Saturday, September 26, 2009

அந்தகன் முன்னே ஆடற்கலை

எப்போதும் யாவர்க்கும் திறந்து இருக்கும் ரமணாஸ்ரமத்தி்ற்கு ஒரு அன்பர் விஜயம் செய்தார். மகரிஷியின் சமீபமாக அமர்ந்து கொண்டு கேள்வி கேட்கத் தொடங்கினார்.

“பகவான்! ஜனனக் கட்டுப்பாடு (birth control) பற்றிய தங்கள் கருத்து என்ன ?”

பதிலேதும் வராமல் போகவே கேள்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக விளக்கினார். பின்னரும் ஏதும் பதில் வரவில்லை. ஒரு வேளை தான் சரியாகச் சொல்லவில்லையோ என்று மேலும் சிறிது நேரம் பேசி விட்டு ஓய்ந்து போனார். அந்த அறையில் மீண்டும் அமைதி நிலவியது.

இப்போது ரமணரின் குரலில் ஒரு கேள்வி தெளிவாக எழுந்தது.

”உமக்கு மரணக் கட்டுப்பாடு ( death control) பற்றித் தெரியுமா ?”

[இரமணருடைய எதிர் கேள்வி ஆழமானது. மரணத்தை ஒழித்தால் பிறப்பும் கூட ஒழிந்து விடுமன்றோ !

‘கருப்படுத்தி என்னை எமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம்?


‘என்னை ஒரு கருப்பைக்குள் வைத்து பிறப்பு தந்து பின்னர் எமன் பிடித்துச் செல்லும் முன் நின் வடிவாய் உருசெய்து பிறப்பு இறப்பற்ற வீட்டுலகை பெற திருவருள் வருவது எப்போதோ’ என்று ஜனன மரணத்தை ஒழிக்கும் வகை வேண்டுகிறது பத்திரகிரியாரின் அருட்புலம்பல்]


மரணத்தை வெல்வது தானே ஆன்மீகத்தின் நோக்கம். இப்படி தனக்குள்ள பிரச்சனையை சிந்திப்பதை விட்டு உலகத்தைத் திருத்தும் கவலைகள் அர்த்தமற்றவை என்பதை பகவான் குறிப்பால் உணர்த்தினார்.

அன்பரிடமிருந்து பதில் வரவில்லை.

இப்படி யாரிடம் என்ன கேள்வி கேட்பது என்று புரியாமல் பல சமயங்களில் தடுமாற்றம் மனிதர்களுக்கு ஏற்படுவது உண்டு. அப்போது தம்முடைய கேள்விகளாலேயே தம் அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டு விடுகிறார்கள்.

தாம் அறிந்து வைத்திருக்கும் விஷய ஞானத்தின் மேல் உள்ள அபார பற்றுதலும் பெருமையுமே இதற்கு முக்கிய காரணம். கபீர்தாஸருடைய காலத்திலும் அப்படிப் பட்டவர்கள் இருந்திருப்பார்கள் போலும் !

ज्ञानी से कहिये काह, कहत कबीर लजाये ।
अंधे आगे नाचते, कला अकारथ जाय ॥

ஞானிக்கு உரைப்பது மென்னே, கபீரும் நாணம் கொள்வனே
நாட்டியமோ அந்தகன் முன்னே, அதனால் ஆவதும் என்னே


மாற்று:

பண்டிதர் பாடம் கேட்டார், நாணம் கொண்டான் கபீரும்
அந்தகர் முன்னே ஆடற்கலை, வீணாய் போச்சுது பாரும்


ஞானி என்பதற்கு பொதுவாக முற்றும் அறிந்தவர் என்று பொருள் கொள்வோம். ஆனால் இங்கே சாஸ்திரங்களைக் கற்றறிந்தவர் என்ற பொருளில் வருகிறது. அடக்கமற்றவர்களாயின் அவர்களுக்கு எதை எடுத்துரைத்தாலும் எடுபடாது.

பிறவிக் குருடனுக்கு சித்திரக்கலையோ ஆடற்கலையைப் பற்றியோ சொல்லினால் எப்படி விளங்காதோ அது போல அஞ்ஞானிகளுக்கு ஞானிகளின் சமீபம் கிட்டினாலும் பயன் இருக்காது. இதை மாற்றுவதும் முடியாது.

சிவாய நம என சிந்தித்திருப்போர்க்கு அபாயம் இல்லை என்பது ஔவையாரின் வாக்கு. சிந்திப்பதை விட்டு அறிஞர்கள் ஆராய்ச்சியில் இறங்கினால் என்னவாகும். பட்டினத்தார் சொல்கிறார்:-

கார காரம் என்பார் நடுவே சிகாரம் என்பார்
கார காரம் என்பார் வகையறியார் பூரணமே


இறைவனின் திருநாமத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு இயல்புகளைச் சொல்லி அவற்றின் மேன்மையை பல்வகையாய் விளக்குவார்கள் ஆனால் அதன் மூலம் உன்னை அடையும் வழியை மட்டும் அறியமாட்டார்களே என்று விசனப்படுகிறார் பட்டினத்து அடிகள்.

மாந்தோப்பில் நுழைந்து மரங்களின் உயரம், காய்களின் எண்ணிக்கை, இலைகளின் அளவு இப்படி பலப்பல கணிப்பில் ஈடுபட்டவர்களை விட ஒரு பழத்தைப் பறித்து சுவைப்பவன் புத்திசாலி என்று பரமஹம்ஸர் கூறுவாராம்

கபீர்தாஸர் குறிப்பிடும் அறிவுக் குருடர்கள் இவர்கள். இதற்கான தீர்வை ஏற்கனவே கபீர் சொல்லியிருக்கிறார்

செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவை நூறு படிப்பதும் வீணே

இன்று சரசுவதி பூஜை. கிரந்தம் படிப்பது வீணே என்று சொல்ல என்னமோ போலிருக்கிறது. கபீர் சொல்ல வருவதும் பொருளறியாமல் செய்யப்படும் செயல்களைத்தான் வீண் என்கிறார்.

இதற்கு கவியரசர் கம்பனும் உடன்படுகிறார். அவளை அண்டினால் எது செய்ய வேண்டினும் அது சித்தியாகும், முக்தி உள்பட !

சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள், எவ்வெவர் சிந்தனையும்
சோதிக்கலா முறப் போதிக்கலாம், சொன்னதே துணிந்து
சாதிக்கலாம் மிக பேதிக்கலாம் முத்திதான் எய்தலாம்
ஆதிக் கலாமயில் வல்லி பொன் தாளை அடைந்தவரே


யாவருக்கும் அன்னை சரசுவதியின் அருள் சித்திக்கட்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நவராத்திரி நல்வாழ்த்துகள்.

-----------------------------------------------
பலரும் விரும்பிய கட்டுரைத் தொகுப்பு -முதல் பாகம் -கபீரின் நிழலில்... என்ற பெயரில் வலையேற்றப்பட்டுள்ளது.

வேண்டுபவர் அதை Scribd வலைப்பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Kabirin_nizhalil

(இங்கேயே படிக்க விரும்புவர்கள் வலது பக்க மேல் மூலையில் Toggle Full screen மெனுக் குறியை பயன்படுத்தி படிக்கலாம். கூகிள் ரீடரில் இந்த விட்ஜெட் காண்பிக்கப்படுவதில்லை )

கீழே உள்ள இணப்பின் மூலமும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
கபீரின் நிழலில்...
கபீரின் நிழலில்......
Hosted by eSnips

18 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

ஆரவாரமில்லாமல் நடந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல பணிக்கு எனது மனப்பூர்வமான வந்தனங்களும், வணக்கங்களும்!

ஒவ்வொரு எழுத்தும் பயனுள்ளதாக இருக்க நிறையவே உழைத்திருக்கிறீர்கள்.வீரியம் உள்ள விதைகளாகப் படிப்பவர் இதயத்தில் தங்கி முளைத்துப் பெருகட்டும் என்று இந்த சரஸ்வதி பூஜை தினத்தன்று அம்பிகையைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

இறைவனது பெரும் கருணை, உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்துடன் எல்லா நற்பேறுகளையும் அளித்து என்றென்றும் காக்க வேண்டும் என்று
ஜகத் ஜனனியான அம்பிகையை பிரார்த்தித்து நிற்கிறேன்.

(Mis)Chief Editor said...

ஐயா! வார்த்தை கொண்டு அடக்க முடியாது உமது பணியை, படித்தபின்...எமது மனநிலையை!
இந்நன்னாளில் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்!

தொடரட்டும் உமது பணி!
செழிக்கட்டும் என் போன்ற கடையோர்!

ஜீவி said...

//பலரும் விரும்பிய கட்டுரைத் தொகுப்பு -முதல் பாகம் -கபீரின் நிழலில்... என்ற பெயரில் வலையேற்றப்பட்டுள்ளது.//

பலாப்பழத்தைக் காட்டியதோடு நில்லாமல், வெகு இயல்பாக அப்பழத்தை சீவுவாங்கு சீவி, கையில் எண்ணெய் இட்டு, கோது நீக்கி,
வாகாக ஒவ்வொரு சுளையாக எடுத்து,
கற்கண்டென சுவைக்கும் அதை "இந்தாருங்கள்..இந்தாருங்கள்.."
வாரி வழங்கும் தங்கள் அருட்கொடையை அனுபவிக்கும்
பேற்றைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி..

கபீரன்பன் said...

கிருஷ்ணமூர்த்தி சார்,
தங்கள் பாராட்டுரைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி.

தங்களது குடும்பத்தினருக்கும் அம்பிகை எல்லா வளங்களையும் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

கபீரன்பன் said...

எடிட்டர் சார், நல்வரவு.
//வார்த்தை கொண்டு அடக்க முடியாது உமது பணியை, படித்தபின்...எமது மனநிலையை! //

கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்த்தை இங்கே குறிப்பிடுதல் பொருத்தம்.
//வீரியம் உள்ள விதைகளாகப் படிப்பவர் இதயத்தில் தங்கி முளைத்துப் பெருகட்டும் என்று இந்த சரஸ்வதி பூஜை தினத்தன்று அம்பிகையைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் //

வி்தைகள் நன்றாகவே இருப்பினும் மண்வளம் இருந்தால்தானே பலன் கிடைக்கும். தங்கள் மனநிலை நல்ல பக்குவத்தை காட்டுகிறது. குருஅருளும் திருவருளும் பெருகட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

கபீரன்பன் said...

வருக ஜீவி ஐயா

....ஒவ்வொரு சுளையாக எடுத்து,
கற்கண்டென சுவைக்கும் அதை "இந்தாருங்கள்..இந்தாருங்கள்.."
வாரி வழங்கும்......


இப்படி அனுபவிக்கும் வாசகர்களைத் தந்து, எனக்கு அந்த பணிக்கென விருப்பத்தையும் நேரத்தையும் கொடுத்துள்ள இறைவன் அருளுக்கு நானும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.
தங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி

ஜீவா (Jeeva Venkataraman) said...

இரமணரின் பதில் ஆழமானதுதான்!

>>சிந்திப்பதை விட்டு அறிஞர்கள் ஆராய்ச்சியில் இறங்கினால் என்னவாகும். <<
இராமகிருஷ்ண பரமஹம்சர், இதை மிகவும் கோடிட்டுக் காட்டுவார். வார்த்தை ஜாலங்களில் உலகை மயக்கும் பண்டிதர் கூட்டம், தனக்கென உய்வொன்றை அறியாக்கூட்டம் என்பார்.

Life Lessons from a Late Bloomer said...

வணக்கம் கபீரன்பன் ஐயா அவர்களே!

''மரணத்தை வெல்வது தானே ஆன்மீகத்தின் நோக்கம். இப்படி தனக்குள்ள பிரச்சனையை சிந்திப்பதை விட்டு உலகத்தைத் திருத்தும் கவலைகள் அர்த்தமற்றவை என்பதை பகவான் குறிப்பால் உணர்த்தினார்.''

அறிவுக் குருடர்கள்!!! ஆழமான சத்தியமான வார்த்தைகள். தங்களின் ஒவ்வொரு பதிவும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. கற்பதற்கு எல்லையே இல்லை. இந்த விஜயதசமி நன்னாளில் உண்மையான அறிவையும், மனதையும் தர வேண்டி தேவியை வேண்டுகிறேன்.

தங்களின் சேவைக்கு நன்றி மாத்திரம் சொன்னால் போறாது. தங்களின் கட்டுரை தொகுப்பை என் தாயிடம், சகோதரிகளிடம் கொடுக்க ஆவல் கொண்டிருகிறேன்.

விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உமக்கு மரணக் கட்டுப்பாடு ( death control) பற்றித் தெரியுமா ?”//

ஹா ஹா ஹா!
இரமணர் கேட்டது எதிர்க் கேள்வியே அல்ல! நல்ல பதில் தான்!

ஞானிகள், தங்களை நோக்கி அறியாமையால் வீசப்படும் கேள்விகளையும் கூட ஒதுக்கியோ, எள்ளி நகையாடாது,
கேள்விகளையும் வேள்விகளாக மாற்றித் தர வல்லவர்கள்!

இதைக் கேட்டவருக்கான மனத்தில் கண்டிப்பாக ஒரு தேடல் எண்ணம் தோன்றியிருக்கும்! ஏனென்றால் இரமணரின் கேள்வியில்(பதிலில்) உள்ள வீர்யம் அப்படி!

//இறைவனின் திருநாமத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு இயல்புகளைச் சொல்லி அவற்றின் மேன்மையை பல்வகையாய் விளக்குவார்கள் ஆனால் அதன் மூலம் உன்னை அடையும் வழியை மட்டும் அறியமாட்டார்களே//

ஹா ஹா ஹா
எல்லா விளக்கும் (விளக்கமும்) விளக்கல்ல, சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு!

//இதற்கான தீர்வை ஏற்கனவே கபீர் சொல்லியிருக்கிறார்

செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவை நூறு படிப்பதும் வீணே//

அருமை!
படிப்பது வேறு, செபிப்பது வேறு!
அறிவது வேறு! உணர்வது வேறு!
கபீர்தாசர் என்ன இயல்பாகச் சொல்லி விட்டார்! - செபித்து செயங் கொள்!

கலைமகளின் திருநாளாம் இன்று, வெறுமனே படிக்காது, செபித்து செயங் கொள்ளப் பதிவிட்டமைக்கு நன்றி கபீரன்பன் ஐயா!

கபீரன்பன் said...

வாங்க ஜீவா,

//...வார்த்தை ஜாலங்களில் உலகை மயக்கும் பண்டிதர் கூட்டம், தனக்கென உய்வொன்றை அறியாக்கூட்டம் என்பார்.//

சத்தியமான வார்த்தைகள். எடுத்துக்காட்டுக்கு நன்றி.

கபீரன்பன் said...

///இதைக் கேட்டவருக்கான மனத்தில் கண்டிப்பாக ஒரு தேடல் எண்ணம் தோன்றியிருக்கும்! ஏனென்றால் இரமணரின் கேள்வியில்(பதிலில்) உள்ள வீர்யம் அப்படி!///

அன்பரை மட்டுமல்ல என்றைக்கும் யாவரையும் சிந்திக்க வைத்துக் கொண்டிருக்கிறது பாருங்கள்!. அதுவே பொய்யா விளக்கு. :)

மிக்க நன்றி.

கபீரன்பன் said...

நல்வரவு சுமி ராமமூர்த்தி

//...தங்களின் கட்டுரை தொகுப்பை என் தாயிடம், சகோதரிகளிடம் கொடுக்க ஆவல் கொண்டிருகிறேன்.//

தங்களுக்கு டவுன்‍லோடு செய்து கொள்வதில் சிரமம் இருப்பின் தனி அஞ்சலில் அனுப்பி வைக்கிறேன். கபீர் மணத்தைப் பரப்ப தங்களுக்கு உள்ள ஆர்வம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
மிக்க நன்றி.

yrskbalu said...

gi,

only 10 chapter there in pdf file.

totally how many chapters ?

if you give 2 or 3 parts it will be more usefull to readers.

we will wait . no problem.

கபீரன்பன் said...

Welcome Balu sir,

//totally how many chapters ?//

so far 74 essays have appeared in the blog. For keeping the download size small I am experimenting with the size of the e-book. Hence I restricted to 10 essays in Part-I.

I am also looking for ways to make some improvisations, corrections before publishing the other Parts.

Any suggestions ? please inform me.

Thank you for your support.

கீதா சாம்பசிவம் said...

கபீரின் நிழலிலும் ஒதுங்கினேன், இந்தப் பதிவையும் இன்றே படிச்சேன், பெரியவங்க எல்லாம் வந்து பாராட்டி இருக்காங்க, நான் என்ன சொல்றது?? சும்மா நல்லா இருக்குனோ, மேற்கோள்களைக் காட்டுவதோ சரியில்லை. மெளனமாய் அநுபவிக்கிறேன்.

இந்த மாம்பழம் பத்தி நம்பிக்கையிலும் படிச்சேன். பழத்தைச் சாப்பிடணுமே தவிர, கொட்டைகளை எண்ணக்கூடாதுனு! மாம்பழம் தொடர்ந்து கிடைக்கட்டும்.

கபீரன்பன் said...

வாங்க கீதா மேடம்

ரொம்ப நன்றி

///...பழத்தைச் சாப்பிடணுமே தவிர, கொட்டைகளை எண்ணக்கூடாதுனு!..//

சாப்பிட்டப்பறம் கூடவா எண்ணக்கூடாது ? :)))

கீதா சாம்பசிவம் said...

எண்ணிக்குங்க, வரேன் அப்புறமா! :P

கிருத்திகா said...

உண்மைதான். அவனருளாலே அவன் தாழ் பணிந்து என்பது தானே வழக்கு. நமக்கு எதெது வாய்க்க அருளுள்ளதோ அது மட்டுமே வாய்க்கும். எனவே கிட்டுவதெல்லாம் அவனருள். இதை உணர்ந்து கொண்டால் அந்தகன் முன்னே ஆடற்கலை.. இலாது போகும். மிக்க நன்றி..