Sunday, July 29, 2007

நாளை என்பதை இன்றே செய்மின்

சென்றப் பதிவில் நிதானத்தை கடைபிடிக்கச் சொன்ன கபீரைக் கண்டோம். "தீரே தீரே ரே மனா" என்று மனதுக்கு அமைதி ஊட்டிய அதே கபீர் இங்கே காட்டும் அவசரத்தைப் பாருங்கள்.

कल करे सो आज कर , आज करे सो अब ।
पल मे परलय होएगा, बहूरी करोगे कब ॥

கல் கரே ஸோ ஆஜ் கர், ஆஜ் கரே ஸோ அப்
பல் மே பரலய் ஹோயேகா, பஹூரீ கரோகே கப்

நாளையதை இன்றே செய்மின் இன்றென்பதையும் இன்னே
ஊழியதும் வருமே நொடியில் பின் செய்வதும் நீ என்னே

(இன்னே =இப்பொழுதே : ஊழி = பிரளயம்)

வட இந்தியாவில் மிக மிகப் பிரபலமான தோஹாக்களில் இதுவும் ஒன்று. சர்வ சாமானியனாலும் 'கல் கரே ஸோ ஆஜ் கர்' என்று மேற்கோள் காட்டப்படுவது இது.

இறைவன் யாவருக்கும் வஞ்சமில்லால் கொடுத்துள்ள பெரிய செல்வம், நேரம். ஏழையாயினும் பணக்காரனாயினும் எல்லோருக்கும் அதே இருபத்திநான்கு மணித்துணிகள் தான். ஆனால் அதைத்தான் நாம் எப்படி எல்லாம் வீணடித்து விடுகிறோம். Procrastination என்கிற தள்ளிப்போடும் சுபாவம் நம்மில் பெரும்பாலோருக்கும் உள்ள ஒரு பொது குணம்.

அதிலும் நல்ல விஷயங்களுக்கென்றால் சற்று தாராளமாகவேத் தள்ளிப்போடுவோம்.

காலையில் எழுந்து ஒரு மணி நேரம் நடக்க வேண்டும் என்று தீர்மானித்து ஒரு வாரம் நடந்திருப்போம். ஊரிலிருந்து விருந்தினர் விஜயம் செய்தனர். அது போதாதா காரணம். அவர்களோடு பேசுவதற்கு வேறு நேரமே இல்லை என்று ஒரு சப்பைக்கட்டு கட்டும் மனம். அவர்களெல்லாம் ஊர் திரும்பட்டும் பின்னர் மீண்டும் தொடங்குவோம் என்று சிறிது காலம் தள்ளிப்போடுவோம் அதன் பின் அலுவலக வேலைகள் நிமித்தமாக சில நாள் வெளியூர் பயணம். திரும்பிய பின் 'நான் வீட்டிலேயே யோகா செய்து கொள்கிறேன்' என்று வேறொரு நொண்டிச் சாக்கு. யோகா முழுசாய் மூணு நாள் நடக்காது. காலை தினசரியில் வரும் பரப்பரப்பான செய்திகளில் கவனம் ஓடி விடும். அதை படித்து முடித்ததும் "அய்யோ ஆபீஸுக்கு லேட் ஆச்சு" என்று யோகாவுக்கு ஒரு முழுக்கு.

உடல் ஆரோக்கிய விஷயத்திலேயே நமக்கு இப்படி ஒரு அலட்சியம். பின் மன ஆரோக்கியத்திற்காக சொல்லப்படும் வழிபாடு, தியானம் இவைகள் எப்படி கைக்கூடும் ? இந்த இயற்கையான மனித சுபாவத்தை அறிந்தே கபீர் நிலையாமையை நினைவூட்டும் வகையில் எந்த கணத்திலும் காலன் நம்மை கொண்டு போகக்கூடும் என்று கூறுகிறார். 'பல் மே பிரளய் ஹோயேகா' என்ற சத்தியம் தோய்ந்த வார்த்தைகள் சில நிமிடங்களுக்குள் சுநாமி செய்த பேரழிவை நம் மனக்கண் முன்னே கொண்டு வருகிறது.

அவர் கூறுவதன் பொருள், கடவுள் கொடுத்துள்ள நேரத்தில் நாம் ஆத்ம லாபத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதே. ஏனெனில் கடைசியில் நம்முடன் வர இருப்பது நமது ஆத்ம சிந்தனைகளும் வினைப்பயன்களும் தான். ஆத்ம சிந்தனைகள் இறையருளுக்கு நம்மை தகுதியுடையவராய் ஆக்குகிறது. வினைப்பயனை உடல் அனுபவிக்கிறது.

சுவாமி விவேகானந்தர் சொல்வது போல் ' பூமியில் விழும் ஒவ்வொரு மழை துளியும் கடலை சென்றடைவது போல, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயற்கையின் படைப்பில் எல்லாம் இறைவனை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றன'. ஆத்ம சிந்தனையைப் பெருக்கிக் கொள்ளும் போது வெள்ளத்தின் வேகம் போல் பயணம் துரிதமாகிறது. அதற்கான முயற்சியில்லாமல் பொருள் ஈட்டுவதிலும் சுக போகங்களுக்காக தேடி அலைவதிலும் நேரம் போனால் நிலத்திலே வடிந்து பலகாலம் காத்திருக்க வேண்டிய தரையடி நீராகவோ, குட்டை நீராகவோ, ஏன் சாக்கடை நீராகவோ கூட மாறிப் போய் விடுகிறது நமக்கு கொடுக்கப்பட்ட பிறவி.

பரிபூரணானந்தத்தில் தாயுமானவர், எப்படி இறைவன் அருளுக்காக ஏங்காமல் காலம் வீணாகிறது என்பதை குறிப்பிடுகிறார்.

வாசா கைங்கரியம் அன்றி ஒரு சாதனம்
மனோவாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும்
பழகியறியேன் துறவு மார்க்கத்தின் எண்ணம் போல்
நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த
நினைவையும் மறந்த பொழுது நித்திரை கொள்வேன்....
யோசிக்கும் வேளையில் எல்லாம் உண்பதும்
உறங்குவதுமாய் முடியும் .......

(வாசா கைங்கரியம் = வார்த்தைகளால் பெரிதாக பேசுவது்; வாய்பேச்சு. நினைவிலிருந்து எழுதப்பட்டது. சற்று முன்பின் இருக்கலாம்)

வாலாயமாக பழகுதல் என்றால் முறையாக தொடர்முயற்சியுடன் ஒரு வித்தையை பயிலுவது. மனத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வர அப்படி எதுவும் செய்யாமல் வெறும் உண்டு உறங்கி காலத்தை வீணாக்குகின்றேனே என்று கலங்குகிறார்.

எத்தனை கபீர்கள் வந்தால் என்ன அல்லது தாயுமானவர்களும் பரமஹம்சர்களும் வந்தால்தான் என்ன? அவ்வளவு சுலபமாகவா நம் தலைக்குள் போகிறது ? எல்லாம் உண்பதும் உறங்குவதுமாய் தான் போய்க் கொண்டிருக்கிறது.

4 comments:

  1. காலையில் எழுந்து ஒரு மணி நேரம் நடக்க வேண்டும் என்று தீர்மானித்து ஒரு வாரம் நடந்திருப்போம். ஊரிலிருந்து விருந்தினர் விஜயம் செய்தனர். அது போதாதா காரணம். அவர்களோடு பேசுவதற்கு வேறு நேரமே இல்லை என்று ஒரு சப்பைக்கட்டு கட்டும் மனம். அவர்களெல்லாம் ஊர் திரும்பட்டும் பின்னர் மீண்டும் தொடங்குவோம் என்று சிறிது காலம் தள்ளிப்போடுவோம் அதன் பின் அலுவலக வேலைகள் நிமித்தமாக சில நாள் வெளியூர் பயணம். திரும்பிய பின் 'நான் வீட்டிலேயே யோகா செய்து கொள்கிறேன்' என்று வேறொரு நொண்டிச் சாக்கு. யோகா முழுசாய் மூணு நாள் நடக்காது. காலை தினசரியில் வரும் பரப்பரப்பான செய்திகளில் கவனம் ஓடி விடும். அதை படித்து முடித்ததும் "அய்யோ ஆபீஸுக்கு லேட் ஆச்சு" என்று யோகாவுக்கு ஒரு முழுக்கு.

    ஆமாம் எப்போது என் வீட்டுக்கு வ்ந்தீர்கள் அப்படியே என் விஷயத்தை புட்டு புட்டு வைத்து விட்டீர்களே

    ReplyDelete
  2. Like minded people think alike மட்டுமல்ல Do alike -உம் போல இருக்கு. என் விஷயத்திலும்அதே கதைதான். ஆகையால் தான் 'உண்பதும் உறங்குவதுமாய் போய்க் கொண்டிருக்கிறது' என்று முடித்துள்ளேன்

    ReplyDelete
  3. அவ்வளவு சுலபமாகவா நம் தலைக்குள் போகிறது ?
    அதது அந்த வயதுக்குத் தான் போவேன் என்கிறது,அதற்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது,என்ன பண்ண?

    ReplyDelete
  4. நல்வரவு குமார். 'மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை' என்பதிலும் உண்மை உண்டு தானே :)

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி