Sunday, July 17, 2016

விளக்கில் விளங்கும் விளக்கவர்


மந்திரங்களில் சிறந்தது காயத்ரி. ஆண் பெண் வேற்றுமையின்றி எல்லோராலும் எக்காலத்தும் சொல்லப்படலாம். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பழக்கப்படுத்தினால் அவர்கள் பண்பட்டவர்களாகவும் புத்தி கூர்மையுடனும்  திகழ்வார்கள் என்றெல்லாம் போற்றாத ஆன்மீகக் குருக்களோ, சமயத் தலைவர்களோ கிடையாது எனலாம். அதன் அர்த்தம் புரிந்து கொண்டு மனம் ஒன்றி சொல்லும் போது அதன் பலன் பலமடங்கு பெருகிடும் என்றும் சொல்கின்றனர். புரிந்து கொள்ள அர்த்தம் என்று பார்த்தால் 

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக 
என்பதாக வெகு எளிதாகவே இருக்கிறது.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் ‘மனம் ஒன்றி’ நம்மால் சொல்ல முடியாமல் போவது தான். இதனால்தான் ஒருவேளை அதன் மகிமை புலப்படாமல் போகிறதோ என்னவோ என்று தோன்றுகிறது. 

பெரிய மஹான்களும், சத்தியம் அறிந்த பெரியோர்களால் போற்றப்படும் ஒன்றின் பெருமை நமக்கு புரிபடாமல் போகும்போது குறை நம்மிடம் தானே !
பல வருடங்களாக மனதை நெருடிக் கொண்டிருக்கும் இந்த விஷயத்தை புரிந்து கொள்ள முடியாமல் மனதை எப்படி ஒன்ற வைப்பது?

இப்படி இருக்கும் போது LIGHT MEDITATION பற்றிக் கேள்விப்பட்டு அதை கை கொள்ளலாம் என்று விவாதிப்போது ‘காலங்காலமா சொல்ற காயத்ரிய விட்டுட்டு  லைட் மெடிடேஷனாம். அதுக்கு மந்திரம் வேண்டாமாம். காயத்ரியில வர்ற ஒவ்வொரு சப்தத்துக்கும் ஒரு வைப்ரேஷன் இருக்கு. நம்முடைய உடம்புல இருக்கிற அத்தனை நாடிகளையும் அது சுத்தப்படுத்துகிறது. அதை விட்டுவிடுவதா?” என்று ஒரு குட்டு. 

நம் தேடல்களுக்கு ஒரு விடை கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் காலம் உருண்டு கொண்டுதான் இருக்கிறது. ஆராய்ச்சி புத்தியுள்ளவனுக்கு ஆன்மீகம் கிட்டாது என்ற சொல் வழக்கு சரிதான் போலும். எனக்கு ஆன்மீகம் கைகூடவில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் தேடி அலைவதினாலோ என்னவோ.  

இந்நிலையில் ஞானதேவரின் ஞானேஸ்வரியின் ஆங்கில மொழி பெயர்ப்பை வாசிக்க நேர்ந்த்து. ஞானேஸ்வரி என்பது பகவத் கீதைக்கு மராட்டிய மொழியில் அவர் எழுதியுள்ள விளக்கம். 
அது எளிய பாடல்களாக பாமரர்களுக்கும் புரியும் வகையில் அன்றைய மொழி வழக்கில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் எழுதியது. பகவத்கீதையின் ஒரு சுலோகத்திற்கு பல சுலோகங்களில் விளக்கம் இருக்கும். அதில் பல எளிய உதாரணங்கள் இருக்கும். 
அவருடைய சகோதரர்கள் சகோதரியின் வாழ்க்கை சரிதம் மிக அற்புதமான பக்தி இலக்கியம் ஆகும்.

பகவத் கீதை அத்தியாயம் 18-ல் “பிரஹ்ம பூத:…” என்று ஆரம்பிக்கும் 54 ஆவது சுலோகத்தின் விளக்கமாக 39 செய்யுட்களில் விளக்கம் (1091-1129) தந்திருக்கிறார். அதில்  1116 வது செய்யுளின் பொருள்* என் தேடலுக்கு விடை கொடுப்பது போல்  தோன்றியது.

“ it is the light by which there is experience of the existence or non existence of the world, just as our pure being on which experiencing of dream state or the waking state takes place.”

[*Shri Dnyaneshwari by Diwakar Ghaisas : Published by Keshav Bhikaji Dhawale, Mumbai]

இதைத் தான் உள்ளே ஒளிரும் ஆத்மா என்று குறிப்பிடுகின்றனரோ ! 
அதற்கு உலகில் நடக்கும் எந்த விவகாரத்திலும் சம்பந்தம் கிடையாது. அதே சமயத்தில் அது இல்லாமல் போனால் விவகாரமே கிடையாது.

ஞானதேவர் இதை ஒரு விளக்கின் வெளிச்சத்துடன் தொடர்பு படுத்துகிறார். விளக்கின் ஒளி கொண்டு கூத்து நடக்கலாம். அல்லது திருடர்கள் தங்கள் பங்கை பிரித்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் ஆதாரமாக இருப்பது விளக்கின் ஒளி. அவர்கள் நடவடிக்களால் அது பாதிக்கப்படுவதில்லை. அது இருக்கும் வரை பலவித நடப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கும். அது போய்விட்டால் யாவும் முற்றிலும் நின்று போய்விடும்.
இப்பொழுது காயத்ரி மந்திரத்தில் போற்றப்படும் அந்த சுடருக்கானத் தியானத்தின் பொருள் பிடிபட்டது போல் இருக்கிறது. 

எந்த சுடரால் மூவுலங்களும் இயங்குகின்றனவோ அதே சுடரால் இந்த உடலின் இயக்கமும் நடக்கிறது. அது எதனாலும் பாதிக்கப்படாத தன்மை உடையது. அந்த தன்மையை அடைவது தான் இந்த செபம் செய்வதின் நோக்கம்.
.
எவனொருவன் தன்னைச் சுற்றி நடக்கும் செயல்களால் நிலைகுலையாது சாட்சி பாவத்துடன் தடுமாற்றமில்லாமல் கடமைகளை செய்ய முடிகிறதோ அவனே சிறந்த சாதகன். அதை சாதிக்கக் கூடிய வழி காயத்ரி மந்திரத்தின் இந்த ”விளக்கின் சாட்சி” தாத்பர்யத்தில் மனம் ஒன்றினால் சுலபமாகி விடும்.

தத்தளிப்பவன் கையிற்கு பிடித்துக் கொள்ள கட்டை கிடைத்தது போலாயிற்று. இப்போது தினசரி எண்ணங்கள் எது வேண்டுமானலும் செபத்தின் போது வரட்டுமே. அதை வெளிச்சத்தில் வேடிக்கை பார் என்று மனதிற்கு சொல்ல முடிகிறது. ஏனெனில் அவ்வெளிச்சம் இல்லையென்றால் நாமே இல்லையே! அந்த எண்ணங்கள் நம்மை அடித்துக் கொண்டு போகாமல், நாம் அமர்ந்திருப்பதே செபத்திற்காக என்று அதை இழுத்து வர முடிகிறது. இதைத் தொடர்து பயிற்சி செய்தால் செய்வோரின் முயற்சியின் ஆழம் பொருத்து முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. .

இப்போது பகவத்கீதையின் மூல சுலோகத்திற்குப் போவோம். (18-54)
“When he becomes one with brahman, he is very peaceful in his consciousness: he does not feel sorry about anything nor desires to get anything; he has equanimity towards all Beings and thus he attains the supreme devotion for me”.

அதே தான் இது.  

மிக அழகாக எளிமையாகச் சொல்லிவிட்டாரே ஞானதேவர்  என்று தோன்றியது. அந்த சுடரை தியானம் செய்யச் செய்ய வெளியிலே இருக்கும் இறைவன் உள்ளே சுத்த சித்துருவமாய் எம்பெருமானாய் ஒளிர்விடத்  தொடங்குகிறான். அப்போது அவனுக்கு தேவைகள் இல்லை. வள்ளலார் சொல்வது போல் எவ்வுயிரும் தம் உயிராய் எண்ணும் பக்குவம் வந்துவிடுகிறது. அதனால் தான் அவரும் அந்த பரஞ்சோதியை அருட் பெருஞ்சோதியாய் போற்றியிருக்கிறார்.
  
இதே உண்மை ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கதைகளினாலோ ஆதிசங்கர் மற்றும் எண்ணற்ற ஆசார்யர்களின் விவரணைகளாலோ ஏன் பிடிபடாமல் போயிற்று? ஏனென்றால் கேள்விகள் இல்லாமல் விடைகள் மனதில் ஒட்டுவதில்லை. அவை மறந்து போகக் கூடிய வெறும் விஷயங்களாகத் தான் இருக்கும்.

பசித்தவனுக்குத்தான் உணவு ருசிக்கும். பசி எடுக்கையில் உணவு படைக்க அன்னையோ மனைவியோ வருவது போல ஞானப் பசியைத் தீர்க்கவும் ஒரு குரு அவசியம்.  அந்த குருவின் அவசியத்தை கபீர் கூறுகிறார்:

पीछे लागा जाई था,  लोक वेद के साथी ।
आगैं थैं सतगुरु मिल्या, दीपक दिया साथि ॥

பின்பற்றிச் சென்றேன் உலகோரை, வேதங்கள் சொல்லும் வழியிலே
என்பற்றித் தந்தார் குருவும், பயனுண்டு விளக்குக்கு வழியிலே

கபீர் சொல்வது ஞானவிளக்கு. குரு கொடுக்கும் ஞான விளக்கு கைக்கு வந்த பின்னே எந்த பாதையில் சென்றாலும் வழி தவறாது குறி போய் சேரலாம்.  அந்த ஞான விளக்கு இல்லாமல் ஆன்மீகப் பயணம் முடியாது.

வேறொருவர் சொல்கிறார் என்பதாலோ அல்லது வேதங்கள் அல்லது கிரந்தம் இப்படி சொல்லியிருக்கிறதே என்றோ பிடிவாதம் பிடிக்கும் மனதுக்கு வழியில் முன்னேற்றம் இருப்பதில்லை. ஏதேதோ அல்ப காரணங்களால் தடைபட்டு போகிறது. அந்த தடைகளை களைந்து நமக்கு வழி காட்டுபவர் குரு. இதை திருமூலர் வரிகளிலும் காணலாம்.

விளக்கினை  யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே ( திருமந்திரம்1818)

ஞானம் என்னும் விளக்கை ஏற்றினால் அருவமான இறைவனைப் (வெளியைப்) பற்றி அறியலாம். அப்படிப்பட்ட ஞானம் வந்த பின் பல பிறவிகளாக தொடர்ந்து வருகின்ற கர்மவினையால் வரும் வேதனைகள் மறையும். அதற்குத் தேவை அதே ஞானம் உடைய ஒரு வழிகாட்டி. அவர்கள் அந்த ஞானத்தைப் படைத்திருப்பதனாலேயே சுயம் பிரகாசிகள் –விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே !!

காயத்ரி மந்திரத்தை செபிப்பதால் நாடி சுத்தி ஏற்படும் என்பதை விளக்கினின் முன்னே வேதனை மாறும் என்று திருமூலரும் உறுதி செய்கின்றாரோ !

இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது குரு ரவிசங்கர் சொன்ன விளக்கம் ஒன்று whatsapp-ல் வந்தது. நிர்குண ஜோதி தியானத்தின் ஆராய்ச்சிகளின் நடுவே  சகுண உபாசனையும் அதே உண்மைக்கு இட்டுச் செல்கிறது என்று புரிந்தது.

பாண்டு என்பது பஞ்ச பூதங்களைக் குறிக்கும். ரங்கா என்பது அரங்கம் அல்லது மேடை. எனவே பாண்டுரங்கா என்பது பஞ்சபூதங்களினால் அமைக்கப்பட்ட இவ்வுலக மேடை. அடல் அல்லது விட்டல் என்றால் அசையாதிருப்பது, எல்லாவற்றையும் ஆட்டிவைப்பவன். இயக்குனர் ஆனால் அவன் அதில் இல்லை. அவனே விட்டலன்.  
எனவே பாண்டுரங்க விட்டலன் என்னும் போதும் அதே பரம்பொருள் சகுணமாக் சுட்டிக்காட்டப்படுகிறது

ஜுலை 19 அன்று குரு பூர்ணிமையில், இந்நாட்டின் பெரும் குருமார்களின் தாள் வணங்கி அவர்கள் அருள் என்றும் இவ்வுலகிற்கு வழி காட்டுவதாக என்று வேண்டிக் கொள்கிறேன்.

பின் குறிப்பு : சுப்பு தாத்தா ஏற்கனவே மேற்கண்ட கபீர் ஈரடியை, ஜீவி ஐயாவின் அகல் விளக்கு அற்புதம் என்ற பதிவில் பின்னூட்டமாக குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு நன்றிகள்.

எண்ணிக்கையில் 9 என்பது Divine Number என்று போற்றப்படுகிறது. இந்த பதிவின் போது எடுத்துக்காட்டானஅனைத்து குறிப்புகளின் இலக்கங்களின் கூட்டு 9 –ல் முடிவு பெற்றுள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. முதலில் கீதை 18 ஆம் அத்தியாயம். அடுத்து 54 வது சுலோகம். ஞானேஸ்வரியில் 1116 ஆவது சுலோகம் கடைசியில் திருமூலரின் செய்யுள் 1818

எங்கிருந்தோ அவர்கள் ஆட்டுவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது J

13 comments:

  1. வாருங்கள், கபீரன்ப! உங்களைப் பார்த்ததில் பேரானந்தம்! தேடிக் கொண்டிருந்த மூலிகை கைக்குக் கிடைத்தது மாதிரியான உண்ர்வை இந்த பதிவு தந்தது. சமீபத்திய எனது பதிவின் பின்னூட்டம் ஒன்றிற்கான தொடர்பு இங்கு நீண்டிருந்ததைப் பார்த்த பொழுது ஆச்சரியம்!

    ஜூலை 19-ல் உலகத்திற்கான விளக்கு ஒளிரட்டும்! உள்ளொளி விளக்கு பற்றி விளக்கம் கிடைத்தது. ஆனால் மனம் மட்டும் புரிபடாது முரண்டுகிறது. மீண்டும் வாசித்து வாசித்து உணர்வில் ஏற்றிக் கொண்டு வருகிறேன். மிக்க நன்றி, கபீரன்ப!

    ReplyDelete
  2. நல்வரவு ஜீவி சார்,
    உடனடியாக வந்து தங்கள் வாசிப்பைத் தொடர்ந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
    ///ஆனால் மனம் மட்டும் புரிபடாது முரண்டுகிறது///
    அது தானே மனதின் இயல்பு ! ஒரு சமயம் கொஞ்சியும்,பல சமயம் கெஞ்சியும் ஓரோரு சமயம் அதட்டியும் ..... போதுமடா சாமி என்று நம்மை பாடு படுத்துகிறது :))
    சிலப்பதிகாரச் சுவைக்கு இடையே இதற்கும் நேரம் கிடைத்தது பற்றி மிக்க மகிழ்ச்சி.
    மீண்டும் வருக நன்றி

    ReplyDelete

  3. //பாண்டு என்பது பஞ்ச பூதங்களைக் குறிக்கும். ரங்கா என்பது அரங்கம் அல்லது மேடை. எனவே பாண்டுரங்கா என்பது பஞ்சபூதங்களினால் அமைக்கப்பட்ட இவ்வுலக மேடை. அடல் அல்லது விட்டல் என்றால் அசையாதிருப்பது, எல்லாவற்றையும் ஆட்டிவைப்பவன். இயக்குனர் ஆனால் அவன் அதில் இல்லை. அவனே விட்டலன்.
    எனவே பாண்டுரங்க விட்டலன் என்னும் போதும் அதே பரம்பொருள் சகுணமாக் சுட்டிக்காட்டப்படுகிறது//

    அற்புதமான விளக்கம். இன்று காலையில் கணினியைத் திறந்ததுமே உங்கள்பதிவு தான் அங்கே அப்டேட் ஆகி இருந்தது. எனினும் அப்போது உடனே வர முடியவில்லை. ஓரளவு புரிந்தாற்போல் இருந்தாலும் இன்னும் புரிஞ்சுக்க நிறைய இருக்கிறது என்றே நினைக்கிறேன். அதோடு காயத்ரி மந்திரத்தை எல்லோரும் எப்போதும் சொல்லக் கூடாது என்றும் ஒரு சிலர் கருத்து. பெண்களுக்கென தனி காயத்ரி இருக்கிறது. இதைப் பெண்கள் சொல்லக் கூடாது என்கிறார்கள். :))))

    ReplyDelete
  4. வருக கீதா மேடம்.
    ஒளியை நினைத்துக் கொண்டு தியான மந்திரம் சொல்லும் போதெல்லாம் அதன் பொருள் தெரிந்திந்திருந்தாலும் அது மனதுடன் ஒட்டாமல் மனம் இங்குமங்குமாகத் திரிய ஆரம்பிக்கும். Very abstract way of doing meditation or Jebam என்ற எண்ணம் வேறு தலையெடுத்து காரியத்தை கெடுக்க வைத்தது. அப்படியானால் இந்த மனதிற்கு ஒரு பிடித்தம் வேண்டும். அப்பொழுது தான் அது ஈடுபட்டுள்ள செயலில் ஒரு பிடிப்பு வரும். இந்த இடத்தில்தான் ஞானதேவரின் விளக்கம் ஒரு காரணம் காட்டியது. அதுவும் விளக்கின் ஒளியை உதாரணமாகக் காட்டியதால் எனக்கு ஏற்புடையதாயிற்று.

    வெறும் பாண்டுரங்க விட்டல் உதாரணமாக இருந்தால் காயத்ரி மந்திரக் கருத்தை வைத்து வந்திருக்காது. பெண்கள் காயத்ரி சொல்லலாமா தனி காயத்ரி உண்டா போன்ற கேள்விகளுக்கு ‘தெய்வத்தின் குரலில்’ விடை கிடைக்கலாம்.

    ReplyDelete
  5. அன்புள்ள கபீரன்ப!

    காலதாமதத்திற்கு மன்னிக்கவும்.

    நானும் ஓரிரண்டு பின்னூட்டங்களில் சொல்ல முயற்சித்துப் பார்த்தேன். மனதிற்கு திருப்தியாக அவை அமையவில்லை.

    மனம் என்பது பெரிய விஷயம். பின்னூட்டங்களிலோ, கலந்துரையாடல்களிலோ அதைப் பற்றி முழுதும் விண்டு உரைக்க முடியாதென்பது தெளிவாகத் தெரிகிறது.

    என்னளவில் மனம் பற்றி நிறைய சோதனைகளுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதெயெல்லாம் பற்றி விளக்கமாக புத்தக வடிவில் அடுத்த ஜனவரிக்குள் உங்களுக்குப் பரிசளிக்க உத்தேசம்.

    அருள்கூர்ந்து காத்திருக்க வேண்டுகிறேன். காத்திருப்பதில் சுகமும் உண்டு.

    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
  6. ஜீவி சார்,
    சும்மா இரு என்று சொல்லலுமே
    அம்மா! பொருளொன்று அறிந்திலனே

    என்று மனதோடு செய்யும் போராட்டத்தை அருணகிரியார் சொல்வதிலிருந்து இது மிகப்பெரிய சாகசம்தான் என்பது புரிகிறது. கண்டிப்பாக தங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள வாசகர்கள் அனைவரும் காத்திருக்கிறோம்.
    மீள்வரவுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  7. வணக்கம். சுப்புத் தாத்தா மூலம் தங்களை அறிந்தேன் . கபீர் அவர்களின் தோகாக்களை தமிழில் என் பாணியில் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆரம்பித்த பின் தான் தெரிகிறது ....கடல் நீரை கைக்கொண்டு இறைக்க நினைக்கும் என் அறியாமை,.தங்களை போன்றோர் வருடக்கணக்கில் ஆராய்ந்து கொண்டிருக்க இப்போது தான் கபீரை கற்கத் தொடங்கியிருக்கிறேன். தங்களின் ஆசி வேண்டுகிறேன். நன்றி.

    ReplyDelete
  8. வருக சிவகுமாரன். இது தங்கள்மீள் வருகை. ஏற்கனவே “அவரவருக்கு உள்ளபடி ஈசனருள்” என்ற தலைப்பில் 2011 ல் கபீர் உங்களை ஈர்த்திருக்கிறார். அவருக்குத் தெரியும் எப்போது யார் மூலம் தனது செயல்களை நடத்திச் செல்ல வேண்டும் என்று.
    கபீர் என்ற கடலில் மூழ்குங்கள். எளியதமிழில் தங்களுக்கு கிடைக்கும் முத்துகளை பகிருங்கள். நன்றி

    ReplyDelete
  9. ஐந்து வருட்ங்கள். தங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.
    தாங்கள் சொல்வதுபோல்
    அவன் எங்கிருந்தோ ஆட்டி வைக்கிறான்.

    www.sivakumarankavithaikal.blogspot.com





    ReplyDelete
  10. நன்றி சிவகுமார்
    ///தங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.///

    இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. கடை வைத்திருப்பவர் அத்தனை சாமானுக்கும் தம் நினவிலிருந்தே விலையை சொல்கிறார்.பெரும்அரசியல் தலைவர்கள் தம் தொண்டர்களையெல்லாம் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்காமல் பெயர் சொல்லி அழைக்கின்றனர். கபீர் வலைப்பூவுக்கு பின்னூட்டமிடுபவர்கள் மிகக்குறைவு. விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி இருக்கும் பொழுது அவருடைய பக்தனை மறக்க முடியுமா :))

    தங்களுக்கு கவிதை மிக இயல்பாக வருகிறது. பயணத்தைத் தொடருங்கள்.

    ReplyDelete
  11. எங்கிருந்தோ அவர்கள் ஆட்டுவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது J//
    உண்மை.

    நான் மாயவரத்திலிருந்து மதுரைக்கு மாறி வந்து இருக்கிறேன்.
    அதனால் உங்கள் பதிவுகள் விட்டு போய் இருக்கிறது.
    டேஸ்போர்டிலும் உங்கள் பதிவை காட்டவில்லை.

    நான் காய்த்ரீ மந்திரத்தை தமிழில் படிக்கிறேன். நவராத்திரி சமயம் 27 முறை மனதில் சொல்ல சொல்லி ஒருவர் சொன்னார் அப்படி சொல்லி வருகிறேன்.
    அப்புறம் தினம் ஐந்து முறை சொல்வேன்.

    //நம்முடைய உயிராற்றலாகவும் துக்கத்தை அழிப்பதாகவும் இன்பமே வடிவமாகவும் உள்ள சூரியனைப் போன்ற ஒளிமயமானதும், தன்னைவிடமேலாக ஒன்றும் இல்லாததும் நம் பாபங்களை அழிக்கக் கூடியதுமான தெய்வீக பரம்பொருளை நாம் மனதில் இருத்தி தியானிப்போக !அந்த பரம்பொருள் நமது அறிவை நல்வழியில் ஈடுபடுத்தட்டும் //

    எவர் அநம் அறிவைத் தூண்டி பிரகாசிக்க செய்கின்றாரோ அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக.

    பெண்கள் சொல்லக்கூடாது என்று சொன்னாலும் நான் சொல்லி வருகிறேன்.
    நல்லதோ கெட்டதோ எல்லாம் அவர் விருப்பபடி நடக்கட்டும் என்று தான் என் வாழ்க்கை ஓடுகிறது.
    அடிக்கடி ஏதாவது எழுதுங்கள் , உங்கள் பதிவுகள் இறைவன் மேல் இன்னும் அதிக பக்தியை, அன்பை ஏற்படுத்துகிறது.
    மன ஆறுதலை தருகிறது.

    ReplyDelete
  12. வருக கோமதி மேடம்.
    //நான் மாயவரத்திலிருந்து மதுரைக்கு மாறி வந்து இருக்கிறேன்/// கீதா மேடத்தின் சந்திப்பின் போதே தெரிந்து கொண்டேனே. இப்போ செட்டில் ஆகிவிட்டீர்களா?

    //பெண்கள் சொல்லக்கூடாது என்று சொன்னாலும் நான் சொல்லி வருகிறேன்//
    என் மகள் டெல்லி DAV பள்ளியில் படிக்கின்ற பொழுது காயத்ரி மந்திரம் எல்லாக் குழந்தைகளாலும் சொல்லப்பட்டது.அது காலை பிரார்த்தனையின் ஒரு பகுதியாகவே இருந்தது. DAV பள்ளிகள் சுவாமி தயானந்த சரஸ்வதியின் (19 ஆம் நூற்றாண்டு)ஆர்ய சமாஜ கொள்கைகளை பின்பற்றி நடத்தப்படுபவை. காலத்திற்கேற்ப மகான்கள் வந்து மாறுதல்களுக்கு வழி வகுத்துப் போகின்றனர்.
    உங்கள் எண்ணப்படியே சொல்லி வாருங்கள். தயக்கம் தேவையில்லை.
    வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி