Friday, February 06, 2009

உழப்பின் வாரா உறுதிகள் உளவோ

கதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம் நம் கண் முன்னே உலவும். நமக்கு தெரிந்த ஒருவரை நினைவூட்டும். பாத்திரத்தின் பெயர் மறந்தாலும் குணாதிசயம் நினைவிலே நின்றுவிடும்.

கபீர்தாஸரின் ஒரு ஈரடியை படிக்கும் போது அப்படி ஒரு பாத்திரம் நினைவில் நிழலாடியது. சிவசங்கரி அவர்களின் அப்பாத்திரத்தை நினைவுக்கு கொண்டு வர அவர்களின் புத்தகத்தை தேடிப் பிடித்தேன்.

குணசித்திரப் பகுதி மட்டும் இங்கே:

”என்னப்பா சௌக்கியம்தானே?” என்று ஒரு சின்னக் கேள்வியைக் கேட்டதும் வழக்கம் போல பொருமித் தீர்த்தான் (பாண்டியன்).

”எங்கங்க நல்லா இருக்க விடறாங்க! நினைச்சதை செய்ய,பேச சுதந்திரமில்லாத வீட்டுல பிள்ளையா பிறந்திட்ட எனக்கு சந்தோஷமா பேச,சிரிக்க யோக்கியதை ஏதுங்க? எஞ்சினீரிங் படிக்கணும்னு விருப்பபட்டேன். அப்பா தடுத்திட்டாரு.சரி விவசாயத்துல புதுசா எதையாவது பண்ணணுவம்னு நினைச்சேன். தாத்தா அதெல்லாம் எதுக்குப்பானிட்டாரு.மனசுக்கு புடிச்சவளை கட்ட அம்மா தடை விதிச்சிட்டாங்க.....செக்கு மாடு கணக்கா வாழ்க்கை ஓடுது.மொத்தத்துல லைஃப் ரொம்ப போருங்க..”

நூற்றுக்கிழவன் மாதிரி அங்கலாய்க்கும் பாண்டியனின் வயசு என்ன தெரியுமா? இருபத்தி மூன்று.

கண்ணியமான,கட்டுப்பாடான,அடக்க ஒடுக்கமான குடும்பம்.வசதியில் எந்த குறையும் இல்லை.

என்ஜீனீரிங் படிக்க விரும்பினேன்,நடக்க விடவில்லை என்று ஆற்றாமை கொள்ளும் பாண்டியன் படித்தது பத்தாவது மட்டுமே.காரணம் படிப்பு ஏறவில்லை.எட்டாவது படிக்கும் போது பணக்கார நண்பன் ஒருவன் ஏற்காடு கான்வெண்ட் பள்ளிக்கு படிக்கப் போக,தானும் அந்த மாதிரி பள்ளிக்கு சென்று படிக்க வேண்டும் என்று-தான் அவ்வப்போது பாடங்களில் வாங்கும் முட்டைகளை மறந்து-பாண்டியன் அடம் பிடித்தான்.

“எதுக்குடா தம்பி? எங்களுக்கு இருக்கிறவன் நீ ஒருத்தன் தானே...இங்கே இல்லாத படிப்பா?” என்றார் தந்தை

“நிச்சயம் இல்லாத படிப்புதான். அந்த கான்வெண்டுல படிச்சா என்ஜினீரிங் கல்லூரியிலே இடம் சடக்குன்னு கிடைக்குமாம்,ரவி சொன்னான்.”

“அந்த படிப்பெல்லாம் உனக்கெதுக்கு? உன்னைப் பிரிஞ்சு உங்கம்மா இருக்க மாட்டா...”

பேச்சு அத்தோடு முடிந்தது. ஆனால் ‘ஆசைப்பட்ட படிப்புக்கு அப்பா சம்மதிக்கவில்லை என்று முனகத் துவங்கி,அதையே சாக்காக வைத்து பத்தாவதோடு நிறுத்தினான்.

விவசாயத்திலும் அதே கதைதான். நிலத்தில் இறங்கின அன்றே டிராக்டர் அது இது என்று பட்டியல் போட்டவனிடம் பழங்கால மனிதரான தாத்தா “முதல்ல தொழிலை சரிவர புரிஞ்சுக்க அப்புறமா பாக்கிய பேசிக்கலாம்”என்றதும் விவசாயம் பற்றிய ஆர்வம் புஸ்வாணமாயிற்று.

பாண்டியன் யோசிக்காமல் தட தடவென்று திட்டம் தீட்டுவதில் மன்னன். அதைக் கேட்டு யாராவது இது சாத்தியமா? என்று புருவத்தை தூக்கினால் போயிற்று- அதோடு அந்த விஷயம் டமால்.அடுத்த விஷயத்திற்கு தாவி விடுவான்.


(அத்யாயம் 6 - சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது ? வானதி பதிப்பகம் 1991)

இளைஞர்களின் பெரும்பாலானோர் போக்கு இப்படித்தான் இருக்கிறது. கஷ்டங்களை அறியாததால் குறிக்கோள் என்று பிரமாதமாக ஒன்றும் இருப்பதில்லை. எனவேதான் சக தோழர்களைக் கண்டு கண்டதே காட்சி கொண்டதே கோலமாக திகழ்கிறார்கள்.கடின உழைப்பு அதன் மேன்மை இவற்றைப் பற்றிய ஆழமான உணர்வுகள் எதுவும் அவர்களிடம் இருப்பதில்லை. பலர் சோம்பேறிகளாய் விடுவதற்கும் அந்த வசதியே காரணம்.

“அவன் இந்த பக்கத்து துரும்பை கூட எடுத்து அந்தண்டை போடமாட்டான்” என்று சிலரைப் பழித்துக் கூறக் கேட்டிருக்கிறோம்.

அதையே கபீர் ’விரல்களை கூட அசைக்க விருப்பமில்லா சோம்பேறிகள்’ என்று சொல்கிறார்.

श्रम ही ते सब कुछ बने,बिन श्रम मिले न काहि ।
सीधी अंगुली धी जम्मो, कबहूं निकसै नाही ॥


உழைப்பா லுருவாகும் யாவும்,உழைப்பின்றி வருவன இல்லை
விறைத்த விரல்கள் எவையும், பற்றியப் பொருட்களு மில்லை


கீழே கிடக்கும் ஒரு சாதாரண பொருளை எடுத்து மேசை மீது வைப்பதற்கு கூட குனிந்து,விரல்களை மடக்கி பொருளை பற்றி எடுக்க வேண்டியிருக்கிறது.

விரல்கள் விறைத்திருப்பது என்பது செயலில் விருப்பமற்ற நிலையை குறிக்கிறது.

நம்மூர் மொழியில் சொல்வதானால் இவர்கள் உரித்த வாழைப் பழம் கேட்பவர்கள். கபீர்தாஸரின் ஈரடியை வாழைப்பழ உவமையை வைத்துச் சொல்வதானால்

உழைப்பா லுருவாகும் யாவும்,உழைப்பின்றி வருவன இல்லை
விறைத்த விரல்களால் யாரும்,உரித்த பழங்களு மில்லை


(இங்கே பழத்தை ஞானத்திற்கும் விறைத்த விரல்களை விருப்பமற்ற மனப்போக்கிற்கும் உதாரணமாகக் கொள்ளவும்)

மனம் ஒரு விஷயத்தில் நாட்டம் கொள்ளாது போனால் அது முக்கியமான கடமைகளையும் தள்ளிப்போடச் செய்யும்.அது உழைப்பிலே கவனம் குன்றியதற்கான அறிகுறி.
அப்படி ஒரு கவனக்குறைவு இயற்கையின் நியதியில் ஏற்பட்டால் என்னவாகும் ?

உழைப்பு என்பது இறைவனின் வடிவம் அல்லது இயற்கையின் நியதி என்பர் பெரியோர்.அண்டத்தில் கோள்கள் யாவும் ஒரு நியதியின் படி தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. பருவ காலங்களும் அதற்குரிய காலத்தில் வந்து போகின்றன.நம்முடைய உத்தரவுக்கு காத்திராமலே இருதயம்,சுவாச உறுப்புகள் ஜீரண உறுப்புகள் யாவும் விடாமல் தத்தம் கடமையை செய்து வருகின்றன.

மனிதனுக்கும் உழைப்பு விதிக்கப்பட்டிருக்கிறது. அதுவே இறைவனைத் தேடுவது. ஆனால் மனமே ஒரு வில்லங்கமாக குறுக்கே நிற்கிறது. அது பாம்பின் வாய் தவளை போல் மாய வலையில் விழுந்து ஆன்ம சாதனையை விட்டு பிறவியை வீணடிக்கிறது.

எனவே தான் பட்டினத்தார் சொல்கிறார்;

அற்புதமாம் இந்த உடல் ஆவி அடங்கும் முன்னே
சற்குருவைப் போற்றித் தவம் பெற்று வாழாமல்
உற்பத்தி செம்பொன் உடைமை பெரு வாழ்வை நம்பிச்
சற்பத்தின் வாயில் தவளை போல் ஆனேனே.


கபீர் ஞானியாக இருப்பினும் தன் தொழிலான துணி நெய்வதை விடாது நடத்தி வந்தார்.ஒருமுறை கோவிலிலிருந்து ராம்லாலாவுக்காக புது வஸ்திரத்திற்கான வேண்டுகோள் வந்தது.உற்சாகத்தோடு தன்னை ராம செபத்தில் மறந்து கபீரும் துணி நெய்து கொண்டே இருந்தார். அவரது மகன் ”போதுமப்பா.நீர் நெய்து இருப்பது அந்த விக்கிரகத்திற்கு வேண்டியதை விட பல மடங்கு மிகப்பெரியது” என்று சொல்லி அவரை நிறுத்தினான். அதை அப்படியே வெட்டிக் கொடுத்து “போ உடனே இதை கோவிலுக்கு சென்று கொடு “என்றார் கபீர்.

“இவ்வளவு பெரியது எதற்கு?” என்று கேட்டான் மகன்.“பரவாயில்லை,நீ போய் கொடு” என்று அனுப்பி வைத்தார்.அங்கே சென்று ராம்லாலாவுக்கு அணிவித்த போது நெய்யப்பட்டத் துணியின் அளவு மிகச் சரியாக இருந்தது !

கபீர் சுட்டிக்காட்டியது என்ன? கடவுளுக்கென்று நீ செய்யும் எதுவும் அதிகமாகி விட முடியாது.அவன் அத்தனையையும் ஏற்று தனக்குள் அடக்கிக் கொண்டுவிடுவான்.அதனால் வாழ்நாள் முழுதும் அவனுக்காகவே வாழலாம். அதனால் நமக்கு கிடைக்கப்போவது ஆனந்தமே.

அந்த ஆனந்தத்திற்காக உழைக்கும் வழியை பட்டினத்தார் சொல்கிறார்.

உழப்பின் வரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையுறவு வுளவோ
அதனால்
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற அகழ்ந்து போக்கி தூர்வை செய்து

அன்பென் பாத்தி கோலி முன்புற (5)
மெய்யெனும் எருவை விரித்தாங்கு ஐயமில்
பத்தித் தனிவித்து இட்டு நித்தலும்
ஆர்வத் தெள்நீர் பாய்ச்சி.......
.................
.................
சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பைய பழுத்துக் கைவர (25)
எம்மானோர்கள் இனிதினிது அருந்திச்
செம்மாந்திருப்பச்

அவரே மேற்கொண்டு இதில் ஈடுபாடு இல்லாமல் காலம் கழிப்பவரைப் பார்த்து தொடர்கிறார்

சிலர் இதின் வாராது
மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கிக்
காமக் காடு மூடித் தீமைசெய்
ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக (30)
.......
.......
துன்பப் பலகாய் தூக்கிக் பின்பு
மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து
தமக்கும் பிறர்க்கும் உதவாது (40)
இமைப்பில் கழியும் இயற்கையோர் உடைத்தேபட்டினத்து அடிகள் உழப்பின்வாரா உறுதிகள் உளவோ என்று சொல்லும் போது வெறும் வெளி வாழ்க்கைகாக மட்டுமில்லாமல் உள்முகமாக செய்ய வேண்டிய சாதகனின் உழைப்பையும் குறிக்கிறார்.

மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் எந்த செயலும் உழைப்புதான். Ramakrishna was inactive outside but intensely active inside whereas Vivekananda was intensely active outside but totally inactive inside என்று சொல்கிறார் சுவாமி சித்பவானந்தர்.

வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கு உடல் உழைப்பு தேவைப்படுகிறது. அருட்பசி வரும் போது உழைப்பு மனதால் செய்யப்பட வேண்டியதாகிறது.

பட்டினத்து அடிகள் போல ஞானியல்ல திம்மக்கா.

படிப்பறிவற்ற இவர் மணமாகி குழந்தை பேறு இல்லாமல் பல நிந்தனைகளைக் கேட்க நேர்ந்தது. பலர் வற்புறுத்தியும் இன்னொரு திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார் கணவர் சிக்கையா.கணவனும் மனைவியுமாக வாழ்க்கைக்கு ஒரு பொருள் தேடினர்.

தென்னை மரத்து மட்டை விழுந்த பின்பும் அது கிளைத்த இடம் மரத்தில் ஒரு வடுவாக நிற்கிறது. அது போல தமக்கு பின் இந்த சமுதாயம் த்ம்மை நினைவில் வைக்க வேண்டும் என்று விரும்பினர்.

குழந்தை வரம் வேண்டுவது எதற்காக? பிற்காலத்தில் தமக்கு ஆதரவாக இருப்பர் என்றுதானே. நமக்கு மக்கள் இல்லாமல் போனால் என்ன மரங்களையே குழந்தைகளாக வளர்ப்போம்.அவை பலருக்கும் பலகாலத்துக்கும் ஆதரவு தருமே என்ற எண்ணம் தோன்றியது. எண்ணம் உடனே செயல் வடிவம் கொண்டது.

அருகே இருந்த பாறை பெயர்க்கும் க்வாரியில் கல்லுடைத்து தினசரி கஞ்சிக்கான வருவாய் சேர்த்தார் திம்மக்கா. தேக நலம் சரியில்லாத சிக்கையா ஆடுகளை மேய்த்து வந்தார்.எஞ்சிய நேரத்தில் கணவனும் மனைவியுமாக ஆலமரத்து கன்றுகளை பதியன் செய்து மழைகாலத்தில் நட ஆரம்பித்தனர். முதல் வருடம் பத்து அடுத்த வருடம் பதினைந்து அதன்பின்னர் இருபது என்று கன்றுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே சென்றனர்.(மூன்றாவது வருட கடைசியில் பராமரிக்கப்பட்ட கன்றுகள் 45)

அப்படி, ஹுலிக்கல் மற்றும் கடூருக்கு இடையே இருக்கும் நான்கு கி.மீ நீளமுள்ள அப்போதைய மண் சாலையில் அவர்கள் வளர்த்த குழந்தைகள் 294! நாற்பது வருடங்களுக்கு முன் அவைகளை காப்பாற்ற குடம் குடமாக நீரை சுமந்து மேலும் கீழுமாக தினம் பலமுறை அந்த சாலையில் நடந்திருக்கிறார்கள். முதல் வருடத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் நீரூற்றுவது அவசியம்.மரக்கன்றுகள் அதிகரிக்கும் போது நீரூற்றும் முறை நாட்களும் மாறி மாறி வரும். அதனால் தினமும் நீர் குடத்தை இடுப்பில் ஒன்றும் தலையில் ஒன்றுமாக பல கிலோமீட்டர் நடப்பது வாடிக்கையாய் போனது.

மேலும், ஒவ்வொரு மரக்கன்றையும் ஆடுமாடுகள் தின்றுவிடாமல் இருக்க சுற்றிலும் முள்ளை வெட்டி போட்டு பாதுகாத்து வந்தனர். அப்படிப்பட்ட பாதுகாப்பு பத்து வருடங்கள் வரை கூட தேவைப்படுமாம். அன்று அவர்களைக் கண்டு சிரித்தவர்கள் உண்டு. ஆனால் உதவியவர்கள் இல்லை.

அமைதியாக ஒரு வேள்வி நடத்திக் கொண்டிருந்தனர் சிக்கய்யாவும் திம்மக்காவும். மனம்,வாக்கு,காயம் அந்த ஒரே செயலில் ஈடுபட்டிருந்தது.
இன்று அந்த மரங்கள் ஆயிரக்கணக்கான பறவைகள் தங்குவதுவதற்கு இடமும் உணவும் கொடுப்பது மட்டுமன்றி ஆடுமாடுகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் நிழலும் தந்துதவுகின்றன. மரங்களின் இன்றைய மதிப்பு 15 லட்ச ரூபாய்கள். அவைகள் அப்பகுதியின் மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு உதவியிருக்கின்றன. இவ்வகையில் அவைகளால் சுற்று சூழலுக்கு ஒரு வருடத்தில் கிடைக்கும் பயனோ பல கோடிகளுக்கும் மேல் என்கிறது FAO, சர்வதேச நிறுவனமான Food Agriculture Organisation .

திம்மக்கா 1991ல் கணவனை இழந்தார். 1995-லிருந்து அவர்களது உழைப்பின் பெருமை உலகுக்கு தெரிய ஆரம்பித்தது. பல தேசீய சர்வதேச பரிசுகள் குவியத் தொடங்கின. அவற்றின் பொருள் அவருக்கு புரியவில்லை. அவற்றை தன் குடிசையில் வைத்துக்கொள்ள இடமும் இல்லாமல் திகைக்கிறார் திம்மக்கா.அவருடைய வாழ்க்கை முறையில் எந்த அவருடைய துக்கம் தன் கணவன் இவற்றை பகிர்ந்து கொள்ள இல்லையே என்பது தான்.முடிந்தால் தன்னுடைய சிறு கிராமத்திற்கு ஒரு மருத்துவ மனை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. அதற்கு மேல் ? அடுத்த பிறவியில் ஒரு மரமாக பிறக்க வேண்டும்.

இதை விட சித்த சுத்தி உடைய ஒரு விண்ணப்பம் இருக்க முடியுமா? பலன் கருதாத உழைப்பில் தன்னைத் தேய்த்து கொண்ட அவரும் ஒரு யோகிதான்.

மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் பிறரது நன்மைக்காக செலவழிக்கப்படும் போது அது பயனுள்ள உழைப்பாகிறது. அங்கே லாபநஷ்ட கணக்கு இல்லை.அப்படி செய்யும் போது அதுவே இறைவன் ஆராதனையாகிறது.

ஆன்மீகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னலமற்ற உழைப்பின் மூலம் ஆன்மீகத்தை கடைபிடிக்கும் வழியை திம்மக்கா நமக்கு புகட்டி இருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.

16 comments:

 1. //ஆன்மீகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னலமற்ற உழைப்பின் மூலம் ஆன்மீகத்தை கடைபிடிக்கும் வழியை திம்மக்கா நமக்கு புகட்டி இருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.//

  ஆன்மீகம் நம்முள்ளே இயறகையாகவே இருக்கிறது.மேலே இருக்கிற களிம்பை சுத்தப்படுத்தினால் போதும்.
  அருமையான உதாரணம். அந்த யோகிக்கு நமஸ்காரங்கள்.

  ReplyDelete
 2. बिन श्रम...
  பீனா என்று ஹிந்தியில். மராத்தியில் பீன என்று சுருங்குகிறதா? இல்லை வேற கிராமர் விஷயமா?

  ReplyDelete
 3. கபீரின் தோஹா அமைந்திருப்பது மராத்தி மொழியிலன்று.
  ‘நாஹி’ போன்ற சொற்கள் அவ்வாறு தோன்றச் செய்கின்றன.
  ‘பிநா’ உரைநடை வழக்கம்; ‘பிந்’ கவிதையில்.
  ‘ஜல் பிந் மச்லீ’ என மீரா பாயீ பாடுகிறார்.

  தேவ்

  ReplyDelete
 4. வாங்க திவா,
  //மேலே இருக்கிற களிம்பை சுத்தப்படுத்தினால் போதும் //

  ராமகிருஷ்ணர் சொல்வது போல் மேலே மூடியிருக்கும் அழுக்கு போனால் இரும்பை காந்தம் தானே இழுக்கும்.

  தங்களுடைய இன்னொரு கேள்விக்கு தேவராஜன் ஐயாவே பதில் சொல்லி விட்டார்.

  ReplyDelete
 5. வருக தேவராஜன் ஐயா,

  திவா அவர்களின் கேள்விக்கு அளித்த விளக்கத்திற்கும் சேர்த்து நன்றி

  ReplyDelete
 6. //பாண்டியன் யோசிக்காமல் தட தடவென்று திட்டம் தீட்டுவதில் மன்னன். அதைக் கேட்டு யாராவது இது சாத்தியமா? என்று புருவத்தை தூக்கினால் போயிற்று- அதோடு அந்த விஷயம் டமால்.அடுத்த விஷயத்திற்கு தாவி விடுவான்.//

  ப‌ல‌ரின் நிலைமை!!!!

  க‌பீர‌ண்ப‌னின் க‌ருத்தாழ‌ம் மிக்க‌ ப‌திவுக‌ளில் இதுவும் ஒன்று, இன்னும் நிறைய‌ உங்க‌ளிட‌ம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 7. தருவர் பல் நஹி காத் ஹை சர்வர் பியத் ந பானி

  எனும் தோஹாவில் நல்லோர் வாழும் வாழ்க்கையை மரத்திற்கும் நதிக்கும் ஒப்பிட்டுச்
  சொல்லியிருக்கிறார். எவ்வாறு மரம் தன்னில் பழுக்கும் பழங்களைத் தான் உண்பதில்லையோ எவ்வாறு நதி தன்னிடத்தே ஓடுகின்ற நீரைத் தான் பருகுவதில்லையோ
  அதுபோலவே தனக்கென வாழாப் பிறர்க்காகவே வாழ்ந்து மனிதகுலத்திற்கு ஒரு உதாரணமாகத் திகழும் திம்மக்காவைப் பற்றி நன்கே எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

  வாழ் நாள் முழுவதும் பிறர்க்காக வாழ இயலாவிடினும், வாரத்திலொரு நாளாவது
  பிறர்க்காக வாழ இயன்றால் சமூகம் எப்படியெல்லாமோ மாறிவிடும்.


  முடியுமா எனத்தெரியவில்லை.


  சுப்பு ரத்தினம்.
  ந்யூ ஜெர்ஸி.

  ReplyDelete
 8. வருக தேனீ

  // இன்னும் நிறைய‌ உங்க‌ளிட‌ம் இருந்து எதிர்பார்க்கிறோம் //

  அவன் போடும் பிச்சை அவன் இச்சை உள்ள வரைத் தொடரும் :)

  பாராட்டுதலுக்கு நன்றி

  ReplyDelete
 9. நன்றி சுப்புரத்தினம் ஐயா,

  //வாரத்திலொரு நாளாவது
  பிறர்க்காக வாழ இயன்றால் சமூகம் எப்படியெல்லாமோ மாறிவிடும் //

  மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம். முன்பு கைப்பிடி அரிசித் திட்டம் என்று ஒன்றை பல ஊர்களிலும் அந்தந்த ஊர் கோவில் மூலமாக நடத்தி வந்தனர். அதுபோல கோவில்களில் அரிசி உண்டி என்று வைத்து பூவுக்கு செலவழிப்பதை அரிசியாக உண்டியலில் சேர்ப்பித்தால் கோவில் மூலமாகவே தினந்தோறும் அன்னதானம் செய்யலாம்.

  பெரியவர்கள் பலவழிகளை சொல்லிச் சென்றிருக்கின்றனர். அதை நடைமுறைப் படுத்துவதில்தான் சிரத்தையில்லை.

  தங்கள் மேன்மையான கருத்துகளுக்கு நன்றி

  ReplyDelete
 10. இதை விட சித்த சுத்தி உடைய ஒரு விண்ணப்பம் இருக்க முடியுமா? பலன் கருதாத உழைப்பில் தன்னைத் தேய்த்து கொண்ட அவரும் ஒரு யோகிதான்

  உண்மைதான். ஒரு திம்மக்கா நூறு ஹார்வேர்ட் பலகலைகழகத்துக்குச் சமம்.

  ReplyDelete
 11. நல்வரவு தி.ரா.ச. ஐயா

  //ஒரு திம்மக்கா நூறு ஹார்வேர்ட் பலகலைகழகத்துக்குச் சமம்//

  கல்வியறிவால் வருவதல்ல சாதனை என்பதனை ’நச்சு’னு சொல்லிட்டீங்க.
  நன்றி

  ReplyDelete
 12. //ஆன்மீகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னலமற்ற உழைப்பின் மூலம் ஆன்மீகத்தை கடைபிடிக்கும் வழியை திம்மக்கா நமக்கு புகட்டி இருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.//

  பதிவுக்கு இந்த முடிப்பு எல்லா அலங்காரமும் முடிந்து கடைசியில் கிரீடம் சூட்டுவது போல அமைந்து விட்டது.

  சகோதரி திம்மக்கா போன்றோர் தமது நித்ய வாழ்க்கையையே பிறருக்கு வழிகாட்டலாகவும், வரலாறாகவும் கொண்டுள்ளனர். கடவுள் நேசிக்கக் கூடிய அவருக்கு மிகவும் பிடித்தமான குழந்தைகள் இவர்களே தான் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

  அவரைப் பற்றித் தெரியவைத்த
  தங்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 13. நன்றி ஜீவி ஐயா,

  வரவிற்கும் பாராட்டலுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 14. //அங்கே லாபநஷ்ட கணக்கு இல்லை.அப்படி செய்யும் போது அதுவே இறைவன் ஆராதனையாகிறது.//

  அழகாகச் சொன்னீர்கள். திம்மக்கா அவர்களின் கதை மனதை நெகிழ்த்தி விட்டது. மிக்க நன்றி.

  ReplyDelete
 15. கபீரன்பன்.. உங்கள் கட்டுரையின் தலைப்பு உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? என்றிருக்க வேண்டும். நான் படித்த பள்ளியின் லோகோவில் இருக்கும் வாக்கியம் இது...

  ReplyDelete
 16. நல்வரவு கானகம்.

  ///உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? என்றிருக்க வேண்டும்.///

  உழப்பு என்பது உழ என்னும் வேர் சொல்லிலிருந்து வருவது. அகராதி விளக்கம் கீழே

  {உழ (p. 124) [ uẕa ] , VII. v. t. practise, learn by practice, பழகு; 2. conquer, வெல்லு; v. i. suffer, undergo penance, வருந்து; 2. be accomplished in any art, பழகு; 3. labour hard, exert, உழை.

  உழப்பு, v. n. practice, habit, exercise, energy, perseverance, mental disquiet.

  உழப்பாளி, s. a persevering man; an energetic man }

  மேலும் பாடலின் இரண்டாவது அடியில் ’கழப்பு’ என்று வருவதால் எதுகையின் அவசியம் கருதி உழப்பு என்ற சொல்லைக் கையாள காரணமாயிருக்கலாம்.

  தாங்கள் குறிப்பிட்டிருப்பது போல பெரும்பான்மையோர் ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என்றே கருதுகிறார்கள்.
  வரவுக்கு நன்றி

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி