Monday, December 06, 2010

சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை-5

ஆசிரியர் அறிமுகம்

கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்தின் முதல் வாசகர் இவர். அதாவது ஒரு தொடர் வாசகராக தன்னை பின்னூட்டங்கள் மூலம் காட்டிக்கொள்ள முன் வந்த முதல் வலைப்பதிவர். அது மட்டுமல்லாமல் தமது வலைப்பூவில் விரும்பிப் படிக்கும் வலைப்பூக்கள் பட்டியலில் இணைத்தும் அவ்வப்போது தமது இடுகைகளில் மேற்கோள் கொடுத்தும் பலருக்கு இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தியவர். ஆன்மீகத்திலும் இசையிலும் அளவு கடந்த ஆர்வம் உள்ளவர். ரமணரின் ஆத்மபோதத்தையும் கீதையின் சாரத்தையும் மிகவும் சிரத்தையாக விளக்கியவர். அருமையான தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக இசைப்பாடல்களை எழுத்துருவுடன் இவருடைய வலைப்பக்கங்களில் கேட்டு ரசிக்கலாம். மார்கழி இசை உற்சவத்தை தம் பதிவுகளிலே இணைப்பு கொடுத்து இசையைக் கொண்டாடுபவர். ஆரம்ப காலங்களில் அவரே ”டாப் டென்” திரைப்படப் பாடல்களையும் சில வருடங்கள் தொகுத்து வந்தார். தமிழ் ஆர்வம் மிகுந்து வெண்பா எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

அவருடைய வாசகம் என் வாசகம்”. இதைத் தவிர அருள் என்னும் வலைப்பூவிலும், இசை இன்பம் என்ற வலைப்பக்கத்திலும் தன் எழுத்துப் பணியை நடத்திவருகிறார்.

ஜீவா வெங்கடராமனை அறியாத சீனியர் பதிவர்கள் இருக்க முடியாது. அவர் ஊட்டம் ஊட்டி வளர்த்த வலைப்பூவில் அவரே பங்கேற்க வந்திருப்பது மட்டில்லா மகிழ்ச்சி தருகிறது. கபீரை பற்றி அவர் எழுதுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கபீருடையக் கவிதைகள் பற்றி மூன்று நான்கு இடுகைகள் என் வாசகத்திலும்’ ( மன ஊஞ்சல், இவ்வுலகம் ),
அருள் வலைப்பூவிலும் வெளியாகியுள்ளன. எனவே அவருக்கு கபீரும் புதியவர் அல்லர். இம்முறை கபீர்தாஸாரின் மூன்று பாடல்களை எடுத்துக் கொண்டு நமக்காக அழகாக தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அவருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் அது குறைவாகவே இருக்கும். சுருங்கக் கூறின் இந்த வலைப்பூ அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.

இனி ஜீவா ...

-----------------------------------------------
பீரின் கனிவான கவிதைகள் உலகப் புகழ் பெற்றவை.
எளிமையானவை. இரசிக்கத் தக்கவை. அவற்றுக்கு விரிவுரையோ, விளக்கங்களோ தேவையில்லை. இடராமல் ஓடி வரும் தெளிந்த சிற்றோடை.
பொதிந்த கருத்துக்களை அள்ளித் தரும் வற்றா அருள் ஓடை.
"இது தான் என் மதம்! இப்படித்தான் இருக்க வேண்டும்!" போன்ற தடைக்கற்களை தாண்டிய நீரோடை.

அக்கவிதைகளில் இருந்து எனக்குப் பிடித்த வரிகளின் தமிழாக்கம்.
---------------------------------------------------------------------

1. "பழந்துணி வெளுத்த குரு"

சீடன் என்பவன் பழந்துணி போல,
குரு அத்துணியினை வெளுப்பவர்.
தியானம் என்னும் கல்லில் அடித்து அவர்
துவைக்கையில் துலங்குது என் சொரூபம்;
அஞ்ஞான அப்பழுக்குகள் அகன்றன முழுவதும்.

அன்பும், பக்தியும் அவருக்குத் தந்தேன்;
பதிலுக்குப் பெற்றேன் ஞானம்.
மேலும், அன்பும், மகிழ்ச்சியும்,
கருணையும், பக்தியும், நம்பிக்கையும் கூட.

தனது குருவை மனிதனாய்ப் பார்ப்பவன் குருடன்;
தன் வாழ்நாள் முழுதும் அவன் மகிழ்ச்சி அடையான்;
இறந்தபின்னும் அவன் இருளிலேயே இருப்பான்.

கபீரா, குருடராய் இருக்கும் சீடர்களால்
குருவினை இறைவனாய்க் காண இயலுவதில்லையே.

இறைவனுக்கு கோபம் ஏற்பட்டால்
அதைத்தணிக்க குருவால் இயலும்.
அக்குருவிற்கே கோபம் ஏற்பட்டால்
யாரால் என்ன செய்ய இயலும்?

குருவின் பெருமையும், குருவருளின் இன்றியமையாமையும் இக்கவிதையில் தெளிவாகிறது.
குரு-சீடன், என்றவுடன் நமக்கு இராமகிருஷ்ணரையும், விவேகானந்தரையும் உடனே நினையாமல் இருக்க இயலுமா! மேற்சொன்ன கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் அவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை மேற்கோள் காட்டலாம். அந்த அளவிற்குப் பொருத்தம். அவர்களது வரலாற்று வரிகளை முன்னம் படித்துப் பார்த்தது நினைவுக்கு வருகிறது.
-------------------------------------------------------

2. "மலர்வது காய்க்கத்தான்"

என்னுள் ஒளிரும் நிலவை என் குருட்டுக் கண்கள் அறியா.
அந்நிலவும் பகலவனும் கூட என்னுள்ளேயே இருந்தும்.
என்னுள் ஒலிக்கும் ஓங்காரத்தை என் செவிட்டுச் செவிகளும் கேளா.

"நான், எனது" எனும் இரைச்சல்களில் வேறெது கேட்கும்?
எப்போது "நான், எனது" என்னும் ஓசைகள் ஒடுங்குகிறதோ
அப்போது இறைவனின் வேலைகளும் ஓய்ந்துவிடும்.
ஏனெனில் இறைவனின் வேலையே நமக்கு
ஞானம் பெற்றுத் தருவதுதான்.
ஞானம் வந்தபின் நம்மிடம் அவனுக்கு வேலையுமில்லை.
மலர் மலர்வது காய்க்கத்தான்.
காய்த்த பின் மலர் சருகாவதுபோல்.

[ இக்கவிதையின் ஆங்கில வரிகளுக்கு இங்கே பார்க்கவும். ]

க்கவிதையை முடித்த விதம் உங்களையும் ஏதோ செய்தால் அதற்கு கபீர் தான் பொறுப்பாவார்!
"நான் ஏன் நாத்திகன்?" என்பதற்கு எத்தனை எத்தனையோ காரணங்களைச் சொல்லிடலாம்.
ஆனால் ஆத்திகனாவதற்கு, இயற்கையைத் தவிரை வேறெதைச் சொல்வது!

மலர்வது காய்க்கத்தான்.
மனம் மலர்வது,
அவனைக் காணத்தான்.

அன்பெனும் நாரெடுத்து அதில் மனமெனும் மலர் கொண்டு தொடுத்த மாலையும் மணம் வீசும்.
சுடர்கொடி கோதை சூடிக்கொடுத்த மாலை போலே.
இயற்கை என்பார் சிலர்.
இறைவனின் வேலை என்பார் சிலர்.
இரண்டும் வேறில்லை என்பார் இன்னும் சிலர்! :-)
------------------------------------------------------------------

3. "எப்படிச் சொல்வேன்?"

எப்படி அந்த இரகசியத்தை வெளிப்படுத்துவேன்?
இறைவன் - இப்படி, அப்படியென எப்படிச் சொல்வேன்?
அவன் என்னுள் இருக்கிறான் என்றால்,
இப்பிரபஞ்சத்திற்கு தலைக்குனிவு.
அவனில் நானில்லை என்றாலோ, அது பொய்யாகிடும்.

உள்ளுலகத்திற்கும் வெளியுலகத்திற்கும் இடையே
வேறுபாடுகளில்லாமல் 'ஒன்றென'ச் செய்பவன் அவன்.
அவன் வெளிப்பட்டும் இல்லை, மறைந்தும் இல்லை.
அவன் உரைக்கப்பட்டும் இல்லை, உரைக்கப்படாமலும் இல்லை.
என்ன பார்க்கிறீர்கள்?
அவனை முழுதாக உரைக்க வார்த்தைகளும் இல்லை.

[இக்கவிதையின் ஆங்கில வரிகளுக்கு இங்கே பார்க்கவும். ]

ள்ளதெல்லாமிலும் உறைபவன், உள்ளையும் புறத்தையும் ஒன்றெனச் செய்பவன்.
ஒன்றென உறைபவன். ஒன்றென்றில் வேறில்லை. ஓம்.

இறைவன் யாரென வெளிப்படுத்தும் அழகான கவிதை.
மேலோட்டமாக படித்துப் பார்த்தால் - ஈதென்ன, இதில் இயலாமை தானே இருக்கிறது எனலாம்.
இறைவன் வெளிப்படுத்தக்கூடாத இரகசியமோ, வெளிப்படுத்த இயலாத இரகசியமோ இல்லை.
ஆனால் அகத்தைச் சுற்றி புறம் எழுப்பிய சுவர்களால் மறைக்கப்பட்ட இரகசியம்.
அச்சுவர் இருக்கும் வரை அகத்தால் அனுபவிக்கப்படுவது இரகசியமாக பெரும்பாலும் இருப்பதால் மட்டுமே அது இரகசியம்.

அன்பால் மட்டுமே அச்சுவரினை இடித்து இறைவனை இவனேயென இன்புற்றிட இயலும்.

கபீரைப் போன்ற மகான்கள், ஞானியர், பக்தியில் கரை கண்டவர் எனப்பலர், அவர்கள் கண்ட ஆனந்தத்தை இதுபோன்ற கவிதைகளிலும், பாடல்களிலும், கதைகளிலும், உபதேசங்களிலும் உணர்த்தி விட்டுச் சென்றுள்ளார்கள். உதாரணத்திற்கு பள்ளிப் பருவத்தில் படித்த வள்ளலாரின் பாடல் அப்படியே கபீரின் கருத்துகளை பிரதிபலிக்கிறது.

எங்கும் மனிதர் உனைத்தேடி
இரவும் பகலும் அலைகின்றார்.

எங்கும் உளது உன் உருவம்

எனினும் குருடர் காண்பாரோ?

எங்கும் எழுவது உன் குரலே

எனினும் செவிடர் கேட்பாரோ?
எங்கும் என்றும் எவ்வுயிரும்
எல்லாம் ஆன இறையவனே.

அப்படிப்பட்டோர் போன பாதையை மறந்து போகலாமா?
அவர்கள் கண்ட ஆனந்தம் என்றென்றும் நிலை பெற்றிருப்பது.
தில்லைக்கூத்தன் எப்போதும் அம்பலம் என்னும் ஆனந்த வெளியில் தாண்டவம் ஆடுவதை ஒத்தது.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

-பெரியபுராணம்

---------------------------------------------

பல அலுவல்களுக்கிடையேயும் நேரம் ஒதுக்கி ஒரு சிறப்பான பதிவை வழங்கிய ஜீவா வெங்கடராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

கண்ணன் காட்டும் கரும யோகம் என்கிற இடுகை ஒன்றில் அவர் இறுதியாக சொல்லியிருக்கும் வரிகள் :

பிரசாதமாக பலன்களை ஏற்று, பகவானைப் போற்று.

பிரசாதம் என்றே பலனை நினைத்தால்
வருமோ இடரும்? கருமம் புரிகையில்,
நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்
தானடை சிக்கெனத் தான்.

நமக்கு அருமையான பிரசாதமாக கபீரின் மூன்று பாடல்களை அளித்து இடுகையின் பலனை அற்புதமாக பூர்த்தி செய்திருக்கிறார். இப்படியே அவருடைய எழுத்துப் பணி மேன்மேலும் நல்லமுறையில் தொடரட்டும் என்று பிரார்த்தித்து வாழ்த்துவோம்.

17 comments:

 1. கபீர்க் கடலில் ஒரு கூடை முத்தெடுத்து, அதிலும் மூன்று பெரிய முத்துகளை நுணுக்கி எடுத்து, அட்டிகையில் பதித்துக் கொடுத்திருக்காரு ஜீவா! அருமையான இடுகை!

  //அவன் வெளிப்பட்டும் இல்லை, மறைந்தும் இல்லை.
  அவன் உரைக்கப்பட்டும் இல்லை, உரைக்கப்படாமலும் இல்லை.
  என்ன பார்க்கிறீர்கள்?//

  ஹா ஹா ஹா
  பதிவிலேயே நான் ரசித்த வரிகள்! இல்லையில்லை என்னை மிகவும் பிடித்துக் கொண்ட வரிகள்! :)

  இதுவும் இயற்கை தான்! முதல் பாட்டின் வித்து!

  விதை மறைந்துள்ளதா? வெளிப்பட்டும் உள்ளதா?

  விதையை விதைத்த போது மறைந்துள்ளது போல் இருந்தது! மலர் காயாகி கனியாகிய போது, அதே விதை கனியில் வெளிப்பட்டது போல் இருந்தது! கனி மீண்டும் விதையான போது மறைந்துள்ளது போல் ஆனது! ஆக இங்கு இறைவன் = வெளிப்படுவதா? மறைபடுவதா?

  ReplyDelete
 2. தன்னுளே திரைத்து எழும்
  தரங்க வெண் தடங் கடல்

  தன்னுளே திரைத்து எழுந்து
  அடங்குகின்ற தன்மைபோல்,

  நின்னுளே பிறந்து இறந்து
  நிற்பவும் திரிபவும்,

  நின்னுளே அடங்குகின்ற
  நீர்மை நின்கண் நின்றதே!
  -----------------------

  ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர்
  ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்,

  ஏறுசீர் இரண்டு மூன்றும்
  ஏழும் ஆறும் எட்டுமாய்,

  வேறுவேறு ஞானமாகி
  மெய்யினொடு பொய்யுமாய்,

  ஊறொடு ஓசை ஆய ஐந்து
  மாய ஆய மாயனே!!

  ReplyDelete
 3. "கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்தின்" வாசகனுக்கு இடுகையளிக்கும் வாய்ப்பளித்தமைக்கு முதற்கண் நன்றிகள் கபீரன்பன்.

  இவ்வலைப்பூ நான்காண்டுகள் நிறைவு செய்யப்போகும் தருணத்தில் - நல்லனவற்றை சொற்சுவையுடன் நறுமணமாய் அன்பர் நெஞ்சமெங்கும் நிறைத்து வந்ததை நினைத்துப் பார்க்கையில் - நிறைவன்றி வேறேதுமில்லை.
  மிக்க நன்றிகள் கபீரன்பன்.

  ReplyDelete
 4. அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள் கே.ஆர்.எஸ்!
  பிடித்துக் கொண்ட வரிகள் பிடித்தமான வரிகள்தான்!
  வெளிப்படுவதா மறைவதா என சுழற்சியின் விடுகதைகளை விரிப்பதில்தான் எத்தனை வியப்புகள்!

  "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்"
  - வெளிப்பட்டு இல்லாததால் 'அரியவன்'

  "நிலவு உலாவிய நீர்மலி வேணியன்"
  - மறைந்து இல்லாததால் நிலவையும், நீரையும் அணிந்தவன் எனச் சொல்ல இயலும்.

  "அலகில் சோதியன்"
  - அலகிலாதவன், சோதியாய் மறைந்து இருப்பவன் - வெளிப்படாமல் இருப்பவான்.

  "அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி"
  - மீண்டும் மறைந்து இல்லாமல் - வெளிப்பட்டு ஆடுவான்!

  "தாண்டவ தரிசனம் தாரும்" என்று தொடங்கும் கோபாலகிருஷ்ண பாரதியின் வரிகளில் தான் எத்தனை பொதிந்த பொருள்:

  தாண்டவ தரிசனம் தாரும்

  தாமதம் பண்ண வேண்டாம்!

  ஆண்டவனே உன் மகிமையை யார்

  அறிந்து உரை சொல்வார்!
  அறியேன் நானொரு பேதை - ஐயா

  எந்தனுக்கொரு தரம்

  தாண்டவ தரிசனம் தாரும்!

  ReplyDelete
 5. அன்பும், பக்தியும் அவருக்குத் தந்தேன்;
  பதிலுக்குப் பெற்றேன் ஞானம்.
  மேலும், அன்பும், மகிழ்ச்சியும்,
  கருணையும், பக்தியும், நம்பிக்கையும் கூட.

  வருவார், வருவார் இவரென வாயிலில் காத்திருந்த எனக்கு,
  வந்துவிட்டேன் எனச் சொல்லாமல் சொன்ன ஜீவா அவர்கள்
  லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் .

  ஜீவாவின் கருத்துக்கள், எப்பொழுதும் போல‌
  ஜீவனுள்ள கருத்துக்கள்.விருந்துக்கு வருவோர் எளிதில்
  ஜீரணிக்க எளியதாயும் உள்ள கருத்துக்கள்.

  கபீர் இறைவனை அன்று அவர் காலத்தே இருந்த வழிகளில் பார்க்காது தனக்கென ஒரு வழி அமைத்துக்கொண்டவர்.
  அவர் வழி தனி வழி.
  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 6. இறைவனை அன்பின் உருவாக, இலக்கணமாக பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் எடுத்துச்சொன்னவர் கபீர்.
  அன்பின் வழி ஒன்றினால் மட்டுமே இறைவனை அடைய இயலும் என திட்டவட்டமாகச் சொன்னவர் கபீர்.

  அன்று இருந்த ஞான மார்க்கம், யோக மார்க்கம், கர்ம மார்க்கம், அனைத்தையும் விடுத்து, தனது குரு ராமானுஜர்
  வாயிலாகக் கிடைத்த உபதேச மந்திரமான ராம் என்பதைக்கெட்டியாகப்பிடித்துக்கொண்டு, தனது பக்தி வழிக்கு
  ராம மந்திர உச்சாடனம் ஒன்றே போதும் என சொன்னவர் கபீர்.

  பக்தி ரசம் அதன் மையம் ப்ரேம ஸ்வபாவம். ராமனை நேசிப்பது ஒன்றே தனது லட்சியமாகககொண்டு,

  அப் மோம்ஹி ராம் பரோஸோ தேரா, அவுர் கவுன் கா கரொளன் நிஹோரா

  ராமனை நான் நம்பிய பிறகு, வேறு யாரை நான் பார்க்கவேண்டும் என்பார்.

  நிர்மல் நிர்மல் ராம் குண் காவை,
  ஸோ ப்கதா மேரே மன் பாவை

  சொல்லிக்கொண்டே போகலாம்.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 7. உங்களுக்குப் பிடித்த வரிகளை எங்களுக்கும் பிடிக்கும் வண்ணம் தமிழில் அழகாகக் கோர்த்துத் தந்தமைக்கு மிக்க நன்றி, ஜீவா.

  ReplyDelete
 8. //அவன் என்னுள் இருக்கிறான் என்றால்,
  இப்பிரபஞ்சத்திற்கு தலைக்குனிவு.
  அவனில் நானில்லை என்றாலோ, அது பொய்யாகிடும்.//

  மகான் கபீர் தான் எவ்வளவு அழகாகச் சொல்கிறார்!.. என்னுள் அவன் இருக்கிறான் என்று சொன்னால் பிரபஞ்சத்திற்கு தலைக்குனிவாம்.
  அவனில் நானில்லை என்றாலும் அது பொய்யாய்ப் போய் விடுமாம்.

  ஆக அவனில் அத்தனையும் அடக்கம். பிரபஞ்சத்தையும் உள்ளடக்கிய அவனில் அடக்கம். ஜீவன்கள் பிரபஞ்சத்தின் கூறாய் அவனில் உள்ளடங்கியிருக்கும்
  பொய்யல்லாத உண்மை பிறக்கிறது.

  ReplyDelete
 9. சூரி ஐயா, மற்றும் கவிநயாக்கா,
  தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள்!

  ReplyDelete
 10. //மலர்வது காய்க்கத்தான்
  மனம் மலர்வது
  அவனைக் காணத்தான்//

  //சீடன் என்பவன் பழந்துணி போல
  குரு அத்துணியினை வெளுப்பவர்.//

  அருமையான வரிகள்.

  அருமையான பிரசாதமாக கபீரின் மூன்று பாடல்களை அளித்த
  ஜீவா வெங்கடராமன் அவர்களுக்கு நன்றி.

  வாழ்த்துக்கள்!

  அவர் வழங்கிய பிரசாதத்தை எங்களுக்கு அளித்த கபீரன்பனுக்கு நன்றி.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. //மலர்வது காய்க்கத்தான்.
  மனம் மலர்வது,
  அவனைக் காணத்தான்.//

  அருமை. ஆக, அவனைக் காணத்தான் மனம் மலர்வதே. மனம் மலர்வதே அதற்காகத்தான். காண்பதான அவன் உணர்தல் இல்லையென்றால் மலர்ந்தும் மலராத நிலையே. அவனது அருகாமையை உணராத பொழுதெல்லாம் விடிந்தும் விடியலை உணராத பொழுதுகளே!

  "நாராயணா என்னாத நாவென்ன நாவே
  கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே" என்று சிலம்பில் இளங்கோவடிகள் சொன்னவாறு,

  கபீரின் வரிகளைப் பார்க்கத் தோன்றுகிறது.

  அன்பர் கேஆர்எஸ் சொன்னவாறு
  முத்தான முத்துக்களாய் ஜீவா எடுத்துக் காட்டிய மூன்று முத்துகளும்
  மனத்தில் பதித்துக் கொள்ள தேர்ந்த நல்முத்துக்கள்!

  விருந்தினரை வரவழைத்து அமுதென விருந்து படைத்த கபீரன்பருக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 12. //
  இறைவனுக்கு கோபம் ஏற்பட்டால்
  அதைத்தணிக்க குருவால் இயலும்.
  அக்குருவிற்கே கோபம் ஏற்பட்டால்
  யாரால் என்ன செய்ய இயலும்?
  //
  இங்க தான் நான் கொஞ்சம் புத்திசாலித்தனமா யோசிச்சிட்டேன். :-)
  "கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்"
  அப்படின்னு ஏதோ ஒரு புஸ்தகத்துல படிச்சிட்டு அவரையே குரு ஆக்கிட்டேன். எனது குரு பொதுவா ரொம்ப எளிமையா, விளையாட்டுத்தனமா இருப்பார். ஆனா கோபம் வரும்போது அவர் இறைவன் ஆயிடுவார். But no problem. இறைவனோட கோபத்தை தான் சரி பண்ணிடலாமே. :-)
  btw, மற்றுமொரு நல்ல விருந்தினர் பதிவு. இந்த முறை கதை எதுவும் இல்லையா? :-(

  ReplyDelete
 13. //இராமகிருஷ்ணரையும், விவேகானந்தரையும் உடனே நினையாமல் இருக்க இயலுமா! மேற்சொன்ன கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் அவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை மேற்கோள் காட்டலாம். அந்த அளவிற்குப் பொருத்தம். அவர்களது வரலாற்று வரிகளை முன்னம் படித்துப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. //
  எனக்கு அந்த லிங்க் வேலை செய்யவில்லையே.

  ReplyDelete
 14. வருக ராதா,

  //எனக்கு அந்த லிங்க் வேலை செய்யவில்லையே.//

  அந்த லிங்க் சில தொடர் இடுகைகளை ஒரே பக்கத்தில் வழங்குவதற்காக Label அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தது. சில சமயம் வேலை செய்யாது போலும். அதனால் அதை இடுகை அடிப்படையில் மாற்றி கொடுத்துள்ளேன். இப்போது வேலை செய்யும்.அதன் தொடர்புடைய பிற இடுகைகளையும் படிக்க மறக்காதீர்கள். :)

  ReplyDelete
 15. படிச்சாச்சு கபீரன்பன். மிக்க நன்றி. :-)
  @Jeeva Sir,
  Thanks a ton for your articles on that "Lotus with thousand petals !" :-) He surely was a class apart ! And a very romantic Guru-Sishya relationship... A few year back, I too bought the entire set of Complete Works..."உன் பொருட்டு வீடு வீடா போயி பிச்சை எடுப்பேன்னு" பரமஹம்சர் ஏன் சொன்னார் அப்படின்னு விவேகனந்தரின் கடிதங்களை படித்த பிற்பாடு புரிந்தது. இவங்கல்லாம் பிறந்த மண்ணில் நானுமா அப்படின்னு ரொம்ப யோசிச்சிருக்கேன். :-)

  ReplyDelete
 16. அருமையான முத்து.

  ReplyDelete
 17. ஜீவி ஐயா, கோமதி அரசு, ராதா சார், மற்றூம் கீதாம்மா - அனைவரின் வருகைக்கும் கனிவான பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி