Thursday, October 31, 2024

"ஸப் கா மாலிக் ஏக் ஹை "

 சென்ற பதிவில் ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரிதாம்ருதத்தில்  குறிப்பிடப்பட்டிருந்த காட்கே மஹராஜின் வரலாற்றைக் கண்டோம்.

இந்த பதிவில், அதே புத்தகத்தில் வாரிஷ் அலி ஷா என்னும் மற்றுமொரு மஹானின் அவதாரக் குறிப்பும் அவரைப் பற்றிய தகவல்கள் எப்படி உண்மையாகியுள்ளன என்பது பற்றியும் பார்ப்போம்.

சரிதாம்ருதத்தின் 45 ஆவது அத்தியாயத்தில் திசீலா என்ற ஊரில் ஒரு இசுலாமிய குரு சாயிநாத் என்ற பெயரில் அவதரிக்கப் போவதையும் .அவருக்கு வெங்குசா என்னும் பெரியவர் இந்து மதத்தின் குருவாகவும் முஸ்லீம் மத குருவாக வாரிஷ் அலி ஷா என்பவரும் வருவார்கள் என்றும் ஸ்ரீபாதர் தெரிவிக்கிறார். [அதே சமயத்தில் தான் சுவாமி சமர்த்தராக அவதரிப்பதாகவும் சாயிநாதனுக்கு தன்னுடைய சக்தியை மாற்றம் செய்து தன் அவதாரத்தை நிறைவு செய்து கொள்வதாகவும் தெரிவிக்கிறார்]



 ஷிரடி சாயி சரிதத்தை பார்க்கும் போது அவர் ஒரு இசுலாமிய தம்பதியரால் நான்கு வயது வரை வளர்க்கப்பட்டு பின்னர்  நான்காம் வயதிலிருந்து 16 ஆம் வயது வரை  வெங்குசா என்றழைக்கப்பட்ட கோபால் ராவ் தேஷ்முக் என்பவரின் அரவணைப்பில் ஆன்மீகப் பயிற்சி பெற்றார் என்றும்  தெரிய வருகிறது.   தினமலர்  வலைத்தள இணைப்புக்கு  சுட்டவும்

இதில் சரிதாம்ருதத்தில் கூறப்பட்டுள்ள கணிப்பில் குரு வெங்குசா பற்றிய பகுதி நிஜமாகியிருப்பது தெரிகிறது.

1851 -இல் முதன் முதலாக ஷிரடியில் ஒரு வேப்பமரத்தடியில் ஆழ்ந்த தவ நிலையில் உள்ள இளைஞனாக காட்சியளித்தார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

அதன் பின் 1854 முதல் 1858 வரை அவருடைய இருப்பிடம் வாழ்க்கைப் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. 1858 -ல் ஒரு திருமண கோஷ்டியுடன் ஷிரடிக்கு வந்தவர் அங்கேயே தங்கி விட்டார் என்பது அவருடைய சரிதத்தில் உள்ளது.

இதிலிருந்து அந்த நான்கு அல்லது ஐந்து வருட கால இடைவெளியில் சாயிபாபாவிற்கு வாரிஷ் அலி ஷா வின் தொடர்பு ஏற்பட்டு இசுலாமிய வழிமுறைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்கிறது என்று அனுமானிக்க முடிகிறது.

 ஆனால் இந்த முஸ்லீம் குரு ஹாஜி வாரிஷ் அலி ஷா (1817-1905 ) பற்றி நான் எதுவும் கேள்விப் பட்டிருக்கவில்லை. அவரைப் பற்றிய தேடல் துவங்கியபோது முதலில் கண்ணில் பட்டது விக்கிப்பீடியா ( தரவு பக்கம்) அவருடைய பாட்டனார், ஈரான் பிரதேசத்திலிருந்து லக்னௌ அருகே தேவா என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். இன்று அது ஒரு முக்கிய யாத்திரைத் தலமாக இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் விளங்குகிறது.

    அவர் ஒரு சுஃபி மார்க்கத்தில் ஆன்மீகத்தின் -அன் அல் ஹக் எனப்படும் (அஹம் பிரம்ஹாஸ்மி)- உச்சத்தை எட்டியிருந்த ஒரு மகான் என்பது தெரிய வந்தது.

   தமது இரண்டாம் வயதில் தந்தையை இழந்த அவர் அவரது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். பிற குழந்தைகள் போலல்லாமல் அமைதி மிக்கவராய் காணப்பட்டார். ஐந்து வயதில் குரான் படிக்க ஆரம்பித்த அவர் இரண்டே வருடங்களில் முழுவதையும் மனப்பாடம் செய்து விட்டார். உயர் கல்வியை லக்னௌ நகரில் உறவினர் வீட்டிலிருந்து கற்றார். அரபு, பாரசீக மொழிகளில் அற்புத தேர்ச்சி பெற்று சமய போதனைகளையும் விளக்கங்களையும் பண்டிதர்களே வியக்கும் வண்ணம் கொடுக்க ஆரம்பித்தார். அவரைச் சுற்றி சீடர்கள் சேர ஆரம்பித்தனர். 1838 -இல் அவர் புனித  ஹஜ் பயணம் மேற்கொண்டார். எவரையும் உடன் அழைத்துச் செல்ல மறுத்து பாத யாத்திரையாக ஆக்ரா ஜெய்பூர், வழியாக மும்பை அடைந்தார். மும்பையிலிருந்து ஜெத்தா வரையிலுமான பயணத்தை கப்பலில் கடந்தார்.

மீண்டும்  கால்நடையாகவே மெக்கா மெதினா  எகிப்து, துருக்கி, ஜெர்மனி இங்கிலாந்து வரை பயணம் செய்தார் என்பதும் தெரிய வந்தது. இந்த பயணத்தில். சுமார் பதினான்கு ஆண்டு காலம் பலமுறை ஹஜ் யாத்திரை செய்து ஆன்மீக வழிகாட்டினார்.   

துருக்கி ஆட்டோவான் அரசர், ஜெர்மனியில் பிஸ்மார்க், இங்கிலாந்து அரசி விக்டோரியா முதலியோர்களை சந்தித்ததாக சொல்லும் போது அவருக்கு அக்காலத்திலிருந்த மதிப்பை அறிய முடிகிறது.

பீர் (Pir) எனப்படும் இசுலாமிய குரு மிகுந்த எளிய வாழ்க்கை வாழ்பவனாகவும், நாளைக்கென எதையும் சேர்த்து வைக்காதவனாகவும் அனைவரையும் சமகண்ணோட்டத்துடன் நடத்த வேண்டுமென்பதிலும் அவர் மிகுந்த கவனுத்துடன் நடைமுறையில் கடைபிடித்தார்.  அவரது வாழ்க்கையை கவனித்த ஆங்கில சரித்திர ஆசியர்கள் “ஹாஜி வாரிஷ் அலி ஷா  ஜீஸஸ் போன்றே ஒரு தூய இறை தூதர்” என்று போற்றுகின்றனர்.

விக்கிபீடியா பக்கத்தில் ஹாஜி வாரிஷ் அலி ஷா வின் பெரிய சீடர்களின் பட்டியலில் ஷிரடி சாயிபாபாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

கபீர்தாஸ், வாரிஷ் அலி ஷா மற்றும் சிரடி சாயிபாபா மூவருமே இந்து-இசுலாமிய மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட உழைத்த பெரும் ஞானிகள். அவர்களின் உபதேசங்களிடையே பெரும் ஒற்றுமையை காணலாம். 

கபீர்தாஸரின் அறிவுரைகள் எப்படி ‘ ஹாஜி வாரிஷ் அலி ஷா’ வின் உபதேசங்களுடன் பொருந்தி வருகிறது என்பதற்கு சில உதாரணங்கள். (https://sufinama.org/poets/haji-waris-ali-shah/quotes )

1)  Not a breath should he pass without the remembrance of God

काह भरॊसा दॆह का, बिनस जात छिन मांहिं |
सास-सास सुमिरन करॊ,और यतन कुछ नाहिं ||  ( Kabir)
நிலையா யாக்கை நின்மாத்திரம் மறைந்துபோம் -மூச்சு  |
மூச்சிலும் செபிநாமம், முயல்வதற் கில்லை வேறெதுவும்  ||

2)  Distance does not count in love, I am with you even if you are at a distance of thousands of miles

कहैं कबीर गुरु प्रेम बस, क्या नियरै क्या दूर
जाका चित्त जासों बसै, सो तेहि सदा हज़ूर

பத்தி போதும் குருவுக்கு, கபீரா, அருகென்ன தூரமென்ன ?
சித்தம் அவனுள் தோய்ந்தால், உடனே அருகில் இருப்பான்

(அகோரமணி, இராமகிருஷ்ணர் பற்றிய கட்டுரை. தவறாமல் படிக்கவும். 

https://kabeeran.blogspot.com/2012/02/blog-post.html )

 

3)  It is no use going to Kaaba for those who cannot see God here

मोको कहाँ ढूढे रे बन्दे?    என்னைத் தேடுவதும் எங்கே
मैं तो तेरे पास में         
நானிருப்பதோ உன் அருகே

ना तीर्थ में ना मूर्त में      தீர்த்தங்களிலோ மூர்த்தங்களிலோ இல்லை
ना एकान्त निवास में       
தனிமைத் தேடும் ஏகாந்தத்தில் இல்லை

ना मंदिर में ना मस्जिद में   கோவிலிலோ, மசூதியிலோ  இல்லை
ना काबे कैलास में           
காபாவிலோ கைலாயத்திலோ இல்லை  

मैं तो तेरे पास में           நானிருப்பதோ உன் அருகே

4)  A true faqir never wants anything

साधू भूखा भाव का, धन का भूखा नाहीं

धन का भूखा जो फिरै, सो  तो साधू नाहीं

அருளுக்கே பசித்திருப்பான் சாது, பொருளுக்கென யில்லை |

பொருளின் பசிவந்தால் அவனுள், அவன் சாதுவும் இல்லை ||

 

தன்னைத் தேடி வந்த பக்தரிகளிடையே எவ்வித பாகுபாடும் வாரிஷ் அலி காட்டவில்லை. யாரையும் மதம் மாறச் சொல்லவில்லை. அவரவர் மதநம்பிக்கைகளையே கடைபிடிக்கச் சொன்னார். ஏனென்றால் இறைவன் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். அதனையே “சப் கா மாலிக் ஏக் ஹை” என்று ஷிரடி பாபாவும் மீண்டும் மீண்டும் சொன்னார்.

இன்று தீபாவளித் திருநாள். அதர்மம் அழிக்கப்பட்டு தர்மம் நிலைக்கட்டும் என்பதை நினைவுபடுத்த ஏற்படுத்தப்பட்டிருக்கும் விழா. ஆனால் அதர்மமே தர்மத்தின் போர்வை போர்த்துக் கொண்டு எப்படி கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மது விற்பனையையும் ( லக்ஷ்மி பூஜை என்ற பெயரில்)  சூதாட்டமும் நடைபெற வைக்கிறது என்பதை ஒரு போலீஸ் அதிகாரி நம் தேசத்து மக்களின் அறியாமை கண்டு மனம் வெதும்புகிறார்.

அவர் பெயர் ஷைலஜாகாந்த் மிஷ்ரா, உத்திரபிரதேசத்தில் DGP ஆக பணியாற்றியவர்

கபீரும், ஹாஜி வாரிஷ் அலியும், ஷிரடி சாயி போதிக்கும் சர்வமத சம்மத கருத்துகளை அந்த அதிகாரி குரான், வேதம் மற்றும் பைபிள் மேற்கோள்கள் மூலம் அழகாக எடுத்துரைக்கும் போது என்று தான் இந்த உலகம் திருந்தப்போகிறது என்ற ஆதங்கம் மேலோங்குகிறது.

இவ்வுலகின் போக்கை நிர்ணயிப்பவன் அவன். மணிவாசகப் பெருமான் சொல்வது போல் “ நன்றே செய்வாய் பிழைசெய்வாய், நானோ இதற்கு நாயகமே “ என்று தான் ஆறுதல் தேட வேண்டியிருக்கிறது.

இரமண பகவானின் “ உன்னைத் திருத்திக் கொள், உலகம் தானே சரியாகும்” என்பதின் கருத்தாழத்தை பிடித்துக் கொண்டால் இந்த தீபாவளியின் பயன் அடைந்ததாகக் கருதலாம்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

No comments:

Post a Comment

பின்னூட்டத்திற்கு நன்றி