Monday, June 08, 2009

பக்தி வலையில் படுவோன்

புகைவண்டியில் பயணம் செய்யும் போது, நமக்கு சம்பந்தமே இல்லாத நபர்களின் பல ரசமான உரையாடல்களை கேட்க முடிகிறது. அவற்றில் பல, நேரம் கழிவதற்கு பயன்படுகிறது, சில வாழ்க்கைக்கு பாடமாகலாம், இன்னும் சில சிந்திக்க வைக்கலாம். அப்படி சிந்திக்க வைத்த ஒரு நிகழ்ச்சி:

தொழிற்சாலை வாழ்க்கையில் தங்களுடைய பழைய அதிகாரி ஒருவரைப் பற்றிய உரையாடலின் சாரம்.

முதலாம் நபர் : மனுசன் ரொம்ப கடிசு தான். வேலைன்னு வந்தாச்சுன்னா எல்லாப் பசங்களும் பயந்து நடுங்குவாங்க

இரண்டாம் நபர் : ஆனா அதே அளவுக்கு நல்ல மனசும் கூட... பாருங்க ! ஒரு நாளு இன்கிரிமெண்ட் பத்தல, அப்படி இப்படின்னு பேசிகிட்டு இருக்கிறப்போ அவரு கேட்டாரு நீ பணத்தை எதில போட்டு வச்சிருகேன்னு. நானும் கிண்டலா பணம் இருந்தாத்தானே போட்டு வைக்கறதுக்கு அப்படீன்னு பதில் சொன்னேன்.
அவரு சிரிச்சு கிட்டே ’முதல்ல ஏதாவது ஒரு ப்ளாட் வாங்கி போடு. பத்து வருசம் கழிச்சு பத்து மடங்கு வெலைக்கு போகும். நீ இன்கிரிமெண்ட் நம்பிக்கிட்டிருந்தேன்னா இப்படியே தான் இருப்பே’ ன்னு சொன்னாரு. நானும் பணத்துக்கு எங்க சார் போறதுன்னு கேட்டேன். அதுக்கு அவரு பிஃஎப் எதுக்கையா இருக்குன்னு கேட்டாரு. அப்போ 25000 ரூபாய்க்கு பீபி குளத்துக்கு பக்கத்தில ப்ளாட் வாங்கி போட்டேன். அவரே மேலே பேசி ஒரே வாரத்துல ஃபி.எஃப் பணத்தை ரிலீஸ் பண்ணினாரு. இன்னிக்கு அங்க ரேட் அஞ்சு லட்சத்துக்கு மேலே.


இரண்டாம் நபரின் வார்த்தைகளில் பெருமை தெரிந்தது. சரியான நேரத்தில் வழிகாட்டிய அதிகாரியை நன்றியுடன் நினைத்து பார்க்கவும் செய்தது.

எல்லா அரசாங்கங்களும் தங்களுடைய குடிமக்களுக்கான சேம நலத்தைப் பற்றி பல திட்டங்கள் நடைமுறை படுத்தியுள்ளன. நமது நாட்டில் அது தொழிலாளர் சேம வைப்பு நிதி (Employee Provident fund). இது ஓய்வு பெற்ற பின் ஒருவருக்கு வழங்கப்படுவது. அதிலும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வட்டியை ஓய்வூதியமாகவும் அவருடைய காலத்திற்குப் பின் அவரை நம்பியிருக்கும் குடும்பத்தார்க்கு மொத்தத் தொகையாகவும் கொடுக்கப் படுகிறது.

சேமிப்பு நிதியிலிருந்து குடும்ப விசேஷம் போன்றவற்றை காரணம் காட்டி கடனாக பெற்றுக்கொள்ளலாமே ஒழிய நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடியாது. திருப்பிக் கட்ட வேண்டும். ஆனால் அசையா சொத்து அல்லது திருமணத்திற்காக எடுக்கும் பணம் கடனாகாது.

சேமிப்பு நிதியை நல்ல வழியில் பயன்படுத்தும் வழியை சொல்லி அதற்கான ஏற்பாடும் செய்திருந்தார் அந்த அதிகாரி.

மைக்ரோ லெவலில் மனிதர்கள் தங்களை ரட்சித்துக்கொள்ள இப்படி ஒரு ஏற்பாடு செய்து கொண்டிருந்தால் மேக்ரோ லெவலில் மனிதப் பிறவியை கடைத்தேற்றும் பொறுப்பு உள்ள இறைவனும் ஒரு ஏற்பாடு செய்யாமலா விட்டிருப்பான் ?

அப்படி அவன் ஏற்படுத்தியிருக்கும் வைப்பு நிதி தான் ’பக்தி’ அக்கௌண்ட் அல்லது ”பக்தர் சேம வைப்புக் கணக்கு
நம்முடைய எல்லா வினைகளும் காலக்கிரமத்தில் பலன்கள் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்த ’பக்தி’ கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும் வைப்பு மட்டும் எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவனே அறிவான். அது ஒரு ரிசர்வ் ஃபண்ட்
அந்த கணக்கு ஒரு அளவை எட்டியதும் அவனே ஒரு அதிகாரியை (குருவை) அனுப்பி அதை மேற்கொண்டு எப்படி பெருக்கிக் கொள்வது என்பது பற்றி வழிகாட்டுகிறான். அதன் மூலம் மிக விரைவிலேயே நமது பக்தி பிரபாவம் பெருகி நம்மை அவனிடம் கொண்டு சேர்க்கிறது.

பக்திபாவம் பெருகப் பெருக மற்ற வினைகள் அற்றுப் போகின்றன. அந்த வினைகள் செயலிழந்து போவதை அவித்த விதைக்கு ஒப்பிடுகிறார் இடைக்காட்டு சித்தர்.

அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே -பத்தி
அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே.


பக்தி உணர்ச்சி மேலிட்டால் அது பழைய வினைகளையும் செயலிழக்க வைக்கும் வல்லமை உடையது; பக்தி இல்லாதவர் வினைச் சுழலிலேயே சிக்கித்தவிப்பர்; கதிகாண முடியாது என்பதெல்லாம் சித்தருடைய உரையிலிருந்து புலனாகிறது.

அதனால்தான் அவ்வப்போது இருப்பிற்கு ஏற்ப அதிகாரிகள் மூலம் அதை தீவிரப்படுத்துக்கிறான் இறைவன்.

ஆனால் வினைகளை அவிக்கும் அளவுக்கு பக்தி கணக்கில் இருப்பு இருந்தால் தானே அதை செயலாக்க முடியும் ? நம் பயணம் துரிதமடையும் ?

இந்த சேம வைப்பு கணக்கில் இருப்புக் கணக்கு எப்படி ஏறுகிறது ?

ஏதோ ஒரு வேலையாக எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம். மனமெல்லாம் அந்த வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. வழியிலே ஒரு குழந்தை ஏந்திய சிறுமி பிச்சைக்காக கையை ஏந்துகிறாள். நம்மை அறியாமலே அவளுக்கு பாக்கெட்டில் இருக்கும் எட்டணாவையோ ஒரு ரூபாயோ போட்டுச் செல்கிறோம்.

இன்னொருமுறை நெரிசல் மிக்க பேருந்து நிலையத்தில் எங்கு செல்வது என்று புரியாது திகைத்து வழிகேட்கும் மூதாட்டியை அவருக்கு உரிய பேருந்தில் அழைத்துச் சென்று ஏற்றி விட்டிருப்போம்.
மற்றொரு முறை வங்கியில் காசோலை எழுதத் தெரியாத அன்பருக்கு அதை பூர்த்தி செய்து பணம் எடுப்பதற்கு உதவி செய்திருப்போம்....

சம்பளம் வாங்கியதும் பிடித்தல்களைப் பற்றி கவலைப்படாமல் கையிலுள்ள பணத்திற்காக திட்டம் போடுவது போல நம் சிந்தனை ஓட்டம் நம் வேலையை பற்றியதாக இருப்பதால் இவை எதுவும் நினைவில் நிற்பதில்லை, பிரதிபலன் கருதாது செய்யப்பட்ட இக்கருமங்களுக்கு என்ன பலன் இருக்க முடியும்?

இறைவனின் கணக்கு மிகச் சரியாக வேலை செய்வதால் இவற்றையெல்லாம் விட்டு விடுவதிலை. அதை நம் பெயரில் பக்தர் சேம வைப்பு கணக்கில் சேர்த்து விடுகிறான்.

வீட்டில் ஒருவருக்கு உடல் சரியில்லை, நோன்பு நேர்க்கிறோம். சரியாவதும் இல்லாததும் விதிப்படி நடக்கிறது. ஆனால் நோன்பு நேர்த்ததின் பலன் எந்த கணக்கில் சேர்க்கிறது?

மழைக்காகவோ குளிருக்காகவோ வேலைக்காரி பழைய துணிகளைக் கேட்டு வாங்கி செல்கிறாள். அதை யாரும் கணக்கு பார்ப்பதில்லை. அன்னதானம் செய்கிறேன் என்றோ கூழ் ஊத்துகிறோம் என்று நன்கொடை கேட்டு வருவோர்க்கு பத்தோ இருபதோ கொடுத்து அனுப்புகிறோம், இவற்றுக்கானக் கணக்கு எங்கே வைக்கப்படுகிறது ?

இப்படி எண்ணிறந்த முறையில் அன்பின் விளைவால் வெளிப்படும் தன்னலமற்ற ஒவ்வொரு செயலையும் அவரவர்க்கான பக்தர் சேம நல வைப்பில் சேர்த்து விடுகிறான். அது என்றைக்கிருந்தாலும் அவருடைய நலத்திற்கே பயன்படுத்தப்படுகிறது.

எத்தனை யுகங்கள் ஆனாலும் அந்தக் கணக்கு மறக்கப்படுவதில்லை என்று கபீர்தாஸர் உறுதி அளிக்கிறார்.

भक्ति बीज पलटै नहीं, जुग जाय अनन्त ।
ऊंच नीच घर अवतरै, होय सन्त का सन्त ॥


பத்தியெனும் வித்துக்கு அழிவில்லை, யுகம் அனந்தம் கழியினுமே
முத்தருக் கில்லை குடிமேல் கீழென்றும், முத்த ரென்றும் முத்தரே


(பத்தி=பக்தி; வித்து =விதை ; முத்தர்= ஞானிகள் ; யுகம் அனந்தம்= கணக்கற்ற யுகங்கள்)

[** கபீர்தாஸ் காலத்தில் ஜாதி வித்தியாசங்கள் மிகவும் தீவிரமாகவே இருந்தது. அவரையும் இழிகுலத்தை சேர்ந்தவர் என்று வெறுத்தவர்கள் உண்டு. பல உண்மையான சாதகர்களுக்கும் கூட இது ஒரு பெரும் மனத்தடையாக இருந்தது. எனவேதான் ஞானியரை அண்டி வழி தேட விரும்புவோர்க்கு குடி பிறப்பைப் பற்றிய எண்ணம் தடையாகி விடக் கூடாது என்ற ஆதங்கத்தில் சொல்லப் பட்டதாக நினைக்க வேண்டிருக்கிறது.]

அன்பின் அடிப்படையில் எழும் எந்த ஒரு செயலும் பக்தியின் வெளிப்பாடுதான். இறைவனுக்கு மிகவும் உவப்பு தருவது அதுவே. அப்போது அவனே இழுத்து அணைத்துக் கொள்கிறான்.

அதை உணர்த்தும் விவிலியத்தில் வரும் சில வரிகள்: (Matthew)

Come, ye blessed of my Father, inherit the kingdom prepared for you from the foundation of the world: (25:34)

for I was hungry, and ye gave me to eat; I was thirsty, and ye gave me drink; I was a stranger, and ye took me in (25:35)...."....,

'I can guarantee this truth: Whatever you did for one of my brothers or sisters, no matter how unimportant [they seemed], you did for me. (25:40)


எம் தந்தையால் ஆசீர்வதிக்கப் பெற்றவர்களே வருக. பிரபஞ்சத்தில் உங்களுக்கெனவே உருவாகப்பட்ட சாம்ராஜ்யம் இதோ.

(ஏனெனில்) நான் பசித்திருந்தேன் எனக்கு உணவளித்தீர்; தாகத்தில் தவித்தேன் அருந்த தண்ணீர் கொடுத்தீர்; நான் அயலாள் ஆயினும் உள்ளே வரவேற்றீர்...

உங்களுக்கு இந்த உண்மையை நான் உறுதியளிக்கிறேன். என்னுடைய சகோதரர்கள் அல்லது சகோதரிகளில் ஒருவருக்கு நீங்கள் ஏது செய்திருப்பினும் - அது முக்கியத்துவமே இல்லாததாய் காணப்பட்டாலும்- அது நீங்கள் எனக்கே செய்ததாகும்.


இப்படி பல ஜன்மாந்திர சேம வைப்புக் கணக்கின் பயனாக இன்று நம் மனம் ஆன்மீக வழிக்கு திரும்பியுள்ளது. ஆன்மீக விஷயங்களை கேட்பதில் நாட்டம் கொள்கிறது. ஞானியர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும் அவர்களை கண்டு அணு்கி உய்வடையவும் விழைகிறது்.

மனிதப் பிறவி கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொண்டால் ஆன்மீகப் பாதையில் நமது முன்னேற்றம் துரிதமாகும். அக்காரணத்தினால்தான் ஞானியரை, அவரது குடி பிறப்பு பற்றிய சிந்தனை அற்று பக்தி உணர்ச்சியோடு அணுக வேண்டுமென்று கபீர் வலியுறுத்துகிறார். ஏனெனில் அவர்களுடைய சத்சங்கம் மூலமாகவே நம் அறியாமை விலகி பக்தியையும் ஞானத்தையும் பெருக்கிக் கொள்ள முடியும்.

பலர் நினைப்பது போல் பக்தி என்பது கடுமையான தவம் அல்ல. மனதில் பக்தி (அன்பு) இல்லாமல் கண்மூடித்தனமாக உடலை வருத்தி செய்யும் நோன்புகளால் பயனில்லை என்பதை திருமூலரும் சொல்லுகிறார்.

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம்குழை வார்க்கு அன்றி
என்போன் மணியினை எய்த வொண்ணாதே.


இறைவன் ஆராதனைக்கென தன்னுடையே எலும்பையே விறகாக்கி, தன் தசையை அறுத்து தீயில் பொரித்து நைவேத்தியமாய் படைப்பினும் என்னைப்போல் அன்போடு உள்ளம் உருகி நெகிழ்வார்களுக்கல்லாமல் இறைவனை அடைய முடியாது.

இடைக்காட்டுச் சித்தர், விவிலியம், திருமூலர் யாவரும் சொல்வதை வைத்துப் பார்த்தால் அன்பும் பக்தியும் ஒன்றே. பிறரிடத்து காட்டும் தன்னலமற்ற உதவிகள் அனைத்தும் அன்பின் வெளிப்பாடே. அதை பக்தியின் கணக்கிலே இறைவன் சேர்த்துக் கொள்கிறான். பக்தியினால் பழைய வினைகள் அழிந்து போகும் (அவித்த வித்து).

பக்தியுடன் கூடிய நம்முடைய சிறு சிறு செயல்களின் பலன் ஆன்மீகத்தில் மேலும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை நல்லவர்கள், சாதுக்கள் சேர்க்கை போன்றவற்றின் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

கண்ணன் மூலமும் கீதையில் அதே உறுதிமொழி வழங்கப்படுகிறது.

“न हि कल्याण-कृत् कश्चित दुर्गतिम् तात गच्छति" : (6:40)

சத் காரியங்களில் ஈடுபட்டவனுக்கு துர்கதி என்பது கிடையாது.


எதை வைத்து கண்ணன் இந்த உறுதி மொழி கொடுத்தான் என்ற பின்ணணியை கபீர்தாஸர் நமக்குத் தெளிவாக சொல்லிவிட்டார். "எத்தனை யுகங்கள் ஆனாலும் அழியாத சேமிப்புக் கணக்கா" ! சரி சரி. கபீர்தாஸர் மாதிரி ஆசான் இருக்கும்போது நமக்கென்ன கவலை.

23 comments:

 1. /அன்பின் அடிப்படையில் எழும்
  எந்த ஒரு செயலும் பக்தியின் வெளிப்பாடுதான்.
  இறைவனுக்கு மிகவும் உவப்பு தருவது அதுவே.
  அப்போது அவனே இழுத்து அணைத்துக் கொள்கிறான்./

  /பலர் நினைப்பது போல் பக்தி என்பது கடுமையான தவம் அல்ல.
  மனதில் பக்தி (அன்பு) இல்லாமல் கண்மூடித்தனமாக
  உடலை வருத்தி செய்யும் நோன்புகளால் பயனில்லை
  என்பதை திருமூலரும் சொல்லுகிறார்./

  அருமை

  ReplyDelete
 2. வழக்கம் போல!!!! :)))))))

  ReplyDelete
 3. பக்தி என்பதும் ஒருவகை தவம் தான். தவமாக,இங்கே செய்யப்படுவது தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதைத் தவிர்த்தலே. நான் உனக்குத் தொண்டன், உன்னுடைய அடியவன், தாசன், உன்னுடைய அடிப்பொடி எனத் தன்னைத் தாழ்த்திகொள்ளலே, உடையவன் பால் நம்மை நிலைநிறுத்துகிறது.

  நாதனது கருணையையே வேண்டி நிற்கும் பத்தினிப் பெண் போல, தன்னை ரக்ஷித்துக் கொள்ள சக்தியிருந்தும், என் செயலாவதொன்றுமில்லை, என்று அசோக வனத்தில் சீதை, ராமனால் மீட்கப் படுவதற்குக் காத்திருந்தாளே, அது ஒரு வித நிலை. உத்தம நிலை.

  ராமனுடைய கணைக்குத் தப்ப முடியாமல், எங்கெங்கோ அடைக்கலம் தேடி மறுக்கப் பட்ட நிலையில், மனமில்லை, அறியவில்லை என்றாலும் கூட, காகாசுரன், ராமனின் திருவடிகளிலேயே வந்து விழுந்தானே, அப்போது கூட, தலை திருவடியில் படாமல், வால் பகுதி இருக்குமாப் போலே விழுந்தது கடை நிலை. அப்போதும் கூட, சீதை, கருணையோடு, இளைத்து விழுந்த காகத்தின் தலை ராமனின் திருவடியில் படுமாப் போலே திருப்பி வைத்து, ராம பாணத்தின் பிடியில் இருந்து தப்புவித்தாள் என சொல்வதுண்டு.

  அதே மாதிரி, சேமிப்பு கணக்கில் இருப்பு எதுவும் இல்லாமல், கடன் மட்டும் ஏறிக் கொண்டே போகும் நிலையில், கடனையெல்லாம் தள்ளுபடி செய்து விட்டோம் என்ற அறிவிப்பு வந்து அடிவயிற்றில் பால் வார்த்தார் போலவும் நடக்கும் விந்தைக்கு என்ன சொல்கிறீர்கள்:-)

  ReplyDelete
 4. @ திகழ்மிளிர்

  @ கீதா மேடம்

  நல்வரவு, வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 5. நல்வரவு கிருஷ்ணமூர்த்தி ஐயா,

  //பக்தி என்பதும் ஒருவகை தவம் தான்.//

  உண்மைதான். ஆனால் கட்டுரையில் ”கடுமையான தவமல்ல” என்று குறிப்பிட்டிருப்பது ஆன்மீகம் பற்றிய பெரிய அளவில் நாட்டம் இல்லாத மக்களை வைத்து சொல்லப் பட்டதாகும்.
  கணக்குப்பாடம் என்று பொதுவாக சொன்னாலும் ஆரம்பப்பள்ளி பாடத்திற்கும் உயர்நிலை பள்ளி பாடத்திற்கும் உள்ள வித்தியாசம் போலத்தான் இதுவும் :)

  ///சேமிப்பு கணக்கில் இருப்பு எதுவும் இல்லாமல், கடன் மட்டும் ஏறிக் கொண்டே போகும் நிலையில், கடனையெல்லாம் தள்ளுபடி செய்து விட்டோம் என்ற அறிவிப்பு வந்து அடிவயிற்றில் பால் வார்த்தார் போலவும் நடக்கும் விந்தைக்கு என்ன சொல்கிறீர்கள்:-)///

  தனியார் நிறுவனங்களில் Employer's Contribution என்பதும் உண்டு. நம் உலகச் சுமை அதிகமாகும்போது அதிலிருந்து அவனே தன் பங்குக்கான வைப்பையும் சேர்த்து விடுதலை செய்கிறானோ என்னவோ! :))

  வருகைக்கும் விவரமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 6. Another wonderful post. Reading your post gives me a feeling of having listened to a wonderful Harikadha.

  Your breadth of knowledge and ability to relate different sources amazes me.

  thank you so much for your post

  ReplyDelete
 7. //சத் காரியங்களில் ஈடுபட்டவனுக்கு துர்கதி என்பது கிடையாது//

  என்ன அழகானதொரு வாசகம்!
  மா சுசஹ: = எதுக்கு வீணாக் கவலைப்படுறே?

  அஹம், த்வா, சர்வ பாபேப்யோ...மோக்ஷ இஸ்யாமி = நான், உன் சகல புண்ய/பாவங்களில் இருந்தும் மீட்டு, வீட்டுக்குக் கூட்டிட்டு வரேன்-ன்னு சொல்றேன்-ல?
  :))

  அதனால் துர்கதி என்பதே பாகவதாளுக்கும் பக்தர்களுக்கும் கிடையாது! விபத்தோ, இரவு நேரப் பிரிதலோ, தட்சிணாயனமோ, கிருஷ்ண பட்சமோ....எதுவும் பக்தர்களை அண்டாது! ஏனென்றால் வருங்கால வைப்பு நிதியின் தலைவர் அப்படிப்பட்டவர்! நித்யாபி யுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம்யகம்! :)

  வைத்த மா நிதி-ன்னே பெருமாளுக்கு ஒரு பெயர் இருக்கு! திருக்கோளூர் என்னும் ஊரில்!

  இந்தப் பதிவையும் இரு முறை வாசித்தேன் கபீரன்பன் ஐயா!
  பக்தர் சேம வைப்புக் கணக்கு அடியேனுக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு!

  அடியேன் Credit Card, Embedded Chip வச்சி புண்ணிய பாவக் கணக்குகளைத் திருப்பாவைப் பதிவுகளில் சொல்லப் புகுவேன்! நீங்க வைத்த மா நிதியை வைத்துச் சொல்லியிருக்கீங்க! I like it! :)

  பலவாறானவற்றைச் சொல்லி எளிய அன்பர்களைப் பயமுறுத்தாமல்,
  சேம வைப்புக் கணக்கு-ன்னு எல்லாம் இக்காலத்துக்கு பொருத்தமான உதாரணங்களைக் காட்டுவது, சத்சங்கத்தில் இன்னும் உறுதிப்படுத்தும்! அதுவே குணாணுபவம்! பக்தானுபவம்! பகவத் அனுபவத்தைக் காட்டிலும் பாகவதானுபவம்! கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

  ReplyDelete
 8. சரி சரி. கபீர்தாஸர் மாதிரி ஆசான் இருக்கும்போது நமக்கென்ன கவலை.//

  அதானே!
  :-))

  ReplyDelete
 9. வாருங்கள் ரவி,

  //Another wonderful post.//

  தொடர்ந்து படித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். உற்சாகமூட்டும் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 10. வாருங்கள் கே.ஆர்.எஸ்

  //வைத்த மா நிதி-ன்னே பெருமாளுக்கு ஒரு பெயர் இருக்கு! திருக்கோளூர் என்னும் ஊரில்!//

  என்ன ஒரு பொருத்தமான பெயர்!! அவன் அன்பை வென்றுவிட்டால் அருள் என்னும் நிதியை எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளி வீசுவான்.

  //அடியேன் Credit Card, Embedded Chip வச்சி புண்ணிய பாவக் கணக்குகளைத் திருப்பாவைப் பதிவுகளில் சொல்லப் புகுவேன் //

  கண்டிப்பாக சொல்லணும். விஞ்ஞானம் மெய்ஞானத்திற்கு complimentry . மெய்ஞானமும் செல்ஃபோனும் என்னும் என் பழைய கட்டுரையை நினைவூட்டினீர்கள். நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கவும்.

  //பக்தர் சேம வைப்புக் கணக்கு அடியேனுக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு! //

  தன்யனானேன். வரவுக்கும் கருத்து சொன்னதற்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 11. நல்வரவு தி.வா. சார்,

  வருகைக்கும் ஒப்புதலுகும் நன்றி

  ReplyDelete
 12. இறைவனின் கணக்கு மிகச் சரியாக வேலை செய்வதால் இவற்றையெல்லாம் விட்டு விடுவதிலை. அதை நம் பெயரில் பக்தர் சேம வைப்பு கணக்கில் சேர்த்து விடுகிறான்.
  சரியாகச் சொன்னீர்கள். இறைவந்தான் உலகத்தின் சிறந்த பட்டயக்கணக்காளன்(Chartered Accountant cum Banker )நாம் செய்த நல்ல காரியங்களுக்கு வைப்புநிதியில் சேர்ப்பதைப் போல நாம் செய்த கெடுதல்களுக்கும் அதை கணக்கில் குறைத்துவிடுவான்.நாம் உலகைவிட்டு செல்லும்போது பற்று அல்லது வரவு மிகுதிகேற்ப பலா பலன்களை அளிப்பான்.இருக்கமான என் மனநிலைக்கு உங்கள் வாசகங்கள் அமைதிப் படுத்துகின்றது. நல்ல பதிவு

  ReplyDelete
 13. வாருங்கள் தி.ரா.ச ஐயா

  /// நாம் செய்த கெடுதல்களுக்கும் அதை கணக்கில் குறைத்துவிடுவான் ///

  மனிதர்களுக்கு பூசை முதலிய நித்ய அனுஷ்டானங்களை வகுத்திருப்பது அறியாமல் செய்த பாப காரியங்களை சமனப் படுத்தவும், சிற்சிறு உடல் உபாதைகள் தவிர்க்க முடியாத பாவ காரியங்கள் (எலி, கரப்பான் ஒழிப்பு போன்றவை) போன்றவற்றால் அனுபவிக்க வேண்டிவரும் என்றும் படித்திருக்கிறேன்.

  எல்லா வகை வினைகளுக்கும் ஏதோ ஒரு வகை சமனப்பாடு இருப்பது மிகப்பெரிய விந்தைதான்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 14. எப்போதும் போல கலக்கிட்டீங்க கபீரன்பன் சார். :))

  ReplyDelete
 15. //இடைக்காட்டுச் சித்தர், விவிலியம், திருமூலர் யாவரும் சொல்வதை வைத்துப் பார்த்தால் அன்பும் பக்தியும் ஒன்றே. //

  Truth is Beauty என்றான் ஓர் ஆங்கிலக் கவிஞன்.

  பக்தி= அன்பு?.. ஆமாம். உண்மையான பக்தியின் வெளிப்பாடு எல்லா உயிர்களிடத்தும் இறைவனையேக் கண்டு அன்பு செலுத்தச் செய்யும். இறைவனையும் அன்பையும் வித்தியாசம் காணச் செய்யாதவாறு இதுவே அதுவாகவும், அதுவே இதுவாகவும் பிரித்துப் பார்க்க அறியாத அளவுக்கு பேதலிக்கச் செய்யும். ஈசனின் திருவிளையாடல்களிலும் அன்பையும் பக்தியையும் புலப்படுத்த எத்தனை கதைகள்?.. 'அன்பே சிவம்' என்று சொன்னதும் அதனால் தான் போலும்.
  சிந்திக்க வைத்த பதிவுக்கு மிக்க நன்றி, கபீரன்ப!

  ReplyDelete
 16. படித்து பாராட்டியதற்கு நன்றி மதுரையம்பதி

  வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா

  ReplyDelete
 17. நீங்கள் எழுதியதைப்படிக்கையில் என்றோ நான் எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது. அது இங்கே:
  http://meenasury.googlepages.com/http:meenasury.googlepages.commyhappinessisinmywill

  மற்றவருக்கு உதவி செய்ய வேண்டுமென நினைப்பு வந்தாலே போதும்.
  நம்மிடம் ஒன்றுமில்லையே என நினைத்திடவேண்டாம்.
  கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தவுடனேயே
  கொடுக்க என்ன நம்மிடம் இருக்கின்றது என்பது
  தானாகத் தெரியும். விளங்கும்.

  சென்னையில் அமைந்திருக்கும் " உதவும் கரங்கள் " அமைப்பும், கசுவா கிராமத்தில்
  அமைந்திருக்கும் சேவாலயா பள்ளியுமே இதற்குச் சாட்சியாகத் திகழ்கின்றன.

  சேமிப்புக் கணக்கில் நீங்கள் சொல்லும் மானுட பக்தி, ஒரு பெர்பெசுவடி.
  தோண்டத் தோண்டத் திரண்டு பொங்கும் நீரூற்று.

  தனக்கென வாழாப் பிறர்க்கென வாழும் மனிதர் பலர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்,
  குறையின்றி வாழ்கின்றனர். அக்குழுவில் நாமும் இணைய‌வேண்டுமென்னும் எண்ணமே
  மா தவம்.

  வெல்க மானுட நேயம்.

  சுப்பு ரத்தினம்.
  http://arthamullavalaipathivugal.blogspot.com

  ReplyDelete
 18. "அப்படி அவன் ஏற்படுத்தியிருக்கும் வைப்பு நிதி தான் ’பக்தி’ அக்கௌண்ட் அல்லது ”பக்தர் சேம வைப்புக் கணக்கு”
  நம்முடைய எல்லா வினைகளும் காலக்கிரமத்தில் பலன்கள் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்த ’பக்தி’ கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும் வைப்பு மட்டும் எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவனே அறிவான். அது ஒரு ரிசர்வ் ஃபண்ட்
  அந்த கணக்கு ஒரு அளவை எட்டியதும் அவனே ஒரு அதிகாரியை (குருவை) அனுப்பி அதை மேற்கொண்டு எப்படி பெருக்கிக் கொள்வது என்பது பற்றி வழிகாட்டுகிறான்."

  எவ்ளோ எளிமையா சொல்லீட்டீங்க நினைச்சு பார்க்க பார்க்க ரொம்ப அபூர்வமான உவமையாகவும் எளிதாகவும் இருக்கு...

  ReplyDelete
 19. அவித்த வித்தை - சேர்த்துப்பார்த்தால் என் கண்ணுக்கு அவித்தை என்று வருகிறது!
  :-)

  ReplyDelete
 20. நன்றி சுப்புரத்தினம் ஐயா,

  ///சேமிப்புக் கணக்கில் நீங்கள் சொல்லும் மானுட பக்தி, ஒரு பெர்பெசுவடி.
  தோண்டத் தோண்டத் திரண்டு பொங்கும் நீரூற்று.///

  மிகச் சரியாக சொன்னீர்கள். மா_தவம் யாவரும் மேற்கொண்டு உய்ய வேண்டும்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 21. நல்வரவு கிருத்திகா,

  தமிழில் தட்டுச்சு செய்ய ஏற்பாடு செய்து விட்டீர்களா!. மிக்க மகிழ்ச்சி.

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

  ReplyDelete
 22. வாங்க ஜீவா,

  //அவித்த வித்தை - சேர்த்துப்பார்த்தால் என் கண்ணுக்கு அவித்தை என்று வருகிறது!//

  ஆமாம். மேலோட்டமாகப் பார்த்தால் சட்டுன்னு அப்படித்தான் தோணுது. அதைவிட அவித்தல் என்பதையும் விளக்க வேண்டி வருமா என்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. நல்ல வேளையாக அது பற்றி யாரும் சந்தேகம் எழுப்பவில்லை. :))

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 23. //அன்பின் அடிப்படையில் எழும் எந்த ஒரு செயலும் பக்தியின் வெளிப்பாடுதான். இறைவனுக்கு மிகவும் உவப்பு தருவது அதுவே. அப்போது அவனே இழுத்து அணைத்துக் கொள்கிறான்.//

  அருமையாகச் சொல்லி விட்டீர்கள்.

  மிக்க நன்றி.

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி