Friday, February 22, 2008

கன்றைச் சுற்றும் பசு

பெரியவர்கள் பலரும் கூடியிருக்கும் வேளை. பேசுவதற்கு ஒன்றும் பெரிதான விஷயமும் இல்லை. சொல்லப் போனால் ரொம்ப 'டல்'அடிக்கிற பொழுது. அவ்வேளை ஒரு இளம் தம்பதியினர் இரண்டு வயது குழந்தையோடு வந்து சேர்கின்றனர். அதன் சூட்டிகையான பேச்சும், கேள்விகளுக்கு பதில் சொல்லும் போக்கும், வெட்கப்படாமல் செய்து காட்டிய ஆட்டமும் பாட்டமும் எல்லோரையும் கட்டிப்போட்டு விட்டது. அனைவரது முகத்திலும் உற்சாகம். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.அத்தம்பதியினர் கிளம்பும் போது மனமே இல்லாமல் யாவரும் கூடி வழி அனுப்புகின்றனர். அவர்கள் போனபின்னும் வெகு நேரம் வரையிலும் அதே பேச்சு.

இது பலமுறை நாமெல்லோரும் பார்க்கும் ஒரு காட்சி.

இந்த ஈர்ப்பு குழந்தைகளிடத்தில் எப்படி ஏற்படுகிறது ? யாவரும் சொல்வது அவர்களின் கள்ளம் கபடம் அற்ற மனதே காரணம் என்பதே. அவர்களோடு இருக்கும் பொழுது பெரியவர்களும் குழந்தைகளாகி விடுகிறோம். நம்மை மறக்கும் அந்த கணங்களிலே நம் இதயமும் தூய்மையாய் இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.

ஞானிகளையும் குழந்தைகளின் வகையிலேயே சேர்க்கின்றனர் பெரியோர்.அவர்களுக்கும் பேத பாவங்கள் கிடையாது. இறைவனின் கையில் தம்மை குழந்தையாய் பாவிப்பதால் செயலாற்றல் அவசியம் கிடையாது. அதனால் உண்டாகும் பாவபுண்ணியங்களும் கிடையாது. இந்த மனநிலையை நிர்மலம் என்று கூறுவர்.நிர்-மலம், மன அழுக்குகள் அற்ற நிலை.

அந்நிலையில் பெரியவர்கள் குழந்தையைச் சுற்றி வருவது போலே இறைவனும் தன் அடியவரை சுற்றி வருவானாம்.

நீதி வெண்பாவிலே வரும் ஒரு பாடலைப் பாருங்கள்.

சிவனே சிவனே சிவனே என்பார் பின்,
சிவன் உமையாளோடுந் திரிவன் -சிவன் அருளாற்
பெற்ற இளங்கன்றை பிரியாமற் பின்னோடிச்
சுற்று(ம்) பசு போல் தொடர்ந்து. (58)

(சிவனே என்பார் பின் = சிவனே என்பவர்கள் பின்னால்)

தாய் பசு எப்படி தன் கன்றை விட்டுப் பிரிய முடியாமல் அதன் பின்னே சுற்றுமோ அது போலவே இறைவனும் தன் பெயரை உள்ளன்போடு நினைப்பவர் பின்னே திரிவானாம். இதே நிலையை கபீரும் அனுபவிக்கிறார்.

कबीर मन निर्मल भया, जैसे गंगा नीर ।
पाछे पाछे हरि फिरे, कहत कबीर कबीर ॥


கபீர் மன் நிர்மல் பயா, ஜைஸே கங்கா நீர் |
பாசே பாசே ஹரி ஃபிரே, கஹத் கபீர் கபீர் ||


கபீர் மனது நிர்மலமானது, தூய கங்கை நீர் அன்னே
கபீர் கபீரென்றே அரி,குழைவான் இவன் பின்னே பின்னே

(அன்னே = போலே ; அரி =ஹரி ; குழைதல்= நெகிழ்தல்)

எப்போதும் இறைவன் தன்னுடனேயே இருக்கிறான் என்பதை தன் பின்னாலே அவன் சுற்றுகிறான் என்ற பொருளிலே சொல்கிறார். (பாசே பாசே என்பது பீசே பீசே என்று சொல்வதன் திரிபு.)

இரண்டாம் அடியில் ஹரி ஃபிரே என்பதற்கு பதிலாக ஹர் ஃபிரே என்றும் சில இடங்களில் காணப்படுகிறது. அப்படி வைத்துக்கொண்டால் “கபீர் கபீரென யெவரும், திரிவார் இவன் பின்னே பின்னே” என்று மொழி பெயர்க்க வேண்டி வரும்.

பொருள் கொள்வதில் சற்று வித்தியாசம் வரும். ஆரம்பத்தில் கண்ட படி நிர்மலமான மனதுக்கு யாவரையும் வசீகரிக்கும் சக்தி உண்டு என்பதால் நிர்மலமான கபீர் யாவரையும் கவர்ந்திழுக்கிறார் என்று கொள்ள வேண்டும்.

ஹரி என்பதே சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் கபீர் போன்ற மகான்கள் தம்மைச் சுற்றியிருப்பவர்களின் அங்கீகாரத்திற்காக கவலைப்பட்டவர்கள் அல்லர்.


மகாபாரதம் எழுதி முடித்த வியாசருக்கு மனதில் அமைதி குலைந்து விட்டது. மெகா சீரியல்கள் போல போட்டி பொறாமை, சூது வஞ்சம் என்று இவற்றைப் பற்றிய கதையை சொன்னதால் அதன் பாதிப்பு அந்த மகரிஷிக்கும் வந்துவிட்டது.அப்போது நாரதரின் அறிவுரைப்படி கிருஷ்ணரின் பால்ய லீலைகளைப் போற்றும் பாகவதத்தை எழுதினார். பாலகிருஷ்ணனின் குறும்புகளையும் லீலைகளையும் சொல்லச் சொல்ல அவர் மனம் மீண்டும் நிர்மலம் ஆகி அமைதி கொண்டார் என்று அறிகிறோம்.

“மன ஏவ மனுஷ்யானம்”. நாம் எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அதுவே ஆகிவிடுவோம் என்று அதனால் தான் சொல்லி வைத்திருக்கிறார்கள். நற்சிந்தனைகளிலேயே மனதை செலுத்தும் பொழுது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளும் நன்றாகவே அமைவதைக் காண்கிறோம்.

9 comments:

  1. //மகாபாரதம் எழுதி முடித்த வியாசருக்கு மனதில் அமைதி குலைந்து விட்டது. //
    வியாசருக்கே அப்படி என்றால் நமக்கெல்லாம்...?!
    வெள்ளத்தனைய தானே மலர்நீட்டம்
    என்பதனை

    உள்ளத்தணைய நிறுத்தி உறுதிப்படுத்துவோம்.

    ReplyDelete
  2. நன்றி சூரி சார்.
    //"குழைவான்"எனும் சொல் இலக்கிய நயத்துடன் அமைந்துள்ளது //
    திரிவான் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் உள்ளன்பு சரியான முறையில் வெளிப்படவில்லை என்று தோன்றியதால் ”குழைவான்” என்று பயன்படுத்தினேன். தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்சி.

    ReplyDelete
  3. //PS: please visit after Sunday
    http://arthamullaValaipathivugal.blogspot.com //

    இதன் பொருள் இன்று காலையில் வேறு ஒரு சந்தர்பத்தில் புரிந்தது. கபீருக்கு மகுடம் சூட்டி அழகு பார்க்கும் உங்கள் ஆசையை யார் தடுக்கமுடியும் ? மேலும் பல நல்ல வலைப்பூக்களின் அறிமுகத்தை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  4. வணக்கம் ஜீவா
    //வியாசருக்கே அப்படி என்றால் நமக்கெல்லாம்...?!//
    அலையற்ற நீரில் சிறிய கல் விழுந்தாலும் வட்ட வட்டமாக அலை விரிந்து பின்னர் மெதுவாக அடங்குகிறது. கர்மத்தை மேற்கொண்ட யாவர்க்கும் ஞானியே ஆனாலும் கூட இது பொதுவான விதி என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஞானிகளுக்கு திரும்பவும் மனவடக்கம் விரைவாக நிகழ்கிறது. நமக்கு ? நீங்கள் போட்டிருக்கும் கேள்விக் குறிதான்.

    ReplyDelete
  5. குழந்தைகளும் மகான்களும் எப்படி ஒரே மாதிரி என்பதை மிக அழகாகச் சொன்னீர்கள்.

    நாம் எதைப் பற்றி சிந்திக்கிறோமோ, பேசுகிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம் என்பது உண்மை தான்.

    ReplyDelete
  6. //நாம் எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அதுவே ஆகிவிடுவோம் என்று அதனால் தான் சொல்லி வைத்திருக்கிறார்கள். //

    அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.

    குழந்தை மனம் வேண்டும்.
    இறையுடன் இன்றும் என்றும்
    இயைந்த மனம் வேண்டும்.

    ReplyDelete
  7. நன்றி குமரன், கவிநயா,

    குமரனுக்கு நன்றி எப்படி விடுபட்டுப் போனதோ தெரியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    //நாம் எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அதுவே ஆகிவிடுவோம் என்று அதனால் தான் சொல்லி வைத்திருக்கிறார்கள். //

    இதையே குறிப்பிடும் இன்னொரு வாக்கியம்
    “யத் பாவம் தத் வதி “
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. //இதையே குறிப்பிடும் இன்னொரு வாக்கியம்
    “யத் பாவம் தத் பவதி “//

    இது குறித்த குமரனின் அருமையான பதிவை சமீபத்தில்தான் படித்தேன்:

    http://godhaitamil.blogspot.com/2006/12/blog-post_10.html

    ReplyDelete
  9. மிக்க நன்றி கவிநயா,
    குமரனின் அழகான பதிவுக்கு இணைப்பு தந்தமைக்கு.
    பதிவுகள் வந்து கொண்டிருக்கும் வேகத்தில் புதியவைகளை படிக்கவே மூச்சு முட்டுகிறது. நீங்கள் பழையவைகளையும் தேடிப் பிடித்து படிக்கிறீர்களே !பாராட்டுகள்.

    [முதல் பின்னூட்டத்திலேயே சுப்பு ரத்தினம் அவர்கள் யத் பாவம்''' பற்றி சொல்லியிருப்பதை கவனிக்காமலே இரண்டாம் முறையாக நானும் அதை சொல்லி வைத்தேன்:( ]

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி