மலையடிவாரங்களில் உள்ள தோட்டங்களில் யானைகளின் தொந்தரவு அதிகமாகி விட்ட படியால் அவைகளைத் தடுக்க மின்வேலி அமைத்துக் கொண்டிருந்தனர் சில விவசாயிகள். அதைப்பற்றி கேட்ட பொழுது அவர்கள் சொன்னது "எல்லாம் தண்ணியத் தேடிதாங்க கீழ வருது. மலை மேல தண்ணி கெடச்சதுன்னா அதுங்க மேலேயே சுத்திக்கிட்டு இருக்குமுங்க. மனுசங்க இருக்கிற எடத்துக்கு வராதுங்க " என்றனர். பொறிதட்டினாற் போல
கபீரின் ஒரு தோஹாவுக்கு சட்டென்று விளக்கம் கிடைத்தது.
ऊँचे पानी ना टिके नीचे ही ठहराय
नीचा होय सो भरी पिये, ऊँचा प्यास जाय
ஊன்சே பானீ நா டிகே, நீசே ஹீ டஹராய்
நீசா ஹோய் ஸோ பரீ, ஊன்சா ப்யாஸ் ஜாய்
உயரே நிலைக்குமோ விண்ணிழி நீரும், விரைந் திறங்கி மடுவாகும்
உயரே நிற்பவன் தவித்திருப்பான், இறங்கி வந்தவன் திளைத்திருப்பான்
(விண்ணிழி = விண் +இழி வானத்திலிருந்து இறங்கிய. மடு =நீர் நிலை)
முதலில் படித்து மொழி பெயர்த்தபொழுது இது இன்றய நடைமுறைக்கு பொருந்துமா என்ற கேள்வி மனதில் தோன்றியது. தற்காலத்தில் மின் வசதிகள் பெருகிவிட்ட நிலயில் தண்ணீர் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லப் படுகிறது.
இந்நிலையில் மேலே இருப்பவன் தவித்திருப்பான் என்று எப்படிச் சொல்வது என சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில் மேலே சொன்ன சம்பவம் மிகச் சரியான உதாரணமாகத் தோன்றியது. கவிஞர்கள், ஞானிகளின் சொற்கள் என்றும் பொய்க்காது. நமது புரிந்து கொள்தலில் வேண்டுமானால் முன்பின் முரண் இருக்கலாம் என்பதும் புரிந்தது. உயரே இருப்பவன் இறங்கி ஆகணும்.
இறைவனின் அருள் மழை எல்லோருக்குமாகத்தான் பொழிந்து கொண்டிருக்கிறது.அதை உணர்ந்து அனுபவிக்க முடிபவர்களுக்கு வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே. உணராமல் போனவர்களுக்கு துன்பமே.
உணர்பவர்கள் யார், உணராதவர்கள் யார்?
ஈடுபட்டுள்ள செயலோடு தன்னை கர்த்தாவாக ஐக்கியப் படுத்திக்கொண்டு 'எல்லாம் தன்னால் நடக்கிறது, வெற்றிகளுக்கெல்லாம் தன் திறமையே காரணம் என்று நினைத்துக் கொள்வது; வராமல் போன வெற்றிகளுக்கு பலரிடமும் குறை கண்டு பலரையும் தூற்றிக்கொண்டுத் திரிவது ' இவையே பெரும்பாலும் காணப்படும் உலகினரின் இயல்பு. கபீரின் கண்ணோட்டத்தில் கூற வேண்டுமானால் இவர்கள் 'உயரே' வசிப்பவர்கள். இவர்கள் மனம் கரடுமுரடான பாறைகளால் ஆனது. நம்மில் காணப்படும் போட்டி, பொறாமை பாசாங்கு, இவைகளே அப்பாறைகள். அத்தகைய நெஞ்சங்களுக்கு இறைவனின் அருளைப் போற்றவோ தக்கவைத்துக்கொள்ளவோ நேரமும் அவசியமும் தெரிவதில்லை. இதனால் அவர்கள் மனம் வறண்டவர்களாக சுயநலப் போக்குள்ளவர்களாகக் காணப்படுவர். அகந்தையினால் தங்களை மிக உயர்ந்தவர்களாக எண்ணிக் கொள்ளும் போக்கு உடையவர்கள் இவர்கள். இவர்கள் பொதுவாக நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தேடி அலைவர். இவர்களின் நிலை நீருக்காக தவிப்பவர்களை ஒக்கும்.
கீழிருப்பவர்கள் யார்? இவர்கள் மன அடக்கம் உள்ளவர்கள். யாவரையும் சமமாக பாவிக்கக் கூடியவர்கள். பிறருடைய துன்பத்தைக் கண்டபோது மனம் வருந்தி அவர்களுக்கு உதவி செய்ய விரைபவர்கள். இத்தகைய குணங்களால் அவர்களுக்கு மகிழ்ச்சி இயல்பாகக் கூடுகிறது. தங்களுக்கு இறைவன் அளித்திருக்கும் வளமைக்கு இடைவிடாது நன்றி தெரிவிப்பவர்கள்.(இணைப்பைச் சுட்டவும்). அவர்கள் நன்றிக்குக் காரணம் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வளமைகூட இல்லாது பலரும் வாழ்க்கை நடத்தவில்லையா என்ற எண்ணம் தான். நன்றி பெருகும் மனதில் பிறரை குறைகூறும் குணம் இருக்காது. குறைகளை காணா மனம் மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன அறியும். அதுவே இறைவனின் கோவில் ஆகிறது. அவர்கள் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்கள். அடக்கமுடையவரின் மனநிலையை இராமலிங்க அடிகள் அழகாக எடுத்துரைக்கிறார்.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளம் தான் சித்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்து கொண்டேன் அவ்
வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட
என் சிந்தை மிக விழைந்ததாலோ
எளியார்க்கு ஏவல் செய்ய விரும்பும் மனம் இன்னும் எத்தனை எளிமையானதாக இருந்திருக்க வேண்டும்.
மகிழ்ச்சியைத் தேடி அலைவோருக்காக சொல்லியிருக்கும் கபீரின் உதாரணம் மிக எளியது. யாவரும் புரிந்து கொள்ளக்கூடியது.
அருமை.
ReplyDeleteநன்றி துளசி மேடம்.
ReplyDeleteவலைப்பூ ஆரம்பித்து எழுதலாம் என்பதற்கு துளசிதளமும் ஒரு உத்வேகம் தந்துள்ளது. அந்த வகையில் இது ஆசானின் பாராட்டாகவே கருதுகிறேன். மீண்டும் வருக
குறைகளை காணா மனம் மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன அறியும். அதுவே இறைவனின் கோவில் ஆகிறது. அவர்கள் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்கள். அடக்கமுடையவரின் மனநிலையை இராமலிங்க அடிகள் அழகாக எடுத்துரைக்கிறார்.
ReplyDeleteஉண்மையான வார்த்தைகள்.ஆனால் இது அனுபவ சித்தியாக எவ்வளவு வருஷங்கள் ஆகுமோ?
வருக தி.ரா.சா.
ReplyDelete//அனுபவ சித்தியாக எவ்வளவு வருஷங்கள் ஆகுமோ?//
எத்தனை ஜன்மங்களோ என்றும் எனக்காக சேர்த்துக் கொள்கிறேன்.