Tuesday, February 22, 2011

பளிங்கு மண்டபத்தில் நாய்

’ஏமாறுபவன் இருக்கிற வரையில் ஏமாற்றுபவனும் இருப்பான்’ இது நடைமுறைத் தத்துவம்.

பழைய திரைப்படங்களில் கிராமத்திலிருந்து முதன்முதலாக நகரத்திற்கு வரும் அப்பாவி கதாபாத்திரங்கள் முதலில் சந்திப்பதே இந்த ஏமாற்றுகாரர்களைத்தான். ஏதாவது ஒரு காரணத்தால் தம் உடமையெல்லாம் அவர்களிடம் இழந்து துன்பத்தில் சிக்கிக் கொள்வதாக கதை நகரும். ஏமாற்றப்படுவதில்தான் எத்தனை முறைகள் !

வீதியிலே நாட்டியமாடும் சிலர் தம் ஆட்டத்தாலும் பேச்சாலும் பார்வையாளர்கள் கவனத்தைத் திருப்பி வைக்கும் போது அவர்களுடைய கும்பலை சேர்ந்த ஒருவன் அசந்திருப்பவர்களின் பைகளையும் பிற உடமைகளையும் பின்பக்கத்திலிருந்து சுருட்டிக் கொண்டு ஓடிவிடுவான். பின்னர் லபோ திபோ என்று கூட்டத்தினர் ஆளுக்கொரு பக்கம் திருடனைத் தேடிக் கொண்டு ஓடுவார்கள்.

இதே வேடிக்கையைத்தான் மாயா மோகினியும் செய்து வருகிறாள். அவள் மோகினியாம், கபீர் சொல்கிறார். நம்முடைய கவனத்தையெல்லாம் உலகின் பல்வேறு கவர்ச்சிகள் பக்கம் திருப்பி உண்மையில் நம் உள்ளே உறைகின்ற இறைசக்தியை அறிவதற்கான ஆர்வத்தை கவர்ந்து விடுகிறாள். நமது ஆயுளெல்லாம் ஒவ்வொரு பிறவியிலும் இப்படியே போய்க் கொண்டிருந்தால் அவளை விட பெரிய சாகசக்காரி யார் இருக்க முடியும்?

कबीर माया मोहिनी, भई अंधियारी लोय ।
जो सोये सो मुसि गये, रहे वस्तु को रोय ॥


இருளதும் கவ்வுதே கபீரா, மாயா மோகினி் சாலம் பார்
இருளில் உறங்கி இழப்பார், அருநிதி போனதாய் அழுவார்


(இருள் =அஞ்ஞானம் ; இருளில் உறங்கி = அஞ்ஞானத்தில் மயங்கி)

மாற்று :
மருளாய் பிடிக்குது கபீரா, மாயா மோகினியவள் ஆட்டம்
பெருநிதி போச்சுது தியங்கி, என்னே அவர்தம் திண்டாட்டம்


மாயையின் கவர்ச்சியில் மனம் வசப்பட்டு ஆத்மனின் உண்மை நிலையை மறந்து நிற்பதும் ஒரு வித உறக்கமே! எப்போதாவது பெரும் சான்றோர்கள் நமக்கு காலம் விரயமாகிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை சொல்லும் போது,அந்த நிஜத்தை நம் செய்கைகளின் பின்ணணியில் பார்த்து எவ்வளவு சத்தியம் அது என்று பு்ரிந்து கொள்ளும் போது மனம் அதை நினைத்து வருத்தப்படுகிறது. ஆத்மாவைத் தொலைக்கமுடியாது. ஏனெனில் நம் ஓட்டத்திற்கே அதுதானே ஆதாரம். அப்போது அந்த பெருநிதி என்ன? குருஅருளால் கிடைக்கக் கூடிய சச்சிதானந்த அனுபவமாகத் தானே இருக்கமுடியும்?

அந்த பெருநிதியை அகண்டரஸம் என்று ஆவுடையக்காள் குறிப்பிடுகிறார். அதனோடு மாயையின் சாகச நாட்டியத்தைப் பற்றியும் ஆவுடையக்காள் ஒரு அழகான கீர்த்தனையாகப் பாடியிருக்கிறார்.

ராகம் :ஸஹானா
பல்லவி
அதிக சாமர்த்தியம் மாயை உந்தன்
வெகு வித நாட்டியம்
அனுபல்லவி
அகில பிரபஞ்சமாய் ஆனதும் போராமல் அகண்ட ரஸம் தன்னை மறைத்தாய் தெரிய வொட்டாமல்
சரணம்
ஸ்படிக மண்டபத்தில் சுவானம் தன்னைத் தவிர கண்ட விடத்தில் சாடி ஓடிக் கொண்டு கூடிக் குலைக்கும் போல்
நானா விகல்பித நாய் போல் அலைய வைத்தாய் (அதிக)

சுவரில்லா சித்திரம் போல் உந்தன் ஸ்வரூபம் அஸத்தியம்
ஜரையில்லை நரையில்லை ஜனன மரணமில்லை
கரையில்லை உன்னுடைய காரிய விசித்திரங்கள் (அதிக)

ஸஹஸ்ரத்தில் ஒருத்தன் உன்னையும் பார்க்க ஸாமர்த்திய கர்த்தன்
ஸர்வமும் பிரம்மமாய் தான் தானே ஸர்வமாய்

ஸ்வாமி வெங்கடேசுவரர் குரு கிருபையினாலே (அதிக)

(அகண்ட ரஸம் மறைத்தல் = ஆத்மானுபவத்தை அறிய விடாமல் செய்வது)

நமக்கு மூப்பு உண்டு, நரையுண்டு ஜனன மரணமுண்டு. ஆனால் அந்த மாயக்காரிக்கு இவையெதுவும் கிடையாது. அவளுடைய விசித்திரமான போக்குக்கு எல்லையும் கிடையாது. அதற்கு அவர் சொல்லும் உதாரணமும் வெகு பொருத்தம்.

கண்ணாடி மண்டபத்தில் புகுந்த நாயைப் போன்றதாம் நம் நிலைமை. தன்னைச் சுற்றிலும் காணப்படும் நாய்களெல்லாம் தன் பிரதிபிம்பம் என்று அறியாது மதி மயங்கி பல வேறு நாய்கள் என்றெண்ணி சுற்றிச் சுற்றி குலைக்கும் நாயைப் போலவே மாயை நம்மை அலைகழிக்கிறது. பரமாத்மத்தில் ஒன்றுபட்டிருக்கும் நாம் மாயையினால் பிரதி பிம்பங்களாகக் கண்டு நமக்குள் வேற்றுமை பாராட்டுகிறோம். சண்டை போட்டுக் கொள்கிறோம், நிம்மதியை இழக்கிறோம்.என்ன ஒரு அழகான உதாரணம்!

ஆத்மனை அறிந்து கொண்ட பிறகு சர்வமும் பிரம்மமே. காணப்படும் யாவையும் அதன் பிம்பங்களே. அது பிடிபடாமல் போவதால்தான் உதாரணத்தில் குறிப்பிடப்பட்ட நாயைப் போலவே அலைகிறோம்.

ஒருமுறை ரமணரிடம் சாப்பிடும் போது சுப்புலக்ஷ்மியம்மாள் “ காரமானவற்றைத்தான் பகவான் எதுவும் போட்டுக் கொள்வதில்லை.கூட்டு உரப்பில்லாமல் இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாமே” என்று மெதுவாகச் சொன்னார்.

அதைக் கேட்ட பகவான் “அதான் போட்டிருக்கிறாயே! போதுமே! இந்த ஒரு வாயால் சாப்பிட்டால்தான் சாப்பிட்டதாகுமா? இத்தனை வாயால் சாப்பிடுகிறேனே! அது திருப்தியாகாதா? “ என்று சகஜமாகக் கேட்டார்.

அவர் எப்போதும் இலையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளைத் தனித்தனியாக ருசிக்காமல் எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டி பிசைந்து உண்பதே வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் தனிப்பட்ட வகை பற்றிய ருசி அறியமாட்டார். யாராவது குறிப்பிட்டுக் கேட்ட போது
“....எனக்கு ஒன்றிலே தான் ருசி. இவர்களுக்கு பின்னத்தில்தான் ருசி. என்ன செய்வது? அவரவர்கள் ருசிக்குத் தகுந்த மாதிரி தானே சாப்பாடு அமையும் “ என்று பெரிய தத்துவத்தை மிக எளிய முறையில் அன்பர்களுக்கு உணர்த்தி விட்டார்.

இதிலிருந்து பகவான் ரமணர் ஏகாத்ம சொரூபானுபவத்திலேயே திளைத்திருந்தார் என்பது புலனாகிறது. ஆத்மாவை தன்னில் உணர்ந்த பின்னர் தன்னைச் சுற்றி அமர்ந்து உணவு உண்ணும் ஒவ்வொருவரும் அதே ஆத்மாவின் பிம்பங்களே என்ற உண்மை அவருள் மிளிர்ந்ததால் அவர் பளிங்கு மண்டபத்தின் மாயைக்கு அப்பாற்பட்டவராய் ஆகிவிட்டிருந்தார்.

அக்காள் தம் குரு ஸ்ரீதர வெங்கடேசுவரரை மேற்கண்ட பாடலில் புகழ்வது போலவே, ரமணரும் ‘ஸஹஸ்ரத்தில் ஒருத்தர், சாமர்த்திய கர்த்தர்; ஸர்வமும் பிரம்மமாய் தானே ஸர்வமாய்” திகழ்ந்த ஞானி. அக்காளைப் போலவே கபீரும் இம்மாதிரி சாமர்த்தியசாலிகள் போற்றப் படவேண்டியவர்கள் என்று இன்னொரு ஈரடியில் சொல்கிறார்.

माया तो ठगनी भई, ठगत फिरै सब देस ।
जा ठग ने ठगनी ठगी, ता ठग को आदेस ॥


ஏய்ப்பதே தொழிலாம் மாயைக்கு, ஏய்த்துத் திரிவாள் சகமெலாம்
ஏய்ப்பவளை ஏய்ப்பவர் வந்தால், ஏய்ப்பவரை ஏற்றிப் போற்றலாம்


அந்த சாமர்த்தியசாலியை உறுதியாகப் பற்றிக் கொண்டால் அவன் நம்மையும் உடனழைத்து செல்லுவான்.

हम तो बचिगे साहब दया से शब्द डोर गहि उतरे पार ।
कहत कबीर सुनो भाई साधो इस
ठगनी से रहो हुसियार ।


”குருவின் உபதேச மந்திரத்தைப் பிடித்துக் கொண்டு நாங்கள் பிழைத்துக் கொண்டோம்; கபீர் சொல்கிறான், சாதுக்களே! கவனமாயிருங்கள் அந்த கள்ளியிடம்“ என்று கபீர் இன்னொரு பாடலிலும் மாயையைப் பற்றி எச்சரிக்கிறார்.

மாயையின் பிடியிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் குருவின் அருள் நாடி அவரை கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு கிளிக்கண்ணியாக ஆவுடையக்காளும் பாடுகிறார்.

எத்தனையோ கோடி ஜென்மம் எடுத்தேன் கணக்கில்லாமல்
போதமிழந்து விட்டேன்
கிளியே, புத்தி மயக்கத்தினால

போதம் தெளிவேனோடி போக்குவரத்தை விட்டுத்
தேறித் தெளிவேனோடி கிளியே

பரப்பிரம்ம வஸ்துவன்றோ பரமகுரு கிருபையால்
பற்றிப் பிடிப்போமடி கிளியே இப்பவமும் துலையுமடி

எட்டாத கொப்பு அடியோ என்னால் முடியுமோடி
தட்டிப் பறிக்க என்றால் கிளியே ஸாதுக்கள் வேணுமடி

ஆதி அந்தமற்ற ஆசாரியார் கிருபையினாலே
எட்டிப் பறிப்போமடி கிளியே, எல்லோரும் புஜிப்போமடி

பற்றிப் பறிப்போமடி கிளியே பிரம்ம ரஸத்தை
எல்லோரும் புஜிப்போமடி கிளியே, எல்லோரும் புஜிப்போமடி


( போதம் = ஞானம்; போக்குவரத்தை விட்டு = பிறப்பு இறப்பு இல்லாமல்; எட்டாத கொப்பு= உயரமான மரக்கிளை; இப்பவம் துலையுமடி = பிறவிப்பிணியை தொலைத்தல் )

’வாருங்கள் யாவரும் இங்கே பெருநிதியாம் பிரம்மரஸம் நாமெல்லாம் புசிக்கவென்றே காத்திருக்கிறது’ என்று கபீரும் அக்காளும் எவ்வளவு கூவிய போதும் நம் காதுகளில் விழுவதே இல்லையே !! மாயையின் இருளில் உறங்கிக் கிடக்கும் நமக்கு விழிப்பே வராதா :(

(குறிப்பு : நீளம் கருதி ஆவுடையக்காளின் பாடல்களில்- பொருள் சிதையா வண்ணம் -சில பகுதிகளையே சுட்டிக் காட்டி இருக்கிறேன். முழுப்பாடல்கள் கொடுக்கப்படவில்லை. இவைகள் ஞானானந்த நிகேதன், தபோவனம் அவர்களால் பிரசுரிக்கப்பட்ட ‘செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் -பாடல் திரட்டு’ என்ற புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ( www.gnanananda-niketan.org)

18 comments:

yrskbalu said...

good example - dog vs mirror.

lot of people who nearer to last lap, they also not intersted to came out of mirror.

some people trusted but dont know how to came out.

some people strongly holding bakthi only and they will bother about brahman.

so what to do for these people?

why because we must move with peoples in our routine life

கோமதி அரசு said...

’வாருங்கள் யாவரும் இங்கே பெருநிதியாம் பிரம்மரஸம் நாமெல்லாம் புசிக்கவென்றே காத்திருக்கிறது’ என்று கபீரும் அக்காளும் எவ்வளவு கூவிய போதும் நம் காதுகளில் விழுவதே இல்லையே !! மாயையின் இருளில் உறங்கிக் கிடக்கும் நமக்கு விழிப்பே வராதா :(//

விழிப்பு வருகிறதே கபீரன்பன் அவர்களால்.

மாயை அகலவும் பெருநிதியாம் பிரம்மரஸத்தை நாமெல்லாம் புசிக்கவும் அவனேயே வேண்டுவோம்.

கோமதி அரசு said...

//அந்த சாமர்த்தியசாலியை உறுதியாகப் பற்றிக் கொண்டால் அவன் நம்மையும் உடனழைத்து செல்லுவான்.//

உண்மை ! சாமர்த்தியசாலியை பற்றிக்கொள்வோம் உறுதியாய் அப்புறம் நமக்கு ஏது கவலை அவன் பாடு.

கோமதி அரசு said...

//ஸ்படிக மண்டபத்தில் சுவானம் தன்னைத் தவிர கண்ட விடத்தில் சாடி ஓடிக் கொண்டு கூடிக் குலைக்கும் போல்
நானா விகல்பித நாய் போல் அலைய /வைத்தாய் (அதிக)//

நல்லா இருக்கு பாடல்.

கபீரன்பன், ஆவுடையக்காள் பாடல்களை நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள். படிக்க ஆவலாய் உள்ளது.
கருத்துக்கள் எளிமையாக இருக்கிறது.
உங்களுக்கு நன்றிகள்.

sury said...

//“....எனக்கு ஒன்றிலே தான் ருசி. இவர்களுக்கு பின்னத்தில்தான் ருசி. //

ஒன்றவன் ஒளியோ வெள்ளை தூய்மை =அதைக் காண
நின்றவன் கண்களுக்கோ நிறங்கள் ஏழாம்.
கண்டதன் நிறத்தில் தன்னை இழ்ந்து அக்
காணா நிறத்தையே மறந்து போனான்.


ஒன்றை பலவாகக் காண்பிப்பதும் அவன் மாயை தானே. !

நிற்க. ஆவுடையக்காள் பாடல் நீங்கள் குறிப்பிட்டது , யாரேனும்
சஹானா ராகத்தில் பாடி இருப்பின் அதன் லிங்கை தரவும்.
இல்லையேல் !!
எச்சரிக்கை !!
நானே பாடிடுவேன்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

கபீரன்பன் said...

வருக பாலு சார்,

//so what to do for these people?

why because we must move with peoples in our routine life //

அவர்களுக்கு உரிய காலத்தில் அவர்களுடைய குரு வந்து வழி காட்டுவார் என்று நம்பிக்கைக் கொள்வது ஒன்றுதான் வழி :)

பகிர்வுக்கு மிக்க நன்றி

கபீரன்பன் said...

நல்வரவு கோமதி மேடம்,

தங்களுடைய ஆர்வமான வாசிப்புக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி நன்றி.

///ஆவுடையக்காள் பாடல்களை நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள். படிக்க ஆவலாய் உள்ளது.///

பகிர்ந்து கொள்ள எனக்கும் அதே ஆர்வம் உண்டு. அவனருளால் நிறைவேறும் என்று நம்புவோம்.

நன்றி

கபீரன்பன் said...

வருக சுப்புரத்தினம் ஐயா,

//ஒன்றவன் ஒளியோ வெள்ளை...//

ஒன்றே பலவாயிருப்பதை மிக அழகான பா வடிவில் சொல்லிவிட்டீர்கள்.

///யாரேனும்
சஹானா ராகத்தில் பாடி இருப்பின் அதன் லிங்கை தரவும். ////

மும்பை சகோதரிகள் சில பாடல்களை பாடி அபிராமி ரெகார்டிங் மூலம் வெளியிடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் வலையுலகில் கிடைக்கவில்லை.

//எச்சரிக்கை !!நானே பாடிடுவேன்//

ஹிஹி. கண்டிப்பாக செய்யுங்கள். நான் பாடிப் பார்த்தேன். மணிப்பிரவாள நடை அங்கங்கே தகராறு பண்ணுகிறது. :)))

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

கவிநயா said...

மாயக்காரியின் பிடியிலிருந்து விடுபட்டு தாய்க்காரியின் புடவைத் தலைப்பைப் பற்றிக் கொண்டு போவதெப்போ?

திருடன் உதாரணம், கண்ணாடியில் நாய் உதாரணம், இரண்டும் நன்று. ஆவுடையக்காள் பாடல்கள் எளிமை, அருமை. மிக்க நன்றி.

கபீரன்பன் said...

வாங்க கவிநயா,

///மாயக்காரியின் பிடியிலிருந்து விடுபட்டு தாய்க்காரியின் புடவைத் தலைப்பைப் பற்றிக் கொண்டு போவதெப்போ?///

அது தான் நீங்க ஏற்கனவே பிடிச்சுக்கிட்டு இருக்கீங்களே

"ஆய கலைகளின் அரசியளாம் – அவள்
வேத முதல் வியளாம்
மாயஇருள் விலக்கி தூயஒளி நல்கும்
ஞான வடி வினளாம்"

உங்களுக்கு என்ன கவலை :))

பதிவு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி

கவிநயா said...

ஆஹா, நல்லா சொன்னீங்களே! மாயக்காரியிடம் இருந்து தப்புவது அவ்வளவு சுலபமா? நீங்க சொன்ன மயில் கோலம் கதையை மறக்கவே முடியலை. அந்த மாதிரிதான் நான் நிறைய விஷயம் செய்யறேன்னு தோணுது :( அவள்தான் மனசு வைக்கணும்.

எது எப்படி இருந்தாலும், நீங்க சரஸ்வதி தேவியின் பாடலை இங்கே பொருத்தமா சுட்டிக் காட்டியது சந்தோஷமா இருந்தது :) மிக்க நன்றி.

கபீரன்பன் said...

//..மயில் கோலம் கதையை மறக்கவே முடியலை. அந்த மாதிரிதான் நான் நிறைய விஷயம் செய்யறேன்னு தோணுது //

ஒவ்வொரு பதிவு எழுதும் போதும் ‘இதையெல்லாம் எழுத எனக்கு என்ன தகுதி இருக்கு’அப்படீன்னு நானும் நினைக்கிறதுண்டு. ஆனால் இதைக்கூட செய்யாமல் போனால் இந்த புத்தி இன்னும் கிடந்து எப்படியெல்லாம் அலையுமோ-ன்னு நினைத்து சமாதானப்படுத்திக் கொள்வேன். எல்லாம் அவனிச்சை :)
நன்றி

கீதா சாம்பசிவம் said...

ஸஹஸ்ரத்தில் ஒருத்தன் உன்னையும் பார்க்க ஸாமர்த்திய கர்த்தன்//

எளிமையான மொழி, தெளிவான கருத்து, படிக்கப் படிக்க மனம் நிறைகிறது. ஆவுடையக்காளின் மனம் எவ்வளவு விசாலமாய்ப் பரந்து விரிந்து இவ்வுலகத்தினர் அனைவரையும் அரவணைத்துச் சென்றிருக்கிறது என்பதை நினைக்கவே அவர் வாழ்ந்த காலத்தையும் நினைத்து ஆச்சரியம் மேலிடுகிறது. நானெல்லாம் ஒண்ணுமே இல்லை! :( வெட்கமாய் இருக்கு!

//பற்றிப் பறிப்போமடி கிளியே பிரம்ம ரஸத்தை
எல்லோரும் புஜிப்போமடி கிளியே, எல்லோரும் புஜிப்போமடி//

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்னு அனைவரையும் கூவிக் கூவிக் கூப்பிட்டிருக்காரே, என்ன ஜென்மம் இது! ஆச்சரியமான ஜென்மம்! கண்களில் நல்லது தவிர வேறேதும் தெரிஞ்சிருக்கலை! இப்படி ஒரு ஆநந்த்த்தை அடைஞ்சிருக்கணும்னா சாமானியமான காரியம் இல்லை, எவ்வளவு ஆழ்ந்த யோகநிலையிலே இருந்திருப்பாங்கனு நினைச்சுப் பார்க்கவே ஆச்சரியமா இருக்கு, சதா சர்வகாலமும் ஆநந்தபரவசத்திலே ஆழ்ந்திருக்கணும் என்பதும் சாமானியமான ஒன்றில்லை.

இந்த அபூர்வ ஆனந்தத்தை நீங்கள் எங்களோடும் பகிர்வது இன்னும் மகிழ்வாக இருக்கிறது.

ஜீவி said...

//அதிக சாமர்த்தியம் மாயை உந்தன்
வெகு வித நாட்டியம்..//

ஆவுடையக்காள் எவ்வளவு அழகாக இந்தப் பாடலை ஆரம்பிக்கிறார், பாருங்கள், கபீரன்பன்!

மாயையை ஒரு பெண் போல உருவகப் படுத்தி, இழுத்து வந்து தன் முன் நிறுத்தி 'அடீ! உந்தன் வெகுவித நாட்டியம் அதிக சாமர்த்டியமடீ' என்று ஆரம்பிக்கிறார்.. தொடர்ந்து அந்த அவளின் சாமர்த்தியத்தை வரிசை கட்டிச் சொல்கிறார்.

சொல்லிக் கொண்டே வந்தவர், "ரொம்பத் துள்ளாதே; உன் ஆட்டத்தை அடக்க சாமர்த்தியசாலி ஒருத்தன் இருக்கிறான்; அவன், இவன்" என்று
குட்டு வைக்கிறார்!

"ஸஹஸ்ரத்தில் ஒருத்தன் உன்னையும் பார்க்க ஸாமர்த்திய கர்த்தன்
ஸர்வமும் பிரம்மமாய் தான் தானே ஸர்வமாய்
ஸ்வாமி வெங்கடேசுவரர் குரு கிருபையினாலே"

என்ன ஞானம்! எந்த ஞானிக்கும் சிக்க முரண்டு பிடித்த இந்த மாயை, பெட்டிப் பாம்பாய் அடங்குகிறது ஆவுடையக்காளிடம்!

எப்படிப்பட்ட சாமர்த்தியசாலி அவன்?.. சகஸ்ரத்தில் ஒருத்தன் அவன்! உன்னைக் காட்டிலும் சாமர்த்தியகாரன்!
சர்வமும் பிர்ம்மாய் இருக்கையிலேயே
தானே சர்வமாயும் இருப்பன்!' என்று சொல்கையிலேயே தன் குருவையும் இறையையும் ஒருசேரக் குறிப்பிடுகிற மாதிரி "ஸ்வாமி வெங்கடேசுவரர் கிருபையாலே அமைந்தது அதுவும்!' என்று வியக்கிறார்!

-- இப்படியாக எனக்குப் பட்டது. தவறோ?.. தெரியவில்லை.. கபீரன்பர் தான் சொல்ல வேண்டும்.

இன்னொன்று.

'அகில பிரபஞ்சமாய் ஆனதும் போறாமல்' என்கிற வரியில் 'போறாமல்' என்று வல்லின 'ற' வரவேண்டும். 'போதாமல்' என்கிற வார்த்தை பேச்சு வழக்கில் போறாமல் என்று வந்திருக்கிறது.

சென்ற பகுதி பதிவில்'

'ஆலயந்தோறும் அலைந்து திரிந்தது போரும், போரும்!' என்று வந்திருக்கும் பொழுதே சொல்ல நினைத்தது மறந்து, நானும் இன்னொரு இடுகையில், தங்கள் பதிவை எடுத்தாண்டு, இந்த 'போரும்' என்றே குறிப்பிட்டு விட்டேன்!

அந்த கண்ணாடி மண்டப நாய் உதாரணம், அற்புதம்! எனக்கு 'மொகலே ஆஸாம்' திரைப்படக் காட்சி நினைவுக்கு வந்தது.. அதை அடுத்த பின்னூட்டத்தில் குறிப்பிடுகிறேன்..

இந்தப் பதிவு மனதை மிகவும் கவர்ந்தது. வரிக்கு வரி பரமானந்தமாய் இருக்கிறது.
வார்த்தைகளில் 'நன்றி' சொல்வது ரொம்ப சாதாரணமாய்ப் படுகிறது.
இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
மிக்க நன்றி, கபீரன்ப!

கபீரன்பன் said...

வருக கீதா மேடம்,

ஞானியர்களுக்கே உரிய பேரன்பின் வெளிப்பாட்டை அழகாக தங்கள் பின்னூட்டம் முழுதுமாய் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். குழந்தையின் சிரிப்பில் மனம் மயங்குவது போல அவர்களுடைய ஆனந்தத்திலும் சில கணங்களாவது நம்மை மறக்க முடிகிறது என்பதே பெரிய விஷயம்தான்.

கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி

கபீரன்பன் said...

நல்வரவு ஜீவி ஐயா,

//வரிக்கு வரி பரமானந்தமாய் இருக்கிறது...//

இப்படி ரசித்து படிக்கிற தங்களைப் போன்றவர்கள் வரிகள் தரும் ஆனந்தத்தை விட பெரிதாக ஒன்றும் இருந்து விட முடியாது. மிக்க நன்றி.

///அகில பிரபஞ்சமாய் ஆனதும் போறாமல்' என்கிற வரியில் 'போறாமல்' என்று வல்லின 'ற' வரவேண்டும். 'போதாமல்' என்கிற வார்த்தை பேச்சு வழக்கில் போறாமல் என்று வந்திருக்கிறது.

சென்ற பகுதி பதிவில்'

'ஆலயந்தோறும் அலைந்து திரிந்தது போரும், போரும்!' ....////

தாங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் சரி. ஆனால் மேற்கோள் காட்டிய மூலத்தில் எப்படி இருந்ததோ அப்படியே அதை எடுத்து எழுதியிருக்கிறேன். இந்த பாடல்கள் அச்சேறிய ஆரம்பகால (~1900) அச்சுப்பிழை தொடர்ந்திருக்கிறதா அல்லது ஆவுடையக்காள் காலத்து மணிப்பிரவாள நடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்கா என்பது தெரியவில்லை.

சுட்டிக்காட்டியதன் மூலம் விளக்கத்திற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி

ஜீவி said...

//மாயையின் பிடியிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் குருவின் அருள் நாடி அவரை கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு கிளிக்கண்ணியாக ஆவுடையக்காளும் பாடுகிறார்.//

அந்தக் கிளிக்கண்ணி அற்புதம்.

ஆரம்பத்திருந்து அத்தனை சேதியை யும் அதில் சொல்லிவிடுகிறார். ஞானம் சித்திப்பதற்கு முன்னேயே,அதை நோக்கிய பாதையில் பயணிக்கையி லேயே, ஆவுடையக்காளுக்குத் அத்தனையும் தெரிந்து விடுகிறது.

எண்ணிலடங்கா பிறவிகள் தான் எடுத்ததும், அப்படி எடுத்தும் இந்தப் பெருங்கருணை சித்திக்கவில்லையே என்கிற ஏக்கம்,போதம் தெளிந்து பரப்ரும்ம வஸ்துவை பற்றிப் பிடிப்பது எப்படி என்கிற திகைப்பு, எட்டாத கொப்பாகையால், என்னால் எட்டிப் பறிக்க இயலுமோ என்கிற மயக்கம் எல்லாமும் சேர்ந்த வினோதக் கலவையில் அவருக்குத் தெளிவு பிறக்கிறது.

இருக்கும் ஒரே வழி,ஆதி அந்தமற்ற ஆசாரியார் கிருபை ஒன்றினாலேயே அது கிட்ட வேண்டும் என்கிற தெளிவு கிடைத்தவுடன், புதிதாகப் பெற்ற உற்சாகத்துடன் "அந்த அநுகிரகம் கிடைத்திட வேண்டுமென்று எட்டிப் பறிப்போமடி" என்று தனக்குக் கிடைத்த ஒளியில், பாதை தெரிந்த பரவசத்தில், எல்லோரையும் கூவி அழைக்கின்றார். "வாருங்கள்! பிரம்ம ரஸத்தை எல்லோரும் புசிப்போம்!" என்று அழைக்கின்றார்.

"ஊரே! உலகத்தீரே; இந்த அதிசயச் செய்தியைக் கேளுங்கள்!" என்று உலகிற்கு அவர் விடுத்த அழைப்பாகத் தான் இதைக் கொள்ள வேண்டும்.

"ஏய்ப்பதே தொழிலாம் மாயைக்கு, ஏய்த்துத் திரிவாள் சகமெலாம்
ஏய்ப்பவளை ஏய்ப்பவர் வந்தால், ஏய்ப்பவரை ஏற்றிப் போற்றலாம்.."

-- மகான் கபீர், 'ஏய்ப்பவளை ஏய்ப்பவர் வந்தால்..' என்று கேட்டதற்கு அக்காளின் மூலம் பதில் கிடைத்தாயிற்று. பதில் கிடைத்தும், அவர் கிடைப்பதும் பரப்ரமத்தின் அருளினாலேயே. அந்த அருளுக்குப் பிரார்த்திப்போம்.

கபீரன்பன் said...

நன்றி ஜீவி சார்,
கிளிக்கண்ணியை மிகவும் சிலாகித்து தாங்கள் எழுதியிருப்பது ஆவுடையக்காளின் பாடல் எவ்வளவு தூரம் தங்கள் மனதைத் தொட்டிருக்கிறது என்பது புரிகிறது. இடுகையின் பயன் இதை விடவும் வேறு இருக்கமுடியுமோ !

//அந்த அருளுக்குப் பிரார்த்திப்போம்//

கண்டிப்பாக அவருடைய அருள் எப்போதும்இருக்கும். நன்றி