சக ஊழியர் ஒருவருக்கு அழைப்பு வரும் போது அவருடைய அலைபேசியிலிருந்து ’கான்டா-லகாஆஆ’ என்கிற புகழ் பெற்ற ஹிந்தி ஆல்பம் பாட்டு ஒன்று கேட்கும். அந்த பாட்டு ஆரம்பிப்பதே உச்சஸ்தாயில்தான். திடீர் திடீரென்று அந்த பாட்டு அலுவலகத்தின் அமைதியை கிழித்துக் கொண்டு வரும் போது வேடிக்கையாகவும் பல சமயங்களில் எரிச்சலாகவும் இருக்கும்.
ஒருமுறை அவரை நான் எங்கிருந்தோ அழைக்க நேர்ந்த போது, அழைப்பை அவர் ஏற்கும் வரை காயத்ரி மந்திரம் கேட்டது. ”என்னப்பா இது அந்த முள் குத்ற பாட்டு எங்கே ? பாட்டை மாத்திட்டியா ?” என்று கேட்டேன்.
அவருக்குப் புரியவில்லை.
”எப்பவுமே கான்டா-லகா தானே வரும் இப்போ காயத்ரி மந்திரம் வருதே” என்று கேட்டு என் அஞ்ஞானத்தை வெளிப்படுத்தினேன்.
அவர் சத்தம் போட்டு சிரித்து ‘சார் அந்த பாட்டு எனக்கு ரிங் டோன். காயத்ரி மந்திரம் உங்களுக்கு ’காலர் ட்யூன்’ என்று என் அஞ்ஞானத்தை போக்கினார்.
மனிதர்கள் மனம் மட்டும்தான் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் என்பதை கேட்டிருந்தோம். இப்போது நம்முடைய கைப்பேசிகளும் கூட செய்யக்கூடும் என்பதை புரிந்து கொண்டேன்.
இந்த காலர் ட்யூனை முதலில் செய்து காட்டியவர் ஜனாபாய். ஆம், அதுவும் அவர் கேட்கச் செய்தது கபீர்தாஸரை !
ஜானாபாய் நாமதேவரின் வீட்டுப் பணிப்பெண். அவரை விட சில வருடங்கள் மூத்தவர். நாமதேவரை அன்புடன் ஊட்டி வளர்த்தவர். பின்னால் நாமதேவரையே தன் குருவாகக் கொண்டு பாண்டுரங்கன் மகிமையில் கரைந்து போனவள்.
கபீர்தாஸ் தலயாத்திரையின் போது ஞானதேவர், நாமதேவர், போன்ற மகான்களைக் கண்டு மகிழ்ந்து உரையாடினார். அப்போது ஜனாபாய் பற்றி கேள்வியுற்றார். விட்டலனிடத்தில் அவருக்கிருந்த பக்தியை யாவரும் மெச்சினர். எழுத்தறிவில்லா அப்பெண்மணியின் பக்தி ரஸம் சொட்டும் அபங்க் பாடல்களை சிலர் பாடிக்காட்டினர்.
கபீருடைய ஆர்வம் மிக அதிகமாயிற்று. அவர் இருக்கும் கிராமத்தை விசாரித்துக் கொண்டு சென்றார்.
அக்கிராமத்தை நெருங்கும் போது வயலில் இரு பெண்மணிகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் ஜனாபாயைப் பற்றி விசாரித்தார். ஒருவள் ”நான் தான் அது, சற்று பொறுங்கள்” என்று சொல்லி தன் சண்டையைத் தொடர்ந்தாள்.
கபீர் எதிர்பார்த்து வந்ததோ ஒரு அமைதியே வடிவான இறைவன் நாமத்தில் ஆழ்ந்திருந்த ஒரு பெண்மணி. இவளோ வெய்யிலில் ஒரு கையில் சாணத்துடன் இங்கிதமில்லாத முறையில் நடந்து கொள்கிறாளே என்று நினைத்தார். [நாம் தேடிவந்த ஜனாபாய் வேறொருவராக இருக்குமோ என்றும் நினைத்தாரோ என்னவோ].
சண்டையின் சாரம், அங்கு காய்ந்து கொண்டிருந்த சாண வரட்டிகள் யார் யாருடையது என்பதே. வாக்குவாதம் முற்றிய நிலையில் கபீரை பஞ்சாயத்து செய்யச் சொல்லி அவள் முறையிட்டாள்
“ ஐயா, இவள் நான் காயப் போட்டிருந்த வரட்டிகளின் மேல் தன் வீட்டு சாணத்தைப் பூசி தன்னுடையது என்கிறாள் இது அடுக்குமா ?”
கபீர் எதிர் கேள்வி போட்டார் “ எப்படி உன்னதென்று சொல்ல முடியும் ? ”
உடனே கீழே குனிந்து ஒரு வரட்டியை உடைத்து அவரிடத்தில் கொடுத்தாள்.
“ காதிலே வச்சுப் பாத்து நீங்களே சொல்லுங்க"
காதருகில் கொண்டு சென்றதுமே caller tune போல அதிலிருந்து விட்டலா விட்டலா விட்டலா என்ற செபமந்திரம் கேட்டது. பின்னர் அவள் கொடுத்த வேறொரு துண்டை வைத்துப் பார்த்ததில் ஏதும் கேட்கவில்லை. கபீருக்கு ஜனாபாய் சண்டையின் நியாயம் மட்டுமல்ல அவளுடைய அளவிறந்த பக்தியும் புரிந்தது.
ஒருகணமும் விட்டலனின் நாம செபத்தை மறவாத அவளுடைய மனஒருமை அவள் உழைப்பில் உருவான அந்த வரட்டிகள் ஒவ்வொன்றிலும் ஒலித்தது.
பிறப்பால் மிகவும் தாழ்ந்த குலம், ஆனால் பக்தியில் இமயத்து சிகரம். அவளை வணங்கினார் கபீர்.
कबीर कुल सोई भला, जा कुल उपजै दास ।
जा कुल दास न ऊपजै, सो कुल आक पलास ॥
அடியவர் பிறக்கும் குடியே, கபீரா, என்றும் மேற்குடி
அடியவ ரில்லாக் குடியோ, குடியல்ல எருக்கஞ்செடி
(அர்கா அல்லது ஆக் -Calotropis gigantea -என்பது தமிழில் எருக்கம் ஆகும்)
குலத்தால், இறைவன் நம் பக்தியை எடைபோடுவதில்லை. நம் அரசாங்கங்களைப்போல் இட ஒதுக்கீடு எதுவும் அவன் செய்வதில்லை. கலப்படமில்லாப் பக்தியை காணும் போது அவனே சிக்கிக் கொள்கிறான். ஜனாபாயிடம் அவன் பட்டப் பாட்டை அவளுடைய பாடலிலேயே பாருங்கள்.
பண்டரிபுரக் கள்வனைப் பிடித்தேன்
நான்,
கழுத்தில் ஒரு வடத்தைப் போட்டு
பண்டரிபுரக் கள்வனைப் பிடித்தேன்
சிறைக்கூடமாக்கி என் நெஞ்சை -
அதில்
அடைத்து விட்டேன்
அவனை
உள்ளே அடைத்துவிட்டேன் - (பண்டரிபுர)
ஒரு மந்திரத்தால் கட்டினேன்
அவன்
திவ்யக் கால்களில் விலங்கிட்டேன்
நான் விலங்கிட்டேன்; (பண்டரிபுர)
ஸோஹம் என்கிற சவுக்கால்
அடித்தேன்,
அடித்தேன் -விட்டலன்
போதும் போதும்
என்று கெஞ்சும் வரை.
மன்னித்து விடு என்னை மன்னித்து விடு
விட்டலா மன்னித்துவிடு, ஜானியின் உயிருள்ள வரை
முடியாது
உன்னை விட முடியாது
ஜனாபாயின் பாடல்கள் மஹாராஷ்ட்ர கிராமத்து மக்களிடையே மிகவும் பிரபலம். நெல்குத்தும் போதும் மாவரைக்கும் போதும் அலுப்பு இன்றி வேலை செய்ய அவளது பாடல்களை பாடிக் கொண்டே செய்வார்களாம். அதற்குக் காரணம் அப்பாடல்கள் பிறந்த சூழ்நிலையே ஜனாபாய் அந்த வேலைகளை செய்யும் போதுதான். அதனால் இயற்கையாக அவை அந்த சூழ்நிலையிலேயே தழைத்து மக்களிடையே பிரபலமாயின.
”தளித காண்டித துஜா காயின அனந்த “ (அரைக்கும் பொழுதும் இடிக்கும் பொழுதும் எல்லையற்ற உன் புகழ் பாடுவேன் )என்ற அபங்க் பலரும் அறிந்த ஒரு பாடல். குருபக்திக்கும் ஜானாபாய் சிறந்ததொரு எடுத்துக் காட்டாய் விளங்கினார். அவருடைய பாடல்களில் நாமயாசி தாஸி (நாமதேவின் அடிமை) என்கிற முத்திரையைக் காணலாம். பண்டரிபுரத்தில் பிறப்பதும் நாமதேவருக்கு சேவை செய்வதுமே அவளுக்கு எல்லாப் பிறவியிலும் வேண்டியிருந்தது.எத்தனைப் பிறவி வருகினும் - விட்டலா
எனக்கு இரண்டு வரம் மட்டும் கொடுத்து விடு
பண்டரிபுரத்தில் பிறக்கவேண்டும்-நான்
பிறந்து
நாமதேவன் பணி செய்யவேண்டும்
பன்றியோ பறவையோ பூனையோ நாயோ
எப்பிறவி வாய்க்கினும் பண்டரியில்
நாமதேவன்
பணி செய்து கிடக்க வேண்டும்.
நாமதேவன் அடிமை
நான் கேட்பதற்கு வேறில்லை
இவ்விரண்டு வரம் மட்டும் கொடுத்து விடு -விட்டலா
ஜனாபாய்க்கு வயதாகி தள்ளாமையில் வருந்தும் போது பாண்டுரங்கனே பணிப்பெண் வடிவில் வந்து அவள் தேவைகளை கவனித்துக் கொண்டான் என்பர். அதை அவள் ஒரு பாடல் மூலம் வெளிப்படுத்துகிறாள்.
போதும் போதும்; இந்த சம்சாரம்
உன் கடனை நான் தீர்ப்பதும் எப்படி ?
அரியவன் நீ, ஏன் என்னோடு
அரைத்தும் இடித்தும் உழைக்கிறாய் ?
ஓ பிரபு
பெண்ணாய் வந்து என்
அழுக்காடையும் துவைக்கிறாய்
நீர் மொண்டு வருவதிலும்
சாணத்தை
உன்னிரு கைகளில்
அள்ளுவதிலும்
பெருமிதம்தான் என்ன ?
விட்டலா !
உன் தாள்களில் இடம் கொடு
நாமதேவனின் தாசி
ஜானி யின் முறையிது
நிஜமாகவே பாண்டுரங்கன் வந்து பணிவிடை செய்தானா அல்லது பணிவிடை செய்த பெண்மணியில் பாண்டுரங்கனைக் கண்டாளா என்பது என் போன்ற மூர்க்கர் செய்யும் ஆராய்ச்சி. ஆனால் அவனுடைய நினைவில் உடல் உணர்வே மறந்து விட்டேன் என்பது தான் உண்மை என்கிற பொருளில் ஜனாபாயின் பாடலை ஒன்றைஆஷா போன்ஸ்லே குரலில் கேட்டு அனுபவியுங்கள். ( Thanks to Youtube friend)
அந்த வகை பக்தியில்லாத இந்த பிறவி எந்த குலத்தில் பிறந்திருந்தால்தான் என்ன ? எருக்கஞ்செடி போல் பிறந்து மடியும் வகையில் தானே போகிறது.
எந்தக் குழந்தையும் தன்னுடைய பிடியிலிருந்து போய்விடகூடாது என்பதற்காக இறைவன் தன் தூதுவர்களை எல்லா வகை மக்களிடையேயும் பிறக்க வைக்கிறான். சிலர் சங்கரர் போல பண்டிதராய் வந்து வழிகாட்டலாம். சிலர் மீராவைப் போல அரச குடும்பங்களில் பிறந்திருக்கலாம். வேறு சிலர் கபீர் போலவும் ஜனாபாய் போலவும் எழுத்தறிவில்லாதவர்களாய் வந்து அவனது நாடகத்தை நடத்திக் கொண்டு போகிறார்கள்.அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தாஸர்கள் சேரும் சத்சங்கம் ஒன்றுதான். ஆகவே இறைவன் நாமத்தை செபிக்கும் யாவரும் உயர்குலம் என்று கபீர் சொல்கிறார்.
கடவுளுடைய நாம செபத்தை விடாது செய்பவர்கள் தங்கள் சமூகத்திற்காக வேறெதுவும் செய்ய வேண்டாம். அவர்கள் மக்களிடையே வாழ்வதே பல தீய சக்திகளை விரட்டி விடும். மக்களின் மனங்களில் நல்லெண்ணங்களை உருவாக்கும்.
அவர்கள் மூலம் இறைவன் காலர்-ட்யூனாகவோ ரிங்டோனாகவோ நம்முடன் தொடர்பு அறுந்து போகாமல் பார்த்துக் கொள்கிறான்.
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வலைப்பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் கங்காதரன் வாழ்க்கையையும் படித்துப் பாருங்கள். கபீரின் கூற்று எவ்வளவு உண்மை என்பது புலனாகும்.
-----------------------------------------------------------
ஒரு குறிப்பு : நாமதேவர் மற்றும் ஞானதேவர் கபீரை காசியில் சந்தித்ததாகவும் சொல்லப்படும் செவி வழி கதைகள் உண்டு. ஆனால் இவர்கள் வாழ்ந்த காலம் சரித்திர ஆசிரியர்கள் படி வெகுவாகவே வேறு படுகிறது. ஆரம்பத்தில் சொல்லப் பட்ட நிகழ்வில் வந்தவர் கபீராக இருக்கமுடியாது என்று கருதுவோர் அவரை வேறொரு மகான் என்று வைத்துக் கொள்ளவும். இந்த நிகழ்வு பல வலைப்பக்கங்களில் காணக்கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வலைப்பக்கம் இங்கே தெலுகு பக்தி டாட்காம்
படித்தேனா இல்லை உளம்
ReplyDeleteஉவர்ந்தேனா ? மெய்
சிலிர்த்தேனா = இல்லை
தெளிந்தேனா ?
படித்தேன். . ஆஷாவின் கானம்
பாடி தேன் குடித்தேன். வானம்
பாடி போல் பறந்தேன். விட்டலே என்
நாடி போல் உணர்ந்தேன்.
அருமை ! அருமை !!!
சுப்பு ரத்தினம்.
நல்வரவு சுப்புரத்தினம் சார்,
ReplyDelete//விட்டலே என்
நாடி போல் உணர்ந்தேன் //
ஜானாபாயும் ஆஷாவும் செய்யும் விந்தைதான் என்னே! நாமஸங்கீர்த்தனத்தின் பெருமையும் என்னே ! தங்களுக்கு பிடித்த்ருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி
ஜனாபாய் சரியான உச்சரிப்பு
ReplyDeleteமனத்தை நெகிழ்விக்கும் சரிதம்; நீங்கள் சொல்லும் விதம் மிக அருமையாக உள்ளது. மூன்றுமுறை பண்டரீபுரம் செல்லும் பேறு வாய்த்தது; பக்திதான் வாய்க்கவில்லை
दळिता कांडिता । तुज गाईन अनंता ॥१॥
न विसंबे क्षणभरी । तुझे नाम ग मुरारी ॥२॥
नित्य हाचि कारभार । मुखी हरि निरंतर ॥३॥
मायबाप बंधुबहिणी । तू बा सखा चक्रपाणी ॥४॥
लक्ष लागले चरणासी । म्हणे नामयाची दासी ॥५॥
தளிதா காண்டிதா , துஜ காயீந அநந்தா |
ந விஸம்பே க்ஷணபரீ, துஜே நாம கா முராரீ |
நித்ய ஹாசி காரபார , முகீ ஹரி நிரந்தர |
மாயபாப பந்துபஹிணீ , தூ பா ஸகா சக்ரபாணீ |
லக்ஷ லகாலே சரணாஸீ, ம்ஹணே நாமயாசீ தாஸீ ||
|| நமாமி க்ருஷ்ண துர்லபம் ||
தேவ்
வருக தேவராஜன் சார்,
ReplyDeleteமுழுப்பாடலையும் கொடுத்து சந்தோஷத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.
ஜனாபாய் என்று உச்சரிக்க வேண்டுமா? சரி, திருத்தியதற்கு மிக்க நன்றி.
//மூன்றுமுறை பண்டரீபுரம் செல்லும் பேறு வாய்த்தது; பக்திதான் வாய்க்கவில்லை //
நீறு பூத்த நெருப்பு போல இருக்கும். எப்போது பற்றிக் கொள்ளுமோ !
ji,
ReplyDeleteanother nama malar in your nama mala.
you going on increasing nama mala.
but every malar - it not able to describe in words.
i am feeling . i am merging .
i am enjoying.
thanks to god and you.
தேவராஜன் சார் esnip வலைப்பக்கத்தில் ‘தளித காண்டித பாடலையும் கண்டுபிடித்து அதன் இணைப்பை அனுப்பி இருக்கிறார்.
ReplyDeleteபாடலைக்கேட்க
நன்றி தேவ் சார்.
வருக பாலுசார்
ReplyDeleteபெரியவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கும் வழிகள் யாவும் மெய்மறக்க வைப்பவை தாம். தங்களுக்கு இடுகை பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி
ஆகவே இறைவன் நாமத்தை செபிக்கும் யாவரும் உயர்குலம் என்று கபீர் சொல்கிறார்.
ReplyDeleteஉண்மையான வார்த்தை.ராமர் மீது பல பாடல்கள் பாடிய தியகராஜரும் கடைசியில் நீ நாம ரூபமுலகு நித்ய ஜெயமங்களம் என்று முடித்தார்.விட்டலனைப் பற்றி என்பதிவு இங்கே http://trc108umablogspotcom.blogspot.com/2010/03/4.html
முடிந்தால் பாருங்கள்
வருக தி.ரா.ச சார்,
ReplyDeleteகண்டு களித்தேன் நரஹரியின் சத்ய தரிசனத்தை. நம் அறியாமையையும் அவன் எவ்வளவு அழகாகப் பயன்படுத்திக் கொள்கிறான் !!
இணைப்பை தந்தமைக்கு மிக்க நன்றி.
//அப்பாடல்கள் பிறந்த சூழ்நிலையே ஜானாபாய் அந்த வேலைகளை செய்யும் போதுதான். அதனால் இயற்கையாக அவை அந்த சூழ்நிலையிலேயே தழைத்து மக்களிடையே பிரபலமாயின.//
ReplyDeleteஇறைவனின் வழிபாடு கூட, 'வழிபாடு' என்று அதற்கான சிறப்பு ஏற்பாடுகளுடன் தனித்துக் கொள்ளாமல் எவ்வளவு இயல்பாக அமைந்து விட்டது பாருங்கள்! பின்பு மனம் ஒன்றிய இந்த வலையில் இறைவன் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பது எப்படி என்று தான் தோன்றுகிறது!
//குருபக்திக்கும் ஜானாபாய் சிறந்ததொரு எடுத்துக் காட்டாய் விளங்கினார். அவருடைய பாடல்களில் நாமயாசி தாஸி (நாமதேவின் அடிமை) என்கிற முத்திரையைக் காணலாம்.//
ReplyDeleteஇதே மாதிரி தமிழ்க் கீர்த்தனைகளிலும் அவற்றை யாத்த வாக்கேயக்காரர்களின் பெயர்கள் மிக்கப் பணிவுடன் பாடல் வரிகளிலேயே வரும்.
பாபநாசம் சிவன் பாடல்களில், 'ராமதாஸன்' என்றும், கோபால கிருஷ்ண பாரதியார் பாடல்களில் 'பாலகிருஷ்ணன்' என்றும், கோடீஸ்வர ஐயர் பாடல்களீல் 'குஞ்சரதாஸன்' என்றும் கண்டு மகிழலாம்.
'போதும், போதும்.... ஜானியின்
ReplyDeleteமுறையிது'
உருக்கமாக ஜானாபாயின் குரல், தீனஸ்வரத்தில் செவிகளில் ஒலிப்பது போலவே இருக்கிறது; கேட்டு மனம் நெகிழ்ந்து கண்கள் கலங்குகின்றன.
மிக அருமையான ஒரு பதிவில் அத்தனையையும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி, கபீரன்ப!
வருக ஜீவி ஐயா,
ReplyDeleteஅனுபவித்து படித்து இருக்கிறீர்கள்.
//இறைவனின் வழிபாடு கூட, 'வழிபாடு' என்று அதற்கான சிறப்பு ஏற்பாடுகளுடன் தனித்துக் கொள்ளாமல் எவ்வளவு இயல்பாக அமைந்து விட்டது பாருங்கள்!//
எல்லாம் அவனே என்கிற பாவம் வரும் போது தனி வழிபாடு என்கிற ஏற்பாடு அர்த்தமற்றது என்பதை குறிப்பிடத்தான் அப்படியெல்லாம் வாழ்ந்து காட்டினார்களோ என்னவோ !
தங்கள் பாராட்டுரைகளுக்கு மிக்க நன்றி