திருத்த வேண்டியது அவசியம் என்பது பட்டினத்தடிகளின் வரிகளிலிருந்தும் தெளிவாகிறது.
Tuesday, February 13, 2007
நிலையா யாக்கை
இப்பதிவை, தமிழ் வலைப்பூக்களை அழகாக தொடுத்துக் கொடுத்து வரும் தேன் கூடு திரட்டியை துவக்கி திறம்பட நடத்தித் தந்த திரு கல்யாணராமன் என்கிற சாகரன் அவர்களின் நினைவிற்கு சமர்ப்பிக்கிறேன்.
கபீரின் சில ஈரடிகள்- நிலையாமைப் பற்றி
क्या करियॆ क्या जॊडिये थॊडॆ जीवन काज
छाडि छाडि सब जात है, दॆह गॆह धन राज
க்யா கரியே க்யா ஜோடியே தோடே ஜீவன் காஜ்
சாடி சாடி சப் ஜாத் ஹை தேஹ் கேஹ் தன் ராஜ்
அற்ப வாழ்வு அவனியிலே அலைவதென்ன அடைந்ததென்ன
சொற்ப தினமே போயின யாவும் தனந்திவரம் கிருகம் தேகம்
(தனம் = செல்வம் திவரம் =அரசு ; கிருகம்=வீடு,மனை ; தேகம்= உடல்)
कबीरा गर्व न कीजीयॆ ऊंचा दॆख आवास
काल परौ भुंई लॆटना ऊपर जम्सी घास
கபீரா கர்வ் ந கீஜியே ஊன்சா தேக் ஆவாஸ்
கால் பரொவ் புயீ லேட்னா ஊபர் ஜம்ஸி காஸ்
செருக்கு வீணில் எதற்கு கபீரா, வானளாவும் மாடம் என்று
எருக்கு விளையக் காண்பர் ஆ ! காலன் கிடத்தும் இடங்கண்டு
काह भरॊसा दॆह का, बिनस जात छिन मांहिं
सास-सास सुमिरन करॊ, और यतन कुछ नाहिं
காஹ் பரோசா தேஹ் கா, பின்ஸ் ஜாத் சின் மான்ஹி
ஸாஸ் -ஸாஸ் சுமிரன் கரோ, ஔர் யதன் குச் நாஹி
நிலையா யாக்கை நின்மாத்திரம் மறைந்துபோம் -மூச்சு
மூச்சிலும் செபிநாமம் முயல்வதற் கில்லை வேறெதுவும்