Wednesday, July 02, 2025

சத்குருவிடம் சரணாகதி (2)

 இந்த தலைப்பில் 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் ஒரு பதிவை எழுதியிருந்தேன். இந்தப்பதிவிலும் அதே குருவைப்பற்றி பேசப்போகிறோம். சமீபத்தில் அவரது சொற்பொழிவுகளின்  மொழி பெயர்ப்பை தட்டச்சு செய்து நிறைவு செய்யும் வேளையில்  இதை இந்த ஆண்டு குரு பூர்ணிமைக்கு  (ஜுலை 10) சமர்பணம் செய்ய விழைகிறேன்.

சற்று விவரமாக சொல்ல வேண்டுமானால் ஸ்ரீ பிரம்ம சைதன்ய மஹராஜரைப் பற்றித்  தெரிந்து கொள்ள வேண்டும். அவர் மஹாராஷ்ட்ராவில் சதாரா ஜில்லாவில்  கோண்டாவாலே  என்ற ஊரில் 19 நூற்றாண்டில் வசித்த மகான். அதனால் அவரை கோண்டாவாலேகர் என்றும் அழைப்பர்.

அவர் வாழ்ந்த காலம் 19/2/1845 - 22/12/1913  

எளிய நாமசெபத்தின் அருமையை கபீர் போலவே மீண்டும் மீண்டும் அப்பகுதி மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை ராம நாமத்தில் ஈடுபடுத்தி ஒரு ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்.

அவருடைய சொற்பொழிவுகளை தொகுத்து தினசரி ஒரு பக்கம் என்னும் வகையில்-பாராயணத்திற்கும் சத்சங்கத்திற்கும் ஏற்ற முறையில்-கோண்டாவாலே சமஸ்தானம் புத்தகமாக குறைந்த விலையில் வெளியிட்டுள்ளது.  ஒரு வருடம் முழுவதும் படிக்கும் வகையில் ஜனவரி -1 முதல் டிசம்பர்-31 வரை  தேதியிட்டு ஒவ்வொரு நாளுக்கும் தலைப்பு கொடுத்து மிக அழகாக தொகுத்து இருக்கிறார்கள்.

அதனை 2017 ஆண்டு ஒவ்வொரு தினமும் அன்றைய தினத்திற்கான உரையை தமிழில் மொழி பெயர்த்து, பயன்படுத்துவாரின்றி கிடந்த பழைய டையரி ஒன்றில் எழுதி வந்தேன். இதை இரண்டு காரணங்களுக்காக தொடர்ந்து செய்தேன். மொழிபெயர்க்கும் போது ஒரு ஈடுபாட்டுடன் படிக்க வேண்டியிருக்கிறது. அதனால் கருத்தாழம் மனதில் பதிந்து, ஒருவகையில் அந்த மகானுடன் சத்சங்கம் செய்ததாகிறது. இரண்டாவது எழுதுவதால் கையில் எழுதும் பழக்கமும் தமிழும் மறக்காமல் இருக்கிறது. புது புது தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது.

 குரு அருளால் அந்த வேலையை செய்து முடிக்க முடிந்தது. அதன் பின்னர் அந்த கையெழுத்துப் பிரதியை கோண்டாவாலேக்கு எடுத்துச் சென்று அவர் வாழ்ந்த சமஸ்தானத்தில் சமர்பணம் செய்வது பொருத்தமாகும் என்று தோன்றியது. ஆனால் இன்று வரை அதற்கான வேளை வரவில்லை.

ஸ்ரீ பிரம்மசைதன்யரை போலவே நாமசெபத்தின் பெருமையை வளர்த்த பப்பா ராமதாஸ் அவர்களின் காஸர்கோடு ஆனந்தா ஆசிரமத்திற்கு எடுத்து சென்று அவரது காலடிகளில் சமர்ப்பித்து ஓரளவு ஆறுதல் அடைந்தேன். (விசிறி சாமியார் என அன்புடன் அழைக்கப்பெற்ற யோகி ராம்சூரத் குமார் அவர்களின் குரு பப்பா ராமதாஸ் என்பதையும் இங்கே நினைவு கூர்வோம்).  

சிறிது காலம் அந்த டையரி அப்படியே இருந்தது. பக்கம் பக்கமாக (400 பக்கங்கள்) தட்டச்சு செய்வதற்கு மிக மலைப்பாக இருந்தது.

2022-ல்  Samsung drawing pad ஒன்றை வரவழைத்தேன். முக்கியமாக டிஜிடல் வரைபடத்திற்கு ஏதுவாக (கையடக்கமாக) இருக்கும் என்பது என் நோக்கமாக இருந்தது.  அதை பயிற்சி செய்த அதே காலத்தில் இது voice typing செய்வதற்கும் உபயோகமாக இருப்பதைக் கண்டு கொண்டேன்.  தமிழில் மிகச் சுலபமாக ஐந்தே நிமிடங்களில் ஒரு பக்கத்தை முடிக்க முடிந்தது. அடுத்த பத்து நிமிடங்களில் பிழைத் திருத்தம் செய்ய வேண்டியதாயிற்று. இதை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு செய்யலாம். இப்படியாகநேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அத்தனைப் பக்கங்களையும் -உரக்க வாசித்து -தட்டச்சு செய்து நேற்று முடித்தேன். இனிமேற்கொண்டு செய்ய வேண்டியதற்கும் அந்த சத்குருவே வழிகாட்டுவார் என் நம்புகிறேன்.  இதை எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால் நம்முடைய முயற்சிகள் எதுவும் வீண்போகாமல் அதற்குரிய நேரத்தில் தகுந்த வழிகாட்டுதல் கிடைத்துக் கொண்டே இருக்கும்.  அதையே குரு அருள் என்று பெரியவர்கள் சொல்கின்றனர். 

சுயபுராணத்திற்கு மன்னிக்கவும். இப்போது பிரம்ம சைதன்ய மஹாராஜ் பற்றி சிந்திப்போம்.

 “யாரைப்பற்றியும் நான் ஒரு போதும் விரக்தி அடைவதில்லை. ஏனென்றால் மனிதனாகப் பிறந்த எவரும் ஒரு நாள் அல்லது இன்னொரு நாள் கடவுளை அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் “

என்று ஒரு குரு பூர்ணிமை உரையில் கோண்டாவாலேகர் கூறியிருப்பதன் மூலம் எப்படி மகான்கள் அனைவரையும் சமபாவத்துடன் நடத்துகின்றனர் என்பது புரிகிறது.

இந்த மொழிபெயர்ப்பின் போது பல சமயங்களில் அவர் குரு மகிமையை கூறும் போதும் நாமசெபத்தின் பெருமையை சொல்லும் போதும் கபீர்தாஸரின் கருத்துகளை எதிரொலிப்பது நன்றாகவே புரிந்தது.  கபீரை நினைவு படுத்தும் வகையில் அவருடைய  டிசம்பர் 31ஆம் தேதி உரையில் கீழே உள்ள வரிகள்  முடிவுரையாக வந்தது.

 “எப்படி தன்னுடைய கன்று செல்லும் இடத்திற்கெல்லாம் தாய் பசு செல்லுமோ அப்படி குருவானவர், நாம செபத்தில் தோய்ந்த பக்தர்களை பின் தொடருகின்றார்.”

நீதி வெண்பா பாடல்  ஒன்றில் இதே கருத்து வெளிப்பட்டு இருப்பதை ஏற்கனவே (2008-ல்) கண்டிருக்கிறோம். ( கன்றைச் சுற்றும் பசு) 

அதையே கபீர்தாஸரும் சொல்லுகிறார் :

கபீர் மனது நிர்மலமானது தூய கங்கை நீர் அன்னே

கபீர் கபீரென்றே ஹரி குழைவான் இவன் பின்னே பின்னே

மனித உடல் எடுத்து குருவாக வந்து  கடவுளை காட்டுவதால் குருவும் இறைவனும் ஒன்றே என்பதை எல்லா மஹான்களும் சொல்லுகிறார்கள்.

அப்படி ஹரி ( அல்லது குரு ) தன் பக்தனின் பின்னே சுற்றுவதற்கு காரணம் என்ன?  பக்தன் நாமசெபத்தை விடாமல் செய்யும் போது அது மனதை பரிசுத்தமாக்குகிறது. தூய மனமே இறைவனின் குடியிருப்பு. இதையும் கோண்டாவாலேகார் சொல்லுகிறார். அவருடைய மொழியிலேயே காண்போம்.


( click the picture to see larger one)

இறைவனின் நாமஸ்மரணத்தை விடாமல் பிடித்துக் கொள்வதே கலியுகத்திற்கான முக்கிய, மிக எளிய சாதனம் என்பதை காலங்காலமாக எல்லா மஹான்களும் சொல்லி வருகின்றனர். வருகின்ற  ஜுலை 10 ஆம் தேதி குரு பூர்ணிமை.  அனைவரும் குருவின் அருளுக்காக நாம செபத்தை -அவரவர்க்கு பிடித்த கடவுளின் பெயரை- பிடித்துக் கொண்டு முயற்சி செய்வோம். அந்த முயற்சி இல்லாமல் தகுதி வராது. அருளுக்கான தகுதியை வளர்த்துக் கொள்வதே முதற்படி.  குரு கடாக்ஷம் பரிபூர்ணம்.

ஸ்ரீ பிரம்ம சைதன்ய மஹராஜ்  சமஸ்தான வலைத்தளத்தில் அவரைப்பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு : கபீரின் கனிமொழிகள் (2008) கட்டுரைகள் புத்தக வடிவில் மிகக் குறைந்த எண்ணிக்கையே அச்சிடப்பட்டுள்ளது. தங்களுடைய சத்சங்கங்களில் உதவும் என்று நினைப்பவர்களும், மின் வடிவில் தேடி படிக்க இயலாதவர்களுக்கும்  கீழே உள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டால்  இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கிறேன். இது விற்பனைக்கு அல்ல . 184 பக்கங்கள் கொண்டது.

தொடர்புக்கு :  ஒன்பது  நான்கு  எட்டு  பூஜ்யம்  நான்கு  நான்கு  மூன்று  பூஜ்யம் ஏழு  பூஜ்யம்