கபீரின் வாழ்க்கை இரண்டு மதத்தினரையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்கியது. இஸ்லாத்திலிருந்து ஒருவனே கடவுள் என்ற கோட்பாட்டையும் இந்து மதத்திலிருந்து கர்மவினைகளின் கோட்பாட்டையும் ஒருங்கே வலியுறுத்தியவர் அவர். கடவுள் ஒருவனே என்றாலும் அவன் எங்கோ வெளியே தனியாக அமர்ந்து ஆட்சி செய்யவில்லை. ஒவ்வொரு ஜீவனிலும் அந்த இறைசக்தியே இலங்குகிறது. முயற்சி செய்வோருக்கு தன்னுள்ளேயே அனுபவ பூர்வமாக உணரக்கூடிய அத்வைத நிலையையும் அவர் அடைந்திருந்தார். இக்கருத்துகளை எதிரொலிக்கும் கபீரின் ஈரடிகளைப் பார்க்கும் முன், தமிழ் நாட்டு ஞானியர் சிலர் இதையே எவ்வளவு தெளிவாக எடுத்துரைக்கிறார்கள் என்று பார்ப்போம்.
சிவ வாக்கியர் பாடல் ஒன்று
காண வேண்டும் என்று கடல் மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே
வேணும் என்ற அவ்வீசர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்ற சீவன் தான் சிவமாகுமே
(தாணு =நிலைபேறு, தூண் ; மெய்யுளே தரித்தல் = உடம்புள்ளே உணர்தல் )
பூரண மாலையில் பட்டினத்தடிகள் சொன்னது :
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே (733)
ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீயிருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள்தாம் பூரணமே (712)
இறைவனை "கண்ணின் மணி" என்பது சம்பந்தர் தேவாரம் :
கண்ணிடை மணி ஒப்பாய்,பழத்தினில் சுவையொப்பாய்
பண்ணிடை தமிழ் ஒப்பாய் கடுவிருள் சுடரொப்பாய்......
இப்பொழுது கபீரின் எண்ண ஓட்டம் இவர்களோடு எந்த அளவிற்கு இணைந்து போகிறது என்பதைக் காணலாம்.
ज्यॊं नैनन मॆं पूतली, त्यॊं मालिक घर माँहि
मूर्ख लॊग न जानिए , बाहर ढूढ़्त जाँहि
ஜ்யோன் நைநன் மேன் பூத்லீ, த்யோம் மாலிக் கர் மாஹி
மூர்க் லோக் ந ஜாநியே பாஹர் டூம்டத் ஜான்ஹி
கண்ணிடை மணி போலும் உள்ளிடை உறைவான் பரமன்
மண்ணிடை அலைவனே எங்கும் தேடி கருதறியா பாமரன்
जैसॆ तिल मॆ तैल है चक्मक मॆ आग
तॆरा साँइ तुझ मॆ है जाग सकॊ तॊ जाग
ஜைஸே தில் மேன் தைல் ஹை, சக்மக் மேன் ஆக்
தேரா ஸாயி துஜ் மே ஹை, ஜாக் ஸக் தோ ஜாக்
எள்ளுள் உறைவது தைலம் சிக்கிமுக்கியுள் உறை தழலே
உள்ளுள் உறைவான் ஈசன் விழிப்பரோ உணர்வில் இவரே
(சிக்கி முக்கி = ஒரு வித கல். காய்ந்த சருகுகளை சேர்த்து இரண்டு கற்களை ஒன்றுக்கொன்று உரசும் பொழுது தீப்பொறி உண்டாகி அவை தீப்பிடித்துக்கொள்ளும். ஆதிகாலத்து "Leaf Lighter" உள் உள் = உள்ளத்தினுள்ளே )
அடடா எங்கே நம் திருமூலரைக் காணோம் என்று கவலைப் பட வேண்டாம். அவர் சொல்லாத எதையும் யாரும் புதிதாக சொல்லி விட முடியாது. இந்த உடலை இறைவன் கொடுத்திருப்பதே தன்னை உணரத்தான் என்பதைக் கூறும் ஒரு திருமந்திரம்
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே
(உறு பொருள் = மேன்மையான பொருள் : உத்தமன் = இறைவன் : ஓம்புதல் = போற்றுதல்)
"கபீரின் பக்தி என்னும் வைரமணியை தமிழ் என்னும் பரிதியில் காட்டி, திருமூலர், ஔவை, வள்ளுவர், அருணகிரி தாயுமானவர்,பட்டினத்தார், பாரதி போன்ற பல்வேறு வண்ண பிரிகைகளை கண்டு மகிழலாம் என்றால் மிகையில்லை" - (நன்றி; திருமதி உஷா காமேஷ்வரனின்-தனி மடல்)
1.//கண்ணிடை மணி போலும்//
ReplyDelete2.//எள்ளுள் உறைவது தைலம் சிக்கிமுக்கியுள் உறை தழலே
//
முன்னது தெளிவாய் தெரிவது, பின்னது தெரியாமல் மறைந்து இருப்பது.
தெரிந்தும் தெரியாமலும் உறைந்து இருக்கிறானல்லவா!
நன்றி ஜீவா. அவரவர் கண் மணியை அவர்களேப் பார்த்துக் கொள்ள ஒரு முகக்கண்ணாடி தேட வேண்டும். அதாவது ஒரு தனிப்பட்ட முயற்சி வேண்டும். இல்லாவிட்டால் அதன் மூலம் உலகைக் கண்டாலும் அதைக் கண்டதாகாது. உள்ளிருந்து நம்மை இயக்கினாலும் இறைவனை அறிய முயற்சி இல்லாமல் முடியாது என்பதாக பொருள் கண்டேன். சரியா ?
ReplyDelete