Wednesday, October 05, 2016

குழலுடைந்தால் எழுமோ நாதம்?

முதலில் ஒரு சின்னக் கவிதை, பின்னர் கதை.  ஒன்றல்ல இரண்டு.

ராபர்ட் கிரேவ்  என்பவரின்  ஆங்கில கவிதை, ஒரு பெண்ணைப் போற்றுவதற்காக எழுதப்பட்டிருந்தாலும், ஒரு நல்ல தத்துவத்தை போதிப்பதாக  எனக்குப்பட்டது. அந்த பகுதியை மட்டும் சுமாராக மொழிபெயர்த்த வரிகள் :

பனித்துளி ஒன்று தன்னுள் அடக்கியது
மலையும் வனமும், விசும்பும் கடலும்
பருவம் ஒட்டி பல்விதமாய் காட்டியது
ஆனால்
விலையிலா வைரத்தில்  அவை யாவும்
சிதர்ந்ததே எத்திக்கும்  மின் மினி ஒளியாய்
ஒருங்கி ணைத்து காண்பவர் இலர்
இயற்கையின் அழகை எல்லாம்.

’வழியிருந்தால் கடுகுள்ளே மலையை காணலாம்’ என்பது நிஜமோ இல்லையோ பனித்துளியின் பிரதிபலிப்பில் மலையையும் வானத்தையும் காண்பது என்னவோ நிஜம். ஆனால் வைரமோ ஒளிக்கூறுகளை சிதைத்து ஜொலிக்குமே அன்றி ஒரு முழு மையான பிரதிபலிப்பைக் கொடுக்காது.
இப்போது அதே பனித்துளியையும் வைரத்தையும்  மையமாகக் கொண்ட ஒரு கதை

புல் தரையில் அதிகாலை வேளை மெல்ல ஊர்ந்து வந்தது ஒரு புள்ளி வண்டுயாரோ தவற விட்டிருந்த ஒரு கண்ணைப் பறிக்கும் வைரக்கல்லைப் பார்த்ததுமே அது பெரிய இடத்தை சேர்ந்த சம்பந்தம் என்பதைப் புரிந்து கொண்டு ஒரு வணக்கம் போட்டது.



( கபீர் வலைப்பூவுக்கென  பிரத்யேகமாக ஃபோட்டோஷாப்-பில்  தயாரிக்கப்பட்ட படம்)

அதுவும் அதை ஒரு நமட்டு சிரிப்புடன் அதை ஏற்று கொண்டதுசற்று மேலே ஒரு செடியின் கிளை நுனியில் பனித்துளிகள்  சூரிய ஒளியை  அழகாக  வெளிக்காட்டின.  “ அவரும் தங்களுக்கு உறவோ? “ என்று வினவியது வண்டு.  “அது வெறும் நீர். இன்னும் சிறிது நேரத்தில் காற்றில் ஆவியாகி விடும்.”  என்று ஏளனமாக பதிலளித்தது வைரம். ஏனெனில் பெரிய மனிதர்கள் அதைப் போற்றி பொக்கிஷமாக காத்து நிற்பராதலால்  தவற விட்டிருப்பவர்கள் சற்று நேரத்தில் தன்னைத் தேடி வருவர் என்பது அதற்குத் தெரியும். அப்போது தனக்குக் கிடைக்கப் போகும் மரியாதையும் எண்ணி செருக்குக் கொண்டிருந்தது.

பனித்துளி அமைதியுடன் இருந்ததுஅப்போது எங்கிருந்தோ பறந்து வந்த வானம்பாடி பறவை  அந்த வைரத்தை ஒரு கொத்து கொத்தி துப்பியது. “ இது வெறும் கல் என் தாகம் தீர்க்கப் பயன்படாதுஎன்று சொல்லிக் கொண்டே தத்தித்  தத்தி, கழுத்தை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தது.
நண்பனே என்னால் உன் தாகம் தீருமெனில் என்னை ஏற்றுக் கொள்என்றது பனித்துளிவானம்பாடியும் தாகம் தீர்ந்து சந்தோஷமாய் பறந்தது

சிறிது நேரத்தில் அங்கு வந்த கால்நடைகளின் காலில் மிதிபட்டு மண்ணுக்குள் அழுந்தி  யார் கண்ணிலும் படாமலே ஒரு பயனுமில்லாமலே புதையுண்டு போனது அந்த வைரக்கல்.

இது இறுமாப்பின் இறுதி நிலைமனிதநிலைக்கும் இறை நிலைக்கும் இடையே உள்ள திரை இது தான். இது நம்முள் தோற்றமெடுப்பதற்கு காரணம் வேண்டியதில்லைநாரதர் போன்ற தேவர்களே கூட தன்னிலும் சிறந்த பக்தரில்லைஎன்ற மயக்கத்திற்கு ஆளாவதுண்டு என்று பரமஹம்சரின் கதைகள் கூறுகின்றன.

இராவணன் போன்ற சிறந்த சிவபக்தன் இல்லை. அவனுக்கும் அந்த இறுமாப்பு வந்தபோது   கயிலாய மலையையே பெயர்த்தெடுக்க முற்பட்டான். அதை தன் சுண்டு விரலால் அடக்கினார் சிவனார் என்பது நாயன்மார்களால் பெரிதும் போற்றப் படுகிறது.  ஞானசம்பந்தர் பெருமான் திருவையாற்று தியாகராஜரைப் போற்றும் போது
வரை ஒன்று அது எடுத்த அரக்கன்
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்.
என்று பாடுகிறார்.

மதியிலா அரக்கன் ஓடி மாமலை எடுக்க நோக்கி
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த

என்று நாவுக்கரசர் தில்லை சிவனை போற்றும் போது குறிப்பிடுகிறார்.
இப்படி  சைவ இலக்கியம் முழுவதும்  இந்நிகழ்ச்சிபலவேறு  பாடல்களில், இறுமாப்பினால் வரும் இடரை உணர்த்த எடுத்துக்காட்ட வருகிறது.

இதனை கபீரும் எளிமையாகச் சொல்கிறார். எவ்வளவு எளிமையான வரிகள்.


तिमिर गया रवि देखते ,कुमति गई गुरु ज्ञान  ।
सुमति गई अति लोभ ते ,भक्ति गई अभिमान ।। 

கதிரவன் கண்டு காரிருள் விலகும் , கெடுமதி ஓடும் குரு ஞானம் கண்டு மதி,நெறி தவறும் பேராசை கொண்டு, பக்திநெறி போகும் பெருமிதம் கண்டு

மாற்று:-

1.       இருளும் போச்சு இரவியைக் கண்டே  மருளும் போச்சு குருஞானம் கண்டே
பெருநெறியும் போச்சு பேராசை கொண்டே, பக்தியும் போச்சு இறுமாப்பு  கொண்டே

 [ குமதி- சுமதி ( कुमति- सुमति) அஞ்ஞானி மற்றும் நல்வழி அறிந்தவர் என்று கொள்ள வேண்டும்]

சத்குரு என்பவர் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கியவர். பனித்துளிகள் சூரியனின் வரவைக் காத்திருப்பது போல அவரும் இறைக்காட்சிக்காக காத்து கிடப்பவர். இடையிலே அருள் தாகம் கொண்டு வரும் ஆன்மீக அடியார்களின்  தாகத்தையும் தீர்க்க வல்லவர்.  உலகிற்காக தன்னையும் தியாகம் செய்யத் தயாராயிருப்பவர்அடக்கம் உள்ள இடத்தில் தான் ஞானம் வரும்.

ஆனால்  மனிதரை ஏதேனும் ஆசை பீடிக்கும் பொழுது  சத்குரு சொல்லும் நன்னெறிகள் மறைந்து போய் இறுமாப்பு குடி கொள்ளும்.  அதனால் நமது ஒவ்வொரு செயலிலும் எண்ணத்திலும் மிக்க கவனம் கொள்ள வேண்டும்

அடக்கம் இருக்கும் போது மட்டுமே குருவை கண்டால்  இருக்கும் கொஞ்ச நஞ்சம் குறைகளும் விலகிடும்இல்லாவிட்டால் குரு அருகிலேயே இருந்தாலும்  ஞானம் வராது அதைப்பற்றியும் கபீர் சொல்வதை  கடைசியில் பார்ப்போம்.

கபீர் குறிப்பிடும் பேராசை  என்பது தன் தகுதிக்கு மீறிய  ஆசை. அப்படி ஆசையின் வலையில் வீழ்ந்தவன் பற்றிய ஒரு கதை

தேவதத்தன் பகவான் புத்தரின் நெருங்கிய உறவினன். அவரை அடைக்கலம் புகுந்து அவரது சீடன் ஆனவன். மன்னன் பிம்பசாரனின்  மகன் அஜாதசத்ருவின் அசையா நம்பிக்கை பெற்று அவனுக்கு குரு போல விளங்கியவன்புத்தரிடத்தில் பிம்பசாரனுக்கு  இருந்த அபார மதிப்பும் கௌரவமும்  கண்டு அவன் மனதில்  தானும் ராஜ குரு ஆகவேண்டும்  என்கிற பேராசையை உருவாக்கியது.

புத்தரை அணுகி தன்னை தலைவனாக்கும்படி கேட்டுக் கொண்டான். புத்தரோஅது ஒருவர்  இன்னொருவருக்கு கொடுத்து வருவதல்ல.  உழைப்பினாலும் முயற்சியினாலும் தகுதி வரும் பொழுது தானே வருவதுஎன்றுரைத்த நல்லுபதேசம் அவன் புத்தியில் ஏறவில்லை

அஜாத சத்ருவை தன் கைப்பாவையாக்கிக் கொண்டு பிம்பசாரனை சிறையில் அடைக்கச் செய்கிறான்.   மூன்று முறை  கௌதமபுத்தரை, தன்னுடைய குருவையே, கொலை செய்ய முயற்சிக்கிறான். ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்திக்கிறான்

பிற பிக்ஷுக்கள் புத்தரிடம் தம் கவலையை தெரிவித்த போதுஒருவருடைய உயிரை இன்னொருவர் பறிக்க முடியாது. அவரவர் வாழ்நாள் முடியும் வரையில் பூமியில் இருக்கத்தான் வேண்டும். ஆகையால் இதைப் பற்றிய கவலையை விடுங்கள்”  என்று மரணத்தைப் பற்றிய கவலையின்றி வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

அன்பின் நெறியிலே  பிம்பசார மன்னனையும் அவன் ராஜ்ஜியத்தையும் திருப்பிய புத்தராலே கூட தன் நெருங்கிய சீடனை திருத்த முடியவில்லைஇப்போது குற்றம் எங்கே

இதை கபீர் இன்னொரு ஈரடியிலே  திருத்த முடியாத, முயற்சி இல்லாத சீடனுக்கு ஒப்பிடுகிறார்.

गुरु बिचारा क्या करे,  सिक्खहि माहिं चूक।

भावे त्यों परबोधिये , बास बजाये फूँक ॥

சீடனில்  உள்ளது தோசம், குருவும் என்செய்வார் பரிதாபம் 
பாடம் எப்படி சொல்லியும், குழலில் எழவில்லை சுகநாதம் 

தேவதத்தன் ஒரு  உடைந்த குழல்.   திருத்த முடியாத சீடன். ஏனெனில் பேராசையினால் நன்னெறி அவனை  விட்டு விலகியது

எப்பேர்பட்ட குருவுக்கு இப்படி ஒரு சீடனா என்று  நாம் வியக்கிறோம். ஆனால் நிழலில்லாமல் ஒளியின் அழகு தெரிவதில்லைஆகையால் இறைவன்  பெரியார்களின் பெருமையை உலகுக்கு புரிய வைக்க கூடவே தேவதத்தன் போன்றவர்களையும் அனுப்புகிறானோ என்னவோ

[  फूँक  என்பதற்கு ஊதுதல் அல்லது வாயால் ஒலி எழுப்புதல் என்று பொருள். இந்த ஈரடிக்கு பரவலாக உடைந்த குழலில் இசை வராது என்ற அடிப்படையில் விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் குழலிசையை முயன்றவன் என்ற அடிப்படையில் எனக்குத் தோன்றுவது என்னவெனில்  மூச்சை முறையாக குழல் வழியே செலுத்தத் தெரியாதவனுக்கும் இசை வராது. வெறும் புஸ் புஸ் என்று காற்றுதான் வரும். அதை குருவானவர் சொல்லிக் கொடுத்தாலும் மாணவனின் சுயமுயற்சி யில்லாமல் முன்னேற முடியாது. கபீர் இந்த ஈரடியில் குழல் உடைந்தது என்ற வகையில் வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த வில்லை. ஆகவே குழலில் குற்றமில்லை, குருவில் குற்றமில்லை மாணாக்கனின் முயற்சி இல்லாமைதான் குற்றம் என்ற வகையில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது ] 

Robert Grave's original lines
..........
The dew-drop carries in its eye
Mountain and forest, sea and sky,
With every change of weather;
Contrariwise, a diamond splits
The prospect into idle bits
That none can piece together. 

15 comments:

  1. எப்படிச் சுற்றினாலும் கடைசியில் குருவில் வந்து முடிக்கிறீர்கள்.

    மெய்ஞான நிலை என்ற ஒன்று குருவுக்கும் சிஷ்யனுக்கும் பொதுவாக இருக்கும் பொழுது, அந்த மெஞ்ஞான நிலையை அடைவதில் குருவும் சிஷ்யனும் மாணார்க்கர்கள் தானே?..

    பல நேரங்களில் அந்த மெஞ்ஞான நிலையை சிஷ்யன் அடைய விடாமல் தடுத்துக் கொண்டு குரு இரண்டுக்கும் இடையில் இடைநிலையாய் இடையூறாக இருப்பதாகவும் தெரிகிறது.

    அல்லது நான் காட்டும் வழியில் தான் நீ இறைவனை அடைய முடியும் என்று ஒரு சட்டாம்ப்பிள்ளைத் தனமாய் வழிகாட்டுகிற மாதிரி.

    இன்னும் சொல்லப் போனால் என்னைத் தாண்டித் தான் நீ இறைவனை நெருங்க முடியும் என்கிற மாதிரி.

    மெய் ஞானத்திற்கும் அதை அடைய தன்முயற்சியில் தவமாய் இருப்பவனுக்கும் இடையில் இந்த இடைநிலைக் குறுக்கீடைத் தவிர்க்கவே முடியாதா?..

    நெடுநாளாய் என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி இது. நீங்கள் உணர்வதைச் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  2. நல்வரவு ஜீவி சார்
    தங்கள் கேள்விகளுக்கு என்னால் முடிந்த மட்டும் பதில் சொல்கிறேன்.

    1) ///மெய் ஞானத்திற்கும் அதை அடைய தன்முயற்சியில் தவமாய் இருப்பவனுக்கும்....///
    ’தவமாய் இருப்பது’ என்றாலே அங்கே உண்மையான சீடனுக்கு உரிய லட்சணங்கள் தெரிய வேண்டும். அதில் அடக்கம், பொறுமை, ஆசையின்மை போன்றவை சில. அந்தந்த சீடர்களின் நிலை பொறுத்து குருவின் நிலையும் மாறும். நரேந்திரர் விவேகானந்தராக மாறியதற்கு ராமகிருஷ்ணர் மட்டும் காரணமில்லை. தாங்கள் குறிப்பிடும் அந்த தவம் நரேந்திரரிடமும் இருந்தது. அதே ராமகிருஷ்ணர் கேஷவ் சந்திர சென்னிடம் அதே அளவு பிரியம் காட்டியும் கூட அங்கே இன்னொரு விவேகானந்தர் உருவாகவில்லை. காரணம் முயற்சிக் குறைவு.மனத்தடைகள் அதிகம்.

    2)///...மெஞ்ஞான நிலையை அடைவதில் குருவும் சிஷ்யனும் மாணார்க்கர்கள் தானே?..
    ///
    குரு என்று கபீர் சொல்வதே மெய்ஞான நிலையைக் கண்டவர்தாம். சில விட்டகுறை-தொட்டகுறை கர்மங்களினாலோ, லோகக்ஷேமத்திற்காகவோ சில காலம் மனித வடிவில்
    சஞ்சரிக்கிறார்கள்.அவர்களுக்கு அகங்காரம் என்பது அறவே இருக்காது. வாக்தேவியின் அருளுடைய உபன்யாசகரையோ, மறை போதிக்கும் பண்டிதர்களையோ நம்முடைய உலக வழக்கில் குரு என்று சொல்லிக் கொண்டாலும் அவர்கள் ஞானகுரு ஆகமாட்டார்கள். அவர்களும் தாங்கள் சொல்வது போல் சீடர்களே. ஆனால் அவர்களிடமுள்ள ஞானத்தைப் பெறுவதற்கும் சீடனுக்கு மன அடக்கம் முக்கியம்.

    3)//பல நேரங்களில் அந்த மெஞ்ஞான நிலையை சிஷ்யன் அடைய விடாமல் தடுத்துக் கொண்டு குரு இரண்டுக்கும் இடையில் இடைநிலையாய் இடையூறாக இருப்பதாகவும் தெரிகிறது. ///
    அப்படி தகுதி உள்ள சீடனின் வழியில் குறுக்கே நிற்பாராயின் அவர் குரு எனப்படும் தகுதியை இழந்து விடுவார். ஏனெனில் தேவதத்தன் போல மாயை அவர் மதியை மயக்குகிறது. அருள் தாகம் கொண்ட சீடன் விரைவிலேயே அவரை விட்டு விலகி தன் முன்னேற்றத்திற்கேற்ற தகுந்த இன்னொரு குருவை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.

    4)///..இந்த இடைநிலைக் குறுக்கீடைத் தவிர்க்கவே முடியாதா?..///
    குரு வெறும் வழிகாட்டி.அவர் ஏற்கனவே பயணித்த பாதையில் வரும் சங்கடங்களை சொல்லி சீடர்களின் பயணத்தை எளிதாக்குகிறார்.
    சீடன் தான் குருவைத் தேடிச் செல்கிறான்,சுய முன்னேற்றத்திற்காக. சீடனால் குருவுக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. எனவே தனக்குப் பொருத்தமான குருவை தேர்ந்தெடுப்பதும் சீடனின் அருள் தாகத்தைப் பொருத்ததே. இரமணர் போல -மனித வடிவில் குரு உதவி இன்றி- தவமியற்றி ஞானமடைந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    மீண்டும் சொல்லிக் கொள்ள விழைவது ‘குரு’ என்றாலே ஞானமடைந்தவரைத்தான் கபீர் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த வார்த்தை அடிக்கடி எல்லா மட்டங்களிலும் புழங்குவதால் அதன் முக்கியத்துவம் நீர்த்துப் போய் விட்டிருக்கிறது.

    எனக்கு புரிந்த வரையில் பதில் சொல்ல முயன்றிருக்கிறேன். தங்கள் வரவுக்கும் பகிர்தலுக்கும் நன்றி

    ReplyDelete
  3. தங்கள் நீண்ட பதிலுக்கு நன்றி, கபீரன்ப! அதற்காக தாங்கள் விளக்குவதற்கு முயன்றிருப்பதற்கும் நன்றி.

    தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம். என் உணர்தலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே எழுதுகிறேன்.

    நான் என்னில் உணர்வதைப் பற்றிய வினா இது. வாசித்துத் தெரிந்து கொண்டதற்கும் வாசித்தலின் அடிப்படையில் புரிந்து கொண்டதாக நினைப்பதற்கும் அப்பாற்பட்டது இது.

    மெய் ஞானம் (அதற்கு இறை சக்தியைப் பற்றிய ஞானம் என்று பொருள் கொள்கிறேன்) என்பது யார் சொல்லியும் தெரிந்து கொள்ளும் விஷயம் அல்ல என்பது என் அடிப்படை உணர்வு. அது தனக்குத் தானே உணர்ந்து கொள்வது.

    அந்த உணர்தலுக்கு அவரவர் கொள்ளும் அனுபவ்பங்களே அடிப்படை ஞானமாக இருக்கிறது. சொல்லித் தெரிவதில்லை இது. பட்டு அனுபவித்து மீண்டு எக்காலத்தும் வாழ்க்கை நெடுக நெஞ்சில் பதிகிற கல்வெட்டாய் இது இருக்கிறது.

    அதனால் தான் ரொம்ப சுலபமாக வார்த்தைகளில் அடக்கி விடுகிற மாதிரி எந்த ஞானவானும் மெய் ஞானத்திற்கு கொடுக்கிற விளக்கங்கள் என்னில் பதியாமல் போய்விடுகிறது. சொல்லப் போனால் சமயங்களில் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.

    கற்பனைக்கும் அப்பாற்பட்ட அந்த சக்தியை யாரும் தனக்குத் தெரிந்த மாதிரி சொல்வது.. அதைப் பற்றி விளக்குவது எல்லாம் மனித யத்னத்துக்கு அப்பாற்பட்ட காரியங்களாகத் தோன்றுகிறது.

    தனிமனிதன் தன் செயல்களால் தானே உணர்வது இது. இந்த உணர்தலுக்கு எந்த இடைத் தரகரும் தேவையில்லை.

    எல்லா உயிர்களிலும் அவன் உள்ளான். அல்லது எல்லா உயிர்களும் அவனே.

    (இந்த உணர்வு தான் என்னை 'உங்களுக்காவது தெரியுமா?' என்ற அந்த ஆறுவாரத் தொடரை எழுத வைத்தது)

    சகல உயிர்களை நேசிப்பதே இறைவனை நேசிப்பதற்கும் அவன் அன்பை உணர்வதற்கும்
    சரியான வழி. இந்தப் பேறு கிடைத்தாலே, எல்லாம் சித்தித்து விட்டதாக நினைக்கிறேன்.

    உபதேசங்களிலா இறைவன் இருக்கிறான்?.. இல்லை, நம் உணர்வில் இருக்கிறான் என்பதே அதற்கான பதிலாக எனக்குத் தோன்றுகிறது.

    தாங்கள் என்ன நினைகிறீர்கள், அன்பரே?..

    ReplyDelete
  4. நன்றி ஜீவி சார்

    எனக்கு U.G.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “The Mystique of Enlightenment” என்ற புத்தகம் கிடைத்தது. அதில் அவர் சொல்லும் கருத்துகளை தங்கள் பின்னூட்டம் நினைவுபடுத்துகிறது. ஒரு சின்ன மாதிரி :

    ”I discovered for myself and by myself that there is no self to realize-that’s the realization I am talking about. It comes as a shattering blow. It hits you like a thunderbolt. You have invested everything in one basket, self-realization,and in the end,suddenly you discover that there is no self to discover,no self to realize- and you say to yourself’ What the hell have I been doing all my life’! That blasts you.”
    -U.G.Krishnamurthy
    அவரைப்பற்றிய விவரங்கள் இணையத்திலும் கிடைக்கிறது.- [https://en.wikipedia.org/wiki/U._G._Krishnamurti ]

    ஆன்மீகத் தேடலில் ஒருவரின் தேடல் மற்றொருவரைப் போல் இருப்பதில்லை.
    திரு கிருஷ்ணமூர்த்தி இரமணரைப் பார்த்து ’தாங்கள் பெற்றதை எனக்கு தரமுடியுமா?’ என்று கேட்கிறார். அதற்கு அவர் “அதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா?’ என்று எதிர்கேள்வி போடுகிறார். இளைஞர் U.G. இதை எதிர்பார்க்கவில்லை ஆனால் அப்போது அது புரியவுமில்லை. சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் தன் 49 வயதில் அவருக்குண்டான விழிப்புணர்ச்சியை உடல் ரீதியாக தாங்க முடியாமல் அனுபவிக்கும் போது ரமணரின் வார்த்தைகளின் ஆழம் (அதை அவர் குறிப்பிடாமல் போனாலும்) நமக்கு புரிகிறது.

    //சகல உயிர்களை நேசிப்பதே இறைவனை நேசிப்பதற்கும் அவன் அன்பை உணர்வதற்கும்
    சரியான வழி. இந்தப் பேறு கிடைத்தாலே, எல்லாம் சித்தித்து விட்டதாக நினைக்கிறேன்//

    இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தால் அதுவே பெரும் பேறு. அதற்கும் எத்தனை சோதனைகள் தடைகள் ! எல்லாக் கட்டங்களிலும் நம்மால் அதை கடைபிடிக்க முடிகிறதா ?
    ஆழமான கருத்தாடலுக்கு நன்றி

    ReplyDelete
  5. மிக்க நன்றி, கபீரன்ப! தாங்கள் எழுதிய பொறுமையான பதிலுக்கு நன்றி.

    திரு. கிருஷ்ணமூஈர்த்தியைப் பற்றி அறிவேன். அவர் கூட்டங்களுக்குப் போவது கூடப் பெருமையாக, ஞானவான்களின் அந்தஸ்து கிடைத்து விட்ட மாதிரி சில செல்வந்தர்கள் நினைத்த காலம் ஒன்று உண்டு.

    இறைவன் மிகவும் எளிமையானவன். நீக்கமற நிறைந்திருக்கும் அவனைத் தேடித் திரிவானேன்?.. பல்வேறு கக்ஷ்டமான 'தீஸிஸ்'களிலும், உபதேசங்களிலும் அவரை அடைப்பானேன்?..

    தேடுபவர்ககு மூலிகை காலில் சிக்கிக் கொண்டது கூட தெரியாமல் போகும். ஏதோ காட்டுச்செடி என்று சிக்கிக் கொண்டதிலிருந்து விடுவித்துக் கொண்டு நடப்பார்கள்.

    இன்னொரு நேரம் நாம் தொடரலாம். தங்கள் அன்புக்கு நன்றி, கபீரன்ப!

    ReplyDelete
  6. சமீபத்தில் திரு ஜிஎம்பி அவர்களின் பதிவில் குருவுக்கான முக்கியத்துவம் குறித்து எழுதியது மனதில் தோன்றியது. குரு என்றாலே ஞானம் அடைந்தவர் என்று பொருள் இருந்தாலும் அந்த ஞானமார்க்கத்தை நமக்குக் காட்டிக் கொடுக்கக் கட்டாயம் குரு தேவை! வழிகாட்டுவதற்குத் தேவை. மற்றபடி உணர்ந்து அறிவது நம் சாமர்த்தியத்தால் அல்லது நம் முயற்சியால்! நல்ல குரு கிடைத்தும் ஞானமார்க்கத்தின் அடிப்படைக்குக் கூடச் செல்லாமல் இருப்பவர்கள் என் போல எத்தனையோ பேர் இருப்பார்கள்!

    வழி தெரியாத இருட்டுப் பாதையில் கையில் விளக்கேந்திச் செல்வதைப் போலத் தான் குருவும் நமக்கு அறியாமை இருளை அகற்றி ஒளிகாட்டுகிறார். இந்தப் பாதை தான் சரியானது என்பதைப் புரியவும் வைக்கிறார். முடிவில் லட்சியத்தை அடைவது நம் கைகளில். அப்போது குரு இடைத்தரகராகச் செயல்படுவதில்லை.

    ReplyDelete
  7. நல்வரவு கீதா மேடம்,
    //வழி தெரியாத இருட்டுப் பாதையில் கையில் விளக்கேந்திச் செல்வதைப் போலத் தான் குருவும் நமக்கு அறியாமை இருளை அகற்றி ஒளிகாட்டுகிறார்...///

    “விளக்கில் விளக்கை விளக்கவல்லார்” பதிவின் “...என்பற்றித் தந்தார் குருவும், பயனுண்டு விளக்குக்கு வழியிலே”
    என்னும் வரிகளை நினைவூட்டி விட்டீர்கள். எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது தான்.
    மிக்க நன்றி

    ReplyDelete
  8. வணக்கம் கபீரன்பன், வாழ்க வளமுடன்.
    தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ( கபீர் வலைப்பூவுக்கென பிரத்யேகமாக ஃபோட்டோஷாப்-பில் தயாரிக்கப்பட்ட படம்)//

    அழகாய் தயாரிக்கப்பட்ட படம்.

    கதையும், கவிதையும் அருமை.
    பனித்துளியின் அடக்கமும், வைட்ரத்தின் பெருமையும் அழகாய் விளக்கி விட்டீர்கள் கதையில்.


    ReplyDelete
  10. குழலிசையை முயன்றவன் என்ற அடிப்படையில் எனக்குத் தோன்றுவது என்னவெனில் மூச்சை முறையாக குழல் வழியே செலுத்தத் தெரியாதவனுக்கும் இசை வராது. வெறும் புஸ் புஸ் என்று காற்றுதான் வரும். அதை குருவானவர் சொல்லிக் கொடுத்தாலும் மாணவனின் சுயமுயற்சி யில்லாமல் முன்னேற முடியாது. கபீர் இந்த ஈரடியில் குழல் உடைந்தது என்ற வகையில் வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த வில்லை. ஆகவே குழலில் குற்றமில்லை, குருவில் குற்றமில்லை மாணாக்கனின் முயற்சி இல்லாமைதான் குற்றம் என்ற வகையில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது ]//

    நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு குருவாய் இருந்து பாடங்கள் நடத்தினார்கள் என் கணவர், திறந்தவெளி பல்கலை கழக ஆசிரியர்கள். அவர்கள் திறம்பட சொல்லிக் கொடுத்தாலும் என் முயற்சி இன்மையால் படிப்பு பாதியில் தடைப்பட்டது.

    நீங்கள் சொல்வது போல் குருவின் குற்றமுல்லை, மாணாக்கனின் முயற்சி இல்லாமைதான் குற்றம்
    நல்ல பதிவுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நமது ஒவ்வொரு செயலிலும் எண்ணத்திலும் மிக்க கவனம் கொள்ள வேண்டும். //

    உண்மை தான். கவனம் மிகவும் தேவைதான்.

    அருமையான பதிவு திரும்ப திரும்ப படிக்கிறேன்.

    முடிந்த போது நல்ல பதிவுகளை கொடுங்கள் நான் படிக்க , நன்றி.

    ReplyDelete
  12. நல்வரவு கோமதி மேடம்.
    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    //அழகாய் தயாரிக்கப்பட்ட படம்/// ..
    ///அருமையான பதிவு திரும்ப திரும்ப படிக்கிறேன்///

    வெகுவான பாராட்டுகளுக்கு நன்றி.

    கண்டிப்பாக இன்னமும் எழுத முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  13. முதலில் தங்களை வணங்குகிறேன். பனித்துளிக்கும் வைரக்கல்லுக்கும் கிட்டிய அந்த நிலைமை பல உண்மைகளை உணர்த்தியது.
    ஜீவியின் கேள்விகளைப் படித்ததும், ஆமாம்...சரிதானே எனத் தோன்றியது. தங்களின் பதிலைப் படித்ததும், ஆமாம் இதுவும் சரிதானே எனவும் தோன்றியது. :)
    நம்ம ஞானம் அவ்வளவு தான்.
    தங்களுக்கு நான் பலவகையில் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  14. குழல் குருவுக்கு ஒப்பிடப்படுவதால் பதிவின் தலைப்பு நெருடுகிறது.கருத்துக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  15. நல்வரவு சிவகுமாரன்.
    ///குழல் குருவுக்கு ஒப்பிடப்படுவதால் பதிவின் தலைப்பு நெருடுகிறது.///

    குழல் சீடனைக் குறிப்பது. அதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறேனே
    //தேவதத்தன் ஒரு உடைந்த குழல். திருத்த முடியாத சீடன். ஏனெனில் பேராசையினால் நன்னெறி அவனை விட்டு விலகியது//

    தலைப்பில், பிற மொழி பெயர்பாளர்களின் வரிகளைப் பயன்படுத்தியதால் வந்த குழப்பம் என்று நினைக்கிறேன். அதனால் தான் என்னுடைய மொழிபெயர்ப்பில் அதை தவிர்த்திருக்கிறேன். தேவத்தன் கதை சொல்லும் போது அந்த சொல்லாட்சி தானாக வந்து விழுந்ததால் தலைப்பை மாற்ற முயலவில்லை.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி