Monday, March 09, 2009

மாசற்றார் வன்சொல் இனிது

ஒருவகையில் உலகத்தோர் யாவரும் இனிப்பு வியாதியால் அவதிப்படுபவர்கள்தான். 
இரத்தத்தில் இனிப்புச் சத்து அளவு கூடும் பொழுது அது பல வியாதிகளுக்கு ஆரம்பமாக சொல்லப்படுகிறது. சுரக்கும் இன்சுலின் அளவு சரியாக இல்லாவிட்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதில்லை.

 அதைக்கட்டுக்குள் வைப்பதற்கு மருத்துவர் சொல்லும் வழிமுறைகளோ வேப்பங்காயாக கசக்கிறது. ”பிறந்தவன் எல்லாம் சாகத்தான் வேண்டும்.நல்லா சாப்பிட முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? வர்றது வரட்டும்.நான் அதைப்பத்தி (சர்க்கரை கட்டுபாடு)எல்லாம் கவலைப்படுவதில்லை” என்று சக வியாதியஸ்தன் சொல்லும் வரட்டு தத்துவம் இனிக்கிறது. 

 சிறுவர்களுக்கு கார்டூன் படமோ, கம்ப்யூட்டர் கேம்ஸோ இனிக்கிறது; வீட்டுப்பாடம் செய்ய கசக்கிறது. 

 வாலிப வயதில் பருவம் செய்யும் கோளாறுகள் இனிக்கிறது; வீட்டில் பெரியவர் சொல்லும் புத்திமதி கசக்கிறது. 

 அலுவலகத்தில் மேலதிகாரியை கரித்துக் கொட்டுவது இனிக்கிறது;நம் தவறுகளை அவர் சுட்டிக்காட்டுவது கசக்கிறது. 

 அரசியலை விவாதிப்பது இனிக்கிறது ; ஆன்மீகம் பற்றி கேட்கக் கசக்கிறது 

 சத்சங்கம் கூடும் பொழுதும் கூட- ஒரு சுவாமிஜியை இன்னொரு சுவாமிஜிக்கு ஒப்பிடுவது இனிக்கிறது; தத்தம் குறைகளை எண்ணிப்பார்க்க கசக்கிறது. 

 இப்படி மனம் பலவிதமான ’இனிப்பைத்’ தேடித் தேடிப் பற்றிக் கொள்கிறது. அதனால் வரக்கூடிய தீங்குகளை எண்ணிப் பார்க்க மறுக்கிறது. 

 இதை கபீர் இப்படி உரைக்கிறார்

  मीठा सब कोई खात है,विष है लागे धाय ।
 नीम ना कोई पीवसी, सब रोग मिट जाय ॥ 

  இனிப்பை யாவரும் விரும்புவர், விடமாய் மாறுது பின்னாலே 
 வேம்பை விரும்புவர் இல்லை,பிணியாவும் நீங்குது அதனாலே 

 மாற்று : 

  தின்பார் தெவிட்டாமல் தித்திப்பு, தீங்கு தொடர்வது தெரியார் 
  தின்பதற்கு கசந்திடும் வேம்பு, தீர்க்கும் பலபிணி அறியார்

நமது பிறப்பை நல்ல முறையில் நடத்திச் செல்வது நமக்குள்ள நல்லொழுக்கங்கள் தான். ஒழுக்கமும்,சத்சங்கமும் வைராக்கியத்தை வளர்க்கின்றன. அவை நல்லமுறையில் நம்முள்ளே வேர் கொண்டிருந்தால் நம் மனது எவ்வளவு தான் ஆசையெனும் காற்றால் அலைகழிக்கப்பட்டாலும் நிலை பெயராது உறுதியாக எதிர்கொள்ள முடியும். 

 இல்லாவிட்டால், தாயுமானவர் சொல்வது போல்,”ஆசையெனும் பெருங்காற்றூடு இலவம் பஞ்சு எனவும் மனது அலையும்..”. இலக்கு இல்லாமல் வாழ்நாளெல்லாம் திரிந்து கெடுதலை உண்டு பண்ணிக் கொள்ளும். தெளிந்த வைராக்கியம் தான் இன்பத்தை நாடும் நம் இச்சைகளைக் கட்டுப்படுத்தும் ”இன்சுலின்”. அதை தொடர்ந்து கடைப்பிடித்தால் உரிய நேரத்தில் உடன் நின்று நம்மை பல இக்கட்டுகளிலிருந்து காப்பாற்றும். 

  நாகமஹாஷயரைப் பற்றிப் படித்திருக்கிறோம். அவருடைய தந்தை தீனதயாள் உலக வாழ்க்கையின் பற்றை நீக்கியிருக்கவில்லை. பரம ஏழை ஆனாலும் மிகுந்த ஒழுக்கம் உடையவர். சாதுக்களின் சத்சங்கத்தைப் போற்றியவர். அவர் வேலை செய்து வந்த பால்ஸ் கம்பெனியாரிடம் மிகுந்த நாணயமான ஊழியர் என்ற பெயர் பெற்றிருந்தவர். அவர் ஒருமுறை வியாபார விஷயமாக சரக்கை நாராயண கஞ்ச்-க்கு படகில் கொண்டு செல்லும் போது அந்தி சாய்ந்தது.படகை ஒரு ஓரமாக நிறுத்தச் சொல்லி இரவை அங்கே காட்டினருகே கழித்தார். அதிகாலையில் காலைக் கடன்களுக்காக காட்டுக்குள்ளே சென்றார். விளையாட்டாக மண்ணைக் கீறி கொண்டு சென்றவர் கண்களில் ஒரு நாணயம் தென்பட்டது. மண்ணை சற்றே விலக்கி இன்னும் அகழ்ந்து பார்த்தார்.ஒரு பானை நிறைய புராதன தங்க நாணயங்கள்.அவருடைய மூச்சே நின்று விடும் போலாயிற்று. ஒரு சில கணங்கள் சுதாரித்துக் கொண்டு ஒரே ஓட்டமாக சென்று படகை அவிழ்த்து பயணத்தை தொடருமாறு படகோட்டியை அவசரப்படுத்தி, விரைவாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

”பணத்தாசை என்னை சிறிது சிறிதாக ஆட்கொள்வதை உணர்ந்தேன். அதனால்தான் மனசஞ்சலம் தீவிரம் அடையுமுன் அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டேன்.அது எந்த அந்தணனுக்கு சொந்தமாயிருந்ததோ! அந்தணனுடைய சொத்தை அடைவதால் வரும் பாவம் என்னை சேருமே என்ற கவலை பிடித்துக் கொண்டது”என்றார். 

 அவருடைய மனக்கட்டுப்பாடு அவரை எவ்வளவு பெரிய சங்கடங்களிலிருந்து காப்பாற்றியதோ இறைவனே அறிவான். ஆனால் அவருடைய ”வைராக்கியம் என்கிற “இன்சுலின்” வேண்டிய நேரத்தில் வேலை செய்து இச்சையை கட்டுக்குள் வைத்ததென்னவோ உண்மை. 

 மனம் ஈடுபட விழையும் ஒரு செயலை யாராவது தடுக்கும் பொழுது கசப்புணர்ச்சி ஏற்படுகிறது.ஆனால் வேகத்தடைகள் சாலையில் அவ்வப்போது தேவைப்படுவது போல நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்கையை நெறிப் படுத்தும் கட்டுபாடுகள் அவசியம். 

 வள்ளுவரும் இடித்துரைக்கும் பெரியவர்களின் அவசியத்தை வலியுறுத்துகிறார். 
  இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே 
  கெடுக்கும் தகைமை யவர் ? (447) 

  தவறு செய்யும் போது கடிந்துரைத்து அறிவுரை கூறும் சான்றோர்கள் துணையுடைய மன்னனை அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர் எவருமில்லை. 

 மேற்பார்வைக்கு அவர்களுடைய மொழி கடுமையாக தெரிந்தாலும் அது மிகுந்த அன்பினாலும் உரிமையாலும் வரும் வெளிப்பாடு.

 ஈசன், தன்னைக் காலால் உதைத்த கண்ணப்பனுக்கே அருளினான்.மலர் கணை தொடுத்த மன்மதனை கண்ணாலேயே சுட்டெரித்தான். இந்த அழகான உண்மையை பொருத்தி இக்கருத்தை சொல்கிறார் சிவபிரகாச சுவாமிகள். 

   மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது 
   ஏனையவர் பேச்சுற்ற இன்சொல் பிறிது என்க-
    ஈசற்கு நல்லோன் எறி சிலையோ நன்னுதால் 
    ஒண்கரும்பு வில்லோன் மலரோ விருப்பு 

 வேப்ப மரத்து இலை,பூ மற்றும் எண்ணெய் பல மருத்துவ சக்திகள் உடையவை. நீரிழிவு நோயை குறைக்க உதவும் பாகற்காயும் கசக்கிறது. 

 கசப்பின் தன்மையே குணம் தருவது. இனிப்பின் தன்மை கேடு விளைவிப்பது.உடல்நலக் கண்ணோட்டத்தோடு மட்டுமல்லாமல் ஆன்மீகக் கண்ணோட்டத்துடனும் அதே உண்மையாகும். 

 எனவே தான் கபீர்,வைராக்கியம் சத்சங்கம் போன்றவை ஆரம்பத்தில் கசந்தாலும் அவற்றை மனமுவந்து ஏற்றுக்கொள்ள பரிந்துரை செய்கிறார்.ஏனெனில் அவற்றிற்கு நம் பிறவி பிணிதீர்க்கும் சக்தி உள்ளது. 

 ஞானிகளின் பார்வை சாதாரண உலக நடப்புகளையும் ஆன்மீகக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம். அழகம்மையார் ரமணருக்கு பிடிக்குமே என்று அப்பளம் இடுவதற்காக உளுந்து,பிரண்டை சீரகம் எல்லாம் சேகரித்தார். அப்பளமிடுவதற்கு மகனை உதவிக்கு அழைக்கிறார். 

அந்த ஞானிக்கோ அதில் விருப்பமில்லை.அப்போது அவர் ஞான-அப்பளம் இடுகிறார். 

 ’நான்’எனும் உளுந்தை ‘யார்’ என்ற விசாரமான திரிகையில் அரைத்து, சத்சங்கம் என்னும் பிரண்டை ரசத்தோடு சமம்-தமம் என்பதான சீரகத்தையும் மிளகையும் கூட்டி......ஞான அக்னியில் கொதிக்கும் சுத்தப்பிரம்ம் என்னும் நெய்யில் பொரித்து தானே பிரம்மமாகும் அப்பளத்தை புசிப்பாய் என்று சுவையான ஞான அப்பளத்தை நமக்காக தருகிறார். 

 இதோ அந்த ஞானப்பாடலை கேட்டும் படித்தும் அனுபவியுங்கள். (இதை வலையேற்றிய அன்பருக்கு நன்றி)

13 comments:

  1. //மேற்பார்வைக்கு அவர்களுடைய மொழி கடுமையாக தெரிந்தாலும் அது மிகுந்த அன்பினாலும் உரிமையாலும் வரும் வெளிப்பாடு.//

    சத்தியமான வார்த்தைகள். உணர்ந்துள்ளேன்.

    பாடலை வலையேற்றியவர் யாருனும் சொல்லி இருக்கலாமோ?? அவர் வெளிப்படுத்திக்க விரும்பலை போல! :((((

    ReplyDelete
  2. மாசற்றாரிடத்திருந்து வன்சோல் என்பது வராது, அப்படியே வந்தாலும் அது நமக்கு நன்மை சொல்வதாக, நம்மைத் திருத்துவதாகவே இருக்கும் என்பதை தெளிவாக கூறியிருக்கிறீர்கள்.

    எப்போதும் போல இந்த இடுகையிலும் பல தகவல்களை அள்ளித் தந்திருக்கிறீர்கள் கபீரன்பரே!.

    ReplyDelete
  3. //பரம ஏழை ஆனாலும் மிகுந்த ஒழுக்கம் உடையவர்.//
    அதிசயமாக ஏழைகளிடம்தான் நேர்மையை அடிக்கடி காண முடிகிறது!
    மற்றொருமொரு அருமையான பதிவு.

    ReplyDelete
  4. வாங்க கீதா மேடம்.

    //பாடலை வலையேற்றியவர் யாருனும் சொல்லி இருக்கலாமோ?? //

    அந்த சலனப் படத்தை சுட்டினால் நேராக யூ-ட்யூப் வலைப்பக்கத்துகே செல்லும் (நான் சொல்லித்தான் தெரியணுமா என்ன !) அங்கே வலையேற்றிய அன்பர் விவரங்கள் தெரியும். பலர் புனைப் பெயர்களில் கணக்கு வைத்து இருப்பதால ‘அன்பர்’ என்று பொதுவாகச் சொல்வது வழக்கமாகி விட்டது.

    நன்றி

    ReplyDelete
  5. நல்வரவு மதுரையம்பதி

    பாராட்டுகளுக்கு நன்றி

    ReplyDelete
  6. வாங்க திவா சார்,

    //அதிசயமாக ஏழைகளிடம்தான் நேர்மையை அடிக்கடி காண முடிகிறது! //

    ஏழையின் சிரிப்பில் இறைவன் :)

    ஊக்கம் தருகிற பின்னூட்டத்திற்கு நன்றி

    ReplyDelete
  7. இனிப்பும், கசப்பும் பற்றி அருமையா சொன்னீங்க ஐயா. கசப்புக்கு பழகிக் கொள்வதே நல்லது.

    ///தின்பார் தெவிட்டாமல் தித்திப்பு, தீங்கு தொடர்வது தெரியார்
    தின்பதற்கு கசந்திடும் வேம்பு, தீர்க்கும் பலபிணி அறியார்//

    இது நல்லாருக்கு. மிக்க நன்றி.

    ReplyDelete
  8. நல்வரவு கவிநயா,

    படித்து கருத்து சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  9. செல்வம் கூட வேண்டாதவர் காலில்தான் போய் விழுகிறது போலும். நாமும்தான் நாயாய் அலைகிறோம். ஊம்ஹூம்.. ஒரு இடத்தில் கூட ஒரு ரூபாய் நாணயம் கூட காலில் தட்டவும் இல்லை. கண்ணில் படவும் இல்லை.

    அருமையான அர்த்தம் கொண்ட கட்டுரை.

    திவாகர்

    ReplyDelete
  10. அழ அழச் சொல்வார் தமர் என்றல்லவா சொல்லியிருக்கிறது !

    நாம் அழவேண்டும் என்பதற்காகவா ! இல்லை . அழுதுகொண்டே இருக்கக்கூடாதே என்பதறகாகவே
    சொல்லுகின்றனர்.

    நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு என்பார் வள்ளுவர்.

    ஆயினும், இப்பொழுதைய சமுதாயமோ அல்லது சுற்றங்களோ ஒருவிதமான் புகழ்ந்துரைக்கும்
    நபர்கள் மத்தியிலே இருக்கத்தான் விரும்புகிறது. ஒருவன் இடித்துரைப்பின், அவனை குழுவை
    விட்டு வெளியே அல்லவா துரத்திவிடுகின்றனர் !

    ஆகவே, நல்ல எண்ணம் கொண்டவர்களும் பல சமயங்களில் வாளா இருந்துவிடுகின்றனர்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  11. நல்வரவு திவாகர் ஐயா

    ///ஊம்ஹூம்.. ஒரு இடத்தில் கூட ஒரு ரூபாய் நாணயம் கூட காலில் தட்டவும் இல்லை. கண்ணில் படவும் இல்லை///

    :))))

    வரவிற்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  12. வாருங்கள் சூரி ஐயா,

    ////ஒருவன் இடித்துரைப்பின், அவனை குழுவை
    விட்டு வெளியே அல்லவா துரத்திவிடுகின்றனர் !

    ஆகவே, நல்ல எண்ணம் கொண்டவர்களும் பல சமயங்களில் வாளா இருந்துவிடுகின்றனர்.
    ////

    அன்பின் அருமை தெரியாதவர் பற்றி கவலைப்பட்டு ஆகப்போவது என்ன?

    ”ஸப் கோ ஸன் மதி தோ பகவான்” என்று பிரார்த்திக்கத் தான் முடியும்.

    ReplyDelete
  13. எனவே தான் கபீர்,வைராக்கியம் சத்சங்கம் போன்றவை ஆரம்பத்தில் கசந்தாலும் அவற்றை மனமுவந்து ஏற்றுக்கொள்ள பரிந்துரை செய்கிறார்.ஏனெனில் அவற்றிற்கு நம் பிறவி பிணிதீர்க்கும் சக்தி உள்ளது

    சில நாட்களாக என் உடம்பு மிகவும் கஷ்டத்தில் இருந்தது. இன்று ஒரு பிளாக் நண்பரிடம் பேசும்போது எப்படி எடுத்துக் கொண்டீர்கள் என்று கேட்டார். ஆண்டவன் வீடு. நல்ல குடும்பம், வாகனவசதி,பதவி, படிப்பு இதைஎல்லாம் ஆண்டவன் கொடுத்தபோது மட்டும் சந்தொஷமாக எடுத்துக் கொண்டால் போதுமா? அதுபோல் கஷ்டத்தையும் அவன் கொடுத்தாகவே எடுத்துக்கொண்டு அவனிடம் தாங்கும் சக்தியையும் கூடவே கொடுக்கும்[pஅடி கேட்டுக் கொண்டேன்.

    உங்களது இந்த வார்த்தைகளும் அப்பளப் பாட்டும் மனதுக்கு சாந்தியை அளிக்கிறது. நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி