Sunday, March 11, 2007

போதுமென்ற மனம்

எவ்வளவு பொருள் வேண்டும் ஒருவனுக்கு வாழ்க்கையில்?

மிதிவண்டியில் வேர்க்க விறுவிறுக்க வெய்யிலில் அலைந்த காலத்தில் ஒரு ஸ்கூட்டரோ மோட்டார் சைக்கிளோ இருந்தால் போதும். முன்னே உட்கார வைத்துக்கொள்ளும் குழந்தையின் தலை சாலையை மறைக்கும் பொழுது 'குடும்பம் பெரிசாச்சு இனி கார் தான் சரிபட்டு வரும்' என்று சொல்கிறது மனம். கஷ்டப்பட்டு வாங்கிய கார் பிரச்சனைகள் பண்ணும் போது "முன்னாலயே சொன்னேன். வாங்கும் போதே செலவைப் பார்க்காமே நல்ல மாடலா வாங்கி இருந்தா இப்படி ஏன் கஷ்டப்படணும்" என்று மகளோ மனைவியோ இடித்துரைக்கும் போது 'அதுவும் சரிதான் ஆனால் எவ்வளவு கடன் வாங்க முடியும். ஏற்கனவே வீட்டு கடனில் பாதி சம்பளம் போய்விடுகிறது இன்னும் காருக்கு வட்டி எவன் கட்டுவான்' என்று சலித்துக்கொள்ளும் உள்ளம்.

ஐந்தாயிரம் ரூபாயில் கடை வைத்திருப்பவனுக்கு இருபதாயிரம் ரூபாயில் கடைவைக்க ஆசை. ஐந்து கோடி முதலீட்டு தொழிலதிபருக்கு இருபது கோடி முதலீடு செய்து தொழில் நடத்த ஆசை.

இது தற்கால நிஜம் என்றால் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் கபீர்தாஸ் காலத்தில் சிறிது வேறு பட்டிருக்கும்.ஆடு வளர்ப்பவன் மாட்டுக்கு சொந்தகாரனாக ஆசைப் பட்டிருப்பான். மாடு வைத்திருப்பவன் பண்ணை வைக்க ஆசைப் பட்டிருப்பான். நடந்து செல்பவன் பல்லக்கிலோ குதிரையிலோ பிரயாணம் செய்யும் யோசனை செய்திருப்பான். இப்படியாக மனம் தேவைகளை வளர்த்துக் கொள்ளுமளவு அதன் தேடலும் அதிகரித்துக்கொண்டே போகிறது. There is always enough for a man's need but never for his greed என்றார் மகாத்மா.

அப்படியானால் இறைவனிடம் என்ன தேவையை முன்வைப்பது ? இதைப் பற்றி கபீர் சொல்வதைப் பார்ப்போம்.

सांई इतना दीजिए, जामॆ कुटुम समाय
मैं भी भूखा ना रहूँ, साधु न भूखा जाय


ஸாயி இத்னா தீஜியே ஜாமே குடும் ஸமாய்
மேம் பீ பூகா நா ரஹூ, ஸாது ந பூகா ஜாய்


இத்தனை அருள்வாய் ஈசா, என்றும் எம்குடி நலம் கா
பத்தர் பசித்து ஏகாமலே, யானும் பசியாது இருக்கத் தா

(பத்தர் =பக்தர், அடியார்; ஏகாமல் =போகாமல்)

கபீர் பல்லக்கு கேட்கவில்லை. மாட மாளிகை கேட்கவில்லை. யாவரும் பசியின்றி இருக்க வேண்டுகிறார்.

தனி ஒருவனுக்கு உணவில்லை யெனில் சகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வாசகங்களில் காணப்படும் கோபாவேசம் இதில் இல்லை. ஆயினும் பசியின் கொடுமையை முற்றுமாக அறிந்து அதை நீக்குவதே ஒருவரின் தலையாய கடமை என்பதை உணர்த்தும் வார்த்தைகள் இவை.

பொதுவாக சாதுக்களுக்கு விதிக்கப்பட்ட விதி இரந்துண்ணல். ஒரு சம்சாரியின் கடமை தன்னலமில்லா அத்தகைய சாதுக்களைப் போற்றுவதே ஆகும். வழிப்போக்கர்களாக வரும் அவர்கள், வீட்டை விட்டு கிளம்பும் பொழுது பசியுடன் செல்லக்கூடாது என்பது மிக முக்கியமான கொள்கையாக அக்காலத்தில் -எக்காலத்திலும்- இந்நாட்டில் இருந்து வந்திருக்கிறது.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம், விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு


(வேளாண்மை =உபகாரம்)

ஒருவன் பொருளீட்டி இல்வாழ்க்கை நடத்துவதே தேடிவரும் விருந்தினரை உபசரித்து அவர்கள் நலம் பேணுதற்கே என்று வள்ளுவரும் கூறுகிறார். விருந்தோம்பலுக்கென ஒரு அதிகாரத்தையே ஒதுக்கி அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறார்.

விருந்தோம்பல் தான் நாகரீகத்தின் உண்மையான அளவு கோல். மனித நேயத்தின் சின்னம். அதற்கு தடை என்பது வரக்கூடாது என்பதில் நம் முன்னோர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். எனவே கடவுளிடம் பிரார்த்திக்கும் போது கூட கபீர் விருந்தோம்பலுக்கு தடையில்லாமல் குடும்பத்தை நடத்திச் செல்ல எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு கொடு என்று கேட்கிறார்.

அளவுக்கு அதிகமான செல்வம் வரும் பொழுது அதுவே துயரத்தில் ஆழ்த்தக் கூடும். இதனை இன்னொரு தோஹாவில் அழகான உதாரணத்தோடு எடுத்துச் சொல்லுகிறார்.


जॊ जल बाढे नाव मॆं, घर मॆं बाढै दाम
दोनो हाथ उलीचियॆ, यही सयानॊं का काम

ஜோ ஜல் பாடே நாவ் மேன், கர் மே பாடை தாம்
தோனோ ஹாத் உலீசியே, யஹி ஸயானோங் கா காம்

படகில் புகுந்த நீரென்பர் மனையிற் புகுந்த சீரை
தடங்கண்டார் சொன்ன முறை, கரமிரண்டால் வாரியிறை
(தடம் கண்டார் = முக்தி நிலை பெற்றவர் ; சீர் = செல்வம்)

படகில் ஒரு ஓட்டை வழியாக நீர் உட்புகும் போது எப்படி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இரண்டு கைகளாலும் நீரை வாரி இறைப்பதற்கு முயற்சிப்பார்களோ அதுபோலவே நிறைந்து வரும் செல்வத்தையும் உடனுக்குடன் இரண்டு கைகளாலும் அள்ளி தானம் செய்வீர் என்று உவமித்து கூறுகிறார். இல்லாவிடில் படகில் புகுந்த நீர் எப்படி அதில் உள்ளவர்களை மூழ்கடித்து விடுமோ அது போல் ஒருவனிடத்தில் சேரும் செல்வம் அவனை உலக விசாரங்களிலேயே மேலும் மேலும் ஈடுபடுத்தி மாயையில் அழுத்தி விடும். அவனில் கடவுளைத் தேடும் ஆசையோ அல்லது ஆன்மீகத்திற்கான நாட்டமோ இருப்பதில்லை. இதிலிருந்து தப்ப வேண்டுமெனில் செல்வத்தை சேர்க்கும் மனப்போக்கை விட்டு யாவருடனும் இருப்பதை பங்கிட்டு வாழக் கற்றுக் கொண்டால் இறைவனை அடைவது எளிது என்று கபீர் கூறுகிறார்.

("ஸயானோங் கா காம்" அறிவுடையவர்கள் செயல் என்று பொருள் வரும். தோனோ ஹாத் உலீசியே என்பது இரண்டு கரங்களாலும் எடுத்து எறிவது என்றாகும்).

ஆகையால் பொருளீட்டும் இயலாமையினால் கபீர் எளிமையை போதிக்கவில்லை. ஆன்மீக முன்னேறத்திற்கு தடையாகிவிடும் என்ற காரணத்திற்காகவே பொருள் சேர்க்கும் எண்ணத்தை விலக்கச் சொல்கிறார் என்பது புரிகிறது. வேறொரு வகையில் பார்த்தோமானால் ஈகை குணம் இயல்பாக உள்ளவ்ர்களுக்கு ஆன்மீக மார்க்கம் விரைவாகக் கைகூடும்.

ஆன்மீகம் என்றால் இறைவழிபாடு என்று மட்டுமே இல்லை. சகல உயிர்களையும் சமமாக பாவித்து எல்லோரது முன்னேற்றத்துக்காகவும் உழைப்பவரெல்லாம் ஆன்மீகவாதிகளே. பிரஃபுல்ல சந்திர ரே (Prafulla Chandra Ray ) என்பவர் இந்திய சுதேசி முயற்சிகளின் முன்னோடி என்று கொள்ளத்தக்கவர். வேதியியல் மற்றும் மருத்துவத் துறையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் அடைந்திருந்த முன்னேற்றத்தை வெள்ளையர்களுக்கும் (நம்மவர்களுக்கும்) உலகத்தவர்ககும் புரிய வைத்தவர். 1892-ல் Bengal Chemical & Pharmaceutical Works என்னும், முதல் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலையை கல்கத்தாவில் நிறுவியவர். மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமானம் இருப்பினும் தனக்கென அவர் வைத்துக் கொண்டது ரூபாய் இருநூறுக்கும் குறைவே. மீதம் உள்ளதை விஞ்ஞான மேம்பாட்டிற்காகவும், அனாதை குழந்தைகளுக்காகவும் கைம்பெண் நலவாழ்வுக்கெனவும் கொடுத்துவிடுவார். செய்யுந்தொழிலையே இறைவனாகவும் சமுதாய மேம்பாடே வழிபாடாகவும் கொண்ட இவரை கபீர் வழியில் சிறந்த ஆன்மீகவாதி என்று கொள்ளலாம்.

7 comments:

  1. ஆஹா, அருமையாக இருந்தது...

    //
    அப்படியானால் இறைவனிடம் என்ன தேவையை முன்வைப்பது ? //
    இதே குழப்பம் எனக்கும் ஏற்பட்டதுண்டு!

    ஒரு சமான்யனாகவும், ஒரு மகானாகவும் ஒரே சமயத்தில் கபீரின் ஈரடி பிராகசிக்கிறது!

    ReplyDelete
  2. sir,
    beutiful thoughtful lines, fit for everybody.

    kasirajan.a

    ReplyDelete
  3. நன்றி ஜீவா, காசிராஜன்.

    ஜீவாவின் 'அருள்' வந்து பல நாட்களாகி விட்டனவே? வேலை அதிகமோ !

    ReplyDelete
  4. தானத்துக்கு இப்படி ஒரு உதாரணமா?
    படகு,ஓட்டை,தண்ணீர் & கை - அருமையாக இருக்கு.
    இதற்கு முன் எப்படி இங்கு வராமல் போனேன் என்றிருக்கிறது.

    ReplyDelete
  5. அருமை நண்பரே!

    நன்று சொன்னீர்!
    நாளும் வாழ்க்!

    ReplyDelete
  6. //ஆன்மீகம் என்றால் இறைவழிபாடு என்று மட்டுமே இல்லை. சகல உயிர்களையும் சமமாக பாவித்து எல்லோரது முன்னேற்றத்துக்காகவும் உழைப்பவரெல்லாம் ஆன்மீகவாதிகளே.//

    அன்பு கபீரன்பரே,
    ஆன்மிக உணர்விற்கு அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.
    தொடர்ந்து வரும், பிரபுலரின் வாழ்க்கை நெறியும் மனதைச் சிலிர்க்கச் செய்கிறது. பிறரைப் பின்பற்றத் தூண்டும் தொடர்த உங்கள் பணிக்கு சிரம் தாழ்த்திய வணக்கங்கள்; வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நன்றி குமார், வாத்தியார் ஐயா, ஜீவி.

    உண்மையில் இது ஒரு பழைய பதிவு. இறைவன் திருவுள்ளமோ என்னவோ ! புது பதிவை தமிழ் மணத்தில் பதிகையில் இதுவும் வந்து ஒட்டிக்கொண்டு விட்டது. பிறப்பென்னும் பேதமை என்கிற சமீபத்திய பதிவையும் படித்து விடுங்கள்

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி