செங்கோட்டை சீமையிலே குடும்பப் பெண்கள் மத்தியிலே கலந்து விட்டிருந்த கும்மிப்பாட்டு கோலாட்டப் பாட்டு, பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போமா?
கோலாட்டப்பாட்டு :
ஆதியிலே ஒன்றானாய் கோலே அப்புறம் இரண்டானாய் கோலே
வேதமும் அறியாக் கோலே, வேதாந்தக் கோலே
...........
நத்தையாய் புழுவாய் நண்டாய் நரியாய் பரியாய் வண்டாய்
எத்தனை ஜென்மமோ கொண்டாய் என்னத்தைக் கண்டாய்
காசி ராமேசுவரம் சென்றாய் காகம் போல் முழுகியே நின்றாய்
உன்னாசை போச்சுதோ மூடா என்றால் ஆச்சுதோ நன்றாய்
போற்றியார் அடிபணிந்து பந்துக்களும் வீடும் விட்டு
கூற்றுவன் அழைக்கும் போது கூட வராது
புருஷன் பெண்டாட்டி பொய்யே புத்திரன் பிதாவும் பொய்யே
பெருமை சிறுமை பொய்யே பிரம்மமே மெய்யே
ஆகாவழிக்கு அதிதூரம் ஆத்ம அனாத்ம விசாரம்
தொகுத்துப் பார்க்க இது நேரம் தோன்றுமே சாரம்
----------------------------------------------
கும்மிப்பாட்டு
கும்மியடி பெண்கள் கும்மியடி
அகோர ஸம்ஸார சாகரத்தில்
ஜென்மக் கடலை கடத்தினவர் பாதம்
சிந்தித்து கும்மியடியுங்கடி தினம்
வந்தித்து கும்மியடியுங்கடி
ஐந்து தத்வமும் ஒன்றாய் கூடி
ஒரு ஆள்ரூபம் அறிவுமில்லை
ஐந்து பூத விகாரத்தினுள்
ஸ்வபிரகாசத்தை
மேவியே கும்மிடியுங்கடி
மனம் தாவியே கும்மியடியுங்கடி
பாவ அபாவத்தை விட்டு அகன்று
பரிபூரணப் பால்குடித்து ஆனந்தமாய்
தேவாதிகளுக்கும் தெரியாத துரீயத்தை
தெரிந்து கும்மியடியுங்கடி
மனம் பூரித்து கும்மியடியுங்கடி
அறிவிலே அறிவால் அறிவாய்
அறிந்து அதை அறிவாய்
அறிவு மாத்திரம் ஆக இருந்ததை
அறிந்து கும்மியடியுங்கடி
தன்னை அறிந்து கும்மியடியுங்கடி
---------------------------------
எப்படி இருக்கிறது இந்த அத்வைத ரஸம் ? அது ஆவுடையக்காள் வடித்து வைத்திருக்கும் ஞானரஸம்.
மகாராஷ்ட்ரத்தில் ஜனாபாய் பக்தி ரஸத்தை நெல் இடிக்கும் போதும், மாவரைக்கும் போதும் களைப்பைக் களைய பெண்களுக்கு மத்தியில் எளிமையானப் பாடல்களாய் சொல்லிக் கொடுத்தார்.
ஆவுடையக்காளோ ஓய்வு நேர விளையாட்டாய் கும்மிப்பாட்டிலும் கோலாட்டப் பாட்டிலும் ஞானக் குறவஞ்சியாயும் பெண்கள் மூலமாய் வீட்டில் அனைவருக்கும் மிக உயர்ந்த அத்வைத கருத்துகளை எளிய உதாரணங்களால் புரிய வைத்த பெண் ஞானி. அவரை இன்னொரு ஔவையார் என்றும் குறிப்பிடுவதுண்டு.
அறியா பருவத்திலே திருமணம் நடந்து கணவனையும் இழந்த அபாக்கியவதி. அன்றைய நடைமுறைப்படி கைம்பெண்ணாக்கப்பட்டு பலத்தக் கட்டுபாடுகளுடன் வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கப்பட்டிருந்த அவலநிலை. அதிகாலை ஊர் விழிக்கும் முன்னே எழுந்து ஆற்றங்கரைக்கரைக்கு சென்று நித்திய கடன்களை கழித்து பொழுது புலரும் முன்னே வீட்டிற்கு வந்துவிட வேண்டும். அவளுக்கு அனுமதிக்கப்பட்ட வெளி உலகத் தொடர்பு அவ்வளவு தான். பல பூர்வ ஜென்ம தவங்களால் அவள் மனது இறைவனுடைய அருளுக்காக ஏங்கியிருந்தது. தனக்கு வழிகாட்ட யாராவது குரு ஒருவர் கிடைக்கமாட்டாரா என்று தவித்திருந்தது.
ஒரு நாள் வழக்கம் போல் அதிகாலை இருட்டு நேரத்தில் ஆற்றின் படித்துறை அருகே கிடந்த ஒரு மாவிலைக் காம்பை எடுத்து பல் தேய்ப்பதற்காக வாயில் வைத்ததுமே ஒரு வினோதமான உணர்ச்சி தேகம் முழுவதும் வியாபித்தது. தேங்காய்க்குள் கழன்று கொண்ட கொப்பரை போலே தேகம் வேறு தான் வேறு என்ற எண்ணம் பலமாய் ஆட்கொண்டது. சற்று தூரத்தில் மரத்தடியே தியானத்தில் அமர்ந்திருந்த மகான் ஒருவரை கண்ணுற்று அவரது பாதத்தை அடைந்து சேவித்தார். அவரும் கருணை பொங்க அவளது தலை மேல் கைவைத்து “பிரம்மம் சத்யம்” என்ற சத்ய மொழியை சொல்லி அருள் பொழிந்தார். அக்கணமே ஆவுடையக்காளுக்கு சமாதி நிலை கூடியது.
ஸ்ரீதர அய்யாவாள் என அறியப்படும் அந்த மகான் பயன்படுத்திய மாவிலைக் காம்பின் மகிமையே ஆவுடையக்காளின் ஆன்மீகப் பயணத்தின் துவக்கமானது என்பர். வெங்கடேச குரு என்றும் சாந்த நரசிம்மர் என்றும் தவறாமல் ஒவ்வொரு பாடலிலும் குருவைப் பணிந்து போற்றும் அவருக்கு குரு அருளாலே வாணியின் அருளும் வந்தது.
படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஜனாபாயைப் போலவே அவ்வட்டார பேச்சு வழக்கிலே அத்வைத சித்தாந்தம் குற்றால அருவி போல் பாய்ந்து பெருகியது. ஞானிகளுக்கே உரிய கம்பீரத்துடன் அவர் வெளிப்படுத்திய கருத்துகள் அன்றைய சமுதாயத்தில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது.
ஆலையந்தோறும் அலைந்து திரிந்தது போரும் போரும்
மனதாலயம் தன்னில் அரனாரிருப்பதைப் பாரும் பாரும்
உன் தெய்வம் என்தெய்வம் என்று உழன்றதும் போரும் போரும்
தன்னுள் தெய்வம் என்றெண்ணி இருப்பதைப் பாரும் பாரும்
ஓதிப் படித்ததோர் மந்திர கர்மங்கங்களும் போரும் போரும்
புத்தி யுக்தி அனுபவத்தால் முக்தி கிடைத்ததைப் பாரும் பாரும்
இன்னொரு பாடலில்
அம்புலியில் தெய்வமென்று சாதிப்பார் சீமையிலே
தாருவிலே தெய்வமென்று சாதிப்பார் வையகத்தே
தாமிரத்தே தெய்வமென்று ஸாதிப்பார் தரணியிலே
மிருத்யுவே தெய்வமென்று விழுவார் உலகினிலே
அப்புவே தெய்வமென்று ஆடுவார் தீர்த்தாதி
அக்கினியே தெய்வமென்று ஆகுதிகள் பண்ணிடுவார்
என்பதாக புரிந்து கொள்ளாமல் செய்யப்படும் பலப்பல வழிபாடுமுறைகளின் தன்மையை வரிசைப் படுத்துகிறார்.
தன்னை உணர்ந்தவனுக்கு தெய்வங்கள் தேவையில்லை என்பதில் கபீரும் உடன் படுகிறார். அவையெல்லாம் குரு அருள் சித்திக்கும் வரையில்தான் என்பதை அடிக்கடி சொல்வார். அப்படிச் சொல்லும் ஒரு ஈரடி
और देव नहीं चित्त बसै, मन गुरु चरण बसाय ।
स्वल्पाहार भोजन करु, तृष्णा दूर पराय ॥
சித்தமிசை இல்லை வேறு தெய்வம், சித்தம் நாடுவதோ குருசரணம்
சொற்பமாய் போனதே போசனம், பற்பல இச்சையும் போயின தூரம்
மனமோ குருவின் வசமாகிவிட்டது, சித்தத்தில் வேறு தெய்வங்கள் கிடையாது. உணவின் தேவையோ மிகசொற்பம், உலக விஷயங்களில் ஆர்வமும் குன்றி போனது என்று உரைக்கிறார் கபீர். குருவின் திருவடியில் மனம் ஈடுபாடு கொண்டதால் தனக்குக் கிடைத்த அனுபவத்தை சொல்லும் போது ஆவுடையக்காளும் கபீரின் மொழியை உறுதி செய்கிறார். அத்வைத மெய்ஞான ஆண்டி என்கிற பாடலிலிருந்து சில வரிகள் :
என் சொல்வேன் என் சொல்வேன் இவன் எங்கிருந்து வந்தாண்டி
இன்னம் இன்னம் ஜன்மம் எடுக்கவே என்றிருந்தேண்டி
ஆறு வைரியை அவன் அண்டவிடாமல் அடித்தாண்டி
தாறுமாறக்காரன் அவன் துரீய நிலையைத் தந்தாண்டி
காமக்ரோதாதிகளை காறுவாறு தொடுத்தாண்டி
தொண்ணூறாரு பேரை துண்டித்து போட்டு விட்டாண்டி
வெகுவான போகத்தை புசிக்கவே என்றிருந்தேண்டி
பார்வை ஒன்றினாலே போகத்தை மாற்றியே வைத்தாண்டி
பார்த்த இடமெல்லாம் பரிபூர்ணமாய் தோற்றி வைத்தாண்டி
வார்த்தைகளெதுவும் காணேன் மௌனமதாக்கி விட்டாண்டி
[காறுவாறு =காறுபாறு= கவனிப்பாயிருத்தல், மேற்பார்வை செய்தல்]
தொண்ணூறாரு பேரை துண்டித்து போட்டு விட்டாண்டி
36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.
ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.
ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
(நன்றி : கௌமாரம்.காம்) ]
மெய்ஞானம் வாய்க்கப் பெற்றவருக்கு அதன் பின்னர் எதிலும் பிடிப்பு இருப்பதில்லையாம். கனவு கலைந்து எழுபவனுக்கு மீண்டும் கனவு பற்றிய கவலை உண்டோ ? திருப்புகழில் அருணகிரியாரும் இந்த உலக இச்சைகளை சூடான பொருட்களை கை உதறுவது போல் உதற விழைவதாக உரைக்கிறார். முப்பதும் (+)ஆறாறும் (6x6=36) (+)முப்பதும் வேறான என்னும் போது 96 தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட மோனநிலை அடைவது எப்போது என்று அவரும் குறிப்பிட்டிருக்கிறார்.
சுட்டது போல் ஆசை விட்டு உலக ஆசார
துக்கமிலா ஞான சுகம் மேவிச்
சொற்கரண அதீத நிற்குணம் ஊடாடு
சுத்த நிராதார வெளி காண
மொட்டு அலர் வாரீச சக்ர சட் ஆதார
முட்டவு மீதேறி மதி மீதாய்
முப்பதும் ஆறாறு முப்பதும் வேறான
முத்திரையா மோன மடைவேனோ
............
அப்படி ஒரு மோன நிலையை தனக்குக் கொடுத்த குருவை எங்கிருந்து இவன் வந்தாண்டி என்று ஆச்சரியத்துடன் ஆவுடையக்காள் போற்றுகிறார். பார்வை ஒன்றினாலேயே போகத்திற்கான இச்சைகளை மாற்றி வைக்க வல்லவர் குரு என்பதையும் அவருடைய மெய்ஞான அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்கிறோம்.
கபீர் குறிப்பிடும் உலக ஆசைகள் குறைவதையும் உணவின் மேல் பிடிப்பு இல்லாமல் போவதற்கும் இது தான் காரணம். ஆவுடையக்காளுக்கும் தேகப்பற்று நீங்கி விட்டது. ஆனால் இன்னமும் உயிர் அதனோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதே என்ற ஆச்சரியம். அந்த வினாவை தம் குருவிடமே வைக்கிறார்.
ஐயா ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழ வேண்டாமோ ?
தேகமிருந்த உளவு சொல்லும், நீர் தேசிகரே !
அம்மா ! ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழுமானால்
அஞ்ஞான ஜனங்களுக்கு யாராலே விமோசனமாம்?
சரீரமிருக்கிறது பலருக்கு உபகாரமன்றோ? என்று
காரணமூர்த்தி யுரைத்தார் கருணையுடன்;
பல்லாயிரக்கணக்கான ஜீவன்களுக்கு பல நூறு ஆண்டுகள் வழிகாட்ட வேண்டியவர் அல்லவா அவர் ! சுமார் முன்னூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றி பெண்களுக்கும் அத்வைதம் சித்திக்கும் என்பதை வாழ்ந்து காட்டியவர். ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாமரனுக்கும் புரியும் வகையில் வேதாந்த கருத்துகளை பாடி வைத்திருக்கிறார். மிக சரளமாக, பல விதமான எடுத்துக்காட்டுகளுடன் நகைச்சுவையாகவும் கருத்துகளை சொல்வதில் அவர் சமர்த்தராக இருந்தார்.
சிலவற்றை அடுத்த இடுகையில் காண்போம்.
அவரைப் பற்றிய மேலும் பல விவரங்களையும் பாரதியாரின் பாடல்களில் ஆவுடையக்காளின் தாக்கம் பற்றியும் நாஞ்சில் நாடன் அவர்களின் வலைப்பூவில் படிக்கலாம்.
feed burner not delevring last 2 articles.
ReplyDeleteresubscribe also not accepting.
pl put rss feed in your blog
இது வரை கேட்டிராதவை ஆவுடையக்காள் பற்றிய இந்தச் சம்பவங்கள் எல்லாம். பகிர்வுக்கு நன்றி. இனம் புரியா நெகிழ்வு மனதில் ஏற்பட்டது.
ReplyDeleteஅத்வைத மெய்ஞ்ஞான ஆண்டியையும் படிச்சதில்லை. ஆவுடையக்காளைப் பற்றியும் அவங்க இருந்த நிலைமையையும் கண்ணீரோடு படிச்சாலும், அவங்களுக்குக் கிடைச்ச மகா பாக்கியத்தை நினைக்க நினைக்க ஆச்சரியமாவும் இருக்கு. கொடுத்து வச்சிருக்காங்க. இவங்களைப் போன்றே விதவையானவங்க தான் சக்கரத்தம்மாளும், ஒரு யோகியாக, சித்திகள் அடைந்த பெண்மணியாக அறியப் பட்டார். இவருடைய அதிஷ்டானம் திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா காலனிக்குச் செல்லும் வழியில் உள்ளது. தெரிஞ்சிருக்கும்.
ReplyDeleteவருக பாலு சார்,
ReplyDeletefeed burner -ல் தங்களுடைய பெயர் ஆக்டிவ்-ஆக இருப்பதால் வந்துவிடும் என்றே நினைக்கிறேன்.
நன்றி
நல்வரவு கீதா மேடம்
ReplyDelete//சக்கரத்தம்மாளும், ஒரு யோகியாக, சித்திகள் அடைந்த பெண்மணியாக அறியப் பட்டார்...//
நீங்க எழுதியதை படிச்சுதான் தெரிந்து கொண்டேன். அந்த கட்டுரையை ஏன் வலைப்பூவில் இடவில்லை ?
//அத்வைத மெய்ஞ்ஞான ஆண்டியையும் படிச்சதில்லை..//
இது தன்னுடைய குருவின் பெருமை சொல்லும் வகையில் இயற்றப்பட்டது. 72 ஈரடிகள் கொண்டது. ஆவுடையக்காள் பாடல் திரட்டில் உள்ளது. முடிந்தால் குழுமத்தில் போடுகிறேன்.
நன்றி
சக்கரத்தம்மாள் வலைப்பூவில் இடம் பெற்றிருக்கிறாரே?? :D
ReplyDelete///சக்கரத்தம்மாள் வலைப்பூவில் இடம் பெற்றிருக்கிறாரே?///
ReplyDeleteஇப்படி பொத்தம் பொதுவா சொன்னா பாவம் வாசகர்கள் உங்களோட ஏராளமான வலைப்பூக்களில் எந்த வலைப்பூ ன்னு போய் தேட முடியும் ? சரி நானே இணைப்பை தேடி கொடுத்து விடுகிறேன்.
இங்கே சுட்டவும் சக்கரத்தம்மாள் பறக்கும் சித்தர் படிக்க.
நல்ல பதிவிற்கு வழிகாட்டியதற்கு நன்றி
இந்த அம்மையாரின் பாடல்கள் நெல்லைச்சீமை முழுவதிலும் பரவலாகப் புழக்கத்தில் இருந்தன.
ReplyDeleteவேதாந்தத்தின் நுட்பத்தை எளிய முறையிலும் சொல்லலாம் என்பதற்கு முன்னோடியாக அமைந்தவை.
ரமண மஹரிஷியின் ‘அப்பளப் பாட்டு’ போன்றவையும் இம்முறையில் அமைந்தவை
தேவ்
வருக தேவராஜன் ஐயா,
ReplyDeleteநீங்கள் சொன்னது மிகவும் சரி. ரமணாஸ்ரமத்தில் ஆவுடையக்காளின் பாடல்கள் அவ்வப்போது பாடப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
//"சித்தமிசை இல்லை வேறு தெய்வம்"//
ReplyDeleteஎப்பேற்பட்ட நிலை!
கீதாம்மாவைப் போலவே உணர்ந்தேன், நெகிழ்ச்சியும், கண்ணீரும்.
அடுத்த பகுதிக்காக ஆவலுடன்...
வருக கவிநயா,
ReplyDelete//அடுத்த பகுதிக்காக ஆவலுடன்...//
சீக்கிரமே இட முயற்சிக்கிறேன்.
மிக்க நன்றி
//ஆலையந்தோறும் அலைந்து திரிந்தது போரும் போரும்
ReplyDeleteமனதாலயம் தன்னில் அரனாரிருப்பதைப் பாரும் பாரும்
உன் தெய்வம் என்தெய்வம் என்று உழன்றதும் போரும் போரும்
தன்னுள் தெய்வம் என்றெண்ணி இருப்பதைப் பாரும் பாரும்
ஓதிப் படித்ததோர் மந்திர கர்மங்கங்களும் போரும் போரும்
புத்தி யுக்தி அனுபவத்தால் முக்தி கிடைத்ததைப் பாரும் பாரும்..//
ஆவுடையக்காளின் வரிகள் ஒவ்வொன்றும் அட்சர லட்சம் பெறும்.. அந்த 'போரும் போருமும்'அதற்கேற்பவான பாரும்,பாருமும்' இசைக்குத் தம்மைத் தத்தம் செய்து விட்டு எப்படி தலையை ஆட்டவைக்கிறது, பாருங்கள்!
இரு வரிசைகளாக நின்று கொண்டு, ஒரு வரிசை தாளலயத்துடன் பாட்டைப் பாடி 'போரும்,போரும்', என்று முடிக்கையில், எதிர்வரிசை அடுத்தவரி பாடி, 'பாரும்,பாரும்' என்று இசைக்கையில் மனம் பாட்டிற்குரிய அந்த நாதனை நாடிப் பறக்கும். கோலாட்டம் கொண்டு கும்மிப்பாட்டாகப் பாடினால் கொண்டாட்டம் தான்! இறைவன் அருள் இருந்தால் தான் இப்படி வார்த்தை வரிகள் கட்டுப்பட்டு ஓடிவந்து உட்கார்ந்து சோபிக்கும்.
மற்றபடி நாமாக முயற்சி செய்து வார்த்தைகளைக் கோர்ப்பது செயற்கை பூச்சுகளுடன் சோகையாகத் தான் தெரிகிறது.
//அம்மா ! ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழுமானால்
அஞ்ஞான ஜனங்களுக்கு யாராலே விமோசனமாம்?
சரீரமிருக்கிறது பலருக்கு உபகாரமன்றோ? என்று
காரணமூர்த்தி யுரைத்தார் கருணையுடன்;//
வாழ வந்த வாழ்க்கையின் சாரத்தை, அதன் தாத்பரியத்தை எவ்வளவு அழகாக பிழிந்து தந்து விட்டார் என்று
பிரமிக்கத் தோன்றுகிறது..
ஈடுபாட்டுடன் இறைவன் அன்பில் திளைக்கும் பக்தி காட்டும் திசை வழி தேடித் திரிந்து ஞானம் அவன் க்ருபையால் வாய்க்கப் பெற்றாலும்,
தேகம் விழுந்துவிடுவதில்லை என்று கூறி, அதற்கும் ஞானமார்கமாகவே ஒரு காரணத்தை கருணையுடன் காரணமூர்த்தி கூறும் பொழுது மனம் மாயையிலிருந்து விடுபடுகிறது..
தன்னலம் கருதாத எவ்வளவு பக்தி இருந்தால் இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றும் என்று எண்ணி, கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.
ஆவுடையக்காளின் ஞான வரிகளை உங்கள் தள பின்புலத்தில் வாசித்து நெகிழும் போது இன்னும் இன்னும் மனத்தில் அதன் தாக்க்கம் அதிகரிக்கத் தான் செய்கிறது. இது யாம் பெற்ற பேறு.
மிக்க நன்றி, கபீரன்ப!
மிகவும் அனுபவித்துப் படித்து கருத்து சொல்லி உற்சாகம் தருவதற்கு மிக்க நன்றி, ஜீவி ஐயா !
ReplyDelete//ஆலையந்தோறும் அலைந்து திரிந்தது போரும் போரும்
ReplyDeleteமனதாலயம் தன்னில் அரனாரிருப்பதைப் பாரும் பாரும்
உன் தெய்வம் என்தெய்வம் என்று உழன்றதும் போரும் போரும்
தன்னுள் தெய்வம் என்றெண்ணி இருப்பதைப் பாரும் பாரும்
ஓதிப் படித்ததோர் மந்திர கர்மங்கங்களும் போரும் போரும்
புத்தி யுக்தி அனுபவத்தால் முக்தி கிடைத்ததைப் பாரும் பாரும்//
ஒரு பாட்டிலேயே அனைத்தயும் சொல்லி விட்டார். ஆவுடைக்காள் அவர்கள். அவர்களைப் பற்றி நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதியதையும் படித்தேன். அருமையான அறிமுகம். மேலும் படிக்க ஆவல்.
நன்றி கபீரன்பன்.
நல்வரவு கோமதி மேடம்,
ReplyDelete//ஒரு பாட்டிலேயே அனைத்தயும் சொல்லி விட்டார்.//
அது ஒரு பாட்டின் ஒரு சிறிய பகுதிதான். அதனால் தான் அவருடைய பாடல்களை வைத்து இன்னும் சற்று விவரமாக இடுகை(கள்) இடலாமா என்று யோசிக்கிறேன். நேரம் கிடைப்பதை பொறுத்து அவன் வழிகாட்டுதல்படி நடக்கட்டும் :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
ReplyDeletePlease follow
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
(First 2 mins audio may not be clear... sorry for that)
(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409