Saturday, June 26, 2010

அவனே பரம், அவனே குரு

கங்கைக்கரை ரிஷிகேசத்தில் ஒரு சாது வசித்து வந்தார். தினமும் மதியம் ஊருக்குள் சென்று பிச்சை எடுத்து வந்து கங்கை நதி அருகே அதன் அழகை ரசித்துக் கொண்டு உணவை உட்கொள்வது வழக்கம். ஒருநாள் அந்த சாது வேறொரு சாதுவுடன் வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தார். ஒரு பெரியவர் காரணம் கேட்ட பொழுது தான் தினமும் அமர்த்து உணவு உட்கொள்ளும் பாறை மேல் இன்னொரு சாது வந்து அமர்ந்து விட்டாரென்றும் தனக்கு அதே இடம் வேண்டும் என்று காரணம் காட்டினார்.

“ அப்பா உலகத்தைத் துறந்தேன் என்று பெண்டாட்டி பிள்ளைகளை எல்லாம் விட்டு இங்கே வந்தது இந்த கற்பாறையைக் குறித்து சண்டை போடவா ? இதுவா துறவிக்கு அழகு?” என்று இடித்துரைத்து அவரை அனுப்பினார் அந்த பெரியவர். சுவாமி சிவானந்தர் சொல்லிய கதை இது.

பொதுவாக சாதுக்கள் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது எனும் கொள்கை தொன்றுதொட்டு சொல்லப்படும் கருத்து. இதற்கானக் காரணங்கள் பலவாக இருக்கலாம். ஒரே இடத்தில் இருப்பதால் அந்த சூழ்நிலையை ஒட்டி மனதில் பிடிப்பு ஏற்பட்டுவிடும். பிடிப்பு என்றாலே களிம்பு ஏறியது போலத்தானே ! அதைத் தேய்த்து சுத்தம் செய்வதே பெரிய வேலையாகப் போய்விடும்.

பரதருக்கு மான் குட்டி மேல் ஏற்பட்ட பிடிப்பின் விளைவை பாகவதத்தில் படித்திருக்கிறோம். ஆன்மீக முன்னேற்றத்தில் இவை பெரும் தடையாக அமையக்கூடும்.

இதற்கு முற்றிலும் மாறான ஒரு நிகழ்ச்சியை நான் நேரில் கண்டுள்ளேன்.

தில்லி-ஹாபூர் நெடுஞ்சாலையில் சுமார் இருபது கி.மீ பயணித்த பின்னர் என் தொழிற்சாலைக்கு காஜியாபாத் கான்பூர் நெடுஞ்சாலையில் தினமும் பாதை மாறிச் செல்ல வேண்டியிருந்தது. அந்தத் திருப்பத்தில் ஒரு ஜுலை மாதத்தில் நெடுஞ்சாலையை ஒட்டிய நடைப்பாதையில் ஒரு இளைஞன் தொடர்ந்து சில நாட்களாக அமர்ந்திருப்பதைக் கண்டேன். காலை ஏழரை மணியில் அவன் எங்கிருந்தானோ அதே இடத்தில் மாலை ஆறரை மணியிலும் அமர்ந்திருந்தான். பல நாட்கள் தலைமை அலுவலகத்திற்கு மதியம் தில்லி வரவேண்டிய நேரங்களிலும் உக்கிரமான வெய்யிலை பொருட்படுத்தாது அங்கேயே அமர்ந்திருக்கக் கண்டேன். எப்போதும் ஒரே உடை, ஒரு பேண்ட், ஒரு ஷர்ட். ”யாரு எக்கேடு கெட்டுப் போனா என்ன” என்கிற வகையில் ஒரு அசட்டையான பார்வை.

என் அலுவலக நண்பர்கள் அவன் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பவனாக இருக்கலாம் என்றனர். வீட்டீல் சண்டைப் போட்டுக் கொண்டு வந்திருப்பவனாக இருக்கக்கூடும் என்றனர். எனக்கு என்னவோ அதெல்லாம் பொய் என்பது போல இருந்தது.

நாட்கள் உருண்டன. அவன் நிலையில் மாற்றம் இருக்கவில்லை. ஒரு சில மாலைகளில் ரிக்‌ஷாகாரர்களோ சிறுவர்களோ அவனுடன் பேசிக் கொண்டிருப்பதை காணமுடிந்தது. அவனுக்கு அங்கேயே உடை மாற்றி விடுவதையும், சவரம் செய்து விடுவதையும் கண்டிருக்கிறேன். அவன் ஏன் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தான், ஏனப்படி அமர்ந்திருக்கிறான் என்பது புரியவில்லை. நிமிடத்திற்கு ஒரு வாகனம் மேலும் கீழுமாக அதிவேக கதியில் விரைந்து கொண்டிருக்கும் நெடுஞ்சாலை எதற்காக ? யாரோ அவனுடைய நித்திய தேவைகளைக் கவனித்து கொண்டனர் என்பது புலனாயிற்று.

வானமே கூரை என்று அவன் இரவு பகல் அங்கேயே இருந்தான் என்பது ஓரிரு நாட்கள் இரவில் நேரமான பொழுதில் வீடு திரும்பும் போது கூட துணைக்கு எவெருமின்றீ அங்கேயே அமர்ந்திருப்பது கண்டு உறுதியாயிற்று.

காரை நிறுத்தி அவனருகில் சென்று விசாரிக்கத் துணிவு வரவில்லை. ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன. வடநாட்டின் விறைக்கும் குளிர் சாமானியர்களான எங்களை வாட்டிக்கொண்டிருந்தது. அவன் மட்டும் அங்கேயே இருந்தான். யாரோ கொடுத்திருந்த குளிர் பாதுகாப்பான ஆடைகளைத் தவிர வேறு மாற்றம் தெரியவில்லை. அடர்ந்த மூடுபனி காலத்தில் ஒரு ஆள் மட்டுமே அமரக் கூடிய சிறிய ப்ளாஸ்டிக் கூடாரம் ஒன்றினுள் காலை வேளைகளில் அமர்ந்திருப்பான்.

எவ்விதமான பூஜையோ தியானமோ செய்ததாகத் தெரியவில்லை. எவ்வித மதச் சின்னமும் அணிந்திருக்கவில்லை. என் மனதில் ஏனோ அவன் ஒரு ஆன்மீக சாதகனாக இருக்கக்கூடும் என்று தோன்றியது. அவனுக்கு எந்த குரு என்ன வகையான ஆணையிட்டிருந்தாரோ கண்டிப்பாக அந்த சாதனையில் தீவிரமாக இருந்தான் என்று தோன்றியது.

குளிர் குறைந்து மார்ச் மாதத்தில் வசந்த நவராத்ரியும் வந்தது. ஒரு வருடம் பூர்த்தியாகுமா எனபதைக் காண ஆவலாக இருந்த நிலையில் ஒரு நாள் திடீரென்று மறைந்து விட்டான். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் அசையாமல் திறந்த வெளியில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது என்பது லேசான காரியமா என்ன ?

பின்னர் சுவாமி ராமா வின் Life with Himalayan Masters என்ற புத்தகத்தில் இப்படி ஒரு சாதனை முறை இருப்பதையும் அதற்கு அஜகர விருத்தி என்பது பெயர் என்றும் அறிந்து கொண்டேன். மலைப்பாம்பு போல ஒரே இடத்தில் கிடப்பது.

பாகவத புராணத்தில் விருஷப மன்னன் தன் ஆட்சியை மக்களிடம் ஒப்படைத்து விட்டு வனம் சென்றான். பல வருடங்கள் ஆடையுடனோ அது இல்லாமலோ தேக உணர்வு இன்றி திரிந்து வந்தவன் தன் கடைசி காலத்தில் இந்த அஜகரவிருத்தியை கை கொண்டானாம். எப்படி மலைப்பாம்பு உணவைத்தேடி செல்லாது தான் இருந்த இடத்தில் கிடைக்கும் இரையைத் தின்று படுத்துக் கிடக்குமோ அப்படியே கிடப்பது. இயற்கைக் கடன்கள் கழிப்பதும் அங்கேயே ! அதாவது தேக உணர்வில்லாத நிலையில் அவை தம்போக்கில் தாம் வெளியேறியன. ஆனால் அவைகளினால் எந்த துர்நாற்றமும் எழாது. மாறாக அவன் அமர்ந்த இடத்தினின்று பல மைல் தூரத்திற்கு நறுமணம் காற்றில் பரவியதாம் !!

”ஒருவன் ஏழையாயினும் தன் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள எண்ணக்கூடாது. இந்த ஆத்மா உடலோடு ஒட்டியிருக்க என்ன வேண்டுமோ அவ்வளவிலே அவன் முயற்சிகள் நிற்க வேண்டும். எப்படி ஒரு மலைப்பாம்பு தான் இருக்கும் இடத்திலேயே வரும் இரையைத் தின்று கிடக்குமோ அப்படி ஆசைகளைத் துறந்தவன் கிடக்கவேண்டும்” (பாகவதம் 7.15.15)

சாதுக்கள் ஓரிடத்தில் நிலையாயிருந்து வழிகாட்டுவது அவசியம் என்று கபீர் குறிப்பிடுகிறார்.

बहता पानी निरमला, जो टुक गहिरा होय ।
साधु जन बैठा भला, जो कुछ साधन होय ॥


பாயும் புனலது நிர்மலமே, ஆழ்நிலை நீரும் அங்கனமே |
சாது நிலைப்பதும் அவசியமே, சாதனை நிறைவில் சாத்தியமே ||

ஓடும் நீரில் அழுக்குகள் தங்காது என்று சொல்வர். இதற்கு விஞ்ஞான ரீதியாக இன்று விளக்கங்கள் உண்டு. வேகமான நீரோட்டத்தின் போது அதில் பிராணவாயு அதிக அளவில் கலந்து அழுக்குகளை (chemical oxygen demand ) சுலபமாக ஆக்ஸீகரணம் செய்து விடுகிறது.

அது போல ஒருவர் ஒரே இடத்தில் நில்லாது தொடர்ந்து இறை செபத்தில் மனதை நிறுத்தி பயணம் செய்து கொண்டிருந்தால் இறை செபம் எனும் ஆக்ஸீகரணி மனதை சுத்தமாக வைத்திருக்கும். சிறிய வகையில் மனதைத் தாக்கும் அழுக்குகள் அதிவிரைவில் இறை சிந்தனையாலும் செபத்தாலும் வெளியேற்றப்படும். இதனால்தான் சன்யாசிகள் ஓரிடத்தில் ஓரிரவுக்கு மேல் தங்ககூடாது என்ற வழக்கத்தை வைத்தனர் போலும். பூரண ஞானம் அடைந்த பின்னர் புறவுலகின் தாக்கங்கள் அவர்களை எவ்வகையிலும் பாதிப்பதில்லை. அதனால் அவர்கள் ஒரே இடத்தில் தங்குவதால் அவர்களுடைய மகிமைக்கு குந்தகம் எதுவும் விளைவதில்லை.

[ மிகவும் ஆழமான நீர் நிலைகளில் மீன்கள், ஆமைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் நீரைத்தொடர்ந்து சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் என்பதால் அங்கிருக்கும் நீரும் மிகவும் தூயதாக பயன்பாட்டுக்கு உரியதாக இருக்கும். இது அந்த கால நிலை ஒட்டி சொல்லப்படுவது. இன்று போல் அன்று மாசுப் பிரச்சனைகள் இந்த அளவில் இருக்கவில்லை. அதனால் ஞானிகளின் பரிசுத்த நிலை ஆழமான நீருக்கு ஒப்பிடப்படுகிறது.]

சற்று வேறொரு கோணத்தில்-இன்றைய சூழ்நிலையை ஒட்டி- சிந்திப்போம்.

ஓசோன் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் பிராணவாயு எனப்படும் ஆக்ஸிஜன் தன்னுடைய இயல்பான இரட்டை அணுக்கள் அல்லாமல் மூன்று அணுக்கூறாகத் திகழும். இந்த நிலையில் அதன் சுத்திகரிக்கும் தன்மை அபாரம். மிக மிக நுண்ணிய அளவிலேயே அது பலமடங்கு அழுக்குகளை ஆக்ஸீகரணம் செய்ய வல்லது. கடைகளில் விற்கப்படும் நீர் புட்டிகளில் "Ozonated water" என்கிற வாசகத்தைக் காணலாம். அழுக்கு நீரை சுத்திகரிக்க வல்லது. அதிலிருந்து எழும் துர்நாற்றங்களுக்கு காரணமான வேதிப் பொருட்களையும் நுண்ணுயிர்களையும் அறவே அழித்து விடக்கூடியது.

இந்த ஓசோன் நிலையற்றது. மிகக்குறுகிய கால அளவிலேயே அது தன் மூன்றாம் அணுவை இழந்து மீண்டும் ஆக்ஸிஜனாக மாறிவிடும். இயற்கையில் இடி மின்னல் போன்றவைகளால் உற்பத்தியாகி வாயு மண்டலத்தில் மேற்பகுதியில் இந்த ஓசோன் அதிக அளவில் சேமிக்கப்படுகிறது. கதிரவனின் ஒளியில் வரும் அல்ட்ரா வையலட் கதிர்களை அது தடுத்து அதனால் பூமிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.

சாதாரண மக்களாகிய நாம் இறைவன் திருநாமம் சொல்லிக்கொண்டு ஓரளவு மனதை நம்மளவில் சுத்தமாக வைத்துக் கொள்ள முயன்றாலும் சாக்கடை நீர் போல ஏதோ ஒரு வகையில் உற்பத்தியாகி வெளியேறிக் கொண்டிருக்கும் அழுக்குகளை சுத்திகரிக்க வேண்டிய அவசியம் நேர்கிறது.

அப்போது ஒசோன் போல் செயல் படுபவர்கள் நம்மிடையே வாழும் ஞானிகள்.

அவர்கள் ஓசோன் உற்பத்தி மையமாக விளங்குகிறார்கள். சில சமயங்களில் ஆக்ஸீகரணத்தாலும் சில சமயங்களில் தடுப்பாற்றலாலும் மக்களுக்கு வரும் துன்பங்களிலிருந்து காப்பாற்றுகிறார்கள். நம்முடைய அன்றாட கர்மங்களிலிருந்து எழும் மனமாசுகளை சுட்டெரிக்கிறார்கள்.

அப்படி ’ஓசோன்’’ உற்பத்தியாளரான பின்னர் அவர்கள் ஊர் ஊராகத் திரிய வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை எந்த மாசும் அணுகக்கூட முடியாது. அப்போது அவர்கள் ஒரு இடத்திலேயே இருந்து கொண்டு மக்களை நல்வழிப்படுத்தலாம்.

அதைத்தான் கபீர்தாஸ் சாதனை நிறைவில் சாத்தியமே என்று சொல்கிறார்.

அப்படி சாதனை புரிந்து நம்மிடையே வாழ்ந்த மகான் பூண்டி சுவாமிகள். ரிஷப மன்னனைப் போலவே அஜகர விருத்தியை செய்து காட்டியவர். செய்யார் ஆற்றுக்கரையில் கலசப்பாக்கம் என்ற கிராமத்தில் ஒரு வீட்டுத் திண்ணையை தன் நிலையாகக் கொண்டிருந்தார். யாரிடமும் எதுவும் கேட்டதில்லை. அன்பர்கள் விருப்பப்பட்டதை அவர் அனுமதித்தால் அவருக்கு ஊட்டி விடலாம்.

விவேக சூடாமணியில் ஆதி சங்கரர் ஞானியரைப் பற்றிச் சொல்லியிருப்பதற்கு இலக்கணமாகத் திகழந்தவர்.

Sometimes a fool, sometimes a sage, sometimes possessed of regal splendour; sometimes wandering, sometimes behaving like a motionless python, sometimes wearing a benignant expression; sometimes honoured, sometimes insulted, sometimes unknown – thus lives the man of realisation, ever happy with Supreme Bliss.

அகால நேரத்தில் -இரவில்- வந்திறங்கிய ஒரு பக்தர் தன் அவசரம் கருதி மகானை தரிசிப்பதற்காக திரைச்சீலையை விலக்கிய போது அங்கே சுவாமிகளுக்கு பதிலாக ஒரு மலைப்பாம்பு படுத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டு பயந்து போனாராம். சித்த புருஷர்களின் போக்கை யாரே அறிவார் ?

அவருக்கு காணிக்கையாக வந்த எந்தப் பொருளுமே -பழங்கள் உட்பட- அருகே ஒரு அறைக்குள்ளே போடப்பட்டன. எதுவுமே அழுகி துர்நாற்றம் தந்ததில்லை. அருகே ஈ மொய்க்கவும் இல்லை. அவ்வளவு சுத்தம். அவர் குளித்தது இல்லை உடைமாற்றிக் கொண்டதில்லை. தன்னைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் ”ஓசோனாக” அவர் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த பொழுது மனிதர்களின் வழி முறைகள் அவருக்கு தேவை இருக்கவில்லை போலும். அவரைப்பற்றிய விவரங்கள் பல வலைப்பக்கங்களில் கிடைக்கின்றன.

ஆனந்தவிகடன் வாரப் பத்திரிக்கையின் மூத்த ஆசிரியரான பரணீதரன் (ஸ்ரீதர் ) அவர்களின் பூண்டி சுவாமிகள் பற்றிய கட்டுரையை முருகன் பக்தி என்கிற வலைப்பக்கத்தில் காணலாம். அவர் வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு அபூர்வ சலனப்படமும் காணக்கிடைத்தது. அம்மகானை தரிசித்து மகிழுங்கள்.



(வலையேற்றிய நண்பருக்கு நன்றி)
இன்று- ஜ்யேஷ்ட பூர்ணிமை தினம்- கபீர் ஜயந்தி என்று வாசக அன்பர் திரு ராகவன் அஞ்சல் அனுப்பி உள்ளார். அவருக்கு மனமார்ந்த நன்றி. தலயாத்திரை செல்வது, புண்ணிய நீராடல், சாது தரிசனம் எல்லாவற்றிலும் உயர்ந்தது குருவை அண்டி வணங்குவது. அவ்வாறு குரு அருள் பெற யாவருக்கும் கபீர்தாஸரும் பூண்டி சுவாமிகளும் மற்றும் எல்லா தபஸ்விகளும் அருள் செய்யட்டும் என்ற பிரார்த்தனையுடன் அவரது இன்னொரு ஈரடியையும் மனதில் கொள்வோம்.

तीरथ न्हाये एक फल, साधु मिले फल चार ।
सतगुरु मिले अनेक फल, कहैं कबीर विचार ॥


தீர்த்த நீராடில் பலன் ஒன்று, சாதுவின் தரிசனம் தரும் நான்கு |
சத்குரு தொழுதால் பன்மடங்கு, கபீரா உணர்ந்திடு இதை நன்கு ||


அவனே பரமும் அவனே குருவும்
அவனே அகிலம் அனைத்தும்- அவனேதாம்
ஆனவரே சொன்னால் அவனே குரு எனக்கு
நான் அவனாய் நிற்பது எந்நாள் - தாயுமானவர்

19 comments:

  1. குருவருள் அமைந்தால் திருவருளும் தானே வந்து சேர்ந்து விடுகிறது என்பதை அழகாகச் சொல்லும் கபீரின் வார்த்தைகளை கவனமாக உள்வாங்கிக் கொள்ளும் பாக்கியம் இன்று எனக்குக் கிடைத்தது.

    ReplyDelete
  2. நல்வரவு கிருஷ்ணமூர்த்தி சார்,

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  3. சாதுக்களின் அரிய உயரிய சுவடுகள் அன்பர்களுக்கு அன்றாடம் வழிநடத்தும் வழிகாட்டியாய் அமைந்து அவர்களுக்கு உறுதுணையாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  4. //பொதுவாக சாதுக்கள் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது எனும் கொள்கை தொன்றுதொட்டு சொல்லப்படும் கருத்து. இதற்கானக் காரணங்கள் பலவாக இருக்கலாம். ஒரே இடத்தில் இருப்பதால் அந்த சூழ்நிலையை ஒட்டி மனதில் பிடிப்பு ஏற்பட்டுவிடும். பிடிப்பு என்றாலே களிம்பு ஏறியது போலத்தானே ! அதைத் தேய்த்து சுத்தம் செய்வதே பெரிய வேலையாகப் போய்விடும்.//

    பொதுவாக சாதுக்கள் கூட்டமாகச் செல்வதில்லை எனும் பொருளில் இன்னுமொரு தோஹாவும் படித்த‌
    நினைவு வருகிறது.

    ஸிம்ஹோன் கே நஹின் லேங்கடே, ஹம்ஸோன் கே நஹின் பாந்த்
    ...............................................................ஸாது ந சலை ஜமாத்.

    இரண்டாவது வரியின் முதற்பகுதி நினைவுக்கு வரவில்லை.
    சிங்கங்கள் கூட்டம் கூட்டமாக செல்வதில்லை. ஹம்ஸ பக்ஷிகள் ( வாத்துக்கள் அல்ல )
    கூட்டம் கூட்டமாக செல்வதில்லை.

    அது போல ஸாதுக்களும் கூட்டம் கூட்டமாகச் செல்வதில்லை என்பர்.
    1957ல் திருச்சி ஹிந்தி ப்ரசார சபையில் படிக்கும்பொழுது, இந்த தோஹாவுக்கு பொருள் சொன்ன
    ஆசிரியர், துவக்கத்தில் சொன்னார்: ஸாதுக்கள் பிக்ஷை எடுத்துத்தான் சாப்பிடுவதால், போதிய
    உணவு எல்லோருக்கும் அதே சமயம் கிடைக்காது எனவும் அதனால தான் தனித்தனியாக செல்கிறார்கள்
    எனறார். சிங்கங்கள் ஏன் கூட்டமாகச் செல்வதில்லை எனும் உதாரணத்துடன் ஒத்துப்பார்க்கும்பொழுது
    தமக்குக் கிடைக்கும் இரையை உண்பதில் சண்டை வந்துவிடும் என்றிருக்கிறதே ! ஸாதுக்களுக்கும்
    அப்படியா இருக்கும் ? என வினா எழுப்பிவிட்டு, அவரே தொடர்கிறார்:

    ஸாதுக்கள் ஒன்றே இருந்தால், அல்லது கூட்டமாக சென்றால், எதிர்ப்படும் விஷயங்களைக்குறித்த‌
    தர்க்கங்கள் தூக்கலாகி, தான், தனது என்ற அஹந்தை ஏற்படுவதற்கு ஹேதுவாக அமைந்துவிடும்.
    அதனால் தான் ஸாதுக்கள் கூட்டமாக எங்கும் செல்வதில்லை.

    கபீரன்பன் அவர்கள் மேல் விளக்கத்தை அளித்தால் ஆனந்தம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. dear subburathinam,

    why sadhu going alone?

    - lot of points there. its not like you mentioned.

    out of that - i given my guru YOGIRAMSURATKUMAR informed.

    sadhu/mahan to do cosmic work.
    during that work they dont want any disturbance from anythings.
    they will get angry.
    they doing for benefit of mankind.
    they doing as willing of supreme power.

    you can also refer ramakrishnar/ babaji/


    bio-graphy

    ReplyDelete
  6. வருக ஜீவா,

    தமது சுவடுகளைக் காட்டாமலே செல்லும் சாதுக்கள் எத்தனை பேரோ ! உதாரணத்திற்கு நான் நெடுஞ்சாலையில் கண்ட அன்பர் (?)
    அவர்களை அடையாளம் கண்டு வந்திப்பதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமோ என்னவோ!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  7. நல்வரவு சுப்புரத்தினம் ஐயா,

    //ஸிம்ஹோன் கே நஹின் லேங்கடே, ஹம்ஸோன் கே நஹின் பாந்த்....//
    இந்த தோஹாவை தேடிப்பார்கிறேன்.

    தங்கள் பின்னூட்டத்திலிருந்து புரிந்து கொண்டதை திரு பாலு அவர்களுக்கான பதிலில் இடுகிறேன். தவறாக இருந்தால் தயவு செய்து திருத்தவும்.

    தங்கள் அன்பிற்கு நன்றி.

    ReplyDelete
  8. வருக பாலு சார்,

    //why sadhu going alone?

    - lot of points there. its not like you mentioned....//

    சுப்புரத்தினம் ஐயா சொல்லவந்தது அவருடைய ஹிந்தி ஆசிரியர் கொடுத்த விளக்கத்தைப் பற்றி.

    //ஸாதுக்கள் ஒன்றே இருந்தால், அல்லது கூட்டமாக சென்றால், எதிர்ப்படும் விஷயங்களைக்குறித்த‌
    தர்க்கங்கள் தூக்கலாகி, தான், தனது என்ற அஹந்தை ஏற்படுவதற்கு ஹேதுவாக அமைந்துவிடும்.
    அதனால் தான் ஸாதுக்கள் கூட்டமாக எங்கும் செல்வதில்லை.
    //

    இதில் உண்மை ஓரளவு இருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

    சாதுக்கும் ஞானிக்கும் சாதனை அளவில் வித்தியாசங்கள் இருக்கலாம். முற்றும் உணர்ந்த ஞானி தர்க்கங்களில் ஈடுபடமாட்டார் அல்லது பாதிக்கப்படுவதில்லை. இடைநிலை சாதகர்கள்- அவர்கள் துறவிகளாக இருக்கலாம்- ஞானிகளின் முழுமை அடையாத நிலையில் தர்க்கங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு கேடு விளைவித்துக் கொள்ள நேரிடலாம்.
    அதனாலேயே அப்படி ஒரு விளக்கம் கொடுத்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது.

    தங்கள் ஆர்வமான வாசிப்பிற்கு நன்றி

    ReplyDelete
  9. for replying subburathinam-

    further more i published , under title of -

    YOGI IN COSMIC WORK in yrskbalu.blogspot.com.

    if you interested pl read it.

    you want still clarification i will explain regarding this subject.

    this is good topic. if you understand properly you can eliminate duplicate mahans/ sadhu in our life.

    ReplyDelete
  10. இடைநிலை சாதகர்கள்- அவர்கள் துறவிகளாக இருக்கலாம்- ஞானிகளின் முழுமை அடையாத நிலையில் தர்க்கங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு கேடு விளைவித்துக் கொள்ள நேரிடலாம.

    - yes. correct.

    - it to be appliacable to sadaka also.
    - sankarar / sivanadar insist first - you be in alone.then only you able to know what is you .where will stand now.

    thanks to you for taking good topic.

    ReplyDelete
  11. நன்றி பாலு சார்,

    //yrskbalu.blogspot.com //

    இரண்டு பெரிய மகான்கள் சந்தித்துக் கொண்ட மிக அற்புதமான கட்டுரைக்கு நன்றி

    //” This beggar distributed the prasad to all devotees at the Annamalaiar Temple, for their benefit. Paramacharya has immense love and concern for this beggar.”

    மனதை நெகிழ வைக்கிறது. அவ்ருடைய எளிமைக்கும் பக்திக்கும் தலை வணங்குகிறேன்.

    ReplyDelete
  12. //என் அலுவலக நண்பர்கள் அவன் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பவனாக இருக்கலாம் என்றனர். வீட்டீல் சண்டைப் போட்டுக் கொண்டு வந்திருப்பவனாக இருக்கக்கூடும் என்றனர். எனக்கு என்னவோ அதெல்லாம் பொய் என்பது போல இருந்தது.//

    கிட்டதட்ட ஒன்பது மாதங்கள் வெயிலில், குளிரில் எதையும் பொருட்படுத்தாது ஒரே இடத்தில்..
    நினைத்தாலே 'என்ன இது, ஏன் இப்படி' என்று மனம் முறுக்கிக் கொண்டு விடை தேடித் துடித்துப் பரிதவிக்கிறது. யாருக்கும் தீங்கு நினைக்காத, தனக்குள்ளேயே முடங்கிப் போன சாதுவான ஒரு சாது--
    வெகுஜன நீரோட்டத்திலிருந்து ஒருவர் வித்தியாசமாக விலகி இருந்தாலே
    எப்படியெல்லாம் மற்றவர்கள் எண்ணத் துணிகிறார்கள்.. உள்உணர்வு மட்டும் உறுத்தவில்லை என்றால், அப்படியில்லை என்று மறுக்கவில்லை என்றால் இப்படித்தான் போலும்!

    ReplyDelete
  13. //ஞானிகளின் முழுமை அடையாத நிலையில் தர்க்கங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு கேடு விளைவித்துக் கொள்ள நேரிடலாம்.//

    தர்க்கங்களிலும் இரு கூறுகள் உண்டு.
    தன்னுள் தானே, தனக்குத் தானே தர்க்கங்களை நிகழ்த்திக் கொள்ளல்.
    ஆரம்பப் படிகளில் கூட ஒருவர் இப்படி
    தனக்குள் தானே நிகழ்த்திக் கொள்ளும் தர்க்கத்தின் மூலமே, குறைந்தபட்சம் ஞானத்தின் வாசற்படிகளையாவது தொடமுடியும். பிறருடான தர்க்கத்தை தவிர்ப்பதற்குக் காரணமும் அந்த ஞானம் தான். தர்க்கத்தின் மூலம் ஸ்தாபிக்க வேண்டியதில்லை என்கிற
    ஞானத்தின் அடிப்படையில். அதனாலேயே ஞானவான் தனக்குள் தானே வாழும் ஞானத்திற்கே வாழ்க்கைப்பட்டுப் போகிறான்.

    -- என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. வருக ஜீவி ஐயா,

    //..தனக்குள் தானே நிகழ்த்திக் கொள்ளும் தர்க்கத்தின் மூலமே, குறைந்தபட்சம் ஞானத்தின் வாசற்படிகளையாவது தொடமுடியும்.//

    தாங்கள் சொல்லியிருப்பது போல் இது அவசியமான ஒன்று. விசார மார்க்கம் என்பது வெளியே கேட்டுக்கொண்டோ தேடிக் கொண்டோ இருப்பதல்ல. தனக்குள்ளேயே கேள்வி எழுப்பிக் கொண்டு தகுந்த விடைக்கானக் காலத்தை எதிர் நோக்கியிருப்பது. அந்த அமைதியில் தான் விடை வரும் போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் மனதிற்கு வருகிறது என்று கருதுகிறேன்.

    இடுகையுடன் பின்னூட்டங்களையும் படித்து முக்கியமான கருத்து ஒன்றை எடுத்து சொல்லியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. பல நாட்களுக்கு முன் .. நான் வேலை செய்யும் மருத்துவ மனை சென்று என் மோட்டார் சைக்கிளை டாக்டரின் வீட்டில் வழக்கமாக ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு செல்வேன். திடீரென்று ஒரு நாள் அங்கு வேறு ஒருவர் சைக்கிளை நிறுத்தி இருந்தார். முண முணத்துக்கொண்டே வேறு இடத்தில் என் வண்டியை நிறுத்தினேன். அடுத்த நாளும் அதே இடம் அதே சைக்கிள். சட்டென்று கோபம் தலைக்கேறியது. அடுத்த வினாடி இன்னொரு எண்ணம் உதித்தது. இதை சொந்தம் கொண்டாட என்ன உரிமை இருக்கிறது? இடமோ பிறருடையது. அப்படி இடத்தை வாங்கியே இருந்தாலும் போகும்போது இதை எடுத்துப்போக முடியாது. ஆறு அடி மண் கூடத்தேவையிலை. எரித்துவிடுவர். அப்படி இருக்க இந்த நிலையில்லாத விஷயத்தில் ஏன் இப்படி கோபப்பட வேண்டும்?
    இப்படி சிந்தனை வந்ததும் எல்லாம் சரியாகி விட்டது!

    ReplyDelete
  16. வருக தி.வா சார்,

    //...அடுத்த வினாடி இன்னொரு எண்ணம் உதித்தது. இதை சொந்தம் கொண்டாட என்ன உரிமை இருக்கிறது? இடமோ பிறருடையது...//

    இப்படி, பக்குவப்பட்ட மனதிற்குள் மட்டும் தான் தோன்றும். இடம் இருந்தும் சிலர் தம் வீட்டின் அருகே வண்டிகள் நிறுத்தப்படுவதை இப்போது ஆட்சேபிப்பதைக் காண்கிறோம். அது அவர்களுக்கு பாத்தியதை உள்ள இடமும் அல்ல. சர்கார் சாலை. அப்படி இருந்தும் வீம்பு சண்டைகள் எழுகின்றன.

    நடைமுறை கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  17. ஓ.எஸ். மாத்தினதிலே புக்மார்க் பண்ணி வச்சிருந்தது போயிடுச்சு, மறுபடி பண்ணணும், மறந்து போகுது, அதான் தாமதமாய்ப் படிச்சதுக்குக் காரணம்! :)))))

    ReplyDelete
  18. //பின்னர் சுவாமி ராமா வின் Life with Himalayan Masters என்ற புத்தகத்தில் இப்படி ஒரு சாதனை முறை இருப்பதையும் அதற்கு அஜகர விருத்தி என்பது பெயர் என்றும் அறிந்து கொண்டேன். மலைப்பாம்பு போல ஒரே இடத்தில் கிடப்பது.//

    இந்த அஜகர விருத்தி பற்றி இப்போத் தான் கேள்விப் படுகிறேன். நன்றி.

    //அப்போது ஒசோன் போல் செயல் படுபவர்கள் நம்மிடையே வாழும் ஞானிகள்.//

    மிக மிக அருமையாக விளக்கம், தெளிவாகவும் இருக்கு, சின்னக் குழந்தைக்குக் கூடப் புரியும்படி. நன்றி.

    அப்புறம் அந்த வீட்டு வாசல்லே வண்டிகள் நிறுத்தறது பத்தி எனக்கு வேறுவித அபிப்பிராயம். வீட்டுக்குள்ளே இருக்கிறவங்க வெளியே வரமுடியாதபடிக்கு, நம்ம வண்டியை வெளியே கொண்டுவர முடியாம நிறுத்தினா கோவிக்காம முடியாதுனு தோணுது!, சொந்த அநுபவம். வீட்டு கேட்டுக்கு நேரே நிறுத்தாமல் கொஞ்சம் தள்ளி நிறுத்திக்குங்கனு சொன்னாலே நாம் தான் பொல்லாதவங்கனு நினைப்பாங்கனு இப்போத் தான் தெரியுது! :))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  19. வருக மேடம்,

    //வீட்டுக்குள்ளே இருக்கிறவங்க வெளியே வரமுடியாதபடிக்கு, நம்ம வண்டியை வெளியே கொண்டுவர முடியாம நிறுத்தினா கோவிக்காம முடியாதுனு தோணுது! ///

    கேட்டுக்கு முன்னே நிறுத்தக் கூடாதுதான். ரொம்ப சரி. சிலபேர் வீட்டுக்குள் வண்டி நிறுத்த இடமே இருப்பதில்லை. வீடு திரும்பப் போகும் தங்கள் வண்டியை எதிர்பார்த்துதான் நிறுத்தக் கூடாதுன்னு சொல்றாங்களோ என்னமோ :))

    ///மிக மிக அருமையாக விளக்கம், தெளிவாகவும் இருக்கு, சின்னக் குழந்தைக்குக் கூடப் புரியும்படி.///

    ஆசிகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி