நம்மில் பலருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் எடுத்த காரியத்தில் தொடர்ந்து பல தடங்கல்களை கண்ட அனுபவம் இருக்கும். அது வியாபாரத் தொடர்பானதாகவோ, திருமண விஷயமோ அல்லது உத்தியோக உயர்வு வீடு கட்டுதல் இத்யாதி காரணங்களுக்காக இருக்கலாம்.. சில அற்ப காரணங்களுக்காக கூடி வரும் போல இருந்தது கூட தட்டிப் போவதும் உண்டு. அத்தகைய நேரங்களில் -குறிப்பாக இந்திய மண்ணில் -நம்மை நாமே தேற்றிக் கொள்ள சொல்லிக் கொள்ளும் பொன்மொழி "எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்".
பல நாட்களுக்குப் பிறகு பின்னோக்கிப் பார்க்கையில் அப்படித் தட்டிப் போனதே வேறொரு வகையில் நல்லதாய் போனது என்று சந்தோஷப் படுவதும் உண்டு.
Many a time we are blessed by not getting what we desired.
வாழ்க்கையை ஒரு தத்துவக் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கற்றுக் கொள்ளும் போது மன உளைச்சலைப் பெருமளவு தவிர்க்கலாம். காலம் கனிவதன் அவசியம் தெரியாத போது நம் முயற்சிகளெல்லாம் வீணாகப் போனதாக எண்ணி மனம் துன்பப் படுகிறது. காலமறிந்து செயலாற்றுதலின் முக்கியத்துவத்தை வள்ளுவரும் ஒரு அத்தியாயம் முழுவதுமாக உரைக்கிறார்.
கொக்கக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கு போல அமைதியாக இருக்க வேண்டும். காலம் வாய்த்த பொழுது கொக்கு விரைந்து குத்துதல் போல விரைந்து செயல்பட வேண்டும்.
உள்ளத்தில் அமைதி இருக்கும் போதுதான் காலம் கனிந்து வருவதை அறியும் விவேகம் இருக்கும். அமைதி கொள்ளும்படி கபீர் மனதிற்கு உபதேசிக்கிறார். அதுவும் எப்படி ? ஒரு அழகிய உதாரணத்துடன்;
धीरे धीरे रे मना, धीरे सब कुछ होए ।
माली सीचे सौ घडा, ऋतु आये फल होए ॥
தீரே தீரே ரே மனா, தீரே ஸப் குச் ஹோயே
மாலீ ஸீசே ஸௌ கடா, ருது ஆயே பல் ஹோயே
நிறைவுறும் காரியம் யாவுமே, மெல்ல மெல்லவே மனமே
இறைப்பினும் குடந்நூறு தினமே காலத்தே வரும் பலனே
தாவரங்களுக்கு தண்ணீர் இன்றிமையாததுதான். தோட்டக்காரன் நாள் முழுவதும் நீர் இறைக்கலாம். ஆனால் தண்ணீர் ஒன்று மட்டும் செடி கொடிகளின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில்லையே. தோட்டக்காரனின் அவசரத்திற்காக அவை காய்த்து விடுவதில்லை. அதற்குரிய பருவம் வரும் பொழுது பூப்பூத்து காயாகி பின் கனியாகவும் தருகிறது. நம் முயற்சிகளுக்கான பலன் என்ன என்பதையும் எப்பொழுது தரவேண்டும் என்பதையும் காலம் அறியும்.
சீனாவில் ஒரு குறிப்பிட்ட மூங்கில் வகையைப் பற்றிச் சொல்வதுண்டு. சுமார் பன்னிரண்டு வருடங்கள் அதன் விதைகள் நேர்த்தி செய்து பாதுகாக்கப்பட்டால் பன்னிரெண்டாவது வருடத்தில் அது முளைவிடும். அடுத்த ஆறு மாதங்களில் அதன் வளர்ச்சி சுமார் தொன்னூறு அடிகள் ! இது நம் ஊரின் குறிஞ்சி பூக்களைப் போல் பன்னிரெண்டு வருட சுழற்சியை ஒத்ததாக இருக்கிறது இல்லையா! பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு நடக்க வேண்டிய அந்த வெளிப்பாட்டுக்காக உரிய மாற்றங்கள் ஏதோ அந்த விதைக்குள்ளே (அல்லது செடிக்குள்ளே) தொடர்ந்து நடைப்பெற்றிருக்க வேண்டும். நம் புற கண்களுக்கு அவை தெரிவதில்லை அவ்வளவுதான்.
ஒரு வருடத்திற்குள்ளான பருவ மாற்றங்களை பூகோள ரீதியாக தெரிந்து வைத்திருக்கிறோம். பல வருடங்களுக்குட்பட்ட உயிரியல் சார்ந்த பருவங்கள் பற்றி- மேலே சொன்ன உதாரணங்களைப் போல- வெகு குறைவாகவே நாம் அறிவோம். பல ஜென்மங்களில் தொடர்ந்து வரும் வினைவழி சார்ந்த வெளிப்பாடுகளை (பலன்களை) யாரே அறிவார்?
கபீர் ஒரு வகையில் ஔவையாரின் கருத்துக்களை (மூதுரை 05) எதிரொலித்திருக்கிறார் எனலாம்.
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றி பழா.
ஆனால் யாரும் தமது முயற்சியின்மைக்கு, தள்ளிப் போடும் சுபாவத்திற்கு நேரம் வரவில்லை என்பதை ஒரு போலியான காரணமாகக் கொள்ளக் கூடாது. முயற்சியின்மையை வன்மையாகக் கண்டிக்கிறார் கபீர். அதை வேறொரு சமயம் பார்ப்போம்.
எவ்வளவு எடுத்துக்காட்டுகள்; எடுத்து
ReplyDeleteஇயம்புவதில் எவ்வளவு தெளிவு?
எவ்வளவு சிறப்பு?.. தங்கள் சீரான
பணி மென்மேலும் தொடரட்டும்;
வாழ்க, நல்லோர்! வளர்க, அவர்தம் தொண்டு!
This is the first post of yoursthat I am reading..I am a great fan of the dohe..Superb..Keep continuing
ReplyDeleteமிக்க நன்று கபீரன்பன்.
ReplyDeleteஇந்த அவசர உலகில் தானாகக் கனிய விடாமல் தடி கொண்டு அடிப்பவர் தான் அதிகம். அவசர உலகமல்லவா... போட்டிகளும், பொறாமைகளும், கர்வங்களும் மலிந்து விட்ட கலியுலகில் கபீரின் ஈற்றடி துணை வரட்டும்.
தீரே தீரே நடந்தாலும் தீர்கமாய் நடந்தால் அவன் அருள் நிச்சயம் கிட்டும்!
நன்றி ஜீவி, sri மற்றும் ஜீவா, தங்களுடைய உற்சாகமூட்டும் பின்னூட்டங்களுக்கு. ஆன்மீகத்தில் உங்கள் உற்சாகம் மேலும் பெருக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
ReplyDelete