Sunday, October 29, 2006

திரியும் மனது

மனதைப் பற்றிப் பேசாத ஆன்மீகமே இருக்க முடியாது. எல்லாம் அங்கிருந்தே தொடங்கி அங்கேயே முடிவடைகிறது. சிலர் குரங்கு என்பர். வேறு சிலர் 'பாதரசம்' என்பர். இன்னும் சிலர் அதை பேயாய் வருணிப்பர். மனம் அறுத்தலே ஆன்மீகத்தின் முதலும் முடிவுமாகும். வழிபாடுகளின் நோக்கமே புலனடக்கம் தான். மனமடங்க இது முதற்படி. இதை புரிந்து கொள்ளாமல் செய்யும் எந்த ஒரு வழிபாடும் முழுமையானது ஆகாது.

விடாமல் பலவாறான பூஜைகளையும் விரதங்களையும் கடைப்பிடிக்கும் ஒருவன் இறைப்பற்று உள்ளவனா? கபீர் சிரிக்கிறார்.

माला तॊ कर मॆ फिरॆ, जीभ फिरॆ मुख माहिं
मनुआ तो चहुं दिशा फिरॆ, यह तॊ सिमिरन नाहिं


மாலா தோ கர் மே ஃபிரே, ஜீப் ஃபிரே முக் மாஹின்
மனுவா தோ சஹு திஷா ஃபிரே, யஹ் தோ ஸிமிரன் நாஹின்


விரலில் உருளுமே மணி அக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்
வீணில் திரியுமே மனம் அங்கு, நவில்வரே இதனை செபமென்று
(அக்குமணி = ஜெபமாலை ; செம்மந்திரம் = ஜெபத்திற்க்கென உபதேசமான மந்திரம்)
( இது செபமாகாது என்னும் வகையில் கபீர் தோஹாவை நிறைவு செய்திருப்பினும் கேலியை சற்று தூக்கலாக்க வேண்டி நவில்வரே என்ற இகழ்ச்சி ஏ காரம் கையாளப்பட்டுள்ளது)


{ இதை சரியல்ல என்று நினப்பவர்களுக்கு, மாற்று :
விரலில் உருளுமே மணியக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்
வீணில் திரியுமே மனமங்கு, இவர் செய்வதும் இங்கே செபமன்று
}
இது நமது தினசரி அனுபவம். பத்து நிமிடமாவது ஒருமுக சிந்தையில் கடவுளை துதிக்க முடியாமல், நமக்களித்துள்ள நல்லவிஷயங்களுக்கு நன்றி கூறாமல் செபமென்ற பெயரிலமர்ந்து கொண்டு இல்லாத பொருட்களுக்கு மனக்கோட்டைக் கட்டிக்கொண்டிருப்போம். வெளிப் பார்வைக்கு, பிறருக்கு, நாம் வேண்டுமானால் பக்திமான்களாக காட்சியளிக்கலாம். ஆனால் மஹான்கள் நமது மனதை படம் பிடித்து விடுகின்றனர்.

நாமதேவர் ஒரு பெரிய மனிதரின் வீட்டிற்கு விஜயம் செய்தார். அவரோ பூஜையில் மும்முரமாய் இருந்தார். இவரை கண்டுக்கொள்ளவே இல்லை. வெகு நேரம் கழித்து வந்த அவர் உபசாரமாக "வந்து வெகு நேரமாகி விட்டதா?" என்று விசாரித்து வைத்தார். அவருடைய மனதுள் தாம் செய்த விஸ்தாரமான பூஜையை நாமதேவர் பாராட்டுவார் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ! அதற்கு அவர், "ஓ வண்ணான் வந்த போதே வந்து விட்டேன்" என்று பதிலளித்தார். நெடுஞ்சாண்கிடையாக அம்மகானின் காலில் விழுந்தார் அந்த பெரிய மனிதர். மாட்டாரா பின்னே ! பூஜை முழுவதும், வராமல் போய் விட்ட வண்ணானைப் பற்றியும் மாற்று ஏற்பாடுகள் பற்றியுமே அவர் சிந்தனை திரிந்தது. அதை சர்வ சாதாரணமாக வெளிக்கொணர்ந்தார் நாமதேவர். இத்தகையவர் அன்றும் இன்றும் என்றும் உண்டு. பின் கபீரும் சிரிக்காமல் என்ன செய்வார்?

இன்னும் சிலர் நோன்புகள் நேர்ந்து, பாத யாத்திரை செய்து, முடி களைந்து நேர்த்திக் கடன் செலுத்துவதிலேயே கடவுளை திருப்தி செய்ய முயலுவர். இவர்களைக் கண்டு கபீருக்கு அலுப்புத் தட்டுகிறது.

कॆसॊं कहा बिगाडिया जॊ मूंडॆ सौ बार
मन कॊ काहॆ न मूंडिए, जामैं विषै विकार


கேஸோன் கஹா பிகாடியா, ஜோ மூண்டே ஸௌ பார்
மன் கோ காஹே ந மூண்டியே, ஜாமை விஷய் விகார்


சிகைசெய்த பாவ மென்ன, மழிப்ப ரதை நூ றுமுறை
சிறுமை தனைம ழியாரோ, மனக்கண் வளரும் நூறுவகை
(சிகை = தலைமுடி)

मूडं मुडावत दिन गए, अजहूं न मिलिया राम
राम नाम कहु क्या करै, जॊ मन कॆ और काम

மூண்ட் முடாவத் தின் கயே, அஜ்ஹூ ந மிலியா ராம்
ராம் நாம் கஹூ க்யா கரை, ஜோ மன் கே அவுர் காம்

முண்டனம் செய்தே தினங்கள் கழிந்தன காணுவா ரில்லை இராமனை
இராம நாமம் சொல்லியும் என்ன, மனதில் கிளைக்குதே வேறுவினை

(முண்டனம் = தலை சிரைத்தல்)

இதைப் படித்த உடனே நம் நினைவுக்கு வருவது திருக்குறளில் " மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" என்ற குறள் தான். உலகம் என்பதை 'ஊர் வாய்' என்று கொள்ள முடியுமா ? கற்புக்கரசியான சீதையினுள்ளும் குற்றம் கண்டது 'ஊர் வாய்'. உலகம் என்பது, ஆகையால், சான்றோர் சொன்ன வழி என்றே பொருள் கொள்ள வேண்டும். அதனினும் சிறப்பு தன் எண்ணங்களை தானே பரிசோதித்துக் கொள்ளுவது.
நம் மனதில் ஒவ்வொரு கணமும் தோன்றிக்கொண்டே இருக்கும் எண்ணங்கள் பெரும்பாலும் நம்மைச் சுற்றியே- நமக்கு உண்டாகும் இலாப நஷ்ட கணக்குகளாகவே- இருக்கும். சுயநல எண்ணங்களே எல்லா வகையான சிறுமைகளுக்கும் மூல காரணமாகிறது. இவைகளை கவனித்து களைந்தாலே மனம் தூய்மையடைந்து இறைவனிடம், அதாவது முக்தி நிலைக்கு, அழைத்துச் சென்று விடும். "சித்த ஷோதகம் முக்தி சாதகம்" என்று மகான் ரமணர் தமது 'உபதேச சார'த்தில் இரத்தின சுருக்கமாக உரைக்கிறார். வள்ளுவரும் இரமணரும் சொன்னதை சற்றே கிண்டல் முறையில் 'தலைமுடிக்கென' பரிந்து கூறுவது போல் கபீரும் கூறுகிறார்.

கபீர் உபதேசம் பெற்ற மந்திரம் ராம நாமம். ஆனால் அவர் நிர்குண உபாசகராகவே இருந்தார். அதாவது கடவுளின் எல்லையற்ற தன்மையினால் அவன் அருவானவன் என்ற கோட்பாட்டைக் கொண்டவர். அதை மனதில் வைத்து (அதாவது ராமனை உருவக் கடவுளாகக் காணாது) அவரது ஈரடியை அருவ கோட்பாட்டிற்கேற்ப மொழிபெயர்க்க வேண்டினால் கீழ்கண்ட முறையில் மொழி பெயர்க்கலாம்.

முண்டனம் செய்தே நாட்கள் கழிந்தன, முட்டினா ரில்லை மூவா முதல்வனை
முணங்கும் மந்திரந் தானென் செய்யும், முடக்கவு மில்லை மறுகும் மனந்தனை


(முட்டுதல் =பற்றிக்கொள்ளுதல் ; மூவா முதல்வன் = கடவுள் ; மறுகுதல் = உலாவுதல், சுழலுதல் ; முடக்கு = செயலிழக்கச் செய்தல்)

அப்படியானால் கபீர் பூஜை விரதங்கள் செபம் எல்லாவற்றையும் தேவையற்றவை என்கிறாரா? கண்டிப்பாக இல்லை. அவைகள் மனதை ஒரு கட்டுக்கள் கொண்டு வரும் பயனைத் தராத போது அர்த்தமற்றவை ஆகின்றன என்றே சுட்டிக் காட்டுகிறார். ஈடுபட்டுள்ள செயலின் உண்மையானப் பொருளுணர்ந்து செய்யவே வற்புறுத்துகிறார்.

1 comment:

  1. அற்புதமாக எழுதி இருக்கீங்க, கபீர் கவிகள் மேலும் படிக்க ஆவல் மிகுகிறது. மேலும் பதியுங்களேன்!
    நன்றி.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி