Wednesday, October 13, 2010

கண்ணீரில் வளரும் பிரேமைக் கொடி

மனைவிக்கு மிக நெருங்கியவர் இல்லத்தில் ஒரு விசேஷம். அன்பாக, குடும்பத்தோடு பங்கு கொள்ள அழைத்தும் இருக்கிறார்கள்.

" நீ வேணுமானா போயிட்டு வா. எனக்கு அங்க யாரையும் தெரியாது." இது கணவனின் அணுகுமுறை. நிர்பந்தத்தை அனுசரித்து தனியாக போவதா வேண்டாமா என்று மனைவி முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

சிறிது நாட்கள் கழித்து, கணவரது அதிகாரிக்கு பிரமோஷன் பார்ட்டி. தம்பதி சமேதராய் வர அழைப்பு.

"உங்க பாஸ்... நீங்க போகணும். நானெதுக்கு? நாளைக்கு பேரண்ட்ஸ்-மீட்டிங். பார்ட்டிக்கெல்லாம் வந்தா காலைல வேலையாகாது. என்னால முடியாது ".

"ஆமா பப்லுவோட ப்ளே-ஹோம் பேரண்ட்ஸ் மீட்டிங் தான் ரொம்ப இம்பார்டண்ட்-டாக்கும் ! எல்லாம் வெறும் சாக்கு" சீறினான் கணவன்.

"அன்னிக்கி நீங்க மட்டும் நித்யா வீட்டுல கூப்பிட்ட போது வந்தீங்களா? எனக்கும் உங்க ஆபீஸ்காரங்க யாரையும் தெரியாது. அங்க வந்து சும்மா வெத்து சிரிப்பு சிரிச்சுகிட்டு பொழுது போக்க முடியாது " என்பது மனைவியின் தீர்மானமான பதில்.

உண்மையில் இருவரும் இரண்டு சந்தர்பங்களிலும் 'தம்மை' முன் வைக்காது வாழ்க்கைத் துணையின் சந்தோஷத்திற்காக செயற்பட்டிருந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகி இருக்கும். ஆனால் இங்கே அன்பு வளர வேண்டிய தருணங்கள் அன்பு உடைவதற்கு காரணமாகி விடுகின்றன.

இப்படியான எண்ணங்கள் கணவன் மனைவி என்று மட்டுமல்லாமல் சகோதர சகோதரியரிடையே, பெற்ற தாய் தந்தையரிடையே நீயா நானா என்னும் ஏட்டிக்கு போட்டியாய் நிதானமாக வேர்விட்டு, அன்பெனும் மாளிகையின் அஸ்திவாரத்தை விரிசல் அடையச் செய்கிறது.

மனிதர் மனம் தனக்கு முக்கியத்துவம் இல்லாத இடங்களுக்கு போவதற்கு விரும்புவதில்லை. நாம் சந்திக்கப் போகும் தருணங்கள் நம்முடைய சுய கௌரவத்திற்கு முக்கியத்துவம் தராது என்று நினைத்தால் அதை தவிர்க்கவே விரும்புகிறோம். சுயகௌரவம் என்ற பெயரின் பின்னால் ஒளிந்து கொள்ளும் இந்த கர்வம் அல்லது ஆணவமே ஆன்மீக முன்னேற்றத்தை தடுக்கும் பெரிய திரை ஆகும்.

அதனால்தான் கபீர்தாஸர் ’அன்பெனும் மாளிகைக்குள் வரவேண்டுமானால் உன்னுடைய சுயகௌரவத்தை விட்டு வா’ என்று அறிவுறுத்துகிறார். இறைவனிடத்து வைக்கும் தீவிர அன்பு பக்தியாகிறது. அங்கே கர்வம் என்பதற்கு இடமே இல்லை.

कबीर यह घर प्रेम का, खाला का घर नाहीं ।
सीस उतारे हाथि करि, सो पैसे घर माहीं ॥


பக்தர்தம் இல்லமிது, கபீரா, அத்தையின் இல்லம் போலவன்று
பக்திக்கு சிரம்தாழ்ந்து பணிந்திடு, பக்தருக்கே உண்டு யிடமிங்கு


மாமியார் வீட்டுக்கு மருமகன் வருகிறாரென்றால் பலத்த வரவேற்பு உபசாரம் எல்லாம் இருக்கும். எல்லா மனிதருக்கும் தம்மை பாராட்டி சீராட்டினால் மனதுக்கு உவகை அளிக்கும். அது வெறும் அற்ப மகிழ்ச்சி. அது இறைபக்தி தரும் மகிழ்ச்சிக்கு ஈடாக முடியாது. இறைபக்தி வேண்டுமானால் யானையை பழக்குவது போல மனதையும் பழக்க வேண்டும்.

எந்த சாதனைக்கும் உழைப்பு வேண்டும். பக்திக்குத் தேவை மன ஒருமை. அதுவும் ஒரு உழைப்புதான். அதற்கும் கஷ்டப்பட வேண்டும். இறைவன் நாமத்தை சொல்லிச் சொல்லி மனமாசுகளை கழுவ வேண்டும். தானெனும் இறுமாப்பை ஒழிக்க வேண்டும். இவை யாவும் மன உழைப்பில்லாமல் கூடுவது சாத்தியமல்ல. இது மாமியார் வீட்டிற்கு போவது போன்ற சுலபமான செயல் அல்ல என்று கபீர் வேடிக்கையாக சொல்லியிருக்கிறார்.

மனதைப் பழக்குவதற்கு அதில் தேர்ந்த அடியவர்களுடன் சத்சங்கம் கொள்ள வேண்டும். அவர்களிடையே ஏழை பணக்காரர் இல்லை. மேற்சாதி-கீழ்சாதி, அரசன்-ஆண்டி போன்ற வேறுபாடுகள் போன்ற எதுவும் இருக்காது. இணக்கமாக அவர்களுடன் பழகி அவர்களின் சேவையில் ஈடுபட்டால் சமபாவனையுடன் யாவரையும் கண்டு பழகும் திறமை கைகூடும். அப்படி கிருஷ்ணரின் பக்தியில் தோய்ந்திருந்த மீராவை "தான்" என்கிற மனப்பான்மை அண்ட முடியவில்லை. அதை எப்படி துறந்து விட்டார் என்பதை அவர் பாடல் ஒன்றில் காணலாம்.

அவருள் கிருஷ்ணனுக்கான பக்தி ஏற்படுத்திய மாற்றங்கள்தான் எத்தனை எத்தனை ?

मेरे तो गिरधर गोपाल दूसरो न कोई ॥
கிரிதர கோபாலனன்றி வேறொருவர் என் பதி ஆகார்
जाके सिर मोर मुकुट मेरो पति सोई ।
மணிமுடியும் பீலியும் சிரந்தரித்த அவனே பதி
अंसुवन जल सीचि सीचि प्रेम बेलि बोई ।
கண்ணீரால் பிரேமையெனும் கொடி வளர்த்தேன்
अब तो बेल फैल गई आणंद फल होई ॥
கொடி படர்ந்து பரப்புது ஆனந்தம் இப்போது

तात मात भ्रात बंधु आपनो न कोई ॥
தாய் தந்தை, சோதரன், பந்து என என்னவர் இல்லை எவரும்
छांडि दई कुलकी कानि कहा करिहै कोई ।
குலப் பெருமை விட்டொழித்தேன், யார் என்ன(கேடு)செய்வர் ?
संतन ढिग बैठि बैठि लोकलाज खोई ॥
அடியாரோடு அமர்வேன் நாணம் ஏதுமில்லை யெனக்கு
चुनरी के किये टूक ओढ लीन्ही लोई ।
முக்காடு விலக்கினேன் முரட்டாடை தரித்தேன்
मोती मूंगे उतार बनमाला पोई ॥
முத்துச்சரத்தை விட்டு வனப்பூச்சரம் அணிந்தேன்
दूध की मथनियां बडे प्रेम से बिलोई ।
அதி பிரேமையுடன் கடைந்தேன் பாலை
माखन जब काढ़ि लियो छाछ पिये कोई ॥
வெண்ணெய் கிடைத்த பின் கடை-நீர் அருந்துவர் யாரோ?
भगति देखि राजी हुई जगत देखि रोई ।
பக்தரைக் கண்டு எனக்கு பேருவகை, உலகோரைக் காணப் பெருகுது கண்ணீர்
दासी मीरा लाल गिरधर तारो अब मोही

அடிமை மீரா வேண்டினள் கிரிதரா, கடைத்தேற்று என்னையே

[பண்டிட் ரவிஷங்கர் இசையமைப்பில் வாணி ஜெயராம் அவர்களின் மதுரமான குரலில் இந்த பாடலை கேளுங்கள்].

mere_tho_giridhar....


மீரா பல தேசங்களையும் சுற்றி துவாரகையை அடைந்தார். ராணாவின் அரசாட்சி பல சோதனைகளுக்கு உள்ளாகியது. பஞ்சம் தலைவிரித்தாடியது. மீராவிற்கு இழைத்த துரோகமே காரணம் என்று கருதி மன்னிப்புக் கேட்டு மீண்டும் தன் ராஜ்ஜியத்திற்கு வந்து விடும்படி தானே சென்று வேண்டிக் கொண்டான். அழைப்பை மறுத்து விடுகிறார் மீரா. காலமெல்லாம் கண்ணனின் நினைவிலேயே அவள் காலம் கழிக்க முடிவு செய்து விட்டாள்.

जो तुम तोडो पियो मैं नही तोडू।
நீ கைவிட்டாலும் அன்பே ! நான் உன்னை விடமாட்டேன்
तोसु प्रीत तोडी कृष्ण कोन संग जोडू
உன் அன்பை விட்டு கிருஷ்ணா வேறு யாரிடம் செல்வேன் ?
तुम भये तरुवर मैं भई पखिया।
மரங்களானால் நீ, பறவையாவேன் நான்
तुम भये सरोवर मैं तोरी मछिया॥ जो०
சரோவரம் ஆனால் நீ, மீனாவேன் நான்
तुम भये गिरिवर मैं भई चारा।
மலையானால் நீ, நான் புல்லாவேன் .
तुम भये चंद्रा मैं भये चकोरा॥ जो० (ஜோ தும்)
நிலவானால் நீ நான் சகோரம் ஆவேன்
तुम भये मोती प्रभु हम भये धागा।
முத்து ஆனால் நீ, கோர்க்கும் சரடாவேன்
तुम भये सोना हम भये स्वागा॥ जो०
தங்கம் நீயானாய், நகையாவேன் நான் (ஜோ தும்)
मीरा कहे प्रभु ब्रजके बाशी।
மீராவின் முறை கேளாய், விரஜ்(தேச) வாசியே
तुम मेरे ठाकोर मैं तेरी दासी॥ जो०॥
நீ எனது தலைவன் நான் உன் அடிமை

இந்த பாடலையும் வாணிஜெயராமின் குரலில் கேளுங்கள். ஒலிநாடா மூலம் இந்தப் பாடலைக் கேட்டுக்கேட்டு நாடாவே தேய்ந்து விட்டது !:))
Get this widget | Track details | eSnips Social DNA


ஏமாற்றத்துடன் திரும்பிய ராணா சில பக்தர்களை அழைத்து எப்படியாவது மீராவை மீண்டும் சித்தோர் ராஜ்யத்திற்கு அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டான். அவர்களும் துவாரகையை அடந்து அவரது சத்சங்கத்தில் பங்கேற்று சில நாட்கள் அங்கேயே தங்கி தமது விண்ணப்பத்தை அவரிடம் வைத்தனர். மீராவின் முடிவில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. பெரும் ஏமாற்றமடைந்த அவர்கள் கடைசி முயற்சியாக “ தாங்கள் ஊர் திரும்பாவிடில் நாங்கள் இங்கேயே உயிர் துறப்போம்” என்று சொல்லி அவரை சம்மதிக்கச் செய்ய முயன்றனர். மிகவும் தர்மசங்கடமாயிற்று மீராவுக்கு. ’தன்னால் அடியவர்களுக்கு துன்பம் ஏற்படுவதா? ’

”நாளை காலை வரை பொறுத்துக் கொள்ளுங்கள் “ என்று அவர்களை வேண்டிக் கொண்டார். அவர்களும் இரவை சந்தோஷமாகக் கழித்தனர். ஆனால் மறுநாள் காலையில் மீரா எங்கும் காணப்படவில்லை. துவாரகநாதர் கோவிலைத் திறந்தால் அங்கே கிருஷ்ணனின் விக்கிரகத்தின் மீது மீராவின் ஆடையின் ஒரு பகுதி காணப்பட்டது. கண்ணனை நினைந்து நினைந்து அவனுடனேயே இரண்டறக் கலந்து விட்டார் என்பதை அந்த துண்டு வஸ்திரம் சூசகமாகத் தெரிவித்தது போலும்.

மீராவின் பக்தி மிக அசாதாரணமானது. ஆண்கள் அதிகாரம் மண்டியிருக்கும் ஒரு கலாசாரத்தில் தனியாகப் போராடி தன் பிரிய தெய்வமான கிருஷ்ணனுடன் அவள் இணைந்த பக்தி எவ்வளவு நூற்றாண்டுகள் ஆயினும் பக்தர்களுக்கு நம்பிக்கை விளக்காகும். அதனை கபீர்தாஸ் அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்

भक्ति महल बहु ऊंच है , दूरहि ते दरशाय ।
जो कोई जन भक्ति करे, शोभा बरनि न जाय ॥


வெகு உயரம் பக்தியெனும் கோபுரம், வெகுதூரத்திலும் தரிசனம் தருமே
வெகுவாய் பக்தியில் திளைப்போர்க்கு, அகலாது அது தரும் விம்மிதமே
(விம்மிதம் = Admiration, அதிசயம் )

உயரமான கோபுரத்தை மீராவின் அளவற்ற பக்தி என்று வைத்துக்கொண்டால், தூரத்து காட்சி என்பதை நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் அவர் புகழ் என்கிற காட்சியாகக் கொள்ளலாம். மனதில் பக்தி நிறைந்தவர்களுக்கு அவருடைய பக்தி இன்றும் விம்மிதம் தருவதை எவரும் மறுக்க முடியாது.


மீராபாய் மந்திர் : நன்றி indianetzone.com

மீராவைப் பற்றி அறிந்து கொள்ள சில நல்ல வலைத்தளங்கள்.
http://miramadhurya.vndv.com/
http://www.chittorgarh.com/
http://www.freeindia.org/biographies/greatdevotees/mirabai/page4.htm

---------------------------------------------------------------------------

என் கணக்கிற்கு இது நூறாவது பதிவு. இடையே ஒரு பதிவு தேன்கூடு திரட்டி தொடங்கிய கல்யாண் அவர்களின் மறைவிற்காக அஞ்சலி இடுகையாக -கட்டுரை வடிவில்லாமல் -வெளியிடப்பட்டது. அதனால் கூகிள் கணக்கிற்கும் எனக்கும் சற்று வேறுபாடு :)

அறிவிப்பு :
கபீர் வலைப்பூவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பின்னூட்டங்களை -அவர்களே களைத்து போகும் அளவுக்கு- இட்டு உற்சாகமூட்டி வந்த சில
பெரும் வலைப்பதிவு ஆசிரியர்களுக்கு எப்படி கைம்மாறு செய்யமுடியும் என்று யோசித்திருந்தேன்.

பெரும்பான்மையான வாசகர்கள் ரீடரிலோ நேரடி அஞ்சலிலோ படித்து விடுவதால் பல பின்னூட்டங்களில் கிடைக்கும் நல்ல கருத்தாடல்களை தவற விடுகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

அதனால், ஏன் அவர்களைக் கொண்டே சில கட்டுரைகளை இடச்செய்து சிறப்பு விருந்தினர் இடுகைகளை அளிக்கக் கூடாது எனத் தோன்றியது.

நேரடி இடுகையாக -சிறப்புப் பதிவாக -வரும்போது அவர்களின் எண்ண ஓட்டங்கள் ஒரு முழுப்பதிவாக எல்லோராலும் படிக்கப் பெறும். அவர்கள் தத்தம் பாணியிலே மிகச் சிறந்த எழுத்தாளர்கள் என்பதையும் வாசகர்கள் அறிவர்.

ஒரு சிலரிடம் தொடர்பு கொண்ட போது மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்து இவ்வலைப்பூவை பெருமைபடுத்தி உயர்த்த முன் வந்துள்ளனர். இன்னும் சிலரோடு தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது.

கட்டுரைகளின் மையக்கருத்து கபீரின் கருத்துகளாகவே இருக்கும்.

பல அன்பான வாசகர்கள் தனிமடலில் எழுதியும் தொலைபேசி மூலமும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். அவர்களும் எழுத முன்வந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். விவரங்கள் உதவி வேண்டினால் தனி மடலில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

கபீருடனும் பிற மகாத்மாக்களுடனுமான நமது பயணம் அவர்களின் அருளால் இனிதாக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன். நன்றி



16 comments:

  1. மீராவைப் போல பக்தி வேண்டும். எனக்கும்.

    நூறாவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் கபீரன்பன் ஐயா.

    ReplyDelete
  2. எந்த சாதனைக்கும் உழைப்பு வேண்டும். பக்திக்குத் தேவை மன ஒருமை. அதுவும் ஒரு உழைப்புதான். அதற்கும் கஷ்டப்பட வேண்டும். இறைவன் நாமத்தை சொல்லிச் சொல்லி மனமாசுகளை கழுவ வேண்டும். தானெனும் இறுமாப்பை ஒழிக்க வேண்டும்

    உண்மை உண்மை உண்மையைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. நூறு பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.நல்ல விஷ்யங்களை அறிவது கடினம் அதைவிட கடினம் நல்ல விஷ்யங்களை எல்லோருக்கும் அதை எடுத்துச் சொல்வது.மிக மிக கடினமான காரியம் அதை எல்லோரும் படிப்பது. இந்த மூன்று விஷயங்களிலும் வெற்றி பெற்றவர் நீங்கள். வாழ்க வளமுடன்! எழுதுக சிறப்புடன்!

    ReplyDelete
  3. சித்தோடில் மீராவின் கோயிலைப் பார்த்தோம். அதே போல் உதயபூரில் மீராவின் பாடல்கள் எழுதி வைத்த சுவடிகளையும் தொட்டுத் தடவிப் பார்த்துப் படிக்கக் கிடைத்தது. நூறாவது பதிவுக்கு நன்றி.

    ஒவ்வொரு முத்தும் விலை மதிக்கமுடியா நல்முத்து. கொற்கை முத்து! நல்ல தங்கச் சரடாகப் பார்த்துக் கோர்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நல்வரவு கவிநயா,

    //மீராவைப் போல பக்தி வேண்டும்.///
    அன்னையின் அருள் நிரம்ப இருக்கும் தங்களுக்கு பக்தியும் இல்லாமலா போய்விடும். நவராத்திரி நல்வாழ்த்துகள்.

    தங்களுடைய வாழ்த்துகளுக்கும் நன்றி

    ReplyDelete
  5. வருக தி.ரா.ச சார்,

    உங்களுடைய அன்றைய ஆசிகள்தானே இந்த வலைப்பூவை இவ்வளவு காலம் நடத்தி வந்தது!

    தங்களுடைய ஆசிகளுக்கு மிக்க நன்றி

    இன்று ரீசார்ஜ் செய்து விட்டீர்கள்.:)

    ReplyDelete
  6. வாருங்கள் கீதா மேடம்,

    கணிணி இணைப்புகள் எல்லாம் கொஞ்சம் பரவாயில்லையா ?

    ///...நல்ல தங்கச் சரடாகப் பார்த்துக் கோர்த்துக்கொள்ளுங்கள்////

    தங்கம் விலை ரொம்ப ஏறிடுச்சாமே! இப்படி உங்களுடைய ஆசீர்வாதத்திலேயாவது தங்கத்தை நெனச்சுப் பார்ப்போம். ஆசிகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  7. கபீரன்பருக்கு நான் சொன்னதன் அர்த்தம் புரியலையா??? ஆச்சரியமே! நான் சொன்னது உங்கள் பதிவுகளைப் பற்றிய விமரிசனம்+விளக்கம் கொடுக்க நீங்கள் அழைக்கும் நபர்களும் உங்கள் முத்தான பதிவுகளைக் கோர்த்துக்கொடுக்கும் தங்கச் சரடாகச் செயல்படுபவர்களாக அமையவேண்டும் என்ற கருத்தில் சொன்னேன். :))))))))))

    ReplyDelete
  8. ///நான் சொன்னது உங்கள் பதிவுகளைப் பற்றிய விமரிசனம்+விளக்கம் கொடுக்க நீங்கள் அழைக்கும் நபர்களும் ...//

    ஹி ஹி... மேடம் நான் சொன்னதை நீங்க புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறேன்.

    சிறப்பு பதிவு ஆசிரியர்கள் பழைய பதிவுகள் எதையும் விமரிசனம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்த்து அழைக்கப்படவில்லை.

    அவர்கள் கேட்ட படித்த கபீரின் வாழ்க்கைப் பற்றிய கதையோ அல்லது வேறு மகான்களின் கருத்துகள் அல்லது கதைகளில் கபீரின் கருத்துகள் எப்படி பொருந்தி வருகின்றன என்பதையோ விரிவாக எழுதலாம். ஆகவே முத்து மாலையின் நடுநடுவே அவைகள் ரத்தினங்களாக ஒளிவீசப் போகின்றன.

    என்ன சரியா? :))

    ReplyDelete
  9. congrats and good move .

    I welcome it.

    but you still not giving all old in one pdf file

    ReplyDelete
  10. //நீங்கள் அழைக்கும் நபர்களும் உங்கள் முத்தான பதிவுகளைக் கோர்த்துக்கொடுக்கும் தங்கச் சரடாகச் செயல்படுபவர்களாக அமையவேண்டும் //

    முதல் முறையாகத் திருமதி கீதா சாம்பசிவம் சொல்லியிருக்கும் கருத்து சரியானதே என்று தான் எனக்கும் தோன்றுகிறது! உதாரணத்துக்கு, என்னையே எடுத்துக் கொண்டால், முத்தைக் கோர்த்து வைக்கும் ஒரு தங்கச் சரடாக இருக்க முடியுமா என்பது சந்தேகமே.

    ReplyDelete
  11. நல்வரவு பாலு சார்,

    பாராட்டுக்கு நன்றி.

    //but you still not giving all old in one pdf file..//

    இரண்டாம் பகுதியைத் தொகுக்கக் கூடிய விரைவில் முயற்சிக்கிறேன்.
    தங்களின் ஆர்வத்திற்கு நன்றி.

    ReplyDelete
  12. @கிருஷ்ணமூர்த்தி சார், வேறே வழியில்லாமல் நானும் ஒத்துப் போறேன் உங்களோட! :))))))))))))

    நீங்க சொல்றாப்போல் அந்தத் தங்கச் சரடாய் நானும் இருக்க முடியாது என்பதே என் தாழ்மையான கருத்தும் கூட. கபீரன்பர் ஆலோசிக்கவேண்டும். நன்றி. :))))))))))

    ReplyDelete
  13. மீரா மாதா திருவடிகளே சரணம்.
    http://kannansongs.blogspot.com/search/label/Meera

    ReplyDelete
  14. வாருங்கள் ராதா,

    மீராவின் பாடல் தொகுப்புக்கு இணைப்பு கொடுத்ததற்கு நன்றி. அவருடைய அருளால் எங்கும் பக்தி பெருகட்டும்.

    மிக்க நன்றி

    ReplyDelete
  15. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    வாணிஜெயராம் மதுரமான குரலில் இரண்டு பாடல்களும் அருமை,இனிமை,இனிமை.நன்றி.

    //கபீருடனும் பிற மகாத்மாக்களுடனுமான நமது பயணம் அவர்களின் அருளால் இனிதாக இருக்கட்டும் என்று பிராத்திக்கிறேன்.//

    நாங்களும் உங்களுடன் பிராத்திக்கிறோம்.

    ReplyDelete
  16. வருக கோமதி மேடம்,

    ரசித்துப் படித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.

    பிரார்த்தனைக்கும் நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி