Showing posts with label ரமணர். Show all posts
Showing posts with label ரமணர். Show all posts
Monday, May 04, 2020
உன் சூதே இது அருணாசல !
தறிகெட்டு தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்த உலகத்திற்கு ஒரு வேகத்தடை போட்டுள்ளது கொரானோ. விமானங்கள் இல்லை, புகைவண்டிகள் இல்லை பேருந்துகள் இல்லை. எல்லா நாடுகளிலும் ஊரடங்கு என்ற பெயரில் உலகமே முடங்கிக் கிடக்கிறது.
அனைவரும் எப்படி குடும்பத்தோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்பது என்று வல்லுனர்கள் தொலைகாட்சியிலும் சமூக வலைத்தளங்களிலும் விவரிக்கிறார்கள். ஒவ்வொருவரும் தத்தம் தனித் திறமை வளர்த்துக் கொள்ள அற்புதமான வாய்ப்பு என்கின்றனர். நேரமில்லை என்று ஓடியவர்களை யோகாவும் தியானமும் செய்யுங்கள் என்று பிரதமர் முதல் தொலைக்காட்சி நெறியாளர் வரை யாவரும் நினைவு படுத்துகின்றனர்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
அப்பாடா ! இனி அங்கே இங்கே என்று யாரும் கூப்பிட மாட்டார்கள்.கலியாணம் கோவில் என்றெல்லாம் சுற்ற வேண்டியதில்லை. சாலை நெரிசலில் சிக்கி விழி பிதுங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம், எதையாவது உருப்படியாக செய்வோம் என்று நானும் திட்டம் தீட்டினேன். மீண்டும் கபீர் எழுத வேண்டும், புது புது யுக்திகளை படம் வரைவதில் கையாண்டு பார்க்க வேண்டும். இரமணரின் உபதேச சாரம் மனப்பாடம் செய்ய வேண்டும், குறைந்தது ஒரு அத்தியாயமாவது பகவத்கீதை படிக்க வேண்டும், தரவிறக்கம் செய்து படிக்காமல் இருக்கும் திருவாசகத்தை படிக்கத் தொடங்க வேண்டும் இத்யாதி
மூன்று வாரங்களுக்கு பின் ஏதாவது முன்னேற்றம் உண்டா என்றால் இல்லை என்றே சொல்வேன். திட்டத்தில் பத்து சதவீதம் கூட வெற்றியில்லை. ஏதேதோ காரணங்கள். ஆனால் பெரிய காரணம் நான் வைத்திருக்கும் கைப்பேசி மூலம் நம் மனதிற்குள் புகுந்துள்ள வைரஸ் களான வாட்ஸ் ஆப், முகநூல் ட்விட்டர் போன்ற மென்பொருட்களின் மயக்கமே.
நேரத்தைக் கொல்லும் மானிடக் கொல்லிகள்.
அவைகள் நேரத்தைக் கொல்ல (Time pass, killing time)) உதவுகின்றன என ஒப்புக் கொண்டால் கண்டிப்பாக நம் ஆயுளையும் சேர்த்தே கொல்லுகின்றன என்பதை மறுக்க முடியாது. இதை சொல்வது திருவள்ளுவர்.
நாளது ஒன்று போல் காட்டி உயி(ர்) ஈரும்
வாளது உணர்வார் பெறின்.
கால அளவாக காட்டப்படும் ஒவ்வொரு நாளும் உயிரை அறுக்கும் வாள் என்று கூர்ந்து அறியும் சான்றோர் உணர்வர்.
இந்த உண்மையும் வாட்ஸ்-ஆப்பில் வந்த ஒரு பகிர்வைப் பார்த்ததும் தான் உறைக்கிறது
மக்கள் செய்யும் காலவிரயம் என்பது ஒரு மாயையின் விளையாட்டு என்பதை அக்ஷர மணிமாலையில் இரமணர் "இறைவனின் சூது" என்று வருணிக்கிறார்.
"ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீயிலையோ அருணாசல
ஒருவனாம் உன்னை ஒளித்தெவர் வருவார்? உன் சூதேயிது அருணாசல"
உன்னை ஏமாற்றி கள்வர்கள் உள்ளே எப்படி உள்ளே வரமுடியும்? ஆகையால் நீ வேண்டுமென்றே இந்த ஐம்புலன்களை தந்து என்னை திசை திருப்புகிறாய்" என்று உரிமையுடன் இறைவனை சாடுகிறார். அவர் முழித்துக் கொண்டு கள்வர்களை விரட்டி அடிக்க வல்லவரானார். ஆனால் நாமோ இன்னமும் ஏமாந்து அமர்ந்திருக்கிறோம்.
கபீரும்இந்த ஏமாறுதலை பயிரைக் காக்காத விவசாயிக்கு ஒப்பிடுகிறார்.
बिन रखवारे बाहिरा, चिड़ियों खाया खेत |
अरधा परधा ऊबरे, चेति सके तो चेत ||
விரட்டு வாரில்லா வயலிலே பறவைகள் தின்றன தினைதனை
திரட்ட முடிந்தால் திரட்டிடு அரைகுறை யாயினும் விளைச்சலை
கள்வர்கள் என்று ரமணர் சொன்னதைத்தான் பறவைகள் என்று கபீர் சொல்கிறார்.
நமக்கு தேவையான ஒன்றை இன்னொருவன் எடுத்து சென்றால் அதற்கு நம் கவனக் குறைவே காரணம்.
இங்கே நாம் இழப்பது நேரத்தை ; இறை சிந்தனையோடு கூடிய தர்ம காரியங்கள் செய்யாமல் கழிக்கும் நாட்களை. அதற்குக் காரணம் புலன் கவர்ச்சிகளால் நம் கவனம் தவறுவதே ஆகும்.
இந்த இயலாமை அப்பர் பெருமானையும் திருமங்கை ஆழ்வாரையும் கூட வாட்டுகிறது.
சக்கரத்து அண்ணலை வேண்டிக்கொள்ளும் ஆழ்வார் பாடல் :
இடகி லேனோன் றட்ட கில்லேன் ஐம்புலன் வெல்லக்கில்லேன்
கடவனாகி காலந்தோறும் பூப்பறித் தேத்த கில்லேன்
மடம் வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய்
தடவு கின்றேன் எங்குக் காண்பன் சக்கரத் தண்ணலையே? (3305 )
[இடகிலேன் : இரப்பவர்க்கு எதையும் ஈவதறியேன்
ஒன்று அட்டகில்லேன் : தாகமுற்றவர்க்கு நீர் தந்திலேன்
கடவனாகி : நியதியுடையவனாகி ; காலம் தோறும் உரிய காலங்களில்
அயர்ப்பு ஆய்: அவ்விவேகி ஆகி ; தடவுகின்றேன் : தேடுகின்றேன் ]
கோவலூரில் குடியிருக்கும் இறைவனை இறைஞ்சி அப்பர் பாடியது :
தடுத்திலேன் ஐவர் தம்மைத் தத்துவத்து உயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப் பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார வார்வலித் தன்பு திண்ணம்
கொடுத்திலேன் கொடிய வாநான் கோவல்வீ ரட்ட னீரே.
கோவலூர்ப் பெருமானே ! ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய் , எம் பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மனங்கொண்டு , அவன் திருவடிகளில் சேர்ப்பிக்கப் பல மலர்களையும் பறித்துக் தொகுக்காதேனாய் , மனம் நிறைய அன்புகொண்டு அவ் வன்பை எம்பெருமான் பால் செலுத்தேனாய் அடியேன் கொடியேனாகக் காலம் கழித்துவிட்டேனே ! ( நன்றி ; Thevaram.org)
இப்படி ஐம்பொறிகளை கட்டுப்படுத்தாமல் எந்தவித ஆன்மீக முன்னேற்றமும் இருக்கமுடியாது என்பதை சான்றோர்கள் யாவரும் சொல்லியிருக்கிறார்கள். உலக விஷயங்களிலே பற்று உண்டாவதற்கு காரணமே இவைதான்.
அது இன்றைய வாட்ஸ்-ஆப் வரைக்கும் வந்து விட்டது. மகிழ்ச்சியை பகிர்கிறோம் என்ற பெயரில் இது வணிகத்தைப் பெருக்கி மனங்களை சுருக்கி காலத்தைக் கொன்று மனிதத்துவத்தையும் அழித்துக் கொண்டு வருகின்றது என்றால் மிகையில்லை.
பற்றற்றான் பற்றை பற்ற பற்று விட வேண்டும் என்பதை முதல் அத்தியாயத்திலேயே சொல்லிவிட்டார் வள்ளுவர்.
மீண்டும் கபீருக்கு வருவோம்.' திரட்ட முடிந்தால் திரட்டு' என்று ஒரு சந்தேகத்தை ஏன் எழுப்புகிறார்? அவருக்கு நன்கு தெரியும் மனிதர்கள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது . இன்னும் எவ்வளவு நாட்கள் மீதி உள்ளனவோ தெரியாது. அதற்குள்ளாகவாவது மருட்சியை விட்டு பெரியவர்கள் சென்ற பாதையில் சென்று பார் என்று உபதேசிக்கிறார்.
அதையே வள்ளல் பெருமானார் வார்த்தைகளில் பார்த்தால்
"அருள் அறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய் சிவமே
அருட் பேறதுவே அரும் பெறற் பேறு
இருட் பேறு அறுக்கும் என்று இயம்பிய சிவமே (990 அருட்பெருஞ்சோதி அகவல்)
கடவுளை சிந்தித்து இருந்தால் மருள் நீங்கி விடும்.
இந்த உண்மைகளை சற்றாவது நினைத்துப் பார்க்க கொரானாவை அனுப்பிய -யாவற்றையும் கடந்து நிற்கும்- அந்த கடவுளுக்கு நன்றி.
Tuesday, February 22, 2011
பளிங்கு மண்டபத்தில் நாய்
’ஏமாறுபவன் இருக்கிற வரையில் ஏமாற்றுபவனும் இருப்பான்’ இது நடைமுறைத் தத்துவம்.
பழைய திரைப்படங்களில் கிராமத்திலிருந்து முதன்முதலாக நகரத்திற்கு வரும் அப்பாவி கதாபாத்திரங்கள் முதலில் சந்திப்பதே இந்த ஏமாற்றுகாரர்களைத்தான். ஏதாவது ஒரு காரணத்தால் தம் உடமையெல்லாம் அவர்களிடம் இழந்து துன்பத்தில் சிக்கிக் கொள்வதாக கதை நகரும்.
ஏமாற்றப்படுவதில்தான் எத்தனை முறைகள் !
வீதியிலே நாட்டியமாடும் சிலர் தம் ஆட்டத்தாலும் பேச்சாலும் பார்வையாளர்கள் கவனத்தைத் திருப்பி வைக்கும் போது அவர்களுடைய கும்பலை சேர்ந்த ஒருவன் அசந்திருப்பவர்களின் பைகளையும் பிற உடமைகளையும் பின்பக்கத்திலிருந்து சுருட்டிக் கொண்டு ஓடிவிடுவான். பின்னர் லபோ திபோ என்று கூட்டத்தினர் ஆளுக்கொரு பக்கம் திருடனைத் தேடிக் கொண்டு ஓடுவார்கள்.
இதே வேடிக்கையைத்தான் மாயா மோகினியும் செய்து வருகிறாள். அவள் மோகினியாம், கபீர் சொல்கிறார். நம்முடைய கவனத்தையெல்லாம் உலகின் பல்வேறு கவர்ச்சிகள் பக்கம் திருப்பி உண்மையில் நம் உள்ளே உறைகின்ற இறைசக்தியை அறிவதற்கான ஆர்வத்தை கவர்ந்து விடுகிறாள். நமது ஆயுளெல்லாம் ஒவ்வொரு பிறவியிலும் இப்படியே போய்க் கொண்டிருந்தால் அவளை விட பெரிய சாகசக்காரி யார் இருக்க முடியும்?
कबीर माया मोहिनी, भई अंधियारी लोय ।
जो सोये सो मुसि गये, रहे वस्तु को रोय ॥
இருளதும் கவ்வுதே கபீரா, மாயா மோகினி் சாலம் பார்
இருளில் உறங்கி இழப்பார், அருநிதி போனதாய் அழுவார்
(இருள் =அஞ்ஞானம் ; இருளில் உறங்கி = அஞ்ஞானத்தில் மயங்கி)
மாற்று :
மருளாய் பிடிக்குது கபீரா, மாயா மோகினியவள் ஆட்டம்
பெருநிதி போச்சுது தியங்கி, என்னே அவர்தம் திண்டாட்டம்
மாயையின் கவர்ச்சியில் மனம் வசப்பட்டு ஆத்மனின் உண்மை நிலையை மறந்து நிற்பதும் ஒரு வித உறக்கமே!
எப்போதாவது பெரும் சான்றோர்கள் நமக்கு காலம் விரயமாகிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை சொல்லும் போது, அந்த நிஜத்தை நம் செய்கைகளின் பின்ணணியில் பார்த்து எவ்வளவு சத்தியம் அது என்று புரிந்து கொள்ளும் போது மனம் அதை நினைத்து வருத்தப்படுகிறது. ஆத்மாவைத் தொலைக்கமுடியாது. ஏனெனில் நம் ஓட்டத்திற்கே அதுதானே ஆதாரம். அப்போது அந்த பெருநிதி என்ன?
குருஅருளால் கிடைக்கக் கூடிய சச்சிதானந்த அனுபவமாகத் தானே இருக்கமுடியும்?
அந்த பெருநிதியை அகண்டரஸம் என்று ஆவுடையக்காள் குறிப்பிடுகிறார். அதனோடு மாயையின் சாகச நாட்டியத்தைப் பற்றியும் ஆவுடையக்காள் ஒரு அழகான கீர்த்தனையாகப் பாடியிருக்கிறார்.
( ஆவுடையக்காள் பற்றிய முதல் பகுதிக்கு இங்கே சுட்டவும் )
ராகம் :ஸஹானா
பல்லவி
அதிக சாமர்த்தியம் மாயை உந்தன்
வெகு வித நாட்டியம்
அனுபல்லவி
அகில பிரபஞ்சமாய் ஆனதும் போராமல் அகண்ட ரஸம் தன்னை மறைத்தாய் தெரிய வொட்டாமல்
சரணம்
ஸ்படிக மண்டபத்தில் சுவானம் தன்னைத் தவிர
கண்ட விடத்தில் சாடி ஓடிக் கொண்டு கூடிக் குலைக்கும் போல்
நானா விகல்பித நாய் போல் அலைய வைத்தாய் (அதிக)
சுவரில்லா சித்திரம் போல் உந்தன் ஸ்வரூபம்
அஸத்தியம்
ஜரையில்லை நரையில்லை
ஜனன மரணமில்லை
கரையில்லை
உன்னுடைய காரிய விசித்திரங்கள் (அதிக)
ஸஹஸ்ரத்தில் ஒருத்தன் உன்னையும் பார்க்க
ஸாமர்த்திய கர்த்தன்
ஸர்வமும் பிரம்மமாய்
தான் தானே ஸர்வமாய்
ஸ்வாமி வெங்கடேசுவரர் குரு கிருபையினாலே (அதிக)
(அகண்ட ரஸம் மறைத்தல் = ஆத்மானுபவத்தை அறிய விடாமல் செய்வது)
நமக்கு மூப்பு உண்டு, நரையுண்டு ஜனன மரணமுண்டு. ஆனால் அந்த மாயக்காரிக்கு இவையெதுவும் கிடையாது. அவளுடைய விசித்திரமான போக்குக்கு எல்லையும் கிடையாது.
அதற்கு அவர் சொல்லும் உதாரணமும் வெகு பொருத்தம்.
கண்ணாடி மண்டபத்தில் புகுந்த நாயைப் போன்றதாம் நம் நிலைமை. தன்னைச் சுற்றிலும் காணப்படும் நாய்களெல்லாம் தன் பிரதிபிம்பம் என்று அறியாது மதி மயங்கி பல வேறு நாய்கள் என்றெண்ணி சுற்றிச் சுற்றி குலைக்கும் நாயைப் போலவே மாயை நம்மை அலைகழிக்கிறது.
பரமாத்மத்தில் ஒன்றுபட்டிருக்கும் நாம் மாயையினால் பிரதி பிம்பங்களாகக் கண்டு நமக்குள் வேற்றுமை பாராட்டுகிறோம். சண்டை போட்டுக் கொள்கிறோம், நிம்மதியை இழக்கிறோம்.
என்ன ஒரு அழகான உதாரணம்!
ஆத்மனை அறிந்து கொண்ட பிறகு சர்வமும் பிரம்மமே. காணப்படும் யாவையும் அதன் பிம்பங்களே. அது பிடிபடாமல் போவதால்தான் உதாரணத்தில் குறிப்பிடப்பட்ட நாயைப் போலவே அலைகிறோம்.
ஒருமுறை ரமணரிடம் சாப்பிடும் போது சுப்புலக்ஷ்மியம்மாள் “ காரமானவற்றைத்தான் பகவான் எதுவும் போட்டுக் கொள்வதில்லை.கூட்டு உரப்பில்லாமல் இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாமே” என்று மெதுவாகச் சொன்னார்.
அதைக் கேட்ட பகவான் “அதான் போட்டிருக்கிறாயே! போதுமே! இந்த ஒரு வாயால் சாப்பிட்டால்தான் சாப்பிட்டதாகுமா? இத்தனை வாயால் சாப்பிடுகிறேனே! அது திருப்தியாகாதா? “ என்று சகஜமாகக் கேட்டார்.
அவர் எப்போதும் இலையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளைத் தனித்தனியாக ருசிக்காமல் எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டி பிசைந்து உண்பதே வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் தனிப்பட்ட வகை பற்றிய ருசி அறியமாட்டார். யாராவது குறிப்பிட்டுக் கேட்ட போது
“....எனக்கு ஒன்றிலே தான் ருசி. இவர்களுக்கு பின்னத்தில்தான் ருசி. என்ன செய்வது? அவரவர்கள் ருசிக்குத் தகுந்த மாதிரி தானே சாப்பாடு அமையும் “ என்று பெரிய தத்துவத்தை மிக எளிய முறையில் அன்பர்களுக்கு உணர்த்தி விட்டார்.
இதிலிருந்து பகவான் ரமணர் ஏகாத்ம சொரூபானுபவத்திலேயே திளைத்திருந்தார் என்பது புலனாகிறது. ஆத்மாவை தன்னில் உணர்ந்த பின்னர் தன்னைச் சுற்றி அமர்ந்து உணவு உண்ணும் ஒவ்வொருவரும் அதே ஆத்மாவின் பிம்பங்களே என்ற உண்மை அவருள் மிளிர்ந்ததால் அவர் பளிங்கு மண்டபத்தின் மாயைக்கு அப்பாற்பட்டவராய் ஆகிவிட்டிருந்தார்.
அக்காள் தம் குரு ஸ்ரீதர வெங்கடேசுவரரை மேற்கண்ட பாடலில் புகழ்வது போலவே, ரமணரும் ‘ஸஹஸ்ரத்தில் ஒருத்தர், சாமர்த்திய கர்த்தர்; ஸர்வமும் பிரம்மமாய் தானே ஸர்வமாய்” திகழ்ந்த ஞானி.
அக்காளைப் போலவே கபீரும் இம்மாதிரி சாமர்த்தியசாலிகள் போற்றப் படவேண்டியவர்கள் என்று இன்னொரு ஈரடியில் சொல்கிறார்.
माया तो ठगनी भई, ठगत फिरै सब देस ।
जा ठग ने ठगनी ठगी, ता ठग को आदेस ॥
ஏய்ப்பதே தொழிலாம் மாயைக்கு, ஏய்த்துத் திரிவாள் சகமெலாம்
ஏய்ப்பவளை ஏய்ப்பவர் வந்தால், ஏய்ப்பவரை ஏற்றிப் போற்றலாம்
அந்த சாமர்த்தியசாலியை உறுதியாகப் பற்றிக் கொண்டால் அவன் நம்மையும் உடனழைத்து செல்லுவான்.
हम तो बचिगे साहब दया से, शब्द डोर गहि उतरे पार ।
कहत कबीर सुनो भाई साधो, इस ठगनी से रहो हुसियार ।
”குருவின் உபதேச மந்திரத்தைப் பிடித்துக் கொண்டு நாங்கள் பிழைத்துக் கொண்டோம்; கபீர் சொல்கிறான், சாதுக்களே! கவனமாயிருங்கள் அந்த கள்ளியிடம்“ என்று கபீர் இன்னொரு பாடலிலும் மாயையைப் பற்றி எச்சரிக்கிறார்.
மாயையின் பிடியிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் குருவின் அருள் நாடி அவரை கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு கிளிக்கண்ணியாக ஆவுடையக்காளும் பாடுகிறார்.
எத்தனையோ கோடி ஜென்மம் எடுத்தேன்
கணக்கில்லாமல்
போதமிழந்து விட்டேன் கிளியே,
புத்தி மயக்கத்தினால
போதம் தெளிவேனோடி
போக்குவரத்தை விட்டுத்
தேறித் தெளிவேனோடி கிளியே
பரப்பிரம்ம வஸ்துவன்றோ பரமகுரு
கிருபையால்
பற்றிப் பிடிப்போமடி கிளியே
இப்பவமும் துலையுமடி
எட்டாத கொப்பு அடியோ
என்னால் முடியுமோடி
தட்டிப் பறிக்க என்றால் கிளியே
ஸாதுக்கள் வேணுமடி
ஆதி அந்தமற்ற ஆசாரியார்
கிருபையினாலே
எட்டிப் பறிப்போமடி கிளியே,
எல்லோரும் புஜிப்போமடி
பற்றிப் பறிப்போமடி கிளியே
பிரம்ம ரஸத்தை
எல்லோரும் புஜிப்போமடி கிளியே,
எல்லோரும் புஜிப்போமடி
( போதம் = ஞானம்; போக்குவரத்தை விட்டு = பிறப்பு இறப்பு இல்லாமல்; எட்டாத கொப்பு= உயரமான மரக்கிளை; இப்பவம் துலையுமடி = பிறவிப்பிணியை தொலைத்தல் )
’வாருங்கள் யாவரும் இங்கே பெருநிதியாம் பிரம்மரஸம் நாமெல்லாம் புசிக்கவென்றே காத்திருக்கிறது’ என்று கபீரும் அக்காளும் எவ்வளவு கூவிய போதும் நம் காதுகளில் விழுவதே இல்லையே !! மாயையின் இருளில் உறங்கிக் கிடக்கும் நமக்கு விழிப்பே வராதா :(
(குறிப்பு : நீளம் கருதி ஆவுடையக்காளின் பாடல்களில்- பொருள் சிதையா வண்ணம் -சில பகுதிகளையே சுட்டிக் காட்டி இருக்கிறேன். முழுப்பாடல்கள் கொடுக்கப்படவில்லை. இவைகள் ஞானானந்த நிகேதன், தபோவனம் அவர்களால் பிரசுரிக்கப்பட்ட ‘செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் -பாடல் திரட்டு’ என்ற புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ( www.srignanananda-niketan.org)
Saturday, September 06, 2008
பெருநெறி பற்றும் பேராளர்
வால்-பையன் ஒருவன். துறுதுறுவென்று அலைபாயும் கண்கள். ஒரு நிமிடம் கூட கை கால்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்க இயலாது. எதை வேண்டாம் என்று தடுப்பரோ அதை செய்து பார்த்துவிடும் துடிப்பு. அவன் கை வைத்தால் அந்த பொருள் அதோகதிதான். ஆனால் அவன் செல்லப்பிள்ளை.
ஓரொரு சமயம் ”அம்மா, இனிமே செய்யமாட்டேன், நல்ல பையனா இருக்கேம்மா ” என்று அடிபட்டு அழும்போது கோபமெல்லாம் கரைந்து அவனை உச்சிமுகந்து குளிர்ந்து போகிறாள் தாய்.
அந்த இன்பம் சிறிது நேரத்திற்குத்தான். அது அவளுக்கும் தெரியும்.
பின்னர் மீண்டும் தொடர்கிறது அர்ச்சனை, “சனியன், குரங்கு! கைய வச்சதெல்லாம் நாசம். ஊர்ல எல்லோருக்கும்தான் பொறக்கலையா? அது என்ன! எனக்குன்னு இப்படி ஒரு பிசாசு வந்து வாய்ச்சிருக்கு'' . ஆற்றாமையால் புலம்புகிறாள் அவன் தாய்.
பிறத்தியாருக்கு சிரிப்பு, வேடிக்கை. அந்த தாயின் நிலையை புரிந்து கொண்டவர் அவளுடைய மாமியார் மட்டும் தான். “ஹும் அப்பனைப் போல பிள்ளை. போகப் போக சரியாயிடும் பாரேன். இன்னிக்கு எவ்ளோ சாதுவா இருக்கான். அவன் குழந்தையா இருந்த போது படுத்தின பாடு இருக்கே...........” கதை தொடர்கிறது.
நம்முடைய மனதுடன் நமது போராட்டம் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. அது செல்லப்பிள்ளை. இழுத்த இழுப்பெக்கெல்லாம் ”முடியாது” என்று சொல்ல முடியாமல் அதன் வழியே ஓடுகிறது சித்தம்.
நல்லதற்கு அல்ல என்று புரிந்தாலும் ஒரு இயலாமை. வாழ்க்கையில் துன்பம் வருத்தும் போது ஞானிகளின் பேச்சை கேட்பது போலவும் புரிந்து கொண்டது போலவும் ஒரு பாவனை. ஆனால் வேதாளம் மீண்டும் மரம் ஏறிக்கொள்கிறது.
பில்வமங்கள் என்பவன் இப்படித்தான், தன் மனதின் போராட்டத்தை வழிக்குக் கொண்டுவர பல வருடங்கள் காட்டிலே சென்று தவம் செய்தான். சற்றே சித்தம் தெளிந்தது. இப்போது ஊருக்குள் செல்வதால் மக்களுடன் பழகுவதால் ஏதும் கேடு வராது என்றெண்ணி பிட்சைக்காக ஊருக்குள் போய் வர ஆரம்பித்தான். ஒருநாள் வீதியிலே மிக அழகான பெண்மணி நடந்து செல்வதைக் கண்டதும் வேதாளம் மரமேறியது. அவளையே பின் தொடர்ந்தான். அவள் தன் வீட்டுக்குள் சென்றதும் இவன் வாயிலருகே நின்றிருந்தான்.
வெளியே ஒரு சாது பிட்சைக்காக நிற்கிறார் என்றெண்ணி அப்பெண்மனியின் கணவர் அவரை மரியாதையுடன் வரவேற்கிறார். வெளியே நின்றபடியே ”வீட்டின் எஜமானியை நான் காணலாமா?” என்று வினவுகிறான் பில்வமங்கள். அவளும் வந்து பாதநமஸ்காரம் செய்கிறாள். “ அம்மணி தங்கள் தலையில் உள்ள கொண்டை ஊசியை தரமுடியுமா” என்று யாரும் கேட்காத யாசகம் கேட்கிறான். ஏதும் புரியாதவளாய் கொண்டையின் ஊசியை கழற்றிக் கொடுத்தாள் அப்பெண்மணி. அடுத்து அவருடைய செய்கை யாவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“கிருஷ்ணனைத் தவிர வேறெதுவும் நீ காணக் கூடாது” என்று கூறியபடியே தன் இருகண்களையும் அந்த ஊசியினால் அங்கேயே குருடாக்கிக் கொண்டான்.

மனம் சில கணங்களே தடம் புரண்டாலும், அவ்வளவு நாட்கள் செய்த தவத்தின் பயனாய், (பின்னாலே தரப் போகும் கிருஷ்ண தரிசனத்திற்காக) தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளும் மனவலிமையை அந்நேரத்தில் இறைவனே கொடுத்தான் போலும்.
பிற்காலத்தில் ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்மிர்தம் பாடிய லீலா ஷுகர் அவர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கான மனப் போராட்டம் அத்தகையது.
இந்த நிலையைக் கண்டு கபீரும் பரிதாபம் கொள்கிறார்.
मन के मारे बन गये, मन तजि बस्ति मांहि ।
कहैं कबीर क्या कीजिए, यह मन ठहरै नांहि ॥
மனமொ ழியவனம் புகுவாய், மாய்வ தில்லை மனமே
மனம்நிற்க வழியு மேது, கபீரது நிலையின்றி திரியுமே
புலன்களால் அலைக்கழிக்கப்படும் வரை மனம் ஒரு நிலைகொள்ளாது. அந்த அவத்தையை திருநாவுக்கரசர் இப்படிச் சொல்கிறார்.
ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துறையுடைத்தாய்
அரைமுழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து
பெருமழை வாழ்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன்
கருமுகில் தவழும் மாடக் கச்சியேகம்ப னீரே
( குட்டம்= குட்டை, நீர்நிலை; பெருமழை= பெரு நெறி, முக்திக்கான ஞானம்; முதலை ஐந்து= ஐம்புலன்கள்)
ஐம்புலன்களின் ஆட்டம் அடங்காத வரையில் நமது ஆன்மீக நாட்டம் வெறும் 'பிதற்றலாக'த்தான் இருக்கும் என்று இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
கட்டுபாடுள்ள மனம் தான் ஞானத்திற்கு வழி காட்டமுடியும். ஆனால் பொறி வழித் திரியும் அதனை பிசாசு, குரங்கு, சனியன் என்று பலவாறாக பலர் வைதாலும் அது செல்லக் குழந்தைதான். அதைவிட்டால் நம் பிறவிக்கு அர்த்தம் கிடையாது. எப்படி? கபீர் தரும் இந்த உதாரணத்தை பார்ப்போம்.
कुंभै बांधा जल रहै, जल बिन कुंभ न होय ।
ज्ञानै बांधा मन रहै, मन बिनु ज्ञान न होय ॥
கலசத் துள்ளே நீரடக்கம், நீரின்றி யதுகலச முமாகுமோ
ஞானியுள் மனமொ டுங்கும், மனமின்றி ஞானமும் வருமோ
ஒரு சிறிய செம்பினுள் நீரைப்பிடித்து மாவிலையும் தேங்காயும் அதன் மேல் வைத்து “கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி.... என்று பிரார்த்திக்கும் போது அது கலசம் என்ற ஒரு மேலான அந்தஸ்து பெறுகிறது. சிவோஹம் சிவோஹம் என்றோ, ஸோஹம் ஸோஹம் என்றோ மனதை நிறுத்த முடிந்தால் நம் பிறவியும் சிவனடியைப் பற்றிக்கொள்ள தகுதியுடையதாகிறது.
ஆனால் மனம் என்று ஒன்று இல்லாமலே போனால் இதை எப்படி செய்ய முடியும்? அல்ஜெமிர் (Alzhemier disease) வியாதியால் பீடிக்கப் பட்டவர்களுக்கு மனம் வேலை செய்யாது (செய்தாலும் அதை வெளிப்படுத்த இயலாது) அப்படி மனமற்றவர்களை ஞானிகள் என்று ஏற்றுக் கொள்ளுமா உலகம் ?
ஞானிகளிடம் மனம் முழு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். உடல் வலிமையுடன் கூடிய ஆற்றல் உடையவனை வீரன் என்று சொல்வர். மன வலிமை மிக்கவர்கள் தீரன் எனப்படுவர்.
யாழ்பாணத்து யோகசுவாமி ரமணாசிரமத்திற்கு விஜயம் செய்த போது இரு ஞானிகளுக்கும் இடையில் பேச்சு பரிவர்த்தனை எதுவும் இருக்கவில்லை. திரும்பி செல்லும் வழியில், வெகு நேரத்திற்குப் பின் “தீரனடா அவன்” என்று மட்டும் குறிப்பிட்டாராம்.
இந்த அடங்காத மனதை வழிபடுத்துவது எப்படி?
ரமணகீதை ”தீரம் சேர் புத்தியினால்” என்று வழி சொல்கிறது.
தீரஞ்சேர் புத்தியினாற் சித்தத்தை மெல்ல மெல்ல
நேரச் செயவேண்டு நிச்சலன - மாரதனே
சித்தத்தை யான்மாவிற் சேர்த்திடுக மற்றெதுவு
மித்தனையு மெண்ணிடாதே மந்தி- யொத்தே (26)
எதுவுந் திரமின்றி யென்றுமலை சித்த
மெதெதனைப் பற்றியே யேகு-மததினின்
றீந்த்தந்தச் சித்தத்தை யெப்போது மான்மாவிற்
சேர்த்தித் திரமுறவே செய்யிங்ஙன் - சேர்த்தே (27)
இரண்டாவது பாடலை பிரித்து படித்தால் :
.
..................................... மந்தி ஒத்தே
எதுவும் (ஸ்)திரம் இன்றி என்றும் அலை சித்த(ம்)
எதெதனைப் பற்றியே ஏகு(ம்)- அததனின்(று)
ஈந்து அந்தச் சித்தத்தை எப்போதும் ஆன்மாவில்
சேர்த்து (ஸ்)திரமுறவே செய் இங்ஙன் - சேர்த்தே
ஆன்மாவை உணர்ந்த ஞானியால் மட்டுமே ஆன்மாவை உணர்விக்க முடியும்.
அப்படி வழிகாட்ட ஒரு குரு கிருபை கிடைக்காத வரையில் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
லீலாசுகரின் பிரபலமான 'கஸ்தூரி திலகம் 'என்று தொடங்கும் பாடலை இந்த சுட்டியில் கேட்கலாம். வலையேற்றியிருக்கும் அன்பருக்கு நன்றி.
அதையே பண்டிட் ஜஸ்ராஜ் அவர்கள் குரலில் கேட்க

Subscribe to:
Posts (Atom)