பள்ளியில் யாவருக்கும் சொல்லிக் கொடுக்கப்படும் பிரபலமான ஆங்கில குழந்தைப் பாடல் ஒன்று:
Pussy cat pussy cat where have you been
I had been to London to look at the queen
pussy cat pussy cat what did you do there
I frightened a little mouse under the (queen's) chair
பூனை ஒன்று அரசவையில் நுழைவதால் அதற்கு பெருமை ஏதும் இல்லை. ஆனாலும் இவ்வுலகில் ஆதாயம் ஏதேனும் கிடைக்குமா என்ற தன்னலத்தால் பல பெரும்புள்ளிகளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு சுற்றிச் சுற்றி வருவோர் அனேகம். பல்லிளித்து கால்பிடித்து தகுதிக்கு மேல் புகழ்ந்தேனும் செல்வாக்கு உடையவரின் நல்லெண்ணத்தை சம்பாதித்து கொள்ள துடிக்கிறது அவர்கள் மனம்.
இதற்கானக் காரணம் பிறரை வைத்து தம்மை தாமே எடை போட்டுக்கொள்ளும் பலவீனமே.
நம்மை சுற்றி இருப்பவர் சிறப்பாக வாழ்கின்றனர் எனக் கருதினால் நாமும் அவர் போல் ஆவதற்கு விரும்புகிறோம். அப்போது அதற்கான வழி முறைகளை தேட ஆரம்பிக்கிறது உள்ளம்.
அதன் முதல்படியாக நம் விருப்பங்களுக்கு ஊக்கம் கிடைக்கும் சூழ்நிலைகளையோ நண்பர்களையோ நாடுகிறது. அவர்கள் செய்யும் பல காரியங்கள் ஏற்புடையாதாகிறது. ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் “ஊரோடு ஒத்து வாழ்” என்பது போன்ற பழமொழிகளின் துணைகொண்டு ஏற்புடையதாக்கிக் கொள்கிறோம். செல்வாக்கு உள்ளவர்கள் ஆதரவைத் தேடி சமூகத்தில் நமது செல்வாக்கையும் உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.
எல்லாக் காலத்திலும் எல்லாத் துறையிலும் கண்டு வரும் மனித இயல்பு இது.
கபீர்தாஸரும் இத்தகைய சந்தர்பவாதத்தை கேலி செய்கிறார்.
स्वारथ कू स्वारथ मिलै, पडी पडी लंबा बूब ।
निस्प्रेही निराधार को, कोय न रांखै झूंब ॥
தன்னலம் மிக்கார் கூடின், நீண்டு முழங்குதே ஆரவாரம்
தன்னல மில்லாத் தீனருக்கோ, ஏது மில்லை புகழாரம்
(மிக்கார்= மிகுந்தவர்கள் )
மாற்று:
கட்டித் தழுவி கவிபுனைவர் தன்னல நெஞ்சர் சேர்கையிலே
எட்டித் தள்ளி விலகிடுவர் தியாகச் செம்மல் வருகையிலே
சுயநல அடிப்படையில் எழும் நட்பில் எவ்வித ஆழமும் இருப்பதில்லை என்பதை யாவரும் அறிவர். ஏனெனில் ஒருவன் கஷ்ட தசையில் சிக்கிக் கொள்ளும் போது முன்பு கூடி குலாவிய நண்பர்கள் காணாமல் போய் விட்டிருப்பார்கள். இந்த உறவு காரண காரியங்களோடு கூடியது.
குளத்திற்கும் பறவைகளுக்கும் உள்ள உறவு போன்றது.
“வற்றிய குளத்தை பறவைகள் தேடி வருவது கிடையாது;
வாழ்க்கையில் வறுமை வருகின்ற போது உறவுகள் கிடையாது “
என்பது திரைப்படப் பாடல் ஒன்றில் வரும் மிகவும் பொருள் பொதிந்த வரிகள்.
சான்றோர்கள் நிலை முற்றிலும் மாறானது. அவர்கள் கொள்ளும் நட்பு வலுவானது. பிரதிபலன் கருதாதது. பிறர் தம்மை எந்த கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர் என்பது பற்றிய சிந்தை யில்லாதவர்கள். உலகத்தவரால் கவனிக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு சிறுமை ஏதும் வந்துவிடுவதில்லை. அவர்களை அரண்மனைக்கு வெளியே கட்டப்பட்டிருக்கும் யானைக்கு ஒப்பிடுகிறார் குமர குருபர சுவாமிகள்.
வேத்தவை காவார் மிகன் மக்கள், வேறு சிலர்
காத்தது கொண்டாங் குவப்பெய்தார் -மாத்தகைய
அந்தபுரத்து பூஞை புறங்கடைய
கந்துகொல் பூட்கை களிறு.
{கந்துகொல் பூட்கை = கட்டுத்தறியை உடைக்கும் வலிமை உடைய ; புறங்கடைய களிறு= வெளியே நிற்கும் யானை (போல) வேத்தவை =வேந்தன் அவை ; மிகல் மக்கள் காவார்= அரசவைதான் பெருமையென்று மேன்மக்கள் காத்திருக்கமாட்டார்: வேறுசிலர் = மேன்மக்கள் அல்லாதவர் ; மாத்தகைய அந்தபுரத்து பூஞை= பெருமைக்குரிய அரண்மனை அந்தபுரத்தை சுற்றிவரும் பூனை (போல்) காத்துக் கொண்டாங்கு உவப்பு எய்தார்= பயன் கருதி காத்திரு்ப்போரும் மகிழ்வு அடைவதில்லை. }
அரண்மனைக்கு வெளியே நிற்பதால் யானைக்கு சிறுமை உண்டாவதில்லை. அரண்மனைக்குள்ளே சுற்றித் திரிவதால் பூனைக்கு யாதொரு பெருமையும் இல்லை. அந்தபுரம் என்று சொல்ல வந்தது ’யாரும் நுழைய முடியாத இடத்திலும்’ புகும் தன்மை உடையது பூனை என்பதை குறிக்க வந்ததாகும்.
கபீரும் குருபரரும் சொல்ல வருவது ஒன்றே. சான்றோரைத் தேடி, போற்றி அவர் அடி ஒட்டி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாத வாழ்க்கை வெறும் போலி வாழ்க்கை ஆகும். அதனால் எவரும் பயனடைவதில்லை. காலம் வீணே போய்க்கொண்டிருக்கும் என்பதே.
வெறுமனே அருமைன்னு சொன்னாப் போதாது...வேற எப்படிச் சொல்றதுன்னும் தெரியல்ல... எனக்கு இப்படி எழுத வரல்லைன்னாலும், எழுதும் உங்களது இடுகைகள்ளைப் படிக்க, உங்களைப் போன்றவர்களுடன் தொடர்பில் இருக்க வைத்த கடவுளுக்கு நன்றி.
ReplyDelete//ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் “ஊரோடு ஒத்து வாழ்” என்பது போன்ற பழமொழிகளின் துணைகொண்டு ஏற்புடையதாக்கிக் கொள்கிறோம். செல்வாக்கு உள்ளவர்கள் ஆதரவைத் தேடி சமூகத்தில் நமது செல்வாக்கையும் உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.//
சத்ய வார்த்தைகள்.....தினசரி பார்க்கிறோம், அனுபவிக்கிறோம். :)
இது சந்தர்ப்ப வாதம் இல்லை, மந்தைத் தனம் [herd mentality].மிருக உணர்வுகளில் இருந்து இன்னமும் விடுபடவில்லை என்பதைக் குறிக்கும் தன்மை, அவ்வளவுதான்!
ReplyDeleteஸ்ருஷ்டியில், கீழ்நிலையில் இருந்து படிப்படியாகவே உயருகிற மாதிரி ஒரு ஏற்பாடு இருக்கிறது.இதில் இருந்து விடுபட, அனுபவங்களை அவரவர் தகுதி, தேவைக்கேற்ற மாதிரி, இறையருள் தந்து கொண்டே இருக்கிறது என்பது தான் உண்மை.
நேற்றுக் கபீருக்குக் கிடைத்தது, இன்றோ, நாளையோ, நாளை மறுதினமோ நமக்கும் கிடைக்கும். ஒளியை நோக்கி உயரும் தாவரங்களைப் போல, ஆத்ம தரிசனத் துணையோடு பரமாத்மாவை நோக்கி உயரும் வரம் நமக்கும் அளிக்கப் பட்டிருக்கிறது.
//சான்றோரைத் தேடி, போற்றி அவர் அடி ஒட்டி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாத வாழ்க்கை வெறும் போலி வாழ்க்கை ஆகும். //
ReplyDeleteஇன்றைய அரசியல் வாழ்க்கையில் தினந்தோறும் இத்தகைய போலி வாழ்க்கை வாழும் நபர்களை மட்டுமே காண முடிகின்றது. சான்றோர் தேடிப் பிடிக்கவேண்டி இருக்கிறது. வழக்கம்போல் அருமையான ஒப்புவமைகளோடு கூடிய பதிவு. நல்ல சிந்தனைக்கும், சிந்திக்கத் தூண்டுவதற்கும் நன்றி.
வருக மதுரையம்பதி,
ReplyDeleteதங்கள் பாராட்டுக்கு நன்றி.
ஏதோ தோன்றுகிறது..எழுதுகிறேன். அவ்வளவுதான்.
//..உங்களைப் போன்றவர்களுடன் தொடர்பில் இருக்க வைத்த கடவுளுக்கு நன்றி...//
நானும் அதே அளவுக்கு உங்களைப் போன்று தொடர்ந்து உற்சாகம் ஊட்டி வரும் வாசகர்களுக்கு மிகவும் கடமைப்பட்டவன்தான். மிக்க நன்றி
நல்வரவு கிருஷ்ணமூர்த்தி ஐயா
ReplyDelete//மிருக உணர்வுகளில் இருந்து இன்னமும் விடுபடவில்லை என்பதைக் குறிக்கும் தன்மை, அவ்வளவுதான்!//
மிகவும் உண்மை
///இதில் இருந்து விடுபட, அனுபவங்களை அவரவர் தகுதி, தேவைக்கேற்ற மாதிரி, இறையருள் தந்து கொண்டே இருக்கிறது என்பது தான் உண்மை.///
அந்த இறையருள்தான் மகாத்மாக்களின் தொடர்பு மூலமும் வாக்குகள் மூலமும் மனிதனை (வேகமாக) முன்னேற செய்கிறது என்று நினைக்கிறேன்.
நம்பிக்கை ஊட்டும் கருத்துகளுக்கு நன்றி
வாங்க கீதா மேடம்,
ReplyDelete///அரசியல் வாழ்க்கையில் தினந்தோறும் இத்தகைய போலி வாழ்க்கை வாழும் நபர்களை மட்டுமே காண முடிகின்றது///
அடடே நீங்க அரசியல்ல வேறே இருக்கீங்களா ! ;)))))
//அருமையான ஒப்புவமைகளோடு கூடிய பதிவு //
அந்த பெருமை குமரகுருபர சுவாமிகளைச் சேரும்.
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு நன்றி
//சுயநல அடிப்படையில் எழும் நட்பில் எவ்வித ஆழமும் இருப்பதில்லை என்பதை யாவரும் அறிவர். ஏனெனில் ஒருவன் கஷ்ட தசையில் சிக்கிக் கொள்ளும் போது முன்பு கூடி குலாவிய நண்பர்கள் காணாமல் போய் விட்டிருப்பார்கள். இந்த உறவு காரண காரியங்களோடு கூடியது. //
ReplyDeleteஅதனால் 'உடுக்கை இழந்தவன் கை போல' என்கிற உதாரணத்தை எடுத்தாண்டார் போலும், திருவள்ளுவப் பெருமான்.
நெஞ்சில் பதிகிற மாதிரி வழக்கம் போல நேர்த்தியான பதிவாய்
முத்திரை குத்திக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து நிறைய யோசிக்கவும் வைக்கிறது.
படிப்பனுவம் தந்தமைக்கு மிக்க நன்றி, கபீரன்ப!
//அந்தபுரத்து பூஞை புறங்கடைய
ReplyDeleteகந்துகொல் பூட்கை களிறு//
என்னவொரு உவமை!
அடடா! பூனை அரண்மைனையைச் சுற்றிச் சுற்றியே அதன் ஆயுளை முடித்துக் கொள்ளும்!
யானை வெளியில் இருந்தாலும், அரண்மனை மட்டுமன்றி உலகத்தை அறியும்!
மேன்மக்கள் குணமே குணம்!
//பல்லிளித்து கால்பிடித்து தகுதிக்கு மேல் புகழ்ந்தேனும் செல்வாக்கு உடையவரின் நல்லெண்ணத்தை சம்பாதித்து கொள்ள துடிக்கிறது அவர்கள் மனம்.
ReplyDeleteஇதற்கானக் காரணம் பிறரை வைத்து தம்மை தாமே எடை போட்டுக்கொள்ளும் பலவீனமே//
சத்தியமான வார்த்தைகள் கபீரன்பன் ஐயா!
இது லெளகீகத்துக்கு மட்டுமன்றி ஆத்திகச் சூழலுக்கும் மிகவும் பொருந்தும்! இதனால் தான் போலித் துறவிகளும் உருவாகிறார்கள்!
பிறரை வைத்து தம்மை தாமே எடை போட்டுக்கொள்ளும் பலவீனம்!
இதனால் அடுத்தவரை எடை போட்டு, அதில் தம்மை தாமே எடை போட்டுக்கொள்ளும் பலவீனம்!
தன்னை விடச் சின்ன பூனை அரண்மனைக்குள் இருக்கே-ன்னு யானை யோசிக்குமா? எடை போட்டுக் கொண்டிருக்குமா? அதன் கம்பீரமே தனி!
தம்முடைய பலம் என்று தனியாக இல்லை! பகவானின் பலம் என்று உணர்ந்து விட்டால் ஆத்திகன் ஆன்மீகன் ஆகிறான்! பதிவை இரண்டு முறை விரும்பிப் படித்தேன்!
ஆதரவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜீவி ஐயா.
ReplyDelete///தொடர்ந்து நிறைய யோசிக்கவும் வைக்கிறது.///
விரைவிலேயே பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி
நல்வரவு கே.ஆர்.எஸ்
ReplyDelete//பதிவை இரண்டு முறை விரும்பிப் படித்தேன்! //
ரசித்து இரண்டு பின்னூட்டங்களாக இட்டதற்கு நன்றி.
///தன்னை விடச் சின்ன பூனை அரண்மனைக்குள் இருக்கே-ன்னு யானை யோசிக்குமா? எடை போட்டுக் கொண்டிருக்குமா?///
மனிதனுடையே மனதின் மூலப்பிரச்சனையே சதா ”ஒப்பிடுதல்” தான். இதை தவிர்த்தாலே காணாமல் போன பாதி மகிழ்ச்சி திரும்பி வந்துவிடும். ’ஒப்பிடுதல்’ இல்லாததால் பிற ஜீவன்களுக்கு அந்த அவஸ்தை இல்லை :)
கருத்து பரிமாற்றத்திற்கு மிக்க நன்றி
//சான்றோரைத் தேடி, போற்றி அவர் அடி ஒட்டி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாத வாழ்க்கை வெறும் போலி வாழ்க்கை ஆகும்.//
ReplyDeleteசான்றாண்மை என்ன என்பதே பலருக்கும் தெரிவதில்லை. ஒரு குறையாக இதைக் கூறவில்லை; அந்த அளவுக்கு அது அருகிவிட்ட நிலை.
தற்போதைய சூழ்நிலையில் சான்றோர் இயற்றிய நூல்களைத் துணைக் கொள்வதுதான் ஒரே வழி.
‘கபீரின் கனிமொழிகள்’ அத்தகையதொரு வாய்ப்பை அளித்து வருகிறது.
தேவ்
வருகைக்கு நன்றி தேவராஜன் ஐயா,
ReplyDelete///சான்றாண்மை என்ன என்பதே பலருக்கும் தெரிவதில்லை. ஒரு குறையாக இதைக் கூறவில்லை; அந்த அளவுக்கு அது அருகிவிட்ட நிலை.///
எனக்கும் இது அடிக்கடி மனதில் தோன்றுகிறது. நல்ல நூல்களை துணை கொள்வது ஒன்றுதான் எக்காலத்திற்கும் துணை வரும் என்பதை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. அவரவர் பாதையை அவரவரே தான் அமைத்துக்கொள்ள வேண்டும். வழித் துணை கிடைத்தால் மகிழ்வோம்.
தொடர்ந்து வழிகாட்டவும். நன்றி
சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு
ReplyDeleteகாரணம் பிறரை வைத்து தம்மை தாமே எடை போட்டுக்கொள்ளும் பலவீனமே.//
ReplyDeleteநூற்றில் ஒரு வார்த்தை இது.
பலவீனத்தைப் பலர் தமது பலம் எனவும் நினைக்கின்றனர்.
இங்கே திராசும் தவறு. எடைக்கல்லும் தவ்று.
நிறுப்பவனின் கண்ணும் பழுது.
இந்த உண்மை புரியுமுன்னே
இத்தரணியில் பலர்
தலை சாய்ந்து விடுதலும் உண்மை.
'தான் ' என்பது யார் என்றும் அந்த ' தனக்கு ' எது தேவை என ஒரு தெளிவு
வேண்டும்.
அத்தெளிவு பெற தியானம் ஒன்றே வழி. இதயக்கமலத்தில் இறைவனை நிறுத்தியவர்
தான் எனபது யாரென் தானே உணர்வர்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
நல்வரவு முனைவர் கல்பனா அவர்களே. தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி.
ReplyDeleteமிக்க நன்றி
வருக சுப்புரத்தினம் ஐயா,
ReplyDelete///இங்கே திராசும் தவறு. எடைக்கல்லும் தவ்று.
நிறுப்பவனின் கண்ணும் பழுது ///
மிகப் பொருத்தமாக தவறுகளின் கூட்டணியை விளக்கி விட்டீர்கள். :))
///தனக்கு ' எது தேவை என ஒரு தெளிவு வேண்டும்.
அத்தெளிவு பெற தியானம் ஒன்றே வழி ///
தெளிவுக்கான மருந்தையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி
//அரண்மனைக்கு வெளியே நிற்பதால் யானைக்கு சிறுமை உண்டாவதில்லை. அரண்மனைக்குள்ளே சுற்றித் திரிவதால் பூனைக்கு யாதொரு பெருமையும் இல்லை.//
ReplyDeleteஅருமையான உதாரணம்!
ரொம்பவே ரசிச்சேன்!
//’ஒப்பிடுதல்’ இல்லாததால் பிற ஜீவன்களுக்கு அந்த அவஸ்தை இல்லை :)//
ReplyDeleteஅருமையாகச் சொன்னீர்கள். ஆறறிவு இருப்பதால்தானே பிரச்சனை. நிறைய 'அறிந்தாலே' அவஸ்தைதான் போலும்.
நன்றி தி.வா. ஐயா
ReplyDeleteரசித்து, கருத்து சொன்னமைக்கு நன்றி
கவிநயா நல்வரவு ,
ReplyDelete///நிறைய 'அறிந்தாலே' அவஸ்தைதான் போலும்...///
கொஞ்சம் அறிந்த உடனேயே ”நிறைய தெரிஞ்சுக்கிட்டோம்” அப்படீன்னு அதுக்குள்ளேயே இன்னொரு அவஸ்தை வேற இருக்கு :))))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
"சான்றோரைத் தேடி, போற்றி அவர் அடி ஒட்டி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாத வாழ்க்கை வெறும் போலி வாழ்க்கை ஆகும். அதனால் எவரும் பயனடைவதில்லை. காலம் வீணே போய்க்கொண்டிருக்கும் என்பதே."
ReplyDeleteஉண்மைதான்....