அவதூத கீதை என்பது ஆன்மீக இலக்கியத்தில் ஒரு முக்கியமான அங்கமாகும். அதில் அன்றாடம் நாம் காணும் சிறு நிகழ்சிகளையும் ஆன்மீகக் கண்ணோட்டத்தினோடேயே விளக்கப்பட்டிருக்கிறது. கபீர் அவதூதர் வகையில் சேராதவராயினும் இயற்கையின் எல்லா காட்சிகளிலும் பாடம் கற்கும் நோக்குடையவராயிருந்தார். ஒரு குயவனாகட்டும், தோட்டக்காரனாகட்டும் அல்லது மாவரைக்கும் பெண்களாகட்டும் ஏன் சர்வ சாதாரணமான இலையுதிர் மரமாகட்டும் அவர் உலகோருக்கு நிலையாமையை சுட்டிக்காட்ட ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்கிறார். கீழ் காணும் தோஹாக்கள் ஹிந்தி பேசும் மக்களிடையே மிகப் பிரபலமானவை.
1. माटी कहे कुम्बार सॆ तू क्या रौंदे मॊही
एक दिन ऎसा आयॆगा मै रौदूगी तॊही
மாடி கஹே கும்பார் ஸே, தூ க்யா ரோந்தே மோஹீ
ஏக் தின் ஐஸா ஆயேகா, மேய்ன் ரோந்தூகீ தோஹீ
குயவன் கைமண் கூறும் பிசைமின் பிசைமின் இன்று
கூப்பிடு நாளில் உம்மை பிசைவேன் பிசைவேன் என்று
கதைகளில் பறவைகள் பேசும். மிருகங்கள் பேசும். மரங்கள் பேசும். இங்கே "அசித்" ஆன மண் பேசுகிறது. இது கபீரின் மனம் எந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றிவிட்டிருந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
"you cannot digest a bacteria but the bacteria can digest you" என்பது உயிரியல் அறிந்தவர்களுடைய கூற்று. தன்னைச் சுற்றி எங்கும் "சித்" சக்தியை கண்ட கபீருக்கு- மண் மனிதனை ஜீரணத்துக்கொள்ளும் சக்தி, ஒரு அப்பட்டமான நினைவிலிருந்து அகற்றமுடியாத உண்மை- குயவனைக் கண்டதும் பீறிட்டுக் கொண்டு வருகிறது. மண்ணுக்குள் இருக்கும் உயிரணுக்கள் தான் அதன் ஜீரணிப்பிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் இரகசியம் என்பதை விஞ்ஞானிகள் சொல்லி நமக்குப் புரிகிறது. ஆனால் அங்கே தான் மனித மனம் ஆன்மிகத்தை மறந்து வழி தவற ஆரம்பிக்கிறது. தனக்கு எல்லாம் புரிந்து விட்டது போல் பேச தொடங்கி விடுகிறது. கபீருக்கு அந்த கவலை இல்லை. இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு விட்டவர். அதனாலேயே 'அசித்'துள்ளும் 'சித்'தைக் கண்ட அவருடைய வாசகங்கள் பல நூற்றாண்டுகளாக ஜீவித்து நிற்கின்றன.
கபீர் தம் வழக்கம்போல் தறியில் துணி நெய்து கொண்டிருந்தார். உள்ளம் ராம நாம ஜெபத்தில் ஈடுபட்டிருந்தது. அதை கலைக்கும் வகையில் வீட்டிற்குள்ளிருந்து வம்பும் வேடிக்கைப் பேச்சுமாக கல் திருகையில் மாவரைத்துக் கொண்டிருந்த பெண்களின் பேச்சுச் சத்தம் வந்து கொண்டிருந்தது. இறைவன் கொடுத்திருக்கும் பொன்னான பிறவியை புரியாது வீணடிக்கிறார்களே என்ற ஏக்கம் கபீருள் ஒரு ஈரடியாக வெளிப்படுகிறது. அதுவும் அவர்கள் ஈடுபட்டிருந்த செயலைக் கண்டே வடிக்கிறார்.
2. चल्ती चक्की दॆख कर दिया कबीरा रॊए
दुई पाटन के बीच में साबूत बचा न कोए
சல்தி சக்கி தேக்-கர் தியா கபீரா ரோயே
துயீ பாடன் கே பீச் மேன் ஸாபூத் பசா ந கோயீ
திருகும் அரவை எந்திரம் கண்டு, கலங்கும் கபீரின் அந்தரம்
இருபெரும் கற்களுக்கிடையே, தப்பிய தினைகள் இலையே
இரு பெரும் கற்கள் என்பது பாவம் புண்ணியம் என இருவினைகளை குறிப்பனவாகக் கொள்ளலாம். பகல் இரவு என்பதாகவும் கருதலாம். வேறு சிலர் இதை ஆகாயம் மற்றும் பூமியாகவும் கொள்வர். எப்படியோ உலகோரெல்லாம் இந்த அரவையில் சிக்கி மடிகின்றனர். இதிலிருந்து தப்பியவர் எவரும் இல்லை.
இன்னுமொரு எளிய தோஹா தோட்டக்காரனை வைத்து ;
3. माली आता देखकर, कलियाँ करॆं पुकार
फूल फूल चुन लियॆ, कल हमारी बार
மாலீ ஆதா தேக்-கர் கலியா கரேன் புகார்
பூல் பூல் சுன் லியே கல் ஹமாரி பார்
அண்டிடும் ஆரங்காரன் கண்டு, அயர்வனவே அரும்புகள்
ஆய்வனே இன்றலர் பூக்களை, நாளைய முறையும் நமதே
ஆரம் என்பது நந்தவனம். தோட்டக்காரனை ஆரங்காரன் என்று வைத்துக்கொள்ளலாம். அவனை இங்கே எமனுக்கு இணையாகச் சித்தரிக்கிறார் கபீர். பூமியில் வந்திருப்பவரின் காரண காரியங்கள் முடிவதைத் தெரிந்து அவர்களை கொண்டு செல்ல வந்து விடுகிறான் அவன். இங்கே எவரும் நிரந்தரம் இல்லை. இதை அரும்புகள் பேசிக் கொள்வதைப் போல் நம் முன் நிறுத்துகிறார் கபீர். ( 'கலியா'- மொக்கு ;'பூல்' -மலர்ந்த பூ ; சுன்-லியா- தேர்ந்தெடுத்தல்)
வேறொரு தோஹாவில் இளம் தளிருக்கு மரம் உபதேசிக்கிறது :
4 वृक्ष बॊला पात सॆ सुन पत्तॆ मॆरी बात
इस घ्रर के यह रीति है एक आवत एक जात
விருக்ஷ் போலா பாத் ஸே ஸுன் பத்தே மேரி பாத்
இஸ் கர் கே யஹ் ரீதி ஹை, ஏக் ஆவத் ஏக் ஜாத்
தருவுரைத்ததுத் தளிரிடம் என்சொல் கேளாய் பிள்ளாய்
வருமொன்று போமொன்று அறிநீ இம்மனை முறையாய்
இங்கே மரம் என்பது பூமிக்கு உவமையாக்கப் பட்டுள்ளது. ஜனன மரணமென்பது அன்றாட நிகழ்ச்சி இங்கே. இதனை புதிதாய் முளைவிடும் தளிருக்கு மரம் கூறும் அறிவுரையாய் எளிமையாய் சுட்டிகாட்டுகிறார் கபீர்.
ஒரு சலவைத் தொழிலாளியைக் கண்டும் கபீருக்கு அருமையான பாடம் கிட்டியது. அது நிலையாமையைப் பற்றி அல்லவாததால் அதை மற்றோர் சமயம் காண்போம்.
No comments:
Post a Comment
பின்னூட்டத்திற்கு நன்றி