“தோன்றிற் புகழொடு தோன்றுக.”
ஒரு வகுப்பில் படிக்கும் அனைவரும் முதல் ராங்க் வாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது போலத்தான் இதுவும் என்று பலமுறை நினைத்ததுண்டு.
எந்தத் துறையில் பார்த்தாலும் சிலர் தங்களது அயராத உழைப்பால் அதில் புகழ் பெற்று திகழ்கின்றனர். பெரும்பான்மையான பலர் அந்த உயரத்தை அடைய முடியாமல் பல இடை நிலைகளிலேயே நின்று போகின்றனர்.
இந்த உண்மை வள்ளுவருக்குத் தெரியாமலா இருந்திருக்கும் ?
பின் எதற்காக ”அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று“ என்று சொன்னார் ?
புகழ் என்கிற வார்த்தைக்கு இன்றைய கண்ணோட்டத்தில் நாம் பொருள் கொள்ள விழைவதால் வரும் குழப்பமே இது எனக்கொள்ளலாம்.
மின்னஞ்சலில் பலமுறை வலம் வந்த ஒரு செய்தியின் சாராம்சத்தை இங்கே பார்ப்போம்.
1963-ல் பௌதிகத்திற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யார்?
1981 ல் ஞான பீட விருது பெற்ற எழுத்தாளர் யார் ?
1998 சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் பரிசு பெற்ற நடிகர் யார் ?
2004ல் நாடகத்துறையில் கலைமாமணி விருது பெற்றவர் யார்?
இந்தியாவின் ஆறாவது ஜனாதிபதி யார் ?
இவற்றில் எதற்குமே நமக்கு விடை தெரியாது என்றால் யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை. மேலே உள்ள கேள்விகளின் விடைக்குரிய நபர்கள் யாவரும் மிகப்பெரிய பிரபலங்கள் தான். என்ன ! நமக்கு கொஞ்சம் மறதி அல்லது அசிரத்தை. அவ்வளவுதான் :(
இப்போது வேறு சில கேள்விகளை கவனிப்போம்.
பள்ளியிலும் கல்லூரியிலும் உங்கள் மனங்கவர்ந்த ஆசிரியர் யார் ?
உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு உதவி செய்த நபர் யார் ?
நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருந்த சம்பவம் எது? அதற்கு காரணமானவர் யார் ?
வழிகாட்டியென நீங்கள் மதிக்கும் ஒரு நபர் யார் ?
மேற்கண்ட கேள்விகளுக்கு ஒவ்வொருவரிடமும் தயக்கமற்ற விடைகள் இருக்கும். ஆனால் விடைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. விடைகளில் குறிப்பிடப்பெறும் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு வகையில் பாராட்டுக்குரிய செயலாற்றியவர்கள் தாம்.
பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள் மூலமாக அறியப்படும் ஒரு பெரும் தலைவராகவோ, கலைஞனாகவோ,விளையாட்டு வீரனாகவோ, விஞ்ஞானியாகவோ உள்ள ஒருவர் தான் புகழுடன் வாழ்பவர் என்று நினைக்கத் தேவையில்லை.
தம் சுற்றத்தாராலும் நண்பர்களாலும் நல்லவிதமாகப் நினைவுகூரப்படும் எந்த ஒரு தனி நபரும் புகழுடன் வாழ்பவரே.
மனிதனின் வாழ்க்கை அப்படி போற்றுதலுக்குரியதாக இருக்க வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. பிறருக்காக வாழும் போது ஒருவன் சமுதாயத்தில் போற்றப் படுகிறான். ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்று புகழ் அதிகாரத்தின் முதற் குறளிலேயே ஒருவனுடைய புகழுக்கு காரணாமாயிருப்பது பிறருக்கு செய்யும் தர்மம் என்று சொல்கிறார். அந்த புகழ் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ”இவன் தந்தை என் நோற்றான் கொல்” என்று இன்னொரு குறளில் மகனுடைய கடமையாக ரத்தின சுருக்கமாக கூறுகிறார்.
ஊரிலோ நாட்டிலோ எத்தனை பேர் பாராட்டினார்கள் என்பதல்ல கணக்கு. ஓரிருவரே ஆயினும் சான்றோர்களால் கூறப்பட்டதா என்பதே கவனிக்கத்தக்கது.
உலகத்தவர் போக்கில் இன்னொரு விசித்திரம்.
எவ்வளவுதான் நல்ல விஷயமாக இருப்பினும் ஒருவரை புகழ்தல் என்று வரும் போது பலருக்கும் பல விதமான மனத்தடைகள் உருவாகிறது. ஆனால் குறை காணுதல் அல்லது இகழ்தல் என்று வரும் பொழுது தங்கு தடையில்லாமல் சேற்றை அள்ளி வீச தயாராகி விடுவார்கள்.அதனால் தானோ என்னவோ புகழ்தற்குரிய செயல்களை செய்ய முடியுமோ இல்லையோ குறைந்த பட்சம் இகழ்ச்சிக்குரிய செயல்களில் ஈடுபடாதே என்று கபீர் அறிவுறுத்துகிறார்.
जब तूँ आया जगत में, लोग हँसे तू रोए,
ऐसी करनी न करी, पाछे हँसे सब कोए।
உலகோர் நகைக்க நீ அழுதாய், இப்புவிதனில் வருகையிலே
உலகோர் நகைக்கும் செயல்வேண்டா, புவிதனை நீ விடுகையிலே
எனது செட்டி நாட்டு வாழ்க்கையின் போது ஒரு பெரியவரை தினம் நகரப் பேருந்து நிற்கும் இடத்தில் நிழற்குடையின் கீழ் சந்தித்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. கொத்தனார் தொழில் செய்து இயலாமையினால் ஓய்வு அடைந்திருந்தவர் அவர். அப்பகுதியின் சுமார் அறுபது எழுபது வருட சரித்திரம் அவருக்கு அத்துபடி. நகரப் பேருந்து வரும் வரை அப்பகுதியின் பல ருசிகரமான தகவல்களை சொல்லிக் கொண்டிருப்பார்.
இடையிடையே சுற்று வட்டாரத்தில் உள்ள பல பெரிய மனிதர்களை பற்றி பெருமையாகவும் சிலரை பற்றித் தாழ்வாகவும் கருத்து சொல்வதுண்டு. ஒரு முறை ஒரு செல்வந்தரைப் பற்றி சொல்லும் போது “அவுரு வீட்டு எச்சி(ல்) எலைய நாய் கூட மோந்து பாக்காது” என்றார். பிறர் சிரிக்க வாழவேண்டாம் என்று கபீர் சொல்வதைக் குறிப்பிடும் போது அந்த வாசகம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
இப்படி ஊரிலுள்ளோர்களுக்கெல்லாம் வேண்டாதவராய் போய் விடுவோர் எவ்வளவு துரதிர்ஷ்டசாலிகள்.
அப்பேர்பட்டவர்களை குறிப்பிடும் வகையில் தானோ என்னவோ ‘தான் பிறரால் சாவ என வாழான்’ என்று சிறுபஞ்ச மூலம் சொல்கிறது.
தான் பிறந்த இல்நினைந்து தன்னைக் கடைப்பிடித்து
தான் பிறரால் கருதப்பாடு உணர்ந்து- தான் பிறரால்
சாவ என வாழான், சான்றோரால் பல்லாண்டும்
வாழ்க என வாழ்தல் நன்று.
தான் பிறந்த குடியின் பெருமை உணர்ந்து, நல்லொழுக்கம் மாறாமல்,மற்றவர்களால் மதிக்கப்படும் செயல்களை செய்து,இவன் இறந்து போகட்டுமே என்று இழிவாகப் பழிக்கப்படாது, சான்றோர்களால் இவன் பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்தப் படுகின்ற வாழ்க்கையே நல்லது.
கவனித்து நோக்க வேண்டிய சொற்றொடர் ‘சான்றோரால் பல்லாண்டும் வாழ்க’ என வாழ்த்தப்படுவதே. எல்லோரிடமும் சான்றிதழ் எதிர்பார்க்க முடியாது. அதற்காக ஒருவர் கவலையும் படக்கூடாது.
நம்மால் பிறருக்கு உபகாரம் உண்டோ இல்லையோ அபகாரம் செய்யாமலிருந்தால் அதுவே பெரிய உபகாரம். அப்போது பிறர் நம்மை கேலி பேச வாய்ப்புகள் இருக்காது.
அப்படி தவிர்க்க வேண்டிய செயல்கள் எவையெவை என்பதை பட்டினத்தாரின் சாடலில் புரிந்து கொள்ளலாம்.
ஓயாமல் பொய் சொல்வர், நல்லோரை
நிந்திப்பர், உற்றுப்பெற்ற
தாயாரை வைவர், சதி ஆயிரம்
செய்வர், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்கு உபகாரம்
செய்யார், தமை அண்டினார்க்கு ஒன்று
ஈயார், இருந்து என்ன போய் என்ன
காண் கச்சி ஏகம்பனே
இருந்தென்ன போயென்ன என்று பட்டினத்தார் சொல்வதை ’இல்லாமலே போய் விடு’ என்பதாக வள்ளுவர் ‘...தோன்றலின் தோன்றாமை நன்று ’ என்று கூறிவிட்டாரோ? இல்லை. பட்டினத்தார் சொல்லியது நிராசையின் வெளிப்பாடு. வள்ளுவர் சொல்ல முற்பட்டது ஒரு அறிவுரை.
ஆங்கிலத்தில் Famous மற்றும் Infamous இரண்டு வார்த்தைகள் உண்டு. இரண்டுமே மக்களால் ஒருவர் நன்கு அறியபட்ட நிலையையே குறிக்கும். ஆனால் அவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசம் இரு துருவங்களுக்கு இடையே உள்ளது போல். முதலாவது நல்ல காரணங்களுக்கானது.இரண்டாவது,தவறான காரணங்களுக்காக அறியப்பட்டிருப்பது.
இராமன்-இராவணன் முதல் விஜயகுமார்-வீரப்பன் வரை உதாரணங்கள் எண்ணில் அடங்காது.
எந்த தாய் தந்தையராவது தமது பிள்ளை தவறான காரணங்கள் ஆனாலும் பரவாயில்லை அவன் எதிர்மறை புகழ்(infamous) அடைய வேண்டும் என்று விரும்புவரா? சுற்றத்தாரிடையே என் மகன் களவு செய்து சிறை சென்றிருக்கிறான் என்று பெருமை கொள்ள முடியுமா ? முடியாது, ஏனெனில் ‘பண்பு தவறிய பிள்ளையை பெற்றவர் பேர் சொல்லி வாழ்வதில்லை’. கபீர் சுட்டிக்காட்டுவது போல் அது பிறரது நகைப்புக்கு இடம் தருவதாகிவிடும். அதைவிட அவன் எவ்வித அடையாளமும் இல்லாதவனாய் வாழ்ந்து மறைவதே மேல் என்பதையே விழைவர்.
எனவே தோன்றல் என்பது சமுதாயத்தில் பலரால் கவனிக்கப்படுவராக உருவெடுப்பது. பிறருடைய கவனத்துக்கு வராமல் வாழ்ந்து மறைவதே ‘தோன்றாமை’.
இப்படியாக அந்தக் குறளுக்கு கபீர் மற்றும் பட்டினத்தார் போன்ற ஞானிகளின் கருத்தைப் பொருத்திப் பார்த்தால் நமக்கு கிடைக்கும் விளக்கம் :-
புகழொடு தோன்றுக= நல்ல காரணங்களுக்காக புகழ் அடைவது , அஃதிலார்= அப்படி இயலாதவர்கள், தோன்றலின்=தவறான காரியங்களுக்காக அறியப்படுவதைக் காட்டிலும், தோன்றாமை= ஏதும் செய்யாமலும் அறியப் படாமலும் இருப்பதே, நன்று =நல்லது.
கபீரைப் பற்றி சொல்ல வந்து அது திருக்குறள் ஆராய்ச்சி ஆகி போனது. ஏகம் சத்,விப்ரா பஹுதா வதந்தி என்று சொல்வதுண்டு. உண்மை என்பது ஒன்றே. பண்டிதர்கள் பலவிதமாய் உரைப்பர் என்று பொருள்படும். நமது முயற்சியும் அந்த உண்மையைச் சுற்றியே இருக்கட்டும்.
கருத்துள்ள இந்த திரைப்பாடலையும் கேளுங்கள் : பண்பு தவறிய பிள்ளையை பெற்றவர்...
இதையும் படியுங்கள்
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.
*************************************************************
தோன்றலுக்கான விளக்கம் அருமை.
ReplyDelete//கவனித்து நோக்க வேண்டிய சொற்றொடர் ‘சான்றோரால் பல்லாண்டும் வாழ்க’ என வாழ்த்தப்படுவதே//
ReplyDeleteபல்லாண்டு வாழ்க! வளர்க கூரிய நோக்கும், சிந்தனையும். இறைவனுக்கு நன்றி.
குறள் விளக்கமும் அருமை!
ReplyDelete/புகழொடு தோன்றுக= நல்ல காரணங்களுக்காக புகழ் அடைவது , அஃதிலார்= அப்படி இயலாதவர்கள், தோன்றலின்=தவறான காரியங்களுக்காக அறியப்படுவதைக் காட்டிலும், தோன்றாமை= ஏதும் செய்யாமலும் அறியப் படாமலும் இருப்பதே, நன்று =நல்லது./
ReplyDeleteஅருமை
வாங்க ஷைலஜா, கீதாமேடம்
ReplyDeleteதிங்கட் கிழமை காலையிலேயே குடும்பத்தலைவி பொறுப்புகளுக்கு இடையே பதிவுகளை படிச்சு பின்னூட்டமும் இடறீங்களே ! க்ரேட்
மிக்க நன்றி
நல்வரவு ஜீவா, திகழ்மிளிர்
ReplyDeleteகுறள் விளக்கம் உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு ம்கிழ்ச்சி. மிக்க நன்றி.
எப்பவும் போல பல மேற்கொள்களுடன் அருமையான போஸ்ட் ஐயா. நன்றிகள் பல.
ReplyDelete"உதவி செய்யாட்டாலும் உபத்திரவம் செய்யாம இருக்கணும்" என்ற சொற்றொடர் நினைவு வருகிறது. பல பாடல்களை அருமையாகப் பொருத்தி விளக்கியமைக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி மதுரையம்பதி, கவிநயா.
ReplyDeleteதொடர்ந்து ரசித்து படித்து வருவதற்கு் மிக்க நன்றி
//கபீரைப் பற்றி சொல்ல வந்து அது திருக்குறள் ஆராய்ச்சி ஆகி போனது.//
ReplyDeleteஎங்களுக்குப் பெரும் விருந்தாகவும் ஆகிப்போனது.. அடேயப்பா! ஒன்று தொட்டு இன்னொன்று என்று எத்தனை சமாச்சாரங்கள்.. அத்தனையையும் ஒன்றுக்கொன்று சங்கிலி போட்டுப் பிணைத்திருக்கிறிர்களே..அது அபாரம்..
மிக்க கவனத்துடனான, சளைக்காத வளமான எழுத்துக்கு ஆயிரம் நன்றிகள்!
// .....ஆயிரம் நன்றிகள்! //
ReplyDeleteஎன் தரப்பிலும் அதே. தங்களை போன்றவர் ஆர்வமும் ஆசீர்வாதமும் தான் எனக்கு பூஸ்ட் !“secret of my energy” :))
நன்றி ஜீவி சார், மிக்க நன்றி
கபீரன்பன் நெடு நாட்களாகவே எனக்கு இந்த சந்தேகம் உண்டு. இன்று நன்றாக விளக்கி விட்டீர்கள் நன்றி. ஒப்பு உவமைகள் நன்றாக இருந்தது வள்ளூவர், கபீர் ,பட்டனத்தார் எல்லோரும் ஒரே நோக்கில்தான் இருந்தார்கள்
ReplyDeleteநன்றி தி.ரா.ச
ReplyDelete//..நெடு நாட்களாகவே எனக்கு இந்த சந்தேகம் உண்டு //
“தோன்றிற் புகழொடு தோன்றுக” என்பதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று எண்ணுகிறேன். இந்த குறளுக்கு இன்னொரு விளக்கமும் உள்ளது.
“ நல்லறத்தின்கண் நின்று தங்கள் திறமையால் புகழொடு விளங்குபவர்கள் மட்டுமே அவைகளில் (சபைகளில்)அறிவுரை கூற எழுவீர்களாக! அந்த தகுதி இல்லாதவர் அவைகளில் (சபைகளில்)எழாமல் இருப்பதே நல்லது ஆகும்”
(கற்பகம் புத்தகாலயம் சென்னை)
இதில் ஏற்படும் குழப்பம், அறிவுரை சொல்ல முற்படும் பொழுதே தனக்கு தகுதி இருக்கிறது என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதால்தானே
“தகுதி உண்டு-இல்லை” என்ற நினைப்பு இடத்திற்கும் காலத்திற்கும் தக்கவாறு மாறுபடுவது தானே.!
இப்படியாக அந்த குறளுக்கான விளக்கம் பலருக்கும் பலவிதமாய் தோன்றுகிறது.
கபீரை விளக்க முற்படுகையில் என் மனதில் பட்டதை எழுதினேன். அவ்வளவுதான் :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அருமை அருமை ஐயா. பல வருடங்களாக எனக்கு இருந்த ஐயத்தை மிக நன்றாக விளக்கித் தீர்த்துவிட்டீர்கள். இனி இந்த விளக்கம் மறக்காது என்று நினைக்கிறேன்.
ReplyDeleteவாங்க குமரன்,
ReplyDelete//பல வருடங்களாக எனக்கு இருந்த ஐயத்தை மிக நன்றாக விளக்கித் தீர்த்துவிட்டீர்கள் //
இப்படியும் பொருள் கொள்ள வாய்ப்பு இருக்கிறதென்று என எண்ணினேன். அது உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி.
நன்றி
"நம்மால் பிறருக்கு உபகாரம் உண்டோ இல்லையோ அபகாரம் செய்யாமலிருந்தால் அதுவே பெரிய உபகாரம். அப்போது பிறர் நம்மை கேலி பேச வாய்ப்புகள் இருக்காது."
ReplyDeleteஇதுதான் இப்போதைய குறைந்த பட்ச மனிதாபிமானகப்போய் விட்டது. தாங்கள் சொல்வது போல், எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அது மெய்பொருள் தானே..... பல விஷயங்களை பொருத்தி ஒரு முனைப்பு தரும் தங்கள் உத்தியை எப்போதும் போல் இப்போதும் வியக்கிறேன்...
வாங்க கிருத்திகா,
ReplyDeleteமுனைப்புடன் படித்து இடப்படும் ஒவ்வொரு பின்னூட்டமும் எப்போதும் போல் உற்சாகமளிக்கிறது. தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி.
அமக்களம்!
ReplyDeleteஇந்தக் குறளைப் பத்தி அலசும்போது,உங்க பதீவும் கண்ணுல பட்டுது. அதைப் பத்தி இங்கே சொல்லிருக்கேன்:
http://surveysan.blogspot.com/2009/10/blog-post_12.html
நல்ல ஒரு புத்துணர்வான பதிவு!
ReplyDelete