நன்னெறியில் வாழ்க்கை அமைத்துக் கொள்வோர்க்கு ஆன்மீக முன்னேற்றம் எளிதாகும்.அதற்கு பாதையில் தவிர்க்க வேண்டிய வழிமுறைகளை சுட்டிக்காட்டுவதை பெரியோர்கள் தம் கடமையாகக் கருதுகின்றனர்.
அவற்றில் முற்றும் துறந்தவரையும் சிரமப்படுத்துவது பெண் ஆசை. இதைப்பற்றி ஞானிகள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். மனிதர்களுக்கு அதனால் ஏற்படும் மனசஞ்சலத்தையும் கண்டு இரங்குகின்றனர்.
பொய்யெல்லா மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும் வண்ணம்
ஐயன் எனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே
என்று மாணிக்கவாசகர் பெண்ணாசையில் வீழாமல் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிக்கிறார்.
மாதர் உருக்கொண்டு மறலி வஞ்சம் எண்ணுதே
ஆதரவும் அற்று இங்கு அரக்காய் உருகிறண்டா
மங்கையரது மீதுள்ள ஆசையினால்,உள்ளமானது தீயில் இட்ட அரக்கைபோல் உருகுகிறது.அவர்கள் உருவிலே எமன் உயிரை கவருகிறான் என்று பட்டினத்து அடிகளும் மனிதனுக்குண்டான தவிப்பை வெளிப்படுத்துகிறார்.
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசு என்றொழிவேன்...
........
சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரந்தருவாய்....
என்று கந்தரனுபூதியில் அருணகிரியார் தீராத உடலிச்சையை பழிக்கிறார்.ஆனால் இயற்கையில் அதற்கு ஒரு முக்கிய இடமுண்டு.அதனால் அதை நொந்து கொள்ள முடியாது.
நொந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அதன் பின்னே கட்டுக் கடங்காமல் திரிய துவங்கும் மனதைத்தான். (மட்டூர்குழல் மங்கையர் என்பதும் சிங்கார மடந்தையர் என்பதும் பொது மகளிரை குறிக்க வந்தன என்பார் வாரியார் சுவாமிகள்).
அப்படி அருணகிரியார் திரியத் தலைப்பட்ட போது உற்றார் உறவினராலும் பெற்ற தாயாராலும் வெறுக்கப்படுகிறார். பின்னர் தீராதப் பிணியால் பீடிக்கப்பட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தலைப்படுகிறார். முருகன் இச்சை வேறு விதமாக இருந்ததால் அவர் மூலம் தித்திக்கும் திருப்புகழ் தமிழுக்கு கிடைத்தது.
அவரைப் போலவே சிரமப்பட்ட இன்னுமொரு பக்தன் பில்வமங்கள்.
பில்வமங்களுக்கு கணிகை சிந்தாமணியின் பிரிவை தாங்கிக் கொள்ளமுடியவில்லை. வெளியே இருட்டில் இடியும் மின்னலுமாக மழை பெய்து கொண்டிருந்தாலும் துணிந்து அவளை நினைந்து வீட்டை விட்டு வெளியேறினான்.போகும் வழியிலோ ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது.
நீரில் இறங்கி கடக்க முயன்றவனுக்கு பத்திரமாகப் பிடித்துக் கொள்ள ஒரு கட்டை கிடைக்கிறது. அடுத்த கரையை சேரும் போது அவனுக்கு புரிகிறது,அது கட்டையல்ல மிதந்து வந்த பிணம் என்று. மோகம் கண்ணை மறைத்திருந்தது.
எட்டி நடைபோட்டு அவள் வீட்டை அடைகிறான். மதில் போன்ற சுவர். ஏறிக் குதிப்பது என்று முடிவு செய்து அங்கு தொங்கிய கொடியை பிடித்தபடி ஏறினான். அவன் பிடித்திருந்தது கொடியல்ல ஒரு நீளமான பாம்பு. அதுவும் அவனுக்கு துச்சமானது.
கதவைத் தட்டி தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்புகிறான். கதவை திறந்தவளுக்கு குப்பென்ற பிணவாடை. பில்வமங்களின் நிலையைக் கண்ட அவளுக்கு அவன் மேல் வெறுப்பு ஏற்பட்டது. அவனோ தான் அவளுக்காக மேற்கொண்ட சிரமத்தை விவரித்தான்.
சிந்தாமணியின் உள்ளத்தில் வேறு விதமான எண்ணம் ஓடியது.இது என்ன பைத்தியக்காரத்தனம் இப்படியும் அழிந்து போகின்ற உடல் மேல் ஒரு மோகமா!
”இப்படி இந்த அழிகின்ற உடல் மீது இருக்கும் பிரேமையில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது அந்த கிருஷ்ணன் மீது வைத்திருந்தால் ஜன்மமே கடைத்தேறி விடுமே” என்று ஆழ்ந்த பச்சாதாபத்தில் அவனுக்கு அறிவுரை சொன்னாள்.
இறைவனின் திருவுளம் அவள் வார்த்தைகள் மூலம் செயல்பட்டது. அவளுடைய மன ஆழத்திலிருந்து வந்த சத்திய வார்த்தைகள் அவனுடைய மோகத்திரையை கிழித்து விட்டு அறிவுக்கண்ணை திறந்தது.
பில்வமங்கள் போய் லீலாசுகர் கிடைத்தார். கிருஷ்ண கானாம்ருதத்தில் முதல் பாடலிலில் முதல் வந்தனமே அவளுக்குத்தான். பிறகுதான் அவருடைய குரு சோமகிரியை குறிப்பிடுகிறார்.
"चिन्तामणिर्जयति सोमगिरिर्गुरुर्मे"
”சிந்தாமணிர் ஜயதி ஸோமகிரிர்குருர்மே
ஷிக்ஷாகுருஷ்ச பகவான் ஷிகிபிஞ்சமௌளி”
விலைமகள் சிந்தாமணிக்கு அமரத்துவம் தந்து விட்டார்.
பில்வமங்களைப் போலவோ அருணகிரியாரைப் போலவோ வரும் சான்றோர்கள் தமது பூர்வ ஜன்மத்தின் நல்வினைகள் காரணமாகத் தடுத்தாட்கொள்ளப் படுகின்றனர். அவர்களது வாழ்க்கை மூலம் இறைவன் தவிர்க்க வேண்டிய இச்சைகளை உலகுக்கு காரணங்களோடு எடுத்துச் சொல்கிறான்.
ஆனால் மருளில் சிக்கியிருக்கும் சாதாரண மனிதனின் மனது இவர்கள் சரித்திரத்தை மறந்து விடுகிறது.
வெறுப்பு ஏற்படும் வகையில் உதாரணங்களை சொல்லி வைத்தால் அது தவிர்க்க வேண்டிய விஷயங்களைப் பற்றிய இச்சை மனதில் ஏற்படாமல் அதை விட்டு விலகிச் செல்வதற்கான வழி பிறக்கும். அப்படி ஒரு உத்தியை கபீர் கையாளுகிறார்.
கபீரின் கூற்றைக் கேளுங்கள்
परनारी की याचना, जो लहसुन की खान ।
कोने बैठे खाइये , प्रगट होये निदान ॥
பரத்தையரில் தேடிய பரவசம்,உள்ளி ருசித்தது போலாம்
பரம ரகசிய மாயினும்,பைய வெளிவரும் அதன் வீச்சம்
(உள்ளி=பூண்டு, வீச்சம்=துர்வாசனை )
அஜீரணத்தால் அவதிப்பட்ட ஒருவன் வைத்தியனை அணுகினான். உண்மையையில் அவனுக்கு மருந்து தேவையில்லை. தேவை நாவடக்கம். ஒரு நாள் உபவாசம். சொன்னால் புரிந்து கொண்டு ஒத்துழைக்கும் பேர்வழி அல்ல. அப்போது அவன் கையில் ஒரு மருந்தை கொடுத்து சாப்பிட அரைமணி நேரம் முன் இந்த மருந்தை சாப்பிடு. இதை சாப்பிடாமல் உணவு உண்பது கூடாது. ஆனால் ஒன்று மருந்து சாப்பிடும் போது கருங்குரங்கை மட்டும் நினைக்காதே என்று சொல்லி வைத்தியன் மருந்து கொடுத்தானாம்.
வீட்டிற்கு போய் ஒவ்வொரு முறை மருந்தை கையில் எடுக்கும் போதும் கருங்குரங்கு கண்முன்னே வந்தது.எப்போது மருந்து சாப்பிட்டு பின் எப்போது சாப்பாடு சாப்பிடுவது? இப்படியே நாளெல்லாம் பட்டினியில் கழிந்தது.அவன் அஜீரணமும் ஒழிந்தது.
அதே நுணுக்கத்தைத் தான் கபீரும் இங்கே கையாண்டு இருக்கிறார்.மனம் தவறான வழியில் திரும்பும் போது கண்முன்னே பூண்டும் அதன் வீச்சத்தால் முகம் சுழிப்பவர் முகங்களும் வந்து ஒரு தடையாக செயல்படும்.
ஏன் எப்போதும் பெண்ணாசை என்றே குறிப்பிடுகிறார்கள்? ஆணாசையென்று ஏன் குறிப்பிடப் படுவதில்லை ?
ஞானியர்கள் எப்படி பொருள் சொல்வரென்றால்,புவியில் பிறப்பெடுத்திருக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஆன்மீக ரீதியில் பெண்ணே! இறைவன் ஒருவனே ஆண். அவன் இச்சைகளுக்கு அப்பாற்பட்டவன்.ஆகவே தான் சிருஷ்டியின் தொடரோட்டத்திற்காக ஏற்பட்டிருக்கும் எல்லா வகை உடலிச்சையும் பெண்ணாசையிலே அடங்கும்.
குறிப்பாக மனித வர்க்கத்தை, பிற ஜீவராசிகளை விட, இது அதிகம் ஆட்டிப் படைப்பதால் அதை பற்றி கவலைப் பட வேண்டியிருக்கிறது.
இதை இன்னொரு ஈரடியில் கபீர்தாஸ் விளக்குகிறார்.
कामी कुत्ता तीस दिन्, अन्तर होय उदास ।
कामी नर कुत्ता सदा, छह रितु बारह मास ॥
விரகம் முப்பது நாளாம் கூரனுக்கு,விட்டுத் தொலைக்கும் பின்னே
விரகத்தில் நரனோ சதாகூரன்,பருவம் ஆறும் பன்னிரு மாதமுமே
(விரகம்=காமம்; கூரன்= நாய் ; ஆறு பருவங்கள்= பின்பனி, இளவேனில், முதுவேனில், கார்,கூதிர், முன்பனி)
எப்படி 24 x 7 பாணியில் சொல்லிவிட்டார்! இனப்பெருக்க காலத்தில் நாய்கள் கூட்டம் கூட்டமாக அலைவதை போல(மனதில்) அலைகிறார்கள் சதாகாலமும் என்பதை உணர்த்த ”காமீ நர் குத்தா சதா” (நரனோ சதாகூரன் )என்று இரண்டாம் வரியில் வேறு வகையில் நாய்களின் போக்கோடு ஒப்பிடுகிறார்.
இந்த போராட்டம் தனிமனிதன் தன்னுள்ளே நடத்தும் தனிமை பயணம். மஹாத்மாக்களின் வாக்குகள் வழிகாட்டும் விளக்குகள் போல. விளக்கை பற்றிக்கொள்வது அவரவர் விருப்பம்.
//ஏன் எப்போதும் பெண்ணாசை என்றே குறிப்பிடுகிறார்கள்? ஆணாசையென்று ஏன் குறிப்பிடப் படுவதில்லை ?
ReplyDeleteஞானியர்கள் எப்படி பொருள் சொல்வரென்றால்,புவியில் பிறப்பெடுத்திருக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஆன்மீக ரீதியில் பெண்ணே! இறைவன் ஒருவனே ஆண். அவன் இச்சைகளுக்கு அப்பாற்பட்டவன்.ஆகவே தான் சிருஷ்டியின் தொடரோட்டத்திற்காக ஏற்பட்டிருக்கும் எல்லா வகை உடலிச்சையும் பெண்ணாசையிலே அடங்கும்.//
நல்லதொரு பதில்!
//இந்த போராட்டம் தனிமனிதன் தன்னுள்ளே நடத்தும் தனிமை பயணம். மஹாத்மாக்களின் வாக்குகள் வழிகாட்டும் விளக்குகள் போல. விளக்கை பற்றிக்கொள்வது அவரவர் விருப்பம்.//
ReplyDeleteஇந்த கடைசி பஞ்ச்! என்ன சொல்றது? வழக்கம் போல் திகைப்பு தான். இந்தத் தனிமைப் பயணம் என்னும் போராட்டம் பற்றியே மூன்று நாளாய் சிந்தனையும் கூட. நன்றி. ஏதோ இக்ஷிணி வந்து சொன்னாப் போல் ஒவ்வொண்ணும் கிடைக்குது!
//இப்படி இந்த அழிகின்ற உடல் மீது இருக்கும் பிரேமையில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது அந்த கிருஷ்ணன் மீது வைத்திருந்தால் ஜன்மமே கடைத்தேறி விடுமே”//
ReplyDeleteஉடல்மீது மட்டுமின்றி, எதன் மீது அளவைற்கதிகமாக பிரேமை ஏற்பட்டாலும், இது நினைவில் நிற்க அவன் அருளட்டும்.
//ஏன் எப்போதும் பெண்ணாசை என்றே குறிப்பிடுகிறார்கள்? ஆணாசையென்று ஏன் குறிப்பிடப் படுவதில்லை ?//
படித்துக் கொண்டு வரும்போதே எழுந்த கேள்விக்கு விடையளித்து வீட்டீர்கள். ஸ்ரீராமகிருஷ்ணரும் இதைப் போல ஆசைகளை "woman and gold" என்றே குறிப்பிடுவார்.
//மஹாத்மாக்களின் வாக்குகள் வழிகாட்டும் விளக்குகள் போல. விளக்கை பற்றிக்கொள்வது அவரவர் விருப்பம்.//
ரொம்ப சிறப்பான முத்தாய்ப்பு. மிக்க நன்றி ஐயா.
நன்றி கீதா மேடம்
ReplyDelete//ஏதோ இக்ஷிணி வந்து சொன்னாப் போல் ஒவ்வொண்ணும் கிடைக்குது! //
அலைவரிசையை சரியாக தேர்ந்தெடுத்தால் ரேடியோவில் வேண்டிய ஸ்டேஷன் கிடைக்குது :)
நம்மைச் சுற்றி எல்லாவகை எண்ண ஓட்டங்களும் சதா போய்க் கொண்டிருக்குமாம். நாம் ட்யூன் செய்வதை பொருத்து நமக்கு விடைகள் கிடைக்கும் என்று சுவாமி சிவானந்தர் சொன்னதாக நினைவு.
மிக்க நன்றி
வாங்க கவிநயா
ReplyDelete//ஸ்ரீராமகிருஷ்ணரும் இதைப் போல ஆசைகளை "woman and gold" என்றே குறிப்பிடுவார்.//
ஆமாம். அவர் காமினி,கஞ்சனம் என்று அடிக்கடி சொல்வாராம்.
உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி
//ஆனால் இயற்கையில் அதற்கு ஒரு முக்கிய இடமுண்டு.அதனால் அதை நொந்து கொள்ள முடியாது.
ReplyDeleteநொந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அதன் பின்னே கட்டுக் கடங்காமல் திரிய துவங்கும் மனதைத்தான்.//
'கட்டுக்கடங்காமல்' என்கிற சொல் அழுத்தம் திருத்தமாக வந்து விழுந்திருக்கிறது. 'அனலிடை பட்ட மெழுகு' போல தாபத்தில் தவித்து புழுங்கித் திரியும் மனத்தை, கொஞ்சமே திசை திருப்பினால் போதும்; வானமே வசப்பட்டு விடும்!
இயற்கையின் ஏற்பாடுகள் அத்தனையுமே தீட்சண்யமிக்கன; வரமாவன.
புரிந்து செயல்படாத நேரத்து அமுதமும் நஞ்சாகும் ஆபத்தும் கூடவே இருக்கிறது, பாருங்கள்.
நல்லதொரு பதிவை மிக அழகாகச் செய்திருக்கிறீர்கள்!
நல்வரவு ஜீவி
ReplyDelete//இயற்கையின் ஏற்பாடுகள் அத்தனையுமே தீட்சண்யமிக்கன; வரமாவன //
மிகவும் உண்மை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவி ஐயா
குறிப்பாக மனித வர்க்கத்தை, பிற ஜீவராசிகளை விட, இது அதிகம் ஆட்டிப் படைப்பதால் அதை பற்றி கவலைப் பட வேண்டியிருக்கிறது
ReplyDeleteஇதைத்தானே பட்டினத்தாரும்
ஆயாய் பலகலை ஆய்ந்திடும் தூய அருந்தவர்பால்
போயாகிலும் உண்மையைத் தெரிந்தாயில்லை; பூதலத்தில்
வேயார்ந்த தோளியர் காமவிஹாரத்தில் வீழ்ந்தழுத்திப்
போயாகி விழிக்கின்றனை, மனமே! என்ன பித்துனக்கே
என்கிறார். கபீரின் வர்களோடு மற்ற ஒப்புவமைகளும்
மிகவும் நன்றாக இருக்கிறது
வருக தி.ரா.ச,
ReplyDeleteநல்ல பொருள் செறிந்த பட்டினத்தார் பாடலுக்கும் பாராட்டுரைகளுக்கும் மிக்க நன்றி.
கடந்து செல்ல வேண்டிய வாசல்களை வழி மறித்து நிற்கும் நம் ஆசைகளை களைந்து செல்வதற்கும் தேவை அருணகிரிநாதரும், பில்வரும் ... வழக்கம் போல் பல பொருள் செறிந்த பதிவு... தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கிருத்திகா.
ReplyDelete//தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.. //
கடவுளே ! இதற்க்கெல்லாமா மன்னிப்பு கேட்பது !! அவரவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதுதான் படிப்பார்கள். நானும் கடந்த ஒரு மாத காலமாக ஒழிவே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன். நண்பர்கள் எவருடைய பதிவையும் பார்க்கக்கூட முடியவில்லை. இன்னும் பதினைந்து நாட்களுக்கு இப்படித்தான் போகும் என்று நினைக்கிறேன். எப்படியோ கபீர் பதிவை மட்டும் குறித்த இடைவெளியில் பதிந்து வருகிறேன் :)
எல்லாம் அவன் செயல்.
நன்றி
Hi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்