Sunday, October 07, 2007

நேரம் போற்றின் ஏற்றம் சேரும்

காலம் பொன் போன்றது. அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பள்ளிக்கூட ஆசிரியரிலிருந்து இன்றைய நிர்வாகத்துறை ஆலோசகர்கள், பலதுறைகளைச் சார்ந்த,வெற்றியடைந்த,பெரும் வல்லுநர்கள் யாவரும் கூறுவது இதுவே.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு குறிக்கோள்கள். எல்லாக் குறிக்கோட்களுக்கும் மேலானது இறையிணையடி சேர்வது.ஆகையால் ஞானியர்கள் அதற்கே முதலிடம் தருகின்றனர். கபீரின் பார்வையில் சாதாரண மனிதரின் தினசரி நடவடிக்கைகள் எப்படி உள்ளது பாருங்கள்.

पाँच पहर धन्धे गया, तीन पहर गया सोय ।
एक पहर भी नाम बिन, मुकती कैसे हाय ॥

பாஞ்ச் பஹர் தந்தே கயா, தீன் பஹர் கயா ஸோய்
ஏக் பஹர் பீ நாம் பின், முக்தி கைஸே ஹாய்

ஐந்தைக் கழிப்பர் அல்லலில், மூன்று போகும் துஞ்சலில்
எந்தைக் கில்லை யொருசாமம், முத்திக் கேது உபாயம்

(எந்தை = இறைவன் ; உபாயம் = மார்கம்,வழி)

நாளொன்றுக்கு எட்டு சாமங்கள். பகல் நான்கு, இரவு நான்கு. ஹிந்தியில் இதை பெஹர் என்பர். விழித்திருக்கும் ஐந்து சாமங்களை உலகாதாய விஷயங்களில் அல்லல்பட்டு போக்கி விடுகிறோம். மிச்சமுள்ள மூன்றோ தூக்கத்தில் போய் விடுகிறது. நாள் முழுவதும் முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு சாம நேரமாவது அவனுடைய அருளைப் போற்றினால் முக்திக்கு வழிகிடைக்குமே என்று பரிதாபப் படுகிறார் நம்மைப் பார்த்து.

பரீட்சைக்கு மாணவர்களை தயார் செய்யும் ஆசிரியர் மாணவர்களுக்கு தக்கவாறு தேர்வில் வெற்றி பெற சில வழிகளை போதிக்கிறார். கடினமாக உழைத்து வெற்றி பெறும் திறமை உள்ளவர்களை 90, 100 மதிப்பெண்கள் பெறுவதற்கான ரகசியங்களை சொல்லிக் கொடுக்கிறார்.அவர்களை ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து மணிநேரம் தினமும் படிக்கச் சொல்லி பலவிதமான இடைத்தேர்வுகள் வைத்து வெற்றிக்கு வழி வகுக்கிறார்.

ஆனால் வகுப்பிற்கே வராமல் மட்டம் போட்டுச் சுற்றும் சில பேர்வழிகளுக்கு என்ன வழி ?

" நீங்களும் சுலபமாக பாஸாகி விடலாம். கஷ்டமே கிடையாது. சும்மா க்ளாஸுக்கு வந்து காதால நல்லா கேட்டுக்குங்க. இங்க கேக்கிறத வச்சே முப்பத்தஞ்சு மார்க் வாங்கிடலாம். அப்படியே ஒண்ணு ரெண்டு கொறஞ்சாலும் க்ரேஸ் மார்க் போட்டு பாஸ் பண்ணி விட்டிடுவாங்க" என்று ஆசை காட்டி அவர்களையும் கடைத்தேறப் பார்ப்பார் நல்ல ஆசிரியர்.

அதே யுக்தியை இங்கே கபீரும் கையாளுகிறார். ஒரு சாமம் இறைவனை சிந்தனை செய் என்றால் மிக அதிகம் (மூன்று மணி நேரமா! அம்மாடி!!) என்று கவலைப் படுபவர்களுக்காக ஒரு எளிய வழியை சொல்லுகிறார். அதை கடைப்பிடித்தாலும் பாஸ் செய்துவிடலாம்.

एक घडी आधी घडी, आधी मे पुनि आध ।
कबीर संगत साधु की, कटै कोटि अपराध ॥

ஏக் கடீ ஆதீ கடீ, ஆதீ மே புனி ஆத்
கபீரா சங்கத் ஸாது கீ, கடை கோடி அபராத்

தேடியிரு,நாழிகை ஒன்றோ அரையோ,அரையிலும் அரையோ,
கோடிவினைக் களையும் கபீரா உரவோர் கூடும் அவையோ

(உரவோர் = முனிவர், மேன்மக்கள்)

கடீ என்பது இருபத்தி நான்கு நிமிடங்கள் உடைய அளவை. நாம் இதை ஒரு நாழிகை என்போம். இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம். மூன்று மணிகள் ஒரு சாமம்.

கபீரின் அறிவுரை ஒரு நாழிகை நேரம், முடியாவிட்டால் அரை நாழிகை அதுவும் முடியாதவர்கள் கால் நாழிகை நேரமாவது சாதுக்களை சந்தித்து உரையாடுங்கள். அவர்களின் ஆசிகள் பலகோடி பாவங்களை அறுத்து விடும் என்று ஆர்வத்தைத் தூண்டுகிறார். இதையே சத்சங்கம் என்று பெரியோர்கள் கூறுவர்.

சத்சங்கத்வே நிஸ்சங்கத்வம், நிஸ்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலதத்வம், நிச்சலதத்வே ஜீவன்முக்தி (ஆதிசங்கரர்)

சமுதாயத்தை சாராமல் மனிதன் தனியனாக இருப்பது கடினம். முனிவர்களுக்கும் குடும்பஸ்தர்களின் ஆதரவு வேண்டியிருக்கிறது. ஆசிரமங்களை நடத்துவோரும் அதை நடத்துவதற்கு வருவாய்க்கான வழிகளை யோசிக்க வேண்டியிருக்கிறது. உண்மைத் துறவறம் உலகில் இருந்து கொண்டே இல்லாமல் இருப்பது. தாமரை இலை மேல் நீர் போல. உலகவாழ்விற்கான மோகம் மனதை விட்டு போய்விட்டால் சலன மற்ற நிலையை அடைந்து விடுகிறது.முக்திக்கான அடிப்படையே மனதின் சலனமற்ற நிலைதான். இதற்கான முதற்படிதான் ஆதிசங்கரர் கூறும் சத்சங்கம்.

தொடர்ந்து ஆன்மீக விஷயங்களையே சிந்திக்க சத்சங்கம் வழி வகுக்கிறது.சூழ்நிலக்கேற்றவாறு எண்ணங்கள் உருவாகின்றன. வலிவடைந்த எண்ணங்கள் செயலாற்றல் தருகின்றன.எனவே சரியான சூழ்நிலையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவனுக்கு ஒரு பெரும் கடமை உள்ளது. ஆகையால்தான் கபீர்தாஸரும் "கட் அடிச்சது போதும் க்ளாஸுக்கு வாங்க" என்று அழைக்கிறார்.

2 comments:

  1. மிக்க நன்று!

    சத்சங்கங்களை கண்டறிய விழைவோருக்கு ஒரு தொடுப்பு: இங்கே

    ReplyDelete
  2. வருக ஜீவா. நல்லதொரு இணைப்பைக் கொடுத்திருக்கிறீர்கள். தட்சிணாமூர்த்தியின் தரிசனம் பலமுறை செய்திருக்கிறேன். தயானந்தரின் ஆனைக்கட்டி ஆசிரமும் மிக அழகிய சூழல்.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி