Monday, December 27, 2010

சிறப்பு இடுகை -விருந்தினர் பதிவு -7

ஆசிரியர் அறிமுகம்

பள்ளி நாட்களிலும் கல்லூரி பருவத்திலும் படிக்கும் ஆர்வம் மிக இருந்தும் கதைகள், நாவல்கள் போன்றவை பல காரணங்களால் என் மனதை ஈர்க்காமலே இருந்தது. எழுதுபவர்களுக்கும் பிரசுரிப்பவர்களுக்கும் பணம் ஈட்ட இது ஒரு வழி என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

இந்த எண்ணம் இன்று மாறிவருகிறது. சமூகக் கதைகளில் மனதை பாதித்தவை என்று சொல்லக்கூடிய அளவில் எதுவும் இல்லாமல் போனதற்கு என் தேர்ச்சி இன்மை காரணமே ஒழிய படைப்புகள் இல்லாமல் போகவில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

சில அற்புதப் படைப்பாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர். நவீன இலக்கியங்களும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன என்பதெல்லாம் வலையுலகுக்கு வந்த பின்பு பூவனத்தில் படித்து அறிந்து கொண்டேன். விந்தன் முதல் பாலகுமாரன் வரை பல பெரும் எழுத்தாளர்களின் வாழ்க்கைப் பிண்ணணியை மட்டுமல்லாது அவர்களின் கதைகளையும் கதாபாத்திரங்களையும் சிலாகித்து அவர்களின் பன்முக பரிமாணங்களை சுவைபட கூறப்பட்டுள்ள பாங்கை படித்த பின்னர் தான் எழுத்துலகைப் பற்றிய என் தவறான கணிப்புகளை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தேன்.

அந்த மாற்றத்திற்கு காரணமானவர் திரு ஜீவி அவர்கள்
.

அவருடைய எழுத்துலகப் பயணம் 1957 லேயே துவங்கியது என்று ஒருமுறை படித்ததாக நினைவு. அவருடைய வலைப்பூவை பற்றி அவரது சொற்களாலே அறிய வேண்டுமென்றால் “ வலைப்பூ 'பூவனம்' ஒரு சிற்றிதழ் போல. இலக்கியம், ஆன்மிகம், தற்சார்புக் கட்டுரைகள் என்று தேர்ந்தெடுத்த உள்ளடக்கங்கள் கொண்ட ஒரு பத்திரிகையைப் புரட்டுவது போல இருக்கும்”.


இது எவ்வளவு உண்மை என்பதை அறிய பூவனத்தில் அவர் இடுகைகளிலிருந்து ஒரு சில உதாரணங்கள் மட்டும் இங்கே.


"
உயிரில் கலந்து உணர்வில் ஒன்றி" ஐந்திணை ஐம்பதிலிருந்து அன்பிற்காக தியாகம் செய்யும் பாடல் ஒன்று (மாறன் பொறையனார் பாடல்) கதை வடிவில் ஆரம்பித்து இலக்கியச் சுவையுடன் முடிகிறது. பிறர்க்காக வாழும் வாழ்க்கையே சிறப்பு என வலியுறுத்தும் புறநானூற்றுச் சுவை தரும் இடுகை என ஒன்று.

இலக்கியத்தமிழ் மட்டுமல்ல இசைத் தமிழும் இவரது பூ வனத்தில் உண்டு. கலைமகள் முதல் முருகன் வரை பாடல்கள் இயற்றி மகிழ்பவர் திரு ஜீவி.
அழகன் முருகன் (மணிரங்கு), சிவன் (கல்யாணி), உப்பிலியப்பன்(ராகமாலிகை) என பட்டியல் பெரிது.

ஜீவி அவர்களின் கவிதைகளை படிப்பவர்களுக்கு அவருடைய நுண்மையான கவனிப்பும் அதை யதார்தத்தில் பகிர்ந்து கொள்ளும் திறனும் வியக்க வைக்கும்.
கிழிசல் என்ற கவிதை உழைக்கும் வர்க்கத்தில் தம் மனப் போராட்டத்தையும் வாழ்க்கைப் போராட்டத்தையும் எதிர்கொள்ளும் கணவன் மனைவி பற்றிய ஒரு அன்பு மயமான சொற்சித்திரம். இருப்பது என்ற தலைப்பில் ”இருப்பது இல்லாதது” பற்றி அவர் எழுதியிருக்கும் வரிகள் மிக சுவையானவை மட்டுமல்ல வெகுநேரம் சிந்திக்கவும் வைக்கக் கூடியவை.
..............
அது இருக்கையிலேயே
அதன் இல்லாமையும்
பழக்கப்பட்டுப் போயின்
இருப்பின் மகத்துவமும்
இல்லாது போகலாம்
இப்படியாக இல்லாமையின்
வெறுமையில்
இருப்பின் இழத்தலை
வென்று கடக்கலாம்
..................
எல்லாவற்றினும் மேலாக அவருக்கு முக்கியமானது அவரது ஆன்மீகத் தேடல். அது
மனஓசையாக பூவனத்தின் முதல் இடுகையிலேயே வெளிவந்தது.
............
மார்பில் கைவைத்து பார்க்கையில்
மனசில் உணரமுடிந்தது துடிப்பை
தன்னில் தானாய் என்னில் அதுவாய்
என்னுள் கலந்துபோன உயிரின் ஓசை
பிரயத்தனப்பட்டால் தான் உணர்வாய்
புரிகிறது என்னும் உண்மை புரிந்தது
என்னில் உறங்கும் உள்ளொளியும்
நான் எனும் சுயம் ஒழித்து
தன்னில் கரைந்தால் தான்
தட்டுப்படும் போலிருக்கு.


அந்த தேடல் விரிந்து “
ஆத்மாவை தேடி “ என்னும் ஒரு கருத்தரங்கப் பகிர்வாக மெய்ஞானம், விஞ்ஞானம் கலந்த கருத்துக் களமாக பல படிமங்களில் இரண்டு பாகமாக எண்பது இடுகைகளுக்கும் மேலாக பெருகி ஒரு அறிவு களஞ்சியமாக திகழ்கிறது. இப்படி ஒரு தொடரை எழுத வேண்டுமென்றால் அவரது வாசிப்பு எவ்வளவு அகலமும் ஆழமும் உடையது என்பதை எண்ணி எண்ணி மனம் வியக்கிறது.
கடைசியாக ஜீவி அவர்களின் கதைகளைப் பற்றி ஒரு வார்த்தை. அவைகளிலே தீய எண்ணம் உடைய கதாபாத்திரங்களையே காணமுடியாது. யாவரும் அன்பு மயமானவர்கள். பிறருக்காக விட்டுக் கொடுப்பவர்கள். சந்தர்ப்ப வசத்தால் ஒரு தர்மசங்கடமான நிலை தலையெடுக்கும் அல்லது சந்தேகம் தோன்றக்கூடிய வாய்ப்பு எழும். பின்னர் கதிரவனைக் கண்ட பனிபோல் அவை எப்படி அன்பினால் கரைந்து போய்விடும் என்ற வகையிலேயே பொதுவாக இருக்கும்.

அன்பு மயமான ஒருவரால் வேறு எப்படி எழுத முடியும்?


கார்த்திகை தீபத் திருநாளன்று எழுதப்பட்ட கபீரின் வலைப்பூவுக்கான இக்கட்டுரைக்கு
அகல்விளக்கு அற்புதம் என்று தலைப்பிட்டு அன்பின் பெருமையை பேசவிருக்கிறார். வாசகர்கள் சார்பாக திரு ஜி. வெங்கடராமன் அவர்களை வணங்கி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இனி ஜீவி ஐயா .......
------------------------------------------------------------------------

அகல் விளக்கு அற்புதம்

ஆரம்பத்தில் மகான் கபீர் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. வடக்கில் வாழ்ந்த ஓர் ஆன்மீகப் பெரியவர் என்கிற மட்டில் அன்பர் கபீரன்பனின் 'கபீரின் கனிமொழிகள்' வாசிப்பு தொடர்ந்தது. பிடிப்பு ஏற்பட ஏற்பட இடுகை போட கொஞ்சமே காலம் தாமதமானாலும் நாளாவட்டத்தில் இன்னும் ஏன் அடுத்த பதிவு போடக்காணோம் என்று ஏக்கம் ஏற்பட்டது. அந்த ஏக்கத்திற்குக் காரணம் இருந்தது.

இந்தண்டை அந்தண்டை பராக்கு பார்க்காமல் ஒரு தவம் போல பதட்டப்படாமல், நிதானமாய் மகான் கபீரின் பன்முக தரிசனத்தை அவர் கொடுத்த பொழுது இந்தப் பதிவுக்கு வருவது, வந்து வாசிப்பது, வாசிக்க ஏங்குவது இதெல்லாம் வழக்கமான பழக்கமாயிற்று. இந்த ஈர்ப்புக்கு முக்கிய காரணம், மகான் கபீர் இப்பூவுலகில் வாழ்ந்து காட்டிய பேற்றை அவர் அணுஅணுவாக விவரித்த பாங்கு. தாயுமானவர், பட்டினத்தார், வள்ளலார், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று நமக்கும் பழக்கப்பட்டுப்போன தென்னகத்து தவச்சீலர்களின் பாடல் வரிகளை எடுத்தாண்டு மகான் கபீரின் வாய்மொழிகளாம் வாய்மை மொழிகளை நமக்குத் தெரிவித்தமையால் கபீர்தாசரைப் புரிந்து நம்மைப் புரிந்து கொள்வதில் எந்த தடுமாற்றமோ தயக்கமோ இல்லாது போயிற்று.

சொல்லப்போனால், நம்மை நாமே புரிந்து கொள்வதற்காகத்தான் எல்லாமே. தவழும் பருவத்திலிருந்து தள்ளாடும் பருவம் வரை இந்த புரிபடல் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி இந்த நேரத்தில் இன்ன நடப்பது என்பது கூட இறைவனின் வரமாகிப் போகிறது.

அன்பு, பிரேமை, பக்தி என்று பக்குவமடைதலின் வரிசை நீண்டு முக்திக்கு வாசல் திறக்கும் பேற்றை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது

கபீர்தாசருக்கும் இந்த அன்பு தான் அவரது வாழ்வின் ஆதாரசுருதியாக இருந்திருக்கிறது. இறைவனிடத்து வைக்கும் தீவிர அன்பு பக்தியாகப் பரிமளிக்கும் என்பது அவரது வழிகாட்டல். அதனாலேயே, 'தன்னலமற்ற அன்பு பேரின்ப நெறிக்கு முன்பதிவுச் சீட்டு' என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

ஏழைகளிடத்து வைக்கும் அன்பு இறைவனிடத்து இட்டுச் செல்லும் என்றும், இல்லாதோர் இறைவனிடம் வைக்கும் அன்பு அந்த இறைவனையே அவர் வீட்டு வாசலுக்கு இட்டு வரும் என்றும் எடுத்துச் சொன்னவர் அவர்.
உண்மை பக்தர் இரவிதாஸருக்காக கங்கை அவர் தொழில் செய்த தொட்டியிலேயே எழுந்தருளினாள் என்பது திகைக்கச் செய்யும் செய்தி, இல்லையா?... எப்படிப்பட்ட இரவிதாஸர்?.. 'இராமஜெபம் இருக்கையில் வேறொன்றும் வேண்டேன் பராபரமே' என்று கைகுவித்து இறைவனை தன் இதய சிம்மாசனத்தில் இருத்திக் கொண்ட இரவிதாஸர்!

அன்பு பக்தியாக குணமாற்றம் கொண்டு மூலமான இறைவனோடு இணையும் இரசவாதம் அற்புதமானது.

கபீரின் மொழியில் அவர் அன்பன் குறிப்பிட்டபடி

सबै रसायन हम किया प्रेम रसायन् न कोय ।
रंचक तन में संचरै, सब तन कंचन होय ॥


அவிழ்தம் பலப்பலக் கண்டேன் அன்பின் நிகராய் கண்டிலேன்
தனுவில் ஒருதுளி புகுந்தது, தனுவெலாம் பொன் மயமானது.

தினமும் பூஜை செய்தது சிவபெருமானின் சிலையாக இருந்தது, சிவகோசரியாருக்கு. கண்ணப்ப நாயனாருக்கோ, தான் கொண்டிருந்த மாசு மருவற்ற பக்தியே சிவபெருமானாக இருந்தார். இந்த அன்பின் பிரதியான பக்தியே காளத்திநாதரின் கண்களில் இடம் வலம் என்று மாறி மாறி குருதி வழிந்த பொழுது தன் கண்களை ஒவ்வொன்றாக நோண்டி எடுத்து பெருமானின் முகத்தில் அப்பி வைக்க வைத்தது.

ஆதி சங்கரரின் சிவானந்த லஹரீயின் அறுபத்து மூன்றாவது சுலோகம் கண்ணப்ப நாயனாருக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

मार्गवर्तितपादुका पशुपते रङ्गस्य कूर्चायते
गण्डूषाम्बुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।
किञ्चिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते
भक्ति: किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ॥

மார்க்காவர்த்தித-பாதுகா பசுபதே-ரங்கஸ்ய கூர்ச்சாயதே
ண்டூஷாம்பு-நிஷேசனம் புர-ரிபோர்-திவ்யாபி-ஷேகாயதே|
கிஞ்சித் க்ஷித-மாம்ஸசேஷ-கலம் நவ்யோபஹாராயதே,
க்தி: கிந் ந கரோத்யஹோ வநசரோ க்தாவதம்ஸாயதே ||


'காட்டு வழியெல்லாம் நடந்து நடந்து தேய்ந்த கண்ணப்பரின்
செருப்பு பெருமானின் மூர்த்திக்கு அபிஷேகத்திற்கு முன்
சிரசில் வைக்கப்படும் கூர்ச்சம் போலாகிறது. அவர் வாயிலிருந்து கொப்பளித்த நீரில் நனைந்தது தெய்வத்தன்மை பொருந்திய அபிஷேகம் போலாயிற்று. கொஞ்சமே கடித்து பார்த்த மாமிசத்தின் பாக்கிக் கவளம் புத்தம் புதிதான நைவேத்தியம் போலாகிறது. அஹோ! காட்டில் வசிக்கும் வேடர் பக்த சீலராகிறார்! ஆழ்ந்த பக்தி எதைத்தான் செய்யாது?' என்று பிரமிக்கிறார்.


திருநாவுக்கரசு சுவாமிகளோ தமது தேவாரத்து திருக்குறுக்கை வீரட்டத் திருப்பதிகத்தில்,

காப்பதோர் வில்லு மம்புங் கையதோ ரிறைச்சிப் பாரம்
தோற்பெருஞ்ச் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலச மாட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்டனாரே

என்று கண்ணப்ப நாயனாரின் சரிதம் சொல்ல,

ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் -- சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து

என்று காரைக்கால் அம்மையாரும் அன்பென்னும் போர்வையினால் பிறவா யாக்கைப் பெரியோனைப் போர்த்தி தன் நெஞ்சத்தில் மாயத்தால் மறைத்து வைக்க,

அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

-- என்று திருமந்திரம் முடித்து வைக்கிறது.

முதல் மூன்று ஆழ்வார்கள் கதை நமக்குத் தெரியும். மூவரும் தாயின் கர்ப்பத்தினின்று பூவுலகில் பிறவி எடுத்தவர்கள் அல்லர். தமிழகத்தின் வெவ்வேறு திருத்தலங்களில் அடுத்த நாள் அதற்கடுத்த நாள் என்று அவதரித்தவர்கள். மூவருக்கும் ஐப்பசி மாசம். ஜென்ம நட்சத்திரங்கள் தாம் அடுத்தடுத்தது. பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரத்தில் திருவோண நட்சத்திரத்திலும், பூதத்தாழ்வார் மாமல்லையில் அவிட்ட நட்சத்திரத்திலும், பேயாழ்வார் திருமயிலையில் சதய நட்சத்திரத்திலும் அவதரித்தனர்.

தென்பெண்ணை ஆற்றங்கரையில் நடுநாட்டில் உள்ள திருத்தலம் திருக்கோவலூர். தீராத விளையாட்டுப் பிள்ளை இங்கு திருவிக்கிரமனாய் காட்சி தருகிறார். கண்ணனை, கார்மேக வண்ணனைத் தரிசிக்கும் ஆவலில் மூவரும் வெவ்வேறு தலங்களிலிருந்து திருக்கோவலூர் வருகின்றனர். இந்த மூவருக்கும் திருக்கோவலூரில் ஒரு சந்திப்பு ஏற்படுத்தி அவர்களிடம் நெருக்கமாய் நெருங்க வேண்டுமென்பது பெருமானின் ஏற்பாடு.

மூவரும் இரவு தங்கலுக்கு ஒதுங்கிய இடம் ஒன்றாகிறது. அடியார் ஒருவர் இல்லத்து இடைக்கழி. அந்த சின்னஞ்சிறிய இடத்தில் ஒருவர் படுக்கலாம்; இருவர் அமரலாம்; மூவர் நிற்கலாம். இவர்கள் மூவராகையால் நின்று கொண்டே இரவைக் கழிக்கலாம் என்று தீர்மானிக்கையில், கண்ணுக்குப் புலப்படாத இன்னொருவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இன்னும் நெருக்குகின்ற உணர்வு. நாலாவதாய் சேர்ந்து கொண்டவர் யார் என்று இருட்டை விரட்டிப் பார்த்து அறிய ஒவ்வொருவராக ஞான விளக்கேற்றி உணர முற்படுகின்றனர்.

பொய்கை ஆழ்வாரை அடுத்து பூதத்தாழ்வார் ஏற்றிய அகல் அன்பு ஒளியேந்தி பளீரென்று பளீரிட்டுப் பிரகாசிக்கின்றது.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா -- நன்புருகி
ஞானச்சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.

பூதத்தாழ்வார் ஏற்றிய அகல், அன்பு அகல். அன்பை அகலாக்கி, ஆர்வத்தை நெய்யாய் அதில் வார்த்து, இனிய மனத்தை திரியாய் அதில் இட்டு நாராயணனுக்கு ஞானச்சுடர் ஏற்றுகிறார் அவர். ஆர்வ நெய்யில், இன்ப மனத்திரி அன்பு அகலில் ஒளிவிட்டு ஜொலிக்கிறது.

கபீரும் தன் ஆழ்ந்த அன்பை விளக்க ஒரு விளக்கு ஏற்றி அதன் ஒளியில் தன் தலைவன் முகம் காண ஏங்குகிறார்.

इस तन का दीवा करू, बाती मेल्यु जीव ।
लोही सींची तेल ज्यों, कब मुख देखू पीव ॥

உடலே அகலாய் உயிர் மூச்சும் அதிலிட்டத் திரியாய்
உதிர நெய்யில் ஒளிர்கையில் பதிமுகம் காண்பதெப்போ?

அன்பிற்கினியவன் தன்னை விட்டுப் பிரிந்த நேரத்து அவன் வருகையை எதிர் நோக்கி கையில் அகலுடன் காத்திருக்கிறாளாம் இளம் பெண் ஒருத்தி. அவன் திரும்புகையில் இருட்டில் அகல் வெளிச்சம் அவன் முக தரிசனம் கிடைக்க உதவும் என்பது அவளது எதிர்பார்ப்பு.

கபீருக்குக் கிடைத்த அகல் அவரது உடலேயாம். உடல் அகலில் உயிர் மூச்சைத் திரியாக்கி உதிர நெய்யில் நனைக்கிறார் கபீர். அகல் சுடர்விடும் அந்த ஆத்ம ஜோதியில் இறைவனைக் காண அவன் தரிசனம் கிடைப்பதெப்போ எனக் காத்திருக்கிறாராம்.

காலங்கள் வேறுபடலாம்; தருணங்கள் வெவ்வேறாய் இருக்கலாம்; தேச எல்லைகள் கூட கிழக்கு மேற்கு என்று எங்கெங்கோ மாறி மாறுபடலாம். இறைவனிடத்து பேரன்பு கொண்ட அருளாளர் சிந்தையெல்லாம் சந்தித்துப் போய்த் தங்குமிடம் ஒன்றே.

அன்பே உருவாய்க் கொண்ட அன்பூரே அது!

நமது இலக்கியங்களும் சரி, வழிபடுத்தப்பட்ட வாழ்க்கை முறைகளும் சரி, இறைவனுடன் ஒன்றி வாழ வழியேற்படுத்தி இருக்கின்றன. இன்னொன்று. இறைவனிடம் மனம் ஒன்ற ஒன்றத்தான் 'தான்' என்னும் அகம்பாவம் அழிந்து உண்மையான 'தானைத்' தானே கண்டு கொள்ளும் பாக்கியம் கிட்டும்.

தன்னைத் தானே உண்மையாக அறிதல் என்பது வாழ்க்கையில் வெற்றிகளை ஈட்டக் கிடைத்த வரப்பிரசாதம். அந்த சித்தி கைவரப்பெற்றவர், தொட்ட காரியம் எல்லாம் துலங்கும். இறை பக்தியும் கூட இருந்து இரும்புக் கோட்டையென அவரைக் காக்கும்.

நிறைய எழுத மனம் அவாவுகிறது. அதை வேறோர் சமயம் செய்வதே சரி.

'நான்கு வருடம்; நூறு இடுகை. அதுவும் மகான் கபீரின் கனிமொழிகளைப் பற்றியே' என்று கபீரன்பர் செய்து வருவது சாதாரண விஷயம் இல்லை. மேற்பட்டப் படிப்பு ஆராய்ச்சிகளுக்குக் கூட இவ்வளவு சிரத்தையுடன் மெனக்கிடுவதில்லை. இறைவன் அருள் இருப்பதாலேயே இதெல்லாம் சாத்தியமாகியிருக்கிறது என்பது உள்ளம் உணர்ந்த உணர்த்தல்.

தமது கடுமையான உழைப்பு கொண்டு ஒரு சத்சங்கத்தை கபீரன்பன் நிறுவியிருக்கிறார் என்கிற நினைப்பே மோலோங்குகிறது.

மகான் கபீரிடத்து கொண்ட பிரேமை 'கபீரன்ப'ரானது. அன்பு அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தான் அவரது இயற்பெயரை விடுத்து 'கபீரன்ப!' என்று அவரை அழைப்பதே நெருக்கமாகப் படுகிறது!
----------------------------------------------
நன்றி நவிலல்

நாவில் உணவின் சுவை நிற்பது சில கணங்களே. செவிவழி நுகரும் இசையின் மயக்கம் நினைவில் சில மணிநேரம் நீடிக்கக்கூடும். ஆனால் நல்ல எழுத்துகளின் வாசிப்பின் சுவை மனதில் வாழ்நாள் முழுவதும் உடன் நிற்பது என்பது இப்பொழுது புரிகிறது.

அந்த வாசிப்பின் சுவையை பகிர்ந்து கொள்ளவும் ஒரு திறமை வேண்டும். ஜீராவில் ஊறும் குலோப்ஜாமூன் அத்தனை இனிப்பையும் தன்னுள் இழுத்துக் கொள்வது போல் பெரும் எழுத்தாளர்களின் வாசிப்பிலேயே ஊறிப்போன திரு ஜீவி அவர்களும் அப்படி ஒரு சுவை பட எழுதும் எழுத்தாளராக பரிமளிப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது.


அவர் இந்த அன்பன் மீது வைத்திருக்கும் அன்பிற்கு என்றென்றும் கடமை பட்டிருக்கிறேன். ஜீவி மற்றும் சூரி ஐயா போன்ற பெரியவர்களின் ஆசிகளே இறைவனின் ஆசீர்வாதமாக செயல்படுகிறது என்றால் மிகையில்லை
.

நமக்காக நேரம் ஒதுக்கி கருத்து செறிவுள்ள ஒரு கட்டுரையை சுவையாகப் படைத்து இந்த வலைப்பூவை கௌரவித்ததற்கு திரு ஜீவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவருடைய எழுத்துலக சேவை பல காலம் நம் யாவருக்கும் வழிகாட்டட்டும் என்று வேண்டிக் கொண்டு அவருக்கு நன்றி சொல்கிறேன்.

திரு ஜீவி அவர்களுக்கும் வாசக அன்பர்களுக்கும் வரும் ஆங்கில புத்தாண்டு 2011 ஒளிமயமாக இருக்கட்டும் என பிரார்த்திக்கிறேன். நன்றி.

29 comments:

 1. //காலங்கள் வேறுபடலாம்; தருணங்கள் வெவ்வேறாய் இருக்கலாம்; தேச எல்லைகள் கூட கிழக்கு மேற்கு என்று எங்கெங்கோ மாறி மாறுபடலாம். இறைவனிடத்து பேரன்பு கொண்ட அருளாளர் சிந்தையெல்லாம் சந்தித்துப் போய்த் தங்குமிடம் ஒன்றே.//

  சிறப்பு விருந்தினர் சொன்னது மிகவும் சரியே.

  ReplyDelete
 2. //அன்பு, பிரேமை, பக்தி என்று பக்குவமடைதலின் வரிசை நீண்டு முக்திக்கு வாசல் திறக்கும் பேற்றை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது

  கபீர்தாசருக்கும் இந்த அன்பு தான் அவரது வாழ்வின் ஆதாரசுருதியாக இருந்திருக்கிறது. இறைவனிடத்து வைக்கும் தீவிர அன்பு பக்தியாகப் பரிமளிக்கும் என்பது அவரது வழிகாட்டல். அதனாலேயே, 'தன்னலமற்ற அன்பு பேரின்ப நெறிக்கு முன்பதிவுச் சீட்டு' என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.//

  அருமையான வார்த்தைகள்.

  உடல் சிலிர்த்துதான் போகிறது.

  ReplyDelete
 3. //தன்னைத் தானே உண்மையாக அறிதல் என்பது வாழ்க்கையில் வெற்றிகளை ஈட்டக் கிடைத்த வரப்பிரசாதம். அந்த சித்தி கைவரப்பெற்றவர், தொட்ட காரியம் எல்லாம் துலங்கும். இறை பக்தியும் கூட இருந்து இரும்புக் கோட்டையென அவரைக் காக்கும்.//

  உண்மை! இறை பக்தி அன்பர்களை காக்கும் இரும்புக் கோட்டைதான்.

  ஜீவி அவர்களின் சிறப்பு இடுகை மிக மிக சிறந்தது.

  எல்லாம் மனதில் பதிய வைத்துக் கொளள வேண்டியது தான்.

  அவருக்கு இறைவன் எல்லா நலன்களையும் அருள்வார்.

  ReplyDelete
 4. //அவர் இந்த அன்பன் மீது வைத்திருக்கும் அன்பிற்கு என்றென்றும் கடமை பட்டிருக்கிறேன். ஜீவி மற்றும் சூரி ஐயா போன்ற பெரியவர்களின் ஆசிகளே இறைவனின் ஆசீர்வாதமாக செயல்படுகிறது என்றால் மிகையில்லை.//

  கபீரன்பன், நீங்கள் சொல்வது உண்மை.
  பெரியவர்களின் ஆசீர்வாதம் இறைவனின் ஆசீர்வாதம் தான்.

  எல்லோருக்கும் வரும் வருடம் ஒளிமயமானதாய் இருக்க இறைவன் அருள் புரிவார்.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  நன்றி.

  ReplyDelete
 5. நாவில் உணவின் சுவை நிற்பது சில கணங்களே. செவிவழி நுகரும் இசையின் மயக்கம் நினைவில் சில மணிநேரம் நீடிக்கக்கூடும். ஆனால் நல்ல எழுத்துகளின் வாசிப்பின் சுவை மனதில் வாழ்நாள் முழுவதும் உடன் நிற்பது என்பது இப்பொழுது புரிகிறது.//

  எனக்கும்.

  ReplyDelete
 6. நல்ல எழுத்துகளின் வாசிப்பின் சுவை மனதில் வாழ்நாள் முழுவதும் உடன் நிற்பது.

  yes. golden words.

  ji - you must give seperate pdf for this guest writings. what a beautiful sharing.

  your hard work gives fruits like this. we also benefited because of you.

  thanks to suri,gv.

  ReplyDelete
 7. @ கோமதி அரசு
  @ கீதா மேடம்

  வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. ஜீவி சார் விரைவிலேயே பதில் தருவார் :)

  ReplyDelete
 8. @ YRSKbalu

  //..you must give seperate pdf for this guest writings.//

  நேற்றுதான் இது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். தங்கள் மூலம் கட்டளையும் வந்து விட்டது என்றே எண்ணுகிறேன். இறைவன் அருளால் அதுவும் நிறைவேறும் என்று நம்புவோம். தங்கள் அன்புக்கு நன்றி

  ReplyDelete
 9. // इस तन का दीवा करू, बाती मेल्यु जीव ।
  लोही सींची तेल ज्यों, कब मुख देखू पीव ॥

  உடலே அகலாய் உயிர் மூச்சும் அதிலிட்டத் திரியாய்
  உதிர நெய்யில் ஒளிர்கையில் பதிமுகம் காண்பதெப்போ?//

  கபீர் தனது நூற்றுக்கணக்கான தோஹாக்களில் அகல் தீபம் உவமையாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

  சாதகன் ஆன ஒருவன் தனது வழி என்ன எனத்திரியாது திக்குத்தெரியாத காட்டில் தேடித் தேடி இளைத்தேன்
  என்று கூறுவது போல, உலகத்தே பரவியிருக்கும் மறைகள, சாத்திரங்கள், அவை சொல்லும் மந்திர
  தந்திரங்கள் எல்லாவற்றினையும் பின் பற்றியும் மன நிறைவு பெறா நிலையில் ஒரு சத்குருவை அடைகிறான்.
  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 10. அதை கபீர் வர்ணிக்கிறார் பாருங்கள் !!

  பீசே லாகா ஜாஇ தா,லோக் வேத் கே ஸாதீ
  ஆகை தைம் சத்குரு மில்யா, தீபக் தீயா ஹாதி.

  எவ்விதமான உறுதியும் இல்லாத வண்ணம் உலகத்தில் உள்ள எல்லா வேதங்கள் பின்னும் சென்று கொண்டிருந்த நான் என் முன்னே சத்குருவைக் கண்டேன். அவர் ஒரு அகல் விளக்கினை என் கைகளில் அளித்தார். அதன்பின்
  இருள் வழி செல்லுவது நின்று போனது.

  இன்னொரு இடத்தில் சொல்வார்:

  தீபக் தீயா தேல் பரி, பாதி தயீ அகட்
  பூரா கியா பிசாஹுன்ணா, பஹுரி ந ஔவொம் ஹட்.
  ( கருத்து )
  அகலாய் இருக்கும் அறிவுக்கிண்ணத்தில் அன்பு எனும் எண்ணையை என் குரு நிரப்பிவைத்தார். அது மட்டுமா !
  நித்தம் அந்த பிரும்மத்தை தியானம் செய்திடவே, அந்த அகலிலே என்றுமே ஒளிவிட்டு எரியும் திரியும் போட்டு
  சுடர்விடச்செய்தார். அகலின் ஒளியிலே அவனியின் சந்தையிலே வியாபாரம் செய்தேன். நல்லவற்றை வாங்கினேன். தீயவற்றை அகற்றினேன். அதனால், எனக்கு மறு பிறவி என்பதே இல்லை என ஆயிற்று..
  ஸாதகன் தனக்கென ஒரு குரு கிடைத்துவிடின் எப்படித் தன்னையே தியாகம் செய்து குருவின் பாத கமலங்களில்
  சரணாகதி ஆகின்றான் என்பதையும் ஒரு அகல் விளக்கு உதாரணத்தைக்கொண்டே கபீர் விளக்குவார்:
  பலி பயீ ஜு குரு மில்யா, நஹின் தர் ஹோதி ஹாம்னி
  தீபக் திஷ்டி பதங் ஜ்யூம், பட்தா பூரி ஜான்ணி.
  கருத்து: ; எனது குருவின் பார்வை என் மேல் பட்டது எத்துணை மங்களமாயிற்று !!
  விட்டில் பூச்சிகள் எல்லாமே அகல் விளக்கின் சுடர் பிரகாசத்தில் வசீகரப்பட்டு அச்சுடரில் விழுந்து
  மாய்கின்றனவோ, அதுபோலவே, யானும் உலகத்தே புல்ன்கள் தரும் இன்பங்கள் எல்லாத்தையும் விடுத்து
  அந்த ஞான ஒளியிலே குதித்து அமிழ்ந்தேன்.
  சொல்லிக்கொண்டே போகலாம். ஜீவி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 11. அதை கபீர் வர்ணிக்கிறார் பாருங்கள் !!

  பீசே லாகா ஜாஇ தா,லோக் வேத் கே ஸாதீ
  ஆகை தைம் சத்குரு மில்யா, தீபக் தீயா ஹாதி.

  எவ்விதமான உறுதியும் இல்லாத வண்ணம் உலகத்தில் உள்ள எல்லா வேதங்கள் பின்னும் சென்று கொண்டிருந்த நான் என் முன்னே சத்குருவைக் கண்டேன். அவர் ஒரு அகல் விளக்கினை என் கைகளில் அளித்தார். அதன்பின்
  இருள் வழி செல்லுவது நின்று போனது.

  இன்னொரு இடத்தில் சொல்வார்:

  தீபக் தீயா தேல் பரி, பாதி தயீ அகட்
  பூரா கியா பிசாஹுன்ணா, பஹுரி ந ஔவொம் ஹட்.
  ( கருத்து )
  அகலாய் இருக்கும் அறிவுக்கிண்ணத்தில் அன்பு எனும் எண்ணையை என் குரு நிரப்பிவைத்தார். அது மட்டுமா !
  (contd...)
  subburathinam

  ReplyDelete
 12. அகலாய் இருக்கும் அறிவுக்கிண்ணத்தில் அன்பு எனும் எண்ணையை என் குரு நிரப்பிவைத்தார். அது மட்டுமா !
  நித்தம் அந்த பிரும்மத்தை தியானம் செய்திடவே, அந்த அகலிலே என்றுமே ஒளிவிட்டு எரியும் திரியும் போட்டு
  சுடர்விடச்செய்தார். அகலின் ஒளியிலே அவனியின் சந்தையிலே வியாபாரம் செய்தேன். நல்லவற்றை வாங்கினேன். தீயவற்றை அகற்றினேன். அதனால், எனக்கு மறு பிறவி என்பதே இல்லை என ஆயிற்று..
  ஸாதகன் தனக்கென ஒரு குரு கிடைத்துவிடின் எப்படித் தன்னையே தியாகம் செய்து குருவின் பாத கமலங்களில்
  சரணாகதி ஆகின்றான் என்பதையும் ஒரு அகல் விளக்கு உதாரணத்தைக்கொண்டே கபீர் விளக்குவார்:
  பலி பயீ ஜு குரு மில்யா, நஹின் தர் ஹோதி ஹாம்னி
  தீபக் திஷ்டி பதங் ஜ்யூம், பட்தா பூரி ஜான்ணி.
  கருத்து: ; எனது குருவின் பார்வை என் மேல் பட்டது எத்துணை மங்களமாயிற்று !!
  விட்டில் பூச்சிகள் எல்லாமே அகல் விளக்கின் சுடர் பிரகாசத்தில் வசீகரப்பட்டு அச்சுடரில் விழுந்து
  மாய்கின்றனவோ, அதுபோலவே, யானும் உலகத்தே புல்ன்கள் தரும் இன்பங்கள் எல்லாத்தையும் விடுத்து
  அந்த ஞான ஒளியிலே குதித்து அமிழ்ந்தேன்.
  சொல்லிக்கொண்டே போகலாம். ஜீவி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 13. A very delightful reading ! Thanks a lot !!

  ReplyDelete
 14. @ கோமதி அரசு

  தங்கள் அன்பான வருகைக்கும் பதிவின் குறிப்பிட்டப் பகுதிகளை ரசித்து அதன் அடிப்படையிலான உணர்வுகளின் உண்மை வெளிப்பாட்டினை எடுத்துச் சொன்னமைக்கும் நன்றி.
  நல்ல விஷயங்கள் இப்படி ஒரு தடவைக்கு இருதடவை மீட்டுத் திருப்பிப் பார்க்கையில் மனத்தில் பதிகிறது. பதிந்ததை நடைமுறைப் படுத்திப் பார்க்கையில் வெறும் வாசிப்பு அனுபவத்தைத் தாண்டி சொன்னதின்
  தாத்பரியம் மனத்தில் கல்வெட்டாய்ப் பதிகிறது.

  தங்களது மார்கழித் திங்கள் பதிவுகளைப் படிக்கையில் நல்ல கருத்துக்கள் வாசிப்போர் நெஞ்சில் இப்படித்தான் இதமாக இயல்பாகப் பதிகிறது. இங்கு பார்த்த அகல் விளக்கு அற்புதங்களை தங்கள் திருக்கார்த்திகைத் திருநாள் பதிவுகளிலும் இப்பொழுது தான் பார்த்தேன். மிக விமரிசையாகத் திருவிளக்குத் திருவிழாவை தமிழ்த் திருநாளாகக் கொண்டாடியிருக்கிறீர்கள்.
  'ஆத்மாவைத் தேடி' பதிவுகளைப் படிக்கத் தொடங்கித் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

  இந்த சந்திப்பில் (Junction)தங்களின் அறிமுகம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  ReplyDelete
 15. @ கீதா சாம்பசிவம்

  வந்தது தான் வந்தீர்கள்.. இப்படி லேசாகத் தலை காட்டி விட்டுப் போனால் எப்படி?..

  நீங்கள் 'எனக்கும்' என்று சொன்னது எனக்கும் தான்; ஏன், எல்லோருக்கும் தான்!

  மிக்க நன்றி, கீதாம்மா..

  ReplyDelete
 16. @ yrskbalu

  //your hard work gives fruits like this. //

  கபீரன்பனின் பதிவுகளைப் படிக்குங்கால் நான் அடிக்கடி நினைத்துக் கொள்வது இது தான்! இளமையில் தமிழ் வகுப்புகளில் உட்கார்ந்து பாடம் கேட்ட அனுபவம் மீண்டும் கிடைப்பது மட்டுமல்ல, மகான் கபீரின் வாய்மொழிக்கு ஏற்பவான பொருந்தக் கூடிய மற்ற இறையடியார்களின் தேனினும் இனிய சொற்களைத் தேடித் தேடி அவர் சேகரித்திருக்கிறார்.

  இப்படியான ஓர் ஒப்பிலக்கியப் பணி
  ஆரவாரமில்லாமல் அவரைப் போலவே மிகவும் அமைதியாக இவரின் இந்தப் பதிவுகளில் நடந்திருக்கிறது. 'ஒரு இமாலய சாதனை எவ்வளவு இயல்பாக நடந்திருக்கிறது' என்கிற பிரமிப்பு மலைப்பாக நீளுகிறது. இறைவனை சகல நேரமும் 'பார்,பார்! அவனின் அருள் எவ்வளவு அழகு பார்!' என்று நம்மிடம் காட்டி, அந்த ஒப்பற்ற தரிசனத்தை நமக்குக் காட்டியவர் எந்த நேரத்தும் தன்னை முன்னிலைப் படுத்தாமல் பின்னால் மறைந்து கொண்ட, அந்தக் காலத்து இறை அருளாளர்களுக்கே உரிய குண மேன்மையை நினைத்து நினைத்து
  மனத்தில் அவரைப் பற்றியப் பெருமை பீறிடுகிறது.

  தங்களின் ஆழ்ந்த ரசனைக்கு மிக்க நன்றி, பாலு சார்!

  ReplyDelete
 17. தொடர்ந்து இரு பெரியவர்களின் ஆனுபவமிக்க வார்த்தைகள் சிறப்பு இடுகைகளாக வருவது ஆசிதான்!

  ReplyDelete
 18. //இந்த சந்திப்பில் (Junction)தங்களின் அறிமுகம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்//

  ஜீவி சார், நான் என்மகள் முத்துலெட்சுமிக்கும்(சிறுமுயற்சி) கபீரன்பன் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடைமைப் பட்டு இருக்கிறேன்.

  என் மகள் தான் கபீரன்பன் அவர்கள் வலைத்தளத்தை அறிமுகப் படுத்தி படிக்கச் சொன்னாள். கபீரன்பன் எழுதியதையும்,சிறப்பு விருந்தினர் பதிவுகளையும் படித்து இன்புற்று வருகிறேன்.

  உங்களை போன்ற பெரியவர்கள் வழி நடத்துதல் எல்லோருக்கும் நலம் பயக்கும்.

  ReplyDelete
 19. @ Sury

  நினைத்தால் ஆச்சரியமாய் இருக்கிறது!

  அகல் விளக்கு ஒரு குறியீடு தான்!
  எத்தனை தவச்சீலர்கள் அதில் திரியிட்டு, நெய் ஊற்றி, பிரகாசிக்கும் ஒளி பார்த்துப் பரவசப்பட்டிருக்கிறார்கள்!

  அவர்கள் பார்வைக்குப் பட்டு நெஞ்சில் சுடர் ஏற்றிக் கொண்டது ஞானஒளி என்பதினால் விசேஷம்! அந்த சிறப்பைத் தாங்கிய பெருமையே அகலுக்கும், திரிக்கும், நெய்க்கும் கிடைத்தற்கரிய பெரும் பேறாயிற்று.

  ஆக, புறக்கண்களால் ஒளியைப் பார்த்த பார்வையைத் தாண்டி ஒரு பிராஸஸ் இருக்கிறது; அதை நெஞ்சில் ஏற்றிக் கொண்ட காரியம் -- புறப்பார்வைக்குப் பட்டதை உள்வாங்கிக் கொண்ட அற்புதம்-- அது தவமாய் தவமிருந்து பெற்ற ஞானச்செல்வமன்றோ! பக்தி ஞானமாய் உள்ளுக்கு உள்ளே சுடர் ஏற்றிக் கொண்டது. மகான் கபீரின் அருள் வாக்குப் படி, உதிர நெய்யில் ஒளிர்கின்ற தீபமாயிற்று!

  மகான் கபீரின் மேதமையின் மேன்மையை உங்கள் மூலமாகவும் பன்முகமாய் அறிகின்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு மிக்க நன்றி, ஐயா!

  ReplyDelete
 20. @ ஜீவா

  உங்கள் வலைப்பூவில் பக்தி ஞானமாய் பரிமளிப்பது இசையாய் இன்பமாய் மனத்திற்கு மகிழ்ச்சியூட்டுகிறது. இந்தத் தடவை டிசம்பர் சீசனை நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் விதம் அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. @ Radha

  தங்கள் ரசனைக்கு ரொம்ப நன்றிங்க.

  விட்டு விடாமல் வாசிப்பு அனுபவத்தை எடுத்துச் சொன்னமைக்கும் நன்றி.

  ReplyDelete
 22. ஜீவி ஐயா !
  முன்பு ஒரு வித அவசரத்தில் இருந்ததால் ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட்டுவிட்டு ஓடிவிட்டேன்.
  தலைப்பு, பதிவு, அதன் சாராம்சம் - மனிதன் இறைவன் மீது வைக்கும் அன்பு, அவன் நம் மீது வைப்பதை குறிக்கும் சொல்லான "அருள்"...கண்ணப்பர் கதை இதை எல்லாம் படித்து விட்டு நிதானமாக பின்னூட்டம் இடாமல் செல்வது மாபெரும் குற்றம் என்று என் நெஞ்சம் சொல்லியது. :-) இன்று ஞாயிற்று கிழமை, நிதானமாக இன்னுமொரு பின்னூட்டம். பொறுத்தருள்வீர். :-)
  "அகல் விளக்கு அற்புதம்" - என்ன ஒரு கவித்துவமான தலைப்பு !
  எனது சொந்த ஊர் வடலூரில் இருந்து மூன்று மைல் தூரத்தில் உள்ளது. அதனாலோ என்னவோ தங்கள் பதிவு,
  "அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
  தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி"
  என்ற வள்ளலார் வரிகளை மீண்டும் நினைவூட்டியது.
  சமீபத்தில் வாழ்ந்த அந்த அருளாளர்:
  "வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
  நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
  தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
  ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே."
  என்று தன் திருவாசக அனுபவத்தை பாடி இருக்கிறார்.
  (continued)

  ReplyDelete
 23. இப்பேர்ப்பட்ட திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகர் கண்ணப்பரை குறிக்குங்கால்,

  "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
  என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட் கொண்டருளி
  வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
  சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ"
  என்று பாடுகிறார்.
  இதை எல்லாம் படிச்சிட்டு எல்லா புத்தகத்தையும் மூடி வெச்சுட்டேன். :-)
  ஏற்கனவே நாம ஒரு காம்ப்ளெக்ஸ்-ல இருக்கோம் என்றால், இங்கே மாணிக்கவாசகருக்கே அன்பு கம்மியா இருந்ததாம். எங்கே போயி இந்த அநியாயத்தை எல்லாம் சொல்றதுன்னு நெனைச்சிட்டு இருந்தேன்...வாகா உங்க பதிவு அமைந்தது. :-)

  இருந்தாலும்...
  //அன்பு, பிரேமை, பக்தி என்று பக்குவமடைதலின் வரிசை நீண்டு முக்திக்கு வாசல் திறக்கும் பேற்றை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது//
  என்ற வரியை படிக்கிற பொழுது மனம் ஆனந்த கடலாடுகிறது. மிக்க நன்றி. :-)

  ReplyDelete
 24. பதிவும் பின்னூட்டங்களும் 'அகல் விளக்கு அற்புத'த்தை பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றன.

  அகல் விளக்கின் மகிமைதான் என்னே! எத்தனையோ ஆண்டுகளாக இருண்டு கிடக்கும் அறையென்றாலும், ஒரு விளக்கு வந்தவுடன் இருளனைத்தும் சட்டென்று அகன்று விடுதல் போல், இறையருள் கிடைத்து விட்டால் எப்பேர்ப்பட்டவருக்கும் ஞான ஒளி கிடைத்து விடும் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணரும். இறைவன் மீது அன்பை மட்டும் வளர்த்துக் கொள்ளத் தெரிந்து விட்டால் வேறென்ன வேண்டும்?

  //இறைவனிடத்து பேரன்பு கொண்ட அருளாளர் சிந்தையெல்லாம் சந்தித்துப் போய்த் தங்குமிடம் ஒன்றே.//

  அருமை.

  நாமும் நமக்கு அரிதாகக் கிடைத்த அகலை சரியாகப் பயன்படுத்திக் கொள்வொம். அவனருளாலே அவன் தாள் வணங்கி...

  ஜீவி ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.

  ReplyDelete
 25. @ Radha

  தங்கள் மீள்வருகைக்கு மிக்க நன்றி, ராதாமோகன்!

  'பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள்' என்று தொடங்கும் மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல் இன்னொன்று கூட உண்டு.
  மணிவாசகப் பெருமான் கண்ணப்ப நாயனாரின் சரிதம் பற்றி நினைத்து உருகிப் போகிறார். திருவாசகதிற்கு உருகாதார் எவ்வாசகத்திற்கும் உருகார்' என்பதே வாசகமாய் இருக்கையில் திருக்கண்ணப்பரின் சரிதம் அவரையே உருக வைத்துக் கண்ணீர் மல்கச் செய்கிறது. நீர் திரையிட்ட விழிகளுடன் 'என்னே நின் பக்தி!'என்று மனத்தில் என்ணி உணர்ந்து சொன்ன வாசங்கங்களாக இது இருந்திருக்க வேண்டும். அடியாருக்கு அடியாராய் அவர் அணுகிய விதம் இது.

  பக்தியில் மிகவும் முரட்டு பக்தி பாண்டுரங்க பக்தராகிய கோரகும்பரின் சரிதம். ஜெமினி ஸ்டூடியோ எடுத்த 'சக்ரதாரி' படம் சிறுவயதில் பார்த்து கண்ணீர் விட்டு விக்கித்தேன்.

  சக்கரமெனச் சுழலும் காலமாற்றத்திற்கேற்ப பக்தியின் பரிமாணங்களும் மாறிவிட்டன. அந்த யுகத்து பக்தரின் பக்தி கண்டு பிரமித்து இறைவனே பிரச்சனமாயிருக்கிறான்.

  சித்திரக் கலவையாக இருக்கும் தங்கள் வலைப்பூ மனத்தை மிகவும் கவர்ந்து விட்டது. நன்றி.

  ReplyDelete
 26. எங்கே காணோம் என்று பார்த்தேன்.

  கபீரன்பரின் விருந்தினர் உபசரிப்பு
  உன்னதம்! ஆற்றுப்படுத்தலாம் என்று பார்த்தால் உங்களுக்கும் தான் அது தெரியுமே என்கிற நினைப்பு நினைவில் நீந்தியது.

  வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, கவிநயா!

  ReplyDelete
 27. கபீர் தனது குருவை ஒரு ஞான ஒளி தரும் அகல் விளக்குக்கு ஒப்பிட்டு அதன்
  ஒளியில் தான் வழி நடந்ததாகச் சொல்லுவார். மேலும், ஒருவன் தனக்கு ஒரு
  சரியான குரு கிடைத்துவிட்டார் என்பதை எங்ஙனம் உணர இயலும் என்பதைப்
  புரிய வைக்கச் சொல்லுவார்: ஒருவனுக்கு ஒரு சரியான குருவின் பார்வை படின்
  உடல் புல்லரிக்கும் என்பார்.
  இருளில் திடீரென ஒரு அகல் விளக்கு ஒளி வந்தால் ஏற்படும் மன நிலை ஏற்படுகிறது
  ஒரு குருவின் அருள் பார்வை எனவும் சொல்வார்.
  இன்று காலை வலை நண்பர், ஷிரிடி சாயி பக்தர் ஸ்ரீகலா அவர்களது வலையில், குருவை
  எதற்கு ஒப்பிடுகிறார் பாருங்கள் !

  // குருவெனும் அருளுலை ஒளிக்கங்கு பட்டறையில்
  செருக்கெனும் இரும்பாகிய எனையிட்டு
  குருஉரைஎனும் செம்மட்டியால் தகடாகி
  இறுதியில் நான் இளகில் ஆன்ம ஞானமே.//

  ஒருவேளை அகல் விளக்கினால், தான் எனும் அஹங்காரம்,
  கோபம், தாபம் ஆகிய மனத்திரைகள் அகலாதபோது ஒருவனை உலையிலிட்டு குருவுரை என்னும்
  செம்மட்டியால் தகடாடாக்க ( மெலிதாக்க ) வேண்டி நேர்கிறது என்பதும் உண்மையே.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 28. @ Sury

  தங்கள் அன்பான மீள் வருகைக்கு நன்றி ஐயா!

  இனிய இந்த வழி எப்படிப் பாருங்கள்:

  இளகிய மனம்
  இளம் பாகாய்
  உருகி ஓடி
  பள்ளம் பார்த்துப்
  பாய்வதே போல்
  கள்ளமிலாதவனோடு கலக்க
  காரணம் அறிவேனடி, தோழி!

  முன்னாலேயே
  மூர்த்தியவன்
  கீர்த்தி அறிந்தது அது!
  முன்வினையின் தொடர்பாய்
  பின்னான பிறப்பிலும்
  பிறழாமல் தொடர்ந்த
  பந்தம் அது!

  முரண்டு பிடிக்கும் அறிவை
  மூர்க்கமாய் முரண்டினால்
  திரண்ட வெண்ணை சிதறிப்போகும்!
  அன்பின் வழியில் ஆத்ம நெறிகாட்டி
  பண்பாய் பாசமாய் பாதை புரியவைத்து
  மன ஒருமையை கங்காய் சுடரேற்றி
  ஆனந்தமய வித்யை அறிய வைத்து
  இயற்கையில் நிலை பெறச் செய்து
  இறைவனின் நித்யத்தை எடுத்தோதி
  தன்னை வெல்லும் தகுதியை வளர்த்து
  இறைவனுடன் இணையஆன்மா அறிய
  முத்தான் முழுமையான வழி காட்டல்
  தைத்திரீயஉபநிஷத்தின் நெறி அன்றோ
  அறிவு அன்பானால் ஆனந்தம்ஆனந்தம்
  பேரறிவாளன்வேறுதுணை இருக்கப்பின்
  பேரின்பம்! பேரின்பம்! பேரின்பமே!

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி